ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உள்ளபடி உணரில் ஒன்று நமக்கு உண்டென்று
விள்ள விரகிலதாய் விட்டதே – கொள்ளக்
குறையேதும் இல்லார்க்குக் கூறுவது என்சொல்லீர்
இறையேதும் இல்லாத யாம்
பதவுரை:
உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி
உணரில் – தெரிந்து கொண்டால்
ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று
நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு
உண்டென்று – இருக்கிறது என்று
விள்ள – வாயினால் சொல்லகூட
விரகிலதாய் – வழியில்லையாகிவிட்டது அல்லவா
விட்டதே – (சக்தி இல்லையாகி விட்டது அல்லவா)
கொள்ள – நம்மிடத்தில் பெற்றுக் கொள்ளவேண்டுவன
குறை – குறைபாடுகள்
ஏதும் இல்லார்க்கு – சிறிதும் இல்லாத இறைவனுக்கு
இறையேதும் இல்லாத – சிறிதளவுவேனும் தனக்கென்று ஒன்றுமில்லாத
யாம் – அடிமைத் தன்மையையே வடிவாக உள்ள நாம்
கூறுவது என் – நம்மை காப்பதற்குச் சொல்லும் வார்த்தை என்ன இருக்கிறது
சொல்லீர் – சொல்லுவீர்களாக
விளக்கவுரை:
உள்ளபடி உணரில்: உயிரின் உண்மை நிலையை உணர்ந்தால்
“எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”
என்ற திருக்குறளில் ஆன்மாவின் உண்மை நிலையை உணர்வதே அறிவாகும் என்று கூறப்படுள்ளது. ஒருவன் ஒரு பொருளை உலகில் காணும் பொழுது மேல் தோற்றமான இயங்குதிணை, உயர்திணை ஆகிய இவற்றில் மனிதன், விலங்கு, செடிகொடி என்னும் இவற்றாலே காண்கிறான். அனைத்துப் பொருளுக்கும் உள்ளிருக்கும் உயிரைப் பார்பதில்லை. உயிரைப் பார்க்கின்ற அறிவொளி வெளி தோற்றத்தைப் பார்பதில்லை. உதாரணமாக “கோச் சேரமான் யானைக் கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை” என்னும் சிறப்பு பெயரும் கூடி ஒரு பொருளைக் காட்டுகிறது. இவை எல்லாம் நிலை இல்லாததால் கற்பனயாகக் கருதப்படும். இக்கற்பனைக்கு அப்பாற்ப்பட்டதாய் இருப்பது உயிர். இத்தகைய உயிரின் உண்மை நிலையை சாஸ்திரங்கள் துணை கொண்டே அறிய வேண்டியுள்ளது. உயிர் அறிவே ஆன்மா என்றும் அறிவு உடையது ஆன்மா என்றும் நூல்கள் கூறும். இதனால் ஆன்மாவுக்கு ‘நான் இதைச் செய்கிறவன் என்னும் செருக்குத் தன்னடையே தோன்றுகிறது. இதைப்பற்றி கூர்ந்து ஆராய்ந்து பார்க்கையில் ஆன்மாவைப் பற்றி ஒரு உண்மை தெளிவாகிறது. நுணுகி அறிவார்க்குப் புலனாவது ஒன்று. அதாவது உயிர்களெல்லாம் தன இச்சையில் செயல்பட முடியாத உடல்களாகவும் இறைவன் அனைத்து உயிர்களையும் இயக்குகின்ற உயிராகவும் சொல்லப்படுவதால் இறைவனுக்கு அடிமையாய் இருக்கும் தன்மையே உயிரின் உண்மை இயல்பாகும். ஆகவே நான் எனது என்று வாய் விடுவதற்கு தகுதி அற்றதாகிறது. இவ்வாறு உயிர்களின் உண்மை நிலையை அறியும் போது தன்னைத்தான் காத்துக்கொள்ள, தான் ஒன்று செய்வதற்கான வாய்ப்பே உயிர்கட்கு இல்லை என்று புலனாகிறது. அதுவே உயிரைப் பற்றி உள்ளது உள்ளபடி அறியும் அறிவாகும். ‘இயல்பாகவும் நோன்பிற்க ஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து’ என்ற குறளில் மேற்கூறிய கருத்தைத் திருவள்ளுவரும் கூறியுள்ளார். இதன் கருத்து இறைவனைத் தவிர தனக்கு ஒரு பற்றப்படும் பொருளும் இல்லை என்றிருப்பதுவே ஞானியர்க்கு பொருள் ஒன்று உண்டு என்று எண்ணினால் அது மீண்டும் பிறப்பதற்கு ஏதுவாகும் என்பதாம். இங்கு ஒன்று இன்மை இயல்பாகும், உடைமை மயலாகும் என்று கூறியது காண்க. இதனால் ஒன்று உடையோம் என்றெண்ணுவது மடமையாகும் என்பதால்.
ஒன்று நமக்கு உண்டென்று விள்ள விரகிலதாய் விட்டதே: “வீடு பேற்றுக்குக் கைமுதலாக ஒன்று நம்மிடம் இருக்கிறது” என்று சொல்வதற்கு வாய் திறக்க வழியில்லை என்று பொருள். “விள்ள” என்பதற்குச் சொல்ல என்று பொருள் கொள்ளப்பட்டது. இவ்வாறன்றி “விள்ள -விலகி நிற்க” என்று பொருள் கொண்டு . இறைவனுடைய (கருணை) அருள் நிழலில் பதுங்கிக் கிடப்பது அல்லாமல் அதைவிட்டுப் பிரிந்து தனித்து நிற்கும் ஆற்றல் உண்டு என்று எண்ணி விலகி நிற்பதற்கு வழியற்றுவிட்டது என்றும் சொல்லலாம். இக்கருத்து உயிர்கள் எல்லாம் இறைவனுடைய உடலாகவும் இறைவன் அவற்றிற்கு உயிராகவும் சொல்லப்படுவதால் கூறப்பட்டது. உயிரின் துணையின்றி உடல் இயங்க முடியாதல்லவா? உயிர்க்கு உணர்வு என்னும் பண்பு இருப்பதால் செயலற்று உயிரில் பொருள் போல எப்படி இருக்க முடியும்? அவ்வுணர்வுக்கு ஏற்ப இறைவனே நம்மைக் காக்க வேண்டும்என்று ஒரு வார்த்தையேனும் சொல்ல வேண்டுமா?
அதுவும் இல்லாமல் எப்படி முடியும்? என்ற வினாக்கள் இங்கு எழுகின்றன. அவற்றிற்கும் பதில் சொல்கிறது. கொள்ளக் குறையேதும் இல்லார்க்கு என்ற இத்தொடர். இறைவன் உயிர்களைக் காக்கும் பொழுது உயிர்களிடத்தில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு காப்பாற்றும் குறை அவனிடம் இல்லை. ஒன்றை ஏற்றுக் கொண்டு அதற்காகக் காப்பவன் என்றால் அவனுடைய பெருமைக்கு இழுக்காகும். அதனால் அவன் எதையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். மேலும் நம்முடைய நிலையைப் பார்த்தால் ஒன்றும் இல்லாதவராய் இருக்கிறோம்.
இறையேதும்:இல்லாதயாம்:உயிரும் உயிரைச் சார்ந்த உடல் முதலிய பொருள்களும் இறைவனுடைய உடைமைப் பொருள்களை இருக்கின்றன. தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாததாய்த் தனக்கென்று ஒன்று சிறிதும் இல்லாததாய் இருக்கின்றன. ஆகவே அவன் ஒரு பொருளையும் கொள்ள மாட்டான். இவனுக்கு ஒன்றும் இல்லாததா? இவன் கொடுக்க மாட்டான். இதை விளக்குவதற்கு இங்கு ஓர் உதாரணம் காட்டப்படுகிறது.
இறைவனை வணங்கச் சென்ற ஓர் அடியவர் இறைவன் முன் சென்று இறைவனே ! உனக்கு எப்பொருளை நான் தருவேன்? ஏன் எனில் நானே உன்னுடைய அடிமை. பொருள் எல்லாம் உன்னுடைய உடைமை. எனக்கென்று எப்பொருள் இருக்கிறது? ஆகவே நான் உனக்குக் கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. ஆயினும் நெடுங்காலமாக என்னுடைய வினைகள் எனக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றை வேண்டுமானால் கொடுக்கலாம் என்று சொல்லி வணங்கியதாகக் கூறப்படுவதை இங்கு சொல்லலாம். மேலும் இராமாயணத்தில் பரதனுக்கும் வசிட்ட முனிவருக்கும் நடந்த உரையாடலில் இக்கருத்து மேலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இராமன் கானகம் சென்று விட்டான். தந்தை தசரதன் வானகம் எய்திவிட்டான்.
ஆகவே பரதா நீதான் அரசாள வேண்டும் என்றார் வசிட்டர். இதைக்கேட்ட பரதன் செவிகளைக் கைகளால் புதைத்துக் கொண்டு பின்வருமாறு பேசினான். இராமன் கானகம் சென்று விட்டான். என்றால் அவனுடைய உடைமைப் பொருளான அரசாட்சியை நான் ஏற்பது தகும்? ஒருவனுடைய உடைமையை மற்றொருவன் கவர்வது கள்ளத்தனமாகுமன்றோ? “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்றன்றோ நீதி நூல்கள் கூறுகின்றன என்றான். ஆனாலும் வசிட்டர் விடவில்லை. தற்பொழுது இராமன் இல்லாததால் அவனுடைய உடைமையான அரசை அவன் வரும் வரை ஏற்கலாமே என்றார். அதற்கு பரதன் “உடையவன் தான் உடைமைப் பொருளைக் கொல்லவேணுமேயொழிய ஒரு உடைமை மற்றொரு உடைமையை ஏற்க நியாயமில்லை. நான் இராமனுடைய உடைமையாதளால் அரசாகிற மற்றொரு உடைமையை ஏற்கத் தகுந்தவனில்லை” என்றார். அப்பொழுது வசிட்டர் விடவில்லை. அரசாகிற ராமனுடைய உடைமை அறிவற்றது. பரதனாகிற நீ அறிவுடையவன். ஆகவே அறிவற்ற அரசாகிற உடைமையை அறிவுடைய நீ ஏற்றுகொள்ளலாம் அல்லவா? ஒருவனுக்கு அணிகலன்களும் அவற்றை இட்டுவைக்கும் உடைமைகளுள் அணிகலன்களாகிற உடைமையை பெட்டியாகிற உடைமைப் பொருள் பாதுகாக்கவில்லையா? அது போல அரசு இராமனுடையதாக இருந்தாலும் நீயும் இராமனுடைய உடைமையாக இருந்தாலும் அரசை நகைப் பெட்டிபோல் ஏற்றுக்கொள்ளலாமே என்றார். அது கேட்ட பரதன் நீர் சொன்ன உதாரணத்தில் இரண்டும் அறிவில்லாதவை. உடையவன் அணிய வேண்டிய உடைமைப் பொருளை நாம் அடக்கிக் கொண்டிருக்கிறோமே என்னும் அறிவில்லாததால் அணிகலன்களைப் பெட்டி ஏற்றுக் கொண்டுள்ளது. எனக்கு அறிவு இருப்பதால் இராமனுடைய உடைமையான அரசை நான் ஏற்க இயலாது. யானும் இவ்வரசும் இராமனுடைய உடைமைகளே. அரசைக் காட்டிலும் வேறுபட்ட நிலையில் எனக்கு அறிவிருப்பது நான் இராமனுடைய உடைமை என்பதை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு அதற்கேற்ப இருப்பதுவே எனக்கு சிறப்பாகும். இந்த எண்ணம் அரசுக்கு இல்லாததால் அது எனக்கு வேறுபட்டதாயிற்று .இருப்பினும் நானும் அரசும் இராமனுடைய உடைமைகளே என்று கூறி மறுத்து விட்டான். இதனால் உயிர்கள் உணர்வு உடையனவாயிருந்தாலும் “நான் இறைவனுடைய உடைமை” என்பதை அறிந்து அடிமைத் தொழில் செய்வதற்கே உரியனாய், யான் என்றோ, எனது என்றோ சொல்வதற்குத் தகுதியுடையதில்லை என்றவாறு. இக்கருத்துக்களை இங்கே உணர வேண்டும். இவற்றை எல்லாம் உள்ளடக்கி இறைவன் நிறைவுடயவன். ஆகவே யாரிடமும் எதையும் ஏற்க வேண்டாதவனாகிறான். உயிர்களுக்கு “உடைமை என்ற ஒன்றும் சிறிதும் இல்லாததால் அவனுக்குக் கொடுப்பதற்கு எதுவும் இல்லாதவனாகிறான். இறைவன் கொள்ளக் குறையேதுமில்லாதவன். உயிர்கள் சிறிதளவேனும் ஒன்றும் உடைமை இல்லாதவர்கள். ஆகவே அவன் கொள்ள மாட்டான். இவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்ற இவ்வுண்மைகளை விளக்கித் தம் அருகில் இருப்பாரை நோக்கி இக்கருத்துக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிறார் ஆசிரியர். இங்கு “நாம்” என்கிற தன்மைப் பன்மை முன்னிலைப் பொருளையும் சேர்த்துக் கொண்டு நாம் எல்லோரும் என்று அனைத்து உயிர்களையும் சுட்டிச் சொல்கிறதாகக் கொள்ள வேண்டும். அனைத்து உயிர்களும் அவனுடைய உடைமையாதலால் மேற்சொன்னக் கருத்து அனைத்துயிர்களுக்கும் பொதுவானதாகும். இறை என்ற இடத்தில் இறை என்ற சொல் சிறிதும் என்ற பொருளில் வந்தது “இறையும் அகலகில்லேன்” என்புழிப்போல இறை என்றவிடத்தில் இழிவு சிறப்பு உம்மை தொக்கு நின்றது. இறையும் ஏதுமில்லாத என்று பொருள் கொள்க. ஆன்மாவின் உண்மை நிலையை ஆராய்ந்து பார்த்தால் இறைவனுக்கு உடமைப் பொருளாயும் அவன் வயப்பட்டுமிருத்தளால் தானாகச் செய்வதற்கு எதுவுமில்லை . தனக்கு ஒரு உடைமையுமில்லை. . அவன் நிறைவுடையவனாய் இருத்தலால் எதையும் கொள்ளமாட்டான். மிடியனுக்கு (தரித்திரனுக்கு) செல்வந்தனுக்குக் கொடுக்கத்தக்க பொருள் எதுவுமில்லை. செல்வந்தன் தரித்திரனிடத்தில் ஒரு பொருளைப் பெற்றுக்கொள்ளத் தக்கக் குறைவுடயவனில்லை .அப்படியிருக்க இவன் எதைக் கொடுப்பான்? அவன் எதைப் பெறுவான்?
ஆகவே அவனுக்கு உடைமையாய் அவன் அடிமையாய் இருக்கும் நிலையையே எண்ணி இருப்பதுவே உயிர்களின் கடமையாகும். என்னும் பொருள் இப்பாடலில் கூறப்படுவதாகும். இதுவே “நம” எனும் சொல்லின் சாரமாகும்.
இவ்விடத்தில் கீழ்வரும் ஸ்ரீவசனபூஷன சூத்திரங்கள் நினைதற்குரியான
“பலத்துக்கு ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே வேண்டுவது அல்லாதபோது பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாம்” என்று சொல்லி “அந்திம காலத்துக்குத் தஞ்சம் .இப்போது தஞ்சமென் என்கிற நினவு குலைகை. என்று சீயர் அருளிச் செய்வர்” என்னும் சூத்திரத்தில் ஒரு நிகழ்ச்ச்சியை எடுத்துக்காட்டி ப்ராப்தாவும் ப்ராபகனும் ப்ராப்திக்கு உகப்பானவனும் அவனே என்பன் இங்கு நஞ்சீயர் சொன்னதாகக் கூறிய வார்த்தையைக் காண வேண்டும். நஞ்சீயர் என்னும் பேராசான் ஒருவர் தம்முடைய சீடர் ஒருவர் நோய்வாய்ப் பட்டிருப்பதாகக் கேள்வியுற்றுஅவரைப் பார்க்க அவரிடம் சென்றுள்ளார். அப்பொழுது அந்நோய்வாய்ப்பட்டவர் “அடியேனுக்கு இறுதிக்காலத்துக்குத் துணையாக இருக்கும் ஒன்றைச் சொல்ல வேண்டும்” என்று கேட்க அதற்குப் பதிலாக அவர் இவ்வாறு சொல்கிறார்.
“நாம் பகவானுடைய உடைமைப் பொருளாய் இருப்பதால் உடைமைப் பொருளைப் பேணிப் பாதுகாப்பது உடையவனுக்குப் பொறுப்பாதலால் அதைப் பற்றி நாம் நினைப்பதற்கு உரிமையில்லை. இன்றைக்குத் துணையாக வேணும் கடைசி காலத்துக்குத் துணையாக வேணும் என்று என்னும் எண்ணம் அதாவது (நம்மைக் காத்துக் கொள்ளும் எண்ணம்) அகல்வதுவே நமக்கு நலமாகும்.
ஆகவே தன்னைத்தான் காத்துக்கொள்ளவேணும் என்ற எண்ணத்தை எப்பொழுது இவன் விடுகிறானோ அன்றைக்கு இவனைக் காக்கும் எண்ணத்தை இறைவன் செய்வான் என்பது இவ்வார்த்தையின் கருத்தாகும்.
ஸ்ரீ இராமபிரானை வனவாசிகளான முனிவர்கள் சந்தித்து உரையாடுகையில் தங்களைக் கருப்பையிலுள்ள சிசுக்களாகச் சொல்லிக்கொண்டனர். இதன் கருத்து கருப்பையிலுள்ள சிசுவின் அனைத்து செயல்பாடுகளும் தாயாரும் வசத்தில் உள்ளன போல் ஆன்மாவின் அனைத்து செயல்பாடுகளும் இறைவன் வசத்தில் உள்ளன என்பதைக் குறிக்கும். இவ்வாறான ஆன்மாவின் தன்வயமற்ற நிலை (இறைவன் வயப்பட்டதால்) அறியப்படுகிறது. இதை சாஸ்திரம் “பாரதந்திரீயம்” என்று கூறும். அதில் “அசித்வத் பாரதந்திரீயம்” என்று சிறப்பித்துக் கூறும். “இதனை வைத்த இடத்திலிருந்தேனோ பாரதாழ்வானைப்போல” என்றும் “படியாய்க் கிடந்தது உன்பவளவாய் காண்பேனே” என்னும் தொடர்களால் எடுத்துக் காட்டுவர் ஆன்றோர். மேலே சொன்ன ஒழுக்கத்தில் நிலைநிற்கும் உயிர்களை இறைவன் தானே வலிய வந்து காப்பாற்றுவான் என்பதாம். இதற்கு எடுத்துக் காடாகக் “கடற்கரையை நினைத்திருங்கள்” என்று கூறுவார்.
கடற்கரையில் “எழுபது வெள்ளம் வானரச் சேனைகளுக்கு நடுவில், இராமன் இலக்குவணன் இருவரும் இருக்க அப்பொழுது வானரங்கள் அரக்கரிடமிருந்து இராமனையும் இலக்குவணனையும் நாம் காக்க வேண்டுமென்று பேசிக்கொண்டன. இரவில் நெடுநேரமானதும் வாரங்கள் எல்லாம் உறங்கத் தொடங்கின அப்பொழுது இராமனும் இலக்குவணனும் கையும் வில்லுமாய்க்கொண்டு வானரங்களைச் சுற்றி வந்து காத்தனர்.என்பதாம். இவ்வாறான எடுத்துக்காட்டுக்களால் ஆன்மாக்களைக் காப்பது இறைவன் கடமை என்றும் ஆன்மாக்கள் அவருடைய காத்தலைத் தடுக்காமல் இருக்கவேணும் என்பதும் இங்குக் கூறப்பட்டன.
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org