உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 61

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

உபதேச ரத்தின மாலை

<< பாசுரம் 60

ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான

குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர் 

தேனார் கமலத் திருமாமகள் கொழுனன்

தானே வைகுந்தம் தரும் 

அறுபத்தொன்றாம் பாசுரம். ஸதாசார்ய ஸம்பந்தம் உடையவர்களுக்கு ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் தானே பரமபத ப்ராப்தியை அளிப்பான் என்று அருளிச்செய்கிறார்.

இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே! அர்த்த பஞ்சக விஷயங்களில் உண்மை அறிவும் அந்த அறிவுக்கேற்ற நடத்தையும் நன்றாக உடைய ஆசார்யனைச் சரணடைந்தால், தேன் விஞ்சி இருக்கும் தாமரை மலரிலே வீற்றிருக்கும் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் ஸ்வாமியான ஸ்ரீமந்நாராயணன் தானே அப்படிப்பட்ட அடியவர்களுக்கு வைகுந்தத்தை அளிப்பான்.

இப்பாசுரத்தில் மாமுனிகள் ஒரு ஸதாசார்யன் எப்படி இருப்பான் என்ற விஷயத்தை மிகத் தெளிவாக அருளி உள்ளார். அர்த்த பஞ்சக ஞானம், அதாவது, தன்னைப் பற்றிய ஞானம், எம்பெருமானைப் பற்றிய ஞானம், உபாயம் எப்படிப்பட்டது என்ற ஞானம், உபேயம் எப்படிப்பட்டது என்ற ஞானம் மற்றும் உபேயத்தை அடைய விடாமல் தடுக்கும் தடைகள் எப்படிப்பட்டது ஆகிய ஞானத்தை உடையவனாக ஒரு ஆசார்யன் இருத்தல் அவசியம். இதற்கு மேலே, அந்த ஞானத்தின் படி, எம்பெருமானையே உபாயம் என்று அவனிடத்திலே ஒரு ஆசார்யன் மூலமாகச் சரணடைந்தும், எம்பெருமானுக்கும் அவ்வாசார்யனுக்கும் கைங்கர்யம் செய்வதே குறிக்கோள் என்று இருத்தல் வேண்டும். இப்படிப்பட்ட ஆசார்யனைச் சரணடைந்து, அவனே கதி என்று இருத்தல் அவசியம் என்று அருளிச்செய்கிறார் இப்பாசுரத்தில். இப்படி இருப்பவர்கள் தங்களின் பரமபத ப்ராப்திக்குத் தாங்கள் முயற்சி செய்ய வேண்டாம், எம்பெருமானே தந்தருள்வான் என்று அருளிச்செய்கிறார். இதுவே இந்த ப்ரபந்தத்தின் ஸாரமான பாசுரம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment