திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 10.9 – சூழ்விசும்பு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 10.8

பரமபதத்துக்கு விரைந்து செல்லவேண்டும் என்ற எண்ணம் ஆழ்வாருக்கு ஏற்பட, எம்பெருமானுக்கும் இவரைப் பரமபதத்துக்கு அழைத்து போகும் ஆசை மிகவும் அதிகமாக, அதற்கு முன் ஆழ்வாருக்குப் பரமபதத்தை அடைவதில் ஆசையை மேலும் அதிகமாக்க வேண்டும் என்று எண்ணி வேதாந்தத்தில் சொல்லப்பட்ட அர்ச்சிராதி கதியைக் காட்டிக்கொடுத்தான். ஆழ்வார் அதை அனுபவித்து அந்த அர்ச்சிராதி மார்க்கத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் எல்லோரும் போகும்படியையும் பரமபதத்தை அடைந்து அங்கே நித்யஸூரிகளுடன் இருப்பதையும் இந்தப் பதிகத்தில் வெளியிடுகிறார், தான் பெற்ற பேறு எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும் கிடைக்கும் என்று அவர்கள் விச்வஸிப்பதற்காக.

முதல் பாசுரம். அர்சிராதி மார்க்கத்தில் செல்வதற்கு முற்பட்டவர்களாய் பூர்ணமாக இனிமையான ஸர்வேச்வரனின் அடியார்களான பாகவதர்களைக் கண்டு, அசையும் மற்றும் அசையாப் பொருள்களையுடைய இந்த ஜகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அருளிச்செய்கிறார்.

சூழ் விசும்பணி முகில் தூரியம் முழக்கின
ஆழ் கடல் அலை திரை கையெடுத்தாடின
ஏழ் பொழிலும் வளமேந்திய என்னப்பன்
வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டுகந்தே

எனக்கு தனித்துவம் வாய்ந்த பந்துவாய் ஆனந்தத்தை அளிக்கும் குணங்களை உடைய நாராயணனுக்கு தனித்துவம் வாய்ந்த பந்துக்களான அடியார்களைக் கண்டு மகிழ்ந்து எல்லா இடத்திலும் சூழ்ந்த ஆகாசத்திலே திரண்டிருக்கும் மேகங்கள் தூர்ய கோஷத்தைப் பண்ணின. ஆழமான கடல்கள் அலைந்து வருகிற திரையை கையாக எடுத்து ஆடின. ஏழு தீவுகளும் பரிசு ரூபமான நல்ல வஸ்துக்களை ஏந்தின.

இரண்டாம் பாசுரம். இயற்கையான தலைவனான நாராயணனுக்கு அடியார்களானவர்களைக் கண்டு உலகத்தார் கௌரவித்த விதத்தை அருளிச்செய்கிறார்.

நாரணன் தமரைக் கண்டுகந்து நல்நீர்முகில்
பூரண பொற்குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே

இயற்கையான தலைவனான நாராயணனுக்கு அடியார்களைக் கண்டு உகப்பையுடைத்தாய் சுத்தமான ஜலத்தாலே பூர்ணமான மேகமானது உயர்ந்த ஆகாசத்திலே பூர்ணமான பொற்குடங்களாக நிறைந்தது. நிரைக் கொண்டிருக்கும் கடல்களானவை நின்று கோஷித்தன. நெடிய மலைகளாகிற தோரணங்களை அணிவகுத்து உலகிலுள்ளார் எல்லா இடத்திலும் தொழுதனர்.

மூன்றாம் பாசுரம். த்ரிவிக்ரமன் எம்பெருமானின் அடியார்கள் முன்னிலையில் ஆதிவாஹிக லோகத்திலுள்ளவர்கள் வந்து வரவேற்ற விதத்தை அருளிச்செய்கிறார்.

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர் பூமி அன்றளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இரு மருங்கிசைத்தனர் முனிவர்கள்
வழியிது வைகுந்தற்கு என்று வந்தெதிரே

மஹாபலி “என்னது” என்று அபிமானித்த அன்று பூமியை தனக்கே ஆக்கிக் கொள்ளும்படி அளந்தவனின் அடியார்களுடைய முன்னிலையில் தூபத்தை ஸமர்ப்பித்து, நல்ல புஷ்ப மழைகளை பொழிந்து, அவ்வோ உலகங்களில் உள்ளவர்களுடையவர்கள் அஞ்சலி செய்தவர்கள். அந்த உலகங்களில் உள்ள நாவடக்கம் உடைய முனிவர்கள் ஸ்ரீவைகுண்டத்துக்குப் போகுமவர்களுக்கு வழி இது என்று சொல்லி எதிரே வந்து “எழுந்தருளலாமே” என்று இரண்டு பக்கத்திலும் நின்றுகொண்டு ஆசையாகச் சொன்னார்கள்.

நான்காம் பாசுரம். பூர்த்தியான இனிமையை உடையவனான திருமாலின் அடியார்களைக் கண்டு தேவலோகத்திலுள்ளவர்கள் வரவேற்ற விதத்தை அருளிச்செய்கிறார்.

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கொத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே

மதுவை வெளியிடும் திருத்துழாயைத் திருமுடியிலே உடைய திருமாலின் அடியார்களுக்கு கண் இமைக்காதவர்களான தேவர்கள் இவர்கள் போகிறவழிக்கு முன்னே இருப்பிடங்களைச் செய்தார்கள். பன்னிரண்டு ஆதித்யர்களும் தம் தம் நிலையிலே கிரணங்களாகிற கைகளை நிரையாகக் கொடுத்தார்கள். அவர்கள் அடித்த முரசங்கள் அதிருகிற குரலானவை அலை கடலிலே ஓசையைப் போன்று இருந்தன.

ஐந்தாம் பாசுரம். வருணன் இந்த்ரன் ப்ரஜாபதிகளானவர்கள் திருமாலுக்கு அடியார்கள் என்று ஆதரித்த விதத்தை அருளிச்செய்கிறார்.

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே

வருணன் இந்த்ரன் ப்ரஜாபதிகளாகிற ஆதிவாஹிக தேவர்கள் தங்கள் இருப்பிடங்களின் வாசலில் வந்து நின்று திருமால் அடியார்கள் இவர்கள் என்று ஆதரித்து “இங்கே எழுந்தருளுங்கள், எங்கள் இருப்பிடங்களில் ப்ரவேசியுங்கள்” என்று பரிசுகளுடன் வரவேற்ற அளவிலே, வேதத்தைச் சொல்லுவதாகிற சிறப்பை உடையவர்கள் யாகம் முதலிய தர்மங்களை நமக்குக் கிடைத்ததே என்று ஆசையுடன் ஸமர்ப்பித்து கின்னரர்களும் கருடர்களும் கீதங்களைப் பாடினர்.

ஆறாம் பாசுரம். “எல்லாருக்கும் தலைவன் என்பதற்கு அடையாளமாகத் திருவாழியை உடையவனுக்கு அடியவரான நீங்கள் இந்த மேலுலகத்தை ஆளுங்கள்” என்று ஆதிவாஹிகர்களின் மஹிஷிகள் வாழ்த்தினவிதத்தை அருளிச்செய்கிறார்.

வேள்வியுள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே

வைதிகர்கள் எல்லா தர்மங்களையும் ஸமர்ப்பித்தவுடன் பரிமளத்தை வெளியிடும் ஸுகந்தமான தூபங்கள் எல்லாவிடமும் கலந்து, காளங்களையும், வலம்புரிச் சங்குகளையும் கொண்டு ஒலி எழுப்பினார்கள். இந்த அடியார்களைக் கண்ட ஆனந்தத்தால், ஒளி படைத்த கண்களையுடைய தேவஸ்த்ரீகள் திருவாழியையுடைய ஸர்வேச்வரனுக்கு அடியார்களான நீங்கள் இந்த ஸ்வர்க்கம் முதலான இடங்களை ஆளுங்கள் என்று ப்ரீதியுடன் வாழ்த்தினார்கள்.

ஏழாம் பாசுரம். திருப்பாற்கடலில் சயனித்திருப்பவனாய் எல்லாருக்கும் தலைவனாய் அர்ச்சாவதாரத்தில் எளிமையானாவனாய் இருப்பவனின் அடியார்களை மருத் கணங்களும் வஸு கணங்களும் பின்தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ணின விதத்தை அருளிச்செய்கிறார்.

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எங்கேசவன் கிளரொளி மணி முடி
குடந்தை எங்கோவலன் குடி அடியார்க்கே

ஆழமான கடலிலே சயனித்தருளி இருப்பவனாய், எனக்கும் ப்ரஹ்மா முதலியவர்களையும் படைத்தவனான கேசவனாய் கிளர்ந்த ஒளியுடையவனாய் மணிமயமான கிரீடத்தை அணிந்தவனாய் திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனான க்ருஷ்ணனுக்கு பரம்பரையாக அடியார்களானவர்களை தேவஸ்த்ரீகள் வாழ்த்தினவுடன் மருதர்களும் வஸுக்களும் எல்லாவிடமும் தொடர்ந்து சென்று ஸ்தோத்ரம் செய்தார்கள்.

எட்டாம் பாசுரம். அடியார்களுக்கு எளியவனான க்ருஷ்ணனின் அடியார்கள் என்கிற ஆசையால் பரமபதவாஸிகள் தங்கள் நாட்டெல்லையில் வந்து எதிர்கொள்ள, அடியார்கள் பரமதத்தைக் கிட்டினார்கள் என்று அருளிச்செய்கிறார்.

குடியடியார் இவர் கோவிந்தன் தனக்கென்று
முடியுடை வானவர் முறை முறை எதிர்கொள்ளக்
கொடியணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே

அடியார்களுக்காக அவதரித்த கோவிந்தனுக்கு என்றே இருக்கும் குலத்தையுடைய அடியார்கள் என்று ஈச்வரனைப் போலே கிரீடம் முதலியவைகளையுடைய நித்யஸூரிகள் தங்கள் நிலைக்கேற்ப இவர்களை வந்து எதிர்கொள்ள, அலங்கரிக்கப்பட்ட திருமேனியை உடையவனாய் பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் ஸர்வேச்வரனுடைய ஸ்ரீவைகுண்டத்திலே புகுவதற்கு கொடியாலே அலங்கரிக்கப்பட்ட பெரிய மதிள்களையுடைய கோபுரவாசலில் புகுந்தார்கள்.

ஒன்பதாம் பாசுரம். “ஸ்ரீவைகுண்டநாதனுடைய அடியார்கள் நமக்கு விரும்பத்தக்கவர்கள்” என்று, திருவாசல் காக்கும் முதலிகள் ஆசையுடன் இருந்த விதத்தை அருளிச்செய்கிறார்.

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

ஸ்ரீவைகுண்டத்தில் சென்று புகுந்தவுடன், திருவாசல் காக்கும் முதலிகள் “ஸ்ரீவைகுண்டநாதனின் விருப்பத்துக்கு ஆட்பட்டவர்கள் நமக்கும் விரும்பத்தக்கவர்கள். எங்கள் இருப்பிடத்தில் வரவேண்டும்” என்று உகந்தார்கள். அத்தேசத்திலே கைங்கர்யபரர்களான அமரர்களும் குணானுபவபரர்களான முனிவர்களும் “பூமியிலே தாழ்ந்த விஷயங்களில் மூழ்கியிருந்தவர்கள் பரமபதத்திலே புகுவது ஒரு பாக்யமே!” என்று உகந்தார்கள்.

பத்தாம் பாசுரம். ஸ்ரீவைகுண்டநாதனின் ஆணையின் பேரில் நித்யஸூரிகளும் திவ்யாப்ஸரஸ்ஸுக்களும் அடியார்களை ஆதரித்த விதத்தை அருளிச்செய்கிறார்.

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நற்சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே

“நம்முடைய பாக்யம் அடியாக ஈச்வரனின் ஆணையின் பேரில் இந்த அடியார்கள் வந்து புகுந்தார்கள்” என்று சிறந்தவர்களாக வேதாந்தத்தில் காட்டப்பட்ட நித்யஸூரிகள் தங்கள் இருப்பிடங்களில் உபசாரங்களுடன் அடியார்களுடைய திருவடிகளை விளக்கினார்கள். அடியார்களுக்கு மிகச் சிறந்த தனமான எம்பெருமானின் திருவடி நிலைகளையும் எம்பெருமான் திருமேனி ஸம்பந்தம் பெற்றதால் சிறந்ததான திருச்சூர்ணத்தையும் பூர்ண கும்பங்களையும் மங்களதீபங்களையும் பூர்ணசந்த்ரனைப் போன்ற முகத்தையும் மடப்பத்தையும் உடைய திவ்ய அப்ஸரஸ்ஸுக்கள் ஏந்திக்கொண்டு வந்தார்கள்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக பகவதனுபவத்தை அருளிச்செய்கிறார்.

வந்தவர் எதிர் கொள்ள மாமணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியரோடிருந்தமை
கொந்தலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே

பிராட்டியுடன் இருக்கும் எம்பெருமானே வந்து எதிர்கொள்ள, திருமாமணி மண்டபத்தில் எல்லை இல்லாத பெரிய ஆனந்தத்தையுடைய ஸூரிகளோடே கூடி இருந்த விதத்தை, பூங்கொத்து அலருகிற பொழிலையுடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்ததாய் பல விதமான சந்தஸ்ஸுக்களை உடைய ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்தையும் அனுஸந்திக்கவல்லார்கள் பகவத் குணங்களை அனுபவிக்கப் பெறுவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment