உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 62

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 61

உய்ய நினைவுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே

வையும் அன்பு தன்னை இந்த மாநிலத்தீர் மெய் உரைக்கேன்

பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம்

கை இலங்கு நெல்லிக் கனி 

அறுபத்திரண்டாம் பாசுரம். பரமபத ப்ராப்தியை எப்படி மிக எளிதாகப் பெறலாம் என்று அருளிச்செய்கிறார்.

இந்தப் பெரிய உலகமான ஸம்ஸாரத்தில் உள்ளவர்களே! உஜ்ஜீவிக்கும் எண்ணம் உங்களுக்கு இருந்ததேயாகில், அதற்கான எளிய வழியை நான் சொல்லுகிறேன், கேளுங்கள். உங்களுடைய ஆசார்யர்கள் திருவடிகளிலே பக்தி செய்யுங்கள். படங்களை உடைய ஆதிசேஷனில் பள்ளி கொண்டிருக்கும் மாயனான எம்பெருமானின் இருப்பிடமான பரமபதம் உங்களுக்கு உள்ளங்கையில் நெல்லிக்கனி போல எளிதாகக் கிடைக்கும். இது ஸத்யம்.

ஆசார்ய ஸம்பந்தம் பெற்று அந்த ஆசார்யனிடம் பக்தி கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒக்கும் என்பது “உங்களுக்கு” என்று பொதுவாகச் சொல்லி இருப்பதில் இருந்து விளங்குகிறது. பரதாழ்வானிடத்திலே பக்தி கொண்டிருந்த சத்ருக்நாழ்வான், ராமனின் அன்பை எளிதில் பெற்றதைப் போலே, ஆசார்ய பக்தி உள்ளவர்களுக்கு, எம்பெருமானை அடைவது மிக எளிதில் கிடைக்கும். பொய்யிலாத மணவாள மாமுனியின் திருவாக்காகையாலே, இதிலே ஸந்தேஹத்துக்கு இடமில்லை.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment