ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை
<< குலசேகராழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள்
தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்
விப்ர நாராயணன் என்ற இயற்பெயருடன் கூடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார். கும்பகோணம் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய திருமண்டங்குடி என்ற ஒரு அழகான ஸ்தலத்தில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் இரண்டு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி ஆகும். “திருமாலை அறியாதார் திருமாலையே அறியாதார்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு திருமாலை என்கிற ப்ரபந்தத்தைத் தெரிந்து கொள்ளாதவர்கள் திருமாலாகிய ஸ்ரீமந் நாராயணனைத் தெரிந்துகொள்ள முடியாது என்பது கூற்றாகும். எம்பெருமானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர்கள் வெகு சிலர். விஸ்வாமித்ர முனிவர் ஸ்ரீராம பிரானுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடினார் என்று அறிவோம். அதன் பின் தொண்டரடிப்பொடியாழ்வார் ஸ்ரீரங்கம் அரங்கநாதருக்குப் பாடியுள்ளார் என்று அறிகிறோம்.
இவர் ஸ்ரீரங்கநாதனைத் தவிர வேறு யாரையும் பாடாதவர். ஸ்ரீரங்கநாதன் ஒருவனையே அர்ச்சாவதாரத்தில் அனுபவித்தவர். இவருடைய ப்ரபந்தங்களில் முக்கியமாக திருமாலையில் நாமசங்கீர்த்தனத்தினுடைய ஏற்றம், அதாவது பெருமாளின் திவ்ய நாமங்களை எப்பொழுதும் நாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ற வைபவம், மற்றும் எம்பெருமானிடம் எவ்வாறு சரணாகதி செய்வது என்ற விஷயம் காட்டப்பட்டுள்ளது. மேலும் அடியார்களை குலத்தைக் கொண்டோ, தனத்தைக் கொண்டோ, அவர்களுடைய ஞானத்தைக் கொண்டோ ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியவர்.
தொண்டரடிப்பொடியாழ்வார் வாழி திருநாமம்
மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் வாழி திருநாமம் விளக்கவுரை
மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே – திருமண்டங்குடி என்ற ஸ்தலத்தில் அவதரித்து அந்த ஸ்தலத்திற்கு ஒரு பெருமை ஏற்படுத்திக் கொடுத்து வாழ்ச்சியைக் கொடுத்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே – எம்பெருமான் மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் உயர்வாகக் கூறிய மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் இப்புவியில் வந்து அவதரித்த ஆழ்வார் வாழ்க.
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே – அரங்கர் என்றால் பெரிய பெருமாளாகிய ஸ்ரீ ரங்கநாதன். அவரையே பர தெய்வம் என்று பல பாசுரங்களில் எடுத்துக்காட்டியுள்ளார் தொண்டரடிப் பொடியாழ்வார். திருமாலையில் “நாட்டினான் தெய்வமெங்கும் நல்லதோர் அருள் தன்னாலே காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம்” என்று எடுத்துக் காட்டுகிறார். மேலும் “கற்றினம் மேய்த்த எந்தை” என்ற வரியின் மூலம் அந்தக் கண்ணனே பரதெய்வம் என்று காட்டுகிறார். இவ்வாறு பல பாசுரங்களில் நாராயணனின் அர்ச்சாவதார ரூபமான ஸ்ரீரங்கநாதனே பர தெய்வம் என்று அறுதியிட்டுக் கூறியவர். தெளிந்த அலை மிகுந்த காவிரி நதியினால் சூழப்பட்ட திருவரங்கத்தில் இருக்கக்கூடிய திருவரங்க நாதனையே தெய்வம் என்று காட்டிய தொண்டரடிப்பொடியாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் என்று இந்த வரியில் கூறப்பட்டுள்ளது.
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே – நாற்பத்தைந்து பாசுரங்கள் கொண்ட திருமாலை என்ற அற்புதமான ப்ரபந்தத்தை அருளியவர் தொண்டரடிப்பொடியாழ்வார். இந்தப் ப்ரபந்தத்தில் எம்பெருமான் எவ்வாறு தன்னுடைய அழகைக் காட்டி நம்மைத் திருத்துகிறான் என்று அழகாக விளக்கியுள்ளார். மேலும் சரணாகதி தத்துவத்தை எளிய முறையில் “மேம்பொருள் போக விட்டு” (38வது பாசுரம்) என்ற பாசுரத்தில் விளக்கியதோடு மட்டுமல்லாமல் சரணாகதி செய்த அடியார்கள் எம்பெருமானிடம் எவ்விதம் பக்தி கொண்டிருப்பார்கள், அவர்களை நாம் எப்படி மதிக்க வேண்டும் என்பதை “போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே” என்ற 41வது பாசுரத்தின் வரியில் காட்டியுள்ளார். பகவானின் அடியார்கள் எப்படிப்பட்ட தாழ்ந்த குலத்தில் பிறந்திருந்தாலும், அடியார்கள் ஆவதற்கு முன்னம் எப்படிப்பட்ட இழி செயலைச் செய்திருந்த போதிலும் அவர்கள் அடியார்கள் ஆன பின்பு அவர்கள் உண்ட மிச்சத்தை உண்ணும் பேறு பெரும் பேறு என்று விவரித்துள்ளார். அவ்வாறு சிறந்த நாற்பத்தைந்து பாசுரங்கள் கொண்ட திருமாலை ப்ரபந்தத்தை அருளிச் செய்த தொண்டரடிப்பொடியாழ்வார் வாழ்க.
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே – அக்காலத்தில் பத்து பாசுரங்கள் கொண்ட எம்பெருமானைத் துயிலெழுப்பும் விதமாக அமைந்த திருப்பள்ளியெழுச்சி என்ற ப்ரபந்தத்தை உரைத்த தொண்டரடிப்பொடியாழ்வார் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு.
பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே – திருமாலையில் பாவையர்கள் சுகத்தைப் பற்றி “பெண்டிரால் சுகங்களுய்ப்பான் பெரியதோர் இடும்பைப் பூண்டு” என்று காட்டியுள்ளார். மேலும் அவரது சரித்திரத்தில் பெண் சுகத்தினால் அவர் பெற்ற துன்பத்தின் காரணமாக அவர் சந்திக்க நேர்ந்த இடர்பாடுகளின் மூலமும் நாம் அறியலாம். எம்பெருமானின் லீலா விசேஷத்தினால் “தேவதேவி” என்ற பெண்ணிடம் “விப்ரநாராயணன்” என்ற பெயர் கொண்ட போது மயங்கி இருந்தார். பின் எம்பெருமானே அவரைத் திருத்திப் பணி கொண்டு கைங்கர்யத்தில் ஈடுபடுத்தினார். அதன் பின் அவர் பெண் சுகத்தில் விரக்தராக மிகுந்த வைராக்யத்துடன் வாழ்ந்து வந்தார் என்பதை நாம் அறிகிறோம். அவ்வாறு பெண்களுடன் கலப்பது ஆத்ம விஷயத்திற்கு தடையாக இருக்கும் என்பதை விரிவாகத் திருமாலையில் காட்டியுள்ளார். வேதாந்தத்தில் நமக்கு விஹிதங்களாக சில போகங்கள் / இவ்வுலக இன்பங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நமது ஆத்ம ஸ்வரூபத்தை நோக்கும்போது, தேஹ சம்பந்தமான எல்லா இன்பங்களும் விரோதம் என்று சாஸ்திரம் சொல்கிறது. இது வேதாந்தத்தில், மோக்ஷத்தில் நோக்காக இருப்பவர்களுக்குக் கைவிடவேண்டியதாகச் சொல்லியிருந்தாலும், பக்குவப்படாமல் இருப்பவர்களுக்காக திருமணம் என்ற நியமனத்திற்குள் அவர்களின் அனுபவத்தை கொள்ளலாம் என்று சாஸ்திரத்தில் வைத்திருக்கிறது. உண்மையான ஞானம் ஏற்பட்டவர்களுக்கு இந்த அனுபவம் தேவையில்லை என்று புரிந்து அவர்கள் எம்பெருமானை அனுபவிப்பதிலேயே தங்கள் மனதை செலுத்துவார்கள், அந்த நிலையிலேயே தொண்டரடிப்பொடியாழ்வார் இருந்தமையால் அந்த அநுபவத்தை விலக்கினார் எனலாம். அதை அவர் தம் வாழ்நாளில் அனுஷ்டித்துக் காட்டினார். அப்படிப்பட்ட ஆழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே – ஆழ்வார் நந்தவனம் அமைத்து புஷ்பங்களைச் சேகரித்து, மாலையாகத் தொடுத்து எம்பெருமானுக்குச் சமர்ப்பித்துக் கைங்கர்யம் செய்து வந்தார். இந்தக் கைங்கர்யத்தினால் ஆழ்வார் மிகவும் பிரகாசமாக ஜ்வலித்தார் / விளங்கினார். துளபம் என்றால் திருத்துழாய் / துளசி. புஷ்ப கைங்கரியம் செய்து துளசி மாலை கட்டி பெருமாளுக்கு கைங்கர்யம் செய்தவர். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் என்பது இந்த வரியில் காட்டப்பட்டுள்ளது.
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே – மேன்மை பொருந்திய தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இரண்டு திருவடிகள் நன்றாக வாழவேண்டும். பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.
திருப்பாணாழ்வார் வைபவம்
திருப்பாணாழ்வார் உறையூர் என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர். திருக்கோழியூர் என்று இன்று கொண்டாடப்படுகிறது. திருவரங்கத்திற்கு அருகில் இருக்கக்கூடிய திவ்யதேசம். நாச்சியாருக்கு இங்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருந்து உறையூருக்குச் “சேர்த்தி” உற்சவத்திற்காக எழுந்தருளியிருக்கும் வைபவம் நடக்கிறது. அவ்வாறு சிறப்பு பெற்ற உறையூரில் அவதரித்தவர் திருப்பாணாழ்வார். இவருடைய திருநக்ஷத்ரம் கார்த்திகை மாதம் ரோகிணி நக்ஷத்ரம். இவர் அருளிய பிரபந்தம் அமலனாதிபிரான் ஆகும். இவரும் தொண்டரடிப்பொடியாழ்வார் போல் ஸ்ரீரங்கநாதனிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தவர். அர்ச்சாவதாரத்தில் மிகவும் ஈடுபட்டிருந்தவர்கள் கடைசி மூன்று ஆழ்வார்கள் என்று கூறுவர். அவர்கள் முறையே தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆவர். அதிலும் தொண்டரடிப்பொடியாழ்வாரும், திருப்பாணாழ்வாரும் ஸ்ரீரங்கநாதன் இடத்தில் மட்டுமே ஊறியவர்கள். திருமங்கையாழ்வார் அனைத்து அர்ச்சாவதார எம்பெருமானிடமும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் நம்பெருமாளுடைய திவ்யமங்கள விக்ரஹத்திற்கு மங்களாசாசனம் செய்யும் வகையில் அமலனாதிபிரான் என்ற ப்ரபந்தத்தை அருளிச் செய்தார். ஸ்ரீரங்கநாதரின் திருமேனியை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் வாழ்ந்தவர். திருப்பாணாழ்வார் பஞ்சமங்களத்தில் பிறந்தவர். அதாவது சாஸ்திரத்தில் நான்கு வர்ணங்கள் காட்டப்படுகிறது. பிராமணர், க்ஷத்ரியர், வைஸ்யர் மற்றும் சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள். இந்த நான்கு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள் என்று சிலர் இருப்பார்கள். இந்த வர்ண தர்மங்களை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இஷ்டப்படி வாழ்க்கையை வாழக்கூடியவர்கள். ஆனால் அந்த குலத்திலும் எம்பெருமானுடைய கருணையினால் சிலர் எம்பெருமானுக்கு அடியவர்களாக மிகுந்த பக்தி கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். திருப்பாணாழ்வாரும் நம்பாடுவானைப் போன்று நான்கு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்ட பாணர் குலத்தில் பிறந்தவர்.
இவருடைய வைபவத்தை அமலனாதிபிரான் வ்யாக்யானத்தில் காட்டும்போது இவரை இந்த உலகத்தில் இருப்பவர்கள் நான்கு வர்ணத்திற்கு அப்பாற்பட்டவர்கள், தாழ்ந்த குலத்தவர்கள் என்று நினைப்பார்கள். எம்பெருமானும் அதே போன்று நினைப்பான் அதாவது எவ்வாறு நித்யசூரிகள் இந்த நான்கு வர்ணங்களுக்கு அப்பாற்பட்டவர்களோ அதே போன்று நான்கு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்ட திருப்பாணாழ்வாரை நித்யசூரிகளுக்கு நிகராக எம்பெருமான் நினைப்பானாம். இவ்வாறு எம்பெருமானின் பரிபூரணமான கருணையைப் பெற்றவர் திருப்பாணாழ்வார்.
இவருடைய சரித்திரம் நாம் அறிந்ததே. திருவரங்கத்தில காவிரிக் கரைக்கு மறுபக்கத்தில் அமர்ந்து, ஊருக்குள் வராமல் எம்பெருமானைப் பற்றி பாடிக் கொண்டிருப்பார். ஒரு முறை “லோக சாரங்க முனி” என்பவர் காவிரிக் கரையில் தீர்த்தம் எடுக்க வர வழியில் அமர்ந்திருந்த திருப்பாணாழ்வார் மீது ஒரு கல்லை எடுத்து போட்டார். அது ஆழ்வாருடைய நெற்றியில் பட்டு ரத்தம் வந்தது. லோக சாரங்க முனிவர் மிகவும் வருத்தத்துடன் எம்பெருமானிடம் வந்தார். எம்பெருமான் லோகசாரங்க முனியை அழைத்து “நீங்கள் மிகப் பெரிய அபசாரம் செய்து விட்டீர்கள் நீங்களே சென்று அவரை அழைத்துக் கொண்டு வரவேண்டும்” எனக் கட்டளையிட உடனே லோகசாரங்கமுனி திருப்பாணாழ்வாரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு திருவரங்கத்திற்குள் வரும்படி வேண்ட திருப்பாணாழ்வார் “நான் தாழ்ந்த குலத்தைச் சார்ந்தவன் என்னுடைய கால் திருவரங்கத்தை மிதிக்கக்கூடாது; ஊருக்கு வெளியேதான் இருக்க வேண்டும்” என்று சொல்ல அதற்கு லோகசாரங்கமுனி மறுத்து “எம்பெருமானுடைய ஆணை நீர் வந்துதான் ஆகவேண்டும்”. “உமது திருவடிதானே ஊருக்குள் படக்கூடாது என்னுடைய தோளில் ஏறிக் கொள்ளும்” என்று கூற முதலில் மறுத்த திருப்பாணாழ்வார் பின் சம்மதித்தார். இது மிகவும் ரொம்ப ஆச்சரியமான விஷயமாகக் கருதப்பட்டது. அடியவர்களுக்கு ஆட்பட்டு இருக்க வேண்டும் என்ற தாத்பர்யத்தை அறிந்து முதலில் மறுத்த திருப்பாணாழ்வார் எம்பெருமானின் சிறந்த அடியவரான லோக சாரங்க முனிவரின் வேண்டுகோளை மறுக்க மனமின்றி அவருடைய ஆசையை நிறைவேற்றித் தான் ஆக வேண்டும்; சிறந்த அடியவருடைய வேண்டுகோளை நாம் மறுக்கக் கூடாது என்ற கருத்தை நெஞ்சில் வைத்துக்கொண்டு லோக சாரங்க முனி தோளில் ஏறி திருவரங்கத்தை நோக்கி வருகிறார். அமலனாதி பிரான் பாசுரங்களைப் பாடிக் கொண்டே திருவரங்கத்திற்குள் வருகிறார். பெரிய பெருமாள் சந்நிதிக்கு எதிரே வந்த உடன் லோக சாரங்க முனியின் தோளில் இருந்து இறங்கி எம்பெருமானின் திருவடியை அடைந்து உய்வடைந்தார் என்று அறிகிறோம். இன்றைக்கும் திருப்பாணாழ்வார் பரமபதம் அடைந்த போதும் அவர் எம்பெருமானின் திருவடிகளை அநுபவித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.
திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணிநாள் கார்த்திகையிலுதித்தவள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வந்த பிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே
திருப்பாணாழ்வார் வாழி திருநாமம் விளக்கவுரை
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே – உம்பர்கள் என்னும் வார்த்தை நித்யஸுரிகள் / தேவர்களைக் குறிப்பதாகும். அந்த நித்யஸுரிகளே திருப்பாணாழ்வாரைத் தொழுவார்களாம். அப்படிப்பட்ட வைபவத்தை உடையவர் திருப்பாணாழ்வார். உறையூரில் அவதரித்த உண்மையான ஞானத்தை உடைய திருப்பாணாழ்வார் வாழ்க என்பது இவ்வரியின் விளக்கம்.
உண்மையான ஞானம் என்பது பரமபதத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் தான் அர்ச்சாவதாரத்தில் எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிவதாகும். “நாம் பரமபதம் தான் உயர்வு; அர்ச்சாவதாரம் அதை விடக் குறைந்தது” என்று எண்ணலாம். பரமபதத்தில் எம்பெருமானின் பரத்வம் தான் வெளிப்படும். ஆனால் ஸௌலப்யம் என்பது பகலிலே எரித்த விளக்கு போல இருக்கும். அவனுடைய ஸௌலப்யத்தை பரமபதத்தில் காட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. தவறு செய்பவர்கள் இருந்தால் தான் எம்பெருமானின் ஸௌலப்யம் வெளிப்படும். ஆகவே தவறு செய்பவர்கள் நிறைந்துள்ள பூலோகத்தில் அர்ச்சாவதார எம்பெருமானுக்குதான் ஏற்றம் எனலாம். அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் அர்ச்சகருக்கு பரதந்த்ரன் ஆக இருப்பான். அவர் எப்போது திருமஞ்சனம் செய்கிறாரோ அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அர்ச்சகர் எப்போது உணவு கண்டருளச் செய்தாலும் அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அவர் அணிவிக்கும் ஆடைகளையே உகந்து அணிந்து கொள்கிறான். அவ்வாறு தன்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி தன்னை எளியவனாக அர்ச்சாவதாரத்தில் காட்டுகிறான். எம்பெருமானின் அர்ச்சாவதார மேன்மையை நன்கு உணர்ந்தவர் திருப்பாணாழ்வார். எனவேதான் அமலனாதிபிரான் பத்து பாசுரங்களிலும் எம்பெருமானின் வடிவழகை மட்டுமே பாடியிருக்கிறார். அவ்வாறு சிறப்புடைய திருப்பாணாழ்வார் வாழ்க.
உரோகிணிநாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே – கார்த்திகை மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் திருப்பாணாழ்வார். இப்பூவுலகத்தாருக்கு அர்ச்சாவதார பெருமையை எடுத்துக் காட்டிய வள்ளல் திருப்பாணாழ்வார். அவர் பல்லாண்டு வாழ்க.
வம்பவிழ்தார் முனிதோளில் வந்த பிரான் வாழியே – பிரான் என்றால் நமக்கு நன்மை செய்பவர் என்று பொருள். நமக்கு நன்மை செய்யக்கூடியவரான திருப்பாணாழ்வார் வாசனை மிருந்த மாலையை அணிந்த லோக சாரங்க முனிவர் தோளிலே ஏறி திருவரங்கம் வந்தார். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே – மலர் போன்று இருக்கக் கூடிய கண்களில் பெரிய பெருமாளைத் தவிர வேறு ஒரு காட்சியும் அறியாதவர் திருப்பாணாழ்வார. அப்படிப்பட்ட திருப்பாணாழ்வார் வாழ்க.
அம்புவியில் மதிளரங்கர் அகம் புகுந்தான் வாழியே – அழகியதான இப்பூவுலகில் ஸப்த ப்ரகாரம் என்று சொல்லக்கூடிய ஏழு மதிள்களால் சூழப்பட்ட திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாள் மனத்தில் புகுந்தவரான திருப்பாணாழ்வார் பல்லாண்டு வாழ்க.
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே – திருப்பாணாழ்வார் அருளிய ப்ரபந்தம் பத்து பாசுரங்கள் கொண்ட அமலனாதி பிரான். அவர் வாழ்க பல்லாண்டு.
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே – திருவரங்கம் பெரிய பெருமாளின் சிவந்த பொன் போன்ற திருவடி தொடங்கி திருமுடி வரையிலும் அமலனாதி பிரான் ப்ரபந்தத்தில் திருப்பாணாழ்வார் வர்ணித்திருப்பார். அவ்வாறு திருவரங்கப் பெருமாளின் அவயவங்களை சேவிக்கும் திருப்பாணாழ்வார் வாழ்க என்ற இந்த வரியில் காட்டப்படுகிறது,
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே – பொன்னை ஒத்து இருக்கும் திருப்பாணாழ்வாரின் திருவடிகள் இப்பூவுலகில் பல்லாண்டு வாழ வேண்டும் என்று திருப்பாணாழ்வாரின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.
திருமங்கையாழ்வார் வைபவம்
திருமங்கையாழ்வார் திருக்குறையலூர் என்ற திவ்யதேசத்தில் அவதரித்தவர். நீலன், கலியன், பரகாலன் என்ற வேறு பெயர்களைக் கொண்டவர். மிகப்பெரிய வீரர். மேலும் மிகுந்த மிடுக்கை உடையவர். எனவே கலியன் எனப் பெயர் பெற்றார். மற்ற மதத்தவர்களுக்கு (பரர்கள்) காலனைப் போன்று இருப்பதனால் பரகாலன் என்ற பெயர் கொண்டார். பிற மதத்தவர்களை வாதம் செய்து வெற்றி பெற்றவர். எம்பெருமானே இவரைப் பார்த்து பயந்ததனாலும், இவருக்கு பரகாலன் எனப் பெயர் வந்தது எனலாம். இவருடைய திருநக்ஷத்திரம் கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரம். இவர் ஆறு ப்ரபந்தங்களை அருளியுள்ளார். அவை முறையே பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் மற்றும் திருநெடுந்தாண்டகம் ஆகும். திருநறையூர் நம்பி மற்றும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்த இரு எம்பெருமானும் திருமங்கையாழ்வாருக்கு ஆசார்யன் ஸ்தானத்தில் இருக்கக் கூடியவர்கள். இவர் பல திவ்ய தேசங்களை தன்னுடைய ஆடல்மா குதிரையில் சென்று மங்களாசாசனம் செய்திருக்கிறார். ஏறக்குறைய நாற்பது திவ்யதேசங்கள் திருமங்கையாழ்வாரால் தனித்து மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இவர் காட்டிக் கொடுக்கவில்லை என்றால் அந்த நாற்பது திவ்யதேசங்களும் நம்மால் அறியப்படாமல் இருந்திருக்கும். அப்படிப்பட்ட திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கம் முதலான பல திவ்ய தேசங்களில் பல கைங்கர்யங்களையும் செய்துள்ளார். ஆழ்வார்கள் வரிசைக் கிரமத்தில் இவர் தான் கடைசி ஆழ்வார். நம்மாழ்வாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நம்மாழ்வார் அருளிய நான்கு ப்ரபந்தங்கள் நான்கு வேதங்களுக்குச் சமமாகக் கொண்டாடப்படுகின்றன. அந்த நான்கு வேதங்களுக்கு எப்படி ஆறு அங்கங்கள் உள்ளதோ அதே போன்று நம்மாழ்வாரின் நான்கு ப்ரபந்தங்களுக்கு திருமங்கையாழ்வாரின் ஆறு ப்ரபந்தங்களும் ஆறு அங்கங்களாகக் கருதப்படுகின்றன.
திருமங்கையாழ்வாரின் வாழி திருநாமம்
கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே
திருமங்கையாழ்வாரின் வாழி திருநாமம் விளக்கவுரை
கலந்த திருக்கார்த்திகையில் கார்த்திகை வந்தோன் வாழியே – திருக்கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நக்ஷத்ரத்தில் வந்து அவதரித்தவர் திருமங்கையாழ்வார், அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.
காசினியொண் குறையலூர்க் காவலோன் வாழியே – இப்பூவுலகத்தில் மிகுந்த ஒளியை உடைத்தான திருக்குறையலூர் என்ற ஊரிலே அவதரித்தவர் திருமங்கையாழ்வார். அந்த ஊரை ரக்ஷிக்கக் கூடிய காவலனாக இருப்பவர். அவ்வூருக்கு “திருமங்கை தேசம்” என்று பெயர் வழங்கப்படுகிறது. அந்தத் திருமங்கை தேசத்துக்கு மன்னனாகத் திகழ்ந்தவர். எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று திருத்தப்பட்டவர். அப்படிப்பட்ட பெருமையை உடைய திருமங்கை ஆழ்வார் பல்லாண்டு வாழ வேண்டும்.
நலந்திகழாயிரத்தெண்பத்து நாலுரைத்தோன் வாழியே – நன்மை நிறைந்திருக்கக் கூடிய ஆயிரத்து எண்பத்து நான்கு பாசுரங்களைக் கொண்ட பெரிய திருமொழியை அருளிச் செய்தவர் திருமங்கையாழ்வார். “வாடினேன் வாடி வருந்தினேன்” என்று தொடங்கி இந்த சம்சாரத்தில் தான் படும் துன்பங்களை எம்பெருமானிடம் வெளியிடுகிறார் திருமங்கையாழ்வார். மேலும் திருவாய்மொழி எவ்வாறு வேதத்தின் ஸாரமாகக் கருதப்படுகிறதோ அதைப்போன்று உயர்ந்த கருத்துக்களை தன்னடக்கியது பெரிய திருமொழி ப்ரபந்தம். மேன்மை பெற்ற ஆயிரத்து எண்பத்து நான்கு பாசுரங்களைக் கொண்ட பெரிய திருமொழி அருளிச் செய்த திருமங்கை ஆழ்வார் வாழ்க.
நாலைந்துமாறைந்தும் நமக்குரைத்தான் வாழியே – நான்கும் ஐந்தும் பெருக்கல் தொகையான இருபது பாசுரங்கள் கொண்ட திருக்குறுந்தாண்டகம் மற்றும் ஆறும் ஐந்தினுடைய பெருக்கல் தொகையான முப்பது பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்ற சிறந்த இரண்டு ப்ரபந்தங்களை நமக்கு அருளிச்செய்தார் திருமங்கையாழ்வார். அவர் பல்லாண்டு வாழ வேண்டும். திருமங்கையாழ்வாரின் கடைசி ப்ரபந்தமான திருநெடுந்தாண்டகம் என்ற ப்ரபந்தத்தில் பராசர பட்டர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். திருநாராயணபுரத்தைச் சேர்ந்த மாதவாசார்யர் என்பவர் வேற்று மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். பராசர பட்டர் அவருடன் திருநெடுந்தாண்டகப் பாசுரங்களை மேற்கோள் காட்டி வாதம் செய்து அதில் வென்று மாதவாசார்யரைத் திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு அழைத்து வந்தார்.அவர்தான் நஞ்சீயர் என்று மிகவும் ப்ரசித்தமாக பிற்காலத்தில் கொண்டாடப்பட்ட ஆசார்யர். திருநெடுந்தாண்டக சாஸ்த்ரம் என்று கொண்டாடும் அளவிற்கு மிக உயர்ந்த ப்ரபந்தமான திருநெடுந்தாண்டகத்தை நமக்கு வழங்கிய திருமங்கையாழ்வார் பல்லாண்டு வாழ்க என்று இந்த வரியில் காட்டப் படுகிறது.
இலங்கெழுகூற்றிருக்கையிருமடலீந்தான் வாழியே – திருவெழுக்கூற்றிருக்கை என்பது திருமங்கையாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதன் எம்பெருமானிடத்தில் சரணாகதி செய்த ப்ரபந்தம். மிகவும் அழகான வடிவமைப்பைக் கொண்ட ப்ரபந்தம், தேரைப் போன்ற அமைப்பை கொண்ட ப்ரபந்தம், 121, 12321 1234321 என்று ஒரு தேர் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்குமோ அது போன்று இந்தப் ப்ரபந்தத்தின் பாசுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்,
மேலும் சிறிய திருமடல், பெரிய திருமடல் என்று இரண்டு ப்ரபந்தங்களில் ஆழ்வார் பிராட்டி நிலையில் இருந்துகொண்டு எம்பெருமானை அடையாத வருத்தத்தாலே மடல் எடுக்கப் போகிறேன் என்று சொல்லும் விதமாக அமைந்த ப்ரபந்தங்கள். இந்த இரு ப்ரபந்தங்களும் ஆழ்வார் பரகால நாயகி பாவனையில் அருளிச்செய்த ப்ரபந்தங்கள் ஆகும். மடல் எடுப்பது என்பது காதலன் காதலி என்ற இருவரிடையே ஒருவர் மற்றொருவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பொது இடங்களில் சென்று “இவர் என்னை ஏமாற்றி விட்டார் என்னைக் கைக் கொள்ள மாட்டேன்” என்கிறார் என்று ஒப்பாரி வைத்து அழக் கூடிய நிலை. அதைப் பார்த்து ஊரில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தக் காதலன் காதலியை சேர்த்து வைப்பார்கள் என்று ஆசையினால் செய்யக்கூடிய காரியம். ஆனால் மடலெடுப்பது என்பது நம்மைப் போன்ற சேதநர்களுக்கு ஸ்வரூப விரோதமாகும். ஆனால் ஆழ்வார்கள் எம்பெருமானைப் பிரிந்து தரித்திருக்க முடியாமையால் மிகுந்த ஆர்த்தியுடன் எல்லையில்லாத பக்தியினால் மடல் எடுக்கப் போவதாக பாசுரங்களில் காட்டப்பட்டுள்ளது என்று பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்கள் மூலம் அறியலாம். அவ்வாறு மிகச் சிறந்த ப்ரபந்தங்களான திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் அருளிச்செய்த திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
இம்மூன்றில் இருநூற்றிருபத்தேழீந்தான் வாழியே – திருவெழுக்கூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் ப்ரபந்தங்களின் பாசுரங்களின் கூட்டுத்தொகை இருநூற்றிருபத்தேழு ஆகும். இந்த மூன்று ப்ரபந்தங்கள் மூலமாக இருநூற்றிருபத்தேழு பாசுரங்கள் அருளிச்செய்த திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
வலந்திகழுங் குமுதவல்லி மணவாளன் வாழியே – திருமங்கையாழ்வாருக்கு வலப்பக்கத்தில் எப்பொழுதும் அவரைப் பிரியாமல் குமுதவல்லி நாச்சியார் கொலுவீற்றிருப்பார். குமுதவல்லி நாச்சியார் தான் ஆழ்வாருக்கு பகவத் விஷயத்தில் ஈடுபாடு ஏற்படுத்தியவர். மிகுந்த பேரழகு கொண்டவர் குமுதவல்லி நாச்சியார். அவரிடம் திருமங்கையாழ்வாருக்கு நீலனாக இருந்த பொழுது ஆசை ஏற்படுகிறது. அவரை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு அவரை மணம் புரிந்து கொள்வதாகத் தெரிவித்தார். அதற்குக் குமுதவல்லி நாச்சியார் “நான் எம்பெருமானுடைய அடியவரைத் தான் மணம் புரிவேன், நீங்களும் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டு பாகவதர்களுக்கு ததியாரதன கைங்கர்யம் செய்ய வேண்டும்” என்று நிபந்தனை இட்டார். அதன்படியே ஆழ்வாரும் அவர் சொன்னதையெல்லாம் செய்து அவரை மணம் புரிகிறார் என்பதை அறிகிறாம். அவ்வாறு வலப்பக்கம் குமுதவல்லி நாச்சியாரைக் கொண்ட திருமங்கையாழ்வார் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.
வாட்கலியன் பரகாலன் மங்கையர்கோன் வாழியே – தன் கையில் வாளை வைத்திருக்கும் கலியன், பரகாலன் என்னும் வேறு பெயர்களைக் கொண்ட திருமங்கை தேசத்திற்கு மன்னனான திருமங்கையாழ்வார் வாழ்க என்று திருமங்கையாழ்வார் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org