ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 56 – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

<< பாசுரம் 51 – 55

பாசுரம் 56

மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம் நிலையைச் சொன்னபிறகு, அதற்குப் பொருத்தமாக எம்பெருமானார் திருவடிகளில் கைங்கர்யத்தைக் கேட்கிறார்.

உந்தன் அபிமானமே உத்தாரகம் என்று
சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ அந்தோ!
எதிராசா! நோய்களால் என்னை நலக்காமல்
சதிராக நின் திருத்தாள் தா

யதிராஜரே! தேவரீருடைய அபிமானமே (கருணையே) இவ்வாத்மாவுக்கு உத்தாரகம் (ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவிப்பது). அடியேன் மனத் தெளிவோடே இருக்கும்படிச் செய்த தேவரீர், ஐயோ! வேதனைகளால் அடியேனைத் துன்புறுத்தாமல் ஸாமர்த்யமாக தேவரீர் திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

பாசுரம் 57

எம்பெருமானார் “எந்த உறவைக் கொண்டு இப்படிக் கேட்கிறீர்” என்பதாகக் கொண்டு “திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளில் ஆச்ரயித்த காரணத்தால் அடியேனுடைய அபராதங்களைப் பாராமல் ஏற்றுக் கொண்ட தேவரீர் அடியேனுடைய புன்சொற்களையும் கேட்டருள வேண்டும்” என்கிறார்.

தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப் பிள்ளை
வாசமலர்த் தாள் அடைந்த வத்துவென்னும் நேசத்தால்
என் பிழைகள் காணா எதிராசரே! அடியேன்
புன்பகர்வைக் கேளும் பொறுத்து

யதிராஜரே! ஆசார்யர்களால் கொண்டாடப்படும் திருவாய்மொழிப் பிள்ளையுடைய வாஸனை பொருந்திய திருவடித் தாமரைகளைச் சரணடைந்த அடியவன் என்கிற அன்பினாலே அடியேனை ஏற்றுக்கொண்ட தேவரீர் அடியேனுடைய அல்ப வார்த்தைகளை கோபப்படாமல் கேட்டருள வேண்டும்.

பாசுரம் 58

“திருவாய்மொழிப் பிள்ளையுடைய திருவடிகளைப் பற்றியவன் என்பது மட்டுமோ? அவரிடத்திலே ஞானத்தைப் பெற்ற அடியேனுக்கு தேவரீரிடத்தில் ஒரு ஸம்பந்தம் இல்லையோ?” என்கிறார்.

எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால்
உந்தன் உறவை உணர்த்தியபின் இந்த உயிர்க்கு
எல்லா உறவும் நீ என்றே எதிராசா!
நில்லாதது உண்டோ என் நெஞ்சு?

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையுடைய நிர்ஹேதுக க்ருபையாலே தேவரீர் திருவடிகளில் அடியேனுக்கு இருக்கும் எல்லாவிதமான உறவுகளையும் உணர்த்தியபின் இப்படிப்பட்ட இந்த ஆத்மாவுக்கு திருமந்த்ரத்தில் காட்டப்படும் ஒன்பது விதமான உறவுகளும் தேவரீரென்றே அடியேனுடைய மனது நிலை நில்லாமல் இருக்குமோ?

பாசுரம் 59

“இப்படி தேவரீரிடத்திலே அன்பு பூண்ட அடியேனை திருவரங்கநாதனான பெரிய பெருமாள் பரமபதத்துக்கு அழைத்துச் செல்லப்போவது எந்நாளோ?” என்கிறார்.

எந்தை திருவரங்கர் ஏரார் கருடன் மேல்
வந்து முகம் காட்டி வழி நடத்த சிந்தை செய்து இப்
பொல்லா உடம்பு தனைப் போக்குவது எந்நாள் கொலோ?
சொல்லாய் எதிராசா! சூழ்ந்து

யதிராஜரே! அடியேனுக்குத் தந்தையும் தாயுமான திருவரங்கநாதனான பெரிய பெருமாள் அழகு நிறைந்த பெரிய திருவடியின் மேல் எழுந்தருளி அழகான தன் திருமுக மண்டலத்தைக் காட்டி அர்ச்சிராதி கதியிலே கொண்டு போக நினைத்து அடியேனுடைய இந்தத் தாழ்ந்ததான உடம்பைப் போக்கியருளுவது எந்நாளோ? தேவரீர் அத்தை ஆராய்ந்து அருளிச்செய்ய வேண்டும்.

பாசுரம் 60

இறுதியில், எம்பெருமானாருடன் தமக்கு இருக்கும் நெருக்கமான உறவு முறையாலே எம்பெருமானாருக்குக் கிடைத்த பேறு தமக்கும் கிடைக்கும் என்பதைத் தன் நெஞ்சுக்கு உணர்த்தி மகிழ்கிறார்.

இந்த அரங்கத்து இனிதிரு நீ என்று அரங்கர்
எந்தை எதிராசர்க்கு ஈந்த வரம் சிந்தை செய்யில்
நம்மதன்றோ? நெஞ்சமே! நல்தாதை சொம் புதல்வர்
தம்மதன்றோ? தாயமுறை தான்

நெஞ்சே! பெரிய பெருமாள் “இந்தக் கோயிலிலே (திருவரங்கம்) நீர் ஸுகமாக இரும்” என்று அடியேனுடைய தந்தையான யதிராஜருக்கு கொடுத்தருளின வரத்தை ஆராய்ந்து பார்த்தால் அது நம்மதன்றோ? அது எப்படி என்றால் நல்ல தந்தையின் இயற்கையான சொத்துக்கள் தந்தை வழி உறவு என்ற வழியாலே புத்ரனுக்காகத் தானே இருப்பது? ஆகையால் நம் ப்ராப்திக்கு நாம் முயல வேண்டாம், எம்பெருமானார் க்ருபையால் தானே கிடைக்கும் என்று கருத்து.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment