ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
<< ஆறாம் திருமொழி – வாரணமாயிரம்
ஸீதாப் பிராட்டியைப் போலே வழியிலே வந்த ஒரு குரங்கான திருவடியிடம் (ஹனுமானிடம்) எம்பெருமானுடைய அனுபவத்தை விசாரிக்க வேண்டாதே எம்பெருமானின் அந்தரங்க கைங்கர்யபரரான, பகவதனுபவத்தில் தேசிகரானவரிடம் (தேர்ந்தவரிடம்) கேட்கும் பாக்யத்தைப் பெற்றாள் ஆண்டாள். ஸ்வப்னத்தின் முடிவில் எம்பெருமானுடன் ஒரு கூடலும் ஏற்பட்டிருக்கவேண்டும். அதனாலேயே எம்பெருமானின் அதராம்ருதம் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்து சங்கத்தாழ்வானிடம் (ஸ்ரீபாஞ்சஜன்யத்திடம்) வினவுகிறாள். சங்கத்தாழ்வானிடம் எம்பெருமானின் அதராம்ருதத்தைப்பற்றிக் கேட்பதற்குக் காரணங்கள் – 1) ஒரு ராணியின் அந்தப்புரத்திலும் கூனர் குள்ளர் போன்றவர்கள் ராஜா மற்றும் ராணியின் ஆனந்தத்துக்காக இருப்பதைப் போலே, எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் அந்தரங்கத்திலும் உடன் இருப்பதால் 2) எம்பெருமான் எப்பொழுதெல்லாம் விரும்பினாலும் அவனுடைய திருவாயில் வைத்து ஊதும்பொழுது எம்பெருமானின் அதராம்ருத்தத்தை இவன் பருகுவதால் 3) எப்பொழுதும் எம்பெருமானைப் பிரியால் உடன் இருப்பதால் – அதாவது திருவாழியை எய்து எதிரிகளை அழிப்பான் ஆனால் திருச்சங்கு எப்பொழும் எம்பெருமான் கைகழலாமல் இருக்கும். மேலும் எம்பெருமானின் கரிய திருமேனிக்குப் பரபாகமாக (எதிர்நிறமாக) வெளுத்த நிறத்தில் இருப்பதால், இந்த சேர்த்தி மிகவும் அனுபவிக்கத்தக்கது. இப்படி எல்லாம் இருப்பதால் சங்கத்தாழ்வானிடத்திலே பேசினாலும்/கேட்டாலும், அது எம்பெருமானிடத்திலே பேசுவது/கேட்பது போலாகையாலே, அவனை வினவுகிறாள்.
முதல் பாசுரம். எம்பெருமானின் வாகம்ருதத்தை எப்பொழுதும் அனுபவிப்பதால் அதன் சுவை உனக்குத் தெரிந்திருக்குமே. அது எப்படி இருக்கும் என்று எனக்குச் சொல்லுவாயா என்று அவனைக் கேட்கிறாள்.
கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
கம்பீரமாய் வெளுத்த நிறத்திலிருக்கும் ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானே! குவலயாபீடம் என்னும் யானையின் கொம்பை முறித்த கண்ணபிரானின் திருவதர ரஸத்தையும் வாசனையையும் ஆசையோடே உன்னைக் கேட்கின்றேன். அந்த எம்பெருமானின் பவளம்போன்ற சிவந்த திருவதரம் பச்சைக்கற்பூரம்போன்ற வாசனை வீசுமோ? அல்லது தாமரைப்பூப்போன்ற வாசனை வீசுமோ? இனிப்பான ரஸத்தைக் கொண்டிருக்குமோ? நீ எனக்குச் சொல்லு.
இரண்டாம் பாசுரம். எதிரிகளை அழிப்பதுபோலே அடியார்களை வாழவைக்கவும் வேண்டும். நீ எப்படி மற்றவர்களுக்காகவே பிறந்து வளர்ந்தாயோ அவ்வாறே உன்னுடைய கார்யங்களும் இருக்கவேண்டும் என்கிறாள்.
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய அசுரர்
நடலைப்பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே!
அழகிய ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானே! நீ கடலில் பிறந்து பஞ்சசனன் என்ற அஸுரனுடைய உடலிலே போய் வளர்ந்ததைக் கருதாமல் எக்காலத்தில் இருக்கும் எம்பெருமானுடைய திருக்கைத்தலம் என்கிற உயர்ந்த இடத்தில் குடிபுகுந்து கொடிய அஸுரர்கள் துன்பப்படும்படி பெரிய கோஷத்தைச் செய்யும் மேன்மையைக் கொண்டுள்ளாய். ஆதலால் எனக்கும் நீ இந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும்.
மூன்றாம் பாசுரம். சங்கத்தாழானின் அழகை அனுபவிக்கிறாள்.
தடவரையின் மீதே சரற்கால சந்திரன்
இடையுவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே!
அழகிய பெரிய ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானே! இலையுதிர் காலத்துச் சந்த்ரன் பௌர்ணமி தினத்தில் பெரிய உதயகிரியில் வந்து எழுந்தாற்போலே வடமதுரையில் உள்ளார்க்குத் தலைவனான வாஸுதேவன் எம்பெருமான் திருக்கையில் நீயும் குடியேறி உன் மேன்மையெல்லாம் தோற்றும்படி இருக்கின்றாய்.
நான்காம் பாசுரம். எம்பெருமானிடத்தில் ரஹஸ்யம் பேசக்கூடிய நீ என்னைப்பற்றி அவனுக்குச் சொல்லவேண்டும் என்கிறாள்.
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்றின்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே!
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே
வலம்புரிச்சங்கே! தாமோதரன் எம்பெருமான் திருக்கையில் சந்த்ர மண்டலம்போலே இடை விடாமல் இருந்து கொண்டு அவனுடைய காதில் ரஹஸ்யம் பேசுவதைப்போலே இருக்கின்றாய். செல்வத்தில் மிகுந்த இந்த்ரனும் உண்மையான கைங்கர்யச் செல்வத்தில் உனக்கு ஒப்பாகமாட்டான்.
ஐந்தாம் பாசுரம். எம்பெருமானின் வாகம்ருதத்தை நீ எப்பொழுதும் பருகிக்கொண்டிருப்பதால் மற்ற சங்குகள் உனக்கு ஓப்பாகாது என்கிறாள்.
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே!
ஸ்ரீபாஞ்சஜந்யாழ்வானே! ஒரே கடலில் உன்னோடு கூடவே வாழ்கின்றவர்களான சங்குகள் முதலான மற்றும் பலரை ஒரு பொருளாகவும் மதிப்பாரில்லை பார்! நீ ஒருவனே எல்லோருக்கும் தலைவனான மதுஸூதன் எம்பெருமானின் வாகம்ருதத்தைப் பல காலமாகப் பருகிக் கொண்டிருக்கிறாய். ஆகையால் நீயே பாக்யவான்.
ஆறாம் பாசுரம். எம்பெருமானுடைய வாய்த்தீர்த்தத்திலேயே நீராடும் பாக்யம் பெற்றவனே என்று கொண்டாடுகிறாள்.
போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே!
வலம்புரிச்சங்கே! வெகுதூரம் நடந்து போய் கங்கை முதலிய புண்ய நதிகளிலே நீராட வேண்டிய கஷ்டங்களைப்படாமல் நாரத சாபத்தாலே மரமாய் நின்ற இரட்டை மருத மரங்களைச் சாய்த்துத் தள்ளின கண்ணபிரனுடைய திருக்கைத்தலத்தின் மேலேறி அங்கேயே நிரந்தரமாக வாஸம் செய்துகொண்டு மிகவும் உயர்ந்த தீர்த்தமாகிய (புண்ணிய நீராகிய) சிவந்த கண்களையுடைய ஸர்வேச்வரனுடைய வாயிலுள்ள தீர்த்தத்திலே நன்றாகப் படிந்து நீராடும் பாக்யத்தைப் பெற்றுள்ளாய்.
ஏழாம் பாசுரம். எம்பெருமான் திருக்கைகளிலேயே சயனித்திருக்கும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தின் பாக்யத்தைக் கொண்டாடுகிறாள்.
செங்கமல நாண்மலர் மேல் தேனுகரும் அன்னம் போல்
செங்கட் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலம் ஏறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா! உன் செல்வம் சால அழகியதே
புதிதாக மலர்ந்த செந்தாமரைப்பூவில் படிந்து தேனை நுகரும் அன்னப்பறவைபோன்று சிவந்த திருக்கண்களையும் கரிய திருமேனியையும் உடைய கண்ணன் எம்பெருமானின் அழகிய திருக்கைத்தலத்தின் மேலேறி சயனித்திருக்கிற சங்குகளின் தலைவனான ஸ்ரீபாஞ்சஜந்யமே! உன்னுடைய கைங்கர்யச் செல்வமானது மிகவும் சிறந்தது.
எட்டாம் பாசுரம். பெண்கள் எல்லோரும் ஸ்ரீபாஞ்சஜந்யத்திடம் கோபப்படுவதைச் சொல்லுகிறாள்.
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே!
ஸ்ரீபாஞ்சஜந்யமே! நீ உண்பதோ திருவுலகளந்தருளின எம்பெருமானுடைய திருவாயிலுள்ள அமிர்தம். நீ சயனித்துக்கொள்வதோ கடல்போன்ற நிறத்தை உடையவனான அந்த எம்பெருமானுடைய திருக்கையிலே. இப்படி இருப்பதாலே பெண் குலத்தவர்கள் எல்லோரும் உன் விஷயமாக பெரிய கூச்சல் போடுகின்றனர். எங்களை விட்டு நீ மட்டும் எம்பெருமானை அனுபவிக்கும் அநியாயமான கார்யத்தைச் செய்கிறாய். இது சரியா?
ஒன்பதாம் பாசுரம். சென்ற பாசுரத்தைப்போலே, இதிலும் பெண்கள் எல்லோரும் ஸ்ரீபாஞ்சஜந்யத்திடம் கோபப்படுவதைச் சொல்லுகிறாள்.
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெரும் சங்கே!
எம்பெருமானை எப்பொழுதும் அனுபவிக்கும் பெருஞ்செல்வத்தைப் பெற்றுள்ள ஸ்ரீபாஞ்சஜந்யமே! பதினாறாயிரம் தேவிமார்கள் கண்ணன் எம்பெருமானின் வாகம்ருதத்தைப் பருகலாம் என்று பார்த்திருக்க, எம்பெருமானின் அடியார்கள் எல்லோரும் பகிர்ந்துண்ணவேண்டிய அந்த எம்பெருமானின் வாகம்ருதத்தை, நீ ஒருவனே ஆக்ரமித்துத் தேனை உண்பதுபோல் உண்டால் மற்ற பெண்கள் உன்னுடன் வாதம் செய்ய மாட்டார்களோ?
பத்தாம் பாசுரம். இந்தப் பத்துப் பாசுரங்களைக் கற்றவர்களுக்குப் பலம் சொல்லி முடிக்கிறாள்.
பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே
ஸ்ரீபாஞ்சஜந்யத்தை எம்பெருமானோடே பெரிய உறவை உடையவனாக ஆக்கியவளும் அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவளும் நிறைந்த புகழை உடையவளும் பெரியாழ்வார் திருமகளுமான ஆண்டாள் (நான்) அருளிச்செய்த இந்தத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் பாடி இதைக் கொண்டு எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களும் என்னைப்போலே எம்பெருமானுக்கு நெருங்கிய உறவுடையவர்கள் ஆவர்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org