திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 91 – 100

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 81 – 90

தொண்ணூற்றொன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானால் நாள் குறிக்கப்பட்டு, எம்பெர்ருமானுடன் சேர்ந்து பரமபதத்துக்குச் செல்லத் தொடங்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

தாள் அடைந்தோர் தங்கட்குத் தானே வழித் துணையாம்
காளமேகத்தை கதியாக்கி – மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகில் ஏக எண்ணும் மாறன் என
கேதம் உள்ளதெல்லாம் கெடும்

தன் திருவடிகளில் சரணடைந்தவர்களுக்கு எம்பெருமான் தானே இறுதிப் பயணத்தில் துணையாக இருக்கிறான். ஆழ்வார் அந்தக் காளமேகம் எம்பெருமானையே வழித்துணையாகக் கொண்டு, திரும்பி வரும் குற்றம் இல்லாத பரமபதத்தைச் சென்றடைய எண்ணினார். இப்படிப்பட்ட ஆழ்வாரை நினைக்கவே எவையெல்லாம் துயரங்கள் என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் நசிக்கும்.

தொண்ணூற்றிரண்டாம் பாசுரம். மாமுனிகள், பரமபதத்தில் செய்யும் கைங்கர்யத்தைத் திருவனந்தபுரத்தில் செய்ய ஆசைப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கெடும் இடர் வைகுந்தத்தைக் கிட்டினாற்போல்
தடமுடை அனந்தபுரம் தன்னில் – பட அரவில்
கண்துயில் மாற்கு ஆட்செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண்தனில் உள்ளோர் வியப்பவே

சிறந்த பரமபதத்தில் இருக்கும் நித்யஸூரிகள் வியக்கும்படி ஆழ்வார் பணங்களுடன் கூடிய ஆதிசேஷனில் சயனித்துக்கொண்டிருக்கும் எம்பெருமானுக்கு, பரந்த திருவனந்தபுரத்தில், துக்கமே இல்லாத பரமபதத்தை அடைந்து செய்யும் கைங்கர்யத்தைச் செய்ய ஆசைப்பட்டார்.

தொண்ணூற்றுமூன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை ஏன் தன் விருப்பத்து மாறாக ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறான் என்ற ஸந்தேஹத்தை ஸர்வேச்வரன் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வேய்மரு தோளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தைத்
தான் மருவாத் தன்மையினால் தன்னை இன்னும் – பூமியிலே
வைக்குமெனச் சங்கித்து மால் தெளிவிக்கத் தெளிந்த
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு

ஸ்ரீமந் நாராயணன் வசிக்கும் திவ்ய லோகத்தை அடையாமல், பலம் வாய்ந்த மூங்கிலைப் போன்ற தோளை உடைய ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வன், ஆழ்வாருக்கு ஏற்பட்ட தேவையில்லாத ஸந்தேஹமான “எம்பெருமான் இன்னும் என்னை ஸம்ஸாரத்தில் வைத்திருக்கிறானே” என்பதைப் போக்கினான். இப்படித் தகுந்த புகழை உடைய ஆழ்வாரே நமக்குப் புகல்.

தொண்ணூற்றுநான்காம் பாசுரம். மாமுனிகள், முன்பு உபதேசித்த பக்தி யோகம் தன் பலத்துடன் சேர்வதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சார்வாகவே அடியில் தான் உரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை – சோராமல்
கண்டுரைத்த மாறன் கழலிணையே நாள் தோறும்
கண்டுகக்கும் என்னுடைய கண்

எல்லோராலும் கைக்கொள்ள வேண்டிய, திருவாய்மொழி 1.2 “வீடுமின்” பதிகத்தில் ஆழ்வார் முன்பு அருளிச்செய்த பக்தியைப் பற்றித் தெரிந்து கொண்டு, அது ப்ரபத்தியான சிறந்த பலத்துடன் சேர்வதை ஒன்று விடாமல் அருளிச்செய்தார். ஒவ்வொரு நாளும், என்னுடைய கண்கள் இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே ஆனந்தத்துடன் காணும்.

தொண்ணூற்றைந்தாம் பாசுரம். மாமுனிகள், அடியார்கள் எம்பெருமானுடன் செய்யும் பரிமாற்றங்களைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கண்ணன் அடியிணையில் காதலுறுவார் செயலை
திண்ணமுறவே சுருங்கச் செப்பியே – மண்ணவர்க்குத்
தான் உபதேசிக்கைத் தலைக் கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள்

பெருமை படைத்த ஆழ்வார், தன்னுடைய கருணையால் அடியார்கள் எம்பெருமானின் திருவடிகளை நோக்கிச் செய்யும் செயல்களைச் சுருக்கமாக அருளிச்செய்து, அது இவ்வுலகில் உள்ள ஆத்மாக்களின் நெஞ்சில் நிலைபெற்றிருக்கும்படிச் செய்து, தான் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதை முடித்தருளினார்.

தொண்ணூற்றாறாம் பாசுரம். மாமுனிகள், தன் (ஆழ்வாரின்) ஆணைக்கிணங்கத் தன்னைப் பரமபதத்துக்கு அழைத்துச் செல்ல விரையும் எம்பெருமானைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அருளால் அடியில் எடுத்த மாலன்பால்
இருளார்ந்த தம்முடம்பை இச்சித்து – இருவிசும்பில்
இத்துடன் கொண்டேக இவர் இசைவு பார்த்தே இருந்த
சுத்தி சொல்லும் மாறன் செஞ்சொல்

முதலிலே தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே ஸர்வேச்வரன் ஆழ்வாரை ஸம்ஸாரத்திலிருந்து எடுத்தருளினான்; ஆழ்வாருடைய பரிசுத்தமான ஸ்ரீஸூக்திகள் அவருடைய அஜ்ஞானத்தால் நிறைந்த இந்தச் சரீரத்துடன் அழைத்துப் போக அவரின் அனுமதியை நோக்கிக் காத்திருக்கும் இப்படிப்பட்ட ஸர்வேச்வரனின் சுத்தியை வெளியிடும்.

தொண்ணூற்றேழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன் சரீரத்தில் ஆசைகொண்டதையும் “என்னை விரோதியான இந்தச் சரீரத்தில் இருந்து விடுவிக்கவும்” என்று இதில் ஆசையை விடும்படிச் செய்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

செஞ்சொற்பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சைதனின் – விஞ்சுதலைக்
கண்டவனைக் கால்கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
திண்திறல் மாறன் நம் திரு

வேதத்தின் குறிக்கோளான, நேர்மையான பேச்சுக்களை உடைய பரமபுருஷன் ஞானம் முதலிய குணங்களால் நிறைந்த ஆழ்வாரின் திருமேனியின் மேல் மிகுதியான, கள்ளத்தனமான ஆசை கொண்டிருந்தான். இதைக் கண்ட, திடமான பலம் பொருந்திய ஆழ்வார், எம்பெருமானின் திருவடிகளைப் பிடித்து, தன் சரீரத்தை விடுவித்துக்கொண்டார். இப்படிப்பட்ட ஆழ்வாரே நம் செல்வம்.

தொண்ணூற்றெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை “அநாதிகாலமாக என்னைக் கைவிட்ட நீ, இப்பொழுது என்னைக் கைக்கொண்ட காரணம் என்?” என்று கேட்க அதற்கு எம்பெருமான் பதிலற்று இருப்பதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அருமாயத்து அன்று அகல்விப்பானென்? – பெருமால் நீ
இன்றென்பால் செய்வான் என்னென்ன இடருற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து

ஸ்ரீமந் நாராயணன் தன் விஷயத்தில் கொண்டிருக்கும் சிறந்த ஈடுபாட்டைக் கண்ட, மிகப் பெருமை வாய்ந்த ஆழ்வார் எம்பெருமானை “எம்பெருமானே! அநாதி காலமாக என்னை ஏன் ஸம்ஸாரத்தில் வைத்து உன்னிடமிருந்து தள்ளி வைத்திருந்தாய்? இப்பொழுது என்னிடம் இவ்வளவு அன்பு காட்டுவது ஏன்?” என்று கேட்க, இதற்குப் பதில் இல்லாத எம்பெருமான் வருத்தத்துடன் பவ்யமாக இருந்தான்.

தொண்ணூற்றொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அர்ச்சிராதி மார்க்கத்தில் தனக்குக் கிடைத்த வரவேற்பை எம்பெருமான் காட்டிக் கொடுக்க, அதை அனுபவித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

சூழ்ந்து நின்ற மால் விசும்பில் தொல்லை வழி காட்ட
ஆழ்ந்து அதனை முற்றும் அனுபவித்து – வாழ்ந்து அங்கு
அடியருடனே இருந்தவாற்றை உரை செய்தான்
முடி மகிழ் சேர் ஞான முனி

எம்பெருமான் ஆழ்வாரைச் சூழ்ந்து நின்று, பரமபதத்தை அடைவிக்கும் பழையதான அர்ச்சிராதி மார்க்கத்தைக் காட்டிக் கொடுக்க, திருமுடியில் வகுள மாலையைச் சூடியிருக்கும் ஞான முனியான ஆழ்வார், அங்கே ஆனந்த ஸாகரத்தில் மூழ்கியிருந்ததை முழுவதும் அனுபவித்து, அங்கே ஆனந்தமாக ஒரு பாரமும் இல்லாமல் கருடர் விஷ்வக்ஸேனர் முதலிய அடியார்களுடன் வாழ்ந்ததை அருளிச்செய்தார்.

நூறாம் பாசுரம். மாமுனிகள், பரமபக்தியால் உயர்ந்த குறிக்கோளை அடைந்ததைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

முனி மாறன் முன்பு உரை செய் முற்றின்பம் நீங்கி
தனியாகி நின்று தளர்ந்து – நனியாம்
பரம பத்தியால் நைந்து பங்கயத் தாள் கோனை
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து

முனிவரான ஆழ்வார், முன்பு கண்ட ஆனந்தங்களிலிருந்து விடுபட்டு, வருத்தத்துடன் தனியாக இருந்தார். நன்கு வளர்ந்த பரமபக்தியால் பரிபக்குவத்தை அடைந்து, ச்ரிய:பதியுடன் தன் திருவுள்ளத்தில் ஒன்றுபட்டு, நித்யஸூரிகளின் பெருமையை அதனால் அடைந்து, பிராட்டியும் எம்பெருமானும் ஆன சேர்த்தியை நேரில் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யப் பெற்றார்.

ஆதாரம் – https://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-91-100-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment