நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – இரண்டாம் திருமொழி – நாமமாயிரம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< முதல் திருமொழி – தையொரு திங்கள்

எம்பெருமான் இப்படி இவர்கள் வேறு தேவதையான மன்மதனின் காலில் விழுந்து ப்ரார்த்திக்கும்படி இவர்களை நாம் கைவிட்டோமே என்று மனம் நொந்தான். திருவாய்ப்பாடியில் தான் இருந்த காலத்தில் அங்கிருந்த இடையர்கள் இந்த்ரனுக்குப் படையல் வைக்க, பரதெய்வமான நாம் இங்கே இருக்கும்போது தாழ்ந்த தேவதையான இந்த்ரனை இவர்கள் வணங்குகிறார்களே என்று வருந்தி அவர்களை கோவர்தன மலைக்கே அந்தப் படையலை வைக்கும்படிச் செய்து தானே அதை உண்டானே. அதே போல தன்னையே நம்பி இருக்கும் ஆண்டாளும் அவள் தோழிகளும் மற்ற தேவதையிடத்திலே செல்லும்படித் தான் வைத்ததை நினைத்துப் பார்த்து, இனி இவர்களை நாம் காக்கவைக்கக் கூடாது என்றெண்ணி இவர்கள் இருக்கும் இடத்துக்கு வர, இவர்களோ அவனிடத்தில் கோபம் கொண்டு சிற்றில் (சிறு மணல் வீடு) கட்டி விளையாடுவதாக அவனை மதிக்காமல் இருந்தனர். அதைக்கண்டு அவன் இவர்களுடைய சிற்றில்களை அழிக்கப் பார்க்க, இவர்கள் அதைத் தடுக்க, இவ்வாறு பெரும் ஊடலுக்குப் பின் கூடலும் அதற்குப் பின் மீண்டும் பிரிவாக முடிந்தது.

முதல் பாசுரம். இது பங்குனி மாதம் ஆகையாலே மன்மதன் வரும் வழியில் நாங்கள் சிற்றில் இழைக்கிறோம். இதை நீ கலைப்பது சரியன்று என்கிறார்கள்.

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா! நரனே! உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன்போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

எம்பெருமான் நர நாராயண ரிஷிகளாக அவதாரம் செய்ய, தேவர்கள் எம்பெருமானுடைய ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் செய்வதாகவும், பரமபதத்தில் இருக்கும் நாராயணா என்றும் ஸ்ரீ ராமனாக நர ரூபத்தில் அவதரித்தவனே என்றும் நித்யஸூரிகள் எம்பெருமானுடைய ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் செய்வதாகவும் இரண்டு அர்த்தம். அப்படிப்பட்ட எம்பெருமானே! எங்கள் மாமியான யசோதைப் பிராட்டி உன்னைத் தன்னுடைய மகனாகப் பெற்றால், எங்களுக்குத் துன்பப்படுவதில் இருந்து விடுதலை கிடைக்குமா? மன்மதன் வரும் காலம் என்று பங்குனி மாதத்தில் அவன் வரும் வழியை அலங்கரித்தோம். தீம்புகளை செய்யுமவனாய், ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனே! நாங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து எங்களுடைய சிற்றில்களைச் சிதைக்காதே.

இரண்டாம் பாசுரம். நாங்கள் மிகவும் முயன்று கட்டியிருக்கும் சிற்றில்களைச் சிதைக்காதே என்கிறார்கள்.

இன்று முற்றும் முதுகு நோவ இருந்திழைத்த இச்சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும் ஆர்வம் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்!
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே

இன்று முழுவதும் முதுகு நோகும்படி ஒரே இடத்தில் அசையாமல் இருந்து முயன்று செய்த இந்தச் சிற்றிலை நாங்கள் நன்றாகப் பார்த்து அனுபவிக்கும்படி எங்கள் ஆசையை நிறைவேற்று. மஹா ப்ரளயம் வந்த காலத்திலே ஒரு சிறு குழந்தையாகி ஓர் ஆலந்தளிரிலே சயனித்திருந்தவனாய் எங்களுக்குக் காரணபூதனானவனே! உனக்கு எங்கள் விஷயத்தில் எப்பொழுதும் இரக்கம் இல்லாமல் இருப்பதற்கு எங்கள் பாபமே காரணமாகும்.

மூன்றாம் பாசுரம். சிற்றில் சிதைப்பதையும் கடைக்கண்களால் எங்களை நலிவதையும் நிறுத்தவேண்டும் என்கிறார்கள்.

குண்டுநீர் உறை கோளரீ! மத யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம்
தெண்திரைக் கடல் பள்ளியாய்! எங்கள் சிற்றில்  வந்து சிதையேலே

ஆழமான ப்ரளய நீர்க் கடலிலே சயனித்திருக்கும் பலம் மிகுந்த சிங்கத்தைப் போன்றவனே! மதம்கொண்ட கஜேந்த்ராழ்வானுக்கு வந்த துன்பத்தைப் போக்கியவனே! உன்னைக் கண்டு ஆசைப்படும் எங்களை உன்னுடைய கடைக்கண்களால் பார்த்துத் துன்புறுத்தாதே. நாங்கள் வண்டலில் உள்ள சிறிய மணலைத் தெளித்து வளையல்களணிந்த கைகளால் கஷ்டப்பட்டு இந்த சிற்றில்களைக் கட்டியுள்ளோம். தெளிந்த அலைகளையுடைய திருப்பாற்கடலைப் படுக்கையாகக் கொண்டவனே! எங்கள் சிற்றில்களை வந்து அழிக்காதே.

நான்காம் பாசுரம். உன் முகம் என்னும் மாய மந்த்ரத்தை வைத்து எங்களை மயக்கி எங்கள் சிற்றிலை அழிக்காதே என்கிறார்கள்.

பெய்யுமா முகில் போல் வண்ணா! உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி  மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

மழையாகப் பெய்து கொண்டிருக்கும் கரிய மேகம் போன்ற திருநிறத்தை உடையவனே! உன் தாழ்ந்த பேச்சுக்களும் செயல்களும் எங்களை பிச்சேற்றிக் கலங்கச்செய்வதற்கு உன்னுடைய திருமுகம் சொக்குப்பொடியோ? செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடையவனே! “இவர்கள் தாழ்ந்தவர்கள், இளம் பிள்ளைகள்” என்று பிறர் சொல்லுவதற்கு பயந்து, நீ வருந்தும்படி நாங்கள் வார்த்தை சொல்லாமல் இருக்கிறோம். எங்கள் சிற்றில்களை வந்து அழிக்காதே.

ஐந்தாம் பாசுரம். நீ என்ன செய்தாலும் நாங்கள் கோபப்படாமல் இருப்பது உன் கண்களுக்குத் தெரியவில்லையா என்கிறார்கள்.

வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றுமிலோம் கண்டாய்
கள்ள மாதவா! கேசவா! உன் முகத்தன கண்கள் அல்லவே

கபடச் செயல்களையுடைய மாதவா! கேசவா! வெளுத்துச் சிறுத்திருக்கும் மணல்களைக் கொண்டு நாங்கள் தெருவிலே எல்லோரும் ஆச்சர்யப்படும்படி தெளித்து இழைத்த அழகிய சிற்றில்களை நீ அழித்தாயாகிலும், எங்கள் நெஞ்சு உடைந்து உருகுமே தவிர, உன் மேல் சிறிதும் கோபப்படமாட்டோம். உன் திருமுகத்தில் இருப்பது கண்கள்தானே? அவற்றைக் கொண்டு நீயே பார்க்கலாமே.

ஆறாம் பாசுரம். சிற்றில் அழிப்பது என்று நீ வேறொன்றை நினைக்கிறாய். அது எங்களுக்குப் புரியவில்லை என்கிறார்கள்.

முற்றிலாத  பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள் தொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா! எம்மை வாதியேல்

கடலில் அணைகட்டி ராக்ஷஸருடைய குலங்களை முழுவதும் அழித்து இலங்கையை யுத்தபூமியாக்கிய வீரனே! சிறு பிள்ளைகளாய், முலைகளும் கிளரப்பெறாத எங்களை தினமும் சிற்றில் அழிப்பதை ஒரு காரணமாகக் கொண்டு நீ செய்யும் செயல்களுக்கு உட்கருத்து ஒன்று உண்டு. அந்தக் கருத்தை நாங்கள் கற்று அறியவில்லை. எங்களை நீ துன்புறுத்தாதே.

ஏழாம் பாசுரம். உன்னுடைய தர்மபத்தினிகளின் மேல் ஆணை, எங்கள் சிற்றில்களை அழிக்காதே என்கிறார்கள்.

பேதம் நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன்சுவை
யாதும் ஒன்றறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்?
ஓதமா கடல் வண்ணா! உன் மணவாட்டிமாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய்! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே

உன் பேச்சின் விதங்களை நன்றாக அறிய வல்லவர்களோடு இப்பேச்சுக்களை நீ பேசினால் உனக்கு மிகவும் இனிமையாக இருக்கும். ஒன்றும் அறியாத சிறு பெண்களான எங்களை நீ துன்புறுத்துவதால் என்ன பயன் உண்டு? அலைகள் பொருந்திய கடல்போன்ற திருநிறத்தை உடைய கண்ணனே! கடலில் அணை கட்டியவனே! உன்னுடைய தர்மபத்தினிகளின் மேல் ஆணை. எங்கள் சிற்றில்களை வந்து அழிக்காதே.

எட்டாம் பாசுரம். எவ்வளவு இனிமையான பதார்த்தமானாலும், நெஞ்சில் கசப்பு இருந்தால், அது சுவையாக இருக்காது என்று தெரிந்துகொள் என்கிறார்கள்.

வட்டவாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்!
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல் வண்ணனே!

ஒளிபொருந்திய திருவாழியைத் திருக்கையில் ஏந்தி நிற்கும் எம்பெருமானே! கடல்போன்ற வடிவை உடையவனே! வட்டமான வாயைக் கொண்ட சிறிய பானையோடு, சிறிய குச்சியையும் மணலையும் கொண்டுவந்து இஷ்டப்படி விளையாடும் எங்களுடைய சிற்றிலை மீண்டும் அழிப்பதனால் என்ன பயன்? கையால் தொட்டும் காலால் உதைத்தும் துன்புறுத்தாதே. நெஞ்சம் கசந்து போனால், சர்க்கரைக் கட்டியும் ருசிக்காது என்பதை அறிவாய்தானே?

ஒன்பதாம் பாசுரம். கண்ணனோடு கூடியதைச் சொல்லி அனுபவிக்கிறார்கள்.

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ? கோவிந்தா!
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டளந்து கொண்டாய்! எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்?

கோவிந்தா! ஒரு திருவடியினால் பூலோகம் முழுதும் தாவி அளந்து, மற்றொரு திருவடியை ஆகாசத்தளவும் நீட்டி மேலுலகங்களையும் அளந்து கொண்டவனே!  நாங்கள் விளையாடுகிற முற்றத்திலே வந்து புகுந்து, உனது திருமுகத்தைக் காட்டி, புன்முறுவல் செய்து, எங்கள் சிற்றிலையும் நெஞ்சையும் அழிப்பாயோ? அதற்கு மேலே எங்களைப் பற்றி அணைத்துக் கொண்டாய் என்றால் அருகில் இருப்பவர்கள் என்ன வார்த்தை சொல்லுவார்கள்?

பத்தாம் பாசுரம். இந்தப் பத்துப் பாசுரங்களை அர்த்தத்துடன் அனுபவிக்க வல்லவர்களுக்குப் பலம் சொல்லி முடிக்கிறாள்.

சீதை வாய் அமுதம் உண்டாய்! எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே

ஸீதாப் பிராட்டியின் அதராம்ருதத்தைப் பருகினவனே! “நாங்கள் கட்டும் சிற்றில்களை நீ சிதைக்காதே” என்று சொல்லும், வீதியில் விளையாடும் இடைப் பெண்களுடைய மழலைச் சொற்களை உட்கொண்டு, வேதம் சொல்லும் வாயை உடையவர்களும், வேதத்தில் சொல்லப்படும் கர்மங்களைச் செய்பவர்களுமான மேன்மக்கள் வாழுமிடமான ஸ்ரீவில்லிபுத்தூருக்குத் தலைவரான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளுடைய (என்னுடைய) தமிழ்ப் பாசுரங்களை ஓதவல்லவர்கள் எந்தக் குறையும் இல்லாமல் பரமபதத்தை அடைவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment