3-ஆம் பாட்டு:
“ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள்
கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் எனவே
ஆக்கை முடியும்படி பிறத்தல் அன்னவன்தாள்
நீக்க மில்லா அன்பர் நிலை”
பதவுரை:
ஆனை | கஜேந்திராழ்வானுடைய |
இடர் | முதலையினால் உண்டான துன்பத்தை |
கடிந்த | போக்கின |
ஆழி அங்கை | சுதர்சனம் என்னும் சக்கரத்தை அழகிய கையிலேந்திய |
அம்புயத்தாள் கோனை | லக்ஷ்மீ நாயகனை |
விடில் | பிரியில் |
நீரில் | தண்ணீரிலிருந்து |
குதித்தெழுந்த | துள்ளிக் குதித்துப் பிரிந்த |
மீனெனவே | மீன் போல |
ஆக்கை முடியும்படி பிறத்தல் | உடல் அழியும்படி நிலை உண்டாதல் |
அன்னவன்தாள் | அத்திருவின் மணாளனது திருவடிகளை |
நீக்கமில்லா | பிரிய மாட்டாதது |
அன்பர் நிலை | அன்புடையார் நிலையாகும். |
கீழ்ச்சொன்னதில் “பிரிவில் ஆற்றாமை, கூடில் ஆற்றுதல்” என்ற பர பக்தியின் நிலை பேசப்பட்டது.
இதில் பரபக்தியின் பழுத்த நிலையான பரமபக்தி பேசப்படுகிறது. அதாவது பிரிந்தால் ஆற்றமாட்டாமல் உயிர் பிரிதல் அளவுக்கு மீறிய பக்தி மிஞ்சி போகுதல். இதை உதாரணத்துடன் கூறுகிறார்.
விளக்கவுரை:
புராணங்களிலும் ஆழ்வார் பாசுரங்களிலும் அடிக்கடி பேசப்படுவது கஜேந்திராழ்வான் சரிதம். கஜேந்திரனாகிற யானை பகவான் திருவடிகளில் தாமரைப் பூவை சமர்ப்பிப்பதற்காகத் தாமரைக் குளத்தில் இறங்கி பூவைப் பறித்துக் கரையேறியது. அப்பொழுது நெடுநாளாக தன் சாபத்தைப் போக்கும் யானையை எதிர்பார்த்திருந்த முதலை யானையின் காலைக் கவ்வியது. யானை கரைக்கு இழுக்க முதலை நீருக்கு இழுக்க தேவ வருஷத்தில் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தன. முதலைக்கு நீர் தன்னிடமாதலாலும் பலமானதாலும் தனது விருப்பம் நிறைவேறியதால் பலம் வளர்கையாலும் யானையை நீருக்குள்ளே இழுத்தது. யானைக்கு நீர் நிலை வேற்றிடமாகையாலும் விருப்பம் நிறைவேறாததாலும் பலம் சிறிது சிறிதாகக் குறைந்து துதிக்கை முழுகும்படியான நிலை ஏற்பட்டதாலும், இனி இதுக்கு மேல் துன்பம் இல்லை என்னும்படியான ஆபத்தை அடைந்த நிலையில் “பக்தர்களின் விரோதியை அழிக்கும் இயல்புடைய இறைவனே (சர்வேஸ்வரனே) நமக்கு “ரட்சகன்” என்று எண்ணி “நாராயணாவோ மணிவண்ணா நாகணையாய் வாராய் என் ஆனிடரை நீக்காய்” என்று கூப்பிட்ட உடனே பகவான் ஒடோடி வந்து கஜேந்திராழ்வானுடைய துக்கத்தைப் போக்கினான். யானைக்கு துக்கமாவது முதலையின் வாயிலே அகப்படுகையாலே தன் சரீரம் அழிகிறது என்றல்ல. கையில் எடுத்த பூவை அதன் அழகு அழியாமல் பகவான் திருவடிகளிலே சமர்ப்பிக்க முடியவில்லையே என்பதுவே துக்கம். அத்தகைய துக்கத்தை கஜேந்திரன் நோவுபடுகிற சமயத்திலே சென்று அவனுக்கு முகம் காட்டி அவன் துக்கத்தைப் போக்கினான் என்பது புராணக் கதை. இது இங்கு “யானையிடர் கடிந்த” என்ற தொடரால் கூறப்பட்டது.
ஆழியங்கை – “திருவாழியை அழகிய கையிலேயுடைய” என்று பொருள். கஜேந்திரனைக் காக்கச் சென்ற போது அவன் விரோதியான முதலையின் தலை துணிப்பதற்கு கையிலே திருவாழியை ஏந்திக் கொண்டு அப்பொழுது சென்றான் என்பது குறிப்பு.
“மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்த்
தொழுங் காதற் களிறளிப்பான் புள்ளுர்ந்து தோன்றினையே”
என்று நம்மாழ்வாரும் இதைக் குறிப்பிட்டார். யானை இடர்கடிய சக்கரத்துடன் சென்றது – தெளிவு. கஜேந்திரனைக் காக்க வருகின்ற வேகத்தில் கையில் இருக்கும் திருவாழியைக் கூடி அறியவில்லை போலும், அறிந்திருந்தால் இருந்த இடத்திலேயிருந்த சக்கரத்தை ஏவிக் காரியம் கொள்ளலாம் அல்லவா? என்று ஒரு பொருள். கையில் திருவாழியை அறிந்திருந்தே அப்படிச் செய்யாமல் ஒடோடி வந்து முதலையின் தலையைத் துணித்தான் என்பது மற்றொரு பொருள். காரணம், கஜேந்திரன் பக்தியுடன் அவனை அழைத்துத் தொழும் காதற் களிறு என்று இதனை ஆழ்வார் அருளினார். அதனால் கஜேந்திரன் பகவானுடைய கையும் திருவாழியுமான அழகு காண ஆசைப்பட்டிருக்கிறவன் கையில் பறித்த தாமரைப் பூவை பகவான் திருவடிகளில் சமர்ப்பிக்க ஆசைப்பட்டிருக்கிறவன். ஆகையால் அவன் இருக்கும் இடம் சென்று அவன் துக்கத்தைத் தீர்க்க வேண்டிய அவசியத்தினால், இருந்த இடத்திலேயே காரியம் கொள்ளாமல் தாமரை குளத்திற்குச் சென்றான். இதனால் “தன்னைக் காண ஆசைப்படும் பக்தர்களுக்கு ஆசைப்பட்டபடி முகம் காட்டுவான்” என்பது உட்கருத்து. இக்கருத்து பேயார் “குட்டத்துக் கோன் முதலை துஞ்சக் குறித் தெறிந்த சக்கரத்தான்” என்றார்.
அம்புயத்தாள் கோனை:- தாமரையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு நாயகனானவனை என்று இதன் பொருள். இதுவும் கருத்துடை தொடர். பாற்கடலில் பெருமாள் பள்ளி கொண்டிருக்க மண்மகளும், ஆய்மகளும் திருவடிகள் பிடிக்க, திருமகளைத் திருமார்பிலே அணைத்துக் கொண்டு பள்ளி கொண்டருளா நிற்க, அப்பொழுது கஜேந்திரன் கூப்பிட்ட அக்கூப்பீடு பகவான் திருச்செவிப்பட்டது. அப்போது திருவடி பிடித்தவர்களின் கைகளிலிருந்து திருவடிகளை மெதுவாக இழுத்துக்கொண்டு படுக்கையிலிருந்தும் சடக்கென எழுந்திருந்து திருக்கண்களையும் மலர விழித்து சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு திருமகளை அணைத்துக் கொண்டிருந்த திருமார்பை அவ்விடத்திலிருந்து பக்குவமாக வாங்கி அதன் பிறகே அனைவரும் வியக்கும்படி, கருடவாகனத்தில் ஏறி மிக வேகத்தோடே எழுந்தருளி ஸ்ரீகஜேந்திராழ்வான் துன்பத்தைப் போக்கினான் என்று புராணம் கூறுகிறது. அதைப்பற்ற “அம்புயத்தாள் கோன்” என்ற கருத்து கூறப்பட்டது. மேலும், அரசன் தன் மக்களை நல்லமுறையில் காப்பானானால் அதைக் கண்டு மகிழும் தாயைப் போல, இறைவன் பக்தர்களை இடுக்கண் களைந்து காத்தால் அதைக் கண்டு களிப்பவள் பிராட்டியான தாயல்லவா? அதனாலும் “அம்புயத்தாள் கோன்” என்று கூறப்பட்டது. இதனால் “தன்னை அடைக்கலம் புகுந்தவருடைய ஆபத்து காலங்களில் அவர் இருப்பிடம் சென்று அவருக்கு உதவி காக்குமவன்” என்றும், அவர்களைக் காப்பது அவர்களுக்கு செய்த செயலாகக் கருதாமல் தனக்குச் செய்து கொண்ட காரியமாகக் கருதுவான் என்றும் அத்தகையவன் பெரிய பிராட்டியாருக்குக் கணவனாவான் என்றும் பகவானுடைய இயல்புகள் கூறப்பட்டன.
விடில்:- தன் பக்தரிடம் இப்படி அன்புடையவனாக இருக்கிறவனைப் பிரிய நேரிட்டால்;
நீரில் குதித்தெழுந்த மீனெனவே:- நீரிலிருந்து குதித்துக் கிளர்ந்து அந்நீரைப் பிரிந்த மீன்போல;
ஆக்கை முடியும்படி பிறத்தல்:- சரீரம் அழியும்படியான நிலை உண்டாகும். கலவியில் இன்பமும், பிரிவில் துயரமும் பரபக்தியின் இலக்கணம். அதைக் காட்டிலும் சிறப்பு பரபக்திக்கு உண்டு. அதாவது பிரிந்தால் உயிர் போய்விடும் நிலை. இதுவே இதுக்குச் சிறப்பு. இதை நீரை விட்டுப் பிரிந்த மீன் போல என்று உதாரணத்தோடு கூறினாராயிற்று.
அன்னவன்:- கீழ் “அம்புயத்தாள் கோன்” என்று சொல்லப்பட்ட இறைவனை ‘அன்னவன்’ என்ற சொல்லால் இங்கே குறிப்பிடுகிறார். இங்கு ‘அன்னவன்’ என்றது அப்படிப்பட்டவன் என்று பொருள். அல்லது மீனுக்கு நீர்போல இவ்வான்மாவுக்கு தாரகனாயிருப்பவன் என்னவுமாம்.
தாள் நீக்க மில்லா அன்பர் நிலை – அவன் திருவடிகளைப் பிரியப் பொறுக்கமாட்டாத அன்பு. இப்படியிருந்துள்ள அளவு கடந்த அன்புடையவர்களது இயல்பு அவனைப் பிரியில் நீரிலிருந்து பிரிந்த மீன் போல உயிர் போகும் நிலை உண்டாகும். இது பரம பக்தியின் நிலை என்பதை இப்பாடல் விளக்குகிறது.