இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 41 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமானுச நூற்றந்தாதி

<< பாசுரங்கள் 31 – 40

நாற்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானால் திருத்தப்படாத இந்த உலகம் எம்பெருமானார் அவதாரத்தாலே நன்கு திருத்தப்பட்டது என்கிறார்.

மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண் உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே

நமக்கு நாதனான ச்ரிய:பதியே, பூமியிலே மனுஷ்யர், மிருகம் முதலிய பிறவிகளில் அவதரித்து, தன்னை இவர்கள் கண்ணுக்கு விஷயமாக்கிக்கொண்டு நிற்கும்போதும், இவன் நமக்குத் தலைவன் என்று காணமாட்டார்கள் இங்குள்ளவர்கள். அவர்கள் எல்லாரும், அடியார்களின் பேறும் இழவும் தன்னது என்று கருதும் ஸ்வாமியான எம்பெருமானார் வந்து வெளிக் கண்களுக்கு விஷயமான அக்காலத்திலே நம் முயற்சியால் அடைய முடியாததான ஞானமானது மிகவும் ஏற்பட்டு நாராயணன் என்ற திருநாமமுடைய எம்பெருமானுக்குத் தொண்டரானார்கள்.

நாற்பத்திரண்டாம் பாசுரம். உலக விஷயங்களில் ஈடுபட்டிருந்த என்னைத் தம்முடைய பரமக்ருபையாலே வந்து ரக்ஷித்தருளினார் என்று அனுபவித்து மகிழ்கிறார்.

ஆயிழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளற்று அழுந்தி
மாயும் என் ஆவியை வந்து எடுத்தான் இன்று மா மலராள்
நாயகன் எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும்
தூயவன் தீது இல் இராமாநுசன் தொல் அருள் சுரந்தே

பொருத்தமாகப் புனையப்பட்ட ஆபரணங்களையுடையராய், ஸ்தனத்துக்கு மேலே வேறு எதையும் பார்க்கவேண்டாதபடி அழகாயிருப்பவராய், வாக்கின் சக்திக்கும் மீறீய அதிகமான ஆசை என்னும் சேற்றிலே அழுந்தி நசித்துப்போகிறவனாக இருந்தேன். அப்படிப்பட்ட என் ஆத்மாவை, ச்ரிய:பதியான பெரிய பெருமாளே ஸகல ஆத்மாக்களுக்கும் தலைவன் என்று உபதேசிக்கும் ஞான சுத்தியையுடையவராய், இப்படி உபதேசிக்கும் காலத்தில் புகழ், தனம், பூஜை ஆகியவற்றை விரும்பாமல் செய்யும் எம்பெருமானார் தம்முடைய இயற்கையான க்ருபையைச் சுரந்து, அந்த க்ருபையால் தூண்டப்பட்டவராய் என்னிடத்தில் வந்து இன்று என்னை எடுத்து ரக்ஷித்தார்.

நாற்பத்துமூன்றாம் பாசுரம். இப்படித் தம்மை எம்பெருமானார் கைக்கொண்டதை நினைத்து வந்த ப்ரீதியாலே இவ்வுலகத்தவரைப் பார்த்து எல்லாரும் எம்பெருமானார் திருநாமத்தைச் சொல்லுங்கள், உங்களுக்கு எல்லா நனமையும் உண்டாகும் என்கிறார்.

சுரக்கும் திருவும் உணர்வும் சொலப்புகில் வாய் அமுதம்
பரக்கும் இரு வினை பற்று அற ஓடும் படியில் உள்ளீர்
உரைக்கின்றனன் உமக்கு யான் அறம் சீறும் உறு கலியைத்
துரக்கும் பெருமை இராமாநுசன் என்று சொல்லுமினே

எம்பெருமானார் அவதாரத்தாலே பாக்யத்தைப் பெற்ற பூமியில் உள்ளவர்களே நான் இந்த விஷயத்தின் பெருமை அறியாமல் இருக்கும் உங்களுக்குச் சொல்லுகிறேன். தர்மத்தைக் கண்டால் சீறும், தானே ப்ரபலமாய் இருக்கும் கலியை ஓட்டிவிடும் ப்ரபாவத்தையுடையரான எம்பெருமானாருடைய திருநாமத்தைச் சொல்லுங்கள். பக்தியாகிற செல்வமும், ஞானமும் மேன்மேலும் வளரும். சொல்லத்தொடங்கும்போதே வாக்கிலே அமுதம் சுரக்கும். பெரிய பாபங்களும் முழுவதுமாக விட்டோடும்.

நாற்பத்துநான்காம் பாசுரம். இப்படி எம்பெருமானார் பெருமையை உபதேசித்த பின்பும் ஒருவரும் எம்பெருமானார் விஷயத்தில் ஈடுபடாததைப் பார்த்து அவர்களுடைய தன்மையை நினைத்து வருந்துகிறார்.

சொல் ஆர் தமிழ் ஒரு மூன்றும் சுருதிகள் நான்கும் எல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண் அரும் சீர்
நல்லார் பரவும் இராமாநுசன் திருநாமம் நம்பி
கல்லார் அகல் இடத்தோர் எது பேறு என்று காமிப்பரே

பெரிய பூமியில் உள்ளவர்கள் புருஷார்த்தம் (குறிக்கோள்) எது என்று ஆசைப்படுவார்கள். சொல் வளத்தைக் கொண்டதாய் தனித்துவம் வாய்ந்ததாய் இயல் இசை நாடகம் என்று மூன்று வகையாக இருக்கும் தமிழும், ரிக் யஜுர் ஸாம அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் கணக்கிலடங்காத தர்ம மார்க்கங்கள் எல்லாமும் அலகலகாக ஆராய்ந்திருப்பவராய், நினைக்கப் பார்த்தால் நினைத்து முடிக்க முடியாததான கல்யாண குணங்களையுடையவராய், நல்லவர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆனந்தத்துடன் கொண்டாடும்படியிருக்கும் எம்பெருமானாருடைய திருநாமத்தை, நான் சொன்ன வார்த்தையை நம்பி, தெரிந்து கொண்டு சொல்லாமல் இருக்கிறார்கள். ஐயோ! இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

நாற்பத்தைந்தாம் பாசுரம். இப்படி அவர்களைப்போலே விமுகராய் இருந்த தம்மை எம்பெருமானார் நிர்ஹேதுகமாக ரக்ஷித்த விஷயத்தை நினைத்து தேவரீர் செய்த நன்மையை என் வாக்கால் சொல்லி முடிக்க முடியாது என்கிறார்.

பேறு ஒன்று மற்று இல்லை நின் சரண் அன்றி அப்பேறு அளித்தற்கு
ஆறு ஒன்றும் இல்லை மற்று அச்சரண் அன்றி என்று இப்பொருளைத்
தேறும் அவர்க்கும் எனக்கும் உனைத் தந்த செம்மை சொல்லால்
கூறும் பரம் அன்று இராமாநுச மெய்ம்மை கூறிடிலே

உடையவரே! தேவரீர் திருவடிகளைத்தவிர வேறு ப்ராப்யம் (குறிக்கோள்) ஒன்றுமில்லை. அதைத் தருகைக்கு அத்திருவடிகளைத்தவிர வேறு உபாயம் (வழி) ஒன்றும் இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் ஆழ்ந்த ஞானத்தாலே நம்பியிருப்பவர்களுக்கும் அந்த நம்பிக்கை இல்லாத எனக்கும் வித்தியாசம் பார்க்காமல் எனக்கு தேவரீரைத் தந்தருளிய இந்த நேர்மையை உண்மையாகச் சொல்லப் பார்த்தால் வாக்கின் சக்திக்கு உட்பட்டதன்று.

நாற்பத்தாறாம் பாசுரம். எம்பெருமானார் செய்தருளின உபகாரத்தை நினைத்துப் பார்த்து அதக்குத் தோற்றுத் திருவடிகளிலே வணங்குகிறார்.

கூறும் சமயங்கள் ஆறும் குலைய குவலயத்தே
மாறன் பணித்த மறை உணர்ந்தோனை மதியிலியேன்
தேறும்படி என் மனம் புகுந்தானை திசை அனைத்தும்
ஏறும் குணனை இராமாநுசனை இறைஞ்சினமே

வார்த்தை ஜாலமாய் மட்டும் இருக்கிற பாஹ்ய (வேதத்தை ஒத்துக்கொள்ளாத) ஆறு ஸமயங்களும் சிதிலமாய்ப்போம்படியாக இந்த தேசத்திலே ஆழ்வாரருளிச்செய்த த்ராவிடவேதமான திருவாய்மொழியை நன்றாக உணர்ந்தவர் எம்பெருமானார். ஞானமில்லாத நான் கீழ்ப்பாசுரத்தில் சொன்னபடி அவரே ப்ராப்யம் (குறிக்கோள்) மற்றும் ப்ராபகம் (வழி) என்று நம்பியிருக்கும்படி என்னுடைய ஹ்ருதயத்திலே வந்து புகுந்தருளினார் எம்பெருமானார். இவற்றாலே எல்லா திசைகளிலும் ப்ரஸித்தமான கல்யாண குணங்களையுடையரான அவரை நாம் வணங்கினோம்.

நாற்பத்தேழாம் பாசுரம். எல்லோருக்கும் பகவானிடத்தில் ருசியை உண்டாக்கும் எம்பெருமானார் தம்மளவில் செய்த நன்மையை நினைத்துப்பார்த்து, இப்படிப்பட்ட எனக்கு ஒப்பாக ஒருவரும் இல்லை என்கிறார்.

இறைஞ்சப் படும் பரன் ஈசன் அரங்கன் என்று இவ்வுலகத்து
அறம் செப்பும் அண்ணல் இராமாநுசன் என் அருவினையின்
திறம் செற்று இரவும் பகலும் விடாது என்தன் சிந்தையுள்ளே
நிறைந்து ஒப்பு அற இருந்தான் எனக்கு ஆரும் நிகர் இல்லையே

எல்லோருக்கும் புகலிடமாய் வேதாந்தத்தில் ப்ரஸித்தனான பரம்பொருள் தான் ஈச்வரன் என்பது தெரியும்படி வந்து கோயிலிலே சயனித்திருக்கும் பெரிய பெருமாளென்று இந்த அதர்மம் நடக்கும் லோகத்திலே உண்மையான தர்மத்தை அருளிச்செய்பவராய் அடியார்களுடைய இழவு பேறுகள் தம்மதாம்படியான ஸம்பந்தத்தையுடையவர் எம்பெருமானார். அவர் என்னுடைய அனுபவத்தாலும் ப்ராயச்சித்தத்தாலும் போக்குவதற்கரிய வினைக்கூட்டத்தை அழித்து, இரவும் பகுலும் இடைவிடாதே என்னுடைய ஹ்ருதயத்துள்ளே பூர்ணராய்க் கொண்டு, இங்கே இருக்கும் இருப்புக்கு ஒப்பாக வேறில்லை என்னும்படி எழுந்தருளியிருந்தார். இப்படிப்பட்ட பாக்யத்தைப் பெற்ற எனக்கு ஒருவரும் ஸமமில்லை.

நாற்பத்தெட்டாம் பாசுரம். இவர் சொன்னதைக் கேட்ட எம்பெருமானார் நீர் நம்மை விட்டாலும் நாம் உம்மை விட்டாலும் உமக்கு இந்த இன்பம் நிலைநிற்காதே என்று சொல்ல, அதற்கு என் தாழ்ச்சிக்கு தேவரீர் க்ருபையும் தேவரீர் க்ருபைக்கு என் தாழ்ச்சியும் தவிர வேறு புகல் இல்லாமல் இருக்க, வீணாக நாம் இனிப் பிரிவதற்கு என்ன காரணம் உள்ளது என்கிறார்.

நிகர் இன்றி நின்ற என் நீசதைக்கு நின் அருளின்கண் அன்றி
புகல் ஒன்றும் இல்லை அருட்கும் அஃதே புகல் புன்மையிலோர்
பகரும் பெருமை இராமாநுச இனி நாம் பழுதே
அகலும் பொருள் என் பயன் இருவோமுக்கும் ஆன பின்னே

ஒப்பில்லாமல் இருக்கும் என்னுடைய தாழ்ச்சிக்கு அந்த தாழ்ச்சியையே காரணமாகக் கொண்டு என்னை ஏற்றுக்கொள்ளும் தேவரீருடைய க்ருபையைத் தவிர ஒதுங்க வேறு நிழலில்லை. அந்த க்ருபைக்கும் மிகவும் தாழ்ந்தவர்களே சிறந்த பாத்ரம். ஆகையால் என்னுடைய தாழ்ச்சியைத் தவிர வேறு புகல் இல்லை. தோஷமே இல்லாதவர்கள் பேச்சுக்கு விஷயமான பெருமையையுடைய உடையவரே, நம் இருவருக்கும் இதுவே ப்ரயோஜனமானபின்பு, நாம் இனி வீணாக அகலுகைக்கு என்ன காரணம் உள்ளது?

நாற்பத்தொன்பதாம் பாசுரம். எம்பெருமானார் அவதரித்த பிறகு லோகத்துக்குண்டான ஸம்ருத்தியை நினைத்துப்பார்த்து மகிழ்கிறார்.

ஆனது செம்மை அறநெறி பொய்ம்மை அறு சமயம்
போனது பொன்றி இறந்தது வெம் கலி பூங்கமலத்
தேன் நதி பாய் வயல் தென் அரங்கன் கழல் சென்னி வைத்துத்
தான் அதில் மன்னும் இராமாநுசன் இத்தலத்து உதித்தே

அழகிய தாமரைப்பூக்களில் உண்டான தேனாகிற ஆறு விளைநீராகப் பாயும் வயல்களையுடைத்தாய் அழகிய கோயிலிலே சயனித்திருக்கிற பெரிய பெருமாளுடைய திருவடிகளை தலையிலே தாங்கிக்கொண்டு, தாம் அதிலே எப்பொழும் கூடியிருந்து அனுபவிக்கிறார் எம்பெருமானார். அவர் இந்த ஸ்தலத்திலே அவதரித்து வைதிகமாகையாலே செம்மையாக இருக்கும் தர்ம மார்க்கம் முன்பு அழிந்து கிடந்தது, இப்பொழுது மீண்டும் உண்டானது. வேதத்தை ஒத்துக்கொள்ளாததால் பொய்யான ஆறு ஸமயங்களும் முடிந்தன. க்ரூரமான கலியுகமானது “கலியும் கெடும்” என்கிறபடியே அழிந்தது.

ஐம்பதாம் பாசுரம். எம்பெருமானார் திருவடிகளில் தனக்கு இருக்கும் பேரன்பை நினைத்துப்பார்த்து மிகவும் மகிழ்கிறார்.

உதிப்பன உத்தமர் சிந்தையுள் ஒன்னலர் நெஞ்சம் அஞ்சிக்
கொதித்திட மாறி நடப்பன கொள்ளை வன் குற்றம் எல்லாம்
பதித்த என் புன் கவிப் பா இனம் பூண்டன பாவு தொல் சீர்
எதித் தலை நாதன் இராமாநுசன் தன் இணை அடியே

எல்லா திசைகளிலும் பரவியிருப்பதாய் இயற்கையானதாகையாலே பழையதான கல்யாண குணங்களையுடையவராய் யதிகளுக்குத் தலைவராய் நாதபூதராயிருக்கும் எம்பெருமானாருடைய சேர்த்தியழகையுடைய திருவடிகளானவை உயர்ந்த அதிகாரிகளுடைய திருவுள்ளங்களிலே ப்ரகாசிக்கும் தன்மையைக் கொண்டன. பாஹ்ய (வேதத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள்) மற்றும் குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லுபவர்கள்) ஆகியோருடைய ஹ்ருதயமானது அஞ்சி அந்த பயாக்னியாலே தவிக்கும்படி மாறி மாறி நடக்கும் தன்மையையுடையன. ஸம்ருத்தமாய் ப்ரபலமாயிருந்துள்ள தோஷங்களெல்லாம் சேர அழுத்திவைக்கப்பட்ட என்னுடிய தாழ்ந்த கவிகளாகிற பாசுரக்கூட்டங்களை அணிந்து கொண்டன.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  https://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org/
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment