ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 51 – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 46 – 50

பாசுரம் 51

ஸம்ஸாரிகளைப் போலே இழந்த விஷயங்களை உணராமல் இருந்த எனக்கு தேவரீர் க்ருபை உண்டான பின்பே எப்பொழுது பேறு கிடைக்கும் என்ற ஏக்கம் ஏற்பட்டுள்ளது என்கிறார்.

என்று உளன் ஈசன் உயிரும் அன்றே உண்டு இக்காலம் எல்லாம்
இன்றளவாகப் பழுதே கழிந்தது இருவினையால்
என்று இழவின்றி இருக்கும் என் நெஞ்சம் இரவு பகல்
நின்று தவிக்கும் எதிராசா! நீ அருள் செய்த பின்னே

யதிராஜரே! எல்லாரையும் ஆளும் எம்பெருமான் எப்படி எப்பொழுதும் இருக்கிறானோ அதே போல அவனாலே ஆளப்படும் ஆத்மாக்களும் எப்பொழுதும் இருக்கிறார்கள். இப்படி அநாதி காலம் தொடங்கி இன்று வரை, புண்ய பாப ரூபமான கர்மங்களால் வீணாகவே கழிந்தது என்று இந்த இழவையும் நினைக்காமல் இருந்த அடியேனுடைய மனது தேவரீர் அருளிய பின்பு இதிலே இரவும் பகலும் நின்று பரிதபிக்கும் (மிகவும் அனுதாபப்படும்).

பாசுரம் 52

தன்னுடைய நிலையை நினைத்து அனுதாபப்படவே எம்பெருமானாருக்காகப் பெரிய பெருமாள் கருட வாஹனத்தில் எழுந்தருளி வந்து கொடுக்கும் பேற்றின் பெருமையை நினைக்கிறார்.

கனக கிரி மேல் கரிய முகில் போல
வினதை சிறுவன் மேற்கொண்டு தனுவிடும்போது
ஏரார் அரங்கர் எதிராசர்க்காக என்பால்
வாரா முன் நிற்பர் மகிழ்ந்து

பொன்மயமான மேரு மலையின் மேலே படிந்திருக்கிற கார் மேகம் போலே வினதையின் பிள்ளையான பெரிய திருவடியை வாஹநமாகக் கொண்டு அழகு நிறைந்தவரான பெரிய பெருமாள் யதிராஜருக்காக அடியேனுடைய சரீரம் கீழே விழும்போது அடியேன் இருந்த இடத்தே வந்து மகிழ்ச்சியோடே அடியேன் முன்னே நிற்பார்.

பாசுரம் 53

இப்படிப்பட்ட ஸம்ஸாரத்தில் துக்கங்களை அனுபவித்து இருக்க முடியாது என்பதால் விரைவில் தேவரீர் அடியேனை இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிறார்.

இதத்தாலே தென்னரங்கர் செய்கின்றது என்றறிந்தே
இருந்தாலும் தற்கால வேதனையின் கனத்தால்
பதைத்து ஆ ஓ என்னும் இந்தப் பாவ உடம்புடனே
பல நோவும் அநுபவித்து இப்பவத்து இருக்கப் போமோ?
மதத்தாலே வல்வினையின் வழி உழன்று திரிந்த
வல்வினையேன் தன்னை உனக்கு ஆளாக்கிக் கொண்ட
இதத் தாயும் தந்தையுமாம் எதிராசா! என்னை
இனிக் கடுக இப்பவத்தினின்றும் எடுத்தருளே

அடியேனுக்கு நன்மை வேண்டும் என்கிற ஹித புத்தியாலே பெரிய பெருமாள் அடியேனைத் துன்பப்படும்படி செய்கிறான் என்பதை அறிந்திருந்தும், அவ்வவ காலங்களில் ஏற்படும் வேதனையின் மிகுதியால் துடித்து, அதை வெளிப்படுத்தும் வகையில் “ஆ! ஓ!” என்ற ஓசைகளை எழுப்பும் இந்தப் பாவ உடம்போடே பல துன்பங்களை அனுபவித்து இந்த ஸம்ஸாரத்தில் இருக்க முடியுமோ? தேஹத்தின் மதத்தாலே, வலிமை பொருந்திய கர்மத்தின் வழியே திரிந்த மஹாபாபியான அடியேனை தேவரீருக்கு அடிமையாக்கிக்கொண்டு அருளின நன்மையைச் செய்யும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கிற யதிராஜரே! இனி, விரைவில் அடியேனை இந்த ஸம்ஸாரத்திலிருந்து எடுத்து பரமபதத்தில் சேர்த்தருள வேண்டும்,

பாசுரம் 54

இப்படிக் கேட்டவுடன் எம்பெருமானார் அதை செய்து தருவதாக நினைத்திருக்க, “கால தாமதம் பண்ணாமல் உடனே அடியேனைப் பரமபதத்தில் ஏற்றியருள வேண்டும்” என்கிறார்.

இன்னம் எத்தனை நாள் இவ்வுடம்புடன்
இருந்து நோவு படக் கடவேன் ஐயோ!
என்னை இதினின்றும் விடுவித்து நீர்
என்றுதான் திருநாட்டினுள் ஏற்றுவீர்?
அன்னையும் அத்தனும் அல்லாத சுற்றமும்
ஆகி என்னை அளித்தருள் நாதனே!
என் இதத்தை இராப் பகல் இன்றியே
ஏகம் எண்ணும் எதிராச வள்ளலே!

நமக்குப் பிடித்ததைச் செய்யும் தாயும், நன்மையைச் செய்யும் தந்தையும், மற்றும் உள்ள உறவினர்களும் ஆகி அடியேனை ரக்ஷித்தருளுகிற ஸ்வாமீ! அடியேனுடைய விருப்பத்தை இரவு பகல் என்றில்லாமல் ஒரே நிலையில் சிந்திக்கிற யதிராஜராகிய வள்ளலே! தேவரீருக்கு அடிமைப் பட்டும் இன்னம் எத்தனை காலம் இந்த உடம்பில் இருந்து துன்பப்படுவேன்! ஐயோ! அடியேனை இந்த உடம்பிலிருந்து விடுவித்து தேவரீர் எப்பொழுது பரமபதத்திலே ஏற்றியருளப் போகிறீர்?

பாசுரம் 55

எம்பெருமானார் க்ருபையால் தனக்குக் கிடைத்த நன்மைகளை நன்றியுணர்வுடன் உரைக்கிறார்.

தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே

திருவரங்கம் பெரிய கோயிலில் பள்ளிகொண்டருளும் பெரிய பெருமாளின் நிர்ஹேதுக க்ருபைக்கு (காரணமில்லாத அருளுக்கு) விஷயமானோம். நம் ஸம்ப்ரதாயத்துக்கு வேர்பற்றான திருவரங்கம் திருப்பதியே நம் வசிக்கும் இடமாகப் பெற்றோம். நம்மாழ்வாருடைய திவ்யப்ரபந்தங்களே நமக்கு எப்பொழுதும் அனுபவிக்கும் உணவாகப் பெற்றோம். மதுரகவி ஆழ்வாரின் “தேவு மற்றறியேன்” வார்த்தைகளின் படியே வடுகநம்பியைப் போலே எம்பெருமானாரே எல்லாம் என்கிற நிலையைப் பெற்றோம். நம்முடைய பூர்வாசார்யர்களின் திவ்யஸூக்திகளான வ்யாக்யானங்கள், ஸ்தோத்ரங்கள், ரஹஸ்ய க்ரந்தங்கள் ஆகியவற்றையே எப்பொழுதும் நினைக்கப் பெற்றோம். அவையே நமக்கு எப்பொழுதும் பொழுது போக்காக அமையப் பெற்றோம். இதற்குப் பிறகு மனது வேறெதிலும் புகாமல் இருக்கப் பெற்றோம். இதற்கெல்லாம் மேலே மற்றவர்களுடைய பெருமையைக் கண்டால் அதற்காகப் பொறாமைப் படும் குணம் இல்லாமல் ஆகப் பெற்றோம். இதென்ன ஆச்சர்யம்!

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment