ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை
பாசுரம் 46
கீழ் ஆசார்ய ஸம்பந்தத்தாலே பேறு என்றார். இதில் ஆசார்யன் யாரென்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.
திருவாய்மொழிப் பிள்ளை தீவினையோம் தம்மை
குருவாகி வந்து உய்யக் கொண்டு பொருவில்
மதி தான் அளித்தருளும் வாழ்வன்றோ? நெஞ்சே!
எதிராசர்க்கு ஆளானோம் யாம்
நெஞ்சே! திருவாய்மொழியிலே மிகவும் ஈடுபாடு கொண்டு அதனாலே திருவாய்மொழிப் பிள்ளை என்ற திருநாமத்தைப் பெற்றவர் ஆசார்யராக எழுந்தருளியிருந்து கொடுவினைகளை உடைய நம்மைத் தேடி வந்து நாம் உஜ்ஜீவனத்தைப் பெறும்படி நம்மை ஏற்றுக்கொண்டு ஒப்பற்றதான ஞானத்தைத் தாம் அளித்தருளிய செல்வத்தாலன்றோ நம் யதிராஜருக்கு அடிமையானோம்?
பாசுரம் 47
“நாராயண” என்ற திருநாமத்துக்கு ஸமமான வைபவம் கொண்ட “ராமானுஜ” என்ற திருநாமத்தின் வைபவத்தை எதிர்மறையான பொருள் கொண்டு விளக்குகிறார்.
இராமாநுசாய நம என்று இரவும் பகலும் சிந்தித்திரா
மாநுசர்கள் இருப்பிடம் தன்னில் இறைப் பொழுதுமிரா
மாநுசர் அவர்க்கு எல்லா அடிமையும் செய்ய எண்ணி
இரா மாநுசர் தம்மை மாநுசராக என் கொல் எண்ணுவதே?
ராமானுஜர் விஷயத்தில் “நம:” என்று இரவும் பகலும் நினைத்து இராத மனுஷ்யர்களுடைய இருப்பிடத்தில் க்ஷண காலமும் வாழாத ஆழ்வான் போன்ற பெரியோர்களுக்கு எல்லா விதமான கைங்கர்யங்களையும் செய்ய எண்ணி அவற்றைச் செய்யாமல் இருக்கிற அறிவற்ற மனுஷ்யர்களை எப்படி மனுஷ்யர்களாக எண்ணுவது?
பாசுரம் 48
தம்முடைய வாக்கு, மனம், காயம் ஆகிய மூன்று கரணங்களையும் இப்படி இராமானுசனடியார்கள் விஷயத்தில் பெரிய பெருமாள் ஆக்கியருளினபடியை நினைத்து மகிழ்கிறார்.
எண்ணாது என் நெஞ்சம் இசையாது என் நா இறைஞ்சாது சென்னி
கண்ணானவை ஒன்றும் காணலுறா கலியார் நலிய
ஒண்ணாத வண்ணம் உலகளித்தோன் எதிராசன் அடி
நண்ணாதவரை அரங்கேசர் செய்த நலம் நமக்கே
கலியுகத்தில் இருக்கும் ஆத்மாக்கள் துன்பப்படாதபடி உலகத்தை ரக்ஷித்தவரான எம்பெருமானாருடைய திருவடிகளை அடையாதவர்களை அடியேனுடைய நெஞ்சானது நினைக்காது; நாக்கானது கொண்டாடாது; தலையானது வணங்காது; கண்களானவை இவை எதையும் காணாது; இப்படி இருக்கும்படி இக்கரணங்களை நமக்களித்த ஸ்ரீரங்கராஜனான பெரிய பெருமாள் நமக்குச் செய்த நன்மையே.
பாசுரம் 49
ஸம்ஸாரிகளுடைய துன்பத்தைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அவர்களுக்கு மோக்ஷத்துக்கு உபாயமாக எம்பெருமானாரைச் சரணடைவதைக் காட்டுகிறார்.
நந்தா நரகத்து அழுந்தாமை வேண்டிடில் நானிலத்தீர்!
எந்தாதையான எதிராசனை நண்ணும் என்றும் அவன்
அந்தாதி தன்னை அனுசந்தியும் அவன் தொண்டருடன்
சிந்தா குலம் கெடச் சேர்ந்திரும் முத்தி பின் சித்திக்குமே
நான்கு விதமான நிலங்களை உடைய பூமியில் உள்ளவர்களே! அனுபவித்துத் தீர்க்க அழியாத ஸம்ஸாரம் என்கிற நரகத்திலே அழுந்த வேண்டாம் என்று இருப்பீர்களாகில் அடியேனுக்குத் தந்தையான யதிராஜரைச் சரணடையுங்கோள்! எல்லாக் காலத்திலும் அவர் விஷயமான இராமானுச நூற்றந்தாதியை அநுஸந்தானம் பண்ணுங்கோள்; அவர் திருவடிகளில் அன்புடன் இருப்பவர்களுடன் மனோதுக்கங்களெல்லாம் தீரும்படி பொருந்தியிருங்கோள்; இப்படிச் செய்தால் மோக்ஷமானது உறுதியாகக் கிடைக்கும்,
பாசுரம் 50
அவர்கள் அப்படியே செய்கிறோம் என்று ஆறியிருக்க மீண்டும் அவர்களைக் குறித்து “இப்படி ஏன் காலத்தை வீணாக்குகிறீர்கள்; அவர் திருநாமத்தை நினைக்க மிக அரிதான பலம் ஸித்திக்கும்” என்கிறார்.
அவத்தே அருமந்த காலத்தைப் போக்கி அறிவின்மையால் இப்
பவத்தே உழல்கின்ற பாவியர்காள்! பல காலம் நின்று
தவத்தே முயல்பவர் தங்கட்கும் எய்த ஒண்ணாத அந்தத்
திவத்தே உம்மை வைக்கும் சிந்தியும் நீர் எதிராசன் என்றே
திருநாமத்தை சொல்லுவதற்குப் பொருத்தமான காலத்தை வீணாகப் போக்கி, அஜ்ஞானத்தால் இந்த ஸம்ஸாரத்தில் உழல்கின்ற பாபத்தை உடையவர்களே! எல்லாக் காலத்திலும் ஒரு நிலையில் நின்று தவம் செய்தவர்களுக்கும் அடைய முடியாத பரமபதத்திலே நித்ய ஸம்ஸாரிகளான உங்களைக் கொண்டு வைப்பார் எம்பெருமானார். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது “யதிராஜரே” என்று சிந்திப்பது மட்டுமே.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org