வாழிதிருநாமங்கள் – திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் பிள்ளை லோகாசார்யர்

எம்பெருமானார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள்

திருவாய்மொழிப் பிள்ளை வைபவம்

திருவாய்மொழிப் பிள்ளை மதுரைக்கு அருகில் உள்ள குந்தீ நகரத்தில் (தற்போது கொந்தகை என்று வழங்கப்படுகிறது) வைகாசி விசாகத்தில் அவதரித்தவர்.  இவரது இயற்பெயர் ஸ்ரீசைலேசர் என்பதாகும்.   ஸ்ரீசைலம் என்பது திருமலையைக் குறிக்கும்.  அதனால் இவர் திருமலை ஆழ்வார் எனப்பட்டார்.  இவர் சிறு வயதிலேயே பிள்ளை லோகாசார்யரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று அவரது சிஷ்யரானார்.  இவர் சிறு வயதிலேயே சிறந்த  ஞானியாக இருந்தமையால் மதுரையில் இருந்த அரசன் தனக்கு மந்திரியாக இருக்கும்படி ஸ்ரீசைலேசரை வேண்டினான்.  சிறிது காலத்தில் அரசன் இறந்து விட அடுத்து பட்டத்திற்கு வந்த இளவரசருக்கு சிறந்த ஆலோசகராக இருந்து ராஜ்ய பரிபாலனம் சிறப்பாக நடக்க வழி வகுத்தார்.

இவர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்த காலத்தில் பிள்ளை லோகாசார்யரின் மற்றொரு சிஷ்யரான கூரகுலோத்தம தாசர் என்பவர் இவரைத் திருத்திப் பணி கொண்டு நம்முடைய சம்பிரதாயத்தில் சிறந்த ஆசார்யராக உருவாக்கினார்.  பிள்ளை லோகாசார்யர் திருநாட்டிற்கு எழுந்தருளும் முன்பு இந்த முக்கியமான பொறுப்பை கூரகுலோத்தம தாசரிடம் ஒப்படைத்தார்.  அதன்படி கூரகுலோத்தம தாசரும் எவ்வாறு மணக்கால் நம்பி ஆளவந்தாரை ஆசார்யராக உருவாக்கினாரோ அதே போன்று திருமலை ஆழ்வாரை சிறந்த ஆசார்யராக உருவாக்கும் பொறுப்பினை ஏற்று நடத்தினார்.  திருமலை ஆழ்வார் மந்திரியாக இருக்கும் காலத்தில் வீதி உலா வரும் இடங்களில் கூரகுலோத்தம தாசர் நின்று கொண்டு பாசுரங்களை அநுசந்தித்தார்.  திருமலை ஆழ்வாரும் பாசுரங்களால் ஈர்க்கப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டு சிறிது சிறிதாக சம்பிரதாய விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்தார்.  கூரகுலோத்தம தாசர் திருநாடு எய்தும் வரை அவருக்குக் கைங்கர்யங்கள் செய்தார்.

அவர் திருநாடு எய்திய பின், திருமலை ஆழ்வார் ராஜ்ய பதவியைத் துறந்து, நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் ஆழ்வார் திருநகரியை வந்தடைந்தார்.  ஆழ்வார் திருநகரி காடு மண்டிக்கிடக்க, ஆழ்வார் திருநகரியைச் சீர்திருத்தி நம்மாழ்வாருக்கும், கேரள தேசத்தில் இருந்த நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளச் செய்து, ஆழ்வார் மற்றும் ஆதிநாதப் பிரான் கோயிலை புனர் நிர்மாணம் செய்து, கைங்கர்யங்கள் சிறப்புற நடக்கும்படி செய்தவர் இந்தத் திருமலை ஆழ்வார்.  எம்பெருமானாரின் பவிஷ்யதாசார்யர் திருமேனி நம்மாழ்வாரின் திருப்புளி ஆழ்வாரின் (திருப்புளியமரம்) கீழ். இருப்பதை ஸ்வப்பனத்தில் கண்டு, அவரை ஆழ்வார் திருநகரியின் மேற்குப் பகுதியில் தனிக் கோயில் அமைத்து அங்கு அவரை எழுந்தருளச் செய்தார்.  அந்தக் கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளை அமைத்து அதற்கு சதுர்வேதி மங்கலம் என்று பெயரிட்டு, அங்கு ஸ்ரீவைஷ்ணவர்களை குடியமர்த்தினார்.  அவர்களைக் கொண்டு பவிஷ்யதாசார்யார் கைங்கர்யங்கள் நன்றாக நடக்கும்படிச் செய்தார்.

இவர் பல ஆசார்யர்களிடம் இருந்து சம்பிரதாய விஷயங்களை கற்றுக் கொண்டார்.  கூரகுலோத்தம தாசரிடம் சம்பிரதாய விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.  விளாஞ்சோலைப் பிள்ளையிடம் சென்று பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தங்களை விரிவாகக் கற்றுக் கொண்டார்.  வடக்குத் திருவீதிப் பிள்ளையிடம் பெற்ற திருவாய்மொழி முப்பத்தாறாயிரப்படி ஈடு வ்யாக்யானத்தை நம்பிள்ளை தமது மற்றொரு சிஷ்யரான ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கொடுத்து இதை தகுதியான அதிகாரிக்கு கொடுக்கவும் என்று பணித்திருந்தார்.  ஈயுண்ணி மாதவப் பெருமாள் தம்முடைய குமாரரான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு அதைக் கொடுக்க,  ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அதை நாலூர் பிள்ளைக்கு அளித்திருந்தார்.  நாலூர் பிள்ளை அந்த ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளைக்கு கொடுத்திருந்தார்.  நாலூராச்சான் பிள்ளையிடம் அவரது சிஷ்யரான திருவாய்மொழி பிள்ளை நம்பிள்ளையின் திருவாய்மொழி வ்யாக்யானத்தை திருநாராயணபுரத்தில்  கற்றுக் கொண்டார்.

இவர் நம்மாழ்வாருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.  அதனால் இவர் திருவாய்மொழிப் பிள்ளை எனப்பட்டார்.  சடகோபருக்காக வாழ்ந்தவர் எனும் பொருள்படும்படி சடகோப தாசர் என்றும் அழைக்கப்பட்டார்.  இந்தத் திருவாய்மொழிப் பிள்ளையின் வம்சத்தவர்கள் இன்றளவும் ஆழ்வார் திருநகரியிலும் மேலும் சில திவ்ய தேசங்களிலும் கைங்கர்யம் செய்து வருகின்றனர்.  இவ்வாறு பல கைங்கர்யங்கள் செய்தவர்.  முக்கியமாக சிதிலமடைந்திருந்த ஆழ்வார் திருநகரியை மீட்டெடுத்து சீர் திருத்தி நம்மாழ்வார், எம்பெருமான் மற்றும் பவிஷ்யதாசார்யர் சந்நிதிகளை ஏற்படுத்தி சிறப்புற கைங்கர்யம் நடக்கும்படி செய்தவர்.  மேலும் ஓராண் வழி ஆசார்யர்களில் இவர் மட்டும் திருவரங்கத்தில் வசித்ததாகத் தெரியவில்லை.   திருவாய்மொழிப் பிள்ளை பெருமையைக் கேட்டு மணவாள மாமுனிகள் அவரைத் தேடி ஆழ்வார் திருநகரி வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு அவரை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு திருவாய்மொழிப் பிள்ளை வாழ்நாள் உள்ள வரை அவருக்குக் கைங்கர்யங்கள் செய்து வாழ்ந்தார் என்று அறிகிறாேம்.  இவர் பெரியாழ்வார் திருமொழிக்கு ஸ்வாபதேச வ்யாக்யானம் அருளியுள்ளதாகத் தெரிகிறது.

திருவாய்மொழிப் பிள்ளை வாழி திருநாமம்

வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே

திருவாய்மொழிப் பிள்ளை வாழி திருநாமம் விளக்கவுரை

வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே –  இந்த வையகம் (இப்பூவுலகில் உள்ள பெரியோர்கள்) முழுவதும் எண்ணி மகிழக் கூடிய வேதமாகிய நம்மாழ்வார் அருளிச் செய்த திவ்யப்ரபந்தங்களை வளரும்படிச் செய்த திருவாய்மொழிப் பிள்ளை வாழ்க.

வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே – நம்மாழ்வாரின் திருநக்ஷத்ரமான வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்த ஏற்றம் மிகுந்த திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு வாழ வேண்டும்.

ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே – ஐயன் என்றால் தந்தை.  நமக்குத் தந்தை போன்ற அருள்மாரி என்று அழைக்கப்படும் திருமங்கையாழ்வாரின்   திவ்யப்ரபந்தங்களை ஆராய்ந்து அவைகளின் உட்கருத்துகளைச் சொல்லும் திருவாய்மொழிப்பிள்ளை வாழ்க.  ஆசார்யர் என்பவர் சகல சாஸ்திரங்களிலும், ஸம்ஸ்க்ருத க்ரந்தங்களிலும், வேதங்களிலும், தமிழ் ப்ரபந்தங்களிலும் விற்பன்னராக இருக்க வேண்டும் என்பதை நாம் முன்பே அறிந்தோம்.  அதன்படி திருவாய்மொழிப் பிள்ளை என்று பெயர் கொண்டாலும் மற்ற ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.  திருமங்கையாழ்வாரின் ப்ரபந்தங்கள் நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களுக்கு ஆறு அங்கங்களாக விளங்கின.  அவ்வாறு திருமங்கையாழ்வாரின் ப்ரபந்தங்களையும் பகுத்து ஆராய்ந்து அதன் கருத்துக்களை உலகோர் அறியும் வண்ணம் எடுத்துரைத்த திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே – மிகுந்த பொலிவைப் பெற்ற எதிராசரான ஸ்ரீராமாநுஜர் திருவடிகளைத் தொழும் திருவாய்மொழிப் பிள்ளை வாழ்க.   எம்பெருமானாரைத் தமது சிஷ்யரான மணவாள மாமுனிகளுக்கும் காட்டிக் கொடுத்து ஆழ்வார் திருநகரியில் அவர் அமைத்த பவிஷ்யதாசார்யருக்கு எப்பொழுதும் அவருக்குக் கைங்கர்யம் சிறப்புற நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  மணவாள மாமுனிகளும் ஆசார்யர் வாக்கை சிரமேற்கொண்டார் என்பதை நாம் அறிவோம்.  மணவாள மாமுனிகள் யதிராஜ விம்ஶதி என்ற எம்பெருமானார் மீதான இருபது ஶ்லோகங்களை பவிஷ்யதாசார்யர் சந்நிதியில் தான் சமர்ப்பித்தார்.    அத்தகைய சிறப்புப் பெற்ற திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு வாழ்க.

துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே – இவ்வுலகில் உள்ள அனைவரும் உஜ்ஜீவிக்க ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச் செய்த பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யரின் திருவடி நிலைகளைப் போன்று விளங்கும் திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு வாழ்க.

தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே – குருகாபுரி என்பது ஆதிநாதன் எம்பெருமான் இருக்கும் ஆழ்வார் திருநகரி ஆகும்.  தொன்மையான திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியை புணர் நிர்மாணம் செய்த திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு வாழ வேண்டும்.

தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே – தெய்வீகமான கொந்தகை என்று தற்போது வழங்கப்படும் குந்தீ நகரம் சிறப்புறுமாறு அவ்வூரில் அவதரித்த திருவாய்மொழிப் பிள்ளை வாழ்க.

திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே – திருவாய்மொழிப் பிள்ளையுடை ஈடு இணையற்ற திருவடிகள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளை வாழி திருநாமம் முடிவுறுகிறது.

மணவாள மாமுனிகள் வைபவம்

ரம்யஜாமாத்ரு முனி, வரவர முநி என்று கொண்டாடப்படக் கூடியவர் மணவாள மாமுனிகள்.  ஆழ்வார் திருநகரியில் ஐப்பசி திருமூல நக்ஷத்ரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஸ்ரீரங்கநாதரின் உற்சவ மூர்த்தியின் பெயரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பதாகும்.  இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்தில் சிறு வயதில் வாழ்ந்திருந்தார்.  தனது தகப்பனாரிடம் அடிப்படை சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டார்.  திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமையைக் கேள்விப்பட்டு மீண்டும் ஆழ்வார் திருநகரி வந்தார்.   திருவாய்மொழிப் பிள்ளையிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு அவரை ஆசார்யராக ஆச்ரயித்தார்.  திருவாய்மொழிப் பிள்ளை சம்பிரதாயத்தின் அர்த்தங்கள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், வ்யாக்யானங்கள், முக்கியமாக நம்பிள்ளையின் திருவாய்மொழியின் முப்பத்தாறாயிரப்படி ஈடு (வடக்குத் திருவீதிப்பிள்ளை ஏடு படுத்தியது) வ்யாக்யானத்தை உபதேசித்தார்.

இவர் ஆதிசேஷனின் புனர் அவதாரம் என்று கருதப்படுகிறார்.  எம்பெருமானார் தமிழ் ப்ரபந்தங்களுக்கு விளக்கங்களோ,  வ்யாக்யானங்களோ அருளிச் செய்யவில்லை.  அந்தக் குறை தீரும்படி மணவாள மாமுனிகளாக மறு அவதாரம் எடுத்து தமிழ் ப்ரபந்தங்களில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு ஆழ்வார்களின் ப்ரபந்தங்களுக்குக் கைங்கர்யங்கள் செய்தார்.  திருவாய்மொழியின் முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானம் பரவச் செய்தார்.  திருவாய்மொழிப்பிள்ளை காலம் வரையில் ஆழ்வார் திருநகரியிலேயே வசித்தார்.  ஸ்ரீ வசன பூஷணத்தில் கூறப்பட்ட ஆசார்ய பக்திக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்.  ஆசார்ய பக்தியைப் பிரதிபலிக்கும் வகையில் மணவாள மாமுனிகளே உபதேச ரத்தின மாலையில்

தன் ஆரியனுக்குத்* தான் அடிமை செய்வது* அவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள்* – அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி* ஆசாரியனைப்
பிரிந்திருப்பார் ஆர்?* மனமே! பேசு

என்று அருளிச் செய்தார்.  உபதேச ரத்தின மாலையில் பூர்வாசார்யர்கள் அருளிய  அனைத்து விஷயங்களையும் எடுத்துக் கூறி அதன்படி வாழ்ந்தும் காட்டினார் எனலாம்.

திருவாய்மொழிப் பிள்ளை காலத்திற்குப் பின் திருவரங்கம் வந்தடைந்து, ஆழ்வார்கள் / ஆசார்யர்கள் அருளிச் செயல்கள், க்ரந்தங்கள் ஆகியவற்றை தேடிச் சேகரித்து ஏடுபடுத்தி பாதுகாத்தவர்.  பெரியாழ்வார் திருமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளை அருளிய வ்யாக்யானம் கறையானால் அரிக்கப்பட்டு சேதமாகி விட்டபடியால்,   எந்த வரி வரையில் பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் விடுபட்டதோ அது வரையில் மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.   மேலும் ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு, முக்கியமாக பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த முமுக்ஷூப்படி, ஸ்ரீவசன பூஷணம், தத்வத்ரயம் ஆகியவற்றிற்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.  பிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்த ஆசார்ய ஹ்ருதயம் என்ற க்ரந்தத்திற்கும் விரிவான வ்யாக்யானத்தை மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார்.   மணவாள மாமுனிகளுடைய உபதேசங்களும், வ்யாக்யானங்களும் இல்லையென்றால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களும், பூர்வாசார்யர்களின் ரஹஸ்ய க்ரந்தங்களும் இக்காலத்தவர் அறிய முடியாமலேயே போயிருக்கும்.

சில காலத்தில் சந்யாச ஆஸ்ரமம் மேற்கொண்டு திருவரங்க எம்பெருமானின் ஆணைப்படி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராகவே திருநாமம் கொண்டிருந்தார்.  எம்பெருமான் பிற்காலத்தில் நாம் இவரிடம் காலக்ஷேபம் கேட்கும் சிஷ்யனாக ஆகப் போகிறோம் என்பதை அறிந்தமையால் சிஷ்யனான தனக்கும் தன் ஆசார்யர் மணவாள மாமுனிகளின் திருநாமமே நிலைத்திருக்கும் என்று எண்ணி அவ்வாறு ஆணையிட்டான் போலும்.  எம்பெருமான் திருவுள்ளப்படி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார்.  மணவாள மாமுனிகளின் பெருமையைக் கேள்விப்பட்டு பலரும் வந்து இவரை ஆசார்யராக ஆஸ்ரயித்தனர்.

ஒருமுறை நம்பெருமாள் பவித்ரோத்ஸவம் பூர்த்தியான பின், மணவாள மாமுனிகளை திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தை காலக்ஷேபமாக சாதிக்கச் சொல்லி எம்பெருமான் தனது பரிவாரங்களுடன் ஒரு வருட காலம் தனது உற்சவங்களை நிறுத்தி மிக விரிவாக மணவாள மாமுனிகளின் திருவாய்மொழியின் காலக்ஷேபத்தை அனுபவித்தான்.  காலக்ஷேபத்தின் முடிவில் (ஆனி மாதம் திருமூல நக்ஷத்ரத்தன்று) சிறுபிள்ளை வடிவில் வந்து மணவாள மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனைச் சமர்ப்பித்து தன்னுடைய ஆதிசேஷ பர்யங்கத்தை மணவாள மாமுனிகளுக்கு சம்பாவனையாக சமர்ப்பித்து அவரை மிகவும் கொண்டாடினான்.  மேலும் அர்ச்சகர் மூலமாக எம்பெருமான் ஆவேசித்து மணவாள மாமுனிகளின் திருவிக்ரஹம் அனைத்து திவ்யதேசங்களிலும் ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்றும்,  “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனை சேவாகாலம் தொடக்கத்திலும், முடிவிலும் சேவிக்க வேண்டும் என்று ஸ்ரீமுகம் அருளினான்.  எம்பெருமானே ஆசார்யனாகக் கொண்டாடும் சிறப்புப் பெற்றவர் மணவாள மாமுனிகள்

மணவாள மாமுனிகள் வாழி திருநாமம்

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

மணவாள மாமுனிகள் வாழி திருநாமம் விளக்கவுரை

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே – இந்தப் பூமியில் ஸ்ரீரங்கநாதருக்கு திருவாய்மொழி ஈடு வ்யாக்யானத்தை உபதேசித்த மணவாள மாமுனிகள் வாழ்க.

எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே – தமது ஆசார்யரான அழகு பொருந்திய திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடி நிலையாக இருக்கக் கூடிய மணவாள மாமுனிகள் பல்லாண்டு வாழ வேண்டும்.

ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே – ஐப்பசி மாதம் திருமூல நக்ஷத்ரத்தில் அவதரித்த மணவாள மாமுனிகள் பல்லாண்டு வாழ்க.

அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே – அரவு என்றால் சர்ப்பம். சர்ப்பங்களுக்கு அரசனான பெரிய சோதியை உடைய ஆதிசேஷன்.  அனந்தன் என்றால் எல்லையில்லாதவன் என்பதாகும்.  எல்லையில்லாத எம்பெருமானை தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமை படைத்தவர் ஆதிசேஷன்.   அந்த ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் மணவாள மாமுனிகள் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே – அனைத்து உலகங்களிலும் ஸ்ரீசைலேசர் எனப்படும் தமது ஆசார்யனாகிய திருவாய்மொழிப் பிள்ளையின் புகழை பரவச் செய்ய வழி வகுத்த மணவாள மாமுனிகள் வாழ்க.   வேறு ஒரு அர்த்தமும் இவ்விடம் காட்டப்படுகிறது.  ஒருமுறை மணவாள மாமுனிகள் திருமலைக்கு (ஸ்ரீசைலம்) யாத்திரையாக சென்றார்.  திருமலை எம்பெருமானுக்கு சுப்ரபாதம் செய்வதற்கு ஒரு ஶ்தோத்ரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.  ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி என்பவர் வெகு காலம் திருமலையில் வாழ்ந்தவர்.  சிறந்த வேதாந்தி.  வாதத்தில் பலரையும் வென்றவர்.  மணவாள மாமுனிகளின் பெருமையைக் கேள்விப்பட்டு அவரது சிஷ்யராக ஆனார்.  மணவாள மாமுனிகள் திருமலையப்பனுக்கு சுப்ரபாதம் ஏற்படுத்தும் தமது எண்ணத்தை ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமிகளிடம் தெரிவித்தார். அவரும் ஆசார்யரின் ஆணையை சிரமேற்கொண்டு இன்றளவும் நாம் அநுஸந்திக்கும் வேங்கடேச சுப்ரபாதத்தை அருளிச் செய்தார்.  இவ்வாறு தன் சிஷ்யர் மூலமாக ஸ்ரீசைலமாகிய திருமலை வேங்கடேசப் பெருமாளுக்கு சுப்ரபாதம் அருளி அனைத்து உலகும் திருமலையின் ஏற்றமடையச் செய்த மணவாள மாமுனிகள் பல்லாண்டு வாழ்க.

ஏராரும் எதிராசர் எனவுதித்தான் வாழியே – சிறந்த பெருமையைக் கொண்ட எம்பெருமானாரின் (எதிராசர்) மறு அவதாரமாகக் கருதப்பட்ட மணவாள மாமுனிகள் வாழ்க.  இவர் எம்பெருமானாரின் புனர் அவதாரமாக இருந்த போதும் ஆழ்வார் திருநகரியில் பவிஷ்யதாசார்யார் (எம்பெருமானார்) சந்நிதியில் திருவாராதனம் செய்துள்ளார் என்பதையும் நாம் அறிந்தோம்.  “தனக்குத் தானே ஒருவர் திருவராதனம் செய்து கொள்ள முடியுமா?” என்றால், சத்ய லோகத்திலிருந்து பூமிக்கு வந்த ஸ்ரீரங்க நாதரை இக்ஷ்வாகு குலத்தில் உதித்த ஸ்ரீராம பிரான் திருவாராதனம் செய்தார் என்பதை அறிவோம்.  தனது பட்டாபிஷேகத்தின் போது ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு ப்ரணவாகார விமானத்துடன் தான் ஆராதித்து வந்த ஸ்ரீரங்கநாதரை பெருமாள் பரிசாக அளித்தார்.  ஸ்ரீவிபீஷணாழ்வான் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இளைப்பாறும்போது எம்பெருமானைக் கீழே எழுந்தருளப்பண்ண, காவிரியால் சூழப்பட்ட திருவரங்கம் பெரியபெருமாளுக்குப் பிடித்துப் போக அங்கேயே தங்கி விட்டார் என்று சரித்திரம்.  எவ்வாறு எம்பெருமானின் அவதாரமான ராமபிரான் பெரியபெருமாளுக்குத் திருவாராதனம் செய்தாரோ அதே போன்று ஒரு ஆசார்யருக்கு எவ்வாறு திருவாராதனம் செய்வது என்பதை ராமானுஜரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகள் செய்து காட்டினார்.

ராமானுஜரிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் மணவாள மாமுனிகள்.  யதீந்த்ர ப்ரவணர் என்றே அழைக்கப்பட்டார்.   க்ருஷ்ண பக்திக்கு உதாரணமாக நம்மாழ்வாரைக் காட்டுவது போல் ராமானுஜ பக்திக்கு மணவாள மாமுனிகள் உதாரணமாகத் திகழ்ந்தார்.  இவர் ராமானுஜர் மீது முதலில் அருளிச் செய்தது யதிராஶ விம்ஶதி கடைசியில் அருளிச் செய்த ப்ரபந்தம் ஆர்த்தி ப்ரபந்தம்.    தொடக்கம் முதல் இறுதி வரை மணவாள மாமுனிகள் எம்பெருமானாரின் ஆசார்ய நிஷ்டை மாறாமல் இருந்தது என்பதை இதன் மூலம் அறியலாம். அவ்வாறு எதிராசரின் மறு அவதாரமாக வந்த மணவாள மாமுனிகள் வாழ்க.

முப்புரிநூல் மணிவடமும் முக்கோல் தரித்தான் வாழியே-  யக்ஞோபவீதம் எனப்படும் பூணூலும், துளசி மாலை மணிமாலைகளும் அணிந்திருக்கிறார் மணவாள மாமுனிகள்.  மூன்று தண்டுகள் கொண்ட சந்யாசிகள் வைத்திருக்கக் கூடிய த்ரிதண்டத்தையும் கையில் ஏந்தும் மணவாள மாமுனிகள் பல்லாண்டு வாழ்க.

மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே – மிகுந்த பழைமையான, கிடைத்தற்கரிய செல்வம் போன்று ஓராண் வழி ஆசார்யர்களில் வந்து உதித்த மணவாள மாமுனிவன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று மணவாள மாமுனிகளின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
அப்பிள்ளை திருவடிகளே சரணம்

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment