ஞான ஸாரம் – 1 – ஊன உடல்

ஞான ஸாரம்

முதல் பாட்டின் முகவுரை

ஆன்மாவுக்குப் பேரின்பம் கொடுப்பது வீடுபேறு ஆகும். அதை அடைவதற்கு (1) திருமந்திரம் (2) த்வயம் (3) சரம ச்லோகம் என்று மூன்று மந்திரங்களின் உண்மைப் பொருளை குருவின் மூலம் தெரிந்து கொள்ள வேணும். இம்மூன்று மந்திரங்களுக்கும் “இரகசியம்” என்று பெயர். இதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற அவாவுடையோர்க்கு அன்றி ஏனையோர்க்குச் சொல்லலாகாது என்று மரபு உண்டு. இவ்வாறு மறைத்து வைப்பதால் இதற்கு இரகசியம் என்று பெயர் இடப்பட்டது. இம்மூன்று மந்திரங்களும் அனைத்து வேதாந்தக் கருத்துக்களின் முடிவாய்த் திகழ்வன. மேலும் இம்மூன்றும் பரம்பொருளின் உண்மை, பரம்பொருளை அடைவதற்கு வழி, பரம்பொருளை அனுபவித்து நுகரும் பேரின்பம் ஆகிய இவற்றின் உண்மைகளை உள்ளது உள்ளபடி சொல்லக்கூடியன. இம்மூன்று மந்திரங்களும் பிறவிப் பெருங்கடலில் உழலும் ஆன்மாக்கள் கரைசேர்வதற்காக (துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக) பகவானால் சொல்லப்பட்டவை ஆகும்.

திருமந்திரம்” பதரிகாச்ரமத்தில் பகவான் தானே நாராயணனான ஆசார்யனாயும் நரனாகிற சீடனுமாயுமிருந்து வெளிப்படுத்தியது. “துவய மந்திரம்” ஸ்ரீவைகுண்டத்தில் பெரிய பிராட்டியாருக்கு பகவானால் உபதேசிக்கப்பட்டது. “சரம சுலோகம்” மஹாபாரத யுத்தத்தில் அர்ஜுனனுடைய  தேர்த்தட்டிலிருந்து கொண்டு அவனைக் குறித்து சொன்ன பகவத் கீதையின் இறுதியில் கண்ணபிரானால் சொல்லப்பட்டது. இம்மூன்று மந்திரங்களும் குருபரம்பரை வழிவழியாக உபதேசத்தாலே சொல்லப்பட்டு வருவன. செம்பொருள் கண்டவர்களில் முன்னோடிகளும் நம்முடைய முன்னோர்களுமான ஆசார்யர்களுக்கு இவையே மேலான செல்வமாய் விளங்குவன மற்றும் அவர்களுக்கு நாடோறும் மனனம் செய்வதற்கு உரியனவாயும் இருப்பன. இத்தகைய பெருமையுடையனவாய் விளங்குவன இம்மூன்று மந்திரங்களும். இவற்றுள் முதல் மந்திரமாய் விளங்குவது திருமந்திரம். இதற்கு “முதல் ரகசியம்” என்று பெயர். இது மூன்று பதங்களைக் கொண்டது. அவை “ஒம்” என்றும் “நம:” என்றும் “நாராயணாய” என்றும் சொல்லப்படும். இந்த மூன்று பதங்களில் முதல் பதமான “ஒம்” என்ற ப்ரணவத்தின் கருத்தை நடுப்பதமான “நம:” என்ற பதமும் “நாராயணாய” என்ற பதமும் தெளிவு படுத்துவனவாகும். அதாவது “ஒம்” என்பது சுருக்கமாகப் பொருளைச் சொல்வது “நம:” என்பதும் “நாராயணாய” என்பதும் அதனை விளக்கமாகச் சொல்வனவாகும். இங்ஙனம் திருமந்திரத்திலுள்ள நடுப்பதமான “நம:” பதத்தின் கருத்தையும் “நாராயணாய” என்ற கடைசி பதத்தின் கருத்தையும் த்வய மந்திரத்தில் முறையே முதற்பகுதியும், பிற்பகுதியும் விளக்குவனவாகும். முதற்பகுதி, பிற்பகுதி என்ற இத்தகைய இரண்டு பகுதிகளைக் கொண்ட த்வய மந்திரம் மந்திரங்களுக்குள் சிறந்ததான “மந்திர ரத்தினம்” என்று போற்றப்படும். அதன் முதற்பகுதியில் பகவானை அடைக்கலம் புகும் முறைகள் சொல்லப்படுகின்றன. அதாவது பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகும் போது எல்லா பற்றுதல்களையும் தடம் தெரியாமல் விட்டே பற்றவேண்டும் என்றும், அவ்வாறு பகவானுடைய திருவடிகளைப் பற்றுதலையும் ஒரு பற்றுக் கோடாகக் கருதாமல் அவன் பாதமே தஞ்சமென்ற உறுதிப்பாட்டில் இருக்கவேண்டும் என்றும் குறிக்கிறது. பிற்பகுதியில் மேற்கூறியவாறு உறுதி பூண்டுள்ள அடியவர்க்குப் பயன் பிராட்டியும் பெருமாளும் கூடின இருவருமான சேர்த்தியில் தொண்டு செய்வதேயாகும் என்பதாம்.

இது இராமாயணத்தில் சீதையும் இராமனுமான இருவருடைய சேர்த்தியில் இளைய பெருமாள் தொண்டு செய்து வாழ்ந்தது போன்றதாகும். இத்தகைய (பேறு) ஊழ்வினையினால் வரும் அனைத்துத் தடைகளும் (பாபங்களும்) தடம் தெரியாமல் நீங்கிய பிறகே கை கூடுவதாகும். இவ்வாறான த்வய மந்திரத்தின் முதற்பகுதியும், பிற்பகுதியும் ஆகிய இரண்டு பகுதிகளின் கருத்துக்களையும் “சரம சுலோகம்” எனப்படும் மூன்றாவதான மந்திரம் விளக்கமாக எடுத்துரைக்கிறது. ஆகவே மூன்றாவதான சரம சுலோக மந்திரம் த்வய மந்திரத்திற்குச் சார்புடையதாய் நிற்கிறது. ஆக இம்மூன்று மந்திரங்களிலும் த்வய மந்திரமே முக்கியமாக நம்முடைய முன்னோர்களான ஆசார்யர்களால் எண்ணப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க த்வய மந்திரத்தின் முதற்பகுதியால் சொல்லப்படுவது என்ன?  பகவானுடைய திருவடிகளில் அடைக்கலம் புகுவது. அது இரண்டு வகையாகும். “இப்பொழுதே வீடு பேறு அடைய வேண்டும்” என்னும் வேகத்தில் அடைக்கலம் புகுவது ஒன்று. மற்றொன்று “உன் திருவடிகளில் அடைக்கலம் புகுகின்றேன். நீ எப்பொழுது வீடு பேறு அளிக்கிறாயோ அப்பொழுது கொடுப்பாயாக” என்று அடைக்கலம் புகுவது. இவ்விரண்டினுள் மிக விரைவில் வீடு பேறு அடைய வேண்டும் என்ற நோக்குடன் செய்யும் அடைக்கலமே சிறப்புற்றதாகவும் மற்றது சிறப்பற்றதாகவும் கருதப்படும். இங்குக் கூறிய மிக விரைவுடன் செய்யும் அடைக்கலத்தின் இலக்கணங்கள் ஞானசாரமாகிற இந்நூலில் முதல் பாடலான “ஊன உடற் சிறை” என்னும் பாடலில் சொல்லப்படுகின்றன.

“ஊன உடல் சிறை நீத்து ஒண் கமலை கேள்வனடித்
தேன் நுகரும் ஆசைமிகு சிந்தையராய்த் – தானே
பழுத்தால் விழும் கனி போல் பற்றற்று வீழும்
விழுக்காடே தான் அருளும் வீடு”

பதவுரை :-

ஊன – மாமிசமயமான
உடல் – சரீரமாகிற
சிறை – சிறைச்சாலையை
நீத்து – துறந்து (விட்டு நீங்கி)
ஒண்கமலை கேள்வன் – அழகிய தாமரைப் பூவை      இருப்பிடமாகவுடைய  லக்ஷ்மீ தேவியின்    மணாளனான பகவானுடைய
அடித்தேன் – திருவடிகளின் இனிமையை
நுகரும் – துய்க்கும் (அனுபவிக்கும்)
ஆசைமிகு சிந்தையராய் – ஆசைமிகுந்த மனதை உடையவராய்
பழுத்தால் – பழுத்துக் கனிந்தால்
தானே விழும் – தானே விழுகின்ற
கனி போல் – பழம் போல்
பற்றற்று – ஒட்டுதல் அற்று
வீழும் – சரணாகதி செய்யும்
விழுக்காடு தானே – அச்சரணாகதியே
வீடு அருளும் – வீடு பேற்றைக் கொடுக்கும்

 

விளக்கவுரை:-  

உடல், மாமிசமயமானது. அது சதை, நரம்பு, எலும்பு, மஜ்ஜை, விஷ்டை, மூத்திரம் முதலிய உட் குற்றங்கள் பலவும் நிரம்பியதொன்று. இதை “புண்ணாராக்கை” என்று கூறுவர். ஈயின் சிறகளவு தோல் உரித்தாலும் ஈ, எறும்பு, காகம் முதலிய ஜந்துக்கள் மொய்த்துக் கொள்ளும். (நாலடியார் துறவறவியல் – தூய்தன்மை – முதல் பாடல்). உடல் உட்புறத்தை வெளிப்புறமாக்கினால் காக்கையை விரட்டுவதே காலமெல்லாம் பணியாகயிருக்கும்.

இவ்வாறு மிகவும் அருவருக்கத்தக்கதாயுள்ள இச்சரீரத்தின் குற்றங்களை உணர்பவர்களுக்கு “நான்” என்று சொல்லப்படும் ஆன்மாவாகிற தான் இதனுள் இருக்கும் இருப்பு (அதாவது  உண்டு, உடுத்து வாழ்ந்து வருவது) சிறையில் அடைபட்டவன் போன்று கருதப்படுவதாகும். சட்டிக்குள் வைக்கப்பட்ட மாணிக்கத்தின் ஒளி உள்ளேயே அடங்கியிருப்பது போல உடலுக்குள் அகப்பட்ட ஆத்மாவின் ஞான குணங்கள் அதற்குள்ளேயே சுருங்கிக் கிடக்கின்றன. அதாவது ஆன்மா, உடலில் மறைந்து இருக்கிறது. இதுவே ஆன்மாவுக்கு இறைவன் கொடுத்த சிறை தண்டனை என்று உணரலாம். இதனை சிறையாக உணராமல் இன்பமாக உணர்வது மூடர் செயலாகும். ஆகவே உடலின் உண்மைத் தன்மையை உணரும் அறிவுடையார் (ஞானிகள்) உலக வாழ்வை அருவருத்து அதிலிருந்து விடுபடுவதற்கு முயலுவர். அவ்வாறு உடற்சிறையிலிருந்து விடுபடுவதற்கு முயலும் அறிவுடையார் (ஞானிகள்) இறைவனிடம் சரணாகதி செய்வது தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள். இச்சிறையிலிருந்து ஆன்மாவை விடுவிப்பதும் இறைவனே என்ற உண்மையை கீதையில் பகவான் அருளிச் செய்துள்ளான். ஆன்மாவுக்குச் சரீரம் எற்பட்டது ஆன்மா செய்த வினைப்பயனால் ஆகும். அவ்வினையைச் சரணாகதி நெறியினாலன்றி வேறொன்றினால் கடக்க முடியாது. “என் காலைக்கட்டி சரணாகதி பண்ணினால் நான் அச்சிறையிலிருந்து (ஆன்மாவை) விடுவிக்கிறேன்” என்று பகவான் கூறியுள்ளான்.

ஒரு குருவி பிணைத்த கூட்டை நம்மால் பிரிக்க முடிவதில்லை. வினைப்பயனால் சர்வ சக்தியுடைய இறைவன் பிணைத்து வைத்த இவ்வுடலாகிற கூட்டை நம்மால் பிரிக்க முடியுமா? என்று கூறியுள்ளார். சிறையில் அடைபட்ட செல்வந்தனுக்கு வெளியில் வந்து சுக போகங்களை அனுபவிப்பதைக் காட்டிலும் சிறையிலிருந்து விடுபடுவதே முக்கியமாகும். அதுபோல ஆன்மா, சரீரச் சிறையிலிருந்து விடுபடுவதே அவசியமானது. சிறை என்பது மிகவும் இழிந்ததல்லவா? ஆகவே உடல் சிறையிலிருந்து தப்புவதற்கு சரணாகதி ஒன்றே வழியாகும். அவ்வாறு சரணாகதி செய்யும் போது த்வய மந்திரத்தில் சொல்லியபடி பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணவேண்டும். அவன் திருவடிகளில் சரணாகதி பண்ணுவது தேனைச் சுவைப்பது போன்று மிக இனிமையாக இருக்கும். அவ்வினிமையை அனுபவித்தவர்களின் மனம், மிக்க விருப்புடன் அதிலேயே தோய்ந்திருக்கும். குழந்தை தாய்ப்பாலை சுவைப்பதற்கு எப்படி ஆர்வமுடன் இருக்குமோ, அது போல சரணாகதி செய்பவன் இறைவன் திருவடித் தேனை நுகருவதில் ஆர்வமோடு இருப்பான். அவ்வார்வத்தினால் அவன் திருவடியைப் பற்றும் போது தான் முன்பு பற்றிக் கொண்டிருந்த உலகப் பற்றுக்களை அறவே விட்டு விடுவான். அப்பற்றுதல்களும் தாமே இவனை விட்டு விலகி விடும் என்பது இப்பாடலின் கருத்து. இது எது போன்றது என்றால் மரத்தில் கனிந்த பழம் காம்பை விட்டுத் தானே கீழே விழுவது போன்றாய் எல்லாப் பற்றுதல்களும் தானே விட்டுப் போகும்படி பகவான் திருவடிகளில் வீழ்வது சரணாகதியாகும். இச்சரணாகதி மிகவும் விரைவுடன் செய்யப்பட்டால் உடனே பகவானுக்கு இரக்கம் எற்பட்டு அவனுக்கு வீடுபேறு அளிப்பான். அவசரமில்லாமல் சரணாகதி செய்தாலும், இச்சரீரம் கழிந்தவுடன் வீடு பேறு அளிப்பான்.

ஆகவே, சரீர வாழ்வை சிறை என்று உணர்ந்து அதிலிருந்து தப்ப விரும்புபவன் பகவான் திருவடியை அனுபவிக்கும் ஆசையுடையவனாய் பிராட்டி பரிந்துரையுடன் வெளிவுலகப் பற்றுக்களை அறவே விட்டு இறைவன் திருவடிகளில் சரணாகதி பண்ணினால் அச்சரணாகதிக்கு இரங்கி இறைவன் உடனே வீடளிப்பான். ஆகவே, பரபரப்புடன் பண்ணும் சரணாகதி உடனே மோட்சம் தரும் என்பது இப்பாட்டின் கருத்து.

வீடு பேறு என்பது பிறவிக்கடலை கடந்து பகவானாகிற கரையை அடைதலாகும். “அக்கரையென்னும் அணர்த்தக் கடலுள் அழுந்தி இக்கரையேறி இளைத்திருந்தேன்” (பெரியாழ்வார் திருமொழி – 5ம் பத்து – 3ம் திருமொழி – 7ம் பாசுரம்) என்றார் பெரியாழ்வார்.

இவ்விடத்தில் ஒரு வேதாந்த விசாரம் செய்யப்படுகிறது. சரணாகதியே மோட்சம் தரும் என்ற கருத்தைச் சொன்னால் பகவானே மோட்சம் தருபவன் என்ற சித்தாந்தத்தோடு முரண்படாதா? மேலும், சரணாகதி என்ற ஞானமில்லாத செயலுக்கு, மோட்சம் தரும் ஆற்றலுண்டு என்று சொல்வதும் உண்மைக்கு மாறாகாதா? என்ற வினாக்கள் எழுகின்றன. இதன் பதில் வருமாறு:-

பக்தன் செய்யும் சரணாகதியோ, பக்தியோ தவமோ நோன்புகளோ எதுவாகயிருந்தாலும் அவை அவனை மோட்சத்திற்குத் தகுதியுடையவனாக மட்டும் ஆக்கும் அவையே தவிர, மோட்சத்தைத் தரமாட்டா. இத்தகைய சரணாகதிக்கு இரங்கி பகவான் தான் மோட்சம் தருவான் என்பது உண்மை. இதை, சாஸ்திரம் “அதிகாரி விசேஷணம்” என்று கூறும். இதற்கு உதாரணம் – மேடான இடத்தை ஆழப்படுத்தி ஏரி கட்டுகிறார்கள். மழை பெய்யும் போது ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது. ஏரி கட்டுவது மழை பெய்வதற்குக் காரணமாகாது. ஆனால், மழை பெய்யும் போது ஏரி இருந்தால்தான் மழை நீர் தேங்கும். அது போல ஆன்மாக்களிடத்திலுள்ள சரணாகதி முதலிய எந்த புண்ணியமும் பகவான் அருள் செய்வதற்குக் காரணமாகமாட்டா. பகவானுடைய அருள் எந்த காரணத்தையும் எதிர்பாராமல் இயற்கையாக தானே வருவது. அந்த அருள் தானாக வரும் போது அதை எற்றுக் கொள்ள ஆத்மாக்கள் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். அந்தத் தகுதியுடைமையே “சரணாகதி” என்றும் “பக்தி” என்றும் நோன்பு புண்ணியங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. இப்படித் தகுதியுடைமையைக் காரணம் என்று சொல்ல முடியாது. “வனத்திடரை எரி ஆம் வண்ணம் இயற்றும் இதுவல்லால் மாரி யார் பெய்கிற்பார்? மற்று என்று பூதத்தாழ்வார் இதைத் தெளிவுபடுத்தினார். ஆகவே, “இவை சரணாகதி பெறுவதற்குரிய தகுதியைத்தான் உண்டு பண்ணும்; பகவான் தானே வீடு தருவான்” என்ற உண்மைகள் இங்கு கிடைக்கின்றன. மாம்சமயமான சரீரத்தில் வாழ்வதைச் சிறையில் இருப்பதாகக் கருதி விடுதலையடைய மனம் துடிதுடிக்க வேணும். லக்ஷ்மீ நாயகனான பகவான் திருவடிகளின் சுவையை அனுபவிக்க ஆசைப்பட்டு அவன் திருவடிகளில் விழுவதே சரணாகதி ஆகும். அது கனிந்த பழம் காம்பிலிருந்து விழுவது போல சகல பற்றுதல்களையும் விட்டுச் செய்யப்படுவதாகும்.

மோட்சத்தை அடைவதற்கு சரீரம் விரோதியாகும். அவ்விரோதியை அழிப்பதற்கு பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே ஆயுதமாகும். இதற்கு விளக்கமாக ராமாயணத்தில் பரதனும் , விபீஷணனும் இராமன் திருவடிகளில் சரணாகதி செய்த கதையைக் காணலாம். பரதன் தன் தாயினால் துன்பம் அடைந்தவன். விபீஷணன் தன் அண்ணனால் துன்பம் அடைந்தவன். இருவரும் தங்கள் துன்ப நிலையைத் தாங்க மாட்டாதவர்களாய் உள்ளனர்.

bharata-receives-paduka_1“தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன்,
அழுது அழி கண்ணினன், ‘அவலம் ஈது’ என
எழுதிய படிவம் ஒத்து எய்துவான்
‘பரதனும் தொழுது தோன்றினான்’ மலரடி வந்து வீழ்ந்தனன்”

(கம்பராமாயணம் – அயோத்திய காண்டம் – திருவடி சூட்டு படலம் – 49)

இது பரதனின் சரணாகதி இதுவே “அதிகாரி விசேஷணம்” எனப்படும். இதுவே பகவான் அருளுவதற்கு உரிய தகுதியாகும்.

“கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்
மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை வள்ளல்
இரங்கினன் நோக்கும் தோலும், இருநிலத்து இறைஞ்சுகின்றான்
வரங்களின் வாரி அன்னதாள் இணைவந்து வீழ்ந்தான்”

(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – விபீஷணன் அடைக்கலப் படலம் – 137)

இதுவே விபீஷணன் நிலை.

இவை இரண்டு நிலைகளும் ஆன்மா உடற்சிறை வேதனையிலிருந்து விடுபடுவதால் பகவான் திருவடிகளில் சரணாகதி பண்ணுவதற்கு ஒப்பாகும். பரதனுக்கு கைகேயியினால் வந்த துன்பம், விபீஷணனுக்கு இராவணனால் வந்த துன்பம், ஆன்மாவுக்கு உடற்சிறையினால் வந்த துன்பம் எத்துன்பமாக இருந்தாலும் துன்பம் தீருவதற்கு வழி பகவான் திருவடிகளில் பண்ணும் சரணாகதியே. மேலே சொன்ன பரதனும், விபீஷணனும் துன்பத்தை உடனடியாகத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் சரணாகதி செய்துள்ளார்கள். அவ்வாறே இவ்வான்மாவும் உடனடியாக உடற்சிறைத் துன்பத்திலிருந்து விடுபடத் துடிதுடிப்புடன் சரணாகதி செய்கிறான். “உண்டு கொல் உயிர்? ” என ஒடுங்கினான் உருக்கண்டனன், நின்றனன் – கண்ணன் கண் எனும் புண்டரீகம் பொழி புனல் – அவன் சடாமண்டலம் நிறைந்து போய் வழிந்து சோரவே.

“அயாவுயிர்த்து, அழுகணீர் அருவி மார்பிடை
உயர்வுற, திருவுளம் உருக, புல்லினான்
நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலை ஆயினன்
தயா முதல் அறத்தினைத் தழீ இயது என்னவே”

(கம்பராமாயணம் – அயோத்தியா காண்டம் – திருவடி சூட்டு படலம் – 55)

இது பரதனிடம் ராமன் காட்டிய இரக்கம்.

இனி விபீடணனிடம் காட்டிய இரக்கம் காணலாம்..!

“குகனொடும் ஐவர் ஆனோம் முன்பு பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம், எம் முழை அன்பு வந்த
அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அருங்கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் – நுந்தை”

(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 143)

“திருவடி முடியின் சூடி, செங்கதிர் உச்சி சேர்ந்த
அருவரை என்ன, நின்ற அரக்கர்தம் அரசை நோக்கி
இருவரும் உவகை கூர்ந்தார், யாவரும் இன்பம் உற்றார்,
பொரு அரும் அமரர் வாழ்த்தி, பூமழை பொழிவதானார்”

(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 145)

vibhishan-surrender-to-lord-ram“தேடுவார் தேடநின்ற சேவடி, தானும் தேடி
நாடுவான் அன்று கண்ட நான்முகன் கழீ இய நல்நீர்
ஆடுவார் பாவம் ஐந்தும் நீங்கி, மேல் அமரர் ஆவார்,
சூடுவார் எய்தும் தம்மை சொல்வார் யாவர்? சொல்லீர்”

(கம்பராமாயணம் – யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம் – 150)

இவ்வாறே வேதனையுடன் “சரணாகதி பண்ணும் ஆன்மாக்களிடம் பகவான் இரங்கி அருள் செய்வான்” என்பது கருத்து. இதை “இரக்கம் உபாயம், இனிமை உபேயம்” என்று சுருங்கச் சொன்னார்கள் ஆசார்யர்கள்.

மேலே கூறின பரத, விபீஷண சரணாகதிகளில் விபீஷண சரணாகதி பலித்ததாகவும் பரத சரணாகதி பலிக்காததாகவும் தெரிகிறது. “பரதனுக்கு நன்மைதானே தீமையாயிற்று” என்ற வாக்கியமும் காணலாம். ஆகவே தான் சரணாகதி முதலிய சாதனங்கள் எல்லாம் அதிகாரி விசேஷணமாகச் சொல்லப்படுவதன்றி சாதனமாகச் சொல்லப்படுவதில்லை. சரணாகதி வீடு தரும் என்றது கால தாமதமின்றி வீடு அளிக்கும் என்பதைப்பற்றிச் சொன்னது. அதற்கு வீடு அளிக்கும் சக்தி கிடையாது. இவ்வாறு சரணாகதியைப் பற்றிய பல உண்மைகளை இப்பாடல் உரையில் மணவாள மாமுனிகள் விளக்கியிருக்கிறார் என்பதை இங்கு உணரவேணும்.

0 thoughts on “ஞான ஸாரம் – 1 – ஊன உடல்”

Leave a Comment