கண்ணிநுண் சிறுத்தாம்பு – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

முதலாயிரம்

nammazhwar-madhurakavi

நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பின் பெருமையை உபதேச ரத்தின மாலை 26ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார்.

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய் கலையை ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து 

சொற்களின் பூர்த்தியும் பொருளின் பூர்த்தியும் நிரம்பப் பெற்றதான பெரிய திருமந்த்ரம் என்று சொல்லப்படும் அஷ்டாக்ஷரத்தின் நடுவிலே காணப்படும் “நம:” பதத்துக்கு எவ்வளவு சிறப்போ, அதைப் போலவே சிறப்புடைத்தான, உயர்ந்தவரான மதுரகவி ஆழ்வாரின் அற்புதப் படைப்பான கண்ணிநுண் சிறுத்தாம்பை பெரு மதிப்பை உடையவர்களான ஆசார்யர்கள் இதன் தாத்பர்யத்தை உணர்ந்து ஆழ்வார்களின் அருளிச்செயல் நடுவே எப்பொழுதும் சேர்த்து அநுஸந்திக்கும்படி அமைத்தார்கள்.

“தேவு மற்றறியேன்” என்று நம்மாழ்வாரைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை அறியேன் என்றிருந்தார் மதுரகவி ஆழ்வார். இவரின் அற்புதப் படைப்பே கண்ணிநுண் சிறுத்தாம்பு. ஆசார்யனே தெய்வம் என்னும் நம் ஸம்ப்ரதாயத்தின் முக்யமான கொள்கையை நன்கு உணர்த்தும் ப்ரபந்தம் இது. தன்னுடைய ஆசார்யரான நம்மாழ்வாருடைய பெருமையை நன்கு உணர்த்தும் இந்த ப்ரபந்தத்துக்கு நம் ஸம்ப்ரதாயத்திலே ஒரு தனி ஏற்றம் உண்டு.

பூர்வாசார்யர்களின் வ்யாக்யானங்களைத் துணையாகக் கொண்டு இந்த ப்ரபந்தத்தின் எளிய விளக்கவரை எழுதப்படுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

*****

தனியன்கள்

அவிதித விஷயாந்தர: சடாரேர் உபநிஷதாம் உபகாநமாத்ர போக: |
அபி ச குணவசாத் ததேக சேஷீ மதுரகவி ஹ்ருதயே மமாவிரஸ்து ||

நம்மாழ்வாரைத் தவிர மற்றொன்றை அறியாத, நம்மாழ்வாரின் திவ்ய ஸ்ரீஸூக்திகளான ப்ரபந்தங்களின் பெருமைகளைப் பாடுவதையே தனக்கு இன்பம் அளிப்பதாகக் கொண்டுள்ள, நம்மாழ்வாரின் குணங்களில் எப்பொழுதும் மூழ்கி இருப்பதால் அவரையே தனக்குத் தலைவனாகக் கொண்டுள்ள மதுரகவி ஆழ்வார் என்னுடைய ஹ்ருதயத்திலே இருக்க வேண்டும்.

வேறொன்றும் நான் அறியேன்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண்

“வேத தாத்பர்யத்தைத் தமிழிலே அருளிச்செய்த, அழகிய திருக்குருகூருக்குத் தலைவரான, நம் எல்லோரையும் உஜ்ஜீவிக்கக் கூடிய மாறன் என்கிற நம்மாழ்வாரைத் தவிர வேறொன்றை அறியேன்” என்று சொன்ன மதுரகவி ஆழ்வாரே நம்மை ஆள்பவர், அவரே நம் போன்ற ப்ரபந்நர்களுக்குப் புகலிடம்.

*****

முதல் பாசுரம். நம்மாழ்வாரைப் பாடத் தொடங்கிய மதுரகவி ஆழ்வார், ஆழ்வாருக்கு மிகவும் உயிரான கண்ணன் எம்பெருமானை இந்தப் பாசுரத்தில் அனுபவிக்கிறார்.

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே

என்னுடைய ஸ்வாமியும் ஸர்வேச்வரனுமான கண்ணன் எம்பெருமான் யசோதைப் பிராட்டி துண்டு துண்டான, மெல்லிய, சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்டான். அப்படிப்பட்ட எம்பெருமானை விட்டு, தென் திசையில் உள்ள திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் அது என்னுடைய நாக்குக்கு இனியதாகவும் அமிர்தமாகவும் உள்ளது.

இரண்டாம் பாசுரம். நம்மாழ்வாரின் பாசுரங்களே தனக்கு மிகவும் இனிமையாக இருப்பதாகவும் அவற்றைச் சொல்லிச் சொல்லியே தன்னைத் தரித்துக்கொள்வதையும் விளக்குகிறார்.

நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

நான் நாக்காலே ஆழ்வாரின் பாசுரங்களைச் சொல்லி மிகப்பெரிய ஆனந்தத்தை அடைந்தேன். ஆழ்வாரின் திருவடிகளிலே நன்கு சரணடைந்திருக்கிறேன். கல்யாண குணங்களால் நிறைந்த, திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை அறியேன். ஆழ்வாருடைய பாசுரங்களை இசையுடன் பாடிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வேன்.

மூன்றாம் பாசுரம். நம்மாழ்வாரின் அடியவனாக இருப்பதாலே எம்பெருமான் தானே விரும்பி வந்து மதுரகவி ஆழ்வாருக்குத் தன் தரிசனத்தைக் காட்டிக்கொடுத்த நன்மையைப் பேசி மகிழ்கிறார்.

திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே

ஆழ்வாருக்கே அடியவன் என்றிருந்த நானும் அந்த நிஷ்டையில் இருந்து நழுவினேன். நித்யஸூரிகளின் தலைவனான, கறுத்த, அழகிய திருமேனியை உடையவனான ஸ்ரீமந் நாராயணனைக் அவன் காட்டிக் கொடுக்க நான் கண்டேன். சிறந்த, வள்ளல் தன்மை மிகுந்த திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரின் உண்மையான அடியவனாக இருக்கும் எனக்குக் கிடைத்த நன்மையைப் பாரீர்!

நான்காம் பாசுரம். ஆழ்வார் நமக்குச் செய்த நன்மையைப் பார்த்தால், அவருக்கு எதுவெல்லாம் விருப்பமோ, அவற்றை நாமும் விரும்ப வேண்டும் என்கிறார். மேலும் தன்னுடைய தாழ்ச்சியையும் ஆழ்வார் தன்னை ஏற்றுக்கொண்ட விதத்தையும் பேசி அனுபவிக்கிறார்.

நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே

நான் தாழ்ச்சிகளின் உருவமாக இருப்பதைக் கண்ட நான்கு வேதங்களில் சிறந்த ஞானமும் அனுஷ்டானமும் உடையவர்கள், என்னைக் கைவிட்டார்கள். ஆழ்வாரோ தாயும் தந்தையுமாக இருந்து என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டார் என்பதால் அவரே என் ஸ்வாமி.

ஐந்தாம் பாசுரம். தான் முன் பாசுரத்தில் கூறிய தாழ்ச்சியை விளக்கி, அப்படி இருந்த தான் இப்பொழுது ஆழ்வாரின் காரணமற்ற அருளாலே திருந்தியுள்ளதைத் அறிவித்து ஆழ்வாருக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறார்.

நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே

முற்காலத்தில் பிறருடைய சொத்தையும் பெண்களையும் விரும்பினேன். இன்றோ, தங்கத்தால் செய்யப்பட்ட மாட மாளிகைகள் நிறைந்த திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரால் திருத்தப்பட்டு அவரின் அடியவனாகி, மேன்மையை அடைந்தேன்.

ஆறாம் பாசுரம். “எவ்வாறு இப்படிப்பட்ட பெருமைஅயைப் பெற்றீர்?” என்ற கேள்விக்கு, ஆழ்வாரின் அருளாலே இப்பெருமையைப் பெற்றேன், இனி இந்நிலையிலிருந்து நாம் வீழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.

இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே

திருக்குருகூருக்குத் தலைவரான, என்னுடைய ஸ்வாமியும் நாதனுமான ஆழ்வார் இன்று முதல் நான் அவருடைய பெருமையைப் பாடும்படியான பூர்ண விச்வாஸத்தை எனக்கு அருளினார். இனி அவர் எம்மை ஒருநாளும் கைவிட மாட்டார்! இதை நீரே பாரீர்!

ஏழாம் பாசுரம். ஆழ்வாராலே அருளப்பட்ட தான் ஆழ்வாரின் பெருமையைத் தெரிந்து கொள்ளாமால் அதனால் ஆழ்வாரின் அருளை இழந்து துன்புற்றிருக்கும் அனைவருக்கும் ஆழ்வாரின் பெருமையை எடுத்துரைத்து அவர்களுக்கும் வாழ்ச்சியைப் பெற்றுத்தருவேன் என்கிறார்.

கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே

பொற்காரியின் திருக்குமாரரான காரிமாறன் என்னும் ஆழ்வார் என்னைக் கடாக்ஷித்துத் தன் கைங்கர்யத்தில் ஏற்றுக்கொண்டார். என்னுடைய அநாதி காலப் பாபங்களைப் போக்கினார். அற்புதத் தமிழ்ப் பாசுரங்களை அருளிச்செய்த ஆழ்வாரின் கருணையின் பெருமைகளை எட்டுத்திக்கிலும் உள்ளோர் உணரும்படிப் பாடுவேன்.

எட்டாம் பாசுரம். இதில் எம்பெருமானின் கருணையைவிட ஆழ்வாரின் கருணை உயர்ந்தது என்பதை விளக்குகிறார். எம்பெருமான் ஸ்ரீ கீதையை அருளிசெய்ததைவிட ஆழ்வார் திருவாய்மொழியை அருளிசெய்தது உயர்ந்தது என்கிறார்.

அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே

பகவானைக் கொண்டாடும் அடியார்களின் ஆனந்தத்துக்காக, ஆழ்வார் தன் பெருங்கருணையால் வேத ஸாரத்தை திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களாக அருளினார். ஆழ்வாரின் இந்தக் கருணை இவ்வுலகினில் மிகப் பெரியது.

ஒன்பதாம் பாசுரம். இதில் ஆழ்வார் வேத ஸாரமான “பாகவத சேஷத்வம்” என்னும் அடியார்களுக்கு அடிமையாக இருக்கும் விஷயத்தை என் தாழ்ச்சி பாராமல் எனக்கு வெளியிட்டார். அவருக்கு நான் எப்பொழுதும் நன்றி உடையவனாக இருப்பேன் என்கிறார்.

மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

வைதிக ச்ரேஷ்டர்களாலே அத்யயனம் செய்யப்படும் வேதத்தின் ஸாரத்தை என்னுடைய நெஞ்சிலே நிலைத்து நிற்கும்படி அருளினார் ஆழ்வார். இதனால் அவருக்குத் தொண்டு செய்யும் அந்த உத்தம நிலை எனக்கு உடனே கிடைத்தது.

பத்தாம் பாசுரம். இதில் ஆழ்வார் எனக்கு மிக உயர்ந்த நன்மைகளைச் செய்துள்ளார் என்றும் அதற்குத் தகுதியாக என்னால் எந்த ப்ரதி உபகாரமும் செய்ய முடியாது என்றும் சொல்லி ஆழ்வார் திருவடிகளில் பேரன்பு கொள்கிறார்.

பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய் கழற்கு அன்பையே

குயில்களின் ஓசை நிறைந்திருக்கும் சோலைகளாலே சூழப்பட்ட திருக்குருகூரில் வசிக்கும் ஆழ்வாரே! இவ்வுலகில் உள்ளவர்களாலே தேவரீருக்கு எந்த ப்ரயோஜனமும் இல்லை என்றபோதிலும், இவர்கள் திருந்தும் நிலையில் இல்லாவிட்டாலும், தேவரீர் உபதேசங்களாலும் நடத்தையாலும் இவர்களைத் திருத்திக் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துகிறீர். இப்படிப்பட்ட தேவரீர் திருவடிகளில் அன்பை வளர்த்துக்கொள்ள முயல்கின்றேன்.

பதினொன்றாம் பாசுரம். இதில் இந்தப் ப்ரபந்தத்தைக் கற்பவர்கள் ஆழ்வாரின் ஆளுமைக்கு முழுமையாக உட்பட்ட ஸ்ரீவைகுந்தத்தில் வாழ்வார்கள் என்கிறார். ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதரும் தலைவர் ஆழ்வாரும் தலைவர். ஆனால் பரமபதத்திலோ ஆழ்வாரே தலைவர் என்பது உள் அர்த்தம்.

அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே   

எம்பெருமான் எல்லோரிடத்திலும் (முக்யமாகத் தன்னுடைய அடியார்களிடத்திலே) அன்புடையவன். நம்மாழ்வார் இப்படிப்பட்ட எம்பெருமானின் அடியார்களிடத்தில் அன்பு பூண்டவர். நான் (மதுரகவி ஆழ்வார்) இப்படிப்பட்ட ஆழ்வாரிடத்தில் அன்பு பூண்டவன். இப்படிப்பட்ட நான் பக்தியுடன் பாடிய இந்த ப்ரபந்தத்தை முழுவதுமாக விச்வஸிப்பவர்கள் திருநாடான ஸ்ரீவைகுந்தத்தை அடைந்து அங்கே வாழ்வார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “கண்ணிநுண் சிறுத்தாம்பு – எளிய விளக்கவுரை”

  1. Respectful & dear Swami, Your crisp and compact explanation of this great work of Madhurakavi Azhwar will induce interest and bhakthi even in the dumbest and dumbest soul (like the anubhavam of adiyen). Your contribution to Sri Vaishnava Sampradhayam and community is immeasurable. With your blessings, adiyen is going to recite Kanninum Siruthambu 20,000 times starting from today (like Sriman Nathamuni) with the pure intention of getting the darshan and love of Sriman Nathamuni & Madhurakavi and getting the highest benefit of reaching Paramapadham. Please bless me that I should be able to complete my ordeal. adiyen Srinivasa Dasan, Madhavan

    Reply
  2. Swami, adiyen. My humble request to you to publish a similar meaning on “Kanninun Siruthambu” sung by Koyil Kandhadai annan on Manavala Mamunigal. If it is already there in your site, please could you share the reference.
    Adiyen, Swami.

    Reply

Leave a Comment