ப்ரமேய ஸாரம் – 7 – இல்லை இருவருக்கும்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ப்ரமேய ஸாரம்

6ம் பாட்டு

7ம் பாட்டு

yasoda_and_krishna

முகவுரை:

சென்ற பாடலில் இறைவனை “கொள்ளைக் குறையேதும் இல்லாதவன் என்றும் உயிர்களை இறை(யும்) ஏதுமில்லாத யாம்” என்றும் இருவருக்கும் உள்ள இல்லாமை சொல்லப்பட்டது. கம்பன், சீதையையும் இராமனையும் கட்டுரைக்கையில் “மருங்கிலா நங்கையும் வசையில் அய்யனும்” என்று இருவருக்கும் ஒரு இல்லாமையைக் கூறினான். சீதைக்கு இடுப்பு இல்லை, இராமனுக்குப் பழிப்பில்லை என்று நகைச்சுவையாகக் கூறினான். அது போல இன்கம் இறைவனுக்குக் குறை ஒன்றுமில்லை என்றும், உயிர்களுக்கு கொடுப்பதற்கு சிறிதும் ஒ ன்றும் இல்லை என்றும் கூறப்பட்டதாக இருவருடைய இல்லாமையும் தெளிவாக்கப்பட்டது. அதன் தொடர்பாக இருவருக்குமுள்ள இல்லாமையை எண்ணி இறைவனை வெல்வார் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது இவ்வுண்மையை உணர்ந்தவன் ஞானி எனப்படுவான்.” இத்தகைய ஞானியே எனக்கு உயிர்” என்று கீதையில் கூறுகிறான் பகவான். மேலும் அவனே எனக்கு அன்புக்கு இடமானவன் என்றும் ஞானியிடம் நான் தோற்பவன் என்றும் கூறியுள்ளான். இப்படி இறைவனால் கூறப்படும் ஞானி எங்கேனும் இருக்கிறார்களோ ? என்று ஞானிகளின் பெருமை பேசப்படுகிறது. இப்பாடலில் ஸ்ரீ ஆண்டாளும் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா என்ற தொடரில் கூடுவாரிடம் தோற்பவன் கோவிந்தன் என்றும் கருத்துக் கூறினாள். அத்தகைய ஞானிகள் கிடைப்பார்களோ ? என்பது இப்பாடலின் கருத்து.

இல்லை இருவருக்கும் என்று இறையை வென்றிருப்பார்
இல்லை அஃதொருவருக்கு எட்டுமதோ – இல்லை
குறையுடைமை தானென்று  கூறினாரில்லா
மறையுடைய  மார்க்கத்தே காண்

பதவுரை:

இருவருக்கும் – இறைவனுக்கும், ஆன்மாக்களுக்கும்

இல்லை என்று – ஓர் குறைவின்மை உண்டென்று எண்ணுதலால்

இறையை – இறைவனை

வென்றிருப்பார் இல்லை – வெற்றி கொள்வாரில்லை

அஃது – அவ்வண்ணம்

ஒருவருக்கு – ஒரு மனிதனுக்கு

எட்டுமதோ – கிடைக்குமா?

குறைதான் – கொள்ளுவதாகிற குறை தான்

இல்லை – இறைவனுக்கில்லை

என்று – இவ்வாறு

கூறினாரில்லா – யாராலும் சொல்லப்படாத

மறையுடைய மார்க்கத்தே – வேத வழியில் நின்று

காண் – கண்டு கொள்வீராக

 

விளக்கவுரை:

இல்லை இருவருக்கும் என்று: இறைவனுக்கும் உயிர்களுக்கும் ஓர் இன்மை உண்டு. அதாவது இறைவனுக்குக் குறையொன்றுமில்லை. அவன் குறை ஒன்றுமில்லாத கோவிந்தன். உயிர்களுக்குப் பொருள் ஒன்றும் இல்லை. “அறிவொன்றுமில்லாத ஆய்க்குலம்” “பொருள் அல்லாத” என்பவற்றால் இருவருக்கும் உள்ள இன்மை புலனாகும். இதுவே இருவருடையவும் உண்மை நிலையாகும். இவ்வுண்மை நிலையை இடையறாது எண்ணி இருப்பதுவே உயிர்களின் கடமையாகும். இவ்வாறு எண்ணியிருப்பார்க்கு இறைவன் தாழ நிற்பான். இதற்கு உதாரணமாக ஆழ்வாரின் பாடல்களில் காணலாம். வளவேழுலகு, மின்னிடை மடவார், கண்கள் சிவந்த, ஓராயிரமாய், அறுக்கும் வினையாயின முதலிய திருவாய்மொழிகளில் பகவான் ஆழ்வார் முன் வந்து அவருக்குத் தாழ நின்றி சேவை கொடுப்பதால் கண்டு கொள்ளலாம். இவ்விருவரின் உண்மை நிலையும் அறியாதர்க்கு எம்பெருமானைப் பணிய வைப்பது இயலாததாகும். அதை அடுத்த  தொடரால்  கூறுகிறார்

இறையை வென்றிருப்பார்   இல்லை இறைவன் யாருக்கும் கட்டுப்படாதாவன். சுதந்திரன் – தன்னுடைய விருப்பபடி நடப்பவன். அத்தகையவனை  ஒருவன் தனக்கு வயப்ப்படும்படி செய்து கொள்ள முடியாது. மேற்கூறிய இருவரின் இலக்கணங்களையும் எண்ணியிருப்பார்க்கு அவன்  மிகவும் எளியனாவான். பத்துடை அடியவர்க்கு எளியனல்லவா? அவன். எளிவரும் இயல்வனாயிற்றே அத்தகைய பக்தர்களைக் காண முடியுமா?

அஃது ஒருவருக்கு எட்டுமதோ: அதாவது இறைவனுடைய தலைமையையும் தன்னுடைய அடிமையையும் இடையறாமல் நினைக்கும் தன்மை ஒருவரால் செய்ய முடியுமா? நான் எனது என்று செருக்கி திரியும் உலகில் அது அவ்வளவு எளிதல்லவே! மிகவும் அரிதாயிற்றே! ஆகவே தான் அவனைப் பணியச் செய்வது இயலாது என்று கூறப்பட்டது. இடையறாமல் நினைக்க வேண்டிய அவ்விருவருடைய இயல்பு தான் எது என்றால் அதற்குப் பதில் உரைக்கிறது மேல் தொடர்.

இல்லை குறையுடமை தான் என்று: குறை தான் இல்லை உடைமை தான் இல்லை என்று கொண்டு கூட்டிப் பொருள் கொள்க. தான் என்ற இடைச் சொல் எகாரப் பொருளில் வந்தது. குறையே இல்லை. உடைமையே இல்லை என்று விரித்துப் பொருள் கொள்க. அதாவது இறைவனுக்கு உயிர்களிடம் ஒன்று பெற்றுக் கொள்ளத் தக்க குறையில்லை. உயிர்களுக்கு அவனுக்குக் கொடுக்கத் தக்க பொருள் ஏதும் இல்லை. இதுவே இருவருக்குமுள்ள இயல்பு. இந்த அறிவு யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. காரணம் மேல் தொடரில் கூறப்படுகிறது.

கூறினார் இல்லா மறையுடைய மார்க்கத்தே காண்: வேதத்தின் உட்பொருளாய் மறைந்து கிடக்கிறது ஆகவேதான் அரிதாய் உள்ளது. வேதம் எவராலும் ஆக்கப்பட்டதில்லை.அது அநாதியானது. “ஐயம்  திரிபு” முதலிய குற்றமற்றது. ஆகவே நம்பிக்கை மிக்கது. அதைக் கற்று உணர்ந்த மேலோர்களால் உண்மை அறியத் தக்கது. அதைக் கற்று மேல் கூறிய உண்மையைத் தெளிய வேண்டியுள்ளது. தன முன் நிற்பார் ஒருவனைப் பார்த்துக் கூறுவது போல ஆசிரியர் காண்-(காண்பாயாக) என்று கூறுவதாகத் தெரிகிறது.

இவ்வாறு “காண்” என்று உரையாசிரியர் மணவாளமாமுனிகள் அத்தகையவர்கள் காணக் கிடைப்பார்களா என்று ஏங்குகிறார். ஒருவர் மேல் வைத்துச் சொல்லப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் சொல்வதாகக் கொள்ளவேணும். இதனால் கூறப்பட்டதாவது.இறைவன் நிறைவானவன். (பரிபூர்ணன்) உயிர் அவனுடைய உடைமை. அதனால் அதற்கு உடைமையானது ஒன்றுமில்லை. இதுவே மறையில் சொல்லப்பட்ட இறை உயிர்களைப் பற்றிய இரகசியமாகும். வேதத்தைக் கற்று உணர்ந்தவர்களுக்கே தெளிவாதன்றி ஏனையோர்க்கு அறிய முடியாத ஒன்று. இவ்விருவரது உண்மையையும் அறியும் ஞானிகளுக்கு இறைவன் மிகவும் எளியவனாவான். இவ்வுண்மையை அறியாத  உலகத்தார்க்கு இறைவனைத் தமக்கு எளிமையாக்கும் பெருமை கிடைக்குமா? கிடைக்காது. இதனால் ஆத்மா பரமாத்மா சிந்தனை இறைவனைப் பணிய வைக்கும் என்றும் அச்சிந்தனை இல்லாதார்க்கு இறைவன் எளியனாகும் தன்மை கிடைக்காது என்பதும் கூறப்பட்டது. இதைப் “பத்துடையடியவர்க்கு எளியவன்”, “பிறர்க்கு அரிய வித்தகன் ” என்றார் நம்மாழ்வார். இதனால் சாஸ்திரப்படி நடப்பவர்களுக்கு பகவான் எளியவனாயிருப்பன் என்றும் அப்படி இல்லாதவர்களுக்குன்மிக அரியனாய் நெடுந்தொலைவில் இருப்பான் ” என்றும் அறியக் கிடைக்கிறது. கீதையில் ஞானியைத் தனக்கு உயிர் என்றான் கண்ணன். அவர்களுக்கு எளியனாய் இருந்தான் “காப்பிட வாராய்” “பூச்சூட வாராய்” “அம்மம் உண்ண வாராய்” என்றால் ஓடி வருவான். “விட்டு சித்தர் தங்கள் தேவர்” என்றாள் ஆண்டாள். இதனால் “ஞானியருக்கு ஒப்போரில்லை இவ்வுலகு தன்னில்” என்றார் மணவாள மாமுனிகள்.

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “ப்ரமேய ஸாரம் – 7 – இல்லை இருவருக்கும்”

Leave a Comment