பூர்வ திநசர்யை – 12 &13 – பவந்த & த்வதந்ய

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

 12 & 13-ஆம் பாசுரம்

भवन्तमेव नीरन्ध्रं पश्यन् वश्येन चेतसा
मुने वरवर स्वामिन् मुहुस्त्वामेव कीर्तयन्

त्वदन्यविषयस्पर्शविमुखैरखिलेन्द्रियैः
भवेयं भवदुःखानामसह्यानामनास्पदम्

பவந்தமேவ நீரந்த்ரம் பஸ்யந் வஸ்யேந சேதஸா |    
முநே வரவர ஸ்வாமிந் முஹுஸ்த்வாமேவ கீர்த்தயந் || 12

த்வதந்யவிஷயஸ்பர்ஸவிமுகைரகிலேந்த்ரியை: |
பவேயம் பவது:க்காநாம் அஸஹ்யாநாமநாஸ்பதம் || 13

பதவுரை:- ஸ்வாமிந் வரவர – தேவரீருடைய ஸொத்தான அடியேனிடத்தில், தாமே அபிமாநம் செலுத்தும் ஸ்வாமித்வத்தையுடைய மணவாளமாமுனிகளே! முநே – அடியேனை ஏற்றுக்கொள்ளத்தக்க உபாயத்தை மனனம் செய்யும் மஹாநுபாவரே! பவந்தமேவ – திருமேனியழகு நீர்மை எளிமை முதலிய குணங்களால் பூர்ணரான தேவரீரையே, நீரந்த்ரம் – இடைவிடாமல், பஸ்யந் – கண்டுகொண்டும், வஸ்யேந் சேதஸா – (தேவரீரின்னருளால் அடியேனுக்கு) வசப்பட்ட மநஸ்ஸுடன், த்வாமேவ – ஸ்தோத்ரம் செய்யத்தக்க தேவரீரையே, முஹூ – அடிக்கடி, கீர்த்தயந் – ஸ்தோத்ரம் செய்துகொண்டும், (அஹம் – அடியேன்) (12)

த்வத் அந்ய விஷய ஸ்பர்ஸ விமுகை – தேவரீரைவிட வேறாகிய ஸப்தாதி விஷயங்களைத் தொடுவதில் பராமுகமான (பகைமைபூண்ட), அகில இந்த்ரியை – கண், மூக்கு முதலிய ஜ்ஞாநேந்த்ரியங்களென்ன, வாக்கு முதலான கருமேந்த்ரியங்களென்ன, இவற்றாலே அஸஹ்யாநாம் – பொறுக்கமுடியாத, பவது:க்காநாம் – பிறவியினாலுண்டாகும் து:க்கங்களுக்கு, அநாஸ்பதம் – இருப்பிடமாகாதவனாக, பவேயம் – ஆகக்கடவேன். (13)

கருத்துரை:- ஆசார்யனை இடைவிடாமல் கண்ணால் ஸேவித்துக்கொண்டும் வாயால் துதிசெய்து கொண்டும் மற்றுமுள்ள இந்த்ரியங்களுக்கும் ஆசார்யனையே விஷயமாக்கிக் கொண்டுமிருப்பதனால் தாம் மோக்ஷத்திற்கே தகுதிபெற்று, இதுவரையில் இந்த்ரியங்களனைத்தும் உலகிலுள்ள ஸப்தாதி நீசவிஷயங்களையே இலக்காகிக் கொண்டிருந்ததனால் தமக்கு ஏற்பட்டிருந்த ஸம்ஸாரது:க்கம் இனி மேல் நேராதிருக்க வேணுமென்று மாமுனிகளை ப்ரார்த்திக்கிறார் இவற்றால். இங்கு பஸ்யந் கீர்த்தயந் என்ற இரண்டிடங்களிலும் உள்ள ஸத்ரு ப்ரத்யயம் காரணப் பொருளதாகையால், காண்பதனாலும் துதிப்பதனாலும் – என்று முறையே பொருள் கொள்க.

இவற்றிற்கு அடுத்த ஸ்லோகத்திலுள்ள ‘பவது:க்காநாம் அநாஸ்பதம் பவேயம்’ என்பதனோடு அந்வயம். பவேயம் – என்றதில் லோட்ப்ரத்யயத்திற்கு ப்ரார்த்தனை பொருளாகையால், தேவரீரையே கண்டுகொண்டிருப்பதனாலும், ஸ்தோத்ரம் செய்து கொண்டிருப்பதனாலும் மற்ற ஸப்தாதி விஷயங்களை விட்டு தேவரீரையே இலக்காகப் பெற்ற மற்றுமுள்ள எல்லா இந்த்ரியங்களையும் உடையேனாகையாலும் மோக்ஷம் பெறுவதற்கே உரியேனாகி – அடியேன் ஸம்ஸார து:க்கங்களுக்கு ஒருநாளும் ஆளாகாதபடி தேவரீர் க்ருபை செய்யவேணுமென்று ப்ரார்த்தித்தபடி இது. ஆசார்யனைக் காண்பதனாலும், துதிப்பதனாலும் எம்பெருமான் திருவுள்ளத்தில் ப்ரீதியுண்டாய், அதனால் ஸிஷ்யன் மோக்ஷம் பெறுகிறானாகையாலே, ஸிஷ்யன் ஸம்ஸார து:க்கத்திற்கு ஆளாகாமலிருப்பதற்கு ஆசார்ய தரிசனமும் ஆசாரிய ஸ்தோத்ரமும் பரம்பரயா காரணமென்று கொள்ளத்தக்கது.

தம்முடைய எல்லா இந்த்ரியங்களுக்கும் மற்ற ஸப்தாதி விஷயங்களில் பராங்முகத்வம் (பகைமை பூணுதல்) கூறப்பட்டது கொண்டு, அவற்றுக்கு மணவாளமாமுனிகளையே இலக்காகவுடைமையை (ப்ரார்த்திப்பதாக) ஊகித்தறிதல் தகும்; இந்த்ரியங்கள் குர்வத்ரூபங்கள் (ஏதாவது தமக்குத் தக்கதொரு வேலையைச் செய்து கொண்டேயிருக்குந் தன்மையுடையவைகள்) ஆகையால் ஸப்தாதி விஷயங்களில் பராமுகமான இந்த்ரியங்களுக்கு மணவாளமாமுனிகளையே விஷயமாக (இலக்காக)வுடைமை

அவசியமாகையால் இந்த்ரியங்கள் ஏதாவதொரு விஷயத்தைப் பற்றாமல் வெறுமனே இராவன்றோ? ஆக – இவ்விரண்டாலும், மாமுனிகளே! அடியேனுடைய எல்லாவிந்த்ரியங்களும் தேவரீரையே இலக்காகக் கொண்டு அடியேன் மோக்ஷத்திற்குத் தகுதி பெற வேண்டும். நீசமான ஸப்தாதிகளை விஷயமாகக் கொள்ளாமையினால் பிறவித் துன்பத்திற்கு ஆளாகாமலிருக்க வேண்டும். இங்ஙனமிருக்கும்படி தேவரீர் அருள்புரிய வேணுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. கண், காது, கை, கால் முதலிய ஜ்ஞாநேந்த்ரிய கர்மேந்த்ரியங்களனைத்தையும் பகவத் பாகவதாசார்ய கைங்கர்யங்களிலேயே உபயோகிக்க வேண்டும். லௌகீக நீச விஷயங்களில் செலுத்தக்கூடாதென்பது சாண்டில்யஸ்ம்ருதி, பரத்வாஜ பரிசிஷ்டம் முதலிய தர்மசாஸ்த்ர க்ரந்தங்களில் பரக்கக்கூறப்பட்டுள்ளது. விரிப்பிற்பெருகுமென்று விடப்பட்டது.

இதுவரையில் இந்த வரவரமுநிதிநசர்யை என்னும் நூலுக்கு உபோத்காதமாகும். உபோத்காதம் = முன்னுரை. இதுதன்னில் மேலே சொல்லப்போகிற ஐந்து காலங்களில் செய்ய வேண்டிய அபிகமநம், உபாதானம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து அம்ஸங்களில் – இஜ்யை தவிர்ந்த மற்ற நான்கும் குறிப்பாகக் காட்டப்பட்டுள்ளன. அபிகமநமாவது எம்பெருமானை ஸேவிப்பதற்காக எதிர்கொண்டு செல்வது. இது ‘பத்யு: பதாம்புஜம் த்ரஷ்டும் ஆயாந்தம்’ (2) என்று ஜகத்பதியான அழகியமணவாளனை ஸேவிக்கக் கோயிலுக்கு மாமுநிகள் செல்லுவது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது. உபாதாநமாவது – எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தல். இது ‘ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யத் நாஸ்தீதி நிஸ்சயாத் – இமம் ஜநம் அங்கீகர்த்துமிவ ப்ராப்தம்’ (11) என்று பரமாத்மாவுக்கு – ஜீவாத்மாவைத் தொண்டனாக்கி அவனைப்பெறுதலே ப்ரயோஜநமென்று அறுதியிட்டு, அதற்காக மாமுநிகள் தம்மை ஏற்றுக்கொள்வதற்கு எழுந்தருளல் கூறப்பட்டதனால், மாமுனிகள் எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய எறும்பியப்பாவை ஸ்வீகரிப்பதாகிற உபாதாநம் ஸூசிப்பிக்கப்பட்டது. ஸ்வாத்யாயமாவது – வேத மந்த்ரங்களை ஒதுதல். இது ‘மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்தத ஸ்புரிதாதரம்’ (9) என்று – வேத மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதசைகிற அதரத்தையுடைமை கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது. யோகமென்பது பகவத் விஷயத்தைப் பற்றிய த்யானமாகும். இது ‘ததர்த்த தத்வ நித்யாந ஸந்நத்த புலகோத்கமம்’ (9) என்று அந்த த்வயமந்திரத்தின் உண்மைப் பொருளாகிய பிராட்டி பெருமாள் முதலிய பொருளையாவது, பகவத் ராமாநுஜமுநிகளையாவது த்யானம் செய்வது கூறப்பட்டதனால் ஸூசிப்பிக்கப்பட்டது. இங்ஙனம் முற்கூறிய ஐந்தில் நான்கு அம்ஸங்கள் குறிக்கப்பட்டனவாகக் கொள்க. ஆக, இவ்வுபோத்காதம் மேலுள்ள நூலுக்குச் சுருக்கமாக அமைந்ததென்க. ‘எம்பெருமானை எதிர்கொண்டும் எம்பெருமானை ஆராதிப்பதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரித்தும், ஆராதனம் செய்தும், வேத மந்த்ராத்யயனம் செய்தும், வேத மந்த்ரார்த்தத்தை த்யானம் செய்தும் இப்படிப்பட்ட ஐந்து அம்ஸங்களினால் போதை நற்போதாகப் போக்கவேண்டும்’ என்று பரத்வாஜ முனிவர் பணித்தது காணத்தக்கது.

பூர்வதினசர்யையின் முன்னுரைப்பகுதி நிறைவுபெற்றது.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment