யதிராஜ விம்சதி – ச்லோகம் – 5

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 4                                                                                                                           ச்லோகம் 6

ச்லோகம் 5

अष्टाक्षराख्यमनुराजपदत्रयार्थनिष्ठां ममात्र वितराध्य यतीन्द्रनाथ ।
शिष्टाग्रगण्यजनसेव्यभवतपदाब्जे ह्रुष्टास्तु नित्यमनुभूय ममास्य बुद्धिः ॥ (5)

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய யதீந்த்ரநாத |
ஸிஷ்டாக்ரகண்யஜநஸேவ்யபவத்பதாப்ஜே ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மமாஸ்ய புத்தி: || (5)

பதவுரை:- நாத – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய, யதீந்த்ர – யதிராஜரே, அத்ர – இருள்தருமாஞாலமாகிற இந்த ஸம்ஸார மண்டலத்தில், அத்ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில், மம – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு, அஷ்டாக்ஷர ஆக்ய மநுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்திபெற்ற சிறந்த மந்த்ரத்திலுள்ள, பதத்ரய அர்த்த நிஷ்டாம் – ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களினுடைய பொருள்களாகிய அநந்யார்ஹஸேஷத்வம், அநந்யஸரணத்வம், அநந்யபோக்யத்வம் (எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.) என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை, விதர – தந்தருளவேணும். ஸிஷ்ட அக்ரகண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – பரதத்வம் மோக்ஷோபாயம் புருஷார்த்தம் (பயன்) ஆகியவிவற்றில் திரிபுணர்ச்சியில்லாத ஸிஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்வம் தேவரீரே மோக்ஷோபாயம் தேவரீரே புருஷார்த்தம் என்று நினைப்பதனாலே முதலில் எண்ணத்தக்க முற்கூறிய கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலான ஸஜ்ஜநங்களாலே அடிமைசெய்யத்தக்க தேவரீருடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை, நித்யம் அநுபூய – எப்போதும் அநுபவித்து,  அஸ்ய மம புத்தி: – மிகத்தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது, ஹ்ருஷ்டா – அவ்வநுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததனாலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக, அஸ்து – ஆயிடுக.

கருத்துரை:- இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும், ‘நித்யம் யதீந்த்ர’ என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன. ‘ஸ்ரீமந்யதீந்த்ர’ என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின்  பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் யதீந்த்ர தாஸகைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் உபஸம்ஹாரமாக அமைந்துள்ளது. ‘விஜ்ஞாபநம் யதிதம்’ என்ற இருபதாம் ஸ்லோகமோவென்னில் முதல் முடிவு நடுப்பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித்திடப்படுத்துவதாக அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது – ஆசார்யனுக்கே அடிமையாகை, ஆசார்யனையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை ஆசார்யனையே போக்யமாக (அநுபவிக்கத்தக்கபொருளாகக்) கொள்ளுகை  ஆகிய இவை மூன்றுமே ஆகும். நடுவெல்லையோவெனில் – பாகவதர்களுக்கே அடிமையாகை பாகவதர்களையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, பாகவதர்களையே போக்யமாகக் (அநுபவிக்கத்தக்க பொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே. முதல் பர்வம் எம்பெருமான், மத்யமபர்வம் – பாகவதர்கள், சரமபர்வம் – ஆசார்யன். ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்திலுள்ள ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களும் நேரான பதப்பொருள்களுக்கேற்றபடி, முதலில் ஷேஷித்வ ஸரண்யத்வ போக்யத்வங்களை பகவான் விஷயத்தில் தெரிவித்து, பின்பு பகவானுடைய திருவடி ஸ்தாநத்திலே நிற்கும் பாகவதர்கள் விஷயத்திலே தெரிவித்து, அதற்குப்பிறகு அந்த பாகவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பாகவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே தெரியப்படுத்தி நின்றுவிடுகின்றன. ஆசார்யனாகிற விஷயமே சரமமாகையால் ப்ரதம்பர்வம் பகவான், மத்யமபர்வம் – பாகவதர், சரமபர்வம் – ஆசார்யன். ஆக இந்த ஸ்லோகத்தில் முற்பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானாரை ஸம்போதித்து, யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாக்ஷரத்தின் மூன்று பதப்பொருள்களின் முடிவெல்லையை (உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோக்ஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை, தேவரீரையே போக்யமாகக் கொள்ளுகை என்கிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி க்ருபை செய்தருளவேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று. மந்த்ரராஜமென்பது முப்பத்திரண்டெழுத்துக்களைக் கொண்ட நரஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கும் பெயராகையால் அதை நீக்க வேண்டி ‘அஷ்டாக்ஷராக்ய’ என்று மந்த்ரராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார். திருமந்த்ரம் எட்டெழுத்து உடையதாகவன்றோ ப்ரஸித்தமாயிருப்பது. இதில் பிற்பகுதியினால், ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான ஸிஷ்ட ஜநங்கள் அநுபவித்துத் தொண்டு செய்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான தேவரீருடைய திருவடித்தாமரைகளில், ஆசார்ய நிஷ்டனாகிய அடியேனும் இழிந்து அநுபவித்துக் கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள்புரியவேண்டுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. (5)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment