யதிராஜ விம்சதி – ச்லோகம் – 17

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 16                                                                                                                        ச்லோகம் 18

ச்லோகம் 17

श्रुत्यग्रवेध्यनिजदिव्यगुणस्वरूपः प्रतयक्षतामुपगतस्त्विह रङ्गराजः ।
वश्यस्सदा भवति ते यतिराज तस्माच्छक्तः स्वकीयजनपापविमोचने त्वम् ॥ (17)

ஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |
வஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் || (17)

பதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய, நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன, எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய், இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில், ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த, ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன், தே – தேவரீருக்கு, ஸதா – எப்போதும், வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய், பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.) தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால், ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின், ஜந – தாஸஜநங்களினுடைய, பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில், த்வம் – தேவரீர், ஸக்த: பவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.

கருத்துரை:- ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலேயிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு, இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின் வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார். பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்திநாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார். இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்) இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார். அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்பதே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து. கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது – புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் – என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார். பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால் பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.

 

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment