வாழிதிருநாமங்கள் – நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< எம்பார் மற்றும் பராசர பட்டர்

நஞ்சீயர் வைபவம்

பராசர பட்டருக்குப் பின் ஓராண் வழி ஆசார்யப் பரம்பரையில் வந்தவர்.  இவர் வேதாந்தி என்றும் அறியப் படுகிறார்.  இவர் திருநாராயணபுரத்தில் அவதரத்தவர்.  இவருடைய இயற்பெயர் ஸ்ரீமாதவன்.  ஸ்ரீமாதவாசார்யர் என்று ப்ரசித்தமாக விளங்கியவர்.  அத்வைத  சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர்.  எம்பெருமானார் இவரைத் திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  ஆனால் எம்பெருமானார் காலத்தில் அது நடக்கவில்லை.    சிறிது காலத்திற்குப்  பின் கூரத்தாழ்வானின் திருக்குமாரரன பராசர பட்டர் (ஓராண் வழி பரம்பரையில் எம்பெருமானார், எம்பார், அதன் பின் பராசர பட்டர்) திருநாராயணபுரத்திற்குச் சென்று திருநெடுந்தாண்டக அர்த்தத்தை மேற்கோள் காட்டி ஸ்ரீமாதவாசார்யாரை வாதத்தில் வென்று அவரை திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குள் கொண்டு வந்தார்.  ஸ்ரீமாதவாசார்யர் கலங்கிய கண்களுடன் “ஸ்ரீரங்கராஜப் பெருமாளின் புத்திரரான நீர் காடு, மலை தாண்டி எம்மைக் கருணையுடன் ஆட்கொள்ள வந்தீரே” என்று உள்ளம் நெகிழ்ந்து, பராசர பட்டரின் சிஷ்யராக ஆனார்.  பராசர பட்டரும் ஆதுரத்துடன் அவரை ஏற்றுக் கொண்டார்.

அதன் பின் ஸ்ரீமாதவாசார்யர் சிறிது காலம் திருநாராயணபுரத்தில் வாழ்ந்து வந்தார்.  பின்னர் அவருக்கு சம்சார வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் போகவே தனது செல்வத்தை மூன்று பங்காகப் பிரித்து, இரு பங்கை இரு மனைவியருக்கும் கொடுத்து விட்டு, மீதமுள்ள ஒரு பங்கை எடுத்துக் கொண்டு சந்நியாசம் பெற்று ஆசார்யனுக்குக் (பராசர பட்டருக்கு) கைங்கர்யம் செய்யும் நோக்குடன் திருவரங்கம் வந்தடைந்தார்.   அவரது சந்நியாச கோலத்தைக் கண்ட பராசர பட்டர் நெகிழ்வுடன் “வாரும் நம் ஜீயரே” என்று வரவேற்று ஆரத்தழுவிக் கொண்டார்.  அன்று முதல் ஸ்ரீமாதவாசார்யருக்கு நஞ்சீயர் என்னும் பெயர் நிலைபெற்றது.  பராசர பட்டரிடம் ஆழ்வாரின் பாசுரங்களை மிகக் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ந்து பராசர பட்டர் வியக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்றார்.

பராசர பட்டர் நம்பெருமாள் முன்பு திருமஞ்சன காலங்களில் எம்பெருமானின் வைபவங்களை எடுத்துக் கூறி கட்டியம் சேவிப்பது வழக்கம்.   கட்டியம் சேவிப்பது பெரும்பாலும் ஆழ்வார்களின் பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டே அமையும்.  நஞ்சீயரைப் பாசுரங்கள் எடுத்துக் கொடுக்கச் சொல்லி பட்டர் அதைக் கட்டியம் சேவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  ஒரு முறை அவ்வாறு நஞ்சீயர் கட்டியத்திற்குப் பாசுரம் சேவிக்கும்போது திருவாய்மொழியின் ஏழாம் பத்தில் இரண்டாம் பதிகத்தில் (கங்குலும் பகலும்) ஒன்பதாவது பாசுரத்தில் “என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே என்னும்” என்ற வரிகளைச் சேவிக்கும்போது  இரண்டு வரிகளாகப் பிரிக்காமல் ஒரே வரியாகச் சேவித்தார்.  நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் எம்பெருமானிடம் “என்னுடைய திருமகள் சேரும் திருமார்பை உடையவராதலால் தேவரீர் என்னுடைய ஆவியாக இருக்கிறீர்” என்று கூறுவதுதான் இவ்வரிகளுக்கு உண்மைப் பொருளாகும்.  அதை நஞ்சீயர் சேவித்த விதம் பராசர பட்டரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி அவர் மூர்ச்சையானார்.  பின் நினைவு தெளிந்து நஞ்சீயரை வெகுவாகப் பாராட்டினார்.  அவ்வாறு பட்டருக்கும் நஞ்சீயருக்கும் மிகுந்த நெருக்கம் இருந்ததை அறிகிறோம்.

நஞ்சீயர்,  பராசர பட்டரிடம் ஆழ்வார் பாசுரங்களின் அர்த்தங்களை முன்னிட்டுக் கேள்விகள் கேட்டு அவற்றிற்கான விளக்கங்களை வாங்கி நமது சம்பிரதாய வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்ததை அறியலாம்.  இவர் பங்குனி உத்தரத்தன்று திருநாராயணபுரத்தில் அவதரித்தார்.  இவர் பல வ்யாக்யானங்களை அருளிச் செய்துள்ளார்.   திருவாய்மொழிக்கு முதல் வ்யாக்யானம் எம்பெருமானார் ஆணைப்படி திருக்குருகைப்பிரான் பிள்ளான் ஆறாயிரப்படி அருளிச் செய்தார்.  அதன் பின் பராசர பட்டரின் ஆணையின் படி திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற சிறந்த வ்யாக்யானத்தை நஞ்சீயர் அருளிச் செய்தார்.  மேலும் திருப்பள்ளியெழுச்சி, கண்ணிநுண் சிறுத்தாம்பு போன்ற ப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

நஞ்சீயரின் வாழி திருநாமம்

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
சீமாதவனென்னும் செல்வனார் வாழியே
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே
எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே – தெளிந்த அலைகளையுடைய காவிரியால் சூழப்பட்ட திருவரங்கம் வளர்ச்சி அடையும் வண்ணம் இப்பூவுலகில் அவதரித்த நஞ்சீயர் வாழ்க.

சீமாதவனென்னும் செல்வனார் வாழியே – ஸ்ரீமாதவன் எனும் இயற்பெயரைக் கொண்ட நிறைந்த கைங்கர்யச் செல்வத்தை உடைய நஞ்சீயர் பல்லாண்டு வாழ்க.  இவர் தமது ஆசார்யருக்கு செய்த சிறந்த கைங்கர்யத்தை பறைசாற்றும் வண்ணம் ஒரு சம்பவம் நடந்தது.  ஒரு முறை பராசர பட்டர் பல்லக்கில் வந்து கொண்டிருந்த போது நடந்து வந்து கொண்டிருந்த சந்நியாசியான இவர் அப்பல்லக்குக்குத் தோள் கொடுக்க சென்றாராம்.  உடன் இருந்தவர்கள் “பராசர பட்டர் உமக்கு ஆசார்யரானாலும் க்ருஹஸ்தர் ஆனமையால் சந்நியாசியான நீர் தோள் கொடுப்பது தகாது” என்று உரைத்தனர்.  அதற்கு நஞ்சீயர் “எனது ஆசார்யருக்கு கைங்கர்யம் செய்வதற்கு த்ரிதண்டம் ஒரு தடையாக இருந்தால் அது தேவையில்லை” என்று கூறினாராம்.  அவ்வாறு ஆசார்யருக்குக் கைங்கர்யம் புரியும் செல்வத்தை உடைய நஞ்சீயர் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே – மிகவும் பழமை வாய்ந்ததான வேதத்திற்கு நிகரான தமிழில் அமைந்த நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களின் பொருளை அருளிச் செய்த நஞ்சீயர் வாழ்க.  பல வ்யாக்யானங்கள், விளக்கங்கள் அனைத்தும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இவர் அருளிச் செய்துள்ளார். பராசர பட்டருக்கும் நஞ்சீயருக்கும் இடையே நடந்த ஸம்வாதங்கள் போன்று நஞ்சீயருக்கும் நம்பிள்ளைக்கும் இடையே பல ஸம்வாதங்கள் நடந்துள்ளன.  அவை அனைத்தும் நஞ்சீயர் அருளிச் செய்த விளக்கங்களில் காட்டப்பட்டுள்ளது.  தமிழ் வேதமான திவ்யப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளிச் செய்த நஞ்சீயர் வாழ்க.

பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே – பங்குனி மாதம் உத்தர நக்ஷத்ரத்தில் இப்பாருலகில் உதித்த நஞ்சீயர் பல்லாண்டு வாழ்க.

ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே – அழகிய வளைந்த கைகளை உடைய தமது மனைவிமார்களைத் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட நஞ்சீயர் பல்லாண்டு காலம் வாழ்க.

ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே – திருவாய்மொழிக்கு பராசர பட்டர் ஆணையின்படி  ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானம் அருளியவர் நஞ்சீயர்.  முதல் வ்யாக்யானம் எம்பெருமானார் ஆணைப்படி பிள்ளான் அருளிச்செய்தது ஆறாயிரப்படி.   இரண்டாவது வ்யாக்யானம் நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படி.  மூன்றாவது வ்யாக்யானம் நம்பிள்ளை ஆணைப்படி பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருபத்து நாலாயிரப்படி.  பின் நம்பிள்ளை சிஷ்யரான வடக்குத் திருவீதிப்பிள்ளை நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை ஏடுபடுத்தியிருந்தது ஈடு முப்பத்தாறாயிரப்படி.  இறுதியாக வாதிகேசரி மணவாள ஜீயர் அருளிய பன்னீராயிரப்படி.  இவ்வாறு திருவாய்மொழிக்கு ஐந்து வ்யாக்யானங்கள் அமைந்துள்ளன.  நஞ்சீயரின் தனிச்சிறப்பு என்னவென்றால் ஏறக்குறைய நூறு முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்திருக்கிறார் என்று கூறுவர்.  இது எப்படி அறிய வருகின்றதென்றால் ஒருவர் நம்பிள்ளையிடம் உமது ஆசார்யர் “இந்தப் பாசுரத்திற்கு என்ன விளக்கம் கொடுத்துள்ளார்” என்று கேட்க அதற்கு நம்பிள்ளை “எந்தக் காலத்தில் அவர் அருளியதைக் கேட்கிறீர்கள்” என்று கேட்டதாக அறிகிறோம்.  அவ்வாறு திருவாய்மொழியின் அர்த்தங்களை எப்பொழுதும் அநுஸந்தாநம் செய்யும் நஞ்சீயர் பல்லாண்டு வாழ்க.

எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே – எட்டு திக்குகளிலும் பெருமையைப் பெற்றவரான தமது ஆசார்யரான பராசர பட்டர் திருவடிகளை போற்றும் நஞ்சீயர் பல்லாண்டு வாழ்க.  பொதுவாக அனைத்து ஆசார்யர்களுக்கும் அவர்களின் சிஷ்யர்கள் தான் திருவடி நிலைகளாக இருப்பர்.  அவ்வாறு பராசர பட்டரின் திருவடிகளாகக் கருதப்படும் நஞ்சீயர் வாழ்க.

எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே – அழகு பொருந்திய நஞ்சீயர் இனிதாக இந்தக் காலம் உள்ள அளவும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று நஞ்சீயரின் வாழி திருநாமம் முடிவுறுகிறது.

நம்பிள்ளை வைபவம்

நம்பிள்ளையின் இயற்பெயர் வரதராஜன்.  இவர் திருவரங்கம் அருகில் இருக்கக்கூடிய நம்பூர் என்ற கிராமத்தில் அவதரித்தவர்.  அதனால் நம்பூர் வரதராஜன் என்று வழங்கப்படுகிறார்.  கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  திருமங்கையாழ்வாரும் கார்த்திகை  மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  திருமங்கையாழ்வாரே மீண்டும் நம்பிள்ளையாக வந்து அவதரித்தாரோ என்று சொல்லும்படி ஏற்றம் படைத்தவர்.  எனவே இவர் கலிகன்றி தாசர் என்று அழைக்கப்படுகிறார்.  நஞ்சீயர் கோஷ்டியில் காலக்ஷேபத்தைக் கேட்டு அநுபவித்தவர்.  நஞ்சீயரின் ப்ரதான சிஷ்யராவார்.

நஞ்சீயர் தமது ஒன்பதாயிரப்படி வ்யாக்யானத்தை கையெழுத்து நன்றாக உள்ளவர்களை வைத்து ஏடுபடுத்த வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.  தம்முடைய கோஷ்டியில் நன்றாக எழுதக் கூடியவர்கள் யார் என்று விசாரிக்க அனைவரும் நம்பூர் வரதராஜன் நன்றாக எழுதுவார் என்று நம்பிள்ளையை சுட்டிக் காட்டினர்.  நஞ்சீயரும் ஒன்பதினாயிரப்படி ஓலைச் சுவடிகளை நம்பிள்ளையிடம் கொடுத்து ஏடு படுத்தி வருமாறு பணித்தார்.  நம்பூர் வரதராஜரான நம்பிள்ளையும் அந்த ஓலைச் சுவடிகளை எடுத்துக் கொண்டு தனது ஊரான நம்பூருக்கு காவிரி ஆற்றைக் கடந்து செல்லலானார்.  அப்போது காவிரியில் வெள்ளம் வரவே அவர் ஓலைச் சுவடிகளை மூட்டையாக கட்டித் தலையில் வைத்துக் கொண்டு காவிரியைக் கடக்கலானார்.  ஆயினும் வெள்ளம் ஓலைச்சுவடியை அடித்துக் கொண்டு செல்ல அவர் கலக்கமடைந்தார்.  இருப்பினும் தமது ஊருக்குச் சென்று தமது ஆசார்யரான நஞ்சீயரை மனதில் தியானித்துக் கொண்டு நஞ்சீயரிடம் காலக்ஷேபம் கேட்டதை வைத்துக் கொண்டு எழுதலானார்.  பராசர பட்டர் போன்று தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத்தேர்ந்த ஞானி நம்பிள்ளை.  தாம் எழுதியதை திருவரங்கம் வந்து நஞ்சீயரிடம் சமர்ப்பிக்கிறார்.   நஞ்சீயர் அதைக் கண்டவுடன் வியக்கிறார்.  ஏனென்றால் ஓலைச் சுவடியில் இருந்த அனைத்து வ்யாக்யானங்களும் அழகான வார்த்தைகளைக் கொண்டு எழுதப் பட்டிருந்தது.  நஞ்சீயர் “யானைக்கு கோலம் செய்தது போலே” என்று கூறினார்.  அதாவது யானையே அழகான வடிவுடையது அதற்கு மேலும் அலங்காரம் செய்தால் எப்படி இருக்குமோ தம்முடைய வ்யாக்யானங்களும் மேலும் அழகு படுத்தப்பட்டிருக்கிறது என்னும் பொருள் படும்படி நஞ்சீயர் அவ்வாறு கூறினார்.  அதைப்பற்றி நம்பூர் வரதராஜனிடம் வினவ அவர் நடந்ததைக் கூறினார்.  அதைக் கேட்டு பெருமிதம் கொண்ட நஞ்சீயர் “வாரும் நம்பிள்ளையே” என்று பேரானந்தத்துடன் அவரை அணைத்துக் கொண்டார்.

“நம்பிள்ளை கோஷ்டியோ நம்பெருமாள் புறப்பாடோ” என்று அனைவரும் வியக்கும்படி நம்பெருமாள் புறப்பாட்டிற்கு எவ்வளவு கூட்டம் வருமோ அவ்வளவு கூட்டம் நம்பிள்ளையின் காலக்ஷேபத்திற்கும் வரும் என்று அறிகிறோம்.  நம்பிள்ளையின் காலம் “நல்லடிக் காலம்” என்று வழங்கப்படுகிறது.  எந்த ஒரு இடையூறும் இன்றி பகவத் விஷயங்கள் நன்றாக நடைபெற்ற காலம் நம்பிள்ளை வாழ்ந்த காலம் என்று அறியப்படுகிறது.  ஒரு முறை பெரிய பெருமாள் தன்னுடைய ஆதிசேஷ பர்யங்கத்தை விட்டு நம்பிள்ளை காலக்ஷேபத்தைக் கேட்க எழுந்து வர, விளக்குப் பிடிக்கும் கைங்கர்யபரர் “தேவரீர் எழுந்து வரக்கூடாது.  அர்ச்சாவதாரத்தில் நீர் அப்படியே தான் இருக்க வேண்டும்” என்று கூறி அவரை சயனிக்க வைத்தார் என்று சரித்திரத்தின் மூலம் அறிகிறோம்.

பிற்காலத்தில் லோகாசார்யர் என்ற திருநாமத்தையும் இவர் பெற்றார்.  கந்தாடைத் தோழப்பர் நம்பிள்ளையிடம் அபசாரப்பட்டு பின் மனம் திருந்தி இவரை “என்ன உலகாரியனோ” என்று வியந்து லோகாசார்யர் என்ற பட்டத்தை இவருக்கு அளித்தார். மேலும் நடுவில் திருவீதிப் பிள்ளை என்பவரும் இவரிடம் அபசாரப்பட்டு பின்னர் மனம் வருந்தி இவரிடம் சிஷ்யர் ஆனார் என்று அறிய வருகிறோம்.  அவ்வாறு பல ஆசார்யர்களும் நம்பிள்ளையிடம் அன்பு கொண்டு அடி பணிந்திருந்தனர் என்பதை அறியலாம்.

நம்பிள்ளை வாழி திருநாமம்

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே – தேன் ததும்பி வழியும் சிவந்த தாமரை மலர்களைப் போன்ற நம்பிள்ளையின் திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ்க.

திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே – நம்பிள்ளை இடையில் அழகாக உடுத்துக் கொண்டிருக்கிற பட்டாடை அழகு வாழ்க.

தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே –  துளசி மாலையும்  தாமரை மாலையும் பூணூலும் நம்பிள்ளை திருமார்பில் அணிந்து கொண்டிருக்கிறார்.  அவை அனைத்தும் பல்லாண்டு வாழ்க.

தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே – தாமரையைப் போன்ற இரண்டு கைகளும், பரந்த தோள்களும் பல்லாண்டு வாழ்க.

பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே – செறிவான பாசுரங்களைக் கொண்ட தமிழ் வேதமான திருவாய்மொழியை தமது பவளத்தை ஒத்த வாயினால் அநுசந்தானம் செய்து கொண்டிருப்பார் நம்பிள்ளை.    வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்த திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தில் நம்பிள்ளையின்  காலக்ஷேபத்தின் அனைத்து விஷயங்களும் ஐயமற விளக்கப்பட்டிருக்கும்.  மற்ற வ்யாக்யானங்களில் எடுத்துக் காட்டியுள்ள அனைத்து அர்த்தங்களும் இந்த ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தில் பொதிந்திருக்கும்.   அவ்வாறு இந்த திருவாய்மொழியின் வ்யாக்யானத்தை அநுஸந்தானம் செய்து கொண்டிருக்கும் நம்பிள்ளையின் பவளம் போன்ற அதரங்கள் வாழ்க.

பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே – பாடியம் என்பது எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யம்.    அந்த ஸ்ரீபாஷ்யத்தின் பொருள் எடுத்து உரைக்கும் சிறந்த நாவும் வாழ வேண்டும்.  நம்பிள்ளை சமஸ்கிருதத்திலும் தமிழிலும் சிறந்த விற்பன்னர்.  தமது காலக்ஷேபங்களில் சமஸ்கிருத க்ரந்தங்கள், சமஸ்கிருத இலக்கணம், எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதம், இதிகாச புராணங்கள், ஆகமங்கள், பகவத் கீதை, ஸ்ம்ருதி, திருக்குறள், அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.  அவ்வாறு காலக்ஷேபச் சக்ரவர்த்தியான சிறந்த நாவுடைய நம்பிள்ளை வாழ்க.

நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே – திருநாமம் திகழ்கின்ற நெற்றி (நுதல்), பிறை சந்திரனைப் போன்ற முகமும், திருமுடியும் பல்லாண்டு வாழ்க.

நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே – நம்பிள்ளையின் வடிவான அழகு நாள் தோறும் பல்லாண்டு வாழ்க.

ஆசாரியன் * சிச்சன் ஆருயிரைப் பேணுமவன் *
தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை* – ஆசையுடன்
நோக்குமவன் என்னும்* நுண்ணறிவைக் கேட்டு வைத்தும்*
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்

என்று மணவாள மாமுநிகள் உபதேச ரத்நமாலையில் கூறியது போல் ஆசார்யனானவர் சிஷ்யனின் ஆத்மாவைப் பார்க்க வேண்டும்.  சிஷ்யனானவன் ஆசார்யருடைய தேகம் நன்றாக இருக்க வேண்டிய அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும்.  சிஷ்யர்கள்  ஆசார்யனுடைய திருமேனியை மிகவும் நேசிக்க வேண்டும்.  இதே விஷயம் ஸ்ரீவசனபூஷணத்திலும் எடுத்துக் காட்டப் படுகிறது.   ஆசார்யர் என்பவர் சிஷ்யனை உலக விஷயங்களில் இருந்து விடுவித்து எம்பெருமானிடம் சேர்க்கும் உபாயத்தைக் காட்டுபவர். சிஷ்யனானவன் ஆசார்யன் ஆத்ம விஷயங்களில் தலையிடக் கூடாது.  ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்வதுதான் சிஷ்யனுக்கு ப்ரதானக் கடமையாகும்.  மணவாள மாமுனிகளின்  மேற்சொன்ன பாசுரப்படி நம்பிள்ளையின் தேஹ ஆரோக்யத்தை முழுவதுமாக கவனித்துக் கொண்டவர் அவரது சிஷ்யர்களில் ஒருவரான பின்பழகராம் பெருமாள் ஜீயர்.  அவரது சிறப்பும் உபதேச ரத்நமாலையில் மணவாள மாமுனிகள் கீழ்க் கூறப்பட்டுள்ள பாசுரத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.

பின்பழகராம் பெருமாள் சீயர்* பெருந்திவத்தில்
அன்பதுவும் அற்று மிக்க ஆசையினால்* – நம்பிள்ளைக்கான அடிமைகள் செய்* அந்நிலையை நன்னெஞ்சே!*
ஊனமற எப்பொழுதும் ஓர்

பின்பழகராம் பெருமாள் ஜீயர் போன்று நாமும் நமது ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும்.  பின்பழகராம் பெருமாள் ஜீயர் போஷித்த நம்பிள்ளையின் வடிவழகு பல்லாண்டு வாழ வேண்டும் என்று நம்பிள்ளையின் வாழி திருநாமம் முற்றுப்பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment