திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 1.1 – உயர்வற

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< தனியன்கள்

bhagavan-nammazhwar

ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் எல்லாரையும் விட உயர்ந்தவன், அனைத்துக் கல்யாண குணங்களையும் உடையவன், திருமேனியை உடையவன், ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஸம்ஸாரம் ஆகிய இரு உலகங்களுக்கும் தலைவன், வேதத்தாலே முழுவதுமாகக் காட்டப்பட்டவன், எல்லாவிடத்திலும் வ்யாபித்திருப்பவன், எல்லாரையும் நியமிப்பவன், சேதனர்களுக்கும் அசேதனப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் இருந்து அவர்களை முழுவதுமாக ஆள்பவன் ஆகிய விஷயங்களை எடுத்துச் சொல்லி அப்படிப்பட்ட எம்பெருமான் தனக்கு மயர்வற மதிநலம் அருளியதை நினைத்து மகிழ்கிறார் இப்பதிகத்தில்.

திருவாய்மொழிக்கு இந்தப் பதிகம் சுருக்கம். இந்தப் பதிகத்துக்கு முதல் மூன்று பாசுரங்கள் சுருக்கம். முதல் மூன்று பாசுரங்களுக்கு முதல் பாசுரம் சுருக்கம். முதல் பாசுரத்துக்கு முதல் வரி சுருக்கம் என்பர் பெரியோர்.

முதல் பாசுரம். எம்பெருமானின் பரத்வத்தைக் காட்டும் கல்யாண குணங்களுடன் கூடியிருப்பதையும், தன் விஷயத்தில் காரணமில்லாமல் அவன் செய்த நன்மையும், நித்யஸூரிகளை ஆள்வதையும், அழகிய திருமேனியுடன் இருப்பதையும் அனுபவித்து அப்படிப்பட்ட எம்பெருமானின் திருவடிகளில் தொண்டு செய் என்று தன் நெஞ்சுக்குச் சொல்லுகிறார்.

உயர்வற உயர் நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே.

மற்ற உயர்த்திகள் எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்யுமளவுக்கு உயர்ந்ததான ஆனந்தம் முதலிய கல்யாண குணங்களையுடையவன். சாஸ்த்ரத்தில் பரதெய்வமாகக் காட்டப்பட்ட அவன் என்னுடைய அறியாமை முழுவதும் அழியும்படி இயற்கையான ஞானம் மற்றும் ப்ரேமத்தை எனக்கு அருளினான். அவன் மறதி போன்ற குறைகள் இல்லாத நித்யஸூரிகளுக்குத் தலைவனானவன். நம் துயர் போகும்படி அவனுடைய மிகவும் ஒளிவிடக்கூடிய திருவடிகளைக் குறித்துத் தொண்டு செய்து, என் மனஸ்ஸே! உஜ்ஜீவனத்தைப் பெற்று எழு.

இரண்டாம் பாசுரம். “யவன்” என்று சொன்ன எம்பெருமானின் ஸ்வரூபத்தினுடைய தனித்துவம் வாய்ந்த பெருமையை அருளிச்செய்கிறார்.

மனனகமலமற மலர்மிசை எழுதரும்
மனனுணர்வளவிலன் பொறியுணர்வவையிலன்
இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும்
இனனிலன் எனனுயிர் மிகு நரையிலனே

மனஸ்ஸிலிருந்து மலமான காமம் க்ரோதம் முதலியவை கழிய, அதனால் மலர்ந்து மேலே வளரக்கூடியதான ஞானத்தாலே அளவிடமுடியாத நிலையிலும் ஆத்மாவைவிட உயர்ந்தவனாக இருப்பவனாய், வெளிப் புலன்களுக்கு விஷயமான அசித்தைவிட உயர்ந்தவனாய், இப்படி சேதனாசேதனங்களை விட உயர்ந்தவனாய், ஞானம் மற்றும் ஆனந்தத்தை அடையாளமாக உடையவனாய், எதிர்காலம், நிகழ்காலம் மற்றும் இறந்தகாலத்திலும் தனக்கு ஒப்பாகவோ, தன்னைவிட உயர்ந்தோ வேறொன்று இல்லாதவன் எனக்கு உயிராக இருக்கிறான். “அவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே” என்று எல்லாப் பாசுரங்களிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாம் பாசுரம். எம்பெருமானின் லீலாவிபூதியுடன் கூடியிருக்கும் தன்மையைக்காட்டி அவன் எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதைக் காட்டுகிறார்.

இலனது உடையனிது என நினைவரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த அந்
நலனுடை ஒருவனை நணுகினம் நாமே

“இந்தப் பொருள் அவனிடத்தில் இல்லை, இந்தப் பொருள் உள்ளது” என்று சில பொருள்களிலும் மட்டும் அளவிட்டு நினைக்க முடியாதவனாய், பூமியிலும், மேலுலகத்திலும் இருப்பவனாய், உருவத்துடன் இருக்கும் அசித்தையும் உருவம் இல்லாத ஆத்மாவையும் தனக்கு சரீரமாக உடையவனாய், இப்படிக் கண்ணுக்குப் புலப்படும் பொருள்களுள் கலந்து நிற்கும்பொழுதே அவற்றின் தன்மை (குறைகள்) தனக்கு இல்லாதவனாய், ஒன்றொழியாமல் எல்லாவற்றிலும் வ்யாபித்திருப்பவனாய், முன்பு சொன்ன கல்யாணகுணங்களுடன் கூடியிருப்பவனாய், தனித்துவம் வாய்ந்தவனை நாம் அணுகப் பெற்றோம்.

நான்காம் பாசுரம். எல்லாப் பொருள்களினுடைய ஸ்வரூபம் எம்பெருமானின் அதீனத்தில் உள்ளது என்று ஸாமாநாதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.

குறிப்பு – ஸாமாநாதிகரண்யம் என்பது வேறுபட்ட பல தன்மைகள் ஒரே பொருளை ஆதாரமாகக் கொண்டு இருப்பது. ஒரே பொருளைக் குறிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் என்றும் விளக்கப்படும்.

நாம் அவன் இவன் உவன் அவள் இவள் உவள் எவள்
தாம் அவர் இவர் உவர் அது இது உது எது
வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு இவை
ஆம் அவை ஆய் அவை ஆய் நின்ற அவரே

(மேலே காட்டப்படும் பல விதமான வஸ்துக்களைப் பார்க்கும்) தாமும், தூரத்தில் இருப்பவனும், அருகில் இருப்பவனும், நடுவில் இருப்பவனும், தூரத்தில் இருப்பவளும், அருகில் இருப்பவளும், நடுவில் இருப்பவளும், எவள் என்று கேட்கப்படுபவளும், கௌரவம் உடையவரும், அவர்களில் தூரத்தில் இருப்பவரும், அருகில் இருப்பவரும், நடுவில் இருப்பவரும், தூரத்தில், அருகில் மற்றும் நடுவில் இருக்கும் அஃறிணைப் பொருளும், எது என்று கேட்கப்படும் பொருளும், அழியக்கூடிய தாழ்ந்த பொருள்களும், தூரத்தில், அருகில், நடுவில் இருக்கும் பொருள்களும், உயர்ந்த மற்றும் தாழ்ந்த தர்மங்களும், வரப்போகும் மற்றும் வந்திருக்கும் எல்லாப் பொருள்களுமாய் தாமேயாய் நின்ற எம்பெருமான் இவற்றை எல்லாம் தன் அதீனத்தில் வைத்துள்ளான்.

ஐந்தாம் பாசுரம். ரக்ஷண ரூபத்தில் இருக்கும் ஸ்திதி எம்பெருமானின் அதீனத்தில் உள்ளது என்று வையதிகரண்யத்தாலே அருளிச்செய்கிறார்.

குறிப்பு – வையதிகரண்யம் என்பது இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட பொருள்கள் வேறுபட்ட ஆதாரங்களைக்கொண்டு இருப்பது. இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட சொற்கள் வேறுபட்ட பொருள்களைக் குறிக்கும் என்றும் விளக்கப்படும்.

அவரவர் தமதமது அறிவறி வகை வகை
அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதி வழி அடைய நின்றனரே

வேறு வேறு ப்ரயோஜனங்களுக்காக அதிகாரிகள் (வேறு வேறு தகுதியுடையவர்கள்) தங்கள் அறிவின் வகையாலே தங்களுடைய ருசிக்கு ஏற்ற தேவதைகளைப் பலனைக் கொடுக்கும் தலைவர்களாகக் கருதி அடைவார்கள். அந்த தேவதைகள் பலம் கொடுக்கும் தலைவராக எந்தத் தடையுமில்லை. எல்லாருக்கும் ஸ்வாமியான எம்பெருமான் அந்த அந்த அதிகாரிகள் தங்களின் விதிப்படி பலனை அடையும்படி அந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியாக நின்றான்.

ஆறாம் பாசுரம். எல்லா ப்ரவ்ருத்தி (செயல்பாடு), நிவ்ருத்திகளும் (செயல்படாமல் இருப்பது) எம்பெருமானின் அதீனத்தில் உள்ளன என்று ஸாமானாதிகரண்யாத்தாலே அருளிச்செய்கிறார்.

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்
என்றுமொரியல்வினர் என நினைவரியவர்
என்றுமொரியல்வொடு நின்ற எம் திடரே

நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் ஆகிய ப்ரவ்ருத்திகளுக்கு இருப்பிடமான பொருள்களும், நிவ்ருத்திக்கு இருப்பிடமான பொருள்களுமாய், இதனாலே, என்றும் ஒரு குறிப்பிட்ட தன்மையை உடையவர் என்று நினைக்க முடியாதவனாய் இருப்பான் எம்பெருமான். எல்லாப் பொருள்களிலும் இருந்து வேறுபட்டவன். வேதம் என்ற உறுதியான ப்ரமாணத்தாலே அறியப்படுபவன்.

ஏழாம் பாசுரம். இந்த ஸாமானாதிகரண்யம், சரீராத்மபாவ ஸம்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறார்.

திடவிசும்பு எரி வளி நீர் நிலம்  இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவையவை தொறும்
உடல்மிசை உயிர் எனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள்  இவை உண்ட சுரனே

நிலையாக நிற்கும் ஆகாசமும் அக்னியும் வாயுவும் நீரும் பூமியும், இவைகளை இருப்பிடமாகக் கொண்டு பரந்த எல்லாப் பொருள்களும் தான் என்று சொல்லும்படி அவைகளுக்கு உபாதான காரணமாய், அவை எல்லாவற்றிலும் சரீரத்தில் ஆத்மா வ்யாபித்து இருப்பதைப் போலே, மறைந்து வ்யாபித்து இருக்கிறான். ஒளி மிகுந்து இருக்கும் வேதத்தின் உட்பொருளாகத் தோற்றுபவன் ப்ரளயம் வரும்பொழுது இவை எல்லாவற்றையும் விழுங்கிய “சுரன்” (தேவன்).

எட்டாம் பாசுரம். வ்யஷ்டி ஸ்ருஷ்டி (அண்டத்துக்குள் பல வகையாகக் காணப்படும் பொருள்களைப் படைத்தல்) மற்றும் வ்யஷ்டி ஸம்ஹாரத்தைச் செய்யும் ப்ரஹ்மா மற்றும் ருத்ரனும் எம்பெருமானுக்கு அதீனப்பட்டவர்கள் என்கிறார்.

சுரர் அறிவரு நிலை விண் முதல் முழுவதும்
வரன் முதலாய அவை முழுதுண்ட பரபரன்
புரம் ஒரு மூன்றெரித்து  அமரர்க்கும் அறிவு இயந்து
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே

தேவர்களான ப்ரஹ்மா முதலியவர்களுக்கும் அறியமுடியாத நிலையையுடைத்தான ஆகாசம் முதலான ஸமஷ்டிரூபத்தில் (பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் இருக்கும்) எல்லாப் பொருள்களுக்கும் பெரிய காரணமாய் அவற்றை முழுவதுமாக உண்டு அழிப்பதாலே பரர்களான (பெரியவர்களான) ப்ரஹ்மா ருத்ரன் போன்றவர்களுக்கும் பரனானவன் எம்பெருமான். அந்த எம்பெருமான், ருத்ரன் என்றும் ப்ரஹ்மா என்றும் ப்ரஸித்தராய் தனித்துவம் வாய்ந்த மூன்று நகரங்களை எரித்தும், தேவர்களுக்கு ஞானத்தைக் கொடுத்தும், அண்டத்துக்குள் இருக்கும் உலகங்களை அழித்தும் அவற்றை ஸ்ருஷ்டித்தும், அவர்களுக்குள்ளே அந்தாராத்மாவாக உள்ளான்.

ஒன்பதாம் பாசுரம். ஈச்வரனை ஒத்துக்கொள்ளாத வேத பாஹ்யர்களில் (வேதத்தை ஒத்துக் கொள்ளாதவர்) முதலில் கருதப்படுபவரான ஸர்வசூன்யவாதிகளான மாத்யமிக பௌத்தரை நிராகரிக்கிறார்.

உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே

நம்முடைய கருத்தால் ஈச்வரன் உளன் என்றாலும் பிறர் கருத்தால் ஈச்வரன் இலன் என்றாலும் உளன் என்ற விஷயத்தை ஒத்துக்கொண்டே பேசவேண்டும். உளன் என்றும் இலன் என்றும் சொல்லுகிற இவற்றை குணமாக உடையவனாகையாலே உருவத்துடனும் உருவம் இல்லாமலும் இவ்வுலகில் இருக்கும் பொருள்கள் தன்னை வெளிப்படுத்தும் மற்றும் மறைக்கும் இரண்டு நிலையில் இருக்கும் தன்மையோடு உளனாய் அவை எல்லாவற்றையும் வ்யாபித்து, அவற்றை விடாமல் இருப்பவன் இந்த எம்பெருமான்.

பத்தாம் பாசுரம். முன் பாசுரத்தில் சொன்ன எம்பெருமானின் வ்யாப்தியினுடைய ஸௌகர்யத்தை அருளிச்செய்கிறார்.

பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்
பரந்த அண்டம் இது என நில விசும்பு ஒழிவு அறக்
கரந்த சில் இடம் தொறும் இடம் திகழ் பொருள் தொறும்
கரந்து எங்கும் பரந்துளன் இவை உண்ட கரனே

எம்பெருமான் எல்லாவிடமும் பரந்த குளிர்ந்த காரணஜலமான ஏகார்ணவத்தில் ஒவ்வொரு அணுவிலும் பெரிய இடமுடைய இந்த அண்டத்தில் இருப்பதுபோல சுருக்கம் இல்லாமல் இருக்கிறான். பூமியிலும், மேலுலகங்களிலும் ஒன்றுவிடாமல் மிக நுண்ணியதாய் மிகச்சிறிய இடங்கள்தோறும் இந்த இடங்களில் தானே ஒளிவிடக்கூடிய ஆத்மாக்கள்தோறும் மறைந்து எல்லாவிடத்திலும் வ்யாப்தனாயிருப்பவன், இந்தப் பொருள்களை ஸம்ஹார நிலையிலும் தனக்குள்ளே அடக்கிவைத்துக் கொண்டு தான் ஸ்திரமாய் இருந்தவன்.

பதினொன்றாம் பாசுரம். இதுவரை விளக்கிய பர்த்வத்தை சுருங்கச் சொல்லி இத்திருவாய்மொழிக்குப் பலம் மோக்ஷமாக அருளிச்செய்கிறார்.

கர விசும்பு  எரி வளி நீர் நிலம் இவை மிசை
வரனவில் திறல்வலி யளி பொறை யாய் நின்ற
பரன் அடி மேல் குருகூர்ச் சடகோபன் சொல்
நிரனிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே

மறைந்து இருக்கும் ஆகாசம், அக்னி, வாயு, ஜலம், பூமி ஆகிய இவற்றை இருப்பிடமாகக்கொண்ட, மேலும் இவற்றுக்குத் தன்மைகளாக உள்ள உயர்ந்ததான சப்தம், எரிக்கும் தன்மை, வலிமை, குளிர்த்தி, பொறுமை ஆகிய இந்தப் பொருள்களும் அவற்றின் தன்மைகளும் எல்லாம் தனக்கு ப்ரகாரமாம்படி (சரீரமாம்படி) நின்ற ஸர்வேச்வரனுடைய திருவடி விஷயமாக, திருநகரியைப் பிறப்பிடமாக உடையராய், எதிர்வாதம் செய்பவர்களை வெல்லும் தன்மையையுடையவரான ஆழ்வார் அருளிச்செய்ததாய் பொருத்தமாக நிறைந்திருக்கும் ஆயிரம் பாசுரங்களுக்குள், இந்தப் பதிகம், எம்பெருமான் திருவடிகளில் ஸமர்ப்பிக்கப்பட்டன. இவை மோக்ஷத்தை அளிக்ககூடியவை.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment