ஞான ஸாரம் 31- வேதம் ஒரு நான்கின்

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                         31-ஆம் பாட்டு:

முன்னுரை:

எல்லா வேதங்களுக்குள்ளும் மறைந்திருக்கும் உயர் பொருளும் வேதப் பொருளைத் தெளிவு பட எடுத்துரைக்கும் மற்றைய சாஸ்திரங்கள் சொல்வதும் ஆகிய சரணாகதி நன்னெறியைக் காட்டிக்கொடுத்த ஆசார்யன் திருவடிகளே தஞ்சமாகும் என்று கூறும் கருத்தை இப்பாடலில் சொல்லப்படுகிறது.

Ramanujar-Melkote

“வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்
கோதில் மனுமுதநூல் கூறுவதும் – தீதில்
சரணாகதி தந்த தன் இறைவன் தாளே
அரணாகும் என்னும் அது”

பதவுரை:

தீதில் குற்றமில்லாத
சரணாகதி அடைக்கல நெறியை
தந்த தனக்கு காட்டிகொடுத்த
தன்னிறைவன் தனக்கு தெய்வமான ஆசார்யனுடய
தாளே திருவடிகளே
அரணாகும் தஞ்சமாகும்
என்னுமது என்று சொல்லப்படும் அடைக்கல நெறியே
ஒரு நான்கு வேதம் ஒப்பற்ற ரிக்கு, யஜுர், சாம, அதர்வணம்  என்று சொல்லப்படும் நாலு வகை வேதங்களிலும்
உட்பொதிந்த நிதி போல் உள்ளே மறைந்து கிடக்கும்
மெய்ப்பொருளும் உண்மைப்பொருளும்
கோதில் குற்றமற்ற
மனுமுதநூல் மனு முதலான சாஸ்திரங்களும்
கூறுவதும் உரைக்கும் கருத்துக்களும் (எல்லாம்)
அதுவே ஆச்சார்யனை அடைக்கலம் புகும் நெறியேயாகும

விளக்கவுரை:

வேதம் ஒரு நான்கின் உட்பொதிந்த மெய்ப்பொருளும்: இங்கு’ஒரு’ என்ற சொல் வேதத்தின் ஒப்பற்ற தன்மையைக் கூறுகிறது. அதாவது ஒரு மனிதனால் உருவாக்கபடாதது. எழுதா மறை என்றும் கூறப்படுவது. ஐயம், திரிபு, மயக்கம் முதலிய குற்றங்கள் எதுவுமே இல்லாதது. உள்ளதை உள்ளபடி கூறுவது முதலிய சிறப்புக்கள் பற்றி ஒப்பில்லாதது என்று பொருள்.

நான்கு:

“வேதம் ரிக்கு,யஜுர் , சாம ,அதர்வணம் என்று நான்கு வகையாகும். இத்தகைய வேதங்கள் தம்முள்ளே எட்டு புரி கொண்ட கயிற்றினால் ஒரு பொருளைக் கட்டி வைப்பது போல எட்டழுத்துக் கொண்ட திருமந்திரத்தினுள் பரம்பொருளை மறைத்து வைத்துள்ளது.” அதாவது அஷ்டாக்ஷர மகா மந்திரம் எல்லா வேதத்தின் உள்ளேயும் நிதி போல் மறைந்து கிடக்கிறது என்பதாம். (ஏட்டினோடிரண்டெனும் கயிற்றினால் மனந்தனைக் கட்டி (திருச்சந்தவிருத்தம்,) “வேதம்” அனைத்தையும் அளக்கும் கருவி என்ற சொல்லால் இம்மந்திரப்பொருளைசொல்லும் மற்றைய எல்லா  நூல்களிலும் சிறப்புடையது என்பதும் “நான்கு” என்பதால் அவ்வேதத்தில் எங்கேனும் ஒரு மூலையில் சொல்லப்படும் பொருளாயில்லாமல் “அனேக கிளைகளாக விரிந்துள்ள வேதமனைத்துக்கும் உட்பொருள் இவ்வடாக்ஷர  மந்திரப் பொருள் மேல் நோக்கில் இல்லாமல் உள்ளே சேமித்து வைக்கப்பட்ட நிதி போன்றது என்பதும் “மெய்ப்பொருள்” என்றதால் அம்மறைப்பொருள் பொருளைக் கூறுகிறது என்பதும் அறியக்கிடக்கிறது.

கோதில் மனு முதனூல் கூறுவதும்: கோது-குற்றம் .அது இல்லாமையாவது குற்றமில்லை. அதாவது  ஒன்றை வேரு ஒன்றாகத் திரித்துக் கூறும் குற்றமில்லாமை என்று பொருள். உதாரணமாக முத்துச்சிப்பியின் வெண்மையைப் பார்த்து வெள்ளி என்று வேறாகச் சொல்லாமல் முத்துச்சிப்பி என்றே சொல்வது. இத்தகைய குற்றங்கள் எதுவும் இல்லாதது மனுதர்ம சாஸ்திரம். “கோதில்” என்ற அடைமொழியை மனுவுக்குச் சொன்னபோது மனு சொன்னது மருந்து என்று கூறப்பட்ட அதன் சிறப்பு உணரப்படும். அதில் எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டாம் என்ற கருத்து. இவ்வடைமொழி ஏனையவற்றிற்கு ஆனபோது அந்தந்த நூல்களுடைய நம்பிக்கையை சொல்லுகிறது. அதாவது ஐயம் திரிபு அறஉள்ளதை உள்ளபடி சொல்லுதல் .அவையாவன சாத்வீக ச்ம்ரிதிகளும் ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், மகாபாரதம் முதலிய இதிகாசங்களும், பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களுமாகிற சாஸ்திரங்களுமாம். இத்தகைய மனு முதலிய சாஸ்திரங்கள் எல்லாம் ஒரே குரலால் வேதத்தின் இதயமான அஷ்டாக்ஷர மகா மந்திரத்தின் உள்ளே மறைவாக பொதிந்து கிடக்கும் சரணாகதிப் பொருளை வெளிப்படையாக விளக்கமாக உரைப்பவை அன்றோ .மனு முதலிய நூல்களுக்குப் பணி. ஆகவே சரணாகதி தத்துவமேவேதம் முதலிய நூல்களாலும் சொல்லப்படும் நெறியாகும். என்பது இதனால் உணர்த்தப்பட்டது.

தீதில் சரணாகதி தந்த:  எந்தக் குற்றமும் சொல்ல முடியாதது. சரணாகதி நெறி தைக் காட்டிக் கொடுத்த அதேநூல்களில் சொல்லப்பட்ட ஏனைய கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் முதலிய நெறிகளுக்கு “இன்னார் செய்யக் கூடாது ” என்பன போன்ற கட்டுப்பட்டுக் குற்றமும் அன்னெறிகளைக் கடைப்பிடிகையில் நூல்கள் சொன்னபடி செய்யமுடியாத நழுவுதல் குற்றமும் உள்ளன. சரணாகதியாகிற எளிய வழி இருக்கையில் மேற்கூறிய அரிய வழியைப பின்பற்றுகை தேவையற்றது. குற்றங்கள் எதுவும் சொல்லமுடியாதது. சரணாகதி ஆகிற நெறி நேரடியாக இறைவனைப் பற்றுவது. இதுவே தன சிறப்பு. (ப்ரபத்தி) -ஈஸ்வர என்பது பகவத் விஷய வாக்கியம். சரணாகதி என்பதற்கு இறைவன் என்றே பொருள் சொல்லப்படுகிறது. இத்தகைய சரணகதியாகிற நெறியை வறுமையுடவனுக்கு அளப்பரும் சீரிய நிதியைக் கொடுப்பது போல காட்டிக்கொடுத்த என்றவாறு. இத்தகைய சரணாகதி நெறியை உபதேசித்த என்று பொருள்.

தன்னிறைவன்: தன்னுடைய ஆசார்யனை “மாடும் மனையும்:” என்கிற பாடலில் எட்டெழுத்தும் தந்தவனே என்று கூறப்பட்டது. இப்பாடலில் “சரணாகதி தந்தவன்: என்று கூறப்படுகிறது. இதிலிருந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்ததற்கும் சரணாகதி மந்திரத்தை உபதேசித்ததற்கும் நீண்ட வேறுபாடு இருப்பது புலனாகிறது. அதாவது இங்கு “சரணாகதி” என்ற சொல்லல் மறைத்துக் கூறப்பட்டது.  அங்கு எட்டெழுத்து என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டது. திருமந்திரம், த்வயம்,சரமச்லோகம் எனப்படும் மூன்று மந்திரங்களுள் முதல் இறுதி மந்திரங்களின் பொருளை மறைத்து மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டு வருவது முன்னோர்களின் பழக்கமாகும். அவை போலன்றி சரணாகதியைக் கூறும் த்வயம் எனப்படும் மந்திரத்தின் பொருளை மறைப்பதோடு இம்மந்திரத்தின் ஒலி வடிவையும் மறைத்து மனதுக்குள்ளேயே கூறி வரும் மரபு கூறப்படுகிறது. இதனால் த்வய மந்திரத்தின் சிறப்பு அறியக் கிடக்கிறது. இதைப்பற்றி நஞ்சீயர் என்னும் ஆசார்யன் கூறுகையில் ” த்வய மந்திரத்தில் பகவானுடைய அழகிய திருமேனி பற்றியும் அதன் குணங்களும் பரமாத்ம இலக்கணமும் அவனது எண்ணில் பல குணங்களும் நித்யர்களும் முக்தர்களும் பேரின்பமாய் இருப்பது போல இங்கு வீடு பேறு அடைவதில் ஆசையினால் சரணாகதி பண்ணின அடியார்க்கு த்வய மந்திரத்தின் உருவமே பேரின்பமாயிருக்கும் என்று கூறியதாகச் சொல்லப்படும் வார்த்தையை ஈண்டு எண்ணிப் பார்க்கலாம். இத்தகைய மிகவும் சீரிய சரணாகதியைக் கூறும் மந்திரமான த்வய மந்திரத்தை அன்றோ சீடனாகிற இவனுக்கு ஆசார்யன் உபதேசித்தது. தனக்கு த்வய மந்திரத்தை உபதேசித்த ஆசார்யனே “இறைவன்” என்பதாம். தன்னிறைவன் என்றதால் எல்லோரும் தெய்வமான பகவானைப் போல அல்லாமல் தனக்கே தெய்வமாக விளங்குவது பற்றித் தன்னிறைவன் என்று கூறப்பட்டது.

தாளே: அத்தகைய தனக்குத் தெய்வமாய் விளங்கும் ஆசார்யன் திருவடிகளே. தாளே என்ற சொல்லை மட்டும் நோக்குகையில் பகவானாகிற இறைவனைப் பற்றினவர்களுக்கும் ஆசார்யனாகிற இறவனைப் பற்றினவர்களுக்கும் ஆகிய இருவருக்கும் திருவடிகளே தஞ்சம் என்ற பொருள் புலனாகிறது. தாளே என்ற யிடத்திலுள்ள ஏகாரத்தால் சீடனுக்குச் செய்யும் நன்மைகளைப் பிறர் உதவியின்றி தானே செய்யும் என்கிற சிறப்பும் உணரக் கிடக்கிறது.

அரணாகும் என்றுமது: அரண் என்பது தஞ்சம். அதாவது ஆசார்யன் திருவடிகளே தனக்குத் தஞ்சமாகும் என்று பொருள். இறைவன் என்ற சொல்லில் தலைமை, நெறி,பயன் என்ற மூன்று கருத்தும் பொதுவாகச் சொல்லப்படும். இம்மூன்றுமாய் இருப்பவன் இறைவன். தன்னிறைவன் என்றதில் தலைமையும் ‘அரணாகும்’ என்றதில் நெறியும் கூறப்பட்டன.பயன் கூறாமல் போனாலும் அதையும் இங்கு கூட்டிகொள்ளவேணும். அதாவது ஆசார்யன் திருவடிகளே தனக்குத் தலைமையாகவும் தஞ்சமாகவும் (நெறி) அடைய வேண்டிய பயனாகவும் இருக்கிற ஏற்றம் சொல்லப்படுகிறது

Leave a Comment