ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ் பாரும்
உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை
இருபத்தெட்டாம் பாசுரம். இந்த நன்னாளான சித்திரையில் திருவாதிரை, ஆழ்வார்களின் திருநக்ஷத்ர தினங்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்யம் என்பதை எல்லோரும் அறியும்படி அருளிச்செய்கிறார்.
உலகத்தவர்களே! சித்திரையில் திருவாதிரை தினமாவது ஆழ்வார்களின் திருநக்ஷத்ர தினங்களைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்யமானது. ஏனெனில் எல்லா உலகத்தில் உள்ளவரும் வாழ்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே இந்தச் செம்மையான திருவாதிரை நாளில் ஸ்ரீராமானுஜர் வந்துதித்தார்.
ஆழ்வார்கள் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள். உலகத்தில் உள்ளோரின் வாழ்ச்சிக்காகப் பாசுரங்களை அருளிச்செய்த்வர்கள். அவர்கள் செய்ததை அடிப்படையாகக் கொண்டு, எம்பெருமானார் உலகத்தில் உள்ளோர் எல்லோரும் நன்மை பெறும்படி ஸம்ப்ரதாயத்தை நன்றாக நடத்தினார். அமுதனார் இராமானுச நூற்றந்தாதியில் “உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரு ஞானம் தலைக் கொண்டு நாரணற்காயினரே” என்று அருளிச்செய்துள்ளார். இதற்கு வ்யாக்யானம் அருளிய மாமுனிகள் இதே விஷயத்தை அங்கும் அனுபவித்தார். ஒரு பெரிய மஹானான, ஆதிசேஷ அவதாரமான எம்பெருமானார் அவதரித்த அக்காலத்திலேயே அங்கிருந்தவர்கள் நன்மை அடைந்தார்கள் என்றும், ஸ்ரீ பாஷ்யம் போன்ற க்ரந்தங்களை அருளிச்செய்து, ஜனங்களின் ஞானத்தை வளரச்செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார் என்றும் இரண்டு விளக்கங்களை அங்கே அருளிச்செய்துள்ளார்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org