நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – முதல் திருமொழி – தையொரு திங்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

நாச்சியார் திருமொழி

<< தனியன்கள்

ஆண்டாள் திருப்பாவையில் எம்பெருமானை உபாயமாகக் கொண்டாள், அவனுக்குச் செய்யும் தன்னலமற்ற தொண்டே உபேயம் என்று அறிவித்தாள். இந்த நினைவு இருந்தால் எம்பெருமான் தானே பலனைக் கொடுப்பான். ஆனால் ஆண்டாள் நாச்சியாருக்கோ, எம்பெருமான் வந்து அவளைக் கைக்கொண்டு அவள் ஆசையை நிறைவேற்றவில்லை. எம்பெருமான் மீதிருந்த அளவிறந்த காதலாலும் அவன் தன்னை உடனே வந்து கைக்கொள்ளாததாலும் மிகவும் கலக்கத்தை அடைந்தாள். திருவயோத்தியில் இருந்த பிராட்டி உட்பட எல்லோரும் பெருமாளான ஸ்ரீராமனைத் தவிர வேறொரு தெய்வத்தை அறியாதவர்களாக இருந்தாலும், அந்தப் பெருமாளுக்கு நன்மையை வேண்டி எல்லா தேவதைகளையும் வணங்கினர். பெருமாளை வேறு எந்த உருவத்திலும் அனுபவிக்க மாட்டேன் என்று கூறிய திருவடியும் (ஹனூமான்) அந்தப் பெருமாளின் நன்மைக்காக வாசஸ்பதி என்கிற தேவதையை வணங்கினாரே. அப்படியே ஆண்டாள் நாச்சியாரும் காமதேவனைத் தன்னை எம்பெருமானுடன் சேர்த்து வைக்கும்படி வேண்டுகிறாள் இங்கே. பகவத் பக்தியால் வரும் அஜ்ஞானம் மிக உயர்ந்தது என்பதை நம் பூர்வாசார்யர்கள் காட்டியுள்ளனர். பெரியாழ்வார் எம்பெருமானுக்குப் புஷ்பங்களைக் கொண்டு மாலைகளைச் சமர்ப்பித்தாப்போலே, ஆண்டாள் நாச்சியாரும் தன்னை எம்பெருமானிடத்திலே சேர்த்து வைக்கும் மன்மதனுக்கு அவனுக்கு விருப்பமான காட்டுப்பூக்கள் முதலியவற்றைச் சமர்ப்பிக்கிறாள். ஆண்டாள் நாச்சியார் இப்படிச் செய்தாலும் அவளுடைய அளவிறந்த பிரிவாற்றாமைக்கு அது ஏற்கும், ஆனால் நாம் மற்ற தேவதைகளை வணங்குவது நம் ஸ்வரூபத்துக்குச் சேராது.

முதல் பாசுரம். இதில் காமனையும் அவன் தம்பி சாமனையும் தான் வணங்கும் க்ரமத்தை விளக்குகிறாள்.

தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்க தேவா!
உய்யவுமாங்கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே

தை மாதம் முழுவதும் அவன் வரக்கூடிய இடத்தை மெழுகி குளிர்ச்சியாய் மண்டல ரூபத்தில் இருக்கும் கோலத்தை இட்டு, மாசி மாதம் முதல் பக்ஷத்தில் (பதினைந்து நாட்கள்) அழகியதான, நுண்ணியதான மணலைக்கொண்டு அவன் வரக்கூடிய தெருவை அழகாகும்படி அலங்காரம் செய்து, அவனை நோக்கி “மன்மதனே! நீ என் ஆசையை நிறைவேற்றுவாயா?” என்று சொல்லி, உன்னையும் உன் தம்பியையும் தொழுதேன். க்ரூரமான தீப்பொறிகளைச் சிந்தக்கூடிய ஒப்பற்றதான திருவாழியைத் திருக்கையிலேயுடைய திருவேங்கடமுடையானுக்கு என்னை ஆட்படுத்தவேண்டும்.

இரண்டாம் பாசுரம். தன் நோன்பின் க்ரமத்தை இன்னும் விரிவாக உரைத்து, “எம்பெருமானிடம் என்னைச் சேர்க்கவேண்டும்” என்று ப்ரார்த்திக்கிறாள்.

வெள்ளை நுண்மணல் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளுமில்லாச் சுள்ளி எரிமடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா!
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு கடல்வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே

மன்மதனே! வெள்ளை நிறத்தில் நுண்ணியதாய் இருக்கும் மணல் (கோலப்பொடி) கொண்டு அவன் வரும் வீதியை அலங்கரித்து விடிவதற்கு முன்னே நதிக்கரைக்குச் சென்று நன்றாக முழுகி நீராடி, முள் முதலானவை இல்லாத விறகுச் சுள்ளிகளை நெருப்பில் போட்டு உன் விஷயமாக நோன்பை அனுஷ்டிக்கிறேன். தேன் ஒழுகும் புஷ்பங்களாகிற உன் காதல் கணைகளைத் தொடுத்துக் கடல் போன்ற திருநிறத்தை உடையவனான எம்பெருமான் என்கிற இலக்கில் போய் நான் அவனை அணைக்கும்படி நீ என்னைச் செலுத்த வேண்டும்.

மூன்றாம் பாசுரம். நான் உன்னை நிந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் நீ என்னை திருவேங்கடமுடையானிடத்தில் சேர்த்து விட வேண்டும் என்கிறாள்.

மத்தநன் நறுமலர் முருக்கமலர் கொண்டு முப்போதும் உன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி
வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே

ஊமத்தையின் நல்ல மலர்களையும் முருக்க மலர்களையும் கொண்டு மூன்று வேளைகளிலும் உன்னுடைய கால்களில் விழுந்து வணங்கி, அதற்குப் பிறகும் என் ஆசை நிறைவேறாமல் இருந்தால், “இவன் நமக்கு உதவுகிறேன் என்று சொல்லி அந்த வாக்கை மீறியவன்” என்று நெஞ்சில் வருந்தி, வாயாலும் உன்னை நிந்தியாதபடி, கொத்துக்கொத்தாக மலர்கின்ற மலர்க்கணைகளைத் தொடுத்துக்கொண்டு, கோவிந்தன் என்று சொல்லப்படும் ஒரு திருநாமத்தை உன் நெஞ்சில் எழுதி வைத்துக் கொண்டு, வியத்தகு தன்மையனான திருவேங்கடமுடையான் என்று சொல்லப்படும் விளக்கினில் நான் சென்று சேருமாறு என்னை நீ நியமிக்க வேண்டும்.

நான்காம் பாசுரம். இதில் தன்னுடைய வருத்தத்தின் மிகுதியைத் தெரிவிக்கிறாள்.

சுவரில் புராண! நின்  பேர் எழுதிச்சுறவநற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும் காட்டித் தந்தேன் கன்டாய் காம தேவா!
அவரைப் பிராயம் தொடங்கி என்றும் ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே

பழையவனே! சுவர்களில் உன்னுடைய பெயர்களை எழுதி, சுறா மீன்கள் வரையப்பட்டிருக்கும் கொடிகளையும், குதிரைகளையும், சாமரங்களையுடைய பெண்களையும், கரும்பு வில்லையும் உனக்கு ஸமர்ப்பித்தேன் பார். சிறுவயது முதல் எப்பொழுதும் விரும்பிக் கிளர்ந்த என்னுடைய பெரிய முலைகள் த்வாரகைக்குத் தலைவனான கண்ணனுக்கே என்று நினைத்துக்கொண்டு தொழுதிருந்தேன். விரைவாக நீ என்னை அவனுக்கு ஆக்க வேண்டும்.

ஐந்தாம் பாசுரம். இதில் எம்பெருமான் ஒருவனைத் தவிர வேறு ஒருவனுடன் தன்னை இணைத்துப் பேசினால் தான் உயிர் வாழ மாட்டேன் என்கிறாள்.

வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!

மன்மதனே! ஸ்வர்கத்தில் வாழும் உயர்ந்தவர்களான தேவர்களுக்காக, வேதம் அறிந்த இங்குள்ள ப்ராஹ்மணர்கள் தங்கள் வேள்வியில் ஸமர்ப்பிக்க உண்டாக்கிய ஹவிஸ்ஸை, காட்டிலே திரியும் ஒரு நரியானது புகுந்து அத்தை எடுத்துக் கொள்வதும் முகர்ந்து பார்ப்பதும் செய்வதுபோலே, தன்னுடைய திருமேனியிலே, அதாவது திருக்கைகளிலே திருவாழியையும் திருச்சங்கையும் உடைய புருஷோத்தமனான எம்பெருமானுக்காக கிளர்ந்தெழுந்த என்னுடைய பெருத்த முலைகள் மனுஷ்யர்களுக்கு என்கிற பேச்சு நாட்டில் உண்டானால் நான் உயிர் வாழமாட்டேன்.

ஆறாம் பாசுரம். இதில் பகவானை அனுபவிக்க முற்படும்போது, ஸத்வ குணத்தில் ஊறியவர்களுடன் கூடி அனுபவிப்பது போலே, காம சாஸ்த்ரத்தில் வல்லவர்களுடன் கூடிச் சென்று எம்பெருமானை அடைவதற்காகக் காமனை ப்ராத்திக்கிறாள்.

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா!
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கெனக்கு அருள் கண்டாய்

மன்மதனே! அழகிய வடிவுடையவர்களாய், யுவாக்களாய், நன்னடத்தை உள்ளவர்களாய் இருக்கும் காம சாஸ்த்ரத்திலே நிபுணர்களாய் இருப்பவர்களை முன்னிட்டுக்கொண்டு, தினமும் நீ வரும் வீதிகளில் எதிரே சென்று, பங்குனி மாதத்தில் உன்னுடைய உத்ஸவ ஸமயத்தில் உன்னைத் தெளிவுடன் வணங்குகிறேன். நீர் நிறைந்த கறுத்த மேகம் போன்ற நிறத்தையும் காயாம்பூ போன்ற நிறத்தையும் கருவிளைப்பூ போன்ற ஒளியையும், தாமரை மலர் போன்ற திருமுகத்தில் உள்ள திருக்கண்களாலே என் விஷயத்தில் அவன் கடாக்ஷம் பண்ணும்படி நீ எனக்கு அருள் செய்ய வேண்டும்.

ஏழாம் பாசுரம். இதில் த்ரிவிக்ரமன் எம்பெருமான் என்னைத் தன் கைகளால் தீண்டும்படி நீ செய்ய வேண்டும் என்கிறாள். எம்பெருமானுக்கே தன்னுடைய பக்தி இருக்கும் என்பதை விளக்குகிறாள்.

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே! உன்னை வணங்குகின்றேன்
தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மன்மதனே! பசுங்காய் நெல் மற்றும் கரும்பைப் படைத்து அதற்குமேலே கருப்பங்கட்டி, அரிசி, அவல் ஆகியவற்றைச் சமைத்து, நல்ல ஸ்வரத்தை உடையவர்களாய் காம சாஸ்த்ரத்தில் நிபுணர்களானவர்களுடைய மந்த்ரத்தாலே நீ என் பிள்ளையாக இருந்தாலும் உன்னை வணங்குகின்றேன். மஹாபலியாலே இந்த லோகங்கள் அபஹரிக்கப்பட்ட காலத்திலே எல்லா லோகங்களையும் திருவடியால் அளந்துகொண்ட த்ரிவிக்ரமன் எம்பெருமான், அவனுடைய திருக்கைகளாலே என்னைத் தீண்டும்படிப் பண்ணி, என்னுடைய ஒளி படைத்த வயிறும், ம்ருதுவான பருத்த முலைகளும் இவ்வுலகிலே நிலைநின்ற புகழைப் பெறும்படி செய்ய வேண்டும்.

எட்டாம் பாசுரம். இதில் தன்னுடைய ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த செயலான எம்பெருமானுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வதை அருளுமாறு கேட்கிறாள்.

மாசுடை உடம்பொடு தலை உலறி வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடைத் திறலுடைக் காம தேவா! நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவதொன்று உண்டு இங்கு எம்பெருமான்! பெண்மையைத் தலையுடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கருள்  கண்டாய்

ஒளியையும் சக்தியையும் உடையவனாய் எனக்கு ஸ்வாமியாய் இருக்கும் மன்மதனே! அழுக்குப்படிந்த உடம்போடும் விரித்த கூந்தலோடும், வெளுத்த உதடுகளோடும், ஒரே வேளை உண்டும் நான் செய்யும் இந்த நோன்பை எப்போதும் நினைவில் வைத்துக்கொள். இப்போது, நான் சொல்லவேண்டுவது ஒன்றுண்டு. என் இருப்பு உயர்ந்த நிலையை அடையும்படி கேசி என்ற அஸுரனைக் கொன்றவனாய் அதனாலே கல்யாண குண பூர்த்தி உள்ளவனுக்கு திருவடி சேவை செய்யும் இந்த பேற்றை எனக்கு நீதான் பெற்றுத் தர வேண்டும்.

ஒன்பதாம் பாசுரம். இதில் தனக்கு அருளாவிட்டால் அவனுக்கு வரும் அநர்த்தத்தைச் சொல்லுகிறாள்.

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே

மூன்று காலங்களிலும் உன்னைத் தொழுது தலையாலே வணங்கி உன்னுடைய அடிகளில் தூய மலர்களைச் சமர்ப்பித்துச் சேவித்து ஸ்தோத்ரம் செய்கின்றேன். உலகைச் சூழ்ந்திருக்கும் கடல் போன்ற வடிவை உடையவனுக்குப் பழுதில்லாமல் தொண்டு செய்து நான் வாழ்ச்சியைப் பெறவில்லை என்றால், பலமுறை அழுது, தடுமாறி, அம்மா என்று கூப்பிட்டுக்கொண்டு திரிய, அந்தப் பலன் உனக்கே நன்றாகக் கிடைக்கும். ஏர் உழும் ஒரு எருதை நுகத்தடியாலே தள்ளி தீனி போடாமல் விரட்டுவதைப் போல அச்செயல் இருக்கும்.

பத்தாம் பாசுரம். இதில் இப்பத்து பாசுரங்களைக் கற்றதற்குப் பலன் சொல்லி முடிக்கிறாள்.

கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக் கழலிணை பணிந்து அங்கோர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
விருப்புடை இன்தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே

கரும்பாகிய வில்லையும், புஷ்பங்களாலே செய்யப்பட்ட அம்புகளையும் உடையவனான மன்மதனின் ஒன்றுக்கொன்று ஒப்பான அடிகளை வணங்கி, வடமதுரையில் வில் விழவு நடக்கும் அரங்கின் வாசலில் இருந்த ஒப்பற்ற குவலயாபீடம் என்னும் யானை அலறும்படி அதன் கொம்பை முறித்து, கொக்கு வடிவில் வந்த பகாஸுரனுடைய வாயைக் கிழித்து போட்டவனாய், நீல ரத்னம் போன்ற வடிவழகை உடையவனான கண்ணன் எம்பெருமானுடன் என்னைச் சேர்த்துவிட வேண்டும் என்று மலைகள் போன்ற மாளிகைகள் நிறைந்து தோன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளார்க்குத் தலைவரான பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாளுடைய (என்னுடைய) விருப்பத்தின் பேரில் பிறந்த இனிய தமிழ்ப்பாமாலையைப் பாடவல்லவர்கள் நித்யஸூரிகள் நாயகனான ஸ்ரீமந் நாராயணனுடைய திருவடிகளை அடைவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

0 thoughts on “நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – முதல் திருமொழி – தையொரு திங்கள்”

Leave a Comment