Monthly Archives: January 2015

ஞான ஸாரம் 21- ஆரப் பெருந்துயரே

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                    21-ஆம் பாட்டு:

முன்னுரை:

திருமகள் மணாளனான இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு மிகத் துன்பங்களை கொடுத்தாலும் அத்துன்பங்கள் அவர்களிடம் தான் கொண்ட அன்பினால் ஆகும் என்பது உதாரணத்துடன் விளக்கப்படுகிறது இப்பாடலில்.

vishnu-lakshmi-photo

“ஆரப் பெருந்துயரே செய்திடினும் அன்பர்கள்பால்
வேரிச்சரோருகை கோன் மெய்ந்நலமாம் – தேரில்
பொறுத்தற்கரி தெனினும் மந்தனுடற் புண்ணை
அறுத்தற்கிசை தாதை யற்று”

பதவுரை:

வேரிச்சரோருகைகோன் நறுமணம் நிறைந்த தாமரைப்பூவை இருப்பிடமாக கொண்ட பெரிய பிராட்டியாருக்கு மணவாளன்
அன்பர்கள் பால் பக்தி உடையவார்களிடத்தில்
ஆரப்பெருந்துயர் மிக்க பெரும் துன்பத்தை
செய்திடினும் தந்த போதிலும்
தேரில் இதை ஆராய்கையில்
மெய்ந்நலமாம் உண்மையான அன்பிலேயாகும்
பொறுத்தற்கு அரிது எனினும் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும்
அப்படித் தருவது மைந்தன் பிள்ளையினுடைய
உடற்புண்ணை உடலில் உண்டான புண்ணை
அறுத்தற்கு அறுவை சிகிச்சைக்கு
இசைதாதையற்று அனுமதிக்கும் தந்தை போலவாம்

விளக்கவுரை:

ஆரப்பெருந்துயரே – துயர் – துன்பம், பெருந்துயர் – பெருந்துன்பர். ஆரப் பெருந்துயர் – மிக்க பெருந்துன்பம் என்றவாறாம். துயரே என்கிற ஏகாரத்தால் நடுவில் ஒரு இன்பம் கலவாத துன்பம் என்று புலனாகிறது.

செய்திடினும் – கொடுத்தாலும் என்று பொருள். ஆன்மாக்களுடைய முன் வினைப் பயனால் துன்பங்கள் வந்தனவானாலும் அவற்றை நடத்துபவன் இறைவனாகையாலே “போயபிழை” எனப்பட்ட பழவினைகளும் ‘புகுதருவான்’ எனப்பட்ட வரும் வினைகளும் தற்பொழுது உடலுடன் கொண்டு வந்த வினைகளும்  ஆகிய மூன்று வினைகளையும் கழிக்கின்றவன் இறைவனாதலால் அவனுக்கு மேற்சொன்ன மிக்க பெருந்துன்பங்களைக் கழிக்க முடியாதவையல்ல. அவர் எண்ணினால் அகற்ற முடியும். ஆயினும் தன் பக்தர்களின் தன்மைக்காக அப்பெரும் துன்பங்களைப் பக்தர்கள் துய்க்கும்படி செய்கிறான். அதனால் பக்தர்கள் துன்பம் துய்க்கும்படி ஆகிறது. ஏனெனில் பக்தர்கள் உலகப் பற்றிலிருந்து விடுபடவேண்டுமல்லவா? இக்கருத்து ‘கிட்டாதாயின் வெட்டென மற’ என்ற பழமொழியால் கூறப்பட்டது.

‘இயல்பாகவும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடமை
மயலாகம் மற்றும் பெயர்த்து’

என்ற குறளுக்கு எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை மட்டும் விடாது போனால் அதைத் தொடர்ந்து விட்டனவெல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையூறாய் மனக்கலக்கம்  செய்யும் என்ற பரிமேலழகர் உரையைக் காண்க.

வேரிச்சரோருகை கோன் – வேரி – நறுமணம், சரோருகம் – தாமரை

வேரிச்சரோருகம் – நறுமணமே வடிவாகவுடைய தாமரை

வேரிச்சரோருகை – அத்தகைய தாமரையை இருப்பிடமாக உடையவள் இலக்குமி.

சரோருகை கோன் :- அவளுக்குக் கணவனான திருமால் ‘கோன்’ என்ற சொல்லுக்கு ‘வேரிச்சரோருகை’ என்பது கருத்து அடையாக வந்தது. அதாவது பக்தர்களுக்குத் துன்பத்தை விளைப்பதற்காகப் பகவானோடு பிராட்டியும் துணை நிற்கிறாள் என்று தெரிகிறது. காரணம் பக்தனுக்குப் பகவான் துன்பம் தருவது, அவனுடைய நன்மைக்காகவே என்று சொல்லுகையாலே அந்நன்மைக்கு அவளும் துணை நிற்பது தவறல்லவே என்பதாம்.

மெய்ந்நலமாம் – உண்மையான அன்பின் அதாவது உண்மையான சினேகம் என்பதாம்.

தேரில் – ஆராயில், தேறுதல் – ஆராய்தல் வேரிச் சரோருகைகோன், அன்பர்கள் பால் ஆரப்பெருந்துயரே செய்திடினும் தேரில் மெய்ந்நலமாம் என்று கொண்டு கூட்டுக. இதற்கு எடுத்துக் காட்டாக கட்டுரைக்கப்படுகிறது மேல்தொடரில்.

பொறுத்தார்க்கு அரிதெனினும் மைந்தன் உடல் புண்ணை அறுத்தற்கு இசைதாதையற்று தன் புதல்வனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவன் உடலில் எழும்பிய கட்டியை அறுவை மருத்துவத்திற்கு நல்லெண்ணத்துடன் ஏற்கும் தகப்பனைப் போல என்று பொருள். அதாவது மகனுக்குத் தாங்க முடியாது என்று தெரிந்திருந்தும் அவனுடைய நன்மைக்காக அவனுடைய உடம்பில் எழும்பிய கட்டியை அறுத்து எறிவதற்கு நல் எண்ணத்தாலே ஏற்றுக் கொள்ளும் பிதாவைப் போல, பகவானும் தன் பக்தர்கள் வினைப்பயனைத் தீர்ப்பதற்கு மிக்க பெரும் துன்பங்களைக் கொடுத்து அவ்வினையிலிருந்து அவர்களை மீட்பதற்காகவாம். இது பக்தனிடம் தான் கொண்ட உண்மையான நேசத்தாலே யாகும். இந் நற்செயலுக்கு இரக்கமே வடிவான பெரிய பிராட்டியாரும் துணை நிற்க இறைவன் செய்யும் செயலாகும் என்று பொருள்.

ஞான ஸாரம் 20- விருப்புறினும் தொண்டர்க்கு

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                   20-ஆம் பாட்டு:

முன்னுரை:

தன்னிடம் பக்தியுடைய தொண்டர்கள் தங்களுக்குத் தீமை என்று அறியாமல், ஆசையால் அற்பப் பொருள்களில் சிலவற்றை விரும்பி, இதைத்தரவேணும் என்று வேண்டினாலும் நன்மையே செய்பவனான இறைவன் அதைக் கொடாமல் மறுத்து விடுவான்’ என்னும் கருத்தை உதாரணத்துடன் கூறுகிறார் இப்பாடலில்.

paramapadhanathan-2

“விருப்புறினும் தொண்டர்க்கு வேண்டுமிதமல்லால்
திருப்பொலிந்த மார்பனருள் செய்யான் – நெருப்பை
விடாதே குழவி விழ வருந்தினாலும்
தடாதே யொழியுமோ தாய்”

பதவுரை:

விருப்புறினும் அற்பப் பொருள்களை விரும்பினாலும்
தொண்டர்க்கு தன்பக்கல் பக்தி உடையவர்களுக்கு
வேண்டும் இதம் அல்லால் அவர்கள் க்ஷேமத்திற்குத் தேவையான தன்மையொழிய
திருப்பொலிந்த மார்பன் திரு ஆன பெரிய பிராட்டியார் எழுந்தருளியிருக்கையாலே பிரகாசமான அழகிய மார்பை உடையவன்
அருள் செய்யான் அவர்கள் விரும்பிய அற்பப் பொருள்களைக் கொடுக்கமாட்டான் (உதாரணம் மேல்வருமாறு)
குழவி பின் விளைவு அறியாத சிறு குழந்தை
நெருப்பை தீச்சுடரை
விடாதே அதன் ஒளியைக் கண்டுபிடித்தால் விடமாட்டாமல்
தாய் குழந்தையின் அம்முயற்சி அதற்குத் தீமைதரும் என்றறிந்த பெற்ற தாயானவள்
தடாதே ஒழியுமோ அந்நெருப்பில் விழாதபடி தடுக்காமல் இருப்பாளா? (தடுத்தேவிடுவாள்)

விளக்கவுரை:

விருப்புறினும் – அற்பப் பொருள்களில் ஆசை பண்ணினாலும் அதாவது, இதைக் கொடுக்கவில்லையானால் இவர்கள் மிகவும் கஷ்டப்படுவோம் என்று மிகவும் நைந்து வேண்டினாலும் என்று பொருள். தங்கள் விஷயத்தில் இறைவன் மனம் உருகி கேட்டதைத் தரும்படி அவ்வளவுக்கு குழைந்து வேண்டிக் கொண்டாலும் என்றவாறாம்.

தொண்டர்க்கு – தன்னுடைய பக்தர்களுக்கு இங்கு ‘தொண்டு’ என்னும் சொல் அடிமைக்கும் அவாவுக்கும் பொதுவாய் இருந்து ‘அவா’ என்னும் பொருளில் வழங்கி ‘அவாவுடையார் – பக்தர்கள்’ என்று பொருள் கொள்ளப்பட்டது. அவா – பக்தி அதுவுடையார் பக்தர். ஆகவே, தொண்டர் பக்தர் என்றறிக.

வேண்டும் இதம் அல்லால் – அதாவது அவர்களுக்குத் தேவையான நன்மையொழிய “ஹிதம்” என்ற வடசொல் “இதம்” என்று வந்தது. இதற்கு “நன்மை” என்று பொருள். அவர்களுடைய க்ஷேமத்திற்குத் தேவையான நன்மை அது அல்லாமல் அதாவது, நன்மை தவிர என்று பொருள்.

திருப்பொலிந்த மார்பன் – பெரிய பிராட்டியார் எழுந்தருளி இருக்கையாலே  ஒளிமயமான திருமார்பை உடையவன். திருப்பொலிந்த மார்பன் என்றவாறு. திருவால் வந்த பொலிவை உடைத்தான மார்பு என்று பொருள். திருமார்பு முழுவதும் (திருவின்) பிராட்டி நிறைந்திருக்கும் மார்பு. “கருமாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திருமார்பு, கால், கண், கை, செவ்வாய் உந்தியானே” என்றும் ‘உருமாணிக்க மலை மேல் மணித்தடந்தாமரைக் காடுகள் போல், திருமார்பு வாய் கண் கையுந்தி காலுடையாடைகள் செய்யபிரான் என்றும் வரும் பாடல்களில் உறுப்புக்களின் அழகைச் சொல்வதால் ஏனைய உறுப்புக்கள் போல் திருமார்பும் சிவந்திருக்கும்  என்று திருமார்பை முதற்கண் சொல்லியிருக்கிறது. ‘அலர்மேல் மங்கை உறையும்’ மார்பாதலால் அவளது ஒளி அவன் மார்பு எங்கும் நிறைந்து ஒளிமயமாகத் திகழ்கிறது என்று பொருள்.

“மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாள், திருமார்வினில் சேர் திருமாலே
வெய்யார் சுடராழி சுரி சங்க மேந்தும்
கையா! உன்னைக் காணக் கருதும் என் கண்ணே”

(திருவாய்மொழி – 9-4-1)

என்ற இப்பாடலிலும் “திருவால் பொலியும் மார்பு” என்று பொருள் கூறப்பட்டது. ஆக “திருவால் பொலிந்த மார்பன்” என்று அவன் மார்பழகு உரைக்கப்பட்டது. இதனால் பிராட்டியோடு கூடியிருக்கும் சேர்த்தி கூறப்பட்டது. இதனால் அருள் செய்யும் சுழ்நிலையிலும் என்று குறிப்பு.

அருள் செய்யான் – அதாவது அவர்கள் ஆசைப்பட்டு வேண்டினாலும் நன்மையே செய்பவனாதலால் மறுத்து விடுவானன்றி கேட்டதைக் கொடுக்க மாட்டார் என்று பொருள்.

அருளுதல் – கொடுத்தல், தன் தொண்டர்கள் ‘இன்னது வேணும்’ என்று அவனிடம் வேண்டிநின்றாலும் அவன் அது கொடாமல் மறுத்தற்குத் தக்க உதாரணம் காட்டி விளக்கப் படுகிறது.

நெருப்பை விடாதே குழவி விழவருந்தினாலும் தடாதே யொழியுமோ தாய் – மேல் விளைவறியாத சிறு குழந்தை நெருப்பு சுடும் என்றறியாமல் அதனுடைய ஒளியை மட்டும் கண்டு அதை விடாமல் அதிலே விழுகைக்கு முயல்கின்ற பொழுது அதைப் பார்க்கும் தாய் தன் குழந்தைக்கு அச்செயல் அழிவை  விளைவிக்கும் என்று கருதி அதில் விழாதபடி தடுக்காமல் இருப்பாளோ? தடுத்தே விடுவாள் அல்லவா! அதுபோல, பக்தர்கள் தங்களுக்குத் தீமைதரும் என்பதை அறியாமல் இறைவனிடம் சிலவற்றை வேண்டினாலும் அவர்களுக்கு அவை தீமையை விளைவிக்கும் என்பதை அறிவானாதலால் அவற்றைக் கொடுக்கமாட்டான். மறுத்தே விடுவான் என்பது இதன் பொருள்.

ஞான ஸாரம் 19- நல்ல புதல்வர்

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                   19-ஆம் பாட்டு:

முன்னுரை:-

புதல்வர், மனைவி, உறவினர், வீடு, நிலம் இவை முதலியன எல்லாம் நெருப்புக்கு ஒப்பாய்ச் சுடுதல் நிலை அடைந்தவர்களுக்குப் பரமபதமான வீடுபேறு எளிதாகும் என்று கூறப்படுகிறது.

lord-vishnu-in-anantashayan-AE23_l

“நல்ல புதல்வர் மனையாள் நவையில் கிளை
இல்லம் நிலம் மாடு இவையனைத்தும் – அல்லலெனத்
தோற்றி எரி தீயிற் சுடுமேல் அவர்க்கெளிதாம்
ஏற்றரும் வைகுந்தத் திருப்பு”

பதவுரை:-

நல்ல புதல்வர் நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள்
மனையாள் நற்குண நற் செய்கையுடைய வாழ்க்கைத் துணைவி
நவையில் கிளை குற்றமில்லாத உறவினர்கள்
இல்லம் குடியிருப்புக்கு ஏற்ற வீடு
நிலம் பொன் விளையும் பூமி
மாடு வள்ளல் பெரும்பசுக்கள் (குடம் குடமாகப் பால் கறக்கும் பசுக்கள்)
இவையனைத்தும் இவையெல்லாம்
அல்லலென துன்பம் தருவன என்று
தோன்றி மனதுக்குத் தோன்றி
எரிதீயில் கொழுந்து விட்டு எரிகின்ற தீபோல
சுடுமேல் எரியுமாகில் (எரிக்குமாகில்)
அவர்க்கு அத்தகைய நிலை பிறந்தவர்களுக்கு
ஏற்றரும் தன் முயற்சியால் பெறுதற்கரிய
வைகுந்தத்து அழிவில்லாத வீட்டு உலகத்தில் போய்
இருப்பு அடியார் குழாங்களுடன் கூடியிருக்கும் இருப்பு
எளிதாம் மிக எளிதாகும்

விளக்கவுரை:-

நல்ல புதல்வர் – பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை உடைய மக்கள் அதாவது குணக்கேடராய் துன்பம் தருபவராய் இல்லாமல் தங்கள் பிரிவு பொறுக்க மாட்டாத நற்குணங்கள் நிரம்பிய பிள்ளைகள் என்று பொருள்.

மனையாள் – நல்ல என்று மேற்கூறிய அடைமொழியை இங்கு கூட்டிக் கொள்க “நல்ல மனையாள்” என்றவாறு நற்குணமுடையவளாய்

“மனைத்தக்க மாண்புடையளாகித் தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (திருக்குறள்) என்றபடியும், அறவோர்க்களித்தலும், அந்தணர் ஓம்பலும், துறந்தோர்க்கெதிர்தலும், தொல்லோர் மரபில் விருந்தெதிர் கோடலும் (சிலம்பு) என்ற வாய்மொழிக்கிணங்க துறந்தார்ப் பேணலும், விருந்தயர்தலும் வறியார் மாட்டு அருளுடைமையும் முதலிய  நற்குணங்களும், வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், சமையல் தொழிலில் வண்மையும், தான, தர்மங்கள் செய்தலும் முதலிய நற்குண செய்கைகள் பொருந்திய மற்றும் கணவன் கருத்தறிந்து ஒழுகும் மனையாள்.

நவையில் கிளை – நவை – குற்றம், இல் – இல்லாத, கிளை – உறவு

அதாவது, பெயரளவில் உறவினராயும் செயல்பாட்டில் பகைவராயும் இல்லாமல் அவர்களோடு உடனுறைதல் தகும் என்று ஆசைப்படத்தக்க குற்றமற்ற உறவினர்கள் (இல்லம்). (கீழ்ச்சொன்ன “நல்ல” என்ற அடைமொழியை இது முதலாக மேல் வருவனவற்றோடும் கூட்டுக.)

நல்ல இல்லமாவது – கண்ட கண்ட இடமெங்கும் இடிபாடு உடையதாய் குடியிருப்புக்குத் தகுதியற்றதாய் இல்லாமல் பல நிலைகள் கொண்ட இடங்களும் உப்பரிகைகளும் கூடிய மிக அழகான குடியிருப்பு.

நல்ல நிலமாவது – உவர் நிறைந்ததாய் ஒரு விதையும் முளைக்காத நிலமாய் இல்லாமல் உரமிடுதலின்றி பயிர் தானே வளர்ந்து ஒன்றுக்கு நூறாக கட்டுகலம் மிக விளையக்கூடிய நல்ல நிலங்கள் ‘விளைவதன் பாத்தியுள் நீர் சொரிந்தற்று’ (குறள்) என்று கூறியது போன்ற நிலங்கள். விடிந்தபோது நாற்று நட்டு மாலைப்போது வந்து பார்த்தால் கைகவித்துப் பார்க்கும்படி பயிர்களை விளைவிக்கும் நல்ல நிலங்கள். ஒரு நாற்று நிலம் முழுதும் பனைத்தெழும் விளைநிலங்கள் ‘செய் கொள் செந்நெல் கரும்பொடோங்கு’ ‘புரவி முகம் செய்து செந்நெல்’ என்று கட்டுரைக்கும்படி வளங்கொழிக்கும் நன்செய், புன்செய் நிலங்கள்.

நல்ல மாடாவது – கொடுவையாய் (கொடூரமாய்) அதாவது கட்டவும் பிடிக்கவும் முடியாமல் கொண்டியிலே மேய்ந்து திரிவதல்லாமல் சிறு குழந்தைகளுக்கும் கூடி அடிக்கவும், கட்டவும், பிடிக்கும் வண்ணம் தன்னைக் காட்டிக் கொண்டு நிற்கும் பசுக்கள், குடம் குடமாய்ப் பால் சுரக்கும் பசுக்கள்.

இவையனைத்தும் – இவ்வாறு ஒரொன்றே மிகவும் வசீகரிக்கத் தகுந்ததாய் உலகோர்க்கு இன்பம் தருவன எல்லாம் கீழே சொன்னவையெல்லாம்.

அல்லலெனத் தோன்றி – துன்பம் தருபவையே என்று மனதுக்குத் தோன்றி, இங்கு ‘அல்லல்’ என்ற சொல்லுக்குத் துன்பம் என்ற பொருளாகிலும் துன்பம் தருபவை என்று பொருள் கொள்ளவேணும்.

எரிதீயிர் சுடுமேல் – கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்புப் போலே எரிச்சலை உண்டு பண்ணுமாகில்

அவர்க்கெளிதாம் ஏற்றரும் வைகுந்தத் திருப்பு – அந்நிலை பிறந்தவர்க்கு அதாவது பக்குவப் பட்டவர்களுக்கு (சமைந்தவர்களுக்கு) தன் முயற்சியால் அடைய முடியாததான அதாவது {இறைவன் அருளிலே பெறக் கூடியதான} அந்தமில் பேரின்பத்து அழிவில் வீடான பரமபதத்திலே போய் அங்கு அடியார்கள் குழாங்களுடன் கூடியிருக்கும் பேறு எளியதாகும். அதாவது கீழ்ச் சொன்ன பக்குவம் பிறந்தவர்களுக்கு இறைவன் தானே வீடு பேறு அளிப்பான் என்பது கருத்து.

ஞான ஸாரம் 18- ஈனமிலா அன்பர்

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                 18-ஆம் பாட்டு:

முன்னுரை:

பகவான், தன்னிடம் பக்தியுடையவராய் இருந்தாலும் (ஆத்ம ஞானம் இல்லாத) தெய்வ சிந்தனை இல்லாமல் முகம் திரும்பிச் செல்லும் உலக மக்களோடு தொடர்பற்றவர்களுக்கே எளியவனாய் இருப்பதால் அத்தகைய உலகியல் மக்களோடு தொடர்புடையவர்களுக்கு மிகவும் அரியனாய் இருப்பான் என்னும் கருத்தை அனைவரும் அறிய இதில் அருளிச் செய்யப்படுகிறது.

Dhruva-Vishnu-and-Garuda-thumb

“ஈனமிலா அன்பர் என்றாலும் எய்திலா
மானிடரை எல்லா வண்ணத்தாலும் – தானறிய
விட்டார்க் கெளியன் விடாதார்க் கறவரியன்
மட்டார் துழாயலங்கல் மால்”

பதவுரை:

மட்டு ஆர் தேன் பெருகுகிற
துழாய் அலங்கல் திருத்துழாய் மாலையுடைய
மால் திருமால்
ஈனமில்லாத அன்பர் தன் திருவடிகளில் பழுதற்ற
என்றாலும் பக்தியுடையவர்கள் ஆனாலும்
எய்திலா பகவானுக்கு எதிரிகளான
மானிடரை கீழ் மக்களை
எல்லா வண்ணத்தாலும் பேச்சு முதலிய அனைத்து உறவுகளாலும்
தானறிய வாலறிவனான இறைவனறிய
விட்டார்க்கு துறந்தார்க்கு
எளியன் அவ்வாறு அவர்களை விடாதவர்களுக்கு
அறவரியன் மிகவும் அரியனாய் இருப்பான்

விளக்கவுரை:

ஈனமிலா அன்பர் என்றாலும் – ஈனமாவது பொல்லாத் தன்மை இதை ‘பொல்லா அரக்கனை என்று இராவணன் செயல்களுக்கு அடைமொழி கொடுத்து சொன்னது காண்க. “முன்பொலா இராவணன்” என்று திருமங்கையாழ்வார் பாசுரமும் கூறுகிறது. “தீய புந்திக் கஞ்சன்” என்று கம்சனுடைய பொல்லாங்கும் பெரியாழ்வாரால் சொல்லப்பட்டது. ஆக, இராவணன், கம்சன் போன்றவர்கள் செய்யும் செயல்கள் பொல்லாங்கு என்ற சொல்லால் உணர்த்தப்பட்டது. இத்தகைய பொல்லாங்கு இல்லாதவர்கள் என்பதாம். தன் திருவடிகளில் பழுதற்ற பக்தியுடையவர்கள் என்று தேறி நின்றது. கீதையில் “மனதில் வேறு எதையும் கருதாமல் என்னையே கருதும் பக்தனுக்கு நான் அடையத் தகுந்தவன்” என்று கூறியவாறு. அத்தகைய பக்தியுடையவர்களை ‘ஈனமிலா அன்பர்’ என்று கூறியவாறு.

எய்திலா மானிடரை – பகவானிடம் சிறிதளவு கூட நெருங்காத மனிதர்களை மனிதப் பிறப்பு இறைவழிபாட்டிற்கென்றே படைக்கப்பட்டதொன்று. அவ்வழிபாட்டைச் செய்யாதவர்கள் “விலங்கொடு மக்களனையர்” என்ற பொய்யாமொழிக்கு இணங்க விலங்காவார். இக்கருத்தை “ஆன் விடையேழன்றடர்த்தார்க்கு ஆளானார் அல்லாதார் மானிடவரல்லர் என்று என் மனத்து வைத்தேனே” என்று திருமங்கையாழ்வாரும், செங்கண்மால் நாமம் மறந்தாரை மானிடமாவையேன்” என்று பூதத்தாழ்வாரும் இறைவனை மறந்தவர்கள் மனிதரல்லர் என்று கூறியதைக் காணலாம். “பேரறிவாளர்களான ஆழ்வார்கள் இகழும் வண்ணம் பகவானை மதியாது திரிகின்ற பெரும் பாவிகளான அற்ப மனிதர்களை” என்று இத்தொடருக்குப் பொருள்.

இதனை நம்மாழ்வார் ‘யாதானும் பற்றி நீங்கும் விரதமுடையார்’ என்று அறிவிலிகளான மானிடரைக் கூறுவார். இங்கு “எய்திலா” என்றில்லாமல் “எய்திலராம்” என்று பாடம் கொண்டால் பகவானுக்கு எதிரிகளான மானிடரை என்று பொருள் கிடைக்கிறது. இதைத் திருவள்ளுவர் “ஏதிலார் குற்றம் போல” என்ற குறளில் ‘பகைவர்’ என்ற பொருளில் ஏதிலார் என்ற சொல்லைக் கூறியது காணலாம்.

எல்லாவண்ணத்தாலும் – அதாவது உடனுறைதல், பொருள்கள் கொடுத்துக் கொள்ளுதல், (பேச்சு) அளவளாவுதல் மற்றும் உலகியல் பழக்கங்கள் எல்லாவற்றாலும் என்று பொருள்.

தானறிய விட்டார்க்கு – தாங்களும் பிறரும் அறிந்த அவ்வளவோடு நில்லாமல் இதயத்திற்குள்ளிருக்கும் இறைவன் அறியும்படி விடவேண்டும். அவ்வாறு விட்டவர்களுக்கு இறைவன் எளியவனாயிருப்பான் ‘உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறியும் அவனல்லவா’ இத்தகைய அவன் அறியும்படிக்கு மூடர்களின் தொடர்பை அறவே விடவேண்டும் என்பது கருத்து.

தானறிந்த வைணவத்துவமும், வைணவத்துவமல்ல. நாடறிந்த வைணவத்துவமும் வைணவத்துவமல்ல. நாராயணனறிந்த வைணவத்துவமே வைணவத்துவம் என்று ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் என்ற எடுத்துக்காட்டு உரையில் கூறப்பட்டுள்ளது.

விடாதார்க்கு அறவரியன் – அவ்வாறு விடாதவர்களுக்கு அருகில் நெருங்கவும் முடியாதவாறு மிகவும் எட்டாக்கையனாய் இருப்பான். இதை நம்மாழ்வார் ‘அடியார்க்கு எளியவன். பிறர்களுக்கு அரிய வித்தகன்’ என்று கூறினார். இதனால் பக்தர்கள் உலகியல் மக்களோடு உறவாடலாகாது என்பது கருத்து.

மட்டார் துழாயலங்கல் மால் – பகவானின் திருத்தோள்களிலும் திருமுடியிலும் திருத்துழாய் மாலை அணிந்துள்ள திருமால் என்பது. பகவானுடைய திருமேனியில் உராய்தலால் மிக அழகு பெற்றுத் தேன் பெருகுகிறது திருத்துழாய். இத்தகைய தேன் பெருகும் அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமால் என்று பொருள். திருத்துழாய் மாலை திருமாலின் மேன்மையைக் குறிப்பதற்கு அடையாளமாகும். “மட்டார் துழாயலங்கல் மால், ஈனமிலா அன்பர் என்றாலும் எய்திலா மானிடரை எல்லா வண்ணத்தாலும் தானரிய விட்டார்க்கு எளியன் விடாதார்க்கு அறவரியன்” என்று கொண்டு கூட்டுக.

ஞான ஸாரம் 17- ஒன்றிடுக விண்ணவர்

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                17-ஆம் பாட்டு:

முன்னுரை:

ஆத்ம ஞானம் பிறந்தவன் அதாவது, ‘ஆத்மா பகவானுக்கு அடிமையாய் இருப்பதுவே, ஆத்மாவின் உண்மை நிலையாகும்’ என்பதை உணர்ந்தவன். தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் இயல்பைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறுகின்ற முகத்தால் அருளிச் செய்யப்பட்டது கீழ். இதில் பெருஞ்செல்வம் சேர்வதும் அது அழிவதும் வாழ்நாள் நீள்வதும், அது குறைவதும், ஆன்மாவின் உண்மையை உணராதவர்களுக்குச் செருக்கையும் துன்பத்தையும் உண்டு பண்ணுவனவாகும். அவ்வாறின்றி ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்தவர்களுக்குச் செல்வம் வருவதும் போவதும் பற்றியோ வாழ்நாள் நீள்வது குறைவது பற்றியோ, செருக்கு, துன்பங்கள் உண்டாகமாட்டா என்னும் உயரிய கருத்தை இப்பாடல் உணர்த்துகிறது.

indra-worships-krishna

“ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வ மொழிந்திடுக
என்றும் இறவாதிருந்திடுக – இன்றே
இறக்கக் களிப்பும் கவர்வுமிவற்றால்
பிறக்குமோ தற் றெளிந்த பின்”

பதவுரை:

விண்ணவர் கோன் தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய
செல்வம் மிக்க பெருஞ்செல்வம்
ஒன்றிடுக ஒருவர் வேண்டாது இருக்கும்போது தானே வந்து சேர்ந்திடுக
ஒழிந்திடுக அல்லது அதுவே தன்னைவிட்டு நீங்கிடுக
என்றும் இறவாது இருந்திடுக எக்காலத்திலும் மரணம் இல்லாமல் வாழ்ந்திடுக (அல்லது)
இன்றே இறக்க இப்பொழுதே மரணம் ஆயிடுக
தன் தெளிந்த பின் ஆத்மாவான தன்னுடைய உண்மை நிலையை நன்றாக அறிந்த பின்பு
இவற்றால் இந்த அறிவினால்
களிப்பும் கவர்வும் இன்பமும் துன்பமும்
பிறக்குமோ உண்டாகுமோ (ஆகாது)

ஆன்மாவின் உண்மை நிலை அறிந்தவர்களுக்கு செல்வம் வருவதிலும் அது தன்னைவிட்டுப் போவதிலும் செருக்குத் துன்பங்கள் உண்டாக மாட்டா என்பது கருத்து.

விளக்கவுரை:

ஒன்றிடுக விண்ணவர் கோன் செல்வம் – தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுடைய மிக்க பெரிய செல்வம். அதாவது பூ உலகம், புவர் உலகம், சுவர் உலகம் என்று சொல்லப்படுகிற மூன்று உலகங்களையும் ஆள்கின்ற செல்வமானது விரும்பாது இருக்கும்போதே தானே வந்து சேரட்டும்.

ஒழிந்திடுக – அத்தகைய பெருஞ்செல்வம் இனி ஒரு நாளும் கை கூடாது என்னும் அளவுக்குத் தன்னோடு தொடர்பில்லாமல் மாய்ந்து போகட்டும்.

என்றும் இறவாது இரந்திடுக – எக்காலத்திலும் மரணம் இல்லாதவனாய் வாழட்டும்.

இன்றே இறக்க அவ்வாறு நீண்ட ஆயுள் இல்லாமல் இப்பொழுதே மரணம் வரக்கடவதாக.

களிப்பும் கவர்வும் இவற்றால் பிறக்குமோ தற்றெளிந்த பின் – செல்வத்தால் களிப்பும், அது அழிவதால் துன்பமும் வாழ்வதால் மகிழ்வும், சாவதால் துன்பமும் உலகத்தாருக்கு இவை இயல்பாக உண்டாகும். ஆனால் தன்னைத் தெளிவாக அறிந்தவர்க்கு இத்தகைய செருக்கும் துன்பமும் ஒரு போதும் உண்டாக மாட்டா என்பது இப்பாடலின் கருத்து.

தற்றெளிந்தபின் – தன்னைத் தெளிவாக அறிகை. அதாவது ஆன்மா இறைவனுக்கு அடிமை என்னும் உண்மை நிலையை அறிகை.

ஞான ஸாரம் 16- தேவர் மனிசர்

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                16-ஆம் பாட்டு:

முன்னுரை:

ஆன்மாவின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள் எப்பொழுதும் தங்களின் நிலைத்து இருக்கும் நிலையைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறும் முகத்தால் விளக்குகிறார் ஆசிரியர்.

I_Intro2

“தேவர் மனிசர் திரியக்குத் தாவரமாம்
யாவையும் அல்லன் இலகு முயிர் – பூவின்மிசை
ஆரணங்கின் கேள்வன் அமலன் அறிவே வடிவாம்
நாரணன் தாட்கே அடிமை நான்”

பதவுரை:

நான் உயிராகிற நான்
தேவர் இந்திரன் முதலிய தேவர்கள்
மனிசர் அந்தணர், அரசர் முதலியோர்
திரியக்கு பசு, பறவை முதலிய விலங்குகள்
தாவரமாம் மரம், செடி, கொடிகளாகிற தாவரங்கள்
யாவையுமல்லேன் எவையுமாய் சொல்லப்படமாட்டேன் (இவையெல்லாம் நிலை நில்லாதனவாய் சிறிது பொழுது ஆத்மாவைப் பற்றி நின்று கழிவன. ஆதலால் அவற்றைக் கொண்டு ஆத்மாவைக் குறிப்பிடுவது முறையில்லை என்பது)
நான் நான் (அடியேன்)
பூவின்மிசை தாமரை மலரில் வீற்றிருக்கும்
ஆரணங்கின் தெய்வப் பெண்ணான திருமகளின்
கேள்வன் மணாளனும்
அமலன் குற்றங்கள் இல்லாதவனும்
அறிவே வடிவாம் அறிவு மயமாய் இன்பமயமாய் விளங்குபவனுமான
நாரணன் நாராயணனுடைய
தாட்கே திருவடிகளுக்கே
இலகும் அறிவும் இன்பமுமாய் விளங்கும்
உயிர் உயிர்கள்
அடிமை அடிமையாகும்

“உயிர்கள் எல்லாம் நாராயணனுடைய அடிமைகள் ஆகும்.” அடிமையே உயிர்களின் இயற்கையாம்.

விளக்கவுரை:

தேவர் மனிசர், திரியக்குத் தாவரமாம் – தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், செடி, கொடி, தாவரங்களாகிற (யாவையும் அல்லன்) எந்தப் பெயரும் உடையவன் அல்லன். ஆன்மாவாகிற நான்.

ஓர் ஆன்மா தான் செய்த பற்பல நல்வினை, தீவினை வேறுபாட்டால் தேவ சரீரம், மனித சரீரம், விலங்கு சரீரம், தாவர சரீரம், முதலிய பல உடல்களிலும் பிறக்கிறது. இவற்றைத் திருக்குறள் உரை முதலியவற்றில் காணலாம். அவை வருமாறு:-

“ஊர்வ பதினொன்றாம், ஒன்பது மானிடம், நீர், பறவை நால்கால், ஒர் பப்பத்து, சீரிய பந்தமாந் தேவர் பதினாலு, அயன் படைத்த அந்தமில் சீர்த் தாவரம் நாலைந்து, மக்கள் விலங்கு, பறவை யூர்வன, நீருந் திரிவன பருப்பதம எனவினை யெழு பிறப்பாகு மென்ப” வினைப்பயனால் ஆன்மாக்கள் எடுக்கும் பிறப்புக்களைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டவற்றை இங்கு ஒப்பு நோக்குக. இவ்வாறு ஆன்மா பற்பல உடல்களை எடுத்தால் அந்தந்த உடலில் இருக்கும் போது நான் தேவன், நான் மனிதன், நான் விலங்கு, நான் தாவரம் என்று அது அதற்கு ஏற்ப நான் என்ற அகந்தையை எண்ணுகிறது. இந்நிலை ஆன்மாவின் உண்மை நிலையை அதாவது, ‘இறைவனுக்கு மனிசர், விலங்கு, தாவரம் முதலிய யாவையும் அல்லன் நான் என்று தன்னை உணர்வான். மேலும் ‘நான் இறைவன் அடியேன்’ என்று தன்னை நினைப்பான்.

(இலகும் உயிர் நான்) என்று கொண்டு கூட்டுக. உயிராகிற நான் என்று அறிக. இதில் இலகும் என்ற அடைமொழியால் உயிருக்குரிய இலக்கணங்களை சாஸ்திரங்களில் கூறியபடி உணரவேண்டும். அதாவது ‘ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய் உடையவனும், ஒளிமயமானவனுமான உயிராகிற நான்’ என்று பொருள். மேலும், அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டதாய் ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய்க் கொண்டதாய் ஞானவடிவமாய் இருப்பதாய் உள்ளது ஆன்மா என்பதையும் இங்கு காண்க. மேலும் தத்வத்ரயம் என்னும் நூலில், சித் ப்ரகரணத்தில் ஆன்மாவினுடைய இலக்கணத்தை அருளிச் செய்கையில் “ஆத்ம ஸ்வரூபம் சென்று சென்று பரம்பரமாய் என்கிறபடியே தேஹேந்திரிய மந: ப்ராண புத்தி விலக்ஷணமாய், அஜடமாய், ஆநந்த ரூபமாய், நித்யமாய், அணுவாய், அவ்யக்தமாய், அசிந்த்யமாய், நிரவயவமாய், நிர்விகாரமாய், ஜ்ஞானாச்ரயமாய், ஈச்வரனுக்கு நியாம்யமாய், தார்யமாய், சேஷமாயிருக்கும்” என்று கூறியதையும் இங்குக் காண வேண்டும்

பூவின் மிசை ஆரணங்கின் கேள்வன் – “மலர்மேல் உறைவாள்” (திருவாய்மொழி – 4-5-2) என்று நம்மாழ்வார் அருளிச்செய்தபடி தாமரைப் பூவின்மேல் வசிப்பவளாய், அழகான வடிவை உடையவளான பெரிய பிராட்டியாருக்கு மணாளனாய் இருப்பவன் என்று இதற்குப் பொருள். அணங்கு – தெய்வப்பெந். அழகு முதலிய தெய்வ குணங்கள் எல்லாம் நிறைந்த பெரிய பிராட்டியார். கேள்வன் – அவளுக்கு மணாளன்.

அமலன் – தீய குணங்களுக்கு எதிரியாய் இருப்பவன்.

அறிவே வடிவாம் – ஞானத்தையும் ஆனந்தத்தையும் தனக்கு வடிவமாய்க் கொண்டிருப்பவனான நாராயணனுடைய

தாட்கே அடிமை – திருவடிகளுக்கே ஆத்மா அடிமையானவன்

நாராயணன் என்றது தன்னை ஒழிந்த அனைத்துப் பொருள்களும் தனக்குச் சரீரமாய்த் தான் சரீரியாய் (சரீரி – உயிர்) அதாவது எல்லாவற்றுக்கும் தான் உயிராய் இருப்பவன் என்று பொருள்.

கருத்து:- அறிவு மயமாய் சுகமயமாய் விளங்குகிற ஆன்மாவாகிற நான், தேவனல்லன், மனிதனல்லன், விலங்கல்லன், செடி, கொடி தாவரம் அல்லன், கூறிய யாவையும் அல்லன். தாமரை மலரில் தோன்றிய அழகிய தெய்வமான இலக்குமி தேவிக்கு மணாளனும், குற்றங்களுக்கு எதிரியாய் இருப்பவனும் ஞானத்தையே உருவமாகக் கொண்டவனும், அனைத்துப் பொருள்களுக்கும் உயிரானவனுமான நாராயணன் திருவடிகளுக்கே அடிமைப்பட்டவனாவேன் என்பது பாடல் கருத்தாகும்.

ஞான ஸாரம் 15- குடியும் குலமும்

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                             15-ஆம் பாட்டு:

முன்னுரை:

எவ்வுயிர்க்கும் இந்திரைகோன் தன்னடியே காணும் சரண்:- என்று கீழ்க்கூறிய கருத்தை எடுத்துக்காட்டுடன் இப்பாடல் நிலை நிறுத்துகிறது. “திருமகள் மணாளனுக்கு அடியார்” என்னும் பெயரையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டவர்களுக்கு, ஞானம் பிறப்பதற்கு முன்பு அடையாளமாகக் குறிப்பிட்ட ஊர் பெயர், குலப்பெயர், மற்றும் சிறப்புடைய அடையாளங்கள் எல்லாம் ஞானம் பிறந்த பிறகு அவன் திருவடிகளேயாகும் என்று கூறப்படுகிறது.

god,hindu,mahavishnu-8af75d30e076a9163fee484b74963508_h

“குடியும் குலமும் எல்லாம் கோகனகை கேள்வன்
அடியார்க்கு அவனடியே யாகும் – படியின் மேல்
நீர் கெழுவும் ஆறுகளின் பேரும் நிறமும் எல்லாம்
ஆர் கலியைச் சேர்ந்திட மாய்ந் தற்று”

பதவுரை:

குடியும் பிறந்த ஊரும்
குலமும் பிறந்த கோத்திரமும்
எல்லாம் மற்றும் பிறப்பு (குறி) அடையாளங்கள் எல்லாம்
கோனகை திருமங்கை மணாளன்
கேள்வனடியார்க்கு தொண்டர்களுக்கு
அவனடியே யாகும் இறைவனான அவனுடைய திருவடிகளே அனைத்தும் ஆகும்

இதற்கு எடுத்துக்காட்டு

படியின்மேல் பூமியில்
நீர்கெழுவும் நீர் நிறைந்த
ஆறுகளின் நதிகளுடைய
பேரும் கங்கை முதலிய பெயரும்
நிறமும் சிவப்பு, வெளுப்பு, கருப்பு முதலிய
எல்லாம் வேற்றுமைகள் எல்லாம்
ஆர்கலி சமுத்திரத்தை
சேர்ந்து கலந்து
மாய்ந்திடும் அற்று அழிந்து போவது போன்று

விளக்கவுரை:

(குடியும்குலமுமெல்லாம்) “சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணத்தாயன்” என்னும், புறநானூற்றுப் பாடலிலும்

“வெங்கண்மா களிறுந்தி விண்ணியேற்ற
விறல் மன்னர் திறலழிய வெம்மாவுய்த்த
செங்கணான் கோச் சோழன்”    -என்றும்

“இருக்கிலங்கு திருமொழிவாய் எண்தோள் ஈசற்கு
எழில் மாடம் எழுபது செய்து உலகமாண்ட
திருக்குலத்து வளச்சோழன்”     -என்றும் திருமங்கையாழ்வார் பாடல்களிலும் வரும் குடி, குலம், கோத்திரம் மற்றும் சிறப்பு அடையாளங்கள் சொல்லியிருப்பனவற்றைக் காணலாம்.

குடி – பிறந்த கிராமம் அல்லது ஊர்

குலம் – கோத்திரம் எல்லாம் என்றது மற்றும் அடையாளமாகச் சொல்லப்படுபவை.

கோகனகை கேள்வன் அடியார்க்கு – திருமால் அடியார்களுக்கு, கோகனகம் – தாமரை கோகனகை – தாமரையாள், கேள்வன் – நாயகன், திருவின் மணாளன் என்று பொருள். இப்படிப்பட்ட திருவின் நாயகனான இறைவன் திருவடிகளில் அடிமையே. அதாவது திருமால் அடியார் என்பதையே தங்களுக்கு அடையாளமாகக் கொண்டவர்க்கு.

அவனடியே யாகும் – அதாவது அடியவராவதற்கு முன்பு குடி, குலம், கோத்திரம், சூத்திரம் முதலிய காரணங்களைப் பற்றி வந்த அடையாளப் பெயர்கள் எல்லாம் அடியரான பிறகு அழிந்து போய், திருமால் அடியார் என்ற ஒரு பெயரே நிலைத்து நிற்கும் என்பதாம். இறைவன் திருவடி உறவையே அடையாளமாய்க் கொண்டவராய் அதைப்பற்றியே ‘திருமாலடியார்’ என்று அழைக்கப்படுவார் என்றதாயிற்று. இதற்குச் சரியான உதாரணம் மேலே சொல்லப்படுகிறது.

படியின் மேல் – பூமியின் மேல்

நீர் கெழுவும் ஆறுகளின் – நீர் நிறைதலையுடைய நதிகளின் பேரும் நிறமும் எல்லாம் அதாவது கங்கை, யமுனை முதலிய பெயர்களும், செம்மை, கருமை, வெண்மை முதலிய நிறங்கள் எல்லாம் என்றவாறு.

ஆர்கலியைச் சேர்ந்து – சமுத்திரத்தைச் சேர்ந்து கலந்தபின்

மாய்ந்திடும் அற்று – அழிந்து போவது போன்று

அதாவது அடியவராவதற்கு முன்புள்ள குடி, குலம் முதலிய அனைத்தும் அடியவரான பிறகு மறைந்து போய்விடும். இது எது போன்றது எனில், பூமியில் நீர் நிறைந்து பெருகும் ஆறுகளின் பெயர்களும் நிறங்களும் சமுத்திரத்தில் கலந்து காணாமல் போவது போன்றதாகும். ஆகவே நிலை நில்லாது மாயும் சாதி, குலம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாமென்றும் நிலையான இறைவன் அடியராம் தன்மைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றும்.

(அடியராம் தன்மை) – எல்லா ஆன்மாக்களுக்கும் பொதுவானது என்றும் உணர வேண்டும். இவ்வுணர்வினால் வேற்று மனப்பான்மைகள் ஒழியும் திருமாலடியார் என்னும் உணர்வு உண்டாகும் என்பதாம்.

ஞான ஸாரம் 14- பூதங்கள் ஐந்தும்

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                     14-ஆம் பாட்டு:

முன்னுரை:

உடம்பு இருக்கும் வரையும் சாதி முதலிய வேறுபாடுகளின் பற்றுதல் தொடர்ந்து வருமல்லவா? என்று வினா உண்டாக, “அவற்றால் என்ன பயன்” என்று விடை கூறி எல்லா ஆன்மாக்களுக்கும் திருமகள் நாயகன் திருவடிகளே புகலாய்க் காண்பீர்கள்! என்னும் உண்மை கூறப்படுகிறது இப்பாடலில்.

satya

 “பூதங்கள் ஐந்தும் பொருந்து உடம்பினாற் பிறந்த
சாதங்கள் நான்கினொடும் சங்கதமாம் – பேதங்கொண்டு
என்ன பயன் பெறுவீர் எவ்வுயிர்க்கும் இந்திரை கோன்
தன்னடியே காணும் சரண்”

பதவுரை:

பூதங்கள் ஐந்தும் பொருந்தும் நிலம், நீர், தீ, காற்று, வானம், என்னும் ஐந்து பொருட்களுடைய கூட்டுறவால் உண்டான
உடம்பினால் உடலை அடிப்படையாக வைத்துப் பிறந்த
சாதங்கள் சாதிகள்
நான்கினொடும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாலு வகைப் பிரிவோடும்
சங்கதமாம் சேர்ந்திருக்கிற
பேதங்கொண்டு உயர்வு தாழ்வாகிற வேற்றுமைகளைக் கொண்டு
என்னபயன் பெறுவீர் என்ன லாபத்தை அடைவீர்?
எவ்வுயிர்க்கும் அனைத்து உயிர்களுக்கும்
இந்திரைகோன் லக்ஷ்மீ நாயகனான
தன்னடியே எம்பெருமானுடைய திருவடிகளே
சரண் புகலாகும் என்று
காணும் அறிவீர்களாக (குறிப்பு) காணும் முன்னிலை

“பூதங்களைந்தும் பொருந்து உடலினாற் பிறந்த” :
“மஞ்சு சேர் வானெரி நீர் நிலம் காலிவை மயக்கிநின்ற
அஞ்சுசேர் ஆக்கை …..”      

-என்று திருமங்கை ஆழ்வாரும்

“சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவ்வைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு”  

-என்று திருவள்ளுவரும் சொன்னபடி,   மண் முதலிய ஐம்பெரும் பூதங்களினுடைய கூட்டுறவே உடம்புகளாக உண்டாகி இருக்கின்றன. இவ்வாறு கூறுவதால் ஆன்மாவுக்கும், உடலுக்கும் தொடர்பில்லை என்பதை நன்கு உணரலாம். மேலும் உடல், பேதை, குழவி, பால்யம், இளமை முதுமை முதலிய மாறுபட்ட தோற்றங்களைக் கொண்டதாய் நிலை இல்லாததாகவும், பழிப்புக்கு இடமாகவும் இருக்கிறது. இதனால் ஆன்மாவுக்கு இத்தகைய உடல் தாற்காலிகமாக ஏற்பட்டது என்று புலனாகிறது.

சாதங்கள் நான்கினொடும் – அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று சொல்லப்படும் சாதிகள் நான்கு. சாதங்கள் என்பதற்கு சாதிகள் என்று பொருள். இந்நான்கு சாதிகளும் மேலே சொன்ன ஐம்பூதங்களால் ஆகிய உடலினால் ஏற்பட்டவைகளே.

நான்கினொடும் சங்கதமாம் பேதம் கொண்டு – இவ்வாறான நான்கு சாதிகளோடு சேர்ந்திருக்கிற பற்பல சாதி வேறுபாடுகள் உயர்வு தாழ்வுகளுக்குக் காரணமாயிருப்பன. அந்தணர் முதலிய சாதியைப் பற்றிக்கொண்டு பிரம்மச்சரியம், இல்லறம், வானப்பிரஸ்தம், துறவறம் என்று வேறுபாடுகள் வருகின்றன. உடலைப் பற்றி வருகின்ற இவ்வாறான வேறுபாடுகள் எவ்வளவோ கூறலாம். இக்கருத்தை பரிமேலழகர் நால்வகை நிலைத்தாய் வர்ணம் தோறும் வேறுபாடுடைமையின் என்று கூறினார்.

என்ன பயன் பெறுவீர் – இவ்வேறுபாடுகள் கொண்டு என்ன பயன் அடையப் போகிறீர்கள் என்று உலகோரை நோக்கிக் கேட்கப்படுகிறது. பயன் எதுவுமில்லை என்பதுவே இதற்கு பதிலாகும். இதனால் உணர்த்தப்படும் குறிப்புப் பொருள் “யான்” “எனது” என்னும்  குற்றங்களுக்குக் காரணமாயிருப்பதால் சாதி வேறுபாடுகள் ஆன்மாவுக்குக் கேடுகளையே விளைவிக்கும் என்பதாம்.

இங்கு ‘என்ன பயன் கெடுவீர்! என்று பாடபேதம் கொண்டு அதற்கு ‘கெடுவீர்கள்’ என்று விளி வேற்றுமையாக்கி அருகிலிருப்பவரை நோக்கிக் கூறுவதாகப் பொருளும் கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வுயிர்க்கும் இந்திரைகோன் தன்னடியே காணும் சரண் – ‘எவ்வுயிர்க்கும்’ என்றதால் “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்ற சிறப்புக்கேற்ப இன்னார் இனியார் என்று வேறுபாடு இல்லாமல் எல்லா ஆன்மாக்களுக்கும் திருமகள் மணாளன் திருவடிகளே புகலாகக் காண்பீர்களாக. ‘அனைத்துயிருக்கும் அவன் திருவடிகளே புகல்’ என்று கூறுவதால் அனைத்துயிர்களும் அவன் திருவடிகளைச் சார்ந்திருப்பதால் பேதங்கள் ஒன்றுமில்லை ஆகையால் பேதம் சொல்வது எல்லாம் உண்மை இல்லை. இறைவனடியார் என்று சொல்வதே எல்லா உயிர்களுக்கும் நிலைநின்ற தன்மையாம். இதுபற்றியே

“பொதுநின்ற பொன்னங்கழலே தொழுமின்
முழு வினைகள் முன்னங்கழலும் தொழுமின்”        -திருவந்தாதி – 2369ம் பாட்டு

என்றார் பூதத்தாழ்வார். இங்கு “பொதுநின்ற பொன்னங்கழல்” என்று இறைவனுடைய திருவடி அனைவருக்கும் பொது என்று கூறப்பட்டது. இது பற்றியே வைணவத் திருக்கோயில்களில் வழிபாட்டுக்கு வரும் அனைவர் தலைகளிலும் திருவடி நிலையை (சடாரி) வைப்பதைப் பார்க்கிறோம்.

ஞான ஸாரம் 13- பண்டேயுயிரனைத்தும் பங்கயத்தாள்

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                               13-ஆம் பாட்டு:

முன்னுரை:

பகவானிடத்தில் வேறு பயன் எதையும் விரும்பாமல் தொண்டு செய்யும் தன்மை உண்டானாலும், ஆன்ம விவேகமில்லாமல் உடலில் பற்றுதல் உடைய உலகியல் மக்களோடு, (உண்ணல், உடுத்தல், திரிதல்) இவற்றையே லட்சியமாகக் கொண்டவர்களோடு தொடர்புடையவராயிருந்தால், இறைப் பணியையே இலக்காகக் கொண்ட அவ்வடியார்க்குப் பழுதாகுமன்றோ? என்று வினா எழும். அதற்கு விடையளிக்கப்படுகிறது இப்பாடலில். அதாவது, ஆன்மாவின் உண்மை நிலையான இறைப்பணியைக் கண்டறிந்தவர்களுக்கு உலகியல் மக்களோடு உறவு ஏற்படாது என்பதாகும்.

young-narada-muni-with-lord-narayana

“பண்டேயுயிரனைத்தும் பங்கயத்தாள் நாயகற்கே
தொண்டாமெனத் தெளிந்த தூமனத்தார்க்கு உண்டோ
பல கற்றும் தம்முடம்பைப் பார்த்தபிமானிக்கும்
உலகத்தவரோடுறவு”

பதவுரை:

பண்டே தொன்று தொட்டே
உயிரனைத்தும் அனைத்து உயிர்களும்
பங்கயத்தாள் நாயகற்கே லக்ஷ்மீ நாதனுக்கே
தொண்டாம் அடிமையாகும்
எனத்தெளிந்த என்ற உண்மையை அறிந்த
தூமனத்தார்க்கு தூயமனம் படைத்தார்க்கு
பலவும் கற்று சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்று
தம் உடம்பைப் பார்த்து தமது உடலில் காணப்படும் சாதி முதலியவற்றைப் பார்த்து
அபிமானிக்கும் செருக்கித்திரியும்
உலகத்தவரோடு உலகியல் மக்களோடு
உறவு உண்டோ தொடர்பு உண்டாகுமோ?

விளக்கவுரை:

பண்டே, உயிர் தொண்டாம் (என்று கொண்டு கூட்டிப் பொருள் சொல்லப்படுகிறது) அதாவது உயிர்கள் எல்லாம் இயல்பாகவே இறைவனுக்கு அடிமையாயிருத்தல் அநாதியாகும் என்பதை உணர்த்துகிறது.

உயிர் அனைத்தும் என்று கூறுவதால், ஆன்மாக்களுக்குரிய அவ்வடிமைத் தன்மைதான் சிலருக்கு உண்டாய், சிலருக்கு இல்லையாய், இல்லாமல் அனைத்து ஆன்மாக்களுக்கும் பொதுவாகும் என்று உணர்த்தப்படுகிறது.

பங்கயத்தாள் நாயகற்கே மேற்கூறிய அவ்வடிமை தான் யாருக்கு என்பதைத் தெளிவாக்குகிறது இத்தொடர். தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்ட பெரிய பிராட்டியாருக்கு நாயகனான ஸ்ரீயபதிக்கு என்று பொருள். உயிர்கள் திருமாலுக்கே அடிமையாகும் என்றதாயிற்று. இதனால் அடியவர்களான ஆன்மாக்களுக்குத் தலைமையாயிருப்பவர். பிராட்டியும் பெருமாளுமான இருவருமாவர் என்னும் கருத்துப் புலனாகிறது. மேலும் நாயகற்கு என்ற நான்காம் வேற்றுமை உருபாலும் “ஏ” என்ற தேற்றேகாரம் இடைநிலையாலும், ஆன்மாக்கள் அவ்விருவருக்கு மட்டுமே அடிமை, பிறர்க்கு அடிமையானவரில்லை என்ற கருத்தும் அறியப்படுகிறது.

தொண்டாம் எனத் தெளிந்த தூமனத்தார்க்கு – மேற்சொன்ன ‘பங்கயத்தாள் நாயகற்கே இவ்வான்மா அடிமை’ என்று சாஸ்திரங்களால் தெளிவடைந்த தூயமனத்தரான தொண்டர்களுக்கு, திருமந்திரம் சகல வேதங்களுடையவும் திரட்சியாகும். இக்கருத்து திருமந்திரத்தை உணர்ந்தவர்க்கு நன்கு தெரியும். திருமந்திரத்தின் பொருளுணர்ந்தவர்கள் தான் “தூமனத்தர்”.

உண்டோ – கிடையாது. இவ்வினைச்சொல்லுக்கு மேல் வரும் உறவு என்ற சொல்லோடு கொண்டு கூட்ட வேணும். உறவு உண்டோ என்பதால் உறவு கிடையாது என்பது பொருளாகும்.

பல கற்றும் தம் உடம்பைப் பார்த்து அபிமானிக்கும் – பல கற்றல் – அதாவது வேதம், மனு முதலிய ஸ்மிருதிகள், தர்க்கம், வியாகரணம் முதலிய சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்றலாம். (தம் உடம்பைப் பார்த்து அபிமானிக்கும்) – என்ற தொடரில் ‘தம் உடம்பு’ என்றது அந்தணர் முதலிய வர்ணங்களுக்கு பிரம்மசரியம் முதலிய நிலைகளுக்கும் எல்லாம் இருப்பிடமாயிருக்கும். தங்கள் தங்கள் உடம்பைப் பார்த்து ‘நாம் இன்ன சாதி அன்றோ நாம் இன்ன வர்ணம் அன்றோ, நாம் இன்ன நிலை (பிரம்மசரியம்) முதலிய நிலைகள் இருப்பவர் அன்றோ என்று இவற்றை குறியிட்டுத் தங்களை மிக உயர்வாக எண்ணி இருக்கும்’ என்று பொருள்.

உலகத்தவரோடு உறவு – இப்படித் தங்களைச் சாதி முதலியவற்றால் உயர்வாக எண்ணியிருக்கும் உலகத்தவரோடு.

தூமனத்தார்க்கு – தொடர்பு உண்டாகுமோ என்று வினை கூட்டிப் பொருள் முடிக்க,

உட்கருத்து:

“ஓம்” என்ற ப்ரணவத்தில் அகாரத்தின் பொருளான நாராயணனுக்கே ஆன்மாக்கள் அனைவரும் அடிமை ஆவார் என்று சொல்லப்பட்டது. இவ்வாறு சொல்லப்பட்ட அடிமைக்கு  நிலைக்களமான ஆன்மாவை ‘ம’ காரத்திற்கு அர்த்தமாகக் காணவேண்டும். அவ்வான்மா அசேதனப் பொருள்களைக் காட்டிலும் வேறுபட்டதாய் ஞானத்தையும் ஆனந்தத்தையும் அடையாளமாய்க் கொண்டதாய், ஞான வடிவமாய் என்றும் இருப்பதாய், இவ்வாறான இலக்கணங்களோடு கூடியிருக்கும் ஆன்மாவைப் பற்றித் தெரிந்திருக்கும் தூய மனத்தினருக்கு, இத்தெளிந்த அறிவில்லாத உலகத்தவரோடு தொடர்பு உண்டாகுமோ? அதாவது உலகத்தவர் உடலையே முக்கியமாகக் கொண்டு அவ்வுடலைப் பற்றி வரும் சாதி முதலியவற்றைக் குறித்துத் தங்களை மிக மதிப்பாக நினைத்து செருக்கித் திரியும் உலகத்தவர்’ என்று உலகர்களை அறிந்தால் ஆன்மாவின் உண்மையை உணர்ந்தவர்களுக்கு அதை அறியாத உலகத்தவரோடு தொடர்பு உண்டாகுமோ? உண்டாகாது என்றவாறாம். அவர்களைக் கண்டால் உறவற வார்த்தை சொல்லிப் போதல் இத்தனை அன்றோ உள்ளது காண்க.

இதற்கு உதாரணமாக ஒரு பழைய வரலாறு இங்குச் சொல்லப்படுகிறது. திருவயிந்திபுரம் என்ற ஊரிலே வில்லிபுத்தூர்ப் பகவர் என்று பிரபலமாய் இருப்பார் ஒரு சன்னியாசி (துறவி). பிராமணர்கள் எல்லோரும் நீராடிக் கடன் செய்யும் துறையை விட்டிட்டு தாம் வேறு ஒரு படித்துறையில் தம்முடைய கடன்களைச் செய்து வருகையில் ஒரு நாள் பிராமணர்கள் அவரை நோக்கி, ‘எங்கள் துறையில் உமக்கு நீராட்டம் பண்ணக் கூடாதா? என்று கேட்க’ அதற்கு அவர் இவ்வாறு பதில் கூறினார். ஓ அந்தணர்களே! நாங்கள் விஷ்ணுவின் அடியார்கள். நீங்கள் சாதி, தர்மங்களைக் கடைபிடிக்கும் பிராமணர்கள். விஷ்ணு தாசர்களான எங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு கிடையாது. நீங்கள் சரீரத்திற்கு அடிமைப்பட்டவர்கள். நாங்கள் பகவானுக்கு அடிமைப்பட்டவர்கள். நம் இருவருக்கும் உறவு ஏற்படுவதற்கு வழியில்லை என்று உறவற வார்த்தை சொல்லிப்போனார் அன்றோ என்ற இவ்வரலாறு இப்பாடல் உரையில் மாமுனிகளால் கூறப்பட்டுள்ளது. இதனால் ஞானிகளுக்கு உலகத்தவர்களோடு தொடர்பு உண்டாகாது என்பதாம்.

ஞான ஸாரம் 12- மாறாயிணைந்த மருத

Published by:

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                          12-ஆம் பாட்டு:

முன்னுரை:

வேறு பயன்களை விரும்புவார் மிகப் பெரிய செல்வத்தைத் தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும் திருமகள் மணாளனான இறைவன் அச்செல்வத்தை விரும்பி ஏற்கமாட்டான் என்று கூறுகிறார் இப்பாட்டில்.

krishna-tied-to-grinding-mortar

“மாறாயிணைந்த மருத மிறத் தவழ்ந்த
சேறார் அரவிந்தச் சேவடியை வேறாக
உள்ளாதா ரொண்ணிதியை யீந்திடினும் தானுகந்து
கொள்ளான் மலர் மடந்தை கோன்”

பதவுரை:

மலர் மடந்தை கோன் திருமகள் தலைவனான பகவான்
மாறாயிணைந்த தன்னிடம் பகைகொண்டு சேர்ந்து நின்ற
மருதம் இரட்டை மருத மரங்களான அசுரர்களை
இற முறிந்து விழும்படி
தவழ்ந்த தவழ்ந்து போன
சேறார் சேற்றில் அலர்ந்த
அரவிந்தம் செந்தாமரை போன்ற
வேறாக சிறப்பாக (அதுவே பயனாக)
உள்ளாதார் நெஞ்சால் நினையாதார்
ஒண்நிதியை மிகப் பெருஞ்செல்வத்தை
ஈந்திடினும் தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும்
தான் பரிபூரணனான இறைவன்
உகந்து கொள்ளான் மகிழ்வுடன் ஏற்கமாட்டான்

விளக்கவுரை:

மாறாயிணைந்த மருதம் – தன்னிடம் பகை உணர்வோடு இடைவெளி இல்லாமல் நெருங்கிருந்த மருத மரங்கள் ‘எமளார்ச்சனம்’ என்ற பெயர் உடைய வகைகள் (இறத் தவழ்ந்த) முறிந்து விழும்படி தவழ்ந்து போன என்று பொருள்.

கண்ணபிரானைத் தொட்டிலில் இட்டு யசோதை யமுனை நீராடப் போனாள். அப்பொழுது அவன் பசியினால் அழுதான். முலைப்பால் கொடுக்கும் தாய் அருகில் இல்லை. சீற்றத்தினால் திருவடிகளை நிமிர்ந்து உதைத்தான். கண்ணனைக் கொல்வதற்காக அசுரன் மறைந்திருந்த வண்டி அவனை அழிக்க வந்தது. அப்போது தன் சிறு பாதத்தால் உதைத்தான். அவ்வளவில் அவ்வண்டி சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது என்பது முன் வரலாறு. அது போல இங்கு சாபத்தினால் இரட்டையாய் இணைந்துள்ள எமளார்ச்சனம் என்ற மருத மரங்களும் இவனுடைய உராய்தலால் கீழே சாய்ந்தன. அதாவது, கண்ணன் வெண்ணையைக் களவிலே அமுது செய்தான், ஊரார் காணவே அவனை உரலிலே கட்டிப் போட்டுவிட்டு வேலையிலே ஈடுபட்டாள் யசோதை. குழந்தைத்தனத்தால் உரலை இழுத்துக்கொண்டு கண்ணன் தன்னை இணைத்திருந்த மருத மரங்களின் நடுவே தவழ்ந்து நுழைந்தான். உரல் தடைப்பட்டது. பலத்து இழுக்கும் பொழுது அவன் ஊர்ந்து சென்ற தொடைகள் உராய்தலால் இரட்டை மருத மரங்களும் முறிந்து விழுந்தன, மருத மரத்தில் மறைந்திருந்த அசுரர்கள் பலியானார்கள். எமளார்ச்சனர்கள் கம்சனுக்கு உதவியாக மருத மரவடிவில் மறைந்து நின்று கண்ணனைக் கொல்ல எண்ணினார்கள். அவனாலேயே பலியானார்கள். பிறர்க்காகக் கண்ணனைப் பகைத்துக் கிட்டினாலும் கண்ணனாலே அழிக்கப்பட்டார்கள். ஆகவே, பிறர்க்காக எதிர்த்தாலும் அவர்களும் கண்ணபிரானால் அழியும்படி ஆவார்கள். எதிரிகள் யாரானாலும் அவர்களை அழிப்பது கண்ணன் இயல்பு என்பது கருத்து. இயற்கையான தாமரைக் குளத்தில் அலர்ந்த செந்தாமரை போலே சிவந்த திருவடிகள்.

சேவடி என்று திருவடியின் சிவப்பைச் சொன்ன இடத்தில் மற்றும் உண்டான அலர்த்தி, குளிர்ச்சி, அழகு, நறுமணம் இவை எல்லாவற்றையும் ஏற்புளிக் கோடல் என்ற உத்தியால் சேர்த்துக் கொள்ள வேணும். இக்கதையைச் சொல்ல வந்த பராசரமுனிவர் கண்ணன் மருத மரங்கள் நடுவே தவழ்ந்து போனபோது அவை முறிந்து விழுகின்ற ஒசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்து அவ்வழகிய பார்வையாலே சிவந்து மலர்ந்த திருக்கண்களின் அழகைக் கட்டுரைத்தார். இக்கதையை இப்பாடலில் கூறிய அருளாள மாமுனிவர் கண்ணன் தவழ்ந்து போகிற போது மருத மரங்களை முறித்திட்டுப் போன திருவடிகளில் அழகைக் கட்டுரைக்கிறார் என்பது மணவாளமாமுனிகள் உரை.

“பொருந்திய மாமரு தின்னிடை போய வெம்
பெருந்தகாய், உன் கழல் காணியே பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே
இருந்திருந் தெத்தனை காலம் புலம்புவனே”                             என்றும்
(திருவாய்மொழி – 3-8-10)

“போனாய் மாமருதின் நடுவே என் பொல்லாமணியே” என்றும் ஆழ்வாரும் அனுபவிக்க ஆசைப்பட்டது மருதத்தின் நடுவே போன திருவடிகளை அன்றோ?

வேறாக உள்ளாதார் – வேறுபடுத்தி எண்ணாதவர்கள்.

‘அதாவது வேறுபயன் எதிலும் சிறிதும் தொடர்பின்றி இத்திருவடிகளே நமக்கு மேலான பயன் என்று நினையாதவர்கள்’ என்று கருத்து. அதாவது கண்ணபிரான் மருதமரமாயுள்ள எமளார்ச்சனர்கள் கையில் அகப்படாமல் தன்னைத் தானே காத்து நமக்குத் தன்னை அனுபவிக்கும்படி தந்ததால் அவன் திருவடிகளே அடையத் தகுந்த மேலான பலன்’ என்று எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டு கிடப்பதன்றோ அடியவரானவர்க்குத் தருவதாகும். அவ்வாறு இருக்க வேண்டியதை விட்டுவிட்டு மனதை வேறு வேறு பயன்களில் ஈடுபடுத்தும் அவர்கள் என்பதாம்.

ஒண் நிதியை ஈந்திடினும் – ஒண்மை – அதாவது சீரிய அளவற்ற நிதியைக் கொடுத்தாலும்

தான் உகந்து கொள்ளான் மலர் மடந்தை கோன் – ‘தான் திருவுக்கும் திருவாகிய செல்வனாகையால் எல்லாம் நிரம்பப் பெற்றவன். குறையொன்றுமில்லாதவன். ஆகவே மேலே சொல்லப்பட்டவர்கள் மிக்க பெருநிதியைக் கொடுத்தாலும் அதை விரும்பி ஏற்கமாட்டான்’ என்பது பொருள். அவன் குறையுடையவனாய் இருந்தாலன்றோ கொடுக்கிற பொருளை பெருநிதி என்று அவாவுற்று ஏற்பான்! இதை அவனிடம் சொல்ல முடியாது அல்லவா ? மேலும் கொடுப்பவரது நெஞ்சின் தூய்மையைப் பார்த்து ஏற்கும் பெருமான்  அன்றோ அவன். ‘ஆகையாலே தன்னிடம் பக்தியில்லாது வேறுபயனை விரும்புவார் கொடுப்பதை மகிழ்ந்து ஏற்கமாட்டான்’ என்பதாம். ‘மகிழ்ந்து ஏற்க மாட்டான்’ என்றதால் ‘தலைவிதியே’ என்று ஏற்பானாகத் தெரிகிறது. இறைவன் எல்லோராலும் பற்றப் படுவனாதலால் அவன் யார் கொடுப்பதையும் ஏற்க வேணுமே! கடமைக்காக ஏற்பானே அன்றி மகிழ்ந்து ஏற்க மாட்டான் என்பது இதன் குறிப்புப் பொருள். பெற்றோர்கள், நற்குணமுடைய குழந்தைகள் கொடுப்பதை ஏற்பது போல, அக்குணமில்லாதவர்கள் கொடுப்பதையும் ஏற்க வேண்டுமல்லவா அதுபோல என்பதாம்.