ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
பராங்குச நாயகியும் ஸ்ரீரங்கநாதனும்
எம்பெருமானைத் துறந்து துயரத்தின் உச்சியை அடைந்த நம்மாழ்வார் தன்னிலை மாறிப் பெண்ணிலையை அடைந்தார். பராங்குச நாயகியாக ஸ்ரீரங்கநாதனிடத்தில் மிகவும் ஈடுபட்டு பேச முடியாத நிலையை அடைந்து, பராங்குச நாயகியின் திருத்தாயாராகத் தன் மகளைக் கொண்டு போய் பெரிய பெருமாள் திருமுன்பே இருக்கும் திருமணத்தூண்களுக்கு நடுவே கிடத்தித் தன் மகளின் அவல நிலையை அவனிடத்தில் முறையிட்டு “இவள் விஷயத்தில் நீ தான் எல்லா ரக்ஷணங்களையும் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்தித்து நிற்கிறாள்.
முதல் பாசுரம். மிகவும் விரும்பத்தக்கதான தனித்துவம் வாய்ந்த அடையாளங்களைச் சொன்ன இவள் துன்பத்துடன் இருக்கிறாள், இவள் விஷயத்தில் என்ன செய்வதாக நினைத்திருக்கிறீர் என்கிறாள்.
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும் இரு நிலம் கை துழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாயே?
இரவும் பகலும் கண்கள் துயிலவேண்டும் என்ற அறிவும் இல்லாதவள். கண்ணில் பெருகும் நீரை கடல் நீரைக் கையாலே இறைப்பதைபோலே இறைக்கிறாள். எம்பெருமானுடைய சங்கு சக்கரம் என்று சொல்லி கையைக் கூப்புகிறாள். எம்பெருமானுக்குத் தாமரை போன்ற கண் என்று சொல்லித் தளர்கிறாள். உன்னை விட்டு எப்படி வாழ்வேன் என்று சொல்லுகிறாள். பெரிய பூமியை கையாலே துழாவி ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறாள். சிவந்த கயல்கள் துள்ளிப் பாயும் நீரையுடைய திருவரங்கத்திலே வாழ்பவனே! இப்படிப்பட்ட மாறுபாடுகளை உடையவள் விஷயத்தில் என்ன செய்யப்போகிறாய்?
இரண்டாம் பாசுரம். நீ எல்லாவிதத்திலும் ரக்ஷகனாயிருக்க, இவளுடைய சரீரம் என்ன ஆகப் போகிறது என்கிறாள்.
என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில் வண்ணா தகுவதோ என்னும்
முன் செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய் என் கொலோ முடிகின்றது இவட்கே
என்னை உனக்கே ஆக்கிகொண்ட, மிகவும் அழகிய திருக்கண்களை உடையவனே! என்பாள். கண்களில் கண்ணீர் பெருகி எதுவும் செய்ய முடியாமல் இருப்பாள். அலையெறிகிற நீரையுடைய திருவரங்கத்தில் வாழ்பவனே! உன்னை அடைய நான் என்ன செய்ய முடியும் என்பாள். வெப்பமான மூச்சை பலமுறை விட்டு உருகுவாள். நான் முன்பு செய்த பாபத்தினாலேயே நீ என் முன் வாராதிருக்கிறாய் என்று சொல்லுவாள். மேகத்தைபோன்ற உதாரகுணத்தை உடையவனே! நீ செய்வது தகுமோ என்பாள். இந்த லோகத்தை முன் காலத்தில் படைத்து, பிறகு அளந்து கொண்டவனே! என் பெண்பிள்ளைக்கு என்ன ஆகப்போகிறதோ?
மூன்றாம் பாசுரம். அடியார்களின் விரோதிகளைப் போக்கும் பல அவதாரங்களைச் செய்த நீ, இவள் இப்படித் துன்பப்படுவதற்கு என்ன செய்தாய் என்கிறாள்.
வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே! என்னும் உள்ளுருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும்
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! இவள் திறத்தென் செய்திட்டாயே?
சிறிதும் வெட்கம் இல்லாதவளாக இருக்கிறாள். மணியைப்போன்று எளிமையாக இருப்பவனே என்பாள். இதைக் கேட்டு வருகிறானா என்று வானத்தைப் பார்ப்பாள். வாராததாலே மயங்குவாள். வலிமையை உடைய அசுரர்களுடைய உயிர்களை சிறிதும் மிச்சம் வைக்காமல் உண்ட தனித்துவம் வாய்ந்த வீரனே என்பாள். அதை நினைத்து உள்ளம் உருகுவாள். கண்ணுக்குக் காண அரிய நீ உன்னை நான் காணும்படி க்ருபை பண்ண வேண்டும். எல்லோருக்கும் தரிசனம் கொடுத்த ஸ்ரீராமனாயும் க்ருஷ்ணனாயும் அவதரித்தாயே என்பாள். திண்ணியதாய், கொடியையுடைய மதிள் சூழ்ந்த திருவரங்கத்திலே வாழ்பவனே! இவளிப்படித் துன்பத்துடன் இருப்பதற்கு நீ செய்தது என்ன?
நான்காம் பாசுரம். மிகவும் பெருமை பொருந்தியவனாய் இருந்து இவளை துன்பத்துக்கு ஆளாக்கின நீ இவள் விஷயத்தில் என்ன நினைத்திருக்கிறாய் என்கிறாள்.
இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல் வண்ணா! கடியை காணென்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும்
சிட்டனே! செழு நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்தென் சிந்தித்தாயே?
இட்டு வைத்த இடத்தில் இருக்கும்படியான காலையும் கையையும் உடையவளாய் இருப்பாள். அந்த நிலை மாறி எழுந்திருந்து உலாவுவாள். பிறகு மோஹிப்பாள். எம்பெருமான் வருவான் என்று கைகூப்புவாள். வாராததால், இந்தக் காதல் மிகவும் கஷ்டப்படுத்துகிறது என்று வெறுத்து மூர்ச்சை அடைவாள். எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்து ரக்ஷிக்கும் கடலைப்போன்றவனே! எனக்கு மிகவும் கடியவனாய் நின்றான் என்பாள். எல்லாப் பக்கங்களிலும் வாயையுடைய திருவாழியை வலக்கையிலே உடையவனே என்பாள். வந்துவிட்டாய் என்று பலமுறை ஆசைப்பட்டுப்பார்த்து அப்படி வாராததாலே மயக்கம் அடைவாள். பேரொழுக்கம் உடையவனைப்போலே அழகிய நீர்க்கரையிலே, திருவரங்கத்திலே சயனித்திருப்பவனே! இவள் விஷயத்தில் என்ன நினைத்திருக்கிறாய்?
ஐந்தாம் பாசுரம். நீ அடியார்கள் விருப்பத்தை நிறைவேற்றும் பவ்யதையை உடையவனாயிருக்க, இவள் ஒவ்வொரு க்ஷணமும் நிலை மாறும் துன்பத்தை உடையவளாக இருக்கிறாள் என்கிறாள்.
சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக் கண் நீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப் போதவுணன் உடல் இடந்தானே! அலை கடல் கடைந்த ஆரமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே
அந்திப்பொழுதில் அஸுரனான ஹிரண்யனுடைய சரீரத்தைப் பிளந்தவனே! அலையையுடைய கடலைக் கடைந்த மிகவும் இனிமையானவனே! உன் திருவடிகளையே சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஸ்திரமான எண்ணத்தை உடைய இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே! இவள் முன்பு உன்னுடன் கூடியதை நினைப்பாள். அது இப்போது கிடைக்காததால் அறிவழிவாள். பிறகு தேறி நிற்பாள். கை கூப்புவாள். திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே என்பாள். தலையாலே வணங்குவாள். அங்கேயே குளிர்ந்த கண்ணீர் பெருகும்படி வந்து என்னைக் கொள்ளாய் என்று பல முறை சொல்லி மயங்குவாள்.
ஆறாம் பாசுரம். அடியார்களை ரக்ஷிக்கத் தேவையான ஆயுதங்களைப் பூர்த்தியாக உடைய நீ, இவள் இப்படி அலற்றும்படிச் செய்துள்ளாய், இந்நிலையில் நான் என்ன செய்வது என்பதை அருளிச்செய்ய வேண்டும் என்கிறாள்.
மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும் மாமாயனே! என்னும்
செய்யவாய் மணியே! என்னும் தண்புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்! என்னும்
பைகொள் பாம்பணையாய்! இவள் திறத்தருளாய் பாவியேன் செயற்பாலதுவே
என்னை மையல் கொள்ளும்படி பண்ணி நெஞ்சை அபஹரித்தவனே! என்பாள். எல்லை இல்லாத ஆச்சர்யச் செயல்களை உடையவனே! என்பாள். சிவந்த திருவதரங்களையுடைய மணிபோன்று எளிமையானவனே! என்பாள். குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே ! என்பாள். விரோதிகள் விஷயத்தில் வெப்பமே வடிவான ஸ்ரீபஞ்சாயுதங்களையும் எப்பொழுதும் ஏந்தியிருந்து, நித்யஸூரிகளுக்குக் காரணனே! என்பாள். உன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிகிற பணங்களை உடையவனாய், திருவநந்தாழ்வானைப் படுக்கையாக உடையவனே! இவள் விஷயத்தில், இவளை இப்படி பார்க்க வேண்டிய பாபத்தை உடைய நான் செய்யும் செயலை அருளிச்செய்ய வேண்டும்.
ஏழாம் பாசுரம். அடியார்களைக் காக்க உதவும் திருப்பாற்கடலில் சயனித்திருப்பது ஆகிய குணங்களை உடையவன் தன்மைகளைச் சொல்லி வருந்துகிறாள் என்கிறாளை
பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக்கரத்தாய்! கடல் இடம் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே! என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும் என் தீர்த்தனே! என்னும்
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே
என்னுடைய மென்மைத்தன்மையை உடைய கொழுந்துபோலே மெலிந்திருக்கும் இவள் “எல்லா இடங்களிலும் எதிரிகளுக்குத் துன்பங்களையும் அடியார்களுக்கு இன்பங்களையும் உண்டாக்கினவனே! வேறு புகல் இல்லாதவர்களான ஜயந்தன் (காகாஸுரன்) முதலியவர்களும் பற்றும்படி நின்றவனே! கால சக்கரத்தை நடத்துபவனே! கடலிலே ஒரு கடல் சாய்ந்தாற்போலே சயனித்திருப்பவனே! கண்ணனே! சேல்களை உடைய குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்திலே சயனித்திருபவனே!” என்று சொல்லி கண்ணீர் மல்க செயலற்று இருப்பாள்.
எட்டாம் பாசுரம். உன்னுடைய அதிமானுஷ சேஷ்டிதங்களில் ஈடுபட்டு மேன்மேலும் துன்புறுகிற இவளுக்கு நான் என்ன செய்வேன்? என்கிறாள்.
கொழுந்து வானவர்கட்கு! என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திருமகட்கே
நித்யஸூரிகளுக்குத் தலையானவன் என்பாள். கோவர்த்தன மலையை எளிதில் ஏந்திப் பசுக்களைக் காத்தவனே என்பாள். பக்தி பரவசரைப் போலே அழுவாள். ப்ரபன்னரைப் போலே தொழுவாள். ஆத்ம வஸ்து வெந்துபோகும்படி வெப்பமாக மூச்சுவிடுவாள். இப்படி துக்கத்தைக் கொடுத்த கரிய திருமேனியை உடையவனே! என்பாள். மேலே தலையெடுத்துப் பார்த்து கண்ணை இமைக்காமல் இருப்பாள். எப்படி உன்னைக் காண்பேன்? என்பாள். அழகிய பெருத்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே! லக்ஷ்மியைப்போன்ற என் பெண்பிள்ளைக்கு நான் என்ன செய்வேன்?
ஒன்பதாம் பாசுரம். லக்ஷ்மி, பூமி, நீளா நாயகனான உன் மிகுந்த ப்ரணயித்வத்தில் (காதலில்) அகப்பட்ட இவளுக்கு என்ன முடிவு ஏற்படும் என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறாள்.
என் திருமகள் சேர் மார்பனே! என்னும் என்னுடை ஆவியே! என்னும்
நின் திருவெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்
அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே! என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே
எனக்குத் தலைவியான லக்ஷ்மி விரும்பி உறையும் திருமார்பை உடையவனே! என்பாள். அதனாலே எனக்கு ஆவியாய் இருப்பவனே! என்பாள். உன்னுடைய திருவெயிற்றால் இடந்து எடுத்து நீ கொண்ட ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்பாள். ருஷபங்களைப் பந்தயமாக வைத்த அன்று, இடிபோலே ஓசை எழுப்பிய ஏழு ருஷபங்களையும் தழுவி, அழித்து, நீ ஏற்றுக்கொண்ட நப்பின்னைப்பிராட்டி விஷயத்தில் அன்புடையவனே! என்பாள். கட்டளைப்பட்ட திருவரங்கத்தை இருப்பிடமாகக் கொண்டவனே! என்பாள். இவளின் துன்பத்துக்கு முடிவு எப்படி ஏற்படும் என்று தெரியவில்லை.
பத்தாம் பாசுரம். எம்பெருமான் பராங்குச நாயகியுடன் கலக்க, அதைக் கண்ட திருத்தாயார் தன் ஆனந்தத்தை வெளியிடுகிறாள்.
முடிவு இவள் தனக்கொன்றறிகிலேன் என்னும் மூவுலகாளியே! என்னும்
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும் நான்முகக் கடவுளே! என்னும்
வடிவுடை வானோர் தலைவனே! என்னும் வண் திருவரங்கனே! என்னும்
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே
இவள் இப்படி இருந்த தன் நிலைக்கு முடிவு ஒன்று தெரியவில்லை என்பாள். மூன்று லோகங்களையும் ஆளும் இந்த்ரனுக்கு அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். நறுமணம் மிகுந்த கொன்றை மாலையைச் சூடிய ஜடையயுடைய ருத்ரனுக்கு அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். இவர்களுக்கும் தலைவனான ப்ரஹ்மா என்னும் தெய்வத்துக்கும் அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். தன்னைப்போன்ற வடிவையுடைய நித்யஸூரிகளுக்குத் தலைவனே! என்பாள். வள்ளல் தன்மையுடன் இருக்கும் திருவரங்கனே! என்பாள். அவன் திருவடிகளை கிட்டமாட்டாதாப்போலிருந்த இவள் காளமேகம் போன்ற திருமேனியையுடையவன் திருவடிகளை கிட்டி அடைந்தாள்.
பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள் பரமபதத்தில் நித்யஸூரிகளுக்கு நடுவே ஆனந்தத்துடன் இருப்பார்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.
முகில் வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்திப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே
வள்ளல் தன்மையுடைய மேகத்தைப்போன்ற பெரியபெருமாளின் திருவடிகளையே அடைந்து அதுக்கடியான அவருடைய க்ருபையை தலையில்சூடி உஜ்ஜீவித்தவராய் மிகுதியான நீரையுடைய திருப்பொருநல்லின் துகிலின் வண்ணம்போன்ற பரிசுத்தமான நீரையுடைய இடத்துக்கு அருகில் இருக்கும் சிறந்ததான பொழில்களாலே சூழப்பட்ட, செல்வம் மிகுந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார், காளமேகம்போலே மிகவும் அழகையுடைய பெரியபெருமாள் திருவடிகள் விஷயமாக அருளிச்செய்த ஆயிரம் பாமாலைகளில், இப்பத்தையும் உண்மையான பாவத்துடன் சொல்லவல்லவர்கள் மேகத்தைப்போன்ற நிறத்தையுடைய பரமபதத்தில் நித்யஸூரிகள் சூழ எல்லையில்லாத ஆனந்தக் கடலில் இருப்பார்கள்.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org