திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 7.4 – ஆழியெழ

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 7.2

எம்பெருமானைப் பிரிந்து துக்கப்பட்ட ஆழ்வார் இரண்டு பதிகங்களில் பெண் பாவனையில் மிகவும் வருத்தத்துடன் பாசுரங்களை அருளிச்செய்தார். ஆழ்வாரை தேற்றவேண்டும் என்று பார்த்த எம்பெருமான் தன்னுடைய வெற்றிச் சரித்ரங்களை எல்லாம் ஆழ்வாருக்கு நன்றாகக் காட்டிக்கொடுக்க அவற்றை மிகவும் ஈடுபட்டு அனுபவித்த ஆழ்வார் அதை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தாலே ஆழியெழ என்று தொடங்கி இப்பதிகத்தில் அருளிச்செய்கிறார்.

முதல் பாசுரம். எம்பெருமான் திருவுலகளந்தருளின விதத்தை நினைத்துப் பார்த்து ஆனந்தப்படுகிறார் ஆழ்வார்.

ஆழி எழச் சங்கும் வில்லும் எழத் திசை
வாழி எழத் தண்டும் வாளும் எழ அண்டம்
மோழை எழ முடி பாதம் எழ அப்பன்
ஊழி எழ உலகம் கொண்டவாறே

ஆயுதங்களில் முக்யமானவனான திருவாழியாழ்வான் முன்னே உயர்ந்து தோன்றவும், உடனே ஸ்ரீபாஞ்சஜந்யமும் ஸ்ரீசார்ங்கமும் தோன்றவும், கதையும் வாளும் தோன்றவும், இந்த ஆயுத பூர்த்தியைக் கண்டு திசைதோறும் நின்றவர்கள் பெருத்த கோஷத்துடன் மங்களாசாஸனம் செய்ய, எம்பெருமான் வேகமாக வளர, அண்டகபாலம் பிளந்து அது வழியாக ஆவரண ஜலம் நீர்க்குமிழியாகக் கிளம்பும்படி திருமுடியும் திருவடியும் உயரக்கிளம்பும்படி, நல்லகாலமும் தோன்றும்படி ஸர்வேச்வரன் உலகத்தை அளந்து கொண்ட விதம் இருந்தபடியே!

இரண்டாம் பாசுரம். எம்பெருமான் அம்ருதத்தைக் கடைந்தெடுத்த சரித்ரத்தை நினைத்துப்பார்த்து ஆனந்தம் அடைகிறார் ஆழ்வார்.

ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி அர
வூறுசுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல்
மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன்
சாறு பட அமுதம் கொண்ட நான்றே

பெரிய உபகாரகனான ஸர்வேச்வரன் தேவர்களுக்கு மஹோத்ஸவம் உண்டாம்படி அம்ருதத்தைக் கொண்ட நாளன்று, கடலைக் கடைந்த வேகத்தில் ஆறுகள் தங்கள் பிறப்பிடமான மலையை நோக்கி எதிர்ப்பக்கம் ஓடுகிற ஒலியும், வாசுகி என்கிற பாம்பின் உடம்பைச் சுற்றி மந்தர மலையிலே தேய்க்கும் ஒலியும் கடல் இடம் வலமாக மாறிச் சுழன்று அழைக்கின்ற ஒலியும் கேட்டன.

மூன்றாம் பாசுரம். எம்பெருமான் பூமியை இடந்தெடுத்த சரித்ரத்தை நினைத்துப்பார்த்து ஆனந்தம் அடைகிறார் ஆழ்வார்.

நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும்
நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன்
ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே

பெரிய உபகாரகனான எம்பெருமான் பூமியை அண்ட கபாலத்தில் இருந்த ஒட்டு விடும்படிக் குத்தி இடந்து, எயிற்றில் கொண்ட காலத்தில் ஏழு தீவுகளைக் கொண்ட பூமியும் நழுவாமல் தங்கள் இடத்தில் இருந்தன. மேலும் பூமியைத் தாங்கி நிற்கும் ஏழு மலைகளும் அசையாமல் தங்கள் இடத்தில் இருந்தன. மேலும், ஏழ கடல்களும் உடைந்தொழுகாமல் தங்கள் இடத்தில் இருந்தன.

நான்காம் பாசுரம். எம்பெருமான் ஜகத்தை ஸம்ஹரித்துத் தன் வயிற்றில் வைத்து ரக்ஷிப்பதை நினைத்து ஆனந்தம் அடைகிறார்.

நாளும் எழ நில நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தானும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே

பகல் இரவு போன்ற மாறுபாடுகள் குலையும்படியும் நிலம், நீர் ஆகியவைகள் நிலைகுலைந்துபோகும்படியும், ஆகாசமும், க்ரஹங்களும் நிலைகுலைந்துபோகும்படியும், மலைகள் அடிவாரத்துடன் தூக்கப்படும்படியும், நக்ஷத்ரம் முதலிய ஒளி படைத்த பதார்த்தங்களும் குலையவும், ப்ரளய ஆபத்திலே காக்கும் எம்பெருமானின் பெரிய உபகாரங்கள் “பசித்துண்டான்” என்று சொல்லும்படி இந்த உலகத்தை உண்டது இருந்தபடியே!

ஐந்தாம் பாசுரம். எம்பெருமான் மஹாபாரத யுத்தத்தை நடத்தியதை நினைத்துப் பார்க்கிறார்.

ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
ஆணுடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள்
ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன்
காணுடைப் பாரதம் கையறை போழ்தே

அடியார்களிடத்தில் பக்ஷபாதியான கண்ணன் அழகிய மஹாபாரத யுத்தத்தை கைதட்டி ஏற்பாடு செய்த போது வலிமை வாய்ந்த உடலை உடைய மல்லர்கள் நெரிந்துவிழுகிற ஓசையும், ராஜாக்களுடைய வீர புருஷர்களை உடைய சேனைகள் நடுங்கும் ஓசையும், ஆகாசத்திலே தங்களுக்குரிய பெருமைகளை உடைய தேவர்கள் யுத்தத்தைப் பார்க்க வந்து கொண்டாடுகிற ஓசையும் கேட்டது.

ஆறாம் பாசுரம். எம்பெருமான் ஹிரண்யனை அழித்ததை நினைத்துப் பார்க்கிறார்.

போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை
சூழும் எழுந்து உதிரப் புனலா மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே

நாள் கழியும் வேளையில் இளம் செக்கர்போலே ஆகாசமும் திசைகளும் சூழ எழுந்து ரத்த நீராகும்படி அடியார்களுக்கு உதவுபவனான நரஸிம்ஹன் எம்பெருமான் பெரிய துக்கத்தை விளைத்து அஸுரனான ஹிரண்யனைக் கொல்லும் விதம் மலை கிழியும்படி பிளந்த சிங்கத்தை ஒத்திருந்தது.

ஏழாம் பாசுரம். எம்பெருமான் இலங்கையை அழித்ததை நினைத்துப் பார்க்கிறார்.

மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலை போல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே

எதிரெதிராக ஓசை செய்யும் அம்புகளாலே கூட்டம் கூட்டமாக நூறு நூறாய் ராக்ஷஸப் பிணங்கள் மலைபோலே புரண்டு வீழ ஆறுகளை உட்கொண்ட கடலைப்போலே ரத்தம் பெருக, அடியார்களுக்கு உதவி செய்யும் சக்ரவர்த்தித் திருமகன் இலங்கையை பஸ்மமாகும்படி யுத்தம் செய்த நேர்மை இருந்தபடி.

எட்டாம் பாசுரம். பாணாஸுர யுத்தம் நடந்த விதத்தை நினைத்துப் பார்க்கிறார்.

நேர் சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும்
நேர் சரிந்தான் எரியும் அனலோன் பின்னும்
நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன்
நேர் சரி வாணன் திண் தோள் கொண்ட அன்றே

தன் பேரனான அநிருத்தனுக்கு உதவிய கண்ணன் எம்பெருமான், ருத்ரன் முதலியவர்களை நம்பி வந்த பாணனுடைய திடமான தோள்களை அறுத்து வெற்றி கொண்ட அன்று , மயிலைக் கொடியாக உடைய ஸுப்ரஹ்மண்யன் எதிரே நிற்க முடியாமல் சாய்ந்துபோனான். மேலும் ருத்ரனோ என்று ப்ரமிக்கும்படியான க்ரௌர்யத்தையுடைய அக்னியும் எதிர் நில்லாமல் சரிந்தான். மேலும் மூன்று கண்களை உடையவனாகையாலே சக்தி மிகுந்தவனான ருத்ரனும் புறமுதுகிட்டுப் போனான். இதை நீங்கள் எல்லோரும் பார்த்தீர்களே!

ஒன்பதாம் பாசுரம். எம்பெருமான் ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும் விதத்தை நினைத்துப் பார்க்கிறார்.

அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல்
அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் 
அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே

உலகத்தைப் படைத்த பெரிய உபகாரகன் முதலில் உலகத்தை உண்டாக்கியதும் அக்காலத்திலே அதுக்குக் காரணமான பஞ்சபூதங்களையும், உலகில் இருக்கும் மலை முதலிய பொருள்களையும் உண்டாக்கியதும், அக்காலத்தில் சந்த்ரன் ஸூர்யன் ஆகிய இருவரையும் மற்ற ஒளி விடும் பொருள்களையும் உண்டாக்கியதும், அக்காலத்திலே, அதுக்குமேலே மழையையும், மழையை நம்பி இருக்கும் ப்ராணிகளையும், மழையைக் கொடுக்கும் தேவர்களையும், மற்ற ப்ராணிகளையும் உண்டாக்கியதும் எல்லாம் ஒரே ஸமயத்தில் நடந்தன.

பத்தாம் பாசுரம். எம்பெருமான் கோவர்த்தன மலையைத் தூக்கியதை நினைத்துப் பார்த்து அனுபவிக்கிறார்.

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொறிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே

மேய்கிற பசுக்களானவை கீழே ஒதுங்கும்படியும் கீழ் மேலாக மலையை எடுத்ததால் மலையில் வாழும் யானை முதலிய மிருகங்கள் புரண்டு விழும்படியும் சுனைகளின் வாய்வரை நிறைந்த நீரானது பெரிய கோஷத்தோடு சொரியும்படியும் தன் இனமான ஆயர்களையும் தன் பசுக்களையுமுடைய திருவாய்ப்பாடி முழுவதும் அங்கே ஒடுங்கும்படியும் ஆபத்தைப் போக்குபவனான கண்ணன் தீய மழையைத் தடுக்க கோவர்த்தனம் என்கிற மலையை எடுத்தான்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைக் கற்றவர்களுக்கு இது எல்லாவிதத்திலும் வெற்றியைக்கொடுக்கும் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.

குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும்
ஒன்றி நின்ற சடகோபன் உரை செயல்
நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை
வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே

கோவர்த்தனத்தைத் தூக்கிய மஹோபகாரனான கண்ணனுக்கு அடியார்களான பாகவதர்களோடே ஒன்றாகக்கூடி நின்ற ஆழ்வாருடைய ஆயிரம் பாசுரங்களுக்குள் ஸர்வேச்வரனுடைய வெற்றிச்சரித்ரங்களைக் காட்டும் நன்மையை உடைய இந்த பதிகத்தை அர்த்தத்துடன் கற்பவர்களுக்கு எல்லாவிதமான வெற்றியையும் இது தரும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment