ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
எம்பெருமானின் பரத்வத்தை முழுவதுமாக அனுபவித்த பின்பு, ஆழ்வார் அந்த எம்பெருமானை அடைவதற்கு வழியை இந்தப் பதிகத்தில் மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிறார். தாம் அனுபவித்த விஷயம் மிக உயர்ந்ததாக இருக்க, இதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்து இங்கிருக்கும் ஸம்ஸாரிகளைப் பார்க்க, அவர்கள் உலக விஷயத்திலேயே மண்டிக் கிடந்தார்கள். தன் பெருங்கருணையாலே அவர்களுக்கும் நன்மை செய்வோம் என்று பார்த்து அவர்களுக்கு மற்ற விஷயங்களில் ஆசையைவிட்டு பகவத் விஷயத்தில் பக்தி செய்யுங்கள் என்று உபதேசம் செய்கிறார்.
முதல் பாசுரம். மற்ற விஷயங்களை விட்டு எம்பெருமானைப் பற்றப் பாருங்கள் என்கிறார்.
வீடுமின் முற்றவும் வீடு செய்து உம்முயிர்
வீடு உடையான் இடை வீடு செய்ம்மினே
எம்பெருமானை வழிபடுவதற்கு விரோதியான எல்லாவற்றையும் அடியோடு விடுங்கள். அவற்றை விட்டு, உம்முடைய ஆத்மாவை மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடிய எம்பெருமான் விஷயத்திலே ஸமர்ப்பியுங்கள்.
இரண்டாம் பாசுரம். மற்ற விஷயங்களை விடுவதை எளிமைப்படுத்துவதற்காக, அவற்றின் நிரந்தரமில்லாத தன்மையை விளக்குகிறார்.
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்
என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே
ஆத்மா விரும்பி எடுத்துக் கொண்ட சரீரங்கள் மின்னலைக்காட்டிலும் நிலையற்ற தன்மையுடன் இருக்கும் என்று சொல்லப்படுவதால் நீங்கள் எம்பெருமானைப் பற்றிச் சிந்தியுங்கள்.
மூன்றாம் பாசுரம். எப்படி விடுவது என்பதைச் சுருக்கமாக விளக்குகிறார்.
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே
ஆத்மா மற்றும் அதன் உடைமைகளில் இருக்கும் அஹங்காரம் மற்றும் மமகாரம் ஆகிய இவற்றை ருசி மற்றும் வாஸனைகளாகிற வேரோடே அறுத்து எம்பெருமானைச் சேருங்கள். ஆத்மாவுக்கு இதையொத்த நிறைவு வேறில்லை.
நான்காம் பாசுரம். இப்படி மற்ற விஷயங்களை விட்டு பற்றப்படும் எம்பெருமானின் பெருமையை அருளிச்செய்கிறார்.
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு
எல்லையில் அந்நலம் புல்கு பற்று அற்றே
அசித்தைப்போலவும் சித்தைப்போலவும் இல்லாத அவனுடைய ஸ்வரூபமானது எல்லையில்லாத ஆனந்தத்தை வடிவாகக் கொண்டிருக்கும். ஆகையால் மற்ற விஷயங்களில் பற்றை விட்டு, எம்பெருமானை ஆசையுடன் பற்று.
ஐந்தாம் பாசுரம். வணங்கப்படும் எம்பெருமான் மிகவும் உயர்ந்த புருஷார்த்தமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.
அற்றது பற்று எனில் உற்றது வீடு உயிர்
செற்றது மன்னுறில் அற்று இறை பற்றே
மற்ற விஷயங்களில் பற்று விடப்பட்டவுடனே ஆத்மா கைவல்ய மோக்ஷத்தைப் பெற்றதாகும். அந்த எண்ணத்தையும் விட்டு பகவத் விஷயத்தைப் பற்றப் பார்க்கில் மற்ற விஷயங்களில் ஆசையை விட்டு ஈச்வரனைப் பற்று.
ஆறாம் பாசுரம். வணங்கப்படும் எம்பெருமான் எல்லோரிடமும் ஸமமாக இருப்பதை அருளிச்செய்கிறார்.
பற்று இலன் ஈசனும் முற்றவும் நின்றனன்
பற்று இலை ஆய் அவன் முற்றில் அடங்கே
ஸர்வேச்வரனாக இருந்தும் தன் விருப்பத்துக்கு விஷயமானவர்களில் பற்றைவிட்டு நம் விஷயத்தில் முழுவதுமாக ஈடுபட்டு நின்றான். நீயும் ஸம்ஸார ஸங்கத்தை விட்டு அவனுடைய எல்லா விஷயங்களிலும் முழுகப்பார்.
ஏழாம் பாசுரம். அவனுடைய மிகப் பெரிய விபூதியைப் பார்த்து அஞ்சி விலகாமல், அவனுக்கு அத்தோடு உண்டான ஸம்பந்தத்தை நினைத்து அதனுள்ளே புகுவதற்கு முயற்சி செய் என்கிறார்.
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன்
அடங்கு எழில் அஃதென்று அடங்குக உள்ளே
மிகவும் அழகியதான செல்வத்தை ஒன்றுவிடாமல் பார்த்து “ஈச்வரனுக்கு அது மிகவும் அழகான, பெருமையைக் கொடுக்கும் சேஷமாயிருக்கும்” என்று உணர்ந்து அதினுள்ளே மூழ்க முயற்சி செய்.
எட்டாம் பாசுரம். எப்படி வணங்குவது என்பதை அருளிச்செய்கிறார்.
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே
மனஸ்ஸும் வாக்கும் உடம்பும் நமக்கு முதலிலேயே இருப்பதாய், இருக்கும் இம்மூன்றையும், இவற்றின் ப்ரயோஜனத்தை ஆராய்ந்தறிந்து, மற்ற விஷயத்தில் இருந்து விலக்கி, எம்பெருமானாகிய வகுத்த விஷயத்தில் பரதந்த்ரனாய் ஒதுங்கு.
ஒன்பதாம் பாசுரம். எம்பெருமானை வணங்குவதால் ஏற்படும் விரோதி நிவ்ருத்தியை அருளிச்செய்கிறார்.
ஒடுங்க அவன் கண் ஒடுங்கலும் எல்லாம்
விடும் பின்னும் ஆக்கை விடும் பொழுது எண்ணே
எம்பெருமானிடத்திலே மூழ்கவே ஆத்மாவின் ஞானம் முதலியவைகளின் சுருக்கமும், அவித்யை முதலியவைகள் எல்லாம் விட்டுக் கழியும். பின்னையும் இந்த உடலின் முடிவை எதிர்பார்த்திரு.
பத்தாம் பாசுரம். எம்பெருமானின் ப்ராப்யத்வ பூர்த்தியை அருளிச்செய்கிறார்.
எண் பெருக்கு அந்நலத்து ஒண் பொருள் ஈறில
வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே
கணக்கற்றதாய் ஆனந்தம் முதலிய குணங்களையுடைய ஆத்மாக்கள் மற்றும், எல்லையில்லாத கல்யாண குணங்களையுடைய நாராயணனின் உறுதியான திருவடிகளைச் சென்று சேர்.
பதினொன்றாம் பாசுரம். இந்தப் பதிகம் எவ்வளவு முக்யமாகக் கைக்கொள்ளத்தக்கது என்பதை பலமாக அருளிச்செய்கிறார்.
சேர்த் தடத் தென் குருகூர்ச் சடகோபன் சொல்
சீர்த் தொடை ஆயிரத்து ஓர்த்த இப் பத்தே
சேர்ந்திருக்கும் தடாகங்களையுடைய அழகிய திருநகரியில் நம்மாழ்வார் அருளிச்செய்த முறையான சீர்களின் (பா)மாலையையுடைய ஆயிரம் பாசுரங்களிலும், இத்திருவாய்மொழி உயர்ந்ததாக நிரூபிக்கப்பட்டன.
அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்
வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org
ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org