நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பன்னிரண்டாம் திருமொழி – மற்றிருந்தீர்கட்கு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< பதினொன்றாம் திருமொழி – தாமுகக்கும்

எம்பெருமானின் எல்லோரையும் ரக்ஷிப்பேன் என்று சொன்ன வாக்கை நம்பினாள். அது பலிக்கவில்லை. பெரியாழ்வார் ஸம்பந்தத்தை நம்பினாள். அதுவும் பலிக்கவில்லை. இதை எண்ணிப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தாள். எம்பெருமான் ஸ்வதந்த்ரன் ஆகையாலே பெரியாழ்வாராகிய ஆசார்யர் மூலம் எம்பெருமானைப் பெற முயன்றாள். அதுவும் கைகூடாததால் “எம்பெருமானோ ஸ்வதந்த்ரன், தன்னுடைய அடியார்களை ரக்ஷிக்காமல் விட்டால் அவனுக்கு அவப்பெயர் ஏற்படும், அவன் நம்மை ரக்ஷிப்பது என்று முடிவெடுத்துவிட்டால் வேறு யாரும் தடுக்க முடியாது, ஆகையால் அவன் ஸ்வாதந்த்ரியமே நமக்குப் பேறு கிடைப்பதற்கு வழியாக இருக்கும்” என்று எண்ணி மீண்டும் அவனிடமே செல்லப்பார்க்கிறாள். இப்படி உறுதியுடன் இருந்தும் அவன் வாராததால், என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். அளவு கடந்த ப்ரேமத்தாலே அவன் வருமளவுக்கு இவளுக்குப் பொறுமை இல்லை. தன் ஸ்வரூபத்துக்கு ஒவ்வாததாக இருந்தாலும் எப்படியாவது எம்பெருமானிடம் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணி, தன்னருகில் இருப்பவர்களைப் பார்த்து “எப்படியாவது என்னை எம்பெருமான் இருக்கும் வடமதுரை, த்வாரகை போன்ற இடங்களில் சேர்த்து விடுங்கோள்” என்று ப்ரார்த்திக்கிறாள்.

முதல் பாசுரம். “எம்பெருமான் வந்து கைக்கொள்ளும் வரை நாம் காத்திருக்கவேண்டும். இப்படிப் பதறக்கூடாது” என்று சொல்ல “என் நிலையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் பேச்சுக்கு இடமில்லை. உங்கள் வார்த்தையைக் கேட்பதற்கும் எனக்கு ப்ராப்தியில்லை”.

மற்றிருந்தீர்கட்கு அறியலாகா மாதவன் என்பதோர் அன்பு தன்னை
உற்றிருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி
மற்பொருந்தாமற்களம் அடைந்த மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்

என்னுடைய நிலைக்கு மாற்பட்டு இருக்கிற உங்களுக்கு அறிய முடியாததாய் மாதவன் விஷயமான அன்பை அடைந்திருக்கிற எனக்கு நீங்கள் கூறுவதெல்லாம் ஊமையும் செவிடனும் பேசிக்கொள்வதுபோல் வீணானது. இப்போது செய்யத்தக்கது, பெற்ற தாயான தேவகிப்பிராட்டியை விட்டு வேறொரு தாயாகிய யசோதையில் வீட்டிலே வளர்ந்தவனும் மல்யுத்தகளத்திலே மல்லர்கள் வருவதற்கு முன்பு தான் அங்கே முன்பே வந்திருப்பவனுமான கண்ணபிரானுடைய மதுராபுரியின் அருகிலே என்னைக் கொண்டுபோய் சேர்த்துவிடுங்கள்.

இரண்டாம் பாசுரம். “என்ன இருந்தாலும் இப்படி அவனிடம் தேடிப்போவது அவனுக்குக் கெட்ட பெயரை விளைக்கும்; அதை நீ செய்யலாமா? உன்னுடைய ஸ்த்ரீத்வத்தைப் பாதுகாக்க வேண்டாமா?” என்று கேட்க, அதற்கு பதிலளிக்கிறாள்.

நாணி இனியோர் கருமம் இல்லை நாலயலாரும் அறிந்தொழிந்தார்
பாணியாது என்னை மருந்து செய்து பண்டு பண்டாக்க உறுதிராகில்
மாணி உருவாய் உலகளந்த மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்

இனிமேல் வெட்கப்பட்டு ஒரு பயனுமில்லை. ஊரிலுள்ளவர்கள் என் விஷயத்தை அறிந்துகொண்டார்கள். காலம் தாழ்த்தாமல், வேண்டும் பரிஹாரங்களைச் செய்து, இப்போது பிரிந்து துன்புறும் நிலைக்கு முன்பிருந்த எம்பெருமானுடன் கூடியிருந்த நிலைக்கும் முன்பிருந்த அறிவற்ற நிலையில் என்னை ஆக்க நினைத்தீர்கள் என்றால், நீங்கள் என்னை ஸத்யமாகக் காப்பாற்ற விரும்புகிறீர்களாகில் என்னை திருவாய்ப்பாடியிலே கொண்டு சேர்த்து விடுங்கள். அங்கே வாமனரூபியாய்ச் சென்று உலகங்களை எல்லாம் அளந்து கொண்ட பெருமானை ஸேவிக்கப்பெற்றால் இந்த நோய் தீரும்.

மூன்றாம் பாசுரம். கண்ணனை ஒழுங்காக வளர்க்காததற்கு யசோதைப் பிராட்டியைச் சொல்லிக் குற்றமில்லை. தகப்பனாய் கண்ணனை அடக்கிவைத்திருக்கவேண்டிய ஸ்ரீநந்தகோபன் திருமாளிகை வாசலிலே என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள் என்கிறாள்.

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்
கொந்தளமாக்கிப் பரக்கழித்துக் குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்

“தகப்பனும் தாயும் உறவினர்களும் இருக்கும்போது தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள்” என்கிற வார்த்தையானது உலகில் பரவின பிறகு அப்பழியைத் தடுக்கமுடியாது. நான் அப்படித் தனியாகப் போகாமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில், ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய கண்ணன் எதிரே வந்து தன் வடிவைக்காட்டி என்னை இழுக்கின்றான். பெண்களிடம் சண்டைசெய்து பழி விளைத்து, குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான ஸ்ரீநந்தகோபருடைய திருமாளிகை வாசலிலே நடுநிசியிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.

நான்காம் பாசுரம். எம்பெருமானுக்கே முழுவதுமாக அடிமைப்பட்டவளான என்னை யமுனை நதிக்கரையில் கொண்டுவிடுங்கள் என்கிறாள்.

அங்கைத்தலத்திடை ஆழி கொண்டான் அவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை ஆர்த்துச் சிறுமானிடவரைக் காணில் நாணும் கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்

தாய்மார்களே! அழகிய கைத்தலத்திலே திருவாழியை ஏந்தியிருப்பவனான கண்ணனுடைய முகத்தில் தவிர வேறொருவருடைய முகத்தில் விழிக்கமாட்டேனென்று நல்ல சிவந்த வஸ்த்ரத்தாலே முலைக்கண்களை மூடிக்கொண்டு தாழ்ந்தவர்களைக் கண்டால் வெட்கப்படும் இம்முலைகளை நீங்கள் உற்றுப்பாருங்கள். இவை கோவிந்தனைத் தவிர மற்றொருவர் வீட்டு வாசலைப் பார்க்காது. ஆகையால், நான் இவ்விடத்தில் வாழ்வதைவிட்டு, என்னை யமுனை நதிக்கரையிலே சென்று சேர்த்துவிடுங்கள்.

ஐந்தாம் பாசுரம். அங்கிருந்தவர்கள் இவளுக்கு உள்ள நோயை அறிந்து சரியான பரிஹாரம் செய்ய வேண்டும் என்று துக்கப்படத் தொடங்கினார்கள். இவள், நீங்கள் உறவினார்களாக இருக்கும் காரணத்தினால் மட்டும் என் நோயை அறிய முடியாது என்கிறாள்.

ஆர்க்கும் என் நோய் இது அறியல் ஆகாது அம்மனைமீர்! துழதிப்படாதே
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் கைகண்ட யோகம் தடவத் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்

தாய்மார்களே! என்னுடைய இந்த நோய் எப்படிப்பட்டவர்களுக்கும் அறிய முடியாதது. நீங்களும் துக்கப்படாமல் காளிங்கன் வசித்த மடுவின் கரையில் இருந்த கடம்ப மரத்தின் மேலேறி காளிங்கனின் தலையின் மேல் ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து அந்தப் பொய்கைக்கரையே ஒரு போர்க்களம் ஆகும்படியாக நர்த்தனம் செய்யப்பெற்ற பொய்கையின் கரையிலே என்னைக் கொண்டுபோய்ப் போடுங்கள். கறுத்த கடல் போன்ற நிறத்தை உடையவனான கண்ணன் தனது திருக்கைகளால் என்னைத் தடவினால் இந்த நோய் தீர்ந்துவிடும். இது கைமேல் பலிக்கக்கூடிய வழி.

ஆறாம் பாசுரம். கண்ணன் ரிஷிபத்னிகளிடத்தில் உணவு உண்ட இடத்திலே என்னைக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப் பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனத்து உய்த்திடுமின்

மழைக்காலத்திலுண்டான குளிர்ந்த மேகமும் கருவிளைப்பூவும் காயாம்பூவும் தாமரைப்பூவுமாகிற இவைகள் எதிரே வந்து நின்று “நீயும் ஹ்ருஷீகேசனிடத்தில் போ” என்று என்னை நிர்ப்பந்தம் செய்கின்றன. அதனால், கண்ணன் பசு மேய்ப்பதால் வேர்வைபொங்கி, பசியினால் வருந்தி, வயிறு தளர்ந்து “வேண்டிய அளவுக்கு ப்ரஸாதம் உண்ணும் காலம் இது” என்று ரிஷி பத்னிகளின் வரவை எதிர்பார்த்திருந்து நெடுங்காலம் கடாக்ஷித்துக்கொண்டிருக்குமிடமான பக்தவிலோசனம் என்ற ஸ்தானத்திலே என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்.

ஏழாம் பாசுரம். உன்னுடைய இந்தத் துன்பம் எப்போது தீரும் என்று கேட்க அவனுடைய திருத்துழாய் மாலையைச் சூட்டினால் மட்டுமே போகுமாகையாலே அவன் வெற்றிமாலை சூட்டி இருக்கும் இடத்தில் என்னைக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.

வண்ணம் திரிவும் மனங்குழைவும் மானம் இலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல் உறாமையும் உள் மெலிவும் ஓதநீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந்துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்

என்னுடைய மேனி நிறத்தின் மாறுபாடும் மனத்தளர்ச்சியும் மானமில்லாத நிலையும் வாய் வெளுத்திருக்கும் நிலையும் உணவு வேண்டியிராமையும் அறிவு சுருங்கிப்போயிருப்பதுமான இவை எல்லாம் எப்போது தணியும் என்றால் கடல்வண்ணன் என்று ப்ரஸித்தனான ஒப்பற்றவனான கண்ணனுடைய குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையைச் சூட்டுமளவில் நீங்கும். அதை உங்களால் இங்கே கொண்டு வர முடியாததால், நம்பிமூத்தபிரானான பலராமன் ப்ரலம்பாஸுரனை எலும்பு முறியும்படி  கொன்று முடித்த இடமாகிய பாண்டீரம் என்னும் ஆலமரத்தினருகில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.

எட்டாம் பாசுரம். அவன் பசுக்களை ரக்ஷித்த கோவர்த்தனத்துக்கு அருகில் என்னைக் கொண்டு சேருங்கள் என்கிறாள்.

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக் கொலோ?
கற்றன பேசி வசவுணாதே காலிகள் உய்ய மழை தடுத்து
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின்

கண்ணன் கன்றுகளின் கூட்டங்களை மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றான். வீட்டை விட்டுச் சென்று காட்டிலேயே தங்கி வாழும்படியான இடைச்சாதியிலும் பிறக்கப் பெற்றான். வெண்ணெய் களவில் பிடிபட்டு உரலிலே கட்டுப்படவும் பெற்றான். இப்படி எம்பெருமானின் குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே! உங்களுக்கு இவை என்னிடம் வசவு வாங்கக் காரணமாயிற்றே! நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி என்னிடத்தில் வசவு கேட்டுக் கொள்ளாமால் பசுக்கள் பிழைக்கும்படிக் கல்மழையைத் தடுத்து வெற்றிக்குடையாக எம்பெருமானால் தரிக்கப்பட்ட கோவர்த்தன மலையினருகில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.

ஒன்பதாம் பாசுரம். உங்களுக்குப் பழிவராமல் இருக்கவேண்டும் என்றால் என்னை த்வாரகைக்குக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.

கூட்டில் இருந்து கிளி எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில் உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள் நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்

நான் வளர்த்த கிளியானது கூட்டில் இருந்துகொண்டு எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்று கூவிக்கொண்டிருந்தது. அதற்கு உணவு கொடுக்காமல் தண்டனை கொடுத்தேனாகில் உலகளந்த பெருமானே! என்று கூவுகின்றது. இந்தத் திருநாமங்கள் என் காதில் விழுந்தால் நான் மயங்கி விழுகின்றேன். ஆகையால், இந்த உலகில் பெரிய பழியைச் சம்பாதித்து உங்கள் பெயரையும் கெடுத்துக்கொண்டு தலை கவிழ்ந்து நிற்கவேண்டாதபடி உச்சிப் பகுதி மிகவும் உயர்ந்திருக்கும் மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற த்வாரகையிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.

பத்தாம் பாசுரம். தான் தன்னை எம்பெருமானின் இருப்பிடங்களில் சென்று சேர்க்கும்படி ப்ரார்த்தித்த இத்திருமொழியை அனுஸந்திப்பவர்கள் அர்ச்சிராதி கதியில் சென்று ஸ்ரீவைகுண்டத்தை அடைவார்கள் என்று பல சொல்லி முடிக்கிறாள்.

மன்னு மதுரை தொடக்கமாக வண்துவராபதி தன்னளவும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித் தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே

தொங்கும் கூந்தலை உடையவளாய், பொன்மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாள் (நான்), ஸ்ரீமதுரை முதல் ஸ்ரீத்வாரகை வரை சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில் ஆண்டாளாகிற தன்னைச் சேர்க்கவேண்டித் தன் உறவினர்களிடம் கொண்ட உறுதி விஷயமாக இனிய இசையுடன் அருளிச்செய்த அழகிய சொல் மாலையாகிய இத்திருமொழியை ஓதவல்லவர்களுக்கு வாழுமிடம் பரமபதமேயாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment