திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 8.10 – நெடுமாற்கு

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 7.4

emperumAnAr_ThirumEniyil_pUrvacharyargaL (Large)

ஆத்மாவினுடைய உண்மையான ஸ்வரூபத்துக்கு ஏற்ற வ்ருத்தி (செயல்) அடியார்களுக்குத் தொண்டு செய்வதே என்ற விஷயத்தை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் தானும் அனுபவித்து மற்றவர்களுக்கும் உபதேசமாக அருளிச்செய்கிறார். பகவானுக்குத் தொண்டு செய்வது முதல் நிலை. அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்வது என்பது இறுதி நிலை என்ற விஷயத்தை ஆழ்வார் இப்பதிகத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்.

முதல் பாசுரம். அடியார்களிடத்தில் அன்புகொண்டவனான ஸர்வேச்வரனுக்கு அடியார்களான பாகவத விஷயமான சேஷத்வத்துக்கு மூன்று லோக ஐச்வர்யம் ஒப்பன்று என்கிறார்.

நெடுமாற்கடிமை செய்வேன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்றற்ற தீக்கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இதுவல்லால்
விடுமாறென்பதென்? அந்தோ! வியன் மூவுலகு பெறினுமே

எல்லையில்லாத ஆசையை உடைய ஸர்வேச்வரனுக்கு அடிமைசெய்பவன்போல அவனை மனதிலே நினைத்த நிலையில், என்னுடைய தடுமாற்றம் போகும்படியும், என்னிடத்தில் இருக்கும் பொல்லாவழிகள் எல்லாம் வஞ்சித்து என்னை விட்டுப்போயின. இனி, தகுந்தது எது என்று பார்த்தால் அவனுக்கு அடியவர்களான பாகவதர்களுடைய திருவடிகளையே அடைவதைத் தவிர பரந்த மூன்று உலகங்களின் செல்வத்தையும் பெற்றாலும் கொடிய, பெரிய பாபத்தை உடைய நான் அந்த அடியவர்களுக்கு அடிமையாக இருப்பதை விடுவது என்று சொல்லவும் கூடுமோ? ஐயோ!

இரண்டாம் பாசுரம். மழைமேகம்போலே அடியார்கள் விஷயத்தில் வள்ளல்தன்மையுடைய ஸர்வேச்வரன் திருவடிகளிலே அடிமை செய்கிற பாகவதர்களுக்கு ஐச்வர்யோத்தோடு கூடின ஆத்மானுபவமும் ஒப்பன்று என்கிறார்.

வியன் மூவுலகு பெறினும் போய்த் தானே தானே ஆனாலும்
புயல் மேகம் போல் திருமேனி அம்மான் புனை பூங்கழல் அடிக் கீழ்
சயமே அடிமை தலை நின்றார் திருத்தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ பாவியேனுக்கே?

பெரியதான மூவுலக ஐச்வர்யத்தைப் பெற்றாலும், இதில் ஈடுபாடில்லாமல் தன்னைத் தானே அனுபவிக்கப் பெற்றாலும், மழைமேகம்போலே திருமேனியையுடைய ஸர்வேச்வரனுடைய புனையப்பட்ட புஷ்பங்களையும் வீரக்கழலையுமுடைய திருவடிகளின்கீழே ஸ்வயம்ப்ரயோஜனமாய் இருக்கிற தொண்டின் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடைய உயர்ந்ததான திருவடிகளை வணங்கி இந்த லோகத்திலேயே பலனாக நான் பெற்றதான ஆனந்தத்துக்கு இப்படி வித்யாசத்தைச் சொல்ல வேண்டும்படி பாபத்தைப்பண்ணின எனக்கு அந்த ஐச்வர்ய கைவல்யங்கள் சேருமோ?

மூன்றாம் பாசுரம். எல்லோருடனும் கூடும் தன்மையை உடைய வாமனன் திருவடி பெறுகையும், அவனடியார்களான பாகவதர்கள் இங்கே இருக்கிற இதைவிட உயர்ந்ததல்ல என்கிறார்.

உறுமோ பாவியேனுக்கு இவ்வுலகம் மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என் செந்தாமரைக் கண் திருக்குறளன்
நறு மா விரை நாண்மலர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே

மூன்று லோகங்களும் ஒரே செயலிலே நிறையும்படி சிறிய ஆனால் அழகிய மற்றும் பெருமை வாய்ந்த திருமேனியை வளரும்படி பண்ணினவனாய் எனக்கு மிகவும் இனிமையாய், சிவந்த தாமரை போலே இருக்கிற திருக்கண்களையுடைய ஸ்ரீவாமனனுடைய நறுமணம் வீசும் சிறந்ததான தேனையுடைய செவ்விப்பூவைப்போலே இருக்கிற திருவடிகளின்கீழே சென்றடைவது, அந்த எம்பெருமானுக்கு அடியவர்களான மனுஷ்யராக இருக்கும் சிறுமையும் மஹாபுருஷர்களாய் இருக்கும் மேன்மையையும் உடையவராய் என்னை அடிமைகொண்டவர்கள் இந்த லோகத்திலே நம் கண்வட்டத்திலே இருக்க அதைத் தவிர, இப்படி அவனுக்கடிமையாக இருப்பதற்கும் அவனடியார்களுக்கு அடிமையாக இருப்பதற்கும் வித்யாசம் சொல்ல வேண்டும்படியான பாபத்தையுடைய எனக்குச் சீரியதோ? அடியார்களுக்கு அடிமையாக இருப்பதே சிறந்தது என்று கருத்து.

நான்காம் பாசுரம். அடியார்கள் இருக்கும் இவ்வுலகில் அவர்களுக்கு உகப்பாகும்படி ஆபத்தில் ரக்ஷிக்கும் எம்பெருமானுடைய கைங்கர்யமும் கிடைத்தால் குறையில்லை என்கிறார்.

இங்கே திரிந்தேற்கிழுக்குற்றென்? இரு மா நிலம் முன் உண்டுமிழ்ந்த
செங்கோலத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப் புலன் கொள் வடிவென் மனத்ததாய்
அங்கேய் மலர்கள் கையவாய் வழிபட்டோட அருளிலே

பரந்ததான சிறந்ததான ஜகத்தை ப்ரளயாபத்து வந்த காலத்திலே அமுதுசெய்து பின்பு உமிழும்போது சிவந்த அழகிய பவளம்போலே இருக்கிற திருவதரத்தையும், சிவந்த தாமரைபோன்ற கண்ணையும் உடையவன் என் ஸ்வாமி. வளர்ந்து கிளம்புகிற தன் குணங்கள் வாக்குக்கு விஷயமாகவும் நம் புலன்களைக் கவரும் திருமேனி என் மனத்திலேயாகவும் அந்த எம்பெருமானுக்குத் தகுந்ததான மலர்களை கையிலே கொள்ளவும் அடியார்களின் வழியிலே நானும் உடன்பட்டு இங்கே நடக்கும்படி அருளுமாகில் இங்கே திரியும் எனக்கு என்ன தாழ்ச்சி ஏற்படும்? தாழ்ச்சி ஏற்படாது என்று கருத்து.

ஐந்தாம் பாசுரம். பரமபதத்திலே ஆனந்தத்துடன் இருந்தாலும் அத்துடன் இவ்வுலகத்து செல்வங்களும் கூடினாலும், இங்கே ஒரு சரீரத்தில் இருந்து கொண்டு அடியார்களுக்கு உகப்பாகத் திருவாய்மொழி பாடி அனுபவிப்பதற்கு ஒப்பாகுமா என்கிறார்.

வழிபட்டோட அருள் பெற்று மாயன் கோல மலர் அடிக் கீழ்
சுழிபட்டோடும் சுடர்ச் சோதி வெள்ளத்து இன்புற்றிருந்தாலும்
இழிபட்டோடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழிபட்டோடும் கவி அமுதம் நுகர்ச்சி உறுமோ? முழுதுமே

நித்யகைங்கர்யத்திலே நெறிபட்டுச் செல்லும்படி அவன் அருளைப் பெற்று ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை உடைய ஸர்வேச்வரனுடைய மிகவும் இனிமையான திருவடிகளின்கீழே சுழித்து ஓடுகிற ப்ரபையை உடைய ஒளிக்கற்றையைப்போன்ற பரமபதத்திலே மிகவும் ஆனந்தத்துடன் இருந்தாலும் கீழே சொன்ன ஐச்வர்ய கைவல்யங்கள் கிடைத்தாலும், மிகவும் தாழ்ந்த சரீரத்திலே பிறந்து அவனுடைய குணங்களை யான் கற்று சொல்லாய்ப் பெருகும் கவியாகிற அமுதமான திருவாய்மொழியை அடியார்களுடன் கூடியிருந்து அனுபவித்து ரஸிக்கைக்குச் சேருமோ?

ஆறாம் பாசுரம். விரோதிகளைப் போக்கும் ஸர்வேச்வரனின் குணகணங்களை அடியார்களுக்கு இன்பம் கொடுக்கும்படித் திருவாய்மொழி மூலம் அனுபவிக்குமதுக்கு ஜகத்காரண பூதனான ஈச்வரனாயிருக்கும் இருப்புத்தான் ஒப்பாகுமோ? என்கிறார்.

நுகர்ச்சி உறுமோ? மூவுலகின் வீடு பேறு தன் கேழில்
புகர்ச் செம் முகத்த களிறட்ட பொன் ஆழிக் கை என் அம்மான்
நிகர்ச் செம்பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம் 
தகர்த்துண்டு உழலும் புட்பாகன் பெரிய தனி மாப் புகழே

தனக்கு ஒப்பில்லாத, ஒளியையுடைய சீற்றத்தாலே சிவந்த முகத்தையுடைய ஆனையை அழித்த, விரும்பத்தக்க திருவாழிமோதிரத்தை அணிந்த திருக்கையை உடையவன் என் ஸ்வாமி. ஜாதிக்கு ஏற்ற சிவந்த மயிர்களையும் அக்னிசக்ரம் போலே இருக்கிற விழிகளையும் உடைய உயரமான சரீரத்தையுடைய அஸுரர்களுடைய ப்ராணன்களையெல்லாம் தகர்த்து உண்டு திரியும் பெரிய திருவடியை ஆளக்கூடியவனுடைய பெரிய தனித்துவம் வாய்ந்த மிகவும் இனிமையான குணகணங்களை அடியார்களுக்கு விருப்பமான திருவாய்மொழி மூலம் அனுபவித்து ரஸிப்பதை மூன்று உலகங்களின் விஷயமான உருவாக்கும் சக்தியைப் பெற்றிருக்கும் ஈச்வரனாக இருக்கும் தன்மை கிட்டமுடியுமோ?

ஏழாம் பாசுரம். எல்லா உலகுக்கும் காரணனான ஸர்வேச்வரன் திருவடிகளை அடைவதைவிட அவனுக்கு அடியார்களான பாகவதர்களுடைய சேர்த்தியே நமக்கு என்றும் வேண்டும் என்கிறார்.

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாத்தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகமூன்றும் முளைப்பித்த
தனிமாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே

தனித்துவமாய் மிகவும் உயர்ந்ததான புகழை எல்லாக்காலமும் நிற்கும்படித் தானே ஸ்ருஷ்டியில் ஈடுபட்டு, ஸ்ருஷ்டியைப் பற்றிச் சிந்திப்பதாய், ப்ரஹ்மம் என்ற வார்த்தையால் சொல்லப்படும், ப்ரதானமாய் உள்ள உபாதான காரணமான மூன்று உலகங்களையும் படைத்த, தனித்துவம் வாய்ந்த பரதேவதையின் ஸுகுமாரமான திருவடிகளின்கீழே சேருவதைவிட அவன் அடியார்களின் மிகவும் சிறந்ததான சேர்த்தியின் இன்பமே நமக்கு எப்பொழுதும் வாய்க்க வேண்டும்.

எட்டாம் பாசுரம். தனிக்கடலில் சயனித்திருக்கும் ஸர்வேச்வரனுடைய அடியார்களோடு உண்டான சேர்த்தியே நமக்கு எப்பொழுதும் வேண்டும் என்கிறார்.

நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர்க் கடலைப் படைத்துத் தன்
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
நீளும் படர் பூங்கற்பகக் காவும் நிறை பன்னாயிற்றின்
கோளும் உடைய மணிமலைபோல் கிடந்தான் தமர்கள் கூட்டமே

குளிர்ந்த ஜலத்தையுடைய கடலைப் படைத்து தனக்கென்று இருப்பதாய் வேதத்தில் காட்டப்பட்ட ஒப்பில்லாத திருவடிகளையும் திருத்தோள்களையும் திருமுடிகளையும் (கிரீடம்) பலவாகப் பரப்பி, நீள்கின்ற, பணைத்து அழகான கற்பகச்சோலையையும் நிறைந்த பலவான ஆதித்ய தேஜஸ்ஸையும் உடைய மாணிக்கமலைபோலே சயனித்திருப்பவனின் அடியார்களோடு ஏற்பட்ட சேர்த்தியானது நமக்கு எப்பொழுதும் கிடைக்க வேண்டும்.

ஒன்பதாம் பாசுரம். எதிரிகளைப் போக்க உதவும் திவ்யாயுதங்களை உடைய ஸர்வேச்வரனுக்கு அடியார்களான பாகவதர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அடியவராகிற உறுதிப்பாடு நமக்கு உண்டாகவேண்டும் என்கிறார்.

தமர்கள் கூட்ட வல் வினையை நாசம் செய்யும் சதிர் மூர்த்தி
அமர்கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டாதி பல் படையன்
குமரன் கோல ஐங்கணை வேள் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர்களாம் சதிரே வாய்க்க தமியேற்கே

அடியார்களுடைய கூட்டத்துக்கு வரும் வலிய பாபங்களுடைய விநாசத்தைச் செய்யும் ஸாமர்த்யத்தை உடைய ஸ்வாமியாய், யுத்தத்துக்குத் தயாராய் இருக்கும் ஸ்ரீபஞ்சாயுதங்கள் தொடக்கமான பல ஆயுதங்களை உடையவனாய் பருவத்தில் இளமையை உடையவனாய், அழகுக்கு உதாரணமான ஐந்து அம்புகளை உடைய காமனுக்கும் தந்தையானவனுடைய குற்றம் இல்லாத அடியார்களின் அடியார்களுக்கும் அடியார்களைப் பற்ற தாஸ்ய ஸம்பந்தத்தை உடையோம் ஆகிற அருளானது ஸம்ஸாரத்தில் துணையற்றவர்கள் ஆன நமக்கு உண்டாக வேண்டும்.

பத்தாம் பாசுரம். மிகவும் இனிமையான திருமேனி மற்றும் அவயவங்களையுடைய ஸர்வேச்வரனைப் பிரியாமல் இருக்கும் அடியார்களின் ஸம்பந்தி பரம்பரையின் எல்லையில் அடிமை செய்து நடக்கவேண்டியது கல்பந்தோறும் உண்டாக வேண்டும் என்கிறார்.

வாய்க்க தமியேற்கு ஊழி தோறூழி ஊழி மாகாயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்கம் இல்லா அடியார் தம் அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடே

அழகின் உயர்த்தியையுடைய காயாம்பூ நிறத்தைக் கொள்ளும் திருமேனியையும் நான்கு திருத்தோள்களையும் விரும்பத்தக்க திருவாழியை உடைய திருக்கைகளையும் உடைய, இவ்வடிவழகைக் காட்டிக் கொடுத்து என்னை எழுதிக்கொண்ட ஸ்வாமி எம்பெருமான். அவனை பிரிவில்லாதபடி அனுபவிக்கிற அடியார்களுக்கு தனித்துவம் வாய்ந்த சேஷ பரம்பரையில் உள்ளவர்கள் எனக்கும் என்னை உடையவர்களுக்கும் தலைவர்கள். அவர்களுக்கே தொண்டு செய்யும் குலம், செல்லும்படியராய் சிறந்ததான ஸ்வீகாரத்தைச் செய்வது ஒரொரு மஹா கல்பம் தோறும் இங்கே தனியனாக இருக்கும் எனக்கும் உண்டாக வேண்டும்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக, அடியார்களுக்குத் தொண்டு செய்யும் குடும்பம் அமைவதை அருளிச்செய்கிறார்.

நல்ல கோட்பாட்டுலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அந்தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே

உயர்ந்ததான இடத்தை உடைய மூன்று லோகங்களிலும் எம்பெருமான் வ்யாப்தனாய், மலர்ந்த தாமரைப்பூப்போலே இருக்கிற திருக்கண்களை உடையவனைப் பற்ற, அழகிய குளிர்ந்த குருகூர்க்குத் தலைவரான நம்மாழ்வாரால் அருளிச்செய்யப் பட்ட ஆயிரம் பாசுரங்களுக்குள் இந்தப் பதிகத்தையும் வல்லவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனைவி மக்களை உடையவராய்க் கொண்டு நல்ல பதத்தை, குடும்ப வாழ்க்கையில் நன்றாக வாழப் பெறுவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment