Category Archives: thamizh

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 7.2 – கங்குலும்

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 6.10

பராங்குச நாயகியும் ஸ்ரீரங்கநாதனும்

எம்பெருமானைத் துறந்து துயரத்தின் உச்சியை அடைந்த நம்மாழ்வார் தன்னிலை மாறிப் பெண்ணிலையை அடைந்தார். பராங்குச நாயகியாக ஸ்ரீரங்கநாதனிடத்தில் மிகவும் ஈடுபட்டு பேச முடியாத நிலையை அடைந்து, பராங்குச நாயகியின் திருத்தாயாராகத் தன் மகளைக் கொண்டு போய் பெரிய பெருமாள் திருமுன்பே இருக்கும் திருமணத்தூண்களுக்கு நடுவே கிடத்தித் தன் மகளின் அவல நிலையை அவனிடத்தில் முறையிட்டு “இவள் விஷயத்தில் நீ தான் எல்லா ரக்ஷணங்களையும் செய்யவேண்டும்” என்று ப்ரார்த்தித்து நிற்கிறாள்.

முதல் பாசுரம். மிகவும் விரும்பத்தக்கதான தனித்துவம் வாய்ந்த அடையாளங்களைச் சொன்ன இவள் துன்பத்துடன் இருக்கிறாள், இவள் விஷயத்தில் என்ன செய்வதாக நினைத்திருக்கிறீர் என்கிறாள்.

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பும் தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு? என்னும் இரு நிலம் கை துழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் இவள் திறத்தென் செய்கின்றாயே?

இரவும் பகலும் கண்கள் துயிலவேண்டும் என்ற அறிவும் இல்லாதவள். கண்ணில் பெருகும் நீரை கடல் நீரைக் கையாலே இறைப்பதைபோலே இறைக்கிறாள். எம்பெருமானுடைய சங்கு சக்கரம் என்று சொல்லி கையைக் கூப்புகிறாள். எம்பெருமானுக்குத் தாமரை போன்ற கண் என்று சொல்லித் தளர்கிறாள். உன்னை விட்டு எப்படி வாழ்வேன் என்று சொல்லுகிறாள். பெரிய பூமியை கையாலே துழாவி ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறாள். சிவந்த கயல்கள் துள்ளிப் பாயும் நீரையுடைய திருவரங்கத்திலே வாழ்பவனே! இப்படிப்பட்ட மாறுபாடுகளை உடையவள் விஷயத்தில் என்ன செய்யப்போகிறாய்?

இரண்டாம் பாசுரம். நீ எல்லாவிதத்திலும் ரக்ஷகனாயிருக்க, இவளுடைய சரீரம் என்ன ஆகப் போகிறது என்கிறாள்.

என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என் செய்கேன் எறி நீர்த் திருவரங்கத்தாய் என்னும் வெவ்வுயிர்த்து உயிர்த்துருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும் முகில் வண்ணா தகுவதோ என்னும்
முன் செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய் என் கொலோ முடிகின்றது இவட்கே

என்னை உனக்கே ஆக்கிகொண்ட, மிகவும் அழகிய திருக்கண்களை உடையவனே! என்பாள். கண்களில் கண்ணீர் பெருகி எதுவும் செய்ய முடியாமல் இருப்பாள். அலையெறிகிற நீரையுடைய திருவரங்கத்தில் வாழ்பவனே! உன்னை அடைய நான் என்ன செய்ய முடியும் என்பாள். வெப்பமான மூச்சை பலமுறை விட்டு உருகுவாள். நான் முன்பு செய்த பாபத்தினாலேயே நீ என் முன் வாராதிருக்கிறாய் என்று சொல்லுவாள். மேகத்தைபோன்ற உதாரகுணத்தை உடையவனே! நீ செய்வது தகுமோ என்பாள். இந்த லோகத்தை முன் காலத்தில் படைத்து, பிறகு அளந்து கொண்டவனே! என் பெண்பிள்ளைக்கு என்ன ஆகப்போகிறதோ?

மூன்றாம் பாசுரம். அடியார்களின் விரோதிகளைப் போக்கும் பல அவதாரங்களைச் செய்த நீ, இவள் இப்படித் துன்பப்படுவதற்கு என்ன செய்தாய் என்கிறாள்.

வட்கிலள் இறையும் மணிவண்ணா! என்னும் வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடை அசுரர் உயிர் எல்லாம் உண்ட ஒருவனே! என்னும் உள்ளுருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறருளாய் காகுத்தா! கண்ணனே! என்னும்
திட்கொடி மதிள் சூழ் திருவரங்கத்தாய்! இவள் திறத்தென் செய்திட்டாயே?

சிறிதும் வெட்கம் இல்லாதவளாக இருக்கிறாள். மணியைப்போன்று எளிமையாக இருப்பவனே என்பாள். இதைக் கேட்டு வருகிறானா என்று வானத்தைப் பார்ப்பாள். வாராததாலே மயங்குவாள். வலிமையை உடைய அசுரர்களுடைய உயிர்களை சிறிதும் மிச்சம் வைக்காமல் உண்ட தனித்துவம் வாய்ந்த வீரனே என்பாள். அதை நினைத்து உள்ளம் உருகுவாள். கண்ணுக்குக் காண அரிய நீ உன்னை நான் காணும்படி க்ருபை பண்ண வேண்டும். எல்லோருக்கும் தரிசனம் கொடுத்த ஸ்ரீராமனாயும் க்ருஷ்ணனாயும் அவதரித்தாயே என்பாள். திண்ணியதாய், கொடியையுடைய மதிள் சூழ்ந்த திருவரங்கத்திலே வாழ்பவனே! இவளிப்படித் துன்பத்துடன் இருப்பதற்கு நீ செய்தது என்ன?

நான்காம் பாசுரம். மிகவும் பெருமை பொருந்தியவனாய் இருந்து இவளை துன்பத்துக்கு ஆளாக்கின நீ இவள் விஷயத்தில் என்ன நினைத்திருக்கிறாய் என்கிறாள்.

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும் எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும் கடல் வண்ணா! கடியை காணென்னும்
வட்ட வாய் நேமி வலங்கையா என்னும் வந்திடாய் என்றென்றே மயங்கும்
சிட்டனே! செழு நீர்த் திருவரங்கத்தாய்! இவள் திறத்தென் சிந்தித்தாயே?

இட்டு வைத்த இடத்தில் இருக்கும்படியான காலையும் கையையும் உடையவளாய் இருப்பாள். அந்த நிலை மாறி எழுந்திருந்து உலாவுவாள். பிறகு மோஹிப்பாள். எம்பெருமான் வருவான் என்று கைகூப்புவாள். வாராததால், இந்தக் காதல் மிகவும் கஷ்டப்படுத்துகிறது என்று வெறுத்து மூர்ச்சை அடைவாள். எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்து ரக்ஷிக்கும் கடலைப்போன்றவனே! எனக்கு மிகவும் கடியவனாய் நின்றான் என்பாள். எல்லாப் பக்கங்களிலும் வாயையுடைய திருவாழியை வலக்கையிலே உடையவனே என்பாள். வந்துவிட்டாய் என்று பலமுறை ஆசைப்பட்டுப்பார்த்து அப்படி வாராததாலே மயக்கம் அடைவாள். பேரொழுக்கம் உடையவனைப்போலே அழகிய நீர்க்கரையிலே, திருவரங்கத்திலே சயனித்திருப்பவனே! இவள் விஷயத்தில் என்ன நினைத்திருக்கிறாய்?

ஐந்தாம் பாசுரம். நீ அடியார்கள் விருப்பத்தை நிறைவேற்றும் பவ்யதையை உடையவனாயிருக்க, இவள் ஒவ்வொரு க்ஷணமும் நிலை மாறும் துன்பத்தை உடையவளாக இருக்கிறாள் என்கிறாள்.

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கை கூப்பும் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக் கண் நீர் மல்க வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப் போதவுணன் உடல் இடந்தானே! அலை கடல் கடைந்த ஆரமுதே!
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த தையலை மையல் செய்தானே

அந்திப்பொழுதில் அஸுரனான ஹிரண்யனுடைய சரீரத்தைப் பிளந்தவனே! அலையையுடைய கடலைக் கடைந்த மிகவும் இனிமையானவனே! உன் திருவடிகளையே சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஸ்திரமான எண்ணத்தை உடைய இப்பெண்பிள்ளையை மதிகெடுத்தவனே! இவள் முன்பு உன்னுடன் கூடியதை நினைப்பாள். அது இப்போது கிடைக்காததால் அறிவழிவாள். பிறகு தேறி நிற்பாள். கை கூப்புவாள். திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே என்பாள். தலையாலே வணங்குவாள். அங்கேயே குளிர்ந்த கண்ணீர் பெருகும்படி வந்து என்னைக் கொள்ளாய் என்று பல முறை சொல்லி மயங்குவாள்.

ஆறாம் பாசுரம். அடியார்களை ரக்ஷிக்கத் தேவையான ஆயுதங்களைப் பூர்த்தியாக உடைய நீ, இவள் இப்படி அலற்றும்படிச் செய்துள்ளாய், இந்நிலையில் நான் என்ன செய்வது என்பதை அருளிச்செய்ய வேண்டும் என்கிறாள்.

மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! என்னும் மாமாயனே! என்னும்
செய்யவாய் மணியே! என்னும் தண்புனல் சூழ் திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்ய வாள் தண்டு சங்கு சக்கரம் வில் ஏந்தும் விண்ணோர் முதல்! என்னும்
பைகொள் பாம்பணையாய்! இவள் திறத்தருளாய் பாவியேன் செயற்பாலதுவே

என்னை மையல் கொள்ளும்படி பண்ணி நெஞ்சை அபஹரித்தவனே! என்பாள். எல்லை இல்லாத ஆச்சர்யச் செயல்களை உடையவனே! என்பாள். சிவந்த திருவதரங்களையுடைய மணிபோன்று எளிமையானவனே! என்பாள். குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே ! என்பாள். விரோதிகள் விஷயத்தில் வெப்பமே வடிவான ஸ்ரீபஞ்சாயுதங்களையும் எப்பொழுதும் ஏந்தியிருந்து, நித்யஸூரிகளுக்குக் காரணனே! என்பாள். உன்னுடைய ஸ்பர்சத்தாலே விரிகிற பணங்களை உடையவனாய், திருவநந்தாழ்வானைப் படுக்கையாக உடையவனே! இவள் விஷயத்தில், இவளை இப்படி பார்க்க வேண்டிய பாபத்தை உடைய நான் செய்யும் செயலை அருளிச்செய்ய வேண்டும்.

ஏழாம் பாசுரம். அடியார்களைக் காக்க உதவும் திருப்பாற்கடலில் சயனித்திருப்பது ஆகிய குணங்களை உடையவன் தன்மைகளைச் சொல்லி வருந்துகிறாள் என்கிறாளை

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்! பற்றிலார் பற்ற நின்றானே!
கால சக்கரத்தாய்! கடல் இடம் கொண்ட கடல்வண்ணா! கண்ணனே! என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என்னும் என் தீர்த்தனே! என்னும்
கோல மா மழைக் கண் பனி மல்க இருக்கும் என்னுடைக் கோமளக் கொழுந்தே

என்னுடைய மென்மைத்தன்மையை உடைய கொழுந்துபோலே மெலிந்திருக்கும் இவள் “எல்லா இடங்களிலும் எதிரிகளுக்குத் துன்பங்களையும் அடியார்களுக்கு இன்பங்களையும் உண்டாக்கினவனே! வேறு புகல் இல்லாதவர்களான ஜயந்தன் (காகாஸுரன்) முதலியவர்களும் பற்றும்படி நின்றவனே! கால சக்கரத்தை நடத்துபவனே! கடலிலே ஒரு கடல் சாய்ந்தாற்போலே சயனித்திருப்பவனே! கண்ணனே! சேல்களை உடைய குளிர்ந்த நீர் சூழ்ந்த திருவரங்கத்திலே சயனித்திருபவனே!” என்று சொல்லி கண்ணீர் மல்க செயலற்று இருப்பாள்.

எட்டாம் பாசுரம். உன்னுடைய அதிமானுஷ சேஷ்டிதங்களில் ஈடுபட்டு மேன்மேலும் துன்புறுகிற இவளுக்கு நான் என்ன செய்வேன்? என்கிறாள்.

கொழுந்து வானவர்கட்கு! என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்! என் செய்கேன் என் திருமகட்கே

நித்யஸூரிகளுக்குத் தலையானவன் என்பாள். கோவர்த்தன மலையை எளிதில் ஏந்திப் பசுக்களைக் காத்தவனே என்பாள். பக்தி பரவசரைப் போலே அழுவாள். ப்ரபன்னரைப் போலே தொழுவாள். ஆத்ம வஸ்து வெந்துபோகும்படி வெப்பமாக மூச்சுவிடுவாள். இப்படி துக்கத்தைக் கொடுத்த கரிய திருமேனியை உடையவனே! என்பாள். மேலே தலையெடுத்துப் பார்த்து கண்ணை இமைக்காமல் இருப்பாள். எப்படி உன்னைக் காண்பேன்? என்பாள். அழகிய பெருத்த நீர் சூழ்ந்த திருவரங்கத்தில் சயனித்திருப்பவனே! லக்ஷ்மியைப்போன்ற என் பெண்பிள்ளைக்கு நான் என்ன செய்வேன்?

ஒன்பதாம் பாசுரம். லக்ஷ்மி, பூமி, நீளா நாயகனான உன் மிகுந்த ப்ரணயித்வத்தில் (காதலில்) அகப்பட்ட இவளுக்கு என்ன முடிவு ஏற்படும் என்பது எனக்குத் தெரியவில்லை என்கிறாள்.

என் திருமகள் சேர் மார்பனே! என்னும் என்னுடை ஆவியே! என்னும்
நின் திருவெயிற்றால் இடந்து நீ கொண்ட நிலமகள் கேள்வனே! என்னும்
அன்றுருவேழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே! என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே! தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே

எனக்குத் தலைவியான லக்ஷ்மி விரும்பி உறையும் திருமார்பை உடையவனே! என்பாள். அதனாலே எனக்கு ஆவியாய் இருப்பவனே! என்பாள். உன்னுடைய திருவெயிற்றால் இடந்து எடுத்து நீ கொண்ட ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு நாயகனே! என்பாள். ருஷபங்களைப் பந்தயமாக வைத்த அன்று, இடிபோலே ஓசை எழுப்பிய ஏழு ருஷபங்களையும் தழுவி, அழித்து, நீ ஏற்றுக்கொண்ட நப்பின்னைப்பிராட்டி விஷயத்தில் அன்புடையவனே! என்பாள். கட்டளைப்பட்ட திருவரங்கத்தை இருப்பிடமாகக் கொண்டவனே! என்பாள். இவளின் துன்பத்துக்கு முடிவு எப்படி ஏற்படும் என்று தெரியவில்லை.

பத்தாம் பாசுரம். எம்பெருமான் பராங்குச நாயகியுடன் கலக்க, அதைக் கண்ட திருத்தாயார் தன் ஆனந்தத்தை வெளியிடுகிறாள்.

முடிவு இவள் தனக்கொன்றறிகிலேன் என்னும் மூவுலகாளியே! என்னும்
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும் நான்முகக் கடவுளே! என்னும்
வடிவுடை வானோர் தலைவனே! என்னும் வண் திருவரங்கனே! என்னும்
அடி அடையாதாள் போல் இவள் அணுகி அடைந்தனள் முகில் வண்ணன் அடியே

இவள் இப்படி இருந்த தன் நிலைக்கு முடிவு ஒன்று தெரியவில்லை என்பாள். மூன்று லோகங்களையும் ஆளும் இந்த்ரனுக்கு அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். நறுமணம் மிகுந்த கொன்றை மாலையைச் சூடிய ஜடையயுடைய ருத்ரனுக்கு அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். இவர்களுக்கும் தலைவனான ப்ரஹ்மா என்னும் தெய்வத்துக்கும் அந்தராத்மாவாக நின்று நடத்துபவனே! என்பாள். தன்னைப்போன்ற வடிவையுடைய நித்யஸூரிகளுக்குத் தலைவனே! என்பாள். வள்ளல் தன்மையுடன் இருக்கும் திருவரங்கனே! என்பாள். அவன் திருவடிகளை கிட்டமாட்டாதாப்போலிருந்த இவள் காளமேகம் போன்ற திருமேனியையுடையவன் திருவடிகளை கிட்டி அடைந்தாள்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைக் கற்றவர்கள் பரமபதத்தில் நித்யஸூரிகளுக்கு நடுவே ஆனந்தத்துடன் இருப்பார்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.

முகில் வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் மொய் புனல் பொருநல்
துகில் வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ் வண் குருகூர்ச் சடகோபன்
முகில் வண்ணன் அடி மேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்திப் பத்தும் வல்லார்
முகில் வண்ண வானத்து இமையவர் சூழ இருப்பர் பேரின்ப வெள்ளத்தே

வள்ளல் தன்மையுடைய மேகத்தைப்போன்ற பெரியபெருமாளின் திருவடிகளையே அடைந்து அதுக்கடியான அவருடைய க்ருபையை தலையில்சூடி உஜ்ஜீவித்தவராய் மிகுதியான நீரையுடைய திருப்பொருநல்லின் துகிலின் வண்ணம்போன்ற பரிசுத்தமான நீரையுடைய இடத்துக்கு அருகில் இருக்கும் சிறந்ததான பொழில்களாலே சூழப்பட்ட, செல்வம் மிகுந்த திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார், காளமேகம்போலே மிகவும் அழகையுடைய பெரியபெருமாள் திருவடிகள் விஷயமாக அருளிச்செய்த ஆயிரம் பாமாலைகளில், இப்பத்தையும் உண்மையான பாவத்துடன் சொல்லவல்லவர்கள் மேகத்தைப்போன்ற நிறத்தையுடைய பரமபதத்தில் நித்யஸூரிகள் சூழ எல்லையில்லாத ஆனந்தக் கடலில் இருப்பார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 6.10 – உலகமுண்ட

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 5.8

srinivasan -ahzwar

சரணாகதி செய்யும் காலத்தில் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களைச் சொல்லிக்கொண்டும் நமக்கு வேறு புகலில்லை என்பதையும் வேறு உபாயங்களில் அந்வயம் இல்லை என்பதையும் சொல்லி பிராட்டி புருஷகாரமாக எம்பெருமான் திருவடிகளை அணுகவேண்டும். இதை ஆழ்வார் இந்தப் பதிகத்தில் திருவேங்கடமுடையான் விஷயத்தில் மிகவும் அழகாகச் செய்து காட்டுகிறார்.

முதல் பாசுரம். எல்லோரையும் ரக்ஷிக்கும் தன்மைகளைக் கொண்டு திருமலையிலே இருக்கும் உன்னை அடிமையான நான் கிட்டும் வழியை அருளிச்செய்ய வேணும் என்கிறார்.

உலகம் உண்ட பெரு வாயா உலப்பில் கீர்த்தி அம்மானே!
நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே!
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே!
குல தொல் அடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே

ப்ரளய காலத்திலே உலகத்தை அமுதுசெய்தபோது, காப்பதற்கு உபகரணமான பெரிய பாரிப்பையுடைய திருவாயையுடையவனாய் முடிவில்லாத கீர்த்தியை உடைய இயற்கையான ஸ்வாமியே! இயற்கையான அழகு முதலிய குணங்களால் ஜ்வலிக்கும் பூர்ணமாய் ஒளிமயமான திருமேனியையுடையவனாய் அளவற்ற பெருமையுடையவனாய் எனக்கு ப்ராணனானவனே! எல்லா உலகுக்கும் திலகமாய் நின்ற திருமலையிலே எனக்கு உன்னுடைய ஸ்வாமித்வத்தைக் காட்டிக்கொண்டு நின்றவனே! பரம்பரையாகப் பழைய அடியவனான நான் உன் திருவடிகளைச் சேரும் வழியை நீ அருளிச்செய்யவேண்டும்.

இரண்டாம் பாசுரம். எல்லா விரோதிகளையும் போக்கும் ஆய்தங்களையுடைய நீ, உன்னிடத்திலே மிகவும் ஈடுபாடு கொண்டுள்ள நான் உன் திருவடிகளைச் சேரும்படி க்ருபை பண்ணியருள வேண்டும் என்கிறார்.

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலம் எல்லாம்
சீறா எரியும் திருநேமி வலவா! தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே

க்ரூரராய் மிகவும் வலிமை படைத்த அசுரர்களுடைய கூட்டம் எல்லாம் சிதறி தூளியாம்படித் தரைப்பட்டிருக்கும்போது மேலும் சீறி ஜ்வலிக்கும் வீரஸ்ரீயையுடைய திருவாழியை அடக்கி ஆளவல்லவனாய் நித்யஸூரிகளுக்குத் தலைவனே! சேற்றாலே பூர்ணமான சுனையிலே சிவந்த தாமரையானது சிவந்த தீயைப்போன்ற நிறத்தைக் கொண்டு மலரும்படியிருக்கும் திருமலையிலே வாழ்பவனே! அளவற்ற அன்பை உடையவனான அடியேன் உன் திருவடிகளைச் சேரும்படி க்ருபை பண்ணியருள வேண்டும்.

மூன்றாம் பாசுரம். உன்னுடைய ரூபத்தாலும் குணத்தாலும் இனிமையாலும் மிகவும் உய்ரந்தவிதத்தில் அனுபவிக்கப்படுபவனான நீ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமலையிலே புகலிடமாய் வந்ததைப்போலே அடியோங்களுக்கு இரங்கி அருளவேண்டும் என்கிறார்.

வண்ணம் அருள் கொள் அணி மேக வண்ணா! மாயவம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!
அண்ணலே! உன் அடி சேர அடியேற்கு ஆவாவென்னாயே

நிறத்தில் பிச்சேறும்படியான அழகையுடைய மேகம்போன்ற திருமேனியையுடையவனே! ஆச்சர்யமான குணங்களால் எல்லோரையும் விடப் பெரியவனாய் இருப்பவனே! நெஞ்சில் புகுந்து தித்திக்கும் அமுதே! நித்யஸூரிகளுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்கும் பெருமையையுடையவனே! தெளிந்த அழகான அருவிகள் மணியையும் பொன்னையும் முத்தையும் அலைக்கும் திருமலையிலே இருப்பவனாய் தனித்துவம் வாய்ந்த தலைவனாய் இருப்பவனே! உன்னுடைய திருவடிகளைச் சேரும்படி அடியோங்களுக்கு ஐயோ! ஐயோ! என்று இரங்கி அருளவேண்டும்.

நான்காம் பாசுரம். உலகத்துக்கு விரோதிகளை அழையச்செய்யும் செல்வத்தையுடைய நீ, உன்னுடைய மிகவும் இனிமையான திருவடிகளை நான் கிட்டும்படி பண்ணியருள வேண்டும் என்கிறார்.

ஆவா! என்னாது உலகத்தை அலைக்கும் அசுரர் வாணாள் மேல்
தீவாய் வாளி மழை பொழிந்த சிலையா! திருமா மகள் கேள்வா
தேவா! சுரர்கள் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
பூவார் கழல்கள் அருவினையேன் பொருந்துமாறு புணராயே

உலகத்தை ஐயோ! ஐயோ! என்று இரங்காதே துன்புறுத்தும் அசுரர்கள் ப்ராணன் விஷயமாக அக்னிமுகமான அம்புகளை மழைபோலே பொழிந்த ஸ்ரீ சார்ங்கம் என்னும் வில்லையுடையவனே! வீரபத்னியான லக்ஷ்மிக்கு தகுந்த நாயகனாய் அதனாலே உஜ்ஜ்வலரூபனாய், தேவர்களும், ரிஷிகளும் கூட்டமாக ஆதரிக்கும்படியான திருமலையில் வாழ்பவனே! பூவாலே நிறைந்த உன் திருவடிகளை இழக்கும்படி மிக அரிதான பாபத்தையுடைய நான் உன்னைக் கிட்டும் வழியைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்.

ஐந்தாம் பாசுரம். அடியார்களைக் காப்பதற்காக அநாயாஸமான செயல்களையுடைய உன் திருவடிகளைச் சேர்வது எந்நாள் என்கிறார்.

புணரா நின்ற மரம் ஏழ் அன்றெய்த ஒரு வில் வலவாவோ!
புணரேய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ!
திணரார் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே!
திணரார் சார்ங்கத்துன பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?

கூட்டமாக நின்ற ஏழு மராமரங்களையும் ஸுக்ரீவ மஹாராஜருக்கு எம்பெருமான் சக்தியிலே தேவையில்லாத ஸந்தேஹம் வந்த அக்காலத்திலே அவருக்கு நம்பிக்கை பிறக்கும்படியாக எய்த ஒரு வில்லை உடையவனே! பொருந்தி நின்ற இரண்டு மரங்களின் நடுவே போன ஜகத்துக்குக் காரணனானவனே! கதிப்பு விஞ்சின மேகங்கள் என்று சொல்லும்படி யானைகள் சேர்ந்து வாழும் திருமலையிலே வாழ்பவனே! பெருமையையுடைய ஸ்ரீசார்ங்கத்தையுடையவனான உன் திருவடிகளை அடியேன் சேருவது எந்நாள்? ஓ என்று வருத்தத்தின் மிகுதியை ஒவ்வொரு வரியிலும் வெளியிடுகிறார்.

ஆறாம் பாசுரம். மிகுந்த ஞானத்தையுடைய ஸூரிகளும் அடிமை செய்யும் திருமலையிலே உன் திருவடிகளைக்கிட்டி நான் அடிமை செய்வது எந்நாள் என்கிறார்.

எந்நாளே நாம் மண் அளந்த இணைத் தாமரைகள் காண்பதற்கென்று
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்
மெய்ந்நாமனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே!
மெய்ந்நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?

எல்லா லோகங்களையும் அளந்த திருவடித்தாமரைகள் இரண்டையும் நாம் காண்பதற்கு எந்த நாளை உடையோம் என்று ஸூரிகள் எல்லாக்காலத்திலும் நின்று இப்படிச் சொல்லி துதித்து வணங்கி கூட்டம் கூட்டமாக சரீரம், வாக்கு மற்றும் மனதாலே அடிமை செய்யும்படியான திருவேங்கமுடையானே! உனக்கே ஆட்பட்டவனான நான் உண்மையாகக் கிட்டி, உன் திருவடிகளிலே பொருந்துவது எந்நாள்?

ஏழாம் பாசுரம். எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கும் உன்னை அனுபவிக்கு எந்த ஸாதனத்தையும் அனுஷ்டிக்காமல் இருந்தும் அனுஷ்டித்துப் பலம் காலம் தாழ்த்திக் கிடைப்பதைப்போலே என்னால் பொறுக்கமுடியவில்லை என்கிறார்.

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே! இமையோர் அதிபதியே!
கொடியா அடு புள் உடையானே! கோலக் கனி வாய்ப் பெருமானே!
செடியா வினைகள் தீர் மருந்தே! திருவேங்கடத்து எம்பெருமானே!
நொடியார் பொழுதும் உன பாதம் காண நோலாதாற்றேனே

இயற்கையான அடிமைத்தனத்தையுடைய நான், உன்னைக் கிட்டி நிரந்தர அனுபவம் பண்ணும்படியான அமுதமே! நித்யஸூரிகளுக்குத் தலைவனே!
அடியார்களின் விரோதிகளை அழிப்பவனான பெரியதிருவடியைக் கொடியாக உடையவனே! அழகிய கனிந்த பழத்தைப்போன்ற சிவந்த திருவதரத்தை உடையவனே! செடிபோலே செறிந்த பாபங்களை தீர்க்கும் மருந்தே! திருவேங்கடத்தில் இருக்கும் என் ஸ்வாமியே! எந்த நோன்பையும் நோற்காமல் இருந்தும், உன்னை அடையாமல் இருக்கும் ஒரு நொடிப்பொழுதைக்கூட என்னால் தாங்கமுடியவில்லை.

எட்டாம் பாசுரம். தங்களை ஈச்வரர்களாக நினைப்பவர்களும் நன்றாக வணங்கும்படி ஸுலபனாய் நிற்கிற நீ, க்ருஷ்ணனாய் வந்ததைப்போலே என்பக்கல் வரவேண்டும் என்கிறார்.

நோலாதாற்றேன் உன பாதம் காணவென்று நுண்ணுணர்வின்
நீலார் கண்டத்தம்மானும் நிறை நான்முகனும் இந்திரனும்
சேலேய் கண்ணார் பலர் சூழ விரும்பும் திருவேங்கடத்தானே!
மாலாய் மயக்கி அடியேன்பால் வந்தாய் போலே வாராயே

உன் திருவடிகளைக் காண்பதற்கு எந்த ஸாதனத்தையும் அனுஷ்டியாதிருந்தாலும், பொறுக்கமுடியவில்லை என்று சொல்லி எல்லாமறிந்த நுணுக்கமான ஞானமுடைய கறுத்திருக்கும் கழுத்தையுடையவனான ஜகத்துக்குத் தலைவனான ருத்ரனும், அவனுக்கும் தந்தையாய் நிறைந்த ஞாபத்தையுடைய ப்ரஹ்மாவும் மூன்றுலோகங்களுக்குத் தலைவனான இந்த்ரனும், இளம் மீன்களைப்போன்ற கண்களையுடைய பார்வதி, ஸரஸ்வதி, இந்த்ராணி போன்ற பெண்களும் சூழ, ஆசையுடன் வந்து வணங்கும் திருவேங்கடத்தானே! கரிய நிறத்தையுடைய க்ருஷ்ணனாய் எல்லோரையும் மயக்கி வந்தாற்போலே அடியேன்பக்கல் நீ வரவேண்டும்.

ஒன்பதாம் பாசுரம். மிகவும் இனிமையான மற்றும் அழகான உன் திருவடிகளை ஒரு க்ஷணமும் பிரிய மாட்டேன் என்கிறார்.

வந்தாய் போலே வாராதாய் வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண் செங்கனி வாய் நாற்றோளமுதே எனதுயிரே
சிந்தாமணிகள் பகரல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன பாதம் அகலகில்லேன் இறையுமே

உன்னை விரும்பாதவர்கள் விஷயத்தில் வருவதைப்போலே இருந்து வாராமல் இருப்பாய். அடியார்கள் விஷயத்தில் வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைத்திருக்கும்போது அவர்கள் ஆசைப்படி அனுபவத்தைக்கொடுக்க வருவாய். சிவந்த தாமரைபோலே அழகாய் இருக்கும் திருக்கண்களையும், சிவந்த கனி போலே இனிமையாய் இருக்கும் திருவதரங்களையும், அடியார்களை எடுத்தணைக்கும் நான்கு திருத்தோள்களையும் உடையவனே! அடியார்களுக்கு அமுதம்போன்று இருக்கும் நிலையை எனக்குக் காட்டிக்கொடுத்து எனக்கு உயிராய் இருப்பவனே! நினைத்ததெல்லாம் கொடுக்கக்கூடிய விலையுயர்ந்த ரத்னங்களினுடைய ஒளியானது இரவைப் பகலாக ஆக்கும் திருமலையில் வாழ்பவனே! ஐயோ! உன் திருவடிகளை அடியேன் சிறிதும் அகல முடியாதவனாக இருக்கிறேன்.

பத்தாம் பாசுரம். புருஷகாரமான பிராட்டியையும், குணங்களையுமுடைய உன் திருவடிகளை வேறுபுகலில்லாதவனாக அடைந்தேன் என்று முறையாக சரணாகதியைப் பண்ணுகிறார்.

அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் மங்கை உறை மார்பா!
நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னை ஆள்வானே!
நிகரில் அமரர் முனிக் கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே

“நொடிப்பொழுதும் அகல மாட்டேன்” என்று அலர்மேல்மங்கைத் தாயார் நிரந்தரமாக வாழும் திருமார்பையுடையவனே! ஒப்பில்லாத எல்லையில்லாத வாத்ஸல்யத்தை உடையவனே! மூன்று விதமான சேதனர்கள் மற்றும் அசேதனப் பொருள்களையும் சொத்தாகக் கொண்டிருக்கும் ஸ்வாமித்வத்தை உடையவனே! என்னையும் அடிமைகொள்ளும் ஸௌசீல்யத்தை உடையவனே! ஒப்பில்லாத கைங்கர்ய நிஷ்டரான அமரரும் குணானுபவ நிஷ்டரான முனிவர்களுமான கூட்டங்கள் விரும்பி வாழும் திருமலையிலே இருக்கும் ஸௌலப்யத்தை உடையவனே! வேறு புகல் ஒன்றும் இல்லாத அடியேன் உன்னுடைய திருவடிகளின் கீழே ஸ்திரமாக அமர்ந்துவிட்டேன்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைப் பற்றியவர்கள் பரமபதத்திலே பெருமையுடன் நிரந்தரமாக விளஙுவார்கள் என்று பலனை அருளிச்செய்கிறார்.

அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர்! வாழ்மின் என்றென்றருள் கொடுக்கும்
படிக்கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கிவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து பெரிய வானுள் நிலாவுவரே

“அடியார்களே! நம்முடைய திருவடிகளின் கீழே ஸ்திரமாகப் புகுந்து நிரந்தரமான அனுபவத்தைப் பண்ணுங்கள்!” என்றென்று தன் க்ருபையைக் கொடுக்கும் நிலைக்கு ஒப்பில்லாத ஸர்வேச்வரனைக் குறித்து, குளிர்ச்சியான நீர்நிலங்களையுடைய திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் தம்முடைய கார்யங்களை முடித்துக்கொள்வதற்காக அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களிலும் வைத்துக்கொண்டு திருமலைக்கு என்று ஏற்பட்ட இந்தப் பத்துப் பாசுரங்களை அர்த்தத்துடன் பிடித்துக்கொண்டவர்கள் மிகவும் பெருமை வாய்ந்த பரமபதத்தில் பெருமையுடன் வீற்றிருந்து நிரந்தர அனுபவத்துடன் வாழ்வார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 5.8 – ஆராவமுதே

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 5.7

சிரீவரமங்கலநகரிலே எழுந்தருளியிருக்கும் வானமாமலை எம்பெருமானிடத்தில் வேரற்ற மரம் போலே விழுந்து சரணாகதி செய்தும் அவன் வந்து முகம் காட்டாமல் இருக்க, ஒரு வேளை எம்பெருமான் நம்முடைய சரணாகதியைத் திருக்குடந்தையிலே ஏற்றுக்கொள்வான் போலிருக்கிறது என்று எண்ணித் திருக்குடந்தையில் ஆராவமுதன் எம்பெருமானிடத்தில் தன்னுடைய அநந்யகதித்வத்தைச் (வேறு புகலில்லாமல் இருக்கும் நிலை) சொல்லிச் சரணம் புகுகிறார் ஆழ்வார்.

முதல் பாசுரம். உன்னுடைய இயற்கையான ஸம்பந்தமே காரணமாக உன் அழகையும் இனிமையையும் காட்டிக்கொண்டு, நான் சிதிலமாகும்படி நீ திருக்குடந்தையிலே கண்வளர அதைக் கண்டேன் என்கிறார்.

ஆராவமுதே அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
சீரார் செந்நெற்கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

எனக்கு இயற்கையான தலைவனாய், எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத எப்பொழுதும் இனிமையானவனாய், அடியேனுடைய சரீரம் உன் விஷயத்தில் அன்பே வடிவாக நீரைப்போலே உருக்குலைந்து வருத்தத்துடன் கரையும்படி உருகப்பண்ணும் அளவிடமுடியாத இனிமையை உடையவனே! கனத்தாலே விஞ்சின செந்நெற்கதிர்கள் கவரிவீசினாப்போலே இருப்பதாய் அதற்குக் காரணமான ஜல ஸம்ருத்தியை உடைய திருக்குடந்தையிலே அழகு விஞ்சின ஒப்பனை திகழும்படிக் கண்வளர்ந்தருளினாய். என் கண்ணாலே கண்டு அனுபவித்தேன். ஆனால் வேறு பரிமாற்றங்கள் கிடைக்கவில்லை என்று கருத்து.

இரண்டாம் பாசுரம். அடியார்களுக்காகப் பல அவதாரங்களைச் செய்த நீ உன் கண்ணாலே நன்றாகக் கடாக்ஷிக்கவில்லை, நான் என் செய்வேன் என்கிறார்.

எம்மானே என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே!
எம்மா உருவும் வேண்டும் ஆற்றால் ஆவாய் எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக்குடந்தை
அம்மா மலர்க் கண் வளர்கின்றானே! என் நான் செய்கேனே?

எனக்கு ஸ்வாமியாய், எனக்கு ஸத்வகுணம் பிறக்கும்படி பரிசுத்தமான வடிவை உடையவனாய், எனக்கு அனுபவத்தைக் கொடுப்பவனாய், எல்லா விதங்களிலும் இருக்கும் உயர்ந்த திருமேனிகளை ஆசையால் அங்கீகரித்து இருப்பவனாய், அந்த அந்த விக்ரஹங்களில் இருக்கும் அழகாலே எல்லாருடைய மனங்களையும் கவர்ந்து செருக்கனாயிருக்குமவனாய் இருப்பவனே! சிவந்து பெருத்த தாமரைகள் மிகுதியாக நீரின்மேலே எல்லாவிடங்களிலும் மலரும் திருக்குடந்தையிலே அந்த உயர்ந்ததான தாமரைப்பூப்போலே இருக்கிற திருக்கண்கள் வளரும்படி கிடக்கிறவனே! நான் இப்பொழுது என் செய்வேன்?

மூன்றாம் பாசுரம். கைம்முதல் இல்லாத நான் உன்னைத் தவிர வேறொருவராலும் ரக்ஷிக்கப்பட வேண்டாம். இப்படியாக்கின நீயே எப்பொழுதும் என்னை உன் திருவடிகளிலே அடிமை கொள்ளாப் பார் என்கிறார்.

என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
சென்னாள் எந்நாள் அந்நாள் உன தாள் பிடித்தே செலக்காணே

நான் என்னைக் காத்துக்கொள்ள என்ன செயலைச் செய்வேன்? எனக்கு ரக்ஷகர் யார்? என்னை என்ன செய்வதாக இருக்கிறார்? உன்னைத் தவிர வேறு யாராலும் ஒரு குறையும் போக்கப்பட வேண்டியவனாக நான் இல்லை. மிகவும் திண்ணிய மதிள் சூழ்ந்த திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! அடியேனுடைய ஆத்மா உஜ்ஜீவிக்கும் காலம் இருக்கும் நாள் எத்தனை நாளோ அந்த நாளெல்லாம் உன் திருவடிகளை பிடித்துக்கொண்டே நடக்கும்படி பார்த்தருளவேண்டும்.

நான்காம் பாசுரம். அளவற்ற பெருமையையுடைய ஸர்வேச்வரனான உன்னை இந்த அர்ச்சாவதாரத்திலே அனுபவிக்க ஆசைப்பட்டு அது முடியாமல் கலங்கி நிற்கிறேன் என்கிறார்.

செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகும் உடைய ஒரு மூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய் உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே

மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள் காணுமளவுக்கும் மேலே போகக்கூடிய குண கீர்த்தியையுடையவனாய் அதற்கு முடிவில்லாமல் இருப்பவனே! எல்லா உலகத்தையும் அடிமையாகவுடைய அத்விதீயமான திருமேனியையுடையவனாய் உன்பக்கல் ஆசை விஞ்சியிருப்பவர்களுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனே! உன்னை நான் நினைத்தபடி கண்டு அனுபவிக்கைக்காக அலமந்து ஆகாசத்தை நோக்கி பக்திபரவசரைப்போலே அழுது ப்ரபன்னரைப்போலே தொழுவேன்.

ஐந்தாம் பாசுரம். உன் கண்ணழகிலே ஈடுபட்டுப் பலவிதமான செயல்களைச் செய்யும் நான் உன் திருவடிகளைச் சேரும்படிப் பார்த்தருள வேண்டும் என்கிறார்.

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழு ஒண் பழனக் குடந்தைக் கிடந்தாய் செந்தாமரைக் கண்ணா
தொழுவனேனை உன தாள் சேரும் வகையே சூழ் கண்டாய்

அழுவது, தொழுவது, ஆடிப் பார்ப்பது, பாடுவது, அலற்றுவது, என்னைத் தழுவி இருக்கும் காதலாகிற ப்ரபலமான பாபத்தால் அவன் வரக்கூடிய பக்கங்களைப் பார்த்து அங்கு வாராமையாலே வெட்கப்பட்டுத் தலை கவிழ்ந்திருப்பேன். மிகுதியாய் அழகாய் இருக்கும் நீர் நிலங்களையுடைய திருக்குடந்தையிலே சயனித்திருப்பவனாய் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனே! உன்னைத் தொழுபவனான என்னை உன் திருவடிகளை அடையும்படி ஒரு நல்ல வழியை நீயே பார்க்க வேண்டும்.

ஆறாம் பாசுரம். நித்யஸூரிகளால் வணங்கப்படும் மிகவும் இனிமையை உடையவனான நீ என் விரோதியைப் போக்கி உன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்டருள வேண்டும் என்கிறார்.

சூழ் கண்டாய் என் தொல்லை வினையை அறுத்து உன் அடி சேரும்
ஊழ் கண்டிருந்தே தூராக் குழி தூர்த்து எனை நாள் அகன்றிருப்பன்
வாழ் தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய் வானோர் கோமானே!
யாழின் இசையே அமுதே அறிவின் பயனே அரியேறே

வாழ்ச்சியாலே இயற்கையான புகழை உடையவர்களுக்காகத்தான் திருக்குடந்தையிலே சயனித்தருளினாய். நித்யஸூரிகளுக்கும் தலைவனாய் யாழின் இசைபோலே, எப்பொழுதும் இனிக்கும் அமுதம்போலே, ஸ்துதிப்பது முதலான செயல்களால் நாக்குக்கு இனியவனாய், மனதுக்கும் இனியவனாய் உயர்ந்த சிங்கத்தைப்போன்ற பெருமையை உடையவனே! உன் திருவடிகளைச் சேர்ந்து அதற்கே ஆட்பட்டிருக்கும் பழமையான நிலையைக் கண்டிருந்தே, நிரப்பமுடியாத ஆசை என்னும் குழியை தூர்த்து எத்தனை நாள் அகன்று இருப்பேன். என் அநாதிகால பாபத்தை அறுத்து உன் திருவடிகளைச் சேரும்படிச் சூழ்ந்தருள வேண்டும்.

ஏழாம் பாசுரம். உன்னுடைய திருமேனி அழகைக்காட்டி என்னை அடிமை கொண்டபின்பு உன் திருவடிகளைத் தந்து என் விரோதியைப் போக்கவேண்டும் என்கிறார்.

அரியேறே என்னம் பொற்சுடரே செங்கட்கருமுகிலே
எரியே பவளக் குன்றே நால் தோள் எந்தாய் உனதருளே
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே

கட்டுக்கடங்காத ஸ்வாதந்த்ரியத்தாலே செருக்குடன் இருப்பவனாய் விரும்பத்தக்க பொன்போலேயிருக்கிற திருமேனியில் ஒளியை எனக்கு அனுபவிக்கக் கொடுத்தவனாய் சிறந்த திருக்கண்களையுடையவனாய் முன்பு சொன்ன பொன்னொளிக்கு இருப்பிடமான கறுத்த திருமேனியையுடையவனாய், எதிரிகளுக்கு அக்னிபோலே சிவந்த பவளக்குன்றுபோலே உயர்ந்த திருமேனியையுடையவனாய் நான்கு தோள்களையும் காட்டி என்னை எழுதிக்கொண்ட ஸ்வாமியே! உன்னுடைய க்ருபையை ஒருகாலும் பிரியாதபடி வாசிக கைங்கர்யங்களைக் கொண்டாய். திருக்குடந்தையிலே பிராட்டியுடன் சேவைசாதிப்பவனே! இனி நான் உன் பிரிவைத் தாங்கமாட்டேன். உன் திருவடிகளைத் தந்து என்னுடைய சரீர ஸம்பந்தத்தை போக்கியருள வேண்டும்.

எட்டாம் பாசுரம். விபரீதமான பலமே கிடைத்தாலும் உன்னைத் தவிர வேறொரு ரக்ஷகர் எனக்கு இல்லை. இப்படி வேறு தலைவன் இல்லாத நான் உன் திருவடிகளை விடாதபடி அனுமதி கொடுக்கவேண்டும் என்கிறார்.

களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்
வளை வாய் நேமிப் படையாய் குடந்தைக் கிடந்த மா மாயா
தளரா உடலம் எனதாவி சரிந்து போம் போது
இளையாதுன தாள் ஒருங்கப்பிடித்துப் போத இசை நீயே

நீ என் துன்பத்தைப் போக்கினாலும் போக்காவிட்டாலும் வேறு ஒரு துன்பத்தைப் போக்கும் புகல் எனக்கு இல்லை. சூழ்ந்த வாயையுடைய திருவாழியை ஆயுதமாகவுடையாய்! திருக்குடந்தையிலே சயனித்திருக்கிற மிகவும் ஆச்சர்யமான அழகை உடையவனே! என் உடல் தளர்ந்து எனது ப்ராணன் நிலைகுலைந்து சரீரத்தைவிட்டு போகும்போது சித்தமானது பலவீனத்தை அடையாமல் உன் திருவடிகளையே உபாயமும் உபேயமுமாக ஒருபடிப்படப் பிடித்து இருக்கும்படி நீயே அனுமதி பண்ணியருள வேண்டும்.

ஒன்பதாம் பாசுரம். எனக்கு அனுமதி தந்து உன் திருவடிகளை காட்டிய நீ, எப்படி உன் சயனத் திருக்கோலத்தின் அழகைக் காண்பித்தாயோ அதைப்போல் நடையழகையும் காட்டவேண்டும் என்கிறார்.

இசைவித்தென்னை உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே
அசைவில் அமரர் தலைவர் தலைவா ஆதிப் பெருமூர்த்தி!
திசை வில் வீசும் செழு மா மணிகள் சேரும் திருக்குடந்தை
அசைவில் உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே

என்னை அடிமைத்தனத்தில் இசையும்படிப் பண்ணி, உன் திருவடிகள் விஷயமான வழி மற்றும் பலனாகிய எண்ணத்துடன் இருத்திய ஸ்வாமியே! பகவதனுபவத்துக்கு ஒரு அசைவும் இல்லாத ஸூரிகளுக்குத் தலைவர்களான அநந்த கருட விஷ்வக்ஸேனர் ஆகியோருக்கும் தலைவனாய், எல்லாவற்றுக்கும் காரணனாய் மிகவும் மேன்மை பொருந்திய திருமேனியை உடையவனே! திக்குக்கள் தோறும் ஒளியை வீசும் அழகிய விலையுயர்ந்த ரத்னங்கள் சேருகிற திருக்குடந்தையில் அலைச்சல் தீர்ந்து உலகம் கொண்டாடும்படி சயனித்திருப்பவனே! நான் காணும்படி வரவேண்டும்.

பத்தாம் பாசுரம். மனதிலே நீ இருந்து ஆனந்தத்தைக் கொடுத்தாலும் வெளியிலே நான் கண்டு அனுபவிக்கமுடியாதபடி இருக்கிற உன்னை, எத்தனை திவ்யதேசங்களிலே தேடித் திரிவது என்கிறார்.

வாரா அருவாய் வருமென் மாயா மாயா மூர்த்தியாய்
ஆரா அமுதாய் அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய் திருக்குடந்தை
ஊரா உனக்காட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ

கண்ணாலே அனுபவிக்கலாம்படி திருமேனியழகோடு நடந்து வாராமல், உருவமில்லாதவனாய் என் மனதிலே தோன்றி உன் ஆச்சர்ய குணங்களை எனக்குக் காட்டுபவனாய், அழிவில்லாத திருமேனியோடு எத்தனை அனுபவித்தாலும் த்ருப்தி பிறவாத அம்ருதம்போலே இனியவனாய் உனக்கு அடிமையான என் ப்ராணனின் இருப்பிடமான நெஞ்சுக்குள்ளே மிகவும் ஆனந்தத்தை விளைக்கிறாய். தீராத வினைகள் தீரும்படி என்னை வாசிக கைங்கர்யம் கொண்டவனாய், கண்டு அனுபவிக்கும்படி திருக்குடந்தையை தனித்துவம் வாய்ந்த இருப்பிடமாய்க்கொண்டு இருப்பவனே! உனக்கு அடிமைப்பட்டிருந்தும் வேறு கதியில்லாத அடியேன் இன்னும் மேலுண்டான காலத்திலும் நினைத்தபடி அனுபவிக்கமுடியாமல் வருந்துவேனோ?

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியை நன்றாகக் கற்கவல்லவர்கள் அடியார்களுக்கு விரும்பத்தவர்களாவர்கள் என்கிறார்.

உழலை என்பில் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலை தீர வல்லார் காமர் மானேய் நோக்கியர்க்கே

உழலை கோத்தாற்போலே இருக்கிற எலும்புகளையுடைய பேய்ச்சி முலையினுள்ளிருந்த அவளுடைய ப்ராணனை எடுத்த க்ருஷ்ணனுடையவையாய் தமக்கு உபாயமாக முன்பு காட்டிகொடுத்த திருவடிகளையே உபாயமாக புத்திபண்ணிக்கொண்ட, திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் குழலிலும் மிகவும் இனிதாக இருக்கும்படி அருளிச்செய்த தனித்துவம் வாய்ந்த ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்தையும் தங்கள் சிறுபிள்ளைத்தனம் தீர்ந்து சொல்ல வல்லவர்கள் மான்போலிருக்கிற கண்களையுடைய திவ்ய அப்ஸரஸ்ஸுகளுக்கு ப்ரஹ்மாலங்காரம் செய்யும் க்ரமத்தில் விரும்பத்தக்கவர்களாக ஆவார்கள். மான்போன்ற கண்களை உடையவர்களுக்கு காமுகர்கள் எப்படியோ அதைப்போலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு இந்த பாசுரங்களைச் சொல்ல வல்லவர்கள் என்று கருத்து.

 

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 5.7 – நோற்ற

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 5.5

எம்பெருமான் தன்னிடத்தில் சிறிது ஆசையுடையவர்களையும் ரக்ஷிப்பவனாக இருந்தும் ஏன் இன்னும் தன்னை வந்து ரக்ஷிக்கவில்லை என்று பார்த்தார் ஆழ்வார். தான் மற்றைய உபாயங்களில் ஈடுபட்டிருப்பதாக நினைத்து எம்பெருமான் நம்மை ரக்ஷிகாமல் இருக்கலாம் என்று நினைத்து ஆழ்வார் இந்தத் திருவாய்மொழியில் வானமாமலை எம்பெருமானுக்குத் தன்னுடைய தாழ்ச்சியையும் தனக்கு வேறு உபாயங்களில் அந்வயம் இல்லாததையும் அறிவித்து, சரணாகதி செய்கிறார்.

முதல் பாசுரம். உன்னை அடைவதற்காக சாஸ்த்ரத்தில் காட்டப்பட்ட உபாயங்கள் என்னிடம் இல்லாதபோதும் உன்னை அடைய வேண்டும் என்கிற ஆசை உள்ளது. இப்படி இருந்தும் அடியார்களுடன் கூடியிருப்பதற்கு இங்கே எழுந்தருளியிருக்கும் உனக்கு வெளிப்பட்டவனோ என்கிறார்.

நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்றும் 
ஆற்றகிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே

பலத்தைப் பெறுவதற்கு அனுஷ்டிக்கப்படும் கர்மயோகத்தை உடையவனல்லேன். ஆதலால், நுண்ணியதான ஞான யோகத்தை உடையவனல்லேன். இவை இரண்டாலும் கூடும் பக்தியும் இல்லாதபோதும் உன் குணங்களை நினைத்துப் பார்த்த பின்பு உன்னை விட்டு ஒரு க்ஷணமும் வாழ முடியவில்லை. ஆதிசேஷணைப் படுக்கையாகக் கொண்டு உன் திருமேனியை அவனுக்குக் கொடுத்த ஸ்வாமியாய் சேற்று நிலத்தில் தாமரையானது செந்நெலோடே கலந்து மலரும்படி அழகான சிரீவரமங்கல நகரிலே அடியார்களைக் காப்பதற்காகக் கொண்ட தனித்துவம் வாய்ந்த வீற்றிருந்த திருக்கோலத்தாலே எனக்கு உபகாரகனானவனே! அங்கே ரக்ஷகனாக இருக்கும் உன்னால் காக்கப்படுபவர்களுள் நான் வெளிப்பட்டவன் அல்லேன்.

இரண்டாம் பாசுரம். என்னை ஏற்றுக்கொள்வதற்குத் தடைகள் இருந்தாலும், அவற்றை போக்கக் கூடியவன் நீயே என்பதால், எனக்கு க்ருபைபண்ணி அருள வேண்டும் என்கிறார்.

அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து நான்
எங்குற்றேனும் அல்லேன் இலங்கை செற்ற அம்மானே 
திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவரமங்கல நகர் உறை
சங்கு சக்கரத்தாய் தமியேனுக்கருளாயே

உன் அருளால் உன்னை அடைந்து உன்னிடத்திலும் அல்லேன். நீ கைக்கொள்ளும் வரை காத்திருக்கலாம் என்று இங்கும் என்னால் இருக்க முடியவில்லை. மிகவும் இனியவனான உன்னைக் காணவேண்டும் என்கிற ஆசையில் அகப்பட்டு, நான் உலக விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும் இல்லை. இலங்கையை அழித்து, பின்பு பெற்றுக் கொண்ட ஸ்வாமியாய், சந்த்ரனோடு சேரும்படி மாணிக்கமயமான மாடங்கள் வளர்கிற சிரீவரமங்கலநகரிலே நிரந்தரமாக வாழ்பவனாய், எதிரிகளை அழிக்க உதவும் திருச்சங்கு திருவாழி ஆகியவற்றை உடையவனே! உன்னைத் தவிர வேறு துணையில்லாத எனக்கு நீ க்ருபை பண்ணி அருள வேண்டும்.

மூன்றாம் பாசுரம். பரத்வத்தை வெளியிடும் சிறந்த திருமேனிகளைக் கொண்டு, என்னை ஏற்றுக்கொண்டு என் தொண்டையும் ஏற்றுக்கொண்ட உபகாரத்துக்கு நான் என்ன கைம்மாறு செய்தேன் என்கிறார்.

கருளப் புட்கொடி சக்கரப்படை வான நாட எம் கார் முகில் வண்ணா
பொருள் அல்லாத என்னைப் பொருள் ஆக்கி அடிமை கொண்டாய்
தெருள் கொள் நான்மறை வல்லவர் பலர் வாழ் சிரீவரமங்கல நகர்க்கு
அருள் செய்து அங்கிருந்தாய்! அறியேன் ஒரு கைம்மாறே

கருடனாகிற பறவையைக் கொடியாகவும் திருவாழியை ஆயுதமாகவும் பரமபதத்தை நாடாகவுமுடைய காளமேகம் போலே எனக்காகக்கொடுத்த திருமேனியை உடையவனாய் ஒரு வஸ்து என்று நினைக்கமுடியாதபடி இருந்த என்னை ஸ்வரூபத்தை உணர்ந்தவனாக ஆக்கி, வாசிக கைங்கர்யத்தையும் ஏற்றுக்கொண்டாய். உயர்ந்த ஞானத்தை உடையவராய்க்கொண்டு நான்கு வேதங்களையும் நடத்தவல்லவர்கள் பலரும் வாழும் சிரீவரமங்கலநகருக்கு அருளைப்பண்ணி அங்கே இருக்கிறவனே! நீ செய்த உபகாரத்துக்கு ஒரு கைம்மாறு நான் செய்ததாகத் தெரியவில்லை.

நான்காம் பாசுரம். அடியார்களை நன்றாகக் காக்கும் தன்மையையுடைய உன்னை என் ஆசையைக் கொண்டு எப்படிப் பெறுவது என்கிறார்.

மாறு சேர் படை நூற்றுவர் மங்க ஓர் ஐவர்க்காய் அன்று மாயப் போர் பண்ணி
நீறு செய்த எந்தாய் நிலம் கீண்ட அம்மானே!
தேறு ஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய் உன்னை எங்கெய்தக் கூவுவனே?

எதிரிகளாய்க் கூடின சேனையையுடைய துர்யோதனன் முதலிய நூற்றுவரும் நசிக்கும்படி தனியரான பஞ்ச பாண்டர்களுக்கும் உதவுபவனாய் அன்று ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய யுத்தத்தைப் பண்ணி எல்லாரையும் பொடிப்பொடியாகும்படிச் செய்த மஹோபகாரகனாய், பூமியை இடந்தெடுத்த ஸ்வாமியாய், தெளிந்த ஞானத்தையுடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் இடைவிடாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரில் ஏறி, தனித்துவம் தோன்றும்படி எழுந்தருளியிருந்த எம்பெருமானே! உன்னை எங்கே அடைவதாகக் கூவுவேன்?

ஐந்தாம் பாசுரம். எதிரிகளை அழிக்கும் தன்மையையுடைய நீ அடியார்களின் அனுபவத்துக்காக இங்கே இருப்பதைக் கண்டேன். இப்படி இருக்கிற உன்னை அடைய நான் முயற்சி செய்வது தகுமா என்கிறார்?

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு? எவ்வதெவ்வத் துளாயுமாய் நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவரமங்கல நகர்
கை தொழ இருந்தாய் அது நானும் கண்டேனே

உன்னாலேயே ரக்ஷிக்கப்பட வேண்டிய எனக்கு உபாயமாக உன்னை அழைப்பது தகுமா? எவ்வகைப்பட்ட எதிரிகளாகிற அஸுரக்கூட்டத்துள் புத்தர் முதலிய அவதாரங்களைச் செய்து நின்று அவர்களை ஏமாற்றும் செயல்களைச் செய்யும் அழகிய கறுத்த திருமேனியையுடைய ஸ்வாமியே! செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவர்களாய் இவ்வுலகிலேயே நித்யஸூரிகளைப்போன்று இருப்பவர்கள் விடாமல் வாழும் சிரீவரமங்கலநகர் முழுவதும் தொண்டு செய்யும்படித் தலைவனாய் இருந்தாய். நானும் அந்த இருப்பைக் கண்டேன். ஆனபின்பு அங்கே என்னையும் சேர்த்துக் கொள்வது உன் பொறுப்பு என்று கருத்து.

ஆறாம் பாசுரம். அடியார்களுக்கு உதவுவதில் மிகவும் ஒளிபடைத்த தன்மையையுடைய நீ உன்னை நான் வந்து அனுபவித்துத் தொண்டு செய்யும்படி வந்தருள வேண்டும் என்கிறார்.

ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா! என்றும் என்னை ஆளுடை  
வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே!
தேனமாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கை தொழ உறை
வானமாமலையே அடியேன் தொழ வந்தருளே

வராஹவேஷத்தைக் கொண்டு பூமியை இடந்தெடுத்த செயலால் எனக்கு உபகாரகனாய், கண்ணனாய், எப்பொழுதும் என் இருப்பு அழியாமல் அடிமைகொண்டு, பரமபதத்தில் இருக்கும் ஆனந்தத்தைப்போலே வாசிக கைங்க்கர்யத்தை ஏற்றுக் கொண்ட நாயகனான எம்பெருமானே! உயர்ந்ததான மாணிக்கம்போலே மிகவும் ஒளிபடைத்த தேஜஸ்ஸையுடையவனாய், தேனையுடைய மாஞ்சோலைகளையுடைய குளிர்ச்சியான சிரீவரமங்கலத்திலே உள்ளவர்கள் கைங்கர்யம் செய்யும்படி அங்கே நிரந்தரமாக வாழும், பரம்பதத்திலே இருப்பவர்களுக்கும் அனுபவிக்கும்படி பெரிய மலைபோலே மிகவும் ஸ்திரமான திருமேனியை உடையவனே! அடியவனான நான் தொண்டு செய்யும்படி அந்த நிலையை விட்டு என்னிடத்தில் வந்து அருள வேண்டும்.

ஏழாம் பாசுரம். எல்லாருடைய இருப்புக்கும் காரணமான நீ என்னை உன்னிடத்தில் இருந்து பிரித்து என் இருப்பை அழிக்காமல் இருக்க வேண்டும் என்கிறார்.

வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத் தாய் தந்தையே! முழு ஏழ் உலகும் உண்டாய்
செந்தொழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவரமங்கல நகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே

உன் இருப்பிடங்களை விட்டு இங்கே வந்தருளி, உன் விஷயத்தில் விருப்பமற்றிருந்த என் நெஞ்சை இருப்பிடமாகக் கொண்டு என் இருப்பை நோக்கி பரமபதவாஸிகளின் இருப்பையும் வளர்ப்பவனாய் இவ்வுலகத்திற்கு தனித்துவம் வாய்ந்த முதன்மைத் தாயாய் தந்தையாய் எல்லா உலகங்களையும் அமுதுசெய்து திருவயிற்றில் வைத்து ரக்ஷித்தாய். வேறு எதிர்பார்ப்பு இல்லாத நேர்மையான செயல்களை உடையவர்களுடைய வைதிகமான பகவதாராதனம் மாறாமல் நடக்கும் சிரீவரமங்கலநகரிலே முடிவற்ற குணங்களையுடையவனே! அடியேனை நீ உன் விஷயத்தில் இருந்து அகற்றாமல் இருக்கவேண்டும்.

எட்டாம் பாசுரம். உன்னை விட்டுப் பிரிவதற்குக் காரணமான புலன்கள் நடையாடும் ஸம்ஸாரம் உனக்குக் கீழ்ப் படிந்திருக்க, அதிலே என்னை வைத்தது என்னை அகற்றுவதற்காகவோ என்கிறார்.

அகற்ற நீ வைத்த மாய வல் ஐம் புலன்கள் ஆம் அவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும் நீ அருஞ்சேற்றில் வீழ்த்தி கண்டாய்
பகற்க்கதிர் மணி மாட நீடு சிரீவரமங்கை வாணனே! என்றும்
புகற்கரிய எந்தாய் புள்ளின் வாய் பிளந்தானே!

உன்னிடத்தில் ஈடுபாடு இல்லாதவர்களை அகற்றுவதற்காக நீ உண்டாக்கி வைத்தவையாய், ஆச்சர்யத் தன்மையை உடையதாய், வெல்ல அரிதான ஐம்புலன்களை நன்றாக அறிந்தேன். நீ என்னையும் உன்னிடத்தில் இருந்து அகற்றி அரிதான சேற்றிலே தள்ளிவிட்டாய் என்று நினைத்து அஞ்சுகின்றேன். விளங்குகிற ஒளியையுடைய மாணிக்கங்களையுடைய மாடங்கள் ஓங்கி இருக்கும் சிரீவரமங்கைக்குத் தலைவனாய், ஒரு நாளும் உள்ளே புக முடியாத என் ஸ்வாமியாய், பகாஸுரன் வாயைப் பிளந்தவனே! நீ இப்படி சக்தியுடன் இருந்தும் என் விரோதிகளைப் போக்கவில்லையே என்று கருத்து.

ஒன்பதாம் பாசுரம். அடியார்களின் விரோதிகளைப் போக்குவதாலே மிகவும் ஒளிவிடுபவனாக இருக்கும் நீ, நான் உஜ்ஜீவிக்கும்படி க்ருபைபண்ணி அருளவேண்டும் என்கிறார்.

புள்ளின் வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்த என் 
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திருநான்மறைகள் வல்லார் மலி தண் சிரீவரமங்கை
உள் இருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறெனக்கே

பகாஸுரனை அழித்தவனாய் யமளார்ஜுன மரங்களை வீழ்த்தியவனாய் ஏழு எருதுகளையும் அழிப்பவனாய், இப்படி ஒருவருக்கும் புரியாத ஆழமான விஷயங்களை எனக்குக் காட்டித்தந்த ஆச்சர்யபூதனே! கறுத்த மாணிக்கத்தின் சுடர்போலேயிருக்கிற திருமேனி அழகையுடையவனே! தெளிவை உடையவர்களாய் பகவத் ஸ்வரூபத்தைக் காட்டும் ஸ்ரீயையுடைய நான்கு வேதங்களின் தாத்பர்யங்களும் தாங்களிட்ட வழக்காய் இருப்பவர்கள் மிகுதியாக வாழ்க்கையாலே ஸம்ஸார தாபம் இல்லாதபடி குளிர்ச்சியான சிரீவரமங்கையின் உள்ளே என்னை அனுபவிக்கச் செய்வதற்காக எழுந்தருளியிருந்த உபகாரகனே! எனக்கு உன் திருவடிகளில் தொண்டு செய்து உஜ்ஜீவிக்கும் வழியை க்ருபைபண்ணியருள வேண்டும்.

பத்தாம் பாசுரம். எம்பெருமான் “நம்மைப் பெறுவதற்கு நம் திருவடிகளே உபாயம்” என்று காட்டிக்கொடுக்க, இந்த உபகாரத்துக்கு என்னிடத்தில் ஒரு கைம்மாறு இல்லை என்கிறார்.

ஆறெனக்கு நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்கோர் 
கைம்மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே
சேறு கொள் கரும்பும் பெருஞ்செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை
நாறு பூந்தண்டுழாய் முடியாய்! தெய்வ நாயகனே

எனக்கு உன்னை அடைவதற்கு வழியாக உன் திருவடிகளையே புகலிடமான உபாயமாகக் கொடுத்து விட்டாய். இப்படிப்பட்ட உனக்கு ஓர் கைம்மாறு ஒன்றும் உள்ளவனாக நான் இல்லை. எனது ஆத்மாவும் முன்பே உன்னுடையதாக இருக்கிறது. சேற்று நிலத்திலே இருக்கும் கரும்பும் அதைக்காட்டிலும் பெரிதாக வளரும் செந்நெலும் நெருங்கிக் குளிர்ச்சியாக இருக்கும் சிரீவரமங்கையில் இருப்பவனாய் மிகவும் நறுமணம் வீசும் புதிய, குளிர்ச்சியான திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடையவனாய் நித்யஸூரிகளுக்கு நாயகனாய் இருப்பவனே! இப்படிப்பட்ட உனக்கு நான் கைம்மாறு செய்ய முடியாது என்று கருத்து.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியைப் பாடவல்லவர்கள் நித்யஸூரிகளுக்கு மிகவும் இனியவர்களாவார்கள் என்று பலத்தை அருளிச்செய்கிறார்.

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடி இணை மிசை
கொய் கொள் பூம் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்த ஆயிரத்துள் இவை தண் சிரீவரமங்கை மேய பத்துடன்
வைகல் பாட வல்லார் வானோர்க்காரவமுதே

நித்யஸூரிகளுக்குத் தலைவனான ஸர்வேச்வரனாய் இயற்கையான தாயன்பையுடைய நாராயணனாய்த் தன் சொத்தை தான் கொள்ளும் த்ரிவிக்ரமன் திருவடிகளிலே, கொய்துகொள்ளும்படி மிகுதியாக இருக்கும் பூக்களையுடைய பொழில்களாலே சூழப்பட்ட திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களில் குளிர்ச்சியான சிரீவரமங்கையை மேவிய இந்தப் பத்துப் பாசுரங்களையும் அர்த்தத்தோடே உடன்பட்டுப் பாட வல்லவர்கள் பரமபதவாஸிகளுக்கு எப்போதும் ஆராவமுதம்போலே இனிமையாக இருப்பார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 5.5 – எங்ஙனேயோ

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 4.10

ஆழ்வார் பராங்குச நாயகியாக மடலூரப் பார்த்து, இரவிலே மிகவும் வ்யசனப்பட்டு, பின்பு விடிந்தவுடன் சிறிது தெளிவு பெற்றாள். பின்பு தாய்மார்களும் தோழிமார்களும் இவளுக்கு அறிவுரை சொல்லப் பார்க்க, இவள் அவர்கள் சொல்லைக் கேட்காமல், அவனை நினைப்பதால் ப்ரீதியுடனும் அவனை நேரில் காணப் பெறாததால் அப்ரீதியுடனும் பாடக்கூடிய பாசுரங்களாக இவை அமைந்துள்ளன. இது உருவெளிப்பாடு என்னும் க்ரமத்தில் ஆழ்வாரால் எம்பெருமானை நேரே காண்பதைப் போலே அனுபவிக்கப்பட்டது. இதில் நம்பி எம்பெருமானின் திருமேனி அழகை ஆழ்வார் பூர்த்தியாக அனுபவிக்கிறார்.

முதல் பாசுரம். நம்பியின் தனித்துவம் வாய்ந்த அடையாளமான திருவாழி திருச்சங்கத்தாழ்வார்களிலும், ப்ரதானமான அவயவ அழகிலும் என் நெஞ்சு ஈடுபடுகிறது என்கிறாள்.

எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றதென் நெஞ்சமே

அன்னைமீர்காள்! என்னைப் பெற்ற நீங்கள் எனக்கு விருப்பமானதைச் செய்யாமல், என்னை நினைத்து உகக்க வேண்டியிருக்க இப்படிக் கோபப்படுவது ஏன்? நம் குடிக்குத் தனித்துவம் வாய்ந்தவராய், அழகிய திருமேனியுடையவராய், திருக்குறுங்குடியில் கல்யாணகுண பூர்த்தியையுடைய நம்பியை நான் அனுபவித்தபின் அவருடைய சங்கினோடும், திருவாழியோடும், தாமரைபோலே அழகாய் இருக்கும் திருக்கண்களோடும் சிவந்த கனிபோலே தனித்துவமாய் இருக்கும் திருவதரத்தோடும் என் நெஞ்சு ஆசையுடன் செல்கிறது.

இரண்டாம் பாசுரம். நம்பியுடைய ஒப்பனை அழகும், தோளும் எல்லாவிடத்திலும் வந்து நின்று அனுபவத்துக்கு விஷயமாகிறது என்கிறாள்.

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே

என்னை ஆணையிடாமல் என் நெஞ்சினாலே அனுபவித்துப் பாருங்கள். தெற்குத் திக்கிலே அழகான சோலையையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு ஒளிவிடும் திருயஜ்ஞோபவீதமும், திருமகர குண்டலங்களும், திருமார்பில் ஆபரணமான ஸ்ரீவத்ஸமும், எப்பொழுதும் கழற்றாத ஆபரணங்களும் நான்கு திருத்தோள்களும் நான் போகுமிடமெல்லாம் வந்து நிற்கின்றன.

மூன்றாம் பாசுரம். நம்பியின் அழகை காப்பாற்றி வளர்க்கும் ஆயுதங்கள் எல்லாவிடத்திலும் ஒளிவிடுகின்றன என்கிறாள்.

நின்றிடும் திசைக்கும் நையுமென்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுள்ளும் நீங்காவே

வாயடைத்து நிற்கும், அறிவை இழக்கும், சிதிலையாகும் என்றுகொண்டு பெற்ற தாய்மார்களான நீங்கள் முன்பு நம்பி விஷயத்தில் ஈடுபடுத்தி இப்பொழுது கோபப்படாதீர்கள். மலைபோலே இருக்கிற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் அனுபவித்தபின் வெற்றியையுடைய வில்லும், கதையும், வாளும், சக்கரமும் சங்கமும் ஒன்றாக நின்று என் கண்ணுக்குள் தோன்றி விலகிப்போகாமல் இருக்கின்றன. நெஞ்சுக்குள்ளும் இருந்து விலகிப்போகாமல் இருக்கின்றன.

நான்காம் பாசுரம். மேன்மை பொலியும் நமபியின் திருமேனி அழகின் உயர்த்தி என் அருகில் வந்தது என்கிறாள்.

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
பூந்தண் மாலைத் தண்டுழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே

இவள் கண்ணீர் குறையவில்லை என்று நம்பி விஷயத்தில் மூட்டின தாய்மார்களான நீங்களும் கோபப்படுகிறீர்கள். தேனையுடைய சோலைகளைக்கொண்ட திருக்குறுங்குடியில் நம்பியை நான் அனுபவித்த பின்பு அனுபவிக்கத் தகுந்ததாய் குளிர்ச்சியாய் மாலை வடிவில் இருக்கும் செவ்வித் திருத்துழாயும் அவன் பரத்வத்தைக் காட்டும் விரும்பத்தக்க கிரீடமும் திருமேனியும் அதற்குத் தகுந்த பட்டாடையும் அரைநாணும் அருகிலே சென்று அனுபவிக்க முடியாத பாபத்தையுடைய என் அருகில் வந்தன.

ஐந்தாம் பாசுரம். நம்பியின் திருமுகத்தின் அழகு என் ஆத்மா வரை செல்கிறது என்கிறாள்.

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே

அவன் வரும் பக்கத்தை நோக்கி நிற்கும், சிதிலையாகும் என்று தாய்மார்களான நீங்களும் கோபித்து வார்த்தை சொல்கிறீர்கள். பூர்த்திக்குத் தகுதியான கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் அனுபவித்தபின்பு திரண்ட ஒளியையுடைய தொண்டைப்பழம் போலிருக்கிற திருவதரமும் நீண்ட திருப்புருவங்களும் அதற்குத் தகுதியான நீட்சியையுடைய தாமரை போன்ற திருக்கண்களும் நினைத்தபடி அனுபவிக்கப்பெறாத பாபத்தையுடைய என் ஆத்மாவின் வரை செல்கிறது.

ஆறாம் பாசுரம். நம்பியின் திருமுகத்தின் அழகும், ரூபம், புஜம் முதலியவற்றின் உயர்த்தியும் என் நெஞ்சிலே பூர்ணமாக நிறைந்தது என்கிறாள்.

மேலும் வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே

அவன் வந்து கைக்கொள்ளும் வரை காத்திருக்கும் நம் குடிக்கு, தானாகக் காண ஆசைப்படும் இவள், உள்ளதனையும் பெரியதான பழி ஒரு வடிவெடுத்தாப்போலே இருக்கிறாள் என்று தாயாரானவள் நம்பியைக் காண அனுமதிப்பதில்லை. சோலை சூழ்ந்த குளிர்ச்சியான திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு, மிகவும் அழகாய் நீண்ட கற்பகக் கொடி போலேயிருக்கிற திருமூக்கும், தாமரைப் பூப்போன்ற திருக்கண்களும், பழுத்த திருவதரமும் நீல நிறத்தையுடைய திருமேனியும் நான்கு திருத்தோள்களும் என் நெஞ்சிலே வந்து நிறைந்தன.

ஏழாம் பாசுரம். மிகவும் ஒளிமயமான ஓங்கிய விரும்பத்தக்க திருமேனியுடன் நம்பி என் நெஞ்சுக்குள்ளே கையும் திருவாழியுமாய் நின்றார் என்கிறாள்.

நிறைந்த வன் பழி நம் குடிக்கிவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்தென்னுள்ளே நின்றொழிந்தான் நேமியங்கையுளதே

நம்முடைய குடிக்கு இவள் பூர்ணமான, வலிமையான பழி என்று தாயார் நம்பியைக் காண அனுமதிக்கவில்லை. சிறந்த கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் அனுபவித்தபின்பு, பூர்ணமான ஒளிக்கற்றையாலே சூழப்பட்டு ஓங்கிய விரும்பத்தக்க திருமேனியோடு என் நெஞ்சுக்குள்ளே நிறைந்து நின்றுவிட்டான். அந்நிலையில் அழகிய திருக்கையிலே திருவாழியும் இருந்தது.

எட்டாம் பாசுரம். நம்பியினுடைய எல்லா அவயங்களின் அழகும் என் முன்னே நிற்கின்றன என்கிறாள்.

கையுள் நன்முகம் வைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
மை கொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன் நிற்குமே

கையுள் அழகிய முகத்தை வைக்கும், சிதிலையாகும் என்று இதற்குக் காரணமான தாய்மார்களான நீங்களும் கோபிக்கிறீர்கள். கரிய நிறத்தையுடைய மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின் சிவந்த தாமரை போன்ற திருக்கண்களும், அரை ப்ரதேசமும், சிறுத்த இடையும், அழகிய திருமேனியும், செறிவையுடைய நீண்ட திருக்குழல்கள் (கூந்தல்) தாழ்ந்த திருத்தோள்களும் ஆசைப்படி அனுபவிக்கமுடியாத பாபத்தையுடைய என் முன்னே நிற்கின்றன.

ஒன்பதாம் பாசுரம். நம்பி கணக்கற்ற அழகுகளுடன் கூடியிருந்து எல்லையில்லாத இனிமையையுடையவனாகக் கொண்டு என் நெஞ்சை விட்டுப் போகாமல் இருக்கிறார் என்கிறாள்.

முன் நின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீள் முடி ஆதியாய உலப்பில் அணிகலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே

எல்லோரும் காணும்படி முன்னே வந்து நின்றாய் என்று தோழிகளும் தாய்மாரும் கோபிக்கிறீர்கள். பொருந்தி இருக்கும் மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பியை நான் கண்டபின்பு, தலையில் அவன் மேன்மையைக் காட்டும் ஓங்கிய கிரீடம் முதலான கணக்கற்ற அணியப்பட்ட ஆபரணங்களையுடையவன் சர்க்கரை, பால், அமிர்தம் ஆகியவைபோலே மிகவும் இனிமையானவனாக வந்து என் நெஞ்சைவிட்டுப் போகாமல் இருக்கிறான்.

பத்தாம் பாசுரம். நித்யஸூரிகளுக்கு இனிமையான, மிகவும் ஒளி படைத்த, அடைய வேண்டிய திருமேனியானது, மற்றவர்களுக்குப் பார்க்க முடியாதபடி என்னுளே ஒளிவிடுகிறது என்கிறாள்.

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காண கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே

இவள் கைகழிய விஞ்சின காதலையுடையவளானாள் என்று தாயானவள் நம்பியைக் காண அனுமதிப்பதில்லை. குறைவற்ற கீர்த்தியையுடைய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின் ஸூரிஸங்கங்கள் பரஸ்பரம் கூடியிருந்து தொண்டு செய்து அனுபவிக்கும்படி ஒளிக்கற்றையின் நடுவில் உயர்ந்து தோன்றுகிற தனித்துவம் வாய்ந்த திருமேனியானது அப்படியே என் நெஞ்சுக்குள்ளே தோன்றுகிறது. எத்தனையேனும் அறிவுடையார்க்கும் இது தங்கள் முயற்சியால் அடைய அரியது.

பதினொன்றாம் பாசுரம். இதிதிருவாய்மொழியைச் சொன்னவர்களுக்கு தான் பகவானுக்கு அடிமை என்ற உண்மைத் தன்மையைப் புரிந்து கொள்வதே பலம் என்று அருளிச்செய்கிறார்.

அறிவரிய பிரானை ஆழியங்கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் திருக்குறுங்குடி அதன் மேல்
அறியக் கற்று வல்லார் வைட்டணவர் ஆழ் கடல் ஞாலத்துள்ளே

தங்கள் ஸாமர்த்யத்தால் அறிய ஒண்ணாதபடியான ஸ்வாமியாய் திருவாழியை அழகிய திருகையிலேயுடையவனைக் காதலால் அலற்றி, உயர்ந்த பரிமளத்தையுடைய சிறந்ததான புஷ்பங்களைப்போலே ஆராய்ந்து, சிறந்த குணங்களையுடையவராய் திருநகரிக்குத் தலைவரான ஆழ்வார் அருளிச்செய்த ஆயிரத்துள் ஆயுத அவயவ ஆபரண ரூப அடையாளங்களையுடைய திருக்குறுங்குடியில் நம்பி விஷயமாக உள்ள இந்தப் பதிகத்தையும் ஞான ஒளி பிறக்கும்படிக் கற்று அர்த்தத்தையும் நினைத்துப் பார்க்க வல்லவர்கள் ஆழமான கடல் சூழ்ந்த பூமியில் பகவத் ஸம்பந்தத்துடன் வாழ்வார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 4.10 – ஒன்றும்

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 4.1

ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் அர்ச்சாவதார ரூபத்திலே பெருங்கருணையுடன் ஆத்மாக்களுக்கு உதவுவதற்காக இவ்வுலகில் வந்து காத்திருக்க, இங்குள்ளவர்கள் அவனால் நியமிக்கப்பட்ட வேறு தெய்வங்களைத் தேடிப் போவதைக்கண்டு, எல்லோருக்கும் எம்பெருமானுடைய பரத்வத்தை விரிவாக உபதேசம் செய்து அவர்களைத் திருத்தி மகிழ்கிறார். அர்ச்சாவதாரத்திலே எம்பெருமானின் பரத்வத்தை ஆழ்வார் காட்டிய பதிகம் இது. இந்த திவ்யதேசம் ஆழ்வாருடைய திருவவதார ஸ்தலம் ஆகையாலே இங்கிருக்கும் எம்பெருமானிடத்தில் ஆழ்வாருக்குத் தனி ஈடுபாடு என்பதும் வெளிப்படுகிறது.

முதல் பாசுரம். எல்லாவற்றுக்கும் காரணமான ஸர்வேச்வரன் இங்கே இருக்க வேறு எந்த தேவதையைத் தேடுகிறீர்கள் என்கிறார்.

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா 
அன்று நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்
குன்றம் போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப் பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே

எம்பெருமானிடத்தில் ஒன்றியிருக்கும்படிச் சேர்வதான தேவதைகளும் அவர்களின் உலகங்களும் மனுஷ்யர் தொடக்கமான ப்ராணிகளும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களும் எதுவும் இல்லாத அன்று இவர்களை ஸ்ருஷ்டிக்கவேணும் என்னும் கருணை உள்ளத்துடன் ப்ரஹ்மாவுடன் தேவதைகள், உலகம், ப்ராணிகள் ஆகியவற்றைத் தன்னை அடைவதற்கு வழிசெய்யும் வகையில் படைத்தவனாய் மலைகள்போலே மாணிக்கமயமான மாடங்கள் உயர்ந்திருக்கிற திருக்குருகூரில் நிற்கிற எல்லாவற்றுக்கும் காரணனான மஹோபகாரகன் இங்கிருக்க ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் ஆகியவற்றுள் கர்மத்தாலே ஈடுபடும் தேவதைகளைத் தேடுகிறீர்களே.

இரண்டாம் பாசுரம். அந்த தேவர்களையும் உங்களையும் படைப்பதற்குத் தேவையான நித்யமங்கள குணங்களை உடைய எம்பெருமான் வாழும் திருநகரியை அடையுங்கள் என்கிறார்.

நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்
வீடில் சீர்ப் புகழ் ஆதிப்பிரான் அவன் மேவி உறை கோயில்
மாட மாளிகை சூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப்
பாடி ஆடிப் பரவிச் சென்மின்கள் பல்லுலகீர் பரந்தே

பலவகைப்பட்ட உலகத்தீரே! நீங்கள் உங்கள் குணத்துக்கு ஏற்றதாக வணங்கும் தேவதைகளையும் உங்களையும் ஸ்ருஷ்டி காலத்திலே படைத்தவனான, அதற்குத் தேவையான ஞானம் சக்தி முதலிய குணங்களையுடையவனான, புகழையுடைய ஆதிப்பிரானான எம்பெருமான், பொருந்தி வாழும் ஸ்தானமாய், மாடங்களும், மாளிகைகளும் சூழ்ந்து அதனாலே அழகாக இருக்கும் திருநகரியைப் பாடி ஆடி ஸ்துதித்து எல்லாவிடத்திலும் சென்று சொல்லுங்கள்.

மூன்றாம் பாசுரம். இப்பொழுது படைக்கப்பட்டிருக்கும் ஜகத்தை எம்பெருமான் காப்பாற்றுவதே, அவன் மேன்மையைக் காட்டும் என்கிறார்.

பரந்த தெய்வமும் பல்லுலகும் படைத்து அன்றுடனே விழுங்கிக்
கரந்துமிழ்ந்து கடந்திடந்தது கண்டும் தெளியகில்லீர்
சிரங்களால் அமரர் வணங்கும் திருக்குருகூர் அதனுள்
பரன் திறம் அன்றிப் பல்லுலகீர்! தெய்வம் மற்றில்லை பேசுமினே

பரந்திருக்கும் தேவதைக் கூட்டங்களையும் பல் வித உலகங்களையும் படைத்து, ப்ரளயம் வந்த காலத்தே உடனே விழுங்கி, அதை ஒளித்து வைத்து, ப்ரளயத்துக்குப் பிறகு வெளியே உமிழ்ந்து, பின்பு அளந்து கொண்டு, மீண்டும் இடைப்பட்ட ப்ரளயத்திலே இடந்து எடுத்த இவற்றைக் கண்டும், தெளிவான அறிவில்லாமல் இருக்கிறீர்களே. தேவர்கள் தங்களது தலைகளால் வணங்கும் திருநகரிக்குள்ளே நிற்கிற பரம்பொருளுக்குச் சரீரமாயல்லது வேறு ஸ்வதந்த்ரமான தெய்வம் இல்லை. பல விதமான உலகத்தில் உள்ளவர்களே, அப்படி இருந்தால் சொல்லுங்கள்.

நான்காம் பாசுரம். இவ்வுலகில் ஈச்வரர்கள் என்று கொண்டாடப்படுபவர்களுக்கும் ஈச்வரனான, வேதத்தில் பரதெய்வமாகச் சொல்லப்பட்ட ஸர்வேச்வரன் விஷயத்தில் அவன் ஈச்வரன் இல்லை என்றும் அனுமானத்தாலே ஈச்வரனைச் சொல்லும் நையாயிகர்களுக்கு என்ன ப்ரயோஜனம் என்கிறார்.

பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும்
நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டு கொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனுள்
ஈசன் பால் ஓர் அவம் பறைதல் என்னாவது இலிங்கியர்க்கே

ஈச்வரனாகச் சொல்லப்பட்ட ருத்ரனுக்கும் அவனுக்கும் தந்தையான ப்ரஹ்மாவுக்கும் மற்ற தேவதைகளுக்கும் நாயகனானவன் அந்த ஸர்வேச்வரனே. ப்ரஹ்மாவின் சாபத்தால் ருத்ரன் கையிலே ஒட்டியிருந்த கபாலத்தை நன்றாகப் போக்கின இந்த சரித்ரத்தை ஐந்தாவது வேதமான மஹாபாரத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒளிமயமாய் மிகச்சிறந்ததான மதிள்களாலே சூழப்பட்டு அத்தாலே அழகாக இருக்கும் திருநகரிக்குள்ளே இருக்கும் இயற்கையான ஸர்வேச்வரன் விஷயத்திலே இவன் ஈச்வரன் இல்லை என்ற தாழ்ந்த வார்த்தைகளைச் சொல்லுகிற இத்தால் நையாயிகர்களுக்கு என்ன ப்ரயோஜனம் உண்டு?

ஐந்தாம் பாசுரம். பாஹ்ய (வேதத்தை ஒத்துக்கொள்ளாதவர்கள்) குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் சொல்லுபவர்கள்) மதத்தவர்களை ஜயித்து, திருநகரியில் நிற்கிற ஸர்வேச்வரனே எல்லாரையும் விட உயர்ந்தவன் என்கிறார்.

இலிங்கத்திட்ட புராணத்தீரும் சமணரும் சாக்கியரும்
வலிந்து வாது செய்வீர்களும் மற்று நும் தெய்வமும் ஆகி நின்றான்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர் அதனுள்
பொலிந்து நின்ற பிரான் கண்டீர் ஒன்றும் பொய் இல்லை போற்றுமினே

லிங்கத்தை வணங்குவதைக் காட்டும் தாமஸ புராணத்தை நம்பும் குத்ருஷ்டிகளான நீங்களும், வேதத்தை ஒத்துக்கொள்ளாத சமணர்கள் மற்றும் பௌத்தர்களும், வீணான தர்க்கங்களில் ஈடுபட்டு வாதம் செய்யும் வைசேஷிகர்கள் முதலியவர்களும் மற்றும் நீங்கள் விரும்பி வணங்கும் தேவதைகளும் தன் அதீனத்திலே இருக்கும்படி அவற்றை வளர்த்துவிட்டவன், செந்நெலானது மிகுந்து கவரிபோலே அசைகிற திருநகரியில் பரிபூர்ணனாய் தன் மேன்மை ஒளிவிடும்படி நிற்கும் ஸர்வேச்வரனே! இதை நீங்களே காணுங்கள். இதில் ஒன்றும் பொய் இல்லை. ஆகையாலே உங்கள் கொள்கைகளை விட்டு அவனையே கொண்டாடுங்கள்.

ஆறாம் பாசுரம். இது உங்களுக்குத் தெரியாமல் இருப்பது அவரவர் கர்மத்துக்கு ஏற்றபடி எம்பெருமான் இந்த ஸம்ஸாரத்தை நடத்துகிற ஸாமர்த்யத்தாலே என்கிறார்.

போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மை இன்னே
தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர் அதனுள்
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீர் அதறிந்தறிந்து ஓடுமினே

வேறு ஒரு தேவதையை ஸ்தோத்ரம் பண்ணி ஆதரிக்கும்படி தன்னிடத்திலிருந்து உங்களை விலக்கி, இப்படி அவர்கள் விஷயத்தில் நம்பிக்கையுடன் வைத்திருப்பது, எல்லாரும் பகவானை அடையும் மோக்ஷத்தைப் பெற்றால் சாஸ்த்ரத்தில் காட்டப்பட்ட உலக மர்யாதை குலையும் என்பதற்காக. இதற்குக் காரணம், சேற்று நிலத்தில் செந்நெலும் தாமரையும் போட்டிபோட்டுக் கொண்டு வளரும் திருநகரியிலே வாழும், மிக உயர்ந்த பல விதமான சக்திகளை உடையவனாய்க் கொண்டு எல்லாரையும் கர்மத்தை அனுபவிக்கச்செய்பவனுடைய, ஆச்சர்யமான ப்ரக்ருதியுடன் சேர்ந்த ஸம்பந்தம். அதை நன்றாக அறிந்து இந்த உலகைக் கடக்கப் பாருங்கள்.

ஏழாம் பாசுரம். இப்படியே மற்ற தெய்வங்களை வணங்கி வந்தால் இதற்கு முன்பு பெற்ற பலனையே பெறுவீர்கள். ஆதலால், கருடக்கொடியை உடைய, எல்லாவற்றுக்கும் காரணமான எம்பெருமானுக்கு அடிமை ஆகுங்கள் என்கிறார்.

ஓடி ஓடிப் பல பிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம்
பாடி ஆடிப் பணிந்து பல் படிகால் வழி ஏறிக் கண்டீர்
கூடி வானவர் ஏத்த நின்ற திருக்குருகூர் அதனுள்
ஆடு புட்கொடி ஆதி மூர்த்திக்கு அடிமை புகுவதுவே

வேறு சில பெயர் சொல்லவும் தகுதியில்லாத தேவதையைப் பாடுவது, ஆடுவது என்று கொண்டு வணங்கி, பல விதத்தாலும் சாஸ்த்ர மார்கத்தாலே மேலும் மேலும் வணங்கி, பல பிறவிகளில் ஓடிப் பிறந்து, நேரே அனுபவித்தீர்கள். ஆதலால், நீங்கள் வணங்கும் தேவர்கள் எல்லாரும் கூடி ஸ்தோத்ரம் பண்ணி அடையும்படித் திருநகரியிலே நிற்கும், ஆடிவருகிற பெரியதிருவடியை கொடியாகவுடைய எல்லாருக்கும் காரணனான ஸர்வேச்வரனுக்கு அடிமை ஆகுங்கள்.

எட்டாம் பாசுரம். மார்க்கண்டேயனுக்கு ருத்ரன் உதவியதும் எம்பெருமான் க்ருபையாலே என்று மற்ற தேவதைகளுக்கும் பலன் கொடுக்கும் சக்தி எம்பெருமானே கொடுக்கிறான் என்பத உதாரணத்துடன் அருளிச்செய்கிறார்.

புக்கடிமையினால் தன்னைக் கண்ட மார்க்கண்டேயன் அவனை
நக்க பிரானும் அன்றுய்யக் கொண்டது நாராயணன் அருளே
கொக்கலர் தடம் தாழை வேலித் திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே

தொண்டு செய்து உள்கலந்து தன்னை நேராகக் கண்ட மார்க்கண்டேயனென்று ப்ரஸித்தமானவனை, நக்கபிரான் என்று திக்கையே ஆடையாகக் கொண்டிருப்பவனும் தன் அடியார்களுக்கு நன்மை செய்பவனுமான ருத்ரனும், ஆபத்துக்காலத்திலே காப்பாற்றி பகவானுக்கு அடிமையாக்கி வாழவைத்தது நாராயணன் அருளாலேயே நடந்தது. ஆதலால், கொக்கின் நிறம்போலே வெளுத்து மலரும் பூவையுடைய பெரிய தாழைகளை வேலியாகவுடைய திருநகரியுள் நிற்கும் எல்லாரையும் விட உயர்ந்தவனாய், ஆதி காரணனாய், மஹோபகாரனான எம்பெருமான் நிற்க, வேறு எந்த தெய்வத்தைச் சொல்லுகிறீர்கள்?

ஒன்பதாம் பாசுரம். மற்றவர்களாலே புரிந்து கொள்ள முடியாத எம்பெருமான் வாழும் திருநகரியை உங்களுடைய வாழ்ச்சிக்காக நினையுங்கள் என்று அருளிச்செய்கிறார்.

விளம்பும் ஆறு சமயமும் அவை ஆகியும் மற்றும் தன் பால்
அளந்து காண்டற்கரியனாகிய ஆதிப் பிரான் அமரும்
வளம் கொள் தண் பணை சூழ்ந்தழகாய திருக்குருகூர் அதனை
உளம் கொள் ஞானத்து வைம்மின் உம்மை உய்யக் கொண்டு போகுறிலே

வார்த்தைகளால் மட்டும் நிறைந்திருக்கும் ஆறு பாஹ்ய சமயங்களும் (வேதத்தை ஒத்துக்கொள்ளாத சார்வாக, பௌத்த, சமண, வைசேஷிக, ஸாங்க்ய, பாசுபத மதங்கள்) மற்றுமுள்ள குத்ருஷ்டி (வேதத்துக்குத் தவறான அர்த்தம் கூறும்) மதங்களும் எல்லாம் கூடி வந்தாலும், தன்விஷயத்தில் ஆராய்ந்து காண்பதற்கு அரியதான தன்மையை உடைய, எல்லாருக்கும் காரணனான, மஹோபகாரகன் பொருந்தி வாழும் தேசமாய், அழகியதாய், குளிர்ந்ததான நீர்நிலங்களாலே சூழப்பட்டு மிகவும் இனிமையாக இருக்கும் திருநகரியை, நீங்கள் வாழ்ச்சியைப் பெறவேண்டும் என்று நினைத்தீர்களானால் உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஞானத்தில் வையுங்கள்.

பத்தாம் பாசுரம். எல்லாவற்றுக்கும் ஆத்மாவாய், மிகவும் எளியவனாய், எல்லாரையுடைய மனதையும் கவரக்கூடிய சேஷ்டிதங்களையுடைய எம்பெருமானுக்கு அடிமை செய்வதே விரும்பத்தக்கதும் தகுந்ததும் என்று அருளிச்செய்கிறார்.

உறுவதாவது எத்தேவும் எவ்வுலகங்களும் மற்றும் தன்பால்
மறுவின் மூர்த்தியோடு ஒத்து இத்தனையும் நின்ற வண்ணம் நிற்கவே
செறுவில் செந்நெல் கரும்பொடோங்கு திருக்குருகூர் அதனுள்
குறிய மாணுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே

எல்லா தேவதைகளும் எல்லா உலகங்களும் மற்றுமுண்டான எல்லா சேதனர்களும் அசேதனப் பொருள்களும் இவை எல்லாவற்றையும் தன் ஸ்வரூபத்திலே, குற்றமில்லாத தனித்துவம் வாய்ந்த திருமேனியைப் போலே, பெருமை சேர்க்கும் சரீரமாய்க்கொண்டு, தன்னுடைய ஸ்வரூபம், ஸ்வபாவம் ஆகியவை குலையாதபடி நிற்கும் எம்பெருமான் அம்மேன்மையோடே விளைநிலங்களில் செந்நெலானது கரும்புடன் வளரும்படியான திருநகரிக்குளே நிற்பவனாய், அடியார்கள் எளிதில் அனுபவிக்கும்படி வாமனனாய் ப்ரஹ்மசாரி உருவத்துடன், மிகப்பெரிய பெருமையையுடைய குடக்கூத்தாடிய கண்ணனுக்கே அடிமை செய்வதே சிறந்ததும் தகுந்ததுமாய் இருக்கும் புருஷார்த்தம்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழியை நினைத்துச் சொன்னவர்களுக்குப் பரமபதம் கையிலேயென்று பலத்தை அருளிச்செய்கிறார்.

ஆட்செய்து ஆழிப் பிரானைச் சேர்ந்தவன் வண் குருகூர் நகரான்
நாட்கமழ் மகிழ் மாலை மார்பினன் மாறன் சடகோபன்
வேட்கையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இப்பத்தும் வல்லார்
மீட்சி இன்றி வைகுந்த மாநகர் மற்றது கை அதுவே

வாசிக கைங்கர்யத்தைப் பண்ணி திருவாழியைத் திருக்கையிலேயேந்திய உபகாரகனை அடைந்தவராய் உயர்ந்ததான திருநகரிக்குத் தலைவராய் புதிய பரிமளத்தையுடைய திருமகிழமாலையை திருமார்பிலேயுடையவராய் மாறன் என்கிற குடிப்பெயரையும் சடகோபர் என்கிற விசேஷமான திருநாமத்தையும் உடைய ஆழ்வார், பகவத் விஷயத்தில் கொண்ட மிகுந்த ஆசையால் அருளிச்செய்த ஆயிரம் பாசுரங்களுக்குள் இப்பத்துப் பாசுரங்களையும் அர்த்தத்துடன் அனுபவிக்க வல்லவர்கள் கையிலே இதை அனுபவிப்பதாகிய பலத்துக்கு மேலே, மிகவும் தூரத்தில் இருக்கும், மீட்சியில்லாத ஸ்ரீவைகுண்டமாகிற மாநகரம் இருக்கும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

nAchchiyAr thirumozhi – Simple Explanation – panniraNdAm thirumozhi – maRRu irundhIrgatku

Published by:

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama:

nAchchiyAr thirumozhi

<< padhinonRAm thirumozhi

She believed the words of emperumAn that he will protect everyone. That did not fructify. She believed in her relationship with periyAzhwAr. That too did not yield the desired result. Thinking of all these, she became distressed. Since emperumAn is svathanthran (totally independent), she tried to attain him through her AchArya (teacher), periyAzhwAr. Since even that did not yield the desired result, she thought “emperumAn is svathanthran. If he does not protect his followers, his name will get sullied. Once he decides to protect someone, no one else can prevent that. Hence his svAthanthriyam (nature of being totally independent) itself would act as our means to get the benefit” and tries to go back to him again. Even though she was firm in this, since he did not come, she becomes anxious about what she should do. She does not have the patience to wait for him to come due to her excessive affection. Even if it is against her svarUpam (basic nature of dependence on emperumAn and carrying out service to him) she wants to reach him by any means and requests those who are near her “Please reach me to places such as north mathurA, dhwArakA etc where emperumAn dwells”.

First pAsuram. When she is told “”You should wait until emperumAn comes. There is no need to be anxious like this” she replies “There is no way for me to talk to you who do not understand my situation. I do not have the fortune to listen to your worlds”

maRRirundhIrgatku aRIyalAgA mAdhavan enbadhOr anbu thannai
uRRirundhEnukku uraippadhellAm UmaiyarOdu sevidar vArththai
peRRirundhALai ozhiyavE pOyp pErndhoru thAyil vaLarndha nambi
maRporundhAmaRkaLam adaindha madhuraip puRaththu ennai uyththidumin

Your situation is totally different from mine. Whatever you tell me, who has affection towards mAdhavan (consort of SrI mahAlakshmi) which you cannot comprehend, is wasteful just like a conversation between a dumb and deaf person. There is only one activity which you can perform. Take me to a place near mathurA where kaNNan (krishNa), who left his biological mother dhEvaki and grew up in the place of his foster mother yaSOdhA, and who reached the wrestling arena ahead of the wrestlers, lives.

Second pAsuram. “Whatever it may be, your going after him like this will earn him a bad name; should you not protect your feminity?” She responds to that.

nANi iniyOr karumam illai nAl ayalArum aRindhozhindhAr
pANiyAdhu ennai marundhu seydhu paNdu paNdAkka uRudhirAgil
mANi uruvAy ulagaLandha mAyanaik kANil thalaimaRiyum
ANaiyAl nIr ennaik kAkka vENdil AyppAdikkE ennai uyththidumin

There is no more benefit in feeling ashamed. People in the place have come to know of my matters. If you wish to see me in the state of ignorance in which I was even before I united with emperumAn, before I separated from him and suffered like this, without any further delay, carrying out suitable remedies, take me to thiruvAyppAdi (SrI gOkulam). My disease will disappear if I worship emperumAn who incarnated in the form of vAmana and measured all the worlds.

Third pAsuram. There is no purpose in blaming yaSOdhAp pirAtti for the poor upbringing of kaNNan. She tells them to drop her in front of the the divine mansion of SrI nandhagOpar, who should have controlled kaNNan, being his father.

thandhaiyum thAyum uRRarum niRkath thani vazhi pOyinAL ennum sollu
vandha pinnaip pazhi kApparidhu mAyavan vandhu urukkAttuginRAn
kondhaLamAkkip parakkazhiththuk kuRumbu seyvAn Or maganaip peRRa
nandhagOpAlan kadaiththalaikkE naLLIrutkan ennai uyththudimin

After the words spread in the world “She has started on her own, on the street, when father, mother and relatives are there”, it is not possible to stop the stigma. It is not possible for me not to go on my own. This is because, kaNNa, who has amazing activities, is manifesting his form right in front of me and attracting me. Take me to the entrance of the divine mansion of SrI nandhagOpar, who sired the son who fought with girls, causing blame and doing mischievous acts, in the middle of the night.

Fourth pAsuram. She asks them to leave her, who is totally subservient to emperumAn, on the banks of yamunA.

angaith thalaththidai Azhi koNdAn avan mugaththanRi vizhiyEn enRu
sengachchuk koNdu kaNNAdai Arththuch chiRu mAnidavaraik kANil
nANum kongaith thalamivai nOkkik kANIr gOvindhanukkallAl vAyil pOgA
inguththai vAzhvai ozhiyavE pOy yamunaik karaikku ennai uyththidumin

Oh mothers! Look closely at my bosoms. They have covered themselves in reddish cloth since they feel shy to see lowly people. They will not see anyone other than the face of kaNNan who holds the divine disc in his beautiful hand. They will not see the entrance of anyone’s house other than gOvindan. Hence, take me to to the banks of yamunA river as it is better than living here.

Fifth pAsuram. Those who were there felt sorrowful saying that they must do a proper remedy, after knowing her disease. She says that they cannot know her disease just because they are related to her.

Arkkum en nOy idhu aRiyal AgAdhu ammanaimIr! thuzhadhippadAdhE
kArkkadal vaNNan enbAn oruvan kaikaNda yOgam thadavath thIrum
nIrkkarai ninRa kadambai ERik kALiyan uchchiyil nattam pAyndha
pOrkkaLamAga niruththam seydha poygaik karaikku ennai uyththidumin

Oh mothers! My disease is not comprehendable by anyone. Without feeling sorrowful, you drop me at the banks of yamunA where kaNNan had climbed up a kadamba (Indian oak) tree and jumped on to the head of the demon snake kALiya as if he were dancing and made the banks of yamunA as a battlefield. If kaNNan, who has a complexion of dark ocean gently rubs me with his divine hands, this disease will be cured. This is the way to get immediate relief.

Sixth pAsuram. She tells them to drop her at the place where kaNNan ate food from the hands of rishipathnis (wives of sages).

kArththaN mugilum karuviLaiyum kAyA malarum kamalappUvum
IrththiduginRana ennai vandhittu irudIkEsan pakkal pOgEl enRu
vErththup pasiththu vayiRasaindhu vENdadisil uNNumbOdhu IdhenRu
pArththirundhu nedunOkkuk koLLUm paththavilOsanaththu uyththidumin

During the rainy season, the clouds which had formed, the karuviLa flower(from a winding creeper), the kAyAmbU (a purple coloured flower) and the lotus flower stood in front of me and compelled me saying “You too go to hrishIkESan (emperumAn)”. Hence, take me to bhaktavilOchanam, the place where kaNNan stayed for a  long time, sweating because of grazing the cows, tired due to hunger, his stomach pining due to hunger and awaiting the arrival of the wives of sages to bring food and tell him “This is the time to eat as much food as you want”.

Seventh pAsuram: When asked as to when this sorrow will end, she says that since it will end only if she wears his divine thuLasi garland, she asks them to take her to the place where his victorious garland has been placed.

vaNNam thirivum manam kuzhaivum mAnam ilAmaiyum vAy veLuppum
uNNal uRAmaiyum uL melivum Odha nIr vaNNan enbAn oruvan
thaNNandhuzhAy ennum mAlai koNdu sUttath thaNiyum pilamban thannaip
paNNazhiyap paladhEvan venRa pANdi vadaththu ennai uyththidumin

I have change in my complexion, tiredness in my mind, a shameless state, paleness in my lips, not desiring food and contraction in my knowledge. All these will leave me when I don the cool, beautiful divine thuLasi garland worn by kaNNan, also famously called as one who has the complexion of ocean and who is without any comparison. Since you people cannot bring that here, take me to the place where the banyan tree called as pANdIram is located. This is the place where kaNNan’s elder brother, balarAman killed the demon pralambAsuran such that his bones broke.

Eighth pAsuram. She tells them to take her to gOvardhanam where he protected cows.

kaRRinam mEykkilum mEykkap peRRAn kAdu vAzh sAdhiyum Agap peRRAn
paRRi uralidai Appum uNdAn pAvigAL! ungaLukku Echchuk kolO?
kaRRana pEsi vasavuNAdhE kAligaL uyya mazhai thaduththu
koRRak kudaiyAga Endhi ninRa gOvarththanaththu ennai uyththidumin

kaNNan had grazing of herds of calves as his full time occupation. He also got to be born in the clan of shepherds who leave their homes and live in forests. He got caught in the act of stealing butter and was tied to mortar too. Oh terrible people who mistake his qualities as faults! These have become the reasons for you to get scolded by me! Instead of narrating to me what you have heard and getting scolded by me, take me to a place near gOvardhana hill which emperumAn used as a victorious umbrella to save the cows from hailstorm.

Ninth pAsuram. She tells them to take her to dhwArakA if they wish to escape from any blame.

kUttil irundhu kiLi eppOdhum gOvindhA! gOvindhA! enRu azhaikkum
Uttuk kodAdhu seRuppanAgil ulagu aLandhAn enRu uyarak kUvum
nAttil thalaippazhi eydhi ungaL nanmai izhandhu thalaiyidAdhE
sUttuyar mAdangaL sUzhndhu thOnRum thuvarApadhikku ennai uyththidumin

The parrot which I was nurturing was calling out gOvindhA! govindhA! from its cage. If I punish it by not offering it food, it was calling ulagaandha perumAnE! If I get to hear these divine names, I fall down, swooning. Hence, to prevent bowing down your head, earning a huge blame in this world and spoiling your name too, take me to dhwArakA which is shining, being surrounded by tall mansions whose top storeys have risen very high.

Tenth pAsuram. She completes the decad by saying that those who recite these pAsurams, in which she had prayed for being taken to emperumAn’s dwelling places, will attain SrIvaikuNtam through the path of archchis.

mannu madhurai thodakkamAga vaN thuvarAbadhi thannaLavum
thannaith thamar uyththup peyya vENdith thAzh kuzhalAL thuNindha thuNivai
ponniyal mAdam polindhu thOnRum pudhuvaiyar kOn vittuchiththan kOdhai
innisaiyAl sonna senjol mAlai Eththa vallArkku idam vaigundhamE

ANdAL has hanging tresses and is the divine daughter of periyAzhwAr who is the head of those who reside in SrIvillipuththUr which is radiant with golden mansions. She had composed ten pAsurams wherein she had firmly told her relatives to take her to divine abodes starting with mathurA and ending with dhwArakA. The dwelling place for those who are capable of reciting these divine hymns which are like a garland of words set to sweet music, is paramapadham.

Source: http://divyaprabandham.koyil.org/index.php/2020/04/nachchiyar-thirumozhi-12-tamil-simple/

adiyEn krishNa rAmAnuja dhAsan

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://granthams.koyil.org
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
SrIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 4.1 – ஒருநாயகமாய்

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 3.3

ramanuja-selvapillai-2

ஐச்வர்யம், கைவல்யம், பகவத் கைங்கர்யம் ஆகிய மூன்று விதமான புருஷார்த்தங்களில் ஐச்வர்யமும் கைவல்யமும் ஆத்ம ஸ்வரூபத்துக்குச் சேராது என்றும் அவை மிகவும் தாழ்ந்தது என்றும் சொல்லி, ச்ரிய:பதியான ஸர்வேச்வரனின் திருவடிகளில் கைங்கர்யம் செய்வதே மிக உயர்ந்த புருஷார்த்தம் என்று தன்னுடைய பெரிய கருணையாலே ஸம்ஸாரிகளுக்கு உபதேசம் செய்கிறார் ஆழ்வார். எம்பெருமானார் இந்தப் பதிகத்தைத் திருநாராயணபுரம் திருநாரணன் எம்பெருமானுக்கு ஸமர்ப்பித்தார்

முதல் பாசுரம். மிகப் பெரிய சக்கரவர்த்திகளே பிக்ஷை எடுத்து வருந்துவார்கள். ஆதலால் நம்முடன் இயற்கையான ஸம்பந்தமுடைய, எப்பொழுதும் செல்வத்தையுடைய நாராயணன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.

ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர்
கரு நாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர்
திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்ம்மினோ

எல்லாவற்றுக்கும் தலைவராய் நெடுங்காலம் நடக்கும்படி உலகத்துடன் பொருந்தி ராஜ்யம் நடத்தியவர்கள் அந்த ஐச்வர்யம் தீர்ந்தவுடன் பிக்ஷையெடுக்கப்பார்த்து அந்த ஸமயத்தில் கறுத்த நாயாலே கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உபயோகமற்ற பானையைப் பாத்ரமாகக் கொண்டு இந்தப் பெரிய பூமியில் எல்லாரும் காணும்படி இந்தப் பிறவியிலேயே பிச்சை எடுப்பார்கள். இப்படி இவ்வுலக ஐச்வர்யம் நிரந்தரமாக இல்லாததால், எப்பொழுதும் செல்வத்துடன் இருக்கும் நாராயணனுடைய திருவடிகளை காலம் தாழ்த்தாமல் உடனே நினைத்து உஜ்ஜீவனத்தைப் பெறுங்கள்.

இரண்டாம் பாசுரம். ஐச்வர்யத்தை இழப்பது மட்டுமல்லாமல் விரும்பிய விஷயத்தையும் பிரிய நேரிடும் ஆதலால் எல்லாருக்கும் தலைவனான ச்ரிய:பதியை அடையுங்கள் என்கிறார்.

உய்ம்மின் திறை கொணர்ந்து என்று உலகாண்டவர் இம்மையே
தம் இன் சுவை மடவாரைப் பிறர் கொள்ளத் தாம் விட்டு
வெம்மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமை தின்பர்கள்
செம்மின் முடித் திருமாலை விரைந்தடி சேர்மினோ

திறையைக் கொண்டுவந்து பிழைத்துக்கொள்ளுங்கள் என்று இந்த வார்த்தையைக் கொண்டே உலகத்தை ஆண்டவர்கள் இப்படி வாழ்ந்த பிறவியிலேயே தங்களுக்கு என்று தனித்துவமாய் மிகவும் பிடித்தவர்களாய் இன்பத்தையுடையவர்களாய் இருக்கும் ஸ்த்ரீகளை, மற்றவர்கள் பறித்துக்கொள்ளும்படி, தாங்களே கைவிட்டு, வெப்பம் மிகுந்த, பார்த்தவர் கண்களில் மின்னொளி பரக்கும், வெயிலையுடைய காட்டுக்குள்ளே போய் அங்கும் வேறு ராஜாக்களால் துன்புறுவார்கள். ஆதலால் விரைந்து சென்று தடுக்கப்படாத ஒளிமிகுந்த கிரீடத்தையுடைய திருமாலின் திருவடிகளில் சேருங்கள்.

மூன்றாம் பாசுரம். காலில் விழுந்த ராஜாக்களையும் மதிக்காமல் இருந்தவர்கள் பின்பு ஒரு மதிப்பும் இல்லாமல் ஆவார்கள். ஆதலால் இனியவனான கண்ணன் திருவடிகளை அடையுங்கள் என்கிறார்.

அடி சேர் முடியினராகி அரசர்கள் தாம் தொழ
இடி சேர் முரசங்கள் முற்றத்தியம்ப இருந்தவர்
பொடி சேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடி சேர் துழாய் முடிக் கண்ணன் கழல்கள் நினைமினோ

தங்கள் காலில் விழுந்த கிரீடத்தையுடைய ராஜாக்கள் தாங்களே தொழும்பொழுது இடிபோன்ற முரசங்கள் முற்றத்திலே ஓசை செய்யும்படி இருந்தவர்கள் ஒரு பொருளின் துகளுடன் சேர்ந்த மிகச்சிரிய துகளாகும்படி மதிப்பற்றுப் போவார்கள். ஆதலால் உடனே நறுமணம் மிகுந்த திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடைய கண்ணன் திருவடிகளை நினையுங்கள்.

நான்காம் பாசுரம். அவமானப்படுவது மட்டும் இல்லாமல் ஆயுளும் நிலைநில்லாததாகையால் விரோதிகளைப் போக்கும் கண்ணன் திருவடிகளை வணங்குங்கள் என்கிறார்.

நினைப்பான் புகின் கடல் எக்கலின் நுண் மணலில் பலர்
எனைத்தோருகங்களும் இவ்வுலகாண்டு கழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தல் அல்லால் மற்றுக் கண்டிலம்
பனைத்தாள் மதகளிறட்டவன் பாதம் பணிமினோ

ஆராய முயன்றால் பல யுகங்களும் இந்த உலகத்தை ஆண்டு கழிந்துபோனவர்கள் கடலில் உருவாகிய மேடுகளில் இருக்கும் மிக நுண்ணிய மணலைவிட மிகுதியானவர். தங்களின் வீட்டின் பகுதிகளுக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் வித்யாசம் தெரியாதபடி அழிவதைத் தவிர வேறு நிலையைப் பார்த்ததில்லை. ஆதலால் பனைபோலே பருத்த அடிப்பரப்பையுடைய யானையை அழித்தவனான கண்ணனின் திருவடிகளை வணங்குங்கள்.

ஐந்தாம் பாசுரம். விருப்பத்துக்குரித்தான் பெண்களும் அவர்களுடன் கூடுவதும் நிலையற்றதாகையாலே அழகிய உருவத்தையுடையவனான ஸர்வேச்வரன் திருநாமத்தைச் சொல்லி வாழப் பாருங்கள் என்கிறார்.

பணிமின் திருவருள் என்னும் அம் சீதப் பைம் பூம் பள்ளி
அணி மென் குழலார் இன்பக் கலவி அமுதுண்டார்
துணி முன்பு நாலப் பல் ஏழையர் தாமிழிப்பச் செல்வர்
மணி மின்னு மேனி நம் மாயவன் பேர் சொல்லி வாழ்மினோ

அழகியதாய் குளிர்ந்ததாய் பரந்த பூப்படுக்கையிலே, திருவருளைப் பண்ணியருளவேணும் என்னும் ஆசையையுடைய, அழகாக அலங்கரிக்கப்பட்ட மிகவும் மென்மையான கூந்தலையுடையவர்களின் இன்பமான கலவி என்னும் அமுதத்தை அனுபவித்தவர்கள், தாங்கள் அணிந்திருக்கும் வஸ்த்ரமானது பின்பக்கம் வரை எட்டாமல் இருப்பதால் முன்னே தொங்கும்படி இருக்க, முன்பு ஈடுபட்டிருந்த பல வகைப்பட்ட ஸ்த்ரீகள் தாங்களே பழித்தாலும்கூட, அவர்களை நோக்கி நடப்பார்கள். ஆதலால் நீலரத்னம்போலே ஒளிபடைத்த திருமேனியையுடையவனாய், நமக்கு தன் அனுபவத்தைக் கொடுக்கும் ஆச்சர்யபூதனின் திருநாமங்களைச் சொல்லி ஆனந்தமாக வாழுங்கள்.

ஆறாம் பாசுரம்.. இவ்வுலகில் நிலைநின்ற வாழ்க்கை இல்லாததால் அப்படி இருக்க ஆசைப்படுபவர்கள் திருப்பாற்கடல்நாதனுக்குத் தொண்டராகுங்கள் என்கிறார்.

வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மா மழை மொக்குளின் மாய்ந்து மாய்ந்து
ஆழ்ந்தார் என்றல்லால் அன்று முதல் இன்றறுதியா
வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை நிற்குறில்
ஆழ்ந்தார் கடல் பள்ளி அண்ணல் அடியவராமினோ

வாழ்ந்தார்களாகத் தங்களை நினைத்திருப்பவர்கள் வாழ்ந்தது பெருமழையில் நீர்க்குமிழிபோலே நசித்து நசித்துக் கீழே போனார்கள் என்பதைத் தவிர, உற்பத்தி முதல் இன்று வரை ஓரே நிலையில் வாழ்ந்தார்கள் என்பது இல்லை. நிலைநின்ற வாழ்வு வேண்டுமாகில் ஆழ்ந்து நிறைந்த கடலைப் படுக்கையாகவுடைய ஸர்வஸ்வாமிக்கு அடியார் ஆகுங்கள்.

ஏழாம் பாசுரம். உடம்பை வளர்க்கும் உணவு முதலிய இன்பமும் நிரந்தரமற்றது ஆகையால் எல்லாருக்கும் காரணமான ஸர்வேச்வரன் குணங்களை நினையுங்கள் என்கிறார்.

ஆமின் சுவை அவை ஆறோடடிசில் உண்டார்ந்த பின்
தூ மென் மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவார்
ஈமின் எமக்கொரு துற்றென்று இடறுவர் ஆதலின்
கோமின் துழாய் முடி ஆதி அம் சோதி குணங்களே

ப்ரக்ருதிக்குச் சேர்ந்ததாய் விரும்பத்தக்கதாய் உலக ப்ரஸித்தமான ஆறு ரஸங்களோடு கூடின உயர்ந்ததான அன்னத்தை உண்டு த்ருப்தியடைந்தபின், சுத்தமாய் மென்மையான பேச்சையுடைய ஸ்த்ரீகள் கேட்பதால் மீண்டும் முயன்று உண்ணுபவர்கள், அந்தச் செல்வம் அழிந்த பிறகு, அந்த ஸ்த்ரீகளிடமே சென்று எங்களுக்கு ஒரு பிடி அன்னம் இடவேணும் என்று கேட்டு அது கிடைக்காததால் ஆங்காங்கே திரிவார்கள். ஆதலால் திருத்துழாயாலே அலங்கரிக்கப்பட்ட கிரீடத்தையுடைய எல்லாருக்கும் காரணமான, அழகிய ஒளிபடைத்த திருமேனியையுடைய ஸர்வேச்வரனின் குணங்களை, அவனை அடைந்து அனுபவியுங்கள்.

எட்டாம் பாசுரம். பகவானுடைய அருள் இல்லாதபோது கிடைக்கும் ராஜ்யமும் நிலையற்றதாகையாலே ஆதிசேஷனில் சயனித்திருப்பவன் திருநாமங்களைச் சொல்லுங்கள் என்கிறார்.

குணம் கொள் நிறை புகழ் மன்னர் கொடைக் கடன் பூண்டிருந்து
இணங்கி உலகுடன் ஆக்கிலும் ஆங்கவனை இல்லார்
மணம் கொண்ட போகத்து மன்னியும் மீள்வர்கள் மீள்வில்லை
பணம் கொள் அரவணையான் திருநாமம் படிமினோ

சீலம் முதலிய குணங்களுக்கு இருப்பிடமாய் பூர்ணமான புகழையுடையவராய் க்ஷத்ரிய குல புத்ரர்களாய் வள்ளல் தன்மையை ஏறிட்டுக்கொண்டு நிலைபெற்று நின்று இருந்து உலகம் உடன்படும்படி ரக்ஷித்துப் போனாலும் அந்த ஐச்வர்ய விஷயமாக ஸர்வேச்வரனை அடிபணிந்து நில்லாதவர்கள், எப்பொழுதும் புதியதாக இருக்கும் ஐச்வர்ய இன்பத்திலே இப்படி நிலைநின்றார்களாகிலும் அந்த ஐச்வர்யத்தை இழப்பார்கள். விரிகிற பணங்களையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாக கொண்டுள்ள எம்பெருமான் திருநாமங்களை எப்பொழுதும் சொன்னால் மீண்டும் இவ்வுலகுக்கு வரவேண்டாத மோக்ஷம் கிடைக்கும்.

ஒன்பதாம் பாசுரம். மேலுலகத்தில் இருக்கும் ஸ்வர்க்கானுபவமும் நிலையற்றதாகையாலே நிலைநின்ற கைங்கர்யத்தைக் கொடுக்கும் ஈச்வரனை அடையுங்கள் என்கிறார்.

படி மன்னு பல்கலன் பற்றோடறுத்து ஐம்புலன் வென்று
செடி மன்னு காயம் செற்றார்களும் ஆங்கவனை இல்லார்
குடி மன்னும் இன் சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள் மீள்வில்லை
கொடி மன்னு புள்ளுடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ

நிலத்தையும் எப்பொழுதும் அணிந்திருந்த பலவகைப்பட்ட ஆபரணங்களையும் பற்றோடு அறுத்து, ஐம்புலன்களையும் வென்று, தூறுமண்டிக்கிடக்கிற சரீரத்தை ஜயித்தவர்களும், இந்த தவத்தின் பலனால் பொருந்தி இருக்கும் குடியிருப்பையுடைய உயர்ந்த இனிமையையுடைய ஸ்வர்க்கத்தை பெற்றாலும், அந்த இன்பத்துக்காக, அங்கும் எம்பெருமானை வணங்காதவர்கள் அதை இழந்து திரும்புவார்கள். மீளாத இன்பத்தை அடைய கொடியிலே எப்பொழுதும் இருக்கும் பெரியதிருவடியையுடைய ஸர்வேச்வரனுடைய திருவடிகளை அடையப்பாருங்கள்.

பத்தாம் பாசுரம். இப்படி உலக இன்பங்களைப் போலே நிரந்தரமற்றதாக இல்லாமல் கைவல்யம் நிரந்தரமான ப்ரயோஜனமாக இருந்தாலும் அதில் எம்பெருமானுக்குத் தொண்டு செய்து அனுபவிக்கும் வாய்ப்பில்லாததால் ஸர்வேச்வரனை அடையும் பகவத் ப்ராப்தியே உயர்ந்த ப்ரயோஜனம் என்கிறார்.

குறுக மிக உணர்வத்தொடு நோக்கி எல்லாம் விட்ட
இறுகல் இறப்பென்னும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்
சிறுக நினைவதோர் பாசம் உண்டாம் பின்னும் வீடில்லை
மறுகலில் ஈசனைப் பற்றி விடா விடில் வீடஃதே

உள்நோக்கிய ஞானத்தாலே நிரூபிக்கப்படும் ஆத்மவஸ்துவுடன் ஆழமாக நினைத்து ஆத்மாவைத் தவிர எல்லா விஷயங்களையும் விட்டவனாய் ஆத்மாவில் மட்டும் சென்று முடிந்த மோக்ஷத்தை புருஷார்த்தம் என்றிருக்கும் ஞானிக்கும் எம்பெருமானை உபாயமாகப் பற்றுகை இல்லையாகில் தாழ்ந்த புருஷார்த்தங்களை நினைப்பதற்குக் காரணமான ஓர் பாசம் ஏற்பட்டு அதனால் அந்த கைவல்ய மோக்ஷமும் கிடைக்காது. ஆதலால் எல்லாவிதமான தோஷங்களுக்கும் எதிர்த்தட்டான, எல்லாவிதமான மங்கள குணங்களையும் உடைய ஸ்வாமியை அடைந்து அகலாமல் இருந்தால் அதுவே சிறந்த புருஷார்த்தம்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக துக்கம் போய் ஆத்மா உஜ்ஜீவனத்தை அடைவதை அருளிச்செய்கிறார்.

அஃதே உய்யப் புகுமாறென்று கண்ணன் கழல்கள் மேல்
கொய் பூம் பொழில் ஸூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்தாயிரம் சீர்த் தொடைப் பாடல் இவை பத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ் துயர் போய் உய்யற்பாலரே

வாழ்ச்சிக்குக் காரணமாகக் கிட்டும் உபாயம் அதுவே என்று அறுதியிட்டு கண்ணனுடைய திருவடிகளின்மேலே கொய்யப்படும் புஷ்பங்களையுடைய பொழிலையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அந்தரங்க கைங்கர்யங்களாகச் செய்த சீரும் தொடையும் கொண்ட அழகிய ஆயிரம் பாசுரங்களில் இவை பத்தையும் நழுவாதபடிக் கற்பவர்கள் ஆழ்ந்து வரும் துக்கம் போய் ஆத்ம உஜ்ஜீவனத்தை அடைவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 3.3 – ஒழிவில்

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 2.10

srinivasan -ahzwar

“தேவரீருக்குக் கைங்கர்யம் செய்வதற்குத் தடையாக இருக்கும் சரீரத்தைப் போக்கியருள வேண்டும்” என்று ஆழ்வார் எம்பெருமானிடம் வேண்ட, எம்பெருமானும் “உம்முடைய இந்த சரீரத்துடன் கைங்கர்யம் பெற்றுக் கொள்ளத்தான் வடக்குத் திருமலையில் வந்த சேவை சாதிக்கிறோம். ஆகையால் இங்கே வந்து நீர் நம்மை அனுபவிக்கலாம்” என்று சொல்ல, ஆழ்வார் மிகவும் மகிழ்ந்து, எம்பெருமானிடம் தனக்கு நிரந்தரமான கைங்கர்யத்தைத் தந்தருளுமாறு ப்ரார்த்திக்கிறார்.

முதல் பாசுரம். எல்லோருக்கும் தலைவனான திருவேங்கடமுடையானுக்கு எல்லா விதமான கைங்கர்யத்தையும் செய்ய வேண்டும் என்று தன் பந்துக்களுடன் சேர்ந்து ஆசைப்படுகிறார்.

ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழுவிலா அடிமை செய்ய வேண்டுநாம்
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே

பெரிய ஆரவாரத்தை எழுப்பும் அருவியையுடைய திருவேங்கடமாகிற திருமலையில் இருப்பதாலே அழகையுடைத்தான ஒளிமயமான திருமேனியையுடைய நம்முடைய குலநாதனுக்கு நாம் ஒழிவில்லாத காலமெல்லாம் எல்லாவிடத்திலும் உடனிருந்து, எல்லா நிலைகளிலும் பிரியாமல் நின்று, ஒன்றும் நழுவாதபடி எல்லாக் கைங்கர்யங்களையும் செய்ய வேண்டும்.

இரண்டாம் பாசுரம். இப்படிப்பட்ட எல்லோரையும் விட உயர்ந்த தலைவனின் குணங்கள், திருமேனி ஆகியவற்றின் பெருமையை அருளிச்செய்கிறார்.

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்துபூ மகிழும் திருவேங்கடத்து
அந்தமில் புகழ்க் கார் எழில் அண்ணலே

நமது பரம்பரபரையில் முதல்வனாகத் திகழும் எம்பெருமான், பரமபதத்திலே வசிப்பவர்கள் தங்கள் தலைவரான சேனை முதலியாருடன், நிலத்தில் தூவின புஷ்பங்கள் மலரும்படியான திருமலையில் வாழ்வதாலே, முடிவில்லாத புகழை உடையவனாய் கறுத்த வடிவழகையுடைய தலைவனாக விளங்குகிறான்.

மூன்றாம் பாசுரம். இப்படி அழகிய திருமேனியை உடையவன் நித்யஸூரிகளால் வணங்கப்படுபவன் என்கிறார்.

அண்ணல் மாயன் அணி கொள் செந்தாமரைக் 
கண்ணன் செங்கனி வாய்க் கருமாணிக்கம்
தெண்ணிறைச் சுனை நீர்த் திருவேங்கடத்து
எண்ணில் தொல் புகழ் வானவர் ஈசனே

திருமேனியைப் பார்த்தாலே ஸ்வாமி என்று தோற்றும்படியாய், ஆச்சர்யமான குணங்கள் மற்றும் சொத்துக்களை உடையவனாய், அழகை உடைய புண்டரீகாக்ஷனாய், சிவந்த கனி போன்ற திருப்பவளத்தை உடையவனாய் நீல ரத்னம் போலே ஒளிவிடும் திருமேனியை உடையவன். தெளிந்து ப்ரகாசமான நிறத்தையுடைய சுனைநீரைக் கொண்ட திருமலையிலே நிற்பதாலே கணக்கற்ற இயற்கையான குணத்தை உடையவனாய் பரமபதத்திலே வசிப்பவர்களுக்கு ஸ்வாமியானவன்.

நான்காம் பாசுரம். என்னைப் போன்ற தாழ்ந்தவனை ஏற்றுக்கொண்ட எம்பெருமானின் எளிமைக்கு முன்பு நித்யஸூரிகளால் வணங்கப்படுவது ஒரு பெருமையோ என்கிறார்.

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் 
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே

நித்யஸூரிகளுக்குத் தலைவன் என்று சொல்லுவேன். இப்படிச் சொன்னால், மிகவும் தாழ்ந்தவனாய், நல்ல குண பூர்த்தி இல்லாமல் இருக்கும் என்னிடத்தில் அன்பைவைத்து அதனாலே மிகவும் ஒளிபடைத்த திருமேனியையுடையவனான திருவேங்கடத்தானுக்கு அது ஒரு பெருமையோ?

ஐந்தாம் பாசுரம். எளிமையை உடையவன் என்று மட்டுமோ அவன் பெருமை? எளிமையுடன் மிகவும் இனிமையானவனுக்கு ஸர்வேச்வரன் என்பதனால் ஒரு பெருமையோ என்கிறார்.

சோதியாகி எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ
வேதியர் முழு வேதத்தமுதத்தைத்
தீதில் சீர்த் திருவேங்கடத்தானையே

வைதிகர்களுடைய எல்லா வேதங்களிலும் கொண்டாடப்பட்டபடி மிகவும் இனிமையை உடையவனாய் ஆள்பார்த்து அனுபவம் கொடுக்கும் தீமை இல்லாத எல்லாருக்கும் அனுபவத்தைக் கொடுக்கும் குணத்தை உடையவனான  ஒளிவிடும் திருவேங்கடமுடையானைக் கொண்டு எல்லாரும் தொழும்படி எல்லாருக்கும் காரணனான ஸர்வேச்வரன் என்றால் அது ஒரு பெருமையோ?

ஆறாம் பாசுரம். விரோதிகள் நீங்கி பகவானை அனுபவிப்பதற்குக் காரணமான எளிமையாக அடையும்படி இருப்பதை அருளிச்செய்கிறார்

வேங்கடங்கள் மெய்ம் மேல் வினை முற்றவும்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்
வேங்கடத்துறைவார்க்கு நமவென்னல்
ஆம் கடமை அது சுமந்தார்கட்கே

திருமலையிலே நிரந்தரமாக வாழும் ஸ்வாமிக்கு “நம:” என்று சொல்வதை தங்கள் தலையிலே சுமப்பவர்களுக்கு முற்காலத்தில் சேர்த்துவைத்த பாபங்கள் மற்றும் வருங்காலத்தில் வரும் பாபங்கள் ஆகிய இரண்டும் முழுவதுமாக எரிந்துபோய்விடும். இது ஸத்யம். அப்படி எம்பெருமானை அடைபவர்கள் தங்கள் ஸ்வரூபத்துக்கு இனிமையைக் கொடுக்கும் பகவானை அனுபவிப்பது போன்றவைகளையே செய்வார்கள்.

ஏழாம் பாசுரம். எம்பெருமானை அடைவதின் எல்லை நிலமாக அவன் நின்றருளின திருமலை தானே பரம ஸாம்யாபத்தியைத் தரும் என்று அருளிச்செய்கிறார்

சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்றெழும் திருவேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே

உயர்ந்ததான புஷ்பங்களையும் நல்ல நீரையும் சிறந்ததான தீபத்தையும் நல்ல தூபத்தையும் கையிலே ஆசையுடன் வைத்துக்கொண்டு வேறு ப்ரயோஜனங்களில் ஆசை இல்லாமல் நன்றாக அமர்ந்து, நித்யஸூரிகள், தங்கள் தலைவரான சேனைமுதலியாருடன் வணங்கி எழும்படி, திருவேங்கடம் என்ற திருநாமத்தை உடைய மிகவும் பரந்த திருமலை, நமக்கு பரம ஸாம்யாபத்தி மோக்ஷத்தைத் தானே தரும்.

எட்டாம் பாசுரம். இப்படிப்பட்ட திருமலையை அனுபவிக்க, ப்ராப்திக்குத் தடையாக இருப்பவை தானே அழிந்துவிடும் என்கிறார்.

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே

கல் மாரியாலே திருவாய்ப்பாடியில் இருந்தவர்கள் துன்பப்பட, கோவர்த்தன மலையை ஏந்தி அவர்களைக் காத்தவனாய், அன்று பூமியை அளந்து தனக்காகக் கொண்ட உபகாரகனான உயர்ந்த தலைவன் சென்று சேர்ந்த திருவேங்கடமாகிற பெரிய திருமலை ஒன்றை மட்டும் தொழ, நம்முடைய விரோதிகள் தானே ஒழிந்துவிடும்.

ஒன்பதாம் பாசுரம். நல்ல கதியைக் காட்டக்கூடிய திருவேங்கடமுடையானுக்கும் விரோதியைப் போக்கும் தன்மை இந்த தேசத்துடன் இருக்கும் ஸம்பந்தத்தாலே என்கிறார்.

ஓயும் மூப்புப் பிறப்பிறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே

அப்பொழுது அலர்ந்த திருவடித்தாமரைகளை வாக்குள்ளும் மனத்துள்ளும் வைப்பவர்களுக்கு பலவீனத்தைக் கொடுக்கும் வயோதிகம், பிறப்பு, இறப்பு, நோய்கள் ஆகியவை அழியும்படிச் செய்பவன் திருமலையிலே வாழும் கண்ணன் எம்பெருமான்.

பத்தாம் பாசுரம். மிகவும் இனிமையான திருவேங்கடத்தைப் பற்றுங்கள் என்று தன் பந்துக்களுக்கு உபதேசம் செய்கிறார்.

வைத்த நாள் வரை எல்லை குறுகிச் சென்று
எய்த்திளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திருவேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே

உங்களுக்கு நிர்ணயித்து வைத்த நாளினுடைய எல்லையானது உங்களருகில் வந்து பலவீனத்தைத் தந்து அதன் காரணமாக இளைப்பதற்கு முன்னே, விரிகிற பணங்களையுடைய அநந்தனை படுக்கையாக உடைய ஸர்வேச்வரனின் திருமலையில், செறிந்த சோலையினுடைய அழகிய புஷ்பங்களையுடைய பரந்த திருத்தாழ்வரையைச் சென்று அடையுங்கள்.

பதினொன்றாம் பாசுரம். இத்திருவாய்மொழிக்குப் பலமாக கைங்கர்யஸ்ரீ கிடைக்கும் என்பதை அருளிச்செய்கிறார்.

தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழில் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வெய்தி ஞாலம் புகழவே

திருவடிகளைப் பரப்பி பூமியை அளந்துகொண்ட ஸர்வேச்வரனை, உயர்ந்த சோலையையுடைய ஆழ்வார்திருநகரிக்குத் தலைவரான நம்மாழ்வார் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் பாசுரங்களுள் இந்தப் பத்து பாசுரங்களையும் அர்த்தத்துடன் சொல்ல வல்லவர்கள் கைங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்று உலகம் புகழும்படி அடிமை செய்து வாழப்பெறுவார்கள்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

திருவாய்மொழி – எளிய விளக்கவுரை – 2.10 – கிளரொளி

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

கோயில் திருவாய்மொழி

<< 1.2

kallalagar-mulavar-uthsavar-azhwar

ஆழ்வார், எம்பெருமான் உகந்த கைங்கர்யத்தை ஆசைப்பட எம்பெருமானும் தெற்குத் திருமலை என்று சொல்லப்படும் திருமாலிருஞ்சோலை ஸ்தலத்தை எண்ணித் தான் அங்கே இருக்கும் இருப்பை ஆழ்வாருக்குக் காட்டிக் கொடுத்து “நாம் உமக்காக இங்கே வந்துள்ளோம், நீர் இங்கே வந்து எல்லா விதமான கைங்கர்யங்களிலும் ஈடுபடலாம்” என்று சொல்ல, ஆழ்வாரும் திருமலையை முழுவதுமாக அனுபவித்து இனியராகிறார்.

முதல் பாசுரம். மிகவும் ஒளிவிடும் ஸர்வேச்வரன் விரும்பிய திருமலையே நமக்குக் குறிக்கோள் என்கிறார்.

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம்
வளரொளி மாயோன் மருவிய கோயில்
வளரிளம் பொழில் சூழ் மாலிருஞ்சோலை
தளர்விலராகில் சார்வது சதிரே

கிளர்ந்து வருகிற ஞான ஒளிக்கு யோக்யதை உண்டான இளமையானது கெடுவதற்கு முன்னே வளர்ந்து வருகிற குண ஒளியையுடைய ஆச்சர்ய ரூபனான ஸர்வேச்வரன் பொருந்தி வாழ்கிற திவ்யஸ்தானமாய் வளர்ந்திருந்தாலும் இளமையாக இருக்கும் பொழில்களாலே சூழப்பட்டு அதனாலே மாலிருஞ்சோலை என்று திருநாமம் கொண்ட திருமலையை வேறு ப்ரயோஜனங்களை எதிர்பார்க்கும் தளர்த்தி இல்லாமல் அடைவதுவே சிறந்தது.

இரண்டாம் பாசுரம். அழகருடைய திருமலையோடு சேர்ந்து இருக்கும் திவ்யதேசத்தைக் கொண்டாடுவதே குறிக்கோள் என்கிறார்.

சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது
அதிர்குரல் சங்கத்து அழகர் தம் கோயில்
மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலை
பதி அது ஏத்தி எழுவது பயனே

ஸாமர்த்யம் மற்றும் இளமை ஆகியவற்றை உடைய ஸ்த்ரீகளுடைய தாழ்ந்ததான காமச்சொற்கள் மற்றும் செயல்களை ஆசைப்படாமல் முழங்குகிற ஸ்ரீபாஞ்சஜன்யத்தை உடையவராகையாலே மிகவும் அழகாக இருக்கும் அழகருக்கு தனித்துவம் வாய்ந்த ஸ்தானமாய் சந்த்ரனானவன் தவழும்படி ஓங்கின சிகரங்களைக் கொண்ட திருமலையில் இருக்கும் ப்ரஸித்தமான திவ்யதேசத்தை ஸ்தோத்ரம் பண்ணி வாழ்ச்சிபெறுவதே குறிக்கோள்.

மூன்றாம் பாசுரம். பெரிய வள்ளல் தன்மையை உடைய எம்பெருமான் வாழ்கிற திருமலையோடு சேர்ந்த அருகாமை மலையை அடைவதே குறிக்கோள் என்கிறார்.

பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே
புயல் மழை வண்ணர் புரிந்துறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல் மலை  அடைவது அது கருமமே

நெஞ்சே! பயனற்ற செயலைச் செய்து ஒரு ப்ரயோஜனமும் இல்லை. தூறலும் துளியுமான காளமேகம்போலே ஸ்வபாவத்தையுடைய அழகர் எம்பெருமான் ஈடுபாடு கொண்டு நிரந்தரமாக வாழ்கிற ஸ்தானமாய், கண்டார் நெஞ்சு கலங்கும்படி அழகான பொழில் சூழ்ந்த திருமலைக்கு அருகில் இருக்கும் மலையை அடைவதுவே செய்ய வேண்டியது.

நான்காம் பாசுரம். நம்மைக் காக்கும் எம்பெருமான் வாழ்கிற பெரிய பொழில் சூழ்ந்த திருமலையை அடைவதுவே செய்யவேண்டியது என்கிறார்.

கருமவன் பாசம் கழித்து உழன்றுய்யவே
பெருமலை எடுத்தான் பீடுறை கோயில்
வருமழை தவழும் மாலிருஞ்சோலை
திருமலை அதுவே அடைவது திறமே

கர்மங்களாகிற கழற்ற அரிய கயிறுகளைக் கழற்றி அடிமைசெய்து ஆத்மாக்கள் உஜ்ஜீவனம் அடையவே கோபர்கள்/கோபிகைகளின் துன்பம் தீரும்படி பெரிய மலையை எடுத்துக் காத்தவன் தன்னுடைய காப்பாளன் என்கிற பெருமை விளங்கும்படி வாழ்கிற ஸ்தானமாய் வருகிற மேகங்கள் தவழும்படி மிகவும் உயர்ந்து பரந்த சோலையையுடைத்தான திருமலையை அடைவதே செய்யவேண்டியது.

ஐந்தாம் பாசுரம். ரக்ஷிக்க உதவும் திருவாழியையுடைய எம்பெருமான் வாழ்கிற திருமலையின் சுற்றில் இருக்கும் மலையை அடைவது நல்ல வழி என்கிறார்.

திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அறமுயல் ஆழிப் படை அவன் கோயில்
மறுவில் வண் சுனை சூழ் மாலிருஞ்சோலை
புற மலை சாரப் போவது கிறியே

பல விதமான வலிமையினாலே கொடிய பாபங்களை வளர்த்துக் கொள்ளாமல் அடியார்களைக் காக்கும் தர்மத்தில் முயலும் திருவாழியை ஆயுதமாக உடையவனுடைய இருப்பிடமாய், வந்து அடைபவர்களுக்கு நன்மை செய்யும் களங்கம் இல்லாத சுனைகளாலே சூழப்பட்ட திருமலையின் சுற்றில் இருக்கும் மலைக்கு அருகே போவது நல்ல வழி.

ஆறாம் பாசுரம். அடியார்களிடத்திலே மிகுந்த அன்புகொண்ட எம்பெருமான் வாழ்கிற திருமலைக்குப் போகும் வழியை நினைப்பதே நன்மை என்கிறார்.

கிறியென நினைமின் கீழ்மை செய்யாதே
உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்
மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை
நெறிபட அதுவே நினைவது நலமே

உலக விஷயங்களில் ஈடுபட நினைக்கும் தாழ்ச்சியைச் செய்யாமல் இதை நல்ல வழி என்று நினையுங்கள். ஏனெனில் உறியிலே சேமித்து வைத்த வெண்ணெயை அமுதுசெய்த க்ருஷ்ணனுடைய கோயிலாய், கன்றுகளோடேகூட மான்பேடைகள் சேருகிற திருமலையினுடைய வழியிலே இருக்கவேண்டும் என்கிற அதையே நினைக்கை நமக்கு ப்ரயோஜனம்.

ஏழாம் பாசுரம். ப்ரளய ஆபத்திலே நம்மைக் காக்கும் எம்பெருமான் வாழ்கிற திருமலை விஷயத்தில் செய்யும் அனுகூலமான செயல்களே சிறந்தது என்கிறார்.

நலமென நினைமின் நரகழுந்தாதே
நிலமுனம் இடந்தான் நீடுறை கோயில்
மலமறு மதிசேர் மாலிருஞ்சோலை
வலமுறை எய்தி மருவுதல் வலமே

ஸம்ஸாரம் என்னும் நரகத்தில் அழுந்தாதே இதை உயர்ந்த குறிக்கோள் என்று எண்ணுங்கள். முற்காலத்திலே பூமியை இடந்தெடுத்தவன் நிரந்தரமாக வாழ்கிற கோயிலாய், களங்கமில்லாத சந்த்ரன் பொருந்தியிருக்கும் திருமலையை தலைவைன்/தொண்டன் என்ற க்ரமத்தில் அனுகூலமான செய்லகளைச் செய்து பொருந்துவதே உயர்ந்த ப்ரயோஜனம்.

எட்டாம் பாசுரம். அடியார்கள் விஷயத்தில் நன்மைகளைச் செய்யும் க்ருஷ்ணன் வாழ்கிற திருமலையிலே நிரந்தரமாக அனுகூலமான செயல்களைச் செய்வதே நம் ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்கிறார்.

வலம் செய்து வைகல் வலம் கழியாதே
வலம் செய்யும் ஆய மாயவன் கோயில்
வலம் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை
வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே

அடியார்களுக்கு அடங்கி இருக்கும் அனுகூலமான செயலை பண்ணும் க்ருஷ்ணனான ஆச்சர்யபூதனுடைய கோயிலான, பரமபதத்தைச் சேர்ந்தவர்களும் அனுகூலமான செயல்களைச் செய்யும் திருமலையைக் குறித்து, வலிமையை உண்டாக்கி நிரந்தரமாக அந்த வலிமையை வேறு விஷயங்களில் செலவிட்டு வீணாக்காமல், ப்ரதக்ஷிணம் முதலிய அனுகூலமான செயல்களைச் செய்து, நிரந்தரமாகக் கூடி இருத்தலே ந்யாயம்.

ஒன்பதாம் பாசுரம். பூதனையைக் கொன்ற எம்பெருமான் வாழ்கிற திருமலையைத் தொழவேண்டும் என்கிற நினைவில் உறுதியே வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது
அழக்கொடி அட்டான் அமர் பெரும் கோயில்
மழக்களிற்றினம் சேர் மாலிருஞ்சோலை
தொழக் கருதுவதே துணிவது சூதே

மிகவும் வலிமையான பாபங்களிலே மூழ்காதே, இது ஸ்வரூபத்துக்குச் சேர்ந்தது என்று நினையுங்கள். பேயான பெண்ணை அழைத்தவன் பொருந்து வாழும் பெரிய கோயிலாய் ஆனைக்கன்றுகளின் கூட்டம் சேரும் திருமலையை தொழவேண்டும் என்கிற நினைவிலே உறுதியுடன் இருக்கையே ஸம்ஸாரத்தை வெல்வதற்கான வழி.

பத்தாம் பாசுரம். வேதத்தை சொல்லிக் கொடுத்து வளர்ப்பவனான எம்பெருமான் வாழ்கிற திருமலையில் புகுகிற இதுவே குறிக்கோள் என்று தொடங்கிய உபதேசத்தை முடித்தருளுகிறார்.

சூதென்று களவும் சூதும் செய்யாதே
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்
மாதுறு மயில் சேர் மாலிருஞ்சோலை
போதவிழ் மலையே புகுவது பொருளே

எளிமையான வழி என்று நினைத்து களவாடுதல், பார்த்துக்கொண்டிருக்கும்போதே அபஹரித்தல் ஆகியவைகளைச் செய்யாமல் முற்காலத்தில் கீதோபதேசம் மூலமாக, வேதார்த்தத்தை விவரித்தவனான எம்பெருமான் விரும்பி வாழும் கோயிலாய், மென்மையை உடைய மயில்கள் சேர்ந்து வாழும் ஓங்கி, பரந்த சோலைகளில் பூவானது மலருகிற திருமலையிலே சென்று புகுவதே குறிக்கோள்.

பதினொன்றாம் பாசுரம். பகவானை அடைவதை இந்தப் பதிகத்துக்கு ப்ரயோஜனமாக அருளிச்செய்கிறார்.

பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன் புகழ் மேல்
மருளில் வண் குருகூர் வண் சடகோபன்
தெருள் கொள்ளச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்து
அருள் உடையவன் தாள் அணைவிக்கும் முடித்தே

அடியார்களின் அனுகூலம் ப்ரயோஜனம் என்று இந்த உலகத்தைப் படைத்தவனுடைய தயை, க்ஷமை முதலிய குணங்களின் பெருமை விஷயமாக, அறியாமை சற்றும் இல்லாதவராய், உயர்ந்ததான ஆழ்வார்திருநகரிக்குத் தலைவராய், பெரிய வள்ளலான நம்மாழ்வார், உண்மை ஞானமானது ஆத்மாக்கள் பெறும்படி அருளிச்செய்த தனித்துவம் வாய்ந்த ஆயிரத்துள் இந்தப் பதிகமானது, ஸம்ஸாரத்தை அழித்து பரிபூர்ண க்ருபையையுடைய அழகருடைய திருவடிகளைப் பெற்றுக் கொடுக்கும்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org