உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 26

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 25

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல்

சீர்த்த மதுரகவி செய் கலையை ஆர்த்த புகழ்

ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே 

சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து 

இருபத்தாறாம் பாசுரம். ஆழ்வார்களின் அருளிச்செயல்களுக்கு அர்த்தங்களை நிர்ணயமாகக் காட்டிக் கொடுத்த ஆசார்யர்கள் இவருடைய திவ்ய ப்ரபந்தத்தின் பெருமையை ஆராய்ந்து அருளிச்செயலின் மத்தியிலே இதைச் சேர்த்தார்கள் என்பதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார்.

சொற்களின் பூர்த்தியும் பொருளின் பூர்த்தியும் நிரம்பப் பெற்றதான பெரிய திருமந்த்ரம் என்று சொல்லப்படும் அஷ்டாக்ஷரத்தின் நடுவிலே காணப்படும் “நம:” பதத்துக்கு எவ்வளவு சிறப்போ, அதைப் போலவே சிறப்புடைத்தான, உயர்ந்தவரான மதுரகவி ஆழ்வாரின் அற்புதப் படைப்பான கண்ணிநுண் சிறுத்தாம்பை பெரு மதிப்பை உடையவர்களான ஆசார்யர்கள் இதன் தாத்பர்யத்தை உணர்ந்து ஆழ்வார்களின் அருளிச்செயல் நடுவே எப்பொழுதும் சேர்த்து அநுஸந்திக்கும்படி அமைத்தார்கள்.

நம:” பதம் பாகவத சேஷத்வத்தை, அதாவது அடியார்களுக்கு அடியாராக இருக்கும் நிலையைக் காட்டும். மதுரகவி ஆழ்வார் தாமே “தேவு மற்றறியேன்” என்று நம்மாழ்வாரையே தெய்வமாகக் கொண்டு இருந்தார். இந்த உயர்ந்த நிஷ்டையையே தன்னுடைய ப்ரபந்தத்தில் அருளிச்செய்தார். இந்தத் தாத்பர்யத்தை உணர்ந்த ஆசார்யர்கள் இதற்கு ஏற்ற கௌரவத்தைச் செய்தனர்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment