ஞான ஸாரம் 10- நாளும் உலகை

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                                   10-ஆம் பாட்டு:

998931_10153082622610375_989954565_n

முன்னுரை:

பகவானைத் தவிர வேறு பயன் எதையும் விரும்பாதார் உள்ளத்தில் இருந்தாலும் அவ்விருப்பு அவனுக்குத் துன்பத்தைத் தருவதால் வெறுப்பாயிருக்கும் என்பதை இதில் அருளிச் செய்கிறார். பரமபதத்தைக் காட்டில் மிகவும் ஆதரவோடு இருப்பான் என்று கீழே சொன்னதற்கு மாறாக இப்பாட்டில் வேறு வேறு பயன்களை விரும்புவாரது இதயங்களில் இருந்தாலும் அவ்விருப்பு பகவானுக்கு துன்பத்தைத் தருவதால் பொறுக்க மாட்டாமல் இருக்கும் என்ற கருத்து இதில் கூறப்படுகிறது.

“நாளும் உலகை நலிகின்ற வாளரக்கன்
தோளும் முடியும் துணித்தவன்தன் – தாளில்
பொருந்தாதார் உள்ளத்துப் பூமடந்தை கேள்வன்
இருந்தாலும் முள் மேல் இருப்பு”

பதவுரை:

நாளும்  நாள்தோறும்
உலகை  உலகத்தை எல்லாம்
நலிகின்ற  துன்புறுத்துகின்ற
வாளரக்கன்  வாளைத் தனக்குப் பக்கபலமாகக் கொண்ட இராவணனுடைய
தோளும்  இருபது தோள்களும்
முடியும்  பத்துத் தலைகளையும்
துணித்தவன்  அறுத்துத் தள்ளினவனான
பூமடந்தை கேள்வன்தன்  திருமகள் நாயகனான இராமபிரானுடைய
தாளில்  திருவடிகளில்
பொருந்தாதார்  பற்றாதவர்களுடைய
உள்ளத்தில்  இதயத்தில்
இருந்தாலும்  கொள்கை அளவில் இருந்தாலும் அவ்விருப்பு
முள்மேலிருப்ப  முள் நுனியில் இருப்பது போன்றதாகும்

நாளும் உலகை நலிகின்ற – ஏதோ ஒருநாளில் அல்லாமல் தினந்தோறும் துன்புறுத்துகின்ற அதிலும் யாரோ ஒருவர் இருவர் என்றில்லாமல் உலகத்தார் அனைவரையும் துன்புறுத்துகின்ற, துன்புறுத்துவதிலும் சற்றும் இடையீடில்லாமல் ஒயாமல் துன்புறுத்துகின்ற என்று பொருள்.

வாளரக்கன் – வாள் ஆயுதத்தையுடைய அரக்கன் இராவணன். சிவனை வழிபட்டு அவனிடம் பெற்றுக் கொண்ட வாளாயுதம். அதைத் தனக்குப் படைபலமாக பிடித்துக் கொண்டிருக்கும் அரக்கனான இராவணன் கூற்றாக “சங்கரன் கொடுத்த வாளும்” என்ற கம்பன் கூறியது எண்ணற்குரியது.

தோளும் முடியும் துணித்தவன் – இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும் அறுத்தவன். “நீள்கடல் சூழிலங்கைக்கோன் தோள்கள் தலை துணி செய்தான். தாள்கள் தலையில் வணங்கி, நாள் கடலைக் கழிமினே” என்றார் நம்மாழ்வார். இதன் பொருளாவது: அவனைக் கொல்லும் போது “அகப்பட்டவன் அகப்பட்டான்” தப்பி ஒடிப் போகாமல் கொன்றுவிடுவோம்” என்று எண்ணாமல் முதலில் அவனது இருபது தோள்களையும் அறுத்துத் தள்ளி.

 
“தான் போலு மென்றெழுந்தான் தரணியாளன்
அது கண்டு தரித்திருப்பானரக்கர் தங்கள்
கோன் போலும் என்றெழுந்தான் குன்ற மன்ன
இருபது தோளுடன் துணிந்த வொருவன் கண்டீர்”
                                                                                                                      (பெரிய திருமொழி-4-4-6)
 
“தலைகள் பத்தையும் வெட்டித் தள்ளி பொழுது போக
விளையாடினாற் போல கொன்றவன்
சரங்களைத் துரந்து வில் வளைத்து இலங்கை மன்னன்
சிரங்கள் பத்தறுத்து திர்த்த செல்வர் மன்னு பொன்னிடம்”

(திருச்சந்தவிருத்தம் – 802)

பூமடந்தை கேள்வன் – தாமரை மலரில் வசிப்பவளாயும் மாருத யௌவனத்தை உடையவருமான பெரிய பிராட்டியாருக்குக் கணவனானவன்.

விளக்கம்:- கீழ்ச்சொன்ன இராவணனை அழித்தற்குக் காரணம் நாட்டை நலிந்தது மட்டுமன்றி பிராட்டியைப் பெருமாளிடமிருந்து பிரித்த செயலுமே முக்கிய காரணமாகும் என்பது குறிப்பு.

 
“சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரிந்த
கொடுமையிற் கடு விசையரக்கன்
எரிவிழித்திலங்க மணிமுடி பொடி செய்து
இலங்கை பாழ்படுப்பதற் கெண்ணி”

(பெரிய திருமொழி-5-5-7)

என்ற பாசுரத்தில் இராவணன் அழிவதற்கு முக்கிய காரணம் பெருமாளிடத்திலிருந்து பிராட்டியைப் பிரித்தது தான் காரணம் என்று திருமங்கை ஆழ்வாரும் அருளிச் செய்திருக்கிறார்.

இவ்வாறு பிராட்டியும் தானுமாக இன்பமிக்க எழுந்தருளியிருக்குமவன்.

தன் தாளில் பொருந்தாதார் உள்ளத்தில் – தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்து தன் திருவடிகளில் பொருத்தமற்றிருக்கும் பொய்யர்களுடைய உள்ளத்தில். ‘பொருந்தாதார்’ என்ற சொல், தன் திருவடிகளைப் பற்றி நிற்கும் போதே என்ற பொருளைக் குறிப்பாக உணர்த்துகிறது. வேறு பயன்களில் மனதைப் பறிகொடுத்தவர்கள் மனம் திருவடியில் பொருந்தி இருக்க முடியாதல்லவா! உதாரணமாக, வரைவின் மகளிர் ஒருவனோடு புணர்ந்திருக்கும் போதே மனதில் வேறொருவனை நினைப்பது போன்றதாகும்.

இருந்தாலும் – என்ற சொல்லால் வேறு பயன்களை விரும்புவார் மனதில் இருக்க மாட்டான் என்ற பொருள் குறிப்பாக உரைக்கிடக்கிறது. தன்னிடம் வேறு பயனைக் கருதித் தன்னை வழிபடும் போலி பக்தருடைய வற்புறுத்தலுக்காக அவர்கள் மனதில் இருந்தாலும் என்று பொருள்.

முள்மேல் இருப்பு – முள் நுனியில் இருப்பது போன்றது. அதாவது பகவானுக்குத் துன்பம் தரக்கூடியதாகும் என்பதாம்.

 

 

Leave a Comment