ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
உந்மீலத் பத்மகர்ப்பத்யுதிதலமுபரி க்ஷீரசங்காதகௌரம்
ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுர நகமணித்யோத வித்யோதமாநம் |
அங்குள்யக்ரேஷு கிஞ்சிந்நதமதிம்ருதுளம் ரம்யஜாமாத்ருயோகீ
திவ்யம் தத்பாதயுக்மம் திசது சிரசி மே தேசிகேந்த்ரோ தயாளு: || 6
பதவுரை: தயாளு: – கருணை புரியுந்தன்மையராய், தேசிகேந்த்ர: – ஆசார்யர்களில் உயர்ந்தவரான, ரம்யஜாமாத்ருயோகீ - அழகிய மணவாளமாமுனிகள், உந்மீலத்பத்ம கர்ப்பத்யுதிதலம் - மலர்ந்து கொண்டேயிருக்கிற தாமரைமலரின் உட்புறத்தின் (சிவந்த) காந்தி போன்ற காந்தியையுடைய அடிப்பகுதியை (உள்ளங்காலை)யுடையதும், உபரிமேற்பகுதியில், க்ஷீரசங்காத கௌரம் - பாலின் திரட்சி போல் வெளுத்ததும், ராகாசந்த்ர ப்ரகாசப்ரசுரநகமணி த்யோத வித்யோதமாநம் - பௌர்ணமீ சந்த்ரனுடைய காந்தி போன்ற (வெளுத்த) காந்தியால் நிறைந்த அழகிய நகங்களின் காந்தியினால் விளங்காநிற்பதும், அங்குளி அக்ரேஷு - நகங்களின் நுனிப்பகுதிகளில், கிஞ்சித் நதம் - சிறிது வளையையுடையதும், அதிம்ருதுலம் - மிகவும் மெத்தென்றிருப்பதும், திவ்யம் - அப்ராக்ருதமானதும், தத் - மிகச்சிறந்ததுமான, பாதயுக்மம் - (தமது) திருவடியிணையை, மே சிரசி - அடியேனுடைய தலையில், திசது - வைத்தருளவேணும்.
கருத்துரை: இந்த ச்லோகம் முதலான ஆறு ச்லோகங்கள் சிஷ்யர்களின் ஸ்தோத்ர ரூபமாக அமைந்திருக்கின்றன. இம்முதல் ச்லோகத்தில் ஒரு சிஷ்யர் தமது சிரஸிற்கு அணிகலனாக மணவாளமாமுனிகள் தம் திருவடியிணையை வைத்தருளவேணுமென்று வேண்டுகிறார். தயாளு: தயைபுரிவதை இயற்கையாகக் கொண்டவர். பிறர் தமக்கு அடிமை செய்தால் அதுகாரணமாக தயையுண்டாகப் பெறும் பிற ஆசார்யர்களைப் போலல்லாமல், இயற்கையாகவே அனைவரிடத்திலும் தயை புரியும் எம்பெருமானாரைப் போன்றவர் இம்மாமுனிகள் என்றபடி. திசதி உபதிசதி இதி தேசிக: சாஸ்த்ரார்த்தங்களை உபதேசிப்பவர் தேசிகரெனப்படுகிறார். தேசிகாநாம் இந்த்ர: தேசிகேந்த்ர: ஆசார்யர்களாகிற தேசிகர்கட்குத் தலைவரென்றபடி. ஆசார்யர்கட்குத் தலைவராகையாவது ஆசார்யர்களுக்கு இருக்க வேண்டிய அறிவு, அறிவுக்குத்தக்க அநுஷ்டானம், தயை முதலிய குணங்களால் நிறைந்தவராயிருக்கை. மணவாளமாமுனிகளின் திருவடிகளின் அடிப்புறம் தாமரைமலர் போல் சிவந்ததும், நகங்கள் நிலவைப்போல் வெளுத்தும் விரல்களின் நுனிகள் கொஞ்சம் வளைந்தும், பொதுவாகத் திருவடி முழுவதும் மிகவும் மெத்தென்றும் பால்போல் வெளுத்தும் இருக்கின்றனவாம். மாமுனிகள் ஆதிசேஷாவதாரமாகையால், அவர் திருவடியிணையை அப்ராக்ருதம் (பரமபதத்தில் உள்ளதொரு உயர்ந்ததான பொருள்) என்றார். இவ்வுலகிலுள்ள சம்சாரிகளின் பாதங்கள் போல் தாழ்ந்தவையல்ல என்றபடி. கீழ்த் திருவடிகளுக்கு ‘உந்மீலத்பத்மகர்ப்ப’ என்று தொடங்கிச் சொன்ன அழகுகளெல்லாம் உத்தமபுருஷனுக்கு இருக்கவேண்டிய உத்தம லக்ஷணங்களாகும். இத்தகைய சிறப்பத்தனையும் பெற்றுத் தமக்கு வகுத்ததுமான திருவடிகளை வைத்தருளவேணுமென்று ஒரு சிஷ்யர் மாமுனிகளை ப்ரார்த்தித்தாராயிற்று. இதனால் பகவத்பக்தரான ஆழ்வார் ‘நின்செம்மாபாதபற்புத்(பத்மத்தை) தலைசேர்த்து’ என்று எம்பெருமானை வேண்டினார். ஆசார்ய பக்தரான ஒரு சிஷ்யர் ‘பாதயுக்ம சிரசி திசதுமே’ என்று ஆசார்யரான மாமுனிகளை வேண்டுகிறார். மாமுனிகள் தமது திருவடியிணையை அடியேன் முடியில் வைத்தருளட்டும்’ என்று படர்க்கையாக இருந்தாலும், ‘மாமுனிகளே! தேவரீர் திருவடிகளை அடியேனுடைய சிரஸில் வைத்தருளவேணும்’ என்று முன்னிலைப்படுத்தி ப்ரார்த்திப்பதிலேயே இதற்கு நோக்கு. இவ்விஷயம் மேலுள்ள பல ச்லோகங்களால் விளக்கமுறும்.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org