ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருப்பால்லாண்டின் பெருமையை உபதேச ரத்தின மாலை 19ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார்.
கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு
ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த்
தான் மங்கலம் ஆதலால்
எப்படி வேதத்துக்கு ப்ரணவம் முதன்மையானதாகவும், ஸாரமாகவும் இருக்கிறதோ, அதைப்போல ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் முதன்மையானதாகவும், ஸாரமாகவும் திருப்பல்லாண்டு விளங்குகிறது என்பது மாமுனிகளின் திருவுள்ளம். இதனாலேயே அருளிச்செயல் தொடக்கத்திலே இது அனுஸந்திக்கப்படுகிறது.
பெரியாழ்வார் மதுரை ராஜ ஸபையில் ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தை நிலை நாட்டிய பின், அந்நாட்டு மன்னன், ஆழ்வாரை யானை மீது ஏற்றி நகர்வலம் வரச் செய்ய, அந்த ஸமயத்தில் எம்பெருமான் ஆழ்வாரின் இந்த வைபவத்தைக் காண, தன் திவ்ய மஹிஷிகளுடன் கருடவாஹனத்தில் வந்து ஆகாசத்தில் தோன்ற, பரமபதத்தில் இருக்கும் எம்பெருமான் இப்படி இந்த ஸம்ஸாரத்தில் வந்துள்ளானே என்று கலங்கி, ஆழ்வார் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்யும் பாசுரங்களே திருப்பால்லாண்டு என்று கொண்டாடப்படுகிறது. தான் மங்களாசாஸனம் செய்வது மட்டும் அல்லாமல் எல்லோரையும் மங்களாசாஸனம் செய்ய வைப்பது பெரியாழ்வாருக்கு இருக்கும் தனிப் பெருமை.
பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானத்தைக் கொண்டு இந்த எளிய விளக்கவுரை எழுதப்படுகிறது.
*****
தனியன்கள்
குருமுகம் அநதீத்ய ப்ராஹவேதாந் அசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம: |
ச்வசுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||
ஒரு குருவின் மூலமாகக் கற்காமல், திருமாலாலே நேராக மயர்வற மதிநலம் (தெளிவான ஞானமும் பக்தியும்) அருளப்பெற்ற விஷ்ணுசித்தர் என்னும் பெரியாழ்வார், மதுரையில், ஸ்ரீ வல்லப தேவன் என்கிற ராஜாவின் ஸபையில் நடக்கும் வித்வான்களின் கோஷ்டியில் அங்கே இருக்கும் பரிசான பொற்கிழியை ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங்கோயிலுடையான் எம்பெருமானுக்கு ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்று, எல்லா வேதங்களையும் எடுத்துரைத்து, அப்பரிசை வென்றார். மேலும் ஸ்ரீரங்கநாதனுக்குத் தன் திருமகளாரான ஆண்டாளை மணமுடித்துக் கொடுத்து, நித்யஸூரிகளாலும் எம்பெருமானுக்கு மாமனார் என்று வணங்கப்பட்டார். அந்தணர் குலத்தில் மிகச் சிறந்தவராக விளங்கினார். இப்படிப்பட்ட பெரியாழ்வாரை நான் வணங்குகிறேன்.
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து
நெஞ்சே! மின்னலைப் போலே ஒளிவிடும் பெரிய மதிள்களால் சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசத்தின் பெயரை ஒரு முறை சொன்னவர்கள் திருவடித் தாமரைகளை எங்கள் தலைக்கு ஆபரணமாகச் சூடுவோம். பெரியாழ்வார் முற்காலத்திலே மதுரை ராஜ ஸபையில் சென்று, தன்னுடைய வாதத்தினாலே பரிசாக இருந்த பொற்கிழியை அறுந்து தன் கையிலே விழச் செய்த பெரியாழ்வாரின் அற்புதச் செயலை நினைத்து, சொல்லி, அதனாலே தாழ்ந்த நிலைகளை அடைவதில் இருந்து எங்களைக் காத்துக் கொண்டோம்.
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத – வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.
பாண்டிய மன்னனான ஸ்ரீவல்லபதேவன் “நமக்குப் பரதத்வ நிர்ணயம் பண்ணிக் கொடுக்க பட்டர்பிரான் வந்தார்” என்று கொண்டாட, அங்கிருந்தவர்கள் சங்கங்களை முழங்கி வெற்றி கோஷமிடும்படி, வேதத்தில் தேவையான ப்ரமாணங்களை எடுத்து விளக்கி ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தை நிலை நாட்டி, பொற்கிழி அறுந்து விழும்படி செய்த பெரியாழ்வாரின் திருவடிகளே நமக்குத் தஞ்சம்.
*****
முதல் பாசுரம். அழகு முதலிய கல்யாண குணங்களுடன் கூடிய எம்பெருமானை, இந்த ஸம்ஸாரத்திலே கண்டு, அந்த எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயந்து, கால தத்வம் உள்ளவரை இப்படியே நன்றாக இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா !* உன்
சேவடி செவ்வி திருக்காப்பு
மல்லர்களை அடக்கிக் கொன்ற பலம் பொருந்திய திருத்தோள்களையும் மாணிக்கத்தைப் போன்ற நிறத்தையும் உடைய எம்பெருமானே! உன்னுடைய சிவந்த திருவடிகளுக்குப் காலம் உள்ளவரை குறைவற்ற ரக்ஷை இருக்க வேண்டும். ஆழ்வார், முதலில் மனிதர்களின் காலக்கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, பிறகு தேவர்களின் காலக்கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, பிறகு ப்ரஹ்மாவின் காலக்கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, இறுதியாக பல பல ப்ரஹ்மாக்களின் காலக்கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, காப்பிடுகிறார் (ரக்ஷை செய்கிறார்).
இரண்டாம் பாசுரம். இதில் எம்பெருமான் பரமபதம் ஸம்ஸாரம் என்னும் இரண்டு உலகங்களுடன் இருக்கும் இருப்புக்கு மங்களாசாஸனம் செய்கிறார்.
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
அடியார்களான எங்களுக்கும் ஸ்வாமியான உனக்கும் உள்ள ஸம்பந்தம் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய திருமார்பிலே எப்பொழுதும் இருப்பவளான அழகும் ஆபரணங்களும் இளமையும் பொருந்திய பெரிய பிராட்டியார் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய வலது திருக்கையிலே அழகும் ஒளியும் பொருந்தி இருக்கும் திருவாழி எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய இடது திருக்கையிலே இருக்கும், யுத்தங்களிலே ஆயுதமாகப் புகுந்து எதிரிகளின் உள்ளத்தை சிதறடிக்கும் பெருத்த கோஷத்தை எழுப்பும் அந்த பாஞ்சஜந்யம் என்னும் திருச்சங்கம் எப்பொழுதும் இருக்க வேண்டும். ஆழ்வார் அடியார்களைச் சொல்லுவதன் மூலம் ஸம்ஸாரத்தையும், பிராட்டி, திருவாழி, திருச்சங்கத்தைச் சொல்லுவதன் மூலம் பரமபதத்தையும் சொல்லுகிறார்.
மூன்றாம் பாசுரம். இது தொடக்கமாக மூன்று பாசுரங்களில் இவ்வுலக இன்பத்தை விரும்புமவர்கள், ஆத்மாவை அனுபவிக்க விரும்புமவர்கள் மற்றும் பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்கள் ஆகிய மூன்று வர்க்கத்தினரையும் தன்னுடன் சேர்ந்து எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார். இப்பாசுரத்தில், பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களை அழைக்கிறார்.
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
கைங்கர்யமாகிற வாழ்ச்சியை ஆசைப்படுபவர்களானால், விரைவாக வந்து, எம்பெருமானின் உத்ஸவத்துக்கு/கைங்கர்யத்துக்கு மண் எடுப்பது, விருப்பத்துடன் இருப்பது ஆகியவற்றைச் செய்யுங்கள். சோற்றுக்காக ஆசைப்படுபவர்களை எங்கள் கூட்டத்தில் நாங்கள் சேர்ப்பதில்லை. நாங்கள் பல தலைமுறைகளாக கைங்கர்யத்தைத் தவிர வேறு விஷயங்களை ஆசைப்படும் குற்றம் அற்றவர்கள். ராக்ஷஸர்கள் வாழ்ந்த இலங்கையில் இருந்த எதிரிகள் அழியும்படி வில்லெடுத்துப் போர்புரிந்தவனுக்கு நாங்கள் மங்களாசாஸனம் செய்பவர்கள். நீங்களும் எங்களுடன் வந்து பல்லாண்டு பாடுங்கள்.
நான்காம் பாசுரம். இதில் ஆத்மானுபவத்தை ஆசைப்படும் கைவல்யார்த்தியை அழைக்கிறார். பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்களை அழைத்த பிறகு, த்ருப்தி ஏற்படாமல், உலக இன்பங்களை ஆசைப்படும் ஐச்வர்யார்த்தியையும், தன்னைத் தானே அனுபவிக்கும் கைவல்யார்த்தியையும் பார்த்து, இவர்கள் இருவரில் உலக இன்பத்தை ஆசைப்படுபவன் என்றாவது பகவத் விஷயத்தில் ஆசை கொள்வான், ஆனால் கைவல்யார்த்தி, கைவல்ய மோக்ஷத்தைப் பெற்றுவிட்டான் என்றால் அவனுக்கு மீட்சியே இல்லை என்பதை உணர்ந்து, கைவல்யார்த்தியை இங்கே அழைக்கிறார்.
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே
சரீரத்தை முழுவதுமாக ஒழித்துவிடுவதற்கு முன் எங்கள் கூட்டத்தில் வந்து புகுந்து, எங்களுடன் கூடுவோம் என்ற ஆசை மட்டும் இருப்பீர்களாகில், ஆத்மாவை மட்டும் அனுபவிப்பது என்கிற வரம்பை விட்டொழித்து, எங்களுடன் கூடுங்கள். க்ராமத்தவர்களான ஸாமாந்யர்களும், நகரத்தவர்களான அறிவாளிகளும் நன்றாகத் தெரிந்து கொள்ளும்படி, திருவஷ்டாக்ஷர மந்த்ரத்தை அனுஸந்தித்துப் பாடக் கூடிய பக்தியை உடையர்களானீர்கள் என்றால், நீங்களும் வந்து எங்களுடன் சேர்ந்து பல்லாண்டு பாடுங்கள்.
ஐந்தாம் பாசுரம். இதில் இவ்வுலகத்து இன்பத்தை விரும்பும் ஐச்வர்யார்த்தியை அழைக்கிறார்.
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே
அண்டங்களின் கூட்டங்களுக்குத் தலைவனாகி, அஸுர ராக்ஷஸர்களின் நெருங்கின கூட்டத்தைத் திரட்டி, அவர்களை ஒழித்த, ஹ்ருஷீகேசன் எம்பெருமானுக்கு அடிமை செய்பவர்கள் குலத்தில் உள்ள நீங்கள், எங்கள் கூட்டத்துக்கு வந்து, எம்பெருமானின் திருவடிகளை வணங்கி, அந்த எம்பெருமானுடைய ஆயிரம் திருநாமங்களையும் வாயாராப் பாடி, எம்பெருமானிடம் சென்று வேறு ப்ரயோஜனங்களைப் ப்ரார்த்தித்துப் பெற்று விலகிப் போகும் பிறப்பைத் தவிர்த்து, மீண்டும் மீண்டும் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுங்கள்.
ஆறாம் பாசுரம். இப்படி ஆழ்வார் மூன்று விதமான அதிகாரிகளையும் அழைத்த பிறகு, ஒவ்வொருவராக வரத் தொடங்குகின்றனர். இதில், வாழாட்பட்டு பாசுரத்தில் சொல்லப்பட்ட பகவத் கைங்கர்யார்த்திகள் தங்கள் தன்மைகளையும், செயல்களையும் சொல்லிக்கொண்டு வந்து புகுர, அவர்களை ஆழ்வார் உடன் அழைத்துக்கொள்கிறார்.
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
நானும் என் தந்தையும் அவர் தந்தை தந்தை என்று இப்படி ஏழு தலைமுறைகளாக வந்து, முறை முறையாக கைங்கர்யங்கள் செய்கின்றோம். திருவோணத் திருநாளில் மாலைப் பொழுதில் அழகியதான நரஸிம்ஹ உருவத்தைக் கொண்டு, தன் எதிரியான ஹிரண்யனை அழித்தவனுக்கு, தன்னுடைய அடியவனுக்காகச் செய்த அந்த செயலினால் ஏற்பட்ட சோர்வு தீரும்படியாக, காலம் உள்ளவரை பல்லாண்டு பாடுவோம்.
ஏழாம் பாசுரம். ஏடு நிலம் பாசுரத்தில் சொல்லப்பட்ட கைவல்யார்த்திகள் தங்கள் தன்மைகளைச் சொல்லிக்கொண்டு வர, அவர்களையும் சேர்த்துக் கொள்கிறார்.
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
நெருப்பைக் காட்டிலும் மிகவும் ஜ்வலிக்கிற சிவந்த ஒளியை உடைய, வட்டமாக ப்ரகாசிக்கிற சக்கரத்தாழ்வாரின் இருப்பிடத்தின் (திருமேனியின்) சிந்நத்தாலே அடையாளப்படுத்தப்பட்டு இனி மேல்வரும் காலங்களில் தலைமுறை தலைமுறையாகக் கைங்கர்யம் செய்வதற்காக வந்தோம். மாய யுத்தம் செய்யும் ஸேனையை உடைய பாணாஸுரனுடைய ஆயிரம் தோள்களில் இருந்தும் ரத்த வெள்ளம் பீறிட்டுப் பாயும்படி சுழற்றப்பட்ட சக்கரத்தாழ்வாரை ஏந்தி நிற்கக் கூடியவனுக்கு, நாங்கள் பல்லாண்டு பாடுகிறோம்.
எட்டாம் பாசுரம். அண்டக்குலம் பாசுரத்தில் சொல்லப்பட்ட ஐச்வர்யார்த்திகளும் பல்லாண்டு பாட இசைந்து வர, அவர்களையும் சேர்த்துக் கொள்கிறார்.
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே
நெய்யின் நடுவிலே இருக்கும் தூய்மையான, சுவையான ப்ரஸாதத்தையும், எப்போதும் அந்தரங்க கைங்கர்யமும், எம்பெருமான் திருக்கையாலே இடப்பட்ட வெற்றிலைப் பாக்கையும், கழுத்துக்கு ஆபரணமும், காதுக்கு ஆபரணமான குண்டலத்தையும், உடம்பிலே பூசுவதற்கு ஏற்ற, நல்ல பரிமளம் மிக்க ஒப்பற்ற சந்தனமும் கொடுக்ககூடியவனான, என்னை நல்ல மனம் உள்ளவனாக ஆக்கக்கூடிய, பணங்களை [படங்களை] உடைய பாம்புகளுக்கு விரோதியான கருடனைக் கொடியாக உடைய எம்பெருமானுக்கு பல்லாண்டு கூறுவேன் [என்று ஐச்வர்யார்த்தி கூறுகிறான்].
ஒன்பதாம் பாசுரம். இதில் வாழாட்பட்டு பாசுரத்திலே அழைத்து எந்தை தந்தை பாசுரத்திலே வந்து சேர்ந்த பகவத் கைங்கர்யார்த்தியுடன் கூடித் திருப்பல்லாண்டு பாடுகிறார்.
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
நாங்கள் உன்னுடைய திருவரையில் உடுத்திக் களைந்த திருப்பீதாம்பரத்தை உடுத்தும், நீ அமுது செய்து மீதம் இருக்கும் உன் ப்ரஸாதத்தை உண்டும், உன்னால் சூடிக்களையப்பட்ட திருத்துழாய் மாலையைச் சூடியும், அடியார்களாக இருப்போம். ஏவின திசையில் உள்ள கார்யங்களை நன்றாகச் செய்யகூடிய, பணைத்த பணங்களை உடைய ஆதிசேஷன் என்னும் படுக்கையிலே சயனித்துக் கொண்டிருக்கும் உனக்கு, திருவோணம் என்னும் திருநாளில் திருப்பல்லாண்டு பாடுவோம்.
பத்தாம் பாசுரம். இதில் ஏடு நிலம் பாசுரத்தில் சொல்லப்பட்டு, தீயில் பொலிகின்ற பாசுரத்தில் வந்து சேர்ந்த கைவல்ய நிஷ்டர்களுடன் சேர்ந்து திருப்பல்லாண்டு பாடுகிறார்.
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
எங்கள் நாயகனே! உனக்கு அடிமைப்பட்டவர்கள் என்று நாங்கள் என்று எழுதிக்கொடுத்தோமோ, அன்றே அடியவர்களான எங்கள் குடும்பத்தின் சந்ததியினர் எல்லோரும் கைவல்ய மோக்ஷத்தை அடைவதில் இருந்து விடுதலை பெற்று உஜ்ஜீவனத்தை அடைந்தனர். அழகான திருநன்னாளில் திருவவதரித்து, எழில் மிகுந்த திருவடமதுரையில் கம்ஸனின் வில்விழாவில் வில்லை முறித்து, ஐந்து தலைகளைக்கொண்ட விரிந்த பணங்களை உடைய காளியன் என்னும் நாகத்தின் தலைமேலே குதித்து நடனமாடிய எம்பெருமானே! உன்னை நாங்கள் எல்லோரும் கூடி இருந்து பல்லாண்டு பாடுவோம்.
பதினொன்றாம் பாசுரம். இதில் அண்டக்குலம் பாசுரத்தில் சொல்லப்பட்டு, நெய்யிடை பாசுரத்தில் வந்து சேர்ந்த ஐச்வர்யார்த்திகளுடன் சேர்ந்து திருப்பல்லாண்டு பாடுகிறார்.
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே
திருமகள் கேள்வனே! தோஷங்கள் சிறிதும் இல்லாதவரான, இந்த உலகுக்கே ஆபரணமான திருக்கோஷ்டியூர் திவ்யதேசத்தில் உள்ளவர்களுக்குத் தலைவரான, “எம்பெருமானுக்கே அடிமைப்பட்டவன் நான்” என்னும் அபிமானத்தாலே மிகச் சிறந்தவரான செல்வநம்பியைப்போலே, அடியேனும், நாதனான உனக்கு, நெடுங்காலமாக அடிமையாய் இருக்கிறேன். உன்னுடைய ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளாலே எங்களைப் புனிதமாக்குபவனே! நல்ல முறையில் அஷ்டாக்ஷர மந்த்ரத்தை அனுஸந்தித்து, உன்னுடைய பல திருநாமங்களையும் சொல்லி, உனக்குப் பல்லாண்டு பாடுவேன்.
பன்னிரண்டாம் பாசுரம். இறுதியில் இந்த ப்ரபந்தத்தைக் கற்றவர்களுக்குப் பலம் சொல்லுவதாகக்கொண்டு, பொங்கும் பரிவுடன் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகிறார். எல்லோரும் எம்பெருமானிடத்தில் ஈடுபட்டு, எல்லோரும் காலம் உள்ளவரை எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்யும் பாக்யத்தைப் பெறுவர்கள் என்று அருளிச்செய்து ப்ரபந்தத்தை முடிக்கிறார்.
பல்லாண்டு என்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே
பரிசுத்தனான, மேலான பரமபதத்தில் எழுந்தருளியிருப்பவனான, சார்ங்கம் என்ற வில்லை ஆள்பவனான எம்பெருமானை ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தன் என்ற திருநாமமுடைய பெரியாழ்வார் “எப்பொழுதும் எம்பெருமானுக்கு மங்களங்கள் நிறைந்து இருக்க வேண்டும்” என்று விருப்பத்துடன் அருளிச்செய்த இந்த ப்ரபந்தத்தை பல்லாண்டு பாடுவதற்கான நற்காலம் அமைந்ததே என்று தொடர்ந்து இதைச் சொல்லுபவர்கள் அஷ்டாக்ஷரத்தை அனுஸந்தித்து பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனைச் சுற்றிச் சுற்றி வந்து, காலம் உள்ளவரை, பல்லாண்டு பாடுவார்கள்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Great service sir, by providing the meanings for these divine prabhandhams for people like me to understand the real meaning and thatvartham while reciting this in our nithya parayana …………….. om namo Narayanaya
amOgam.
Very nice explanation. Meaning makes the chanting more loving. Om namo narayanaya
Great work done by the you sir.These explanation reach future generations pls continue such a great work.Namo Narayana Hare Krishna.