திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 1 – 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை

<< தனியன்கள்

paramapadhanathan

முதல் பாசுரம். (உயர்வே பரன் படி…) இதில், மாமுனிகள் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள், அதாவது எம்பெருமானின் மேன்மையை விளக்கி, “அவன் திருவடிகளில் பணிந்தால் உஜ்ஜீவனத்தை அடையலாம்” என்று சொல்லும் முதல் திருவாய்மொழி சேதனர்களுக்கு மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று அருளிச்செய்கிறார்.

உயர்வே பரன் படியை  உள்ளதெல்லாம் தான் கண்டு
உயர் வேதம் நேர் கொண்டுரைத்து மயர்வேதும்
வாராமல் மானிடரை வாழ்விக்கும் மாறன் சொல்
வேராகவே விளையும் வீடு

மேன்மைகள் பொருந்திய ஸர்வேச்வரனின் தன்மைகளை முழுவதுமாக அநுஸந்தித்த ஆழ்வார், தலைசிறந்த ப்ரமாணமான வேதத்தின் க்ரமத்தில் அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகள் மனிதர்கள் சிறிதும் அஜ்ஞானம் இல்லாமல், உஜ்ஜீவனத்தைப் பெற்று, மோக்ஷத்தை அடைய வழிசெய்யும்.

இரண்டாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் ஸம்ஸாரிகளைத் திருந்துமாறும் தன்னுடைய ஹ்ருதயத்தைப்போலே துணையாக இருக்கும்படிக் கேட்பதையும் அனுபவித்து இப்பாசுரத்தில் அருளிச்செய்கிறார்.

வீடு செய்து மற்றெவையும்   மிக்க புகழ் நாரணன் தாள்
நாடு நலத்தால் அடைய நன்குரைக்கும் – நீடு புகழ்
வண்குருகூர் மாறன்  இந்த மாநிலத்தோர் தாம் வாழப்
பண்புடனே பாடி அருள் பத்து

சிறந்த திருக்குருகூருக்குத் தலைவரான பெருமை பொருந்திய ஆழ்வார் மிகுந்த கருணையுடன் இந்தப் பரந்த உலகில் வாழ்பவர்களைத் திருத்த “எல்லாவற்றையும் விட்டு ஸ்ரீமந் நாராயணனின் மேன்மை பொருந்திய திருவடிகளைப் பற்றுங்கோள்” என்று அருளிச்செய்தார்.

மூன்றாம் பாசுரம். மாமுனிகள், ஆழ்வார் பகவானின் ஸௌலப்யத்தை (எளிமையை) உபதேசித்த பாசுரங்களை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்
முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் பத்தி செய்யும்
என்றுரைத்த  மாறன் தனின் சொல்லால் போம்  நெடுகச்
சென்ற பிறப்பாம் அஞ்சிறை

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான “ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்; இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே! கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி என்னும் கட்டு விலகும்.

நான்காம் பாசுரம். மாமுனிகள், பறவைகளை எம்பெருமானிடம் தூதுவர்களாகப் போய், அவனுடைய அபராத ஸஹத்வம் (குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளுதல்) என்ற குணத்தை அறிவிக்குமாறு ப்ரார்த்திக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

அஞ்சிறைய புட்கள் தமை ஆழியானுக்கு நீர்
என் செயலைச் சொல்லும் என இரந்து  – விஞ்ச
நலங்கியதும் மாறன் இங்கே நாயகனைத் தேடி
மலங்கியதும் பத்தி வளம்

அழகிய சிறகுகளை உடைய பறவைகளைக் கண்ட ஆழ்வார், அவைகளிடம் “நீங்கள் சென்று என்னுடைய நிலைமையை திருவாழியை உடைய ஸர்வேச்வரனுக்குச் சொல்லுங்கோள்” என்று ப்ரார்த்தித்து, தன் சக்தியை இழந்து, எல்லா உலகிலும் எம்பெருமானைத் தேடி, கலக்கத்தை அடைந்தார். இதுவே ஆழ்வாருடைய பக்தியின் பெருமை.

ஐந்தாம் பாசுரம். மாமுனிகள், எல்லோரும் எம்பெருமானைப் புகலிடமாகக் கொள்ள உதவும் அவனுடைய ஸௌசீல்யம் (நீர்மை) என்கிற குணத்தை விளக்கும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

வளம் மிக்க மால் பெருமை மன்னுயிரின் தண்மை
உளம் உற்று அங்கூடுருவ ஓர்ந்து தளர்வுற்று
நீங்க நினை மாறனை மால் நீடிலகு சீலத்தால்
பாங்குடனே சேர்த்தான் பரிந்து

மிகுதியான ஐச்வர்யத்தை உடைய எம்பெருமானுடைய பெருமையையும் தன்னுடைய தாழ்ச்சியையும் தன் நெஞ்சில் உணர்ந்த ஆழ்வார், அவற்றை நன்றாக ஆராய்ந்து, மிகவும் தளர்ந்து, எம்பெருமானை விட்டு விலக நினைத்தார்; ஸர்வேச்வரன் தன்னுடைய ஒளிவிடும் சீல குணத்தைக் கொண்டு, ஆழ்வாரை ஆனந்தமாக, ஸ்நேஹத்துடன் அணைத்தான்.

ஆறாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானை அடைவதும் தொழுவதும் அரிதன்று, எளிது என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பரிவதில் ஈசன் படியைப் பண்புடனே பேசி
அரியனலன் ஆராதனைக்கென்று  – உரிமையுடன்
ஓதி அருள் மாறன் ஒழிவித்தான் இவ்வுலகில்
பேதையர்கள் தங்கள் பிறப்பு

எம்பெருமானிடம் நெருக்கமான பக்தியுடன் பேசிய ஆழ்வார், எல்லா தோஷங்களுக்கும் எதிர்த்தட்டான ஸர்வேச்வரனின் தன்மைகளை “பூர்ணனான ஸர்வேச்வரன், அவனுக்கு எதை ஸமர்ப்பித்தாலும் த்ருப்தியுடன் ஏற்றுக்கொள்வான்; மேலும் அவனை ஆராதிப்பது அரிய செயல் அன்று” என்று சொல்லி, இவ்வுலகில் அறிவற்ற மக்களுக்கு பிறவி முதலியவற்றை விலக்கியருளினார்.

ஏழாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானிடத்தில் சரணடையும் இனிமையைக் கொண்டாடிச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பிறவி அற்று நீள் விசும்பில் பேரின்பம் உய்க்கும்
திறம் அளிக்கும் சீலத் திருமால் அறவினியன்
பற்றுமவர்க்கென்று பகர் மாறன் பாதமே
உற்ற துணை என்று உள்ளமே! ஓடு

நெஞ்சே! “ச்ரிய:பதியான எம்பெருமான் தன்னிடம் சரணடைபவர்களை பிறவித்துயரில் இருந்து விடுவிக்கிறான்; மேலும் அவர்களுக்குப் பரமபதத்தில் உயர்ந்த ஆனந்தத்தை அளிக்கும் தன்மையுடன் இருக்கிறான்; அப்படி அவனிடம் சரணடைபவர்களுக்கு அவனே மிகவும் இனிமையானவன்” என்று அருளிச்செய்த ஆழ்வாரின் திருவடிகளையே சிறந்த துணையாகக் கருதி, அவரிடம் விரைந்து சென்று சரணடைவாயாக.

எட்டாம் பாசுரம். மாமுனிகள், நேர்மையுள்ளவர்களிடமும் நேர்மையற்றவர்களிடமும் எம்பெருமான் நேர்மையாகப் பழகுகிறான் என்று சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

ஓடு மனம் செய்கை உரை ஒன்றி நில்லாதாருடனே
கூடி நெடுமால் அடிமை கொள்ளும் நிலை  – நாடறிய
ஓர்ந்தவன் தன் செம்மை உரை செய்த மாறன் என
ஏய்ந்து நிற்கும் வாழ்வாம் இவை

நேர்மை இல்லாதவர்களை, அதாவது தங்கள் நிலையில்லாத மனம், உடம்பு மற்றும் வாக்கு ஆகிய கரணங்கள் ஒருமித்து இல்லாமல் இருப்பவர்களை, ஏற்றுக் கொள்வதாகிய ஸர்வேச்வரனின் குணத்தைப் பேசி எல்லோரும் உணரும்படி அருளிய ஆழ்வாரை அனுஸந்திப்பவர்களிடம் தங்கள் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்த (கைங்கர்யச்) செல்வம் நிலைத்து நிற்கும்.

ஒன்பதாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமானின் பொறுக்கப் பொறுக்க ஆனந்தத்தைக் கொடுக்கும் குணத்தைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் உவந்தாற்ற
அவயங்கள் தோறும் அணையும் – சுவை அதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொற்றாள் நம் சென்னி பொரும்

ஸர்வேச்வரன் தன்னுடைய (சென்ற பதிகத்தில் வெளியிடப்பட்ட) நேர்மை போன்ற குணங்களை உணர்ந்தவர்களுடன் படிப்படியாக, அவர்களின் ஒவ்வொரு அவயவத்துடனும் ஆனந்தமாகக் கூடும் இன்பத்தைப் பெற்று அனுபவித்த ஆழ்வார், அதை மிகுந்த ஆனந்தத்துடன் அருளிச் செய்தார். இப்படிப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளைச் சொல்லவே, ஸர்வேச்வரனின் திருவடிகள் நம் தலையில் வந்து சேரும்.

பத்தாம் பாசுரம். மாமுனிகள், எம்பெருமான் தன் எல்லா அவயங்களுடனும் கூடியதற்குத் தன்னிடத்தில் எந்தக் காரணமும் இல்லை என்பதை உணர்ந்து, த்ருப்தியுடன் எம்பெருமானின் நிர்ஹேதுக க்ருபையைச் சொல்லும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார்.

பொரும் ஆழி சங்குடையோன்  பூதலத்தே வந்து
தருமாறோர் ஏதுவறத்தன்னை திரமாகப்
பார்த்துரை செய் மாறன் பதம் பணிக என் சென்னி
வாழ்த்திடுக என்னுடைய வாய்

திருவாழியையும் ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும் தன் திருக்கைகளில் கொண்டிருக்கும் எம்பெருமான், இவ்வுலகில் எந்தக் காரணமும் இல்லாமல் தன் நிர்ஹேதுக க்ருபையாலே அவதரித்து, தன்னை மற்றவர்களுக்குக் கொடுக்கும் தன்மயை நன்றாக அனுபவித்த ஆழ்வார், அதை அருளிச்செய்தார்; இப்படிப்பட்ட ஆழ்வாரின் திருவடிகளில் என் தலை வணங்கட்டும்; என்னுடைய வாய் அவருக்கு மங்களாசாஸனம் செய்யட்டும்.

ஆதாரம் – http://divyaprabandham.koyil.org/index.php/2020/10/thiruvaimozhi-nurrandhadhi-1-10-simple/

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment