திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 11 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< பாசுரங்கள் 1 – 10

Mahavishnu-universes-2

பதினொன்றாம் பாசுரம். மாமுனிகள், எல்லாப் பதார்த்தங்களும் தன்னைப்போலே துன்புறுவதாகச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் ஆய
அறியாதவற்றோடு அணைந்தழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து

தன்னடியார்களை அணுகும் ஸர்வேச்வரன் தன்னை மறைத்துக் கொள்ள, ஆழ்வாரின் சோகம் மிகவும் அதிகமாகி, விடாமல் அழும் நிலையை அடைந்தார்; தன் சோகத்தைப் புரிந்து கொள்ள அறியாத பதார்த்தங்களை கட்டிக்கொண்டு அழுதார்; இப்படிப்பட்ட ஆழ்வார் அடியார்களை தன்னுடைய கருணை மிகுந்த கண்களால் கடாக்ஷிப்பார்.

பன்னிரண்டாம் பாசுரம். மாமுனிகள், அவதாரங்களில் எம்பெருமானின் பரத்வத்தை, முன் பதிகத்துடன் தொடர்பில்லாமல், திடீரென்று நினைத்து, அதை மற்றவர்களுக்கு உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

திண்ணிதா மாறன் திருமால் பரத்துவத்தை
நண்ணி அவதாரத்தே நன்குரைத்த வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர் அவரடிக்கே ஆங்கவர் பால்
உற்றாரை மேலிடாதூன்

திடமான எண்ணத்தை உடைய ஆழ்வார் ஸர்வேச்வரனின் பரத்வத்தை அவன் அவதாரங்களில் அருளிச்செய்ததை அறிந்து, அவ்வாழ்வார் திருவடிகளை அடைபவர்கள், இந்த சரீரத்துடன் இருக்கும் பந்தத்தால் ஜயிக்கப்பட மாட்டார்கள்.

பதிமூன்றாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் ஆழ்வாருடன் ஏகதத்வம் (இருவரும் ஒருவரே) என்று எண்ணும்படிக் கூடின காலத்தில் தனக்குத் துணையாக இருந்து அனுபவிக்க மேலும் பலரைத் தேடிய ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஊனம் அறவே வந்து உள் கலந்த மால் இனிமை
ஆனது அனுபவித்தற்காம் துணையா வானில்
அடியார் குழாம் கூட ஆசை உற்ற மாறன்
அடியாருடன் நெஞ்சே!  ஆடு

ஆழ்வார் அனுகூலர்களுடன் கூடி இருந்து, எந்தக்குறையும் இல்லாமல் தன்னுடன் வந்து கூடிய ஸர்வேச்வரனுடன் ஏற்பட்ட கூடலின் இனிமையை அனுபவிக்க, பரமபதத்தில் இருக்கும் அடியார் குழாங்களுடன் கூட ஆசைப்பட்டார். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் அடியார்களுடன் வாழ ஆசைப்படு.

பதினான்காம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் மற்றும் அவன் அடியார்களைப் பிரிந்து வாடும் ஒரு பெண்ணின் தாய் பாவனையில் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஆடி மகிழ் வானில் அடியார் குழாங்களுடன்
கூடி இன்பம் எய்தாக் குறை அதனால் வாடி மிக
அன்புற்றார் தன் நிலைமை ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன் அந்தோ!

ஆழ்வார் பரமபதத்தில் இருக்கும் அடியார்களுடன் கூடி அனுபவிக்கவும் அவர்களுடன் ஆடி மகிழவும் முடியாமல் மிகவும் வருந்தினார்; அவர் மனம் கலங்கி அவர் அருகில் இருக்கும் அவர் மீது மிகவும் அன்பு கொண்ட மதுரகவி ஆழ்வார் போன்றோர்களால் ஆராயப்பட்டு, பேசப்பட்டார்; அந்தோ!

பதினைந்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன்னுடைய அடியார்களுடன் (திவ்ய ஆயுத மற்றும் ஆபரண வடிவில் இருக்கும் நித்யஸூரிகள்) வந்து, திருவாய்மொழி 2.4 “ஆடி ஆடி” பதிகத்தில் காட்டப்பட்ட வருத்தத்தைப் போக்கியதைப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அந்தாமத்தன்பால் அடியார்களோடு இறைவன்
வந்தாரத் தான் கலந்த வண்மையினால் சந்தாபம்
தீர்ந்த சடகோபன் திருவடிக்கே நெஞ்சமே!
வாய்ந்த அன்பை நாள் தோறும் வை

ஸர்வேச்வரன் ஸ்ரீவைகுண்டத்தில் தனக்கு இருக்கும் ஆசையை ஆழ்வாரிடம் கொண்டு, திவ்ய ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் வடிவில் இருக்கும் நித்யஸூரிகளுடன் வந்து, உதாரகுணத்துடன் ஆழ்வாருடன் நன்றாகக் கலந்து ஆழ்வாரின் வருத்தத்தைப் போக்கினான். நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் பொருத்தமான அன்பை எப்பொழுதும் வை.

பதினாறாம் பாசுரம். மாமுனிகள், ஈச்வரன் நம்மை “அப்பொழுதைக்கப்பொழுது என் ஆராவமுதம்” என்று அனுபவிக்கும் ஆழ்வார் தான் மிகத் தாழ்ந்தவர் என்று எண்ணி நம்மை விட்டுப் பிரிந்தால் என்ன செய்வது என்று தேவையில்லாமல் ஸந்தேஹப்பட, அந்த ஸந்தேஹத்தைப் போக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ் மாறன்
செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து நைகின்ற
தன்மைதனைக் கண்டு உன்னைத்தான் விடேன் என்றுரைக்க
வன்மை அடைந்தான் கேசவன்

நித்யவிபூதிக்குத் தலைவனான ஸர்வேச்வரன் ஆழ்வாருடன் வந்து கலக்க ஆழ்வார் தம்மை தரித்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு தன்னைப் பற்றித் தாழ்வாக நினைக்கத் தொடங்கினார்; அதைக் கண்டு வருந்தி மிகவும் உடைந்து போன எம்பெருமானைக் கண்ட ஆழ்வார், எம்பெருமானிடம் “நாம் உன்னைப் பிரிய மாட்டோம்” என்று சொல்ல, எம்பெருமான் தேறினான்.

பதினேழாம் பாசுரம். மாமுனிகள், தன்னுடன் இருக்கும் உறவால், தன்னுடைய முன்னோர்கள் மற்றும் பின்னோர்கள் பகவானுக்கு அடியவர்கள் ஆனதை ஆனந்தமாகப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

கேசவனால் எந்தமர்கள் கீழ் மேல் எழு பிறப்பும்
தேசடைந்தார் என்று சிறந்துரைத்த வீசு புகழ்
மாறன் மலரடியே மன்னுயிர்க்கெல்லாம் உய்கைக்கு
ஆறென்று நெஞ்சே!  அணை

ஆழ்வார் “நம்மைச் சேர்ந்தவர்கள், தங்களுடன் தொடர்புள்ள முன்னோர்கள் மற்றும் பின்னோர்களுடன் ஒளியைப் பெற்றனர்” என்று தெளிவாக அருளிச்செய்தார்; இவ்வாழ்வாருடைய பெருமை எல்லா இடங்களிலும் பரவியுள்ளது; நெஞ்சே! இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளையே எல்லா ஆத்மாக்களுக்கும் மோக்ஷத்துக்கு உபாயமாகக் கொண்டு, அத்திருவடிகளில் சரணடைவாயாக.

பதினெட்டாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய தன்மையை உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அணைந்தவர்கள் தம்முடனே ஆயன் அருட்காளாம்
குணம் தனையே கொண்டு உலகைக் கூட்ட இணங்கி மிக
மாசில் உபதேசம் செய் மாறன் மலர் அடியே
வீசு புகழ் எம்மா வீடு

எம்பெருமான் தன்னைச் சரணடையும் நித்யஸம்ஸாரிகளை நித்யஸூரிகளுடன் சேர்க்கக்கூடிய மோக்ஷத்தைக் கொடுக்கிறான்; எம்பெருமானின் இத்தன்மையை ஆழ்வார் குற்றமற்ற உபதேசமாக அருளிச்செய்து இந்த ஸம்ஸாரிகளும் கண்ணனின் அருளைப் பெறும்படி செய்தார்; இப்படி எங்கும் பரவிய பெருமை வாய்ந்த ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே சிறந்த மோக்ஷ ஸ்தானம்.

பத்தொன்பதாம் பாசுரம். மாமுனிகள், அடைய வேண்டிய குறிக்கோளை நிர்ணயிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

எம்மா வீடும் வேண்டா என்தனக்கு உன் தாளிணையே
அம்மா அமையும் என ஆய்ந்துரைத்த நம்முடைய
வாழ் முதலாம் மாறன் மலர்த் தாள் இணை சூடிக்
கீழ்மையற்று நெஞ்சே!  கிளர்

ஆழ்வார் எம்பெருமானிடம் “எம்பெருமானே! தேவரீரின் திருவடிகளே எனக்குப் போதும்” என்றார்.  இப்படிச் சொன்ன ஆழ்வாரின் திருவடித் தாமரைகளே நம்முடைய ஸத்தைக்குக் காரணம். தாழ்ந்த விஷயங்களை விட்டு இவ்வாழ்வாரின் திருவடிகளை உங்கள் தலையில் வைத்துக் கொண்டால், நீங்கள் உயர்ந்த கதியை அடையலாம்.

இருபதாம் பாசுரம். மாமுனிகள், “திருமாலிருஞ்சோலை என்னும் திருமலையைப் புகலாகக் கொள்வதே பேற்றுக்கு வழி” என்று உபதேசிக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். அன்றிக்கே, மாமுனிகள் ஆழ்வார் திருமாலிருஞ்சோலை மலையையே சிறந்த குறிக்கோளாக அனுபவிப்பதை அருளிச்செய்கிறார் என்றும் சொல்லலாம்.

கிளரொளி சேர் கீழுரைத்த பேறு கிடைக்க
வளரொளி மால் சோலை மலைக்கே  – தளர்வறவே
நெஞ்சை வைத்துச் சேருமெனும் நீடு புகழ் மாறன் தாள்
முன் செலுத்துவோம் எம் முடி

முன்பு அருளிச்செய்த, மிகவும் ஒளிவிடும் புருஷார்த்தத்தை அடைய, ஆழ்வார் எம்பெருமானின் இருப்பிடமான, வளர்ந்துவரும் ஒளிபடைத்த திருமாலிருஞ்சோலையை, தளராமல், மனதை வைத்து அடையுங்கோள் என்று அருளிச்செய்தார்; இத்தனை பெருமை பெற்ற ஆழ்வாரின் திருவடிகளில், நம் தலையை வைப்போம்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-11-20-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment