ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
அப்பன் திருவடிகளே சரணம்
அலர்மேல்மங்கை உறை மார்பன் திருவடிகளே சரணம்
திருமாமகள் கேள்வனான, உலகின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலை தனக்கு விளையாட்டாகக் கொண்டுள்ளவனான எம்பெருமான் ஸ்ரீ ஸ்ரீநிவாசன் எழுந்தருளி இருக்கும் இடம் திருவேங்கடம் என்ற திருமலை திருப்பதி. ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலே கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று முறையே மூன்று திவ்யதேசங்கள் அடியார்களால் கொண்டாடப்படுகிறது. இதிலே கோயில் என்பது திருவரங்கப்பெருநகரும் , பெருமாள் கோயில் என்பது பேரருளாளன் சன்னிதியான காஞ்சிபுரமும், திருமலை என்பது அப்பன் உறையக்கூடிய திருவேங்கடமாமலையும் ஆகும். பற்பல திருநாமங்கள் கொண்ட இந்தத் திருமலையிலே எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் , ஸ்ரீ வைகுண்ட விரக்தனாகத் திருக்கோனேரி (இந்த திவ்யதேசத்தின் பிரதான தீர்த்தம்) கரையிலே பெரிய பிராட்டியாரோடே எழுந்தருளி அடியார்களுக்கு தன் பூவார்கழல்களை (அப்பனின் திருவடிகளுக்கு இதுவே திருநாமம்) காட்டி அருளுகிறார். கலௌ வேங்கடநாயக: என்ற கொண்டாட்டத்திற்கு இணங்க, கலியுகத்திலே வாழும் நமக்கு புகல் இந்த திவ்யதேசம் என்று எண்ணற்ற பக்தர்கள் வணங்கும் க்ஷேத்ரம் திருமலை. ஒப்பிலா அப்பனான ஸ்ரீநிவாசனையும் , அவரது இந்தப் பொன்மலையையும் அதன் தன்மையையும் மற்றும் பெருமைகளையும் ச்ருதி ஸ்ம்ருதிகள், இதிஹாஸ புராணங்கள் பலவாறாக கொண்டாடுகின்றன. அவற்றுள்ளே புராணங்களில் காணப்படும் திருவேங்கட மலையின் மேன்மைகளின் தொகுப்பே ஸ்ரீ வேங்கடாசல மாஹாத்ம்யம் என்று அறியப்படுகிறது. இது இந்த உலகில் உள்ள அனைவரின் உஜ்ஜீவனத்துக்காக வேத வ்யாஸராலே தொகுக்கப்பட்டது.
புராணம் என்ற சொல்லை “புரா அபி நவம் ” , “புரா பவம் ”, “புரா ஆகதநாகதநௌ அணதி கதயதீதி ” என்றும் “புரா நீயதே ” என்றும் விரிவாக விளக்குவதுண்டு. இதன் பாவம் யாதெனில், ”பண்டைய காலங்களில் நடந்த சம்பவங்களை அறிமுகம் செய்து, நிகழ் காலத்தில் நல்வழியை காட்டுமவை புராணங்கள் ” என்பதே ஆகும். புராணங்களுள் பதினெட்டும் , உபபுராணங்களுள் பதினெட்டும் உள்ளன. இவற்றுள் 10 புராணங்களில் திருமலையின் பெருமைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவை கீழ்காணுமாறு :
1) வராஹ புராணம் (புராணம்)
2) பாத்ம புராணம் (புராணம்)
3) கருட புராணம் (புராணம்)
4) ப்ரம்மாண்ட புராணம் (புராணம்)
5) மார்கண்டேய புராணம் (புராணம்)
6) வாமன புராணம் (புராணம்)
7) ப்ரம்ம புராணம் (புராணம்)
8) ஸ்காந்த புராணம் (புராணம்)
9) ஆதித்ய புராணம் (உபபுராணம்)
10) பவிஷ்யோத்தர புராணம் (உபபுராணம்)
இவற்றோடு , மகாபாரதத்தின் 19 வது பர்வம் என்று போற்றப்படும் ஹரிவம்சத்திலும் திருமலையின் பெருமைகளை காணலாம்.
சேதனர்களைத் தன்னடிக்கீழ் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பெரும் அவா கொண்ட எம்பெருமான், ஸ்ரீவைகுண்டத்தை விடுத்து தனக்கு மிகவும் உகந்த இந்த திருவேங்கடமாமலையை வந்து அடைந்தார். அவ்வெம்பெருமானின் கருணையையும், கீர்த்தியையும், குணங்களால் நிரம்பப்பட்டமையையும் உள்ளவளவிலே உரைக்க வல்லவர்கள் இல்லை என்ற போதிலும் , முனிவர்கள் இடையிலே நடந்த கேள்வி-பதில் உரையாடல்கள் மூலமாக ஒருவாறாக நாமும் எம்பெருமானின் கல்யாண குணங்களை அனுபவிக்கலாம். இவ்வாறாக அமைந்துள்ள வேங்கடாசல மாஹாத்ம்யத்தில் , வராஹ பெருமானின் வைபவம், ஸ்ரீநிவாஸன் திருவேங்கடத்தை வந்தடைந்தமை, அனைத்துலகிற்கும் தாயான பத்மாவதி ஸ்ரீநிவாஸனை திருக்கல்யாணம் செய்து கொண்டமை, திருக்கோனேரியின் பெருமை, ஏனைய தீர்த்தங்களின் பெருமை மற்றும் வைஷ்ணவ லக்ஷணம் உள்ளிட்டவைகளை அனுபவிக்கலாம்.
அதனோடன்றி. எம்பெருமானார் யாதவராஜனின் சபையிலே திருமலையில் கோயில் கொண்டுள்ள தெய்வம் ஸ்ரீநிவாஸனே என்று நிரூபித்த அந்த சந்தர்ப்பத்திலும், மேலும் திருமலையப்பன் கோயில் திருப்பணிகளை சீர்திருத்தி நிர்வகித்த சந்தர்ப்பங்களிலும் , பல புராண ச்லோகங்களை மேற்கோள் காட்டியுள்ளார். ஆக , இவற்றையும் அறிந்துக்கொள்ளுதல் இராமனுசனுடையார்களுக்கு இன்பம் பயக்க வல்லதே ஆகும்.
இனிவரும் பதிவுகளில் நாம் புராணங்களில் உள்ள கதைகளைப் படித்து திருவேங்கடம் எனும் எம்பெருமான் பொன்மலையை அறிந்து கொண்டாடி மங்களாசாஸனம் செய்யலாம்.
ஸ்ரீ வேங்கடேச ப்ரீயதாம்
ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ பாஷ்யகாரய மங்களம்
அடியேன் ராமானுஜ தாஸன்,
எச்சூர் ஸ்ரீநிவாஸன்
தெலுங்கில் அமைந்துள்ள மொழிப்பெயர்ப்புகளை படிப்பதற்கு அடியேனுக்கு உதவும் திரு. க்ருஷ்ண தேஜா அவருக்கு அடியேனது க்ருதஞதைகள்.
வலைத்தளம் – https://divyaprabandham.koyil.org/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org
Swamy adiyen
May i get the following books in tamil with meaning?is it available with you?if Not where will i get?can you please guide me?
1) வராஹ புராணம்
2) பாத்ம புராணம்
3) கருட புராணம்
4) ப்ரம்மாண்ட புராணம்
5) மார்கண்டேய புராணம்
6) வாமன புராணம்
7) ப்ரம்ம புராணம்
8) ஸ்காந்த புராணம்
9) ஆதித்ய புராணம்
10) பவிஷ்யோத்தர புராணம்.
In short i would like to learn/read about வெங்கடாசல மாஹாத்ம்யம்.
Adiyen ramanuza dasan
Sridharan
9585787997
6374232224