Category Archives: vAzhithirunAmams

வாழிதிருநாமங்கள் – திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் பிள்ளை லோகாசார்யர்

எம்பெருமானார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள்

திருவாய்மொழிப் பிள்ளை வைபவம்

திருவாய்மொழிப் பிள்ளை மதுரைக்கு அருகில் உள்ள குந்தீ நகரத்தில் (தற்போது கொந்தகை என்று வழங்கப்படுகிறது) வைகாசி விசாகத்தில் அவதரித்தவர்.  இவரது இயற்பெயர் ஸ்ரீசைலேசர் என்பதாகும்.   ஸ்ரீசைலம் என்பது திருமலையைக் குறிக்கும்.  அதனால் இவர் திருமலை ஆழ்வார் எனப்பட்டார்.  இவர் சிறு வயதிலேயே பிள்ளை லோகாசார்யரிடம் பஞ்ச சம்ஸ்காரம் பெற்று அவரது சிஷ்யரானார்.  இவர் சிறு வயதிலேயே சிறந்த  ஞானியாக இருந்தமையால் மதுரையில் இருந்த அரசன் தனக்கு மந்திரியாக இருக்கும்படி ஸ்ரீசைலேசரை வேண்டினான்.  சிறிது காலத்தில் அரசன் இறந்து விட அடுத்து பட்டத்திற்கு வந்த இளவரசருக்கு சிறந்த ஆலோசகராக இருந்து ராஜ்ய பரிபாலனம் சிறப்பாக நடக்க வழி வகுத்தார்.

இவர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்த காலத்தில் பிள்ளை லோகாசார்யரின் மற்றொரு சிஷ்யரான கூரகுலோத்தம தாசர் என்பவர் இவரைத் திருத்திப் பணி கொண்டு நம்முடைய சம்பிரதாயத்தில் சிறந்த ஆசார்யராக உருவாக்கினார்.  பிள்ளை லோகாசார்யர் திருநாட்டிற்கு எழுந்தருளும் முன்பு இந்த முக்கியமான பொறுப்பை கூரகுலோத்தம தாசரிடம் ஒப்படைத்தார்.  அதன்படி கூரகுலோத்தம தாசரும் எவ்வாறு மணக்கால் நம்பி ஆளவந்தாரை ஆசார்யராக உருவாக்கினாரோ அதே போன்று திருமலை ஆழ்வாரை சிறந்த ஆசார்யராக உருவாக்கும் பொறுப்பினை ஏற்று நடத்தினார்.  திருமலை ஆழ்வார் மந்திரியாக இருக்கும் காலத்தில் வீதி உலா வரும் இடங்களில் கூரகுலோத்தம தாசர் நின்று கொண்டு பாசுரங்களை அநுசந்தித்தார்.  திருமலை ஆழ்வாரும் பாசுரங்களால் ஈர்க்கப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டு சிறிது சிறிதாக சம்பிரதாய விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்தார்.  கூரகுலோத்தம தாசர் திருநாடு எய்தும் வரை அவருக்குக் கைங்கர்யங்கள் செய்தார்.

அவர் திருநாடு எய்திய பின், திருமலை ஆழ்வார் ராஜ்ய பதவியைத் துறந்து, நம்மாழ்வாரின் பெருமையை உணர்ந்து அவர் ஆழ்வார் திருநகரியை வந்தடைந்தார்.  ஆழ்வார் திருநகரி காடு மண்டிக்கிடக்க, ஆழ்வார் திருநகரியைச் சீர்திருத்தி நம்மாழ்வாருக்கும், கேரள தேசத்தில் இருந்த நம்மாழ்வாரை ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருளச் செய்து, ஆழ்வார் மற்றும் ஆதிநாதப் பிரான் கோயிலை புனர் நிர்மாணம் செய்து, கைங்கர்யங்கள் சிறப்புற நடக்கும்படி செய்தவர் இந்தத் திருமலை ஆழ்வார்.  எம்பெருமானாரின் பவிஷ்யதாசார்யர் திருமேனி நம்மாழ்வாரின் திருப்புளி ஆழ்வாரின் (திருப்புளியமரம்) கீழ். இருப்பதை ஸ்வப்பனத்தில் கண்டு, அவரை ஆழ்வார் திருநகரியின் மேற்குப் பகுதியில் தனிக் கோயில் அமைத்து அங்கு அவரை எழுந்தருளச் செய்தார்.  அந்தக் கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளை அமைத்து அதற்கு சதுர்வேதி மங்கலம் என்று பெயரிட்டு, அங்கு ஸ்ரீவைஷ்ணவர்களை குடியமர்த்தினார்.  அவர்களைக் கொண்டு பவிஷ்யதாசார்யார் கைங்கர்யங்கள் நன்றாக நடக்கும்படிச் செய்தார்.

இவர் பல ஆசார்யர்களிடம் இருந்து சம்பிரதாய விஷயங்களை கற்றுக் கொண்டார்.  கூரகுலோத்தம தாசரிடம் சம்பிரதாய விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.  விளாஞ்சோலைப் பிள்ளையிடம் சென்று பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தங்களை விரிவாகக் கற்றுக் கொண்டார்.  வடக்குத் திருவீதிப் பிள்ளையிடம் பெற்ற திருவாய்மொழி முப்பத்தாறாயிரப்படி ஈடு வ்யாக்யானத்தை நம்பிள்ளை தமது மற்றொரு சிஷ்யரான ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கொடுத்து இதை தகுதியான அதிகாரிக்கு கொடுக்கவும் என்று பணித்திருந்தார்.  ஈயுண்ணி மாதவப் பெருமாள் தம்முடைய குமாரரான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு அதைக் கொடுக்க,  ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அதை நாலூர் பிள்ளைக்கு அளித்திருந்தார்.  நாலூர் பிள்ளை அந்த ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளைக்கு கொடுத்திருந்தார்.  நாலூராச்சான் பிள்ளையிடம் அவரது சிஷ்யரான திருவாய்மொழி பிள்ளை நம்பிள்ளையின் திருவாய்மொழி வ்யாக்யானத்தை திருநாராயணபுரத்தில்  கற்றுக் கொண்டார்.

இவர் நம்மாழ்வாருக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.  அதனால் இவர் திருவாய்மொழிப் பிள்ளை எனப்பட்டார்.  சடகோபருக்காக வாழ்ந்தவர் எனும் பொருள்படும்படி சடகோப தாசர் என்றும் அழைக்கப்பட்டார்.  இந்தத் திருவாய்மொழிப் பிள்ளையின் வம்சத்தவர்கள் இன்றளவும் ஆழ்வார் திருநகரியிலும் மேலும் சில திவ்ய தேசங்களிலும் கைங்கர்யம் செய்து வருகின்றனர்.  இவ்வாறு பல கைங்கர்யங்கள் செய்தவர்.  முக்கியமாக சிதிலமடைந்திருந்த ஆழ்வார் திருநகரியை மீட்டெடுத்து சீர் திருத்தி நம்மாழ்வார், எம்பெருமான் மற்றும் பவிஷ்யதாசார்யர் சந்நிதிகளை ஏற்படுத்தி சிறப்புற கைங்கர்யம் நடக்கும்படி செய்தவர்.  மேலும் ஓராண் வழி ஆசார்யர்களில் இவர் மட்டும் திருவரங்கத்தில் வசித்ததாகத் தெரியவில்லை.   திருவாய்மொழிப் பிள்ளை பெருமையைக் கேட்டு மணவாள மாமுனிகள் அவரைத் தேடி ஆழ்வார் திருநகரி வந்து அவரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு அவரை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு திருவாய்மொழிப் பிள்ளை வாழ்நாள் உள்ள வரை அவருக்குக் கைங்கர்யங்கள் செய்து வாழ்ந்தார் என்று அறிகிறாேம்.  இவர் பெரியாழ்வார் திருமொழிக்கு ஸ்வாபதேச வ்யாக்யானம் அருளியுள்ளதாகத் தெரிகிறது.

திருவாய்மொழிப் பிள்ளை வாழி திருநாமம்

வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே
துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே
தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே
தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே
திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே

திருவாய்மொழிப் பிள்ளை வாழி திருநாமம் விளக்கவுரை

வையகமெண் சடகோபன் மறைவளர்த்தோன் வாழியே –  இந்த வையகம் (இப்பூவுலகில் உள்ள பெரியோர்கள்) முழுவதும் எண்ணி மகிழக் கூடிய வேதமாகிய நம்மாழ்வார் அருளிச் செய்த திவ்யப்ரபந்தங்களை வளரும்படிச் செய்த திருவாய்மொழிப் பிள்ளை வாழ்க.

வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே – நம்மாழ்வாரின் திருநக்ஷத்ரமான வைகாசி மாதம் விசாக நக்ஷத்திரத்தில் அவதரித்த ஏற்றம் மிகுந்த திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு வாழ வேண்டும்.

ஐயன் அருண்மாரி கலை ஆய்ந்துரைப்போன் வாழியே – ஐயன் என்றால் தந்தை.  நமக்குத் தந்தை போன்ற அருள்மாரி என்று அழைக்கப்படும் திருமங்கையாழ்வாரின்   திவ்யப்ரபந்தங்களை ஆராய்ந்து அவைகளின் உட்கருத்துகளைச் சொல்லும் திருவாய்மொழிப்பிள்ளை வாழ்க.  ஆசார்யர் என்பவர் சகல சாஸ்திரங்களிலும், ஸம்ஸ்க்ருத க்ரந்தங்களிலும், வேதங்களிலும், தமிழ் ப்ரபந்தங்களிலும் விற்பன்னராக இருக்க வேண்டும் என்பதை நாம் முன்பே அறிந்தோம்.  அதன்படி திருவாய்மொழிப் பிள்ளை என்று பெயர் கொண்டாலும் மற்ற ஆழ்வார்களின் திவ்யப்ரபந்தங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.  திருமங்கையாழ்வாரின் ப்ரபந்தங்கள் நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களுக்கு ஆறு அங்கங்களாக விளங்கின.  அவ்வாறு திருமங்கையாழ்வாரின் ப்ரபந்தங்களையும் பகுத்து ஆராய்ந்து அதன் கருத்துக்களை உலகோர் அறியும் வண்ணம் எடுத்துரைத்த திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

அழகாரும் எதிராசர் அடிபணிவோன் வாழியே – மிகுந்த பொலிவைப் பெற்ற எதிராசரான ஸ்ரீராமாநுஜர் திருவடிகளைத் தொழும் திருவாய்மொழிப் பிள்ளை வாழ்க.   எம்பெருமானாரைத் தமது சிஷ்யரான மணவாள மாமுனிகளுக்கும் காட்டிக் கொடுத்து ஆழ்வார் திருநகரியில் அவர் அமைத்த பவிஷ்யதாசார்யருக்கு எப்பொழுதும் அவருக்குக் கைங்கர்யம் சிறப்புற நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  மணவாள மாமுனிகளும் ஆசார்யர் வாக்கை சிரமேற்கொண்டார் என்பதை நாம் அறிவோம்.  மணவாள மாமுனிகள் யதிராஜ விம்ஶதி என்ற எம்பெருமானார் மீதான இருபது ஶ்லோகங்களை பவிஷ்யதாசார்யர் சந்நிதியில் தான் சமர்ப்பித்தார்.    அத்தகைய சிறப்புப் பெற்ற திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு வாழ்க.

துய்யவுலகாரியன் தன் துணைப்பதத்தோன் வாழியே – இவ்வுலகில் உள்ள அனைவரும் உஜ்ஜீவிக்க ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச் செய்த பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யரின் திருவடி நிலைகளைப் போன்று விளங்கும் திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு வாழ்க.

தொல் குருகாபுரி அதனைத் துலக்கினான் வாழியே – குருகாபுரி என்பது ஆதிநாதன் எம்பெருமான் இருக்கும் ஆழ்வார் திருநகரி ஆகும்.  தொன்மையான திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியை புணர் நிர்மாணம் செய்த திருவாய்மொழிப் பிள்ளை பல்லாண்டு வாழ வேண்டும்.

தெய்வநகர் குந்தி தன்னில் சிறக்க வந்தோன் வாழியே – தெய்வீகமான கொந்தகை என்று தற்போது வழங்கப்படும் குந்தீ நகரம் சிறப்புறுமாறு அவ்வூரில் அவதரித்த திருவாய்மொழிப் பிள்ளை வாழ்க.

திருவாய்மொழிப்பிள்ளை திருவடிகள் வாழியே – திருவாய்மொழிப் பிள்ளையுடை ஈடு இணையற்ற திருவடிகள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று திருவாய்மொழிப் பிள்ளை வாழி திருநாமம் முடிவுறுகிறது.

மணவாள மாமுனிகள் வைபவம்

ரம்யஜாமாத்ரு முனி, வரவர முநி என்று கொண்டாடப்படக் கூடியவர் மணவாள மாமுனிகள்.  ஆழ்வார் திருநகரியில் ஐப்பசி திருமூல நக்ஷத்ரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஸ்ரீரங்கநாதரின் உற்சவ மூர்த்தியின் பெயரான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பதாகும்.  இவரது தாயாரின் ஊரான சிக்கில் கிடாரத்தில் சிறு வயதில் வாழ்ந்திருந்தார்.  தனது தகப்பனாரிடம் அடிப்படை சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டார்.  திருவாய்மொழிப் பிள்ளையின் பெருமையைக் கேள்விப்பட்டு மீண்டும் ஆழ்வார் திருநகரி வந்தார்.   திருவாய்மொழிப் பிள்ளையிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு அவரை ஆசார்யராக ஆச்ரயித்தார்.  திருவாய்மொழிப் பிள்ளை சம்பிரதாயத்தின் அர்த்தங்கள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள், வ்யாக்யானங்கள், முக்கியமாக நம்பிள்ளையின் திருவாய்மொழியின் முப்பத்தாறாயிரப்படி ஈடு (வடக்குத் திருவீதிப்பிள்ளை ஏடு படுத்தியது) வ்யாக்யானத்தை உபதேசித்தார்.

இவர் ஆதிசேஷனின் புனர் அவதாரம் என்று கருதப்படுகிறார்.  எம்பெருமானார் தமிழ் ப்ரபந்தங்களுக்கு விளக்கங்களோ,  வ்யாக்யானங்களோ அருளிச் செய்யவில்லை.  அந்தக் குறை தீரும்படி மணவாள மாமுனிகளாக மறு அவதாரம் எடுத்து தமிழ் ப்ரபந்தங்களில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு ஆழ்வார்களின் ப்ரபந்தங்களுக்குக் கைங்கர்யங்கள் செய்தார்.  திருவாய்மொழியின் முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானம் பரவச் செய்தார்.  திருவாய்மொழிப்பிள்ளை காலம் வரையில் ஆழ்வார் திருநகரியிலேயே வசித்தார்.  ஸ்ரீ வசன பூஷணத்தில் கூறப்பட்ட ஆசார்ய பக்திக்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்.  ஆசார்ய பக்தியைப் பிரதிபலிக்கும் வகையில் மணவாள மாமுனிகளே உபதேச ரத்தின மாலையில்

தன் ஆரியனுக்குத்* தான் அடிமை செய்வது* அவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள்* – அந்நேர்
அறிந்தும் அதில் ஆசை இன்றி* ஆசாரியனைப்
பிரிந்திருப்பார் ஆர்?* மனமே! பேசு

என்று அருளிச் செய்தார்.  உபதேச ரத்தின மாலையில் பூர்வாசார்யர்கள் அருளிய  அனைத்து விஷயங்களையும் எடுத்துக் கூறி அதன்படி வாழ்ந்தும் காட்டினார் எனலாம்.

திருவாய்மொழிப் பிள்ளை காலத்திற்குப் பின் திருவரங்கம் வந்தடைந்து, ஆழ்வார்கள் / ஆசார்யர்கள் அருளிச் செயல்கள், க்ரந்தங்கள் ஆகியவற்றை தேடிச் சேகரித்து ஏடுபடுத்தி பாதுகாத்தவர்.  பெரியாழ்வார் திருமொழிக்கு பெரியவாச்சான் பிள்ளை அருளிய வ்யாக்யானம் கறையானால் அரிக்கப்பட்டு சேதமாகி விட்டபடியால்,   எந்த வரி வரையில் பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் விடுபட்டதோ அது வரையில் மணவாள மாமுனிகள் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.   மேலும் ரஹஸ்ய க்ரந்தங்களுக்கு, முக்கியமாக பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த முமுக்ஷூப்படி, ஸ்ரீவசன பூஷணம், தத்வத்ரயம் ஆகியவற்றிற்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.  பிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியான அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச் செய்த ஆசார்ய ஹ்ருதயம் என்ற க்ரந்தத்திற்கும் விரிவான வ்யாக்யானத்தை மணவாள மாமுனிகள் அருளிச் செய்துள்ளார்.   மணவாள மாமுனிகளுடைய உபதேசங்களும், வ்யாக்யானங்களும் இல்லையென்றால் ஆழ்வார்களின் அருளிச் செயல்களும், பூர்வாசார்யர்களின் ரஹஸ்ய க்ரந்தங்களும் இக்காலத்தவர் அறிய முடியாமலேயே போயிருக்கும்.

சில காலத்தில் சந்யாச ஆஸ்ரமம் மேற்கொண்டு திருவரங்க எம்பெருமானின் ஆணைப்படி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாராகவே திருநாமம் கொண்டிருந்தார்.  எம்பெருமான் பிற்காலத்தில் நாம் இவரிடம் காலக்ஷேபம் கேட்கும் சிஷ்யனாக ஆகப் போகிறோம் என்பதை அறிந்தமையால் சிஷ்யனான தனக்கும் தன் ஆசார்யர் மணவாள மாமுனிகளின் திருநாமமே நிலைத்திருக்கும் என்று எண்ணி அவ்வாறு ஆணையிட்டான் போலும்.  எம்பெருமான் திருவுள்ளப்படி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார்.  மணவாள மாமுனிகளின் பெருமையைக் கேள்விப்பட்டு பலரும் வந்து இவரை ஆசார்யராக ஆஸ்ரயித்தனர்.

ஒருமுறை நம்பெருமாள் பவித்ரோத்ஸவம் பூர்த்தியான பின், மணவாள மாமுனிகளை திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தை காலக்ஷேபமாக சாதிக்கச் சொல்லி எம்பெருமான் தனது பரிவாரங்களுடன் ஒரு வருட காலம் தனது உற்சவங்களை நிறுத்தி மிக விரிவாக மணவாள மாமுனிகளின் திருவாய்மொழியின் காலக்ஷேபத்தை அனுபவித்தான்.  காலக்ஷேபத்தின் முடிவில் (ஆனி மாதம் திருமூல நக்ஷத்ரத்தன்று) சிறுபிள்ளை வடிவில் வந்து மணவாள மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனைச் சமர்ப்பித்து தன்னுடைய ஆதிசேஷ பர்யங்கத்தை மணவாள மாமுனிகளுக்கு சம்பாவனையாக சமர்ப்பித்து அவரை மிகவும் கொண்டாடினான்.  மேலும் அர்ச்சகர் மூலமாக எம்பெருமான் ஆவேசித்து மணவாள மாமுனிகளின் திருவிக்ரஹம் அனைத்து திவ்யதேசங்களிலும் ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என்றும்,  “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனை சேவாகாலம் தொடக்கத்திலும், முடிவிலும் சேவிக்க வேண்டும் என்று ஸ்ரீமுகம் அருளினான்.  எம்பெருமானே ஆசார்யனாகக் கொண்டாடும் சிறப்புப் பெற்றவர் மணவாள மாமுனிகள்

மணவாள மாமுனிகள் வாழி திருநாமம்

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே
எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே
ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே
அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே
எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே
ஏராரு மெதிராச ரெனவுதித்தான் வாழியே
முப்புரிநூல் மணிவடமும் முக்கோல்தரித்தான் வாழியே
மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே

மணவாள மாமுனிகள் வாழி திருநாமம் விளக்கவுரை

இப்புவியில் அரங்கேசர்க்கு ஈடளித்தான் வாழியே – இந்தப் பூமியில் ஸ்ரீரங்கநாதருக்கு திருவாய்மொழி ஈடு வ்யாக்யானத்தை உபதேசித்த மணவாள மாமுனிகள் வாழ்க.

எழில் திருவாய்மொழிப்பிள்ளை இணையடியோன் வாழியே – தமது ஆசார்யரான அழகு பொருந்திய திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடி நிலையாக இருக்கக் கூடிய மணவாள மாமுனிகள் பல்லாண்டு வாழ வேண்டும்.

ஐப்பசியில் திருமூலத்தவதரித்தான் வாழியே – ஐப்பசி மாதம் திருமூல நக்ஷத்ரத்தில் அவதரித்த மணவாள மாமுனிகள் பல்லாண்டு வாழ்க.

அரவரசப்பெருஞ்சோதி அனந்தனென்றும் வாழியே – அரவு என்றால் சர்ப்பம். சர்ப்பங்களுக்கு அரசனான பெரிய சோதியை உடைய ஆதிசேஷன்.  அனந்தன் என்றால் எல்லையில்லாதவன் என்பதாகும்.  எல்லையில்லாத எம்பெருமானை தன் மடியில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமை படைத்தவர் ஆதிசேஷன்.   அந்த ஆதிசேஷன் அவதாரமாகக் கருதப்படும் மணவாள மாமுனிகள் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே – அனைத்து உலகங்களிலும் ஸ்ரீசைலேசர் எனப்படும் தமது ஆசார்யனாகிய திருவாய்மொழிப் பிள்ளையின் புகழை பரவச் செய்ய வழி வகுத்த மணவாள மாமுனிகள் வாழ்க.   வேறு ஒரு அர்த்தமும் இவ்விடம் காட்டப்படுகிறது.  ஒருமுறை மணவாள மாமுனிகள் திருமலைக்கு (ஸ்ரீசைலம்) யாத்திரையாக சென்றார்.  திருமலை எம்பெருமானுக்கு சுப்ரபாதம் செய்வதற்கு ஒரு ஶ்தோத்ரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.  ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி என்பவர் வெகு காலம் திருமலையில் வாழ்ந்தவர்.  சிறந்த வேதாந்தி.  வாதத்தில் பலரையும் வென்றவர்.  மணவாள மாமுனிகளின் பெருமையைக் கேள்விப்பட்டு அவரது சிஷ்யராக ஆனார்.  மணவாள மாமுனிகள் திருமலையப்பனுக்கு சுப்ரபாதம் ஏற்படுத்தும் தமது எண்ணத்தை ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமிகளிடம் தெரிவித்தார். அவரும் ஆசார்யரின் ஆணையை சிரமேற்கொண்டு இன்றளவும் நாம் அநுஸந்திக்கும் வேங்கடேச சுப்ரபாதத்தை அருளிச் செய்தார்.  இவ்வாறு தன் சிஷ்யர் மூலமாக ஸ்ரீசைலமாகிய திருமலை வேங்கடேசப் பெருமாளுக்கு சுப்ரபாதம் அருளி அனைத்து உலகும் திருமலையின் ஏற்றமடையச் செய்த மணவாள மாமுனிகள் பல்லாண்டு வாழ்க.

ஏராரும் எதிராசர் எனவுதித்தான் வாழியே – சிறந்த பெருமையைக் கொண்ட எம்பெருமானாரின் (எதிராசர்) மறு அவதாரமாகக் கருதப்பட்ட மணவாள மாமுனிகள் வாழ்க.  இவர் எம்பெருமானாரின் புனர் அவதாரமாக இருந்த போதும் ஆழ்வார் திருநகரியில் பவிஷ்யதாசார்யார் (எம்பெருமானார்) சந்நிதியில் திருவாராதனம் செய்துள்ளார் என்பதையும் நாம் அறிந்தோம்.  “தனக்குத் தானே ஒருவர் திருவராதனம் செய்து கொள்ள முடியுமா?” என்றால், சத்ய லோகத்திலிருந்து பூமிக்கு வந்த ஸ்ரீரங்க நாதரை இக்ஷ்வாகு குலத்தில் உதித்த ஸ்ரீராம பிரான் திருவாராதனம் செய்தார் என்பதை அறிவோம்.  தனது பட்டாபிஷேகத்தின் போது ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு ப்ரணவாகார விமானத்துடன் தான் ஆராதித்து வந்த ஸ்ரீரங்கநாதரை பெருமாள் பரிசாக அளித்தார்.  ஸ்ரீவிபீஷணாழ்வான் இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இளைப்பாறும்போது எம்பெருமானைக் கீழே எழுந்தருளப்பண்ண, காவிரியால் சூழப்பட்ட திருவரங்கம் பெரியபெருமாளுக்குப் பிடித்துப் போக அங்கேயே தங்கி விட்டார் என்று சரித்திரம்.  எவ்வாறு எம்பெருமானின் அவதாரமான ராமபிரான் பெரியபெருமாளுக்குத் திருவாராதனம் செய்தாரோ அதே போன்று ஒரு ஆசார்யருக்கு எவ்வாறு திருவாராதனம் செய்வது என்பதை ராமானுஜரின் மறு அவதாரமான மணவாள மாமுனிகள் செய்து காட்டினார்.

ராமானுஜரிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் மணவாள மாமுனிகள்.  யதீந்த்ர ப்ரவணர் என்றே அழைக்கப்பட்டார்.   க்ருஷ்ண பக்திக்கு உதாரணமாக நம்மாழ்வாரைக் காட்டுவது போல் ராமானுஜ பக்திக்கு மணவாள மாமுனிகள் உதாரணமாகத் திகழ்ந்தார்.  இவர் ராமானுஜர் மீது முதலில் அருளிச் செய்தது யதிராஶ விம்ஶதி கடைசியில் அருளிச் செய்த ப்ரபந்தம் ஆர்த்தி ப்ரபந்தம்.    தொடக்கம் முதல் இறுதி வரை மணவாள மாமுனிகள் எம்பெருமானாரின் ஆசார்ய நிஷ்டை மாறாமல் இருந்தது என்பதை இதன் மூலம் அறியலாம். அவ்வாறு எதிராசரின் மறு அவதாரமாக வந்த மணவாள மாமுனிகள் வாழ்க.

முப்புரிநூல் மணிவடமும் முக்கோல் தரித்தான் வாழியே-  யக்ஞோபவீதம் எனப்படும் பூணூலும், துளசி மாலை மணிமாலைகளும் அணிந்திருக்கிறார் மணவாள மாமுனிகள்.  மூன்று தண்டுகள் கொண்ட சந்யாசிகள் வைத்திருக்கக் கூடிய த்ரிதண்டத்தையும் கையில் ஏந்தும் மணவாள மாமுனிகள் பல்லாண்டு வாழ்க.

மூதரிய மணவாளமாமுனிவன் வாழியே – மிகுந்த பழைமையான, கிடைத்தற்கரிய செல்வம் போன்று ஓராண் வழி ஆசார்யர்களில் வந்து உதித்த மணவாள மாமுனிவன் பல்லாண்டு வாழ வேண்டும் என்று மணவாள மாமுனிகளின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
அப்பிள்ளை திருவடிகளே சரணம்

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வாழிதிருநாமங்கள் – வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் பிள்ளை லோகாசார்யர் – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை

வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம்

இவர் திருவரங்கத்தில் அவதரித்தவர்.  இவரின் இயற்பெயர் ஸ்ரீக்ருஷ்ணபாதர். முற்காலத்தில் திருவரங்கத்தின் சப்த ப்ரகாரங்களில் யாரும் வசிக்க மாட்டார்கள்.  சப்த ப்ரகாரத்தைத் தாண்டி வடக்குப் புறம் இருந்த ஒரு அக்ரஹாரத்தில் இவர் வசித்ததனால் இவருக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்ற திருநாமம் ஏற்பட்டது என்று அறிகிறோம்.  இதே போன்று நடுவில் இருந்த அக்ரஹாரத்தில் வசித்தனால் மற்றொரு ஆசார்யருக்கு நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் என்ற பெயர் ஏற்பட்டது.  வடக்குத் திருவீதிப்பிள்ளை நம்பிள்ளையின் அந்தரங்க சிஷ்யர்.  ஆசார்ய பக்தியில் சிறந்து விளங்கியவர்.  எப்பொழுதும் நம்பிள்ளையின் காலக்ஷேபத்தைக் கேட்டு ஒவ்வொரு வார்த்தையும் குறிப்பெடுத்து ஏடுபடுத்தி வைப்பார்.

இவருக்கு திருமணமாகியும் இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார்.  இவர் திருத்தாயார் நம்பிள்ளையிடம் இது பற்றி முறையிட நம்பிள்ளை வடக்குத் திருவீதிப்பிள்ளை, அவரது துணைவியார் இருவரையும் அழைத்து நீங்கள் இருவரும் கூடியிருந்து நமது சம்பிரதாயம் வளர்வதற்கு நல்ல குழந்தைகளைப் பெற்றெடுங்கள் என்று உபதேசம் செய்தார்.  ஆசார்ய நியமனப்படி இவருக்கு ஓராண்டு காலத்தில் ஒரு ஆண் குழந்தை பிறக்க,  லோகாசார்யரின் (நம்பிள்ளையின் மற்றொரு பெயரான லோகாசார்யர்) அபிமானத்தால் பிறந்த பிள்ளை என்னும் பொருள் படும்படி பிள்ளை லோகாசார்யர் என்று பெயரிட்டார். இதைக் கேள்விப்பட்ட நம்பிள்ளை மிகுந்த ஆனந்தப்பட்டார்.  எம்பெருமான் ஸ்ரீரங்கநாதரும் இதைக் கேள்விப்பட்டு வடக்குத் திருவீதிப் பிள்ளையிடம் ஆசார்யர் அருளால் ஒரு குழந்தை பிறந்ததைப் போன்று நம்முடைய அருளால் உமக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்று அருள் வாக்கு மலர்ந்தார்.  அவர் சொற்படி மற்றொரு ஆண் குழந்தை பிறக்க, அது எம்பெருமான் அருளால் பிறந்தமையால் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று பெயரிட்டார்.  பிற்காலத்தில் இந்த இரண்டு குழந்தைகளும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு இரண்டு தூண்கள் போன்று திகழ்ந்தனர் என்பதை நாம் அறிவோம்.

வடக்குத்திருவீதிப் பிள்ளை நம்பிள்ளையின் திருவாய்மொழி காலக்ஷேபத்தின் சாராம்சம் முழுவதையும் ஏடுபடுத்தினார்.  அதுவே ஈடு முப்பத்தாறாயிரப்படி என்று அறியப்படுகிறது.  நம்பிள்ளைக்கு இரண்டு அபிமான சிஷ்யர்கள்.   ஒருவர் வடக்குத்திருவீதிப் பிள்ளை மற்றொருவர் பெரிய வாச்சான் பிள்ளை,  அதனால் நம்பிள்ளை “இருகண்ணர்” என்று அழைக்கப்பட்டார்.  வடக்குத்திருவீதிப் பிள்ளையின் திருநக்ஷத்ரம் ஆனி ஸ்வாதி.  பெரியாழ்வாரின் திருநக்ஷத்ரத்தில் பிறந்தவர்.    பெரியாழ்வார் எவ்வாறு ஆண்டாள் என்கிற ஒரு பெண்ணைப் பெற்று திருவரங்கம் எம்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்தாரோ அதே போன்று வடக்குத் திருவீதிப் பிள்ளையும் இரண்டு புத்ர ரத்நங்களைப் பெற்று அவர்களை எம்பெருமானுக்கு ஆட்பட்டிருக்கும்படிச் செய்தவர்.

இவருடைய இரண்டு திருக்குமாரர்களும் திருமணம் புரியாமல் நைஷ்டிக ப்ரம்ஹசாரியாக வாழ்ந்தவர்கள். நைஷ்டிக ப்ரம்ஹசாரி என்பது ப்ரம்ஹசாரியாக வாழ்வேன் என்று இளம் வயதிலேயே சங்கல்பம் செய்து கொண்டு ப்ரம்ஹசர்யத்தை மேற்கொள்வது.  நம்பிள்ளையின் திருவாய்மொழி காலக்ஷேபத்தை ஏடுபடுத்தியது மட்டுமல்லாமல் நம்பிள்ளை திருவாய் மொழிந்த வேறு சில வ்யாக்யானங்களையும் ஏடுபடுத்தியுள்ளார்

வடக்குத் திருவீதிப் பிள்ளை வாழி திருநாமம்

ஆனிதனிற் சோதிநன்னாள் அவதரித்தான் வாழியே
ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே
தானுகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே
சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே
நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே
நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே
ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே
எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே

வடக்குத் திருவீதிப் பிள்ளை வாழி திருநாமம் விளக்கவுரை

ஆனிதனிற் சோதிநன்னாள் அவதரித்தான் வாழியே – ஆனி மாதம் சிறந்த நக்ஷத்ரமான ஸ்வாதி நக்ஷத்ரத்தில் அவதரித்த வடக்குத் திருவீதிப் பிள்ளை வாழ்க.

ஆழ்வார்கள் கலைப்பொருளை ஆய்ந்துரைப்போன் வாழியே – ஆழ்வார்கள் அருளிச் செய்த ப்ரபந்தங்களின் உட்கருத்துக்களை ஆராய்ந்து நமக்கு உரைத்தவர் வாழ்க.   நம்பிள்ளையின் காலக்ஷேபங்களை செவிமடுத்து ஏடுபடுத்திக் கொடுத்தவர்.  அவ்வாறு திவ்யப்ரபந்தங்களைக் கற்றுத் தேர்ந்து நமக்குப் பகர்ந்தவரான வடக்குத் திருவீதிப் பிள்ளை பல்லாண்டு காலம் வாழ்க.

தானுகந்த நம்பிள்ளை தாள் தொழுவோன் வாழியே – தனது ஆசார்யரான நம்பிள்ளையிடத்து மிகுந்த பக்தி கொண்டவர் வடக்குத் திருவீதிப் பிள்ளை.  தன் மனதிற்குப் பிடித்த ஆசார்யரான நம்பிள்ளையின் திருவடிகளை தொழும் வடக்குத் திருவீதிப்பிள்ளை பல்லாண்டு வாழ்க.

சடகோபன் தமிழ்க்கீடு சாற்றினான் வாழியே – சடகோபன் என்றால் நம்மாழ்வார்.  நம்மாழ்வார் அருளிச்செய்த தமிழ் வேதமான திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய காலக்ஷேபத்தைக் கேட்டு ஏடுபடுத்தி ஈடு முப்பத்தாறாயிரப் படியாக அருளிய வடக்குத் திருவீதிப் பிள்ளை வாழ்க.  நம்பிள்ளை ஒரு முறை வடக்குத் திருவீதிப் பிள்ளையின் திருமாளிகைக்கு எழுந்தருளினார்.  அக்கால வழக்கப்படி ஆசார்யரை (நம்பிள்ளையை) தமது மாளிகையின் கோயிலாழ்வார் எம்பெருமானுக்கு திருவாராதனம் செய்யுமாறு வேண்டினார்.   அதன்படி நம்பிள்ளையும் திருவாராதனமும் மங்களாசாஸனமும் செய்த பின் அங்கு இருந்த ஒரு ஓலைச்சுவடி கட்டினைக் கண்டு ப்ரமித்தார்.  ஏனென்றால் நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை ஒரு வார்த்தை விடாமல் சிறப்பாக வடக்குத் திருவீதிப் பிள்ளை ஏடுபடுத்தியிருந்தார்.  பகல் முழுவதும் நம் காலக்ஷேபம் கேட்பது, கைங்கர்யம் செய்வது என்றிருக்கும் வடக்குத் திருவீதிப்பிள்ளை எப்போது இதை ஏடுபடுத்தி இருக்க முடியும்.  இரவு வேளைகளில் தான் செய்திருக்க வேண்டும் என்று எண்ணி நம்பிள்ளை ஆச்சர்யப்பட்டார்.

ஆனாலும் நம்பிள்ளைக்கு ஒரு சிறு வருத்தம் ஏற்பட்டது.  நம்மிடம் ஒரு வார்த்தை கேட்காமல் இவ்வாறு ஏடுபடுத்தியிருக்கிறீரே என்று வருத்தத்துடன் இந்த ஈடு வ்யாக்யானம் இப்போது வெளிப்படுத்த வேண்டாம்.  பிற்காலத்தில் இதை வெளியிட ஒரு சிறந்த அதிகாரி வருவார் அப்போது வெளியிடலாம் என்று கூறி நம்பிள்ளை அதை வாங்கிச் சென்று விட்டார்.  பின்னர் அதை தமது மற்றொரு சிஷ்யரான ஈயுண்ணி மாதவப் பெருமாளிடம் கொடுத்து இதை தகுதியான அதிகாரிக்கு கொடுக்கவும் என்று பணித்தார்.  ஈயுண்ணி மாதவப் பெருமாள் தம்முடைய குமாரரான ஈயுண்ணி பத்மநாபப் பெருமாளுக்கு அதைக் கொடுக்க,  ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள் அதை நாலூர் பிள்ளைக்கு அளித்தார்.  நாலூர் பிள்ளை அந்த ஈடு வ்யாக்யானத்தை நாலூராச்சான் பிள்ளைக்கு கொடுத்தார்.  நாலூராச்சான் பிள்ளை அதை திருவாய்மொழிப் பிள்ளைக்குக் கொடுக்க அவர் அதை தனது சிஷ்யரான மணவாள மாமுனிகளுக்கு அளித்தார்.  மணவாள மாமுனிகள் இந்த ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தை  எம்பெருமான் உகப்பிற்காக காலக்ஷேபம் செய்தார்.  அவ்வாறு திருவாய்மொழிக்கு ஈடு வ்யாக்யானம் அருளிய வடக்குத் திருவீதிப் பிள்ளை பல்லாண்டு வாழ்க.

நானிலத்தில் பாடியத்தை நடத்தினான் வாழியே – குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு விதமான நிலங்களைக் கொண்ட இப்பூவுலகில் எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீபாஷ்யத்தை (ப்ரஹ்மஸூத்ரத்தின் வ்யாக்யானம்) அனைவருக்கும் புரியும்படி விளக்கினார் வடக்குத் திருவீதிப்பிள்ளை.  நம் பூர்வாசார்யர்கள் அனைவரும் தமிழில் புலமை இருப்பது போல ஸம்ஸ்க்ருதத்திலும் புலமை பெற்றிருந்தனர் என்பதை அறியலாம்.   ஆசார்ய பீடத்தில் இருப்பவர்கள் அனைத்து விஷயங்களையும் கற்றுத் தேர்ந்து தகுதியுடையவராக இருத்தல் வேண்டும். ஸம்ஸ்க்ருதத்தில் அமைந்த ஸ்ரீபாஷ்யத்தின் பொருளை இவ்வுலகத்தவருக்கு எடுத்துரைத்த சிறப்புப் பெற்ற வடக்குத் திருவீதிப் பிள்ளை வாழ்க.

நல்லவுலகாரியனை நமக்களித்தான் வாழியே – மிகச் சிறந்த,  பரம காருணிகரான பிள்ளை லோகாசார்யர் என்ற திருக்குமாரரை நமக்கு அளித்தவர் வடக்குத் திருவீதிப் பிள்ளை.  தமது ஆசார்யரான நம்பிள்ளையின் திருநாமமான லோகாசார்யர் என்ற பெயரை தன் பிள்ளைக்குச் சூட்டியவர் என்று அறிந்தோம்.  அவ்வாறு பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய இரண்டு புத்ர ரத்நங்களை நமக்கு அளித்த வடக்குத் திருவீதிப்பிள்ளை பல்லாண்டு காலம் வாழ்க.

ஈனமற எமையாளும் இறைவனார் வாழியே – நம்முடைய தாழ்ச்சி, கேடுகள் அனைத்தும் மறையும் வண்ணம் நமக்கு இறைவனாக இருக்கக் கூடிய வடக்குத் திருவீதிப் பிள்ளை வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

எங்கள் வடவீதிப்பிள்ளை இணையடிகள் வாழியே – எம்முடைய வடக்குத் திருவீதிப் பிள்ளையினுடைய பொருந்திய இரண்டு திருவடிகளும் பல்லாண்டு காலம் வாழ்க என்று வடக்குத் திருவீதிப் பிள்ளையின் வாழி திருநாமம் முடிவடைகிறது.

பிள்ளை லோகாசார்யர் வைபவம்

பிள்ளை லோகாசார்யர் பரம காருணிகர் என்று பூர்வாசார்யர்களால் கொண்டாடப்படுபவர்.  இவருடைய அவதார சரித்திரம் நாம் ஏற்கனவே அறிந்ததே.  இவர் திருவரங்கத்தில் வடக்குத் திருவீதிப் பிள்ளையின் மூத்த குமாரராக அவதரித்தவர்.  வடக்குத் திருவீதிப்பிள்ளை தமது ஆசார்யரான நம்பிள்ளையின் திருநாமமான லோகாசார்யர் என்ற திருநாமத்தையே தன் குமாரருக்குச் சூட்டினார்.  வடக்குத் திருவீதிப்பிள்ளை எம்பெருமானாரின் எழுபத்து நான்கு சிம்ஹாசனாதிபதிகளில் ஒருவரான முடும்பை நம்பி என்ற வம்சத்தில் வந்தவர்.  அதனால் தான் மணவாள மாமுநிகளும் தமது உபதேச ரத்ந மாலையில் பிள்ளை லோகாசார்யரைக் குறிப்பிடும்போது “முடும்பை அண்ணல் உலகாரியன்” என்று கூறுகிறார். இவருடைய திருநக்ஷத்ரம் ஐப்பசி திருவோணம்.  இவர் நமது பெரியவர்களால் காட்டப்பட்ட ரஹஸ்ய அர்த்தங்களைப் பதினெட்டு ரஹஸ்ய க்ரந்தங்களில் அருளிச் செய்துள்ளார்.  முதன் முதலில் ரஹஸ்ய அர்த்தங்களை விரிவாக ஏடுபடுத்தியவர் பிள்ளை லோகாசார்யர்.  அதனால்தான் பிள்ளை லோகாசார்யர் பரம காருணிகர் என்று அழைக்கப்பட்டார்.

முற்காலத்தில் இந்த ரஹஸ்ய அர்த்தங்கள் அனைத்தையும் ஒரு ஆசார்யர் தமது சிஷ்யர்களுக்கு மட்டுமே உபதேசிப்பர்.   இவ்வாறு ரஹஸ்ய அர்த்தங்கள் ஆசார்ய சிஷ்யர்கள் பரம்பரையினருக்கு மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டன.  பிள்ளை லோகாசார்யர் ரஹஸ்ய த்ரயம் விஷயமான க்ரந்தங்கள், சம்பிரதாய அர்த்தங்களுக்கான ரஹஸ்ய க்ரந்தங்கள், தத்வத்ரயத்திற்கான ரஹஸ்ய க்ரந்தங்கள் என்று தனித்தனியாகப் பிரித்து ஏடுபடுத்தி அனைவரும் உஜ்ஜீவனம் அடைய வழி செய்த பரம கருணை படைத்தவர்.  ப்ரஹ்மசர்ய வ்ரதம் கடைப்பிடித்து, உலக விஷயங்களில் பற்றற்று நூறாண்டுக்கு மேலே வாழ்ந்தவர்.    பல க்ரந்தங்களை அருளிச் செய்து ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் வளர தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவர் வாழ்ந்த காலத்தில் முகலாயர்கள் திருவரங்கத்தின் மீது படையெடுத்தனர்.  எம்பெருமான் அர்ச்சாவதாரத்தில் தன் அர்ச்சா சமாதியைக் குலைத்துக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்ள முயற்சிக்க மாட்டான்.  சில சந்தர்ப்பங்களில் மட்டும் தன் அர்ச்சா சமாதியைக்  (பேசாதிருக்கும் நிலையை) குலைத்துக் கொண்டு தன்னுடைய சிறந்த அடியவர்களிடம் மட்டும் மிகக் குறைவான வார்த்தைகளை எம்பெருமான் அருளியுள்ளான்.    அவன் பரமசக்தனாக இருந்த போதும் அர்ச்சாவதாரத்தில் அசக்தனாகக் காட்டிக் கொள்ளும் பெருமை படைத்தவன் எம்பெருமான்.  அவ்வாறு இருக்கும் போது முகலாயர் படையெடுப்பில் பெரிய பெருமாளுக்கு முன் ஒரு கல் திரையை ஏற்படுத்தி அடியவர்கள் நம்பெருமாளை எழுந்தருளச் செய்து கொண்டு சென்றனர்.  பிள்ளை லோகாசார்யர் தலைமையில் நம்பெருமாள் புறப்பட்டுச் சென்று பல திவ்ய தேசங்களைக் கடந்து மீண்டும் திருவரங்கம் வந்து சேர ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் ஆனது.  பிள்ளை லோகாசார்யர் வயோதிகராக ஆனபோதும், மதுரையில் ஆனைமலைக்கு பின்பகுதியில் உள்ள ஜோதிஷ்குடியில் (இன்று கொடிக்குளம் என்று அழைக்கப்படுகிறது)  எம்பெருமானை அவ்விடம் வரை கொண்டு சென்று மிகுந்த பொறுப்புடன் பாதுகாத்து வந்தார்.  வயோதிகம் காரணமாக அவ்விடத்திலேயே பிள்ளை லோகாசார்யர் திருநாட்டிற்கு எழுந்தருளினார்.  அவ்வாறு எம்பெருமானுக்காக வாழ்ந்தவர்.

மேலும் இவர் அருளிய ஸ்ரீவசந பூஷணம் என்ற க்ரந்தத்தின் முன்னுரையில் மணவாள மாமுனிகள் பிள்ளை லோகாசார்யரை தேவப் பெருமாளின் (காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள்) அவதாரம் என்றே காெண்டாடுகிறார்.  இவருடைய தனியனில் சம்ஸாரம் என்ற பாம்பின் வாயில் கடிபட்டவர்களுக்கு அருமருந்தாக இருக்கக் கூடியவர் என்று காட்டப்பட்டுள்ளது.

பிள்ளை லோகாசார்யர் வாழி திருநாமம்

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே
ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே
முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே
மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே
நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே
நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே
உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே
உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே

பிள்ளை லோகாசார்யர் வாழி திருநாமம் விளக்கவுரை

அத்திகிரி அருளாளர் அனுமதியோன் வாழியே – அத்திகிரி என்பது காஞ்சீபுரம்.  காஞ்சீபுரத்திற்கு அருகில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தின் அர்ச்சகருக்கு காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கனவில் வந்து சில உபதேசங்களைச் செய்தார்.  பெருமாள் உபதேசங்களைப் பாதியில் நிறுத்திவிட கலக்கமுற்ற அர்ச்சகர் எம்பெருமானை வேண்ட அவர் “நீர் திருவரங்கம் வாரும். அங்கு உமக்கு மீதம் உள்ள உபதேசங்களை அருளுகிறேன்” என்று கூறி மறைந்தார்.  மணப்பாக்கம் நம்பியும் திருவரங்கம் வந்து காட்டழகிய சிங்கர் சந்நிதியில் ஒரு ஆசார்யர் காலக்ஷேபம் செய்வதைக் கண்டார்.    உடனே அந்த உபதேசங்களை உற்றுக் கேட்கலானார்.  தேவப் பெருமாள் இவருக்குச் செய்த உபதேசத்தின் தொடர்ச்சியை அந்த ஆசார்யர் தமது சிஷ்யர்களுக்கு உரைக்கக் கேட்ட மணப்பாக்கம் நம்பி மிகுந்த ஆச்சர்யமடைந்தார்.  அந்தக் காலக்ஷேபத்தைச் செய்து கொண்டிருந்தவர் பிள்ளை லோகாசார்யர் என்பதை அறிந்தார்.  மணப்பாக்கம் நம்பி  காஞ்சீபுரத்தில் தேவப்பெருமாள் கூறிய உபதேசத்தின் தொடர்ச்சி திருவரங்கத்தில் உள்ள ஆசார்யருக்கு எவ்வாறு தெரிந்தது என்ற ப்ரமிப்புடன் கோஷ்டிக்குள் சென்று தெண்டனிட்டு “அவரோ நீர்?” என்று பிள்ளை லோகாசார்யரை நோக்கிக் கேட்டார்.  பிள்ளை லோகாசார்யர் மேலே கூறுங்கள் என்னும் பொருள் படும்படி “ஆவது என்ன?” என்றுக் கேட்டார்.  இதன் மூலம் பிள்ளை லோகாசார்யர் தேவப்பெருமாளின் பரம க்ருபையினால் அவதாரித்தவராகக் கருதப்பட்டார் என்று அறிகிறோம்.   தேவப்பெருமாளின் அநுக்ரஹம் பெற்ற பிள்ளை லோகாசார்யர் பல்லாண்டு வாழ்க.

ஐப்பசியில் திருவோணத்தவதரித்தான் வாழியே – பொய்கை ஆழ்வார் அவரித்த ஐப்பசி மாதம் திருவோண நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் பிள்ளை லோகாசார்யர்,  அவர்  பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பட்டுள்ளது.

முத்திநெறி மறைத்தமிழால் மொழிந்தருள்வோன் வாழியே – முக்திக்கு வழி காட்டும் வேதத்திற்கு ஈடாக இவர் தமிழில் அருளிச்செய்துள்ள ரஹஸ்ய க்ரந்தங்கள் கருதப்படுகிறது.    அவ்வாறு ஏற்றம் மிகுந்த ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச் செய்த பிள்ளை லோகாசார்யர் வாழ்க.

மூதரிய மணவாளன் முன்புதித்தான் வாழியே – அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்கு தமையனாராக அவதரித்தவர் பிள்ளை லோகாசார்யர்.  அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் நைஷ்டிக ப்ரஹ்மாசாரியாக இருந்து தமது தமையனார் போல ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.  இவர் அருளிய ஆசார்ய ஹ்ருதயம் என்ற அற்புதமான க்ரந்தத்தில், நம்மாழ்வாரின் திருவுள்ளத்தை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.    கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை, அமலனாதி பிரான் போன்ற ப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் பிள்ளை லோகாசார்யருக்கு சிறிது காலம் முன்பாகவே திருநாட்டிற்கு எழுந்தருளிவிட்டார்.  அப்போது இவரது சரம திருமேனியை பிள்ளை லோகாசார்யர் மடியில் இட்டுக்கொண்டு “கீதையின் சரம ஸ்லோகத்தின் அர்த்தத்தை நன்றாக விளக்கக் கூடியவர் யார் இருக்கிறார்? இவ்வாறு பரமபதத்திற்குச் சென்று விட்டீரே” என்று வருந்தினாராம்.  பெரிய ஞானியான பிள்ளை லோகாசார்யரே கலங்கும் அளவிற்கு மிகுந்த மேன்மை படைத்தவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.  பொதுவாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒருவர் பரமபதித்தால் வருத்தப்படக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள்.  ஆனாலும் பரமபதித்தவர் அடையும் தேசமான பரமபதத்தின் மேன்மையும் அங்கு அவருக்குக் கிடைக்கும் வரவேற்பையும் நினைத்து மகிழ்ந்தாலும், இழந்த தேசமானது கலங்கும் என்றும் கூறுவார்கள்.

இவ்விடத்தில் வேறொரு சம்பவம் காட்டப்படுகிறது.  கூரத்தாழ்வான் திருநாட்டிற்கு எழுந்தருளின சமயம் அனைத்தும் அறிந்த எம்பெருமானாரே கதறினார் என்று பார்க்கிறாேம்.  சிறந்த பக்தர்களை இழந்தால் எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் கலக்கமடைவர்.  அவ்வாறு பெருமை மிகுந்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாருக்குத் தமையனாக அவதரித்த பிள்ளை லோகாசார்யர் பல்லாண்டு வாழ்க.

நித்தியம் நம்பிள்ளைபதம் நெஞ்சில் வைப்போன் வாழியே – தினந்தோறும் தனது தந்தையின் ஆசார்யரான நம்பிள்ளையின் திருவடிகளை திருவுள்ளத்தில் வைத்து வணங்கக் கூடிய பிள்ளை லோகாசார்யர் வாழ்க.  நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை ஏடுபடுத்தியவர் வடக்குத் திருவீதிப் பிள்ளை என்பது அறிந்தோம்.  அவரது திருக்குமாரர்களான பிள்ளை லோகாசார்யரும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் தமது தந்தையார் மூலமாக நம்பிள்ளையின் காலக்ஷேப அர்த்தங்களை அறிந்து வளர்ந்தவர்கள்.  நம்பிள்ளையின் காலக்ஷேபத்தில் எடுத்துரைத்த விஷயங்களை பிள்ளை லோகாசார்யரும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் தமது க்ரந்தங்களில் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.  அத்தகைய சிறப்புப் பெற்ற நம்பிள்ளையை மனதில் வணங்கும் பிள்ளை லோகாசார்யர் வாழ்க என்று இவ்வரியில் காட்டப் படுகிறது.

நீள் வசன பூடணத்தில் நியமித்தான் வாழியே –  நம்பிள்ளையின் காலக்ஷேப வாயிலாகக் கேட்ட கருத்துக்களை பிள்ளை லோகாசார்யர் ஸ்ரீவசன பூஷணத்தில் விவரித்துள்ளார்.  “திவ்யஶாஸ்த்ரம்” என்றே ஸ்ரீவசன பூஷணம் ப்ரசித்தியாக அறியப்படுகிறது. இவர் அருளிய பதினெட்டு க்ரந்தங்களில் முமுக்ஷூப்படி, தத்வத்ரயம் மற்றும் ஸ்ரீவசன பூஷணம் சிறந்த க்ரந்தங்களாகும்.  இவைகளை காலக்ஷேபமாகக் கேட்கும் வகை செய்துள்ளனர் நம் பூர்வாசார்யர்கள்.

பூர்வாசார்யர்களின் ஸ்ரீஸுக்திகளைக் கோர்த்து இந்த ஸ்ரீவசன பூஷணம் என்ற க்ரந்தத்தை அருளிச் செய்துள்ளார் பிள்ளை லோகாசார்யர்.  ஆசார்யரின் அபிமானத்தினால்தான் ஒருவன் மோக்ஷம் கிட்டப் பெறுவான் என்பதை வலியுறுத்தும் வண்ணம் “ஆசார்ய அபிமானமே உத்தாரகம்” என்று இந்த ஸ்ரீவசனபூஷணத்தில் காட்டப்பட்டுள்ளது.  ஸ்ரீவைஷ்ணவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று ஸ்ரீவசன பூஷணம் மூலமாக நியமித்த பிள்ளை லோகாசார்யர் பல்லாண்டு வாழ வேண்டும்.

உத்தமமாம் முடும்பை நகர் உதித்தவள்ளல் வாழியே –   இவ்விடத்தில் நகர் என்பதைக் குலம் என்று கொள்ள வேண்டும்.  எம்பெருமானாரின் சிஷ்யரான முடும்பை நம்பி வம்சத்தில் அவதரித்தவர் பிள்ளை லோகாசார்யர் என்பதை அறிவோம்.  அவ்வாறு சிறந்த குலத்தில் பிறந்து இப்பூவுலக சம்சாரிகள் உஜ்ஜீவனம் அடைய தமது க்ரந்தங்களின் மூலம் வழி காட்டிய பிள்ளை லோகாசார்யர் பல்லாண்டு வாழ்க.

உலகாரியன் பதங்கள் ஊழிதொறும் வாழியே – உலகாரியன் என்றால் பிள்ளை லோகாசார்யர்.  அவருடைய திருவடிகள் காலம் உள்ள அளவும் வாழ வேண்டும் என்று பிள்ளை லோகாசார்யரின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வாழிதிருநாமங்கள் – நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< எம்பார் மற்றும் பராசர பட்டர்

நஞ்சீயர் வைபவம்

பராசர பட்டருக்குப் பின் ஓராண் வழி ஆசார்யப் பரம்பரையில் வந்தவர்.  இவர் வேதாந்தி என்றும் அறியப் படுகிறார்.  இவர் திருநாராயணபுரத்தில் அவதரத்தவர்.  இவருடைய இயற்பெயர் ஸ்ரீமாதவன்.  ஸ்ரீமாதவாசார்யர் என்று ப்ரசித்தமாக விளங்கியவர்.  அத்வைத  சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர்.  எம்பெருமானார் இவரைத் திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  ஆனால் எம்பெருமானார் காலத்தில் அது நடக்கவில்லை.    சிறிது காலத்திற்குப்  பின் கூரத்தாழ்வானின் திருக்குமாரரன பராசர பட்டர் (ஓராண் வழி பரம்பரையில் எம்பெருமானார், எம்பார், அதன் பின் பராசர பட்டர்) திருநாராயணபுரத்திற்குச் சென்று திருநெடுந்தாண்டக அர்த்தத்தை மேற்கோள் காட்டி ஸ்ரீமாதவாசார்யாரை வாதத்தில் வென்று அவரை திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குள் கொண்டு வந்தார்.  ஸ்ரீமாதவாசார்யர் கலங்கிய கண்களுடன் “ஸ்ரீரங்கராஜப் பெருமாளின் புத்திரரான நீர் காடு, மலை தாண்டி எம்மைக் கருணையுடன் ஆட்கொள்ள வந்தீரே” என்று உள்ளம் நெகிழ்ந்து, பராசர பட்டரின் சிஷ்யராக ஆனார்.  பராசர பட்டரும் ஆதுரத்துடன் அவரை ஏற்றுக் கொண்டார்.

அதன் பின் ஸ்ரீமாதவாசார்யர் சிறிது காலம் திருநாராயணபுரத்தில் வாழ்ந்து வந்தார்.  பின்னர் அவருக்கு சம்சார வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் போகவே தனது செல்வத்தை மூன்று பங்காகப் பிரித்து, இரு பங்கை இரு மனைவியருக்கும் கொடுத்து விட்டு, மீதமுள்ள ஒரு பங்கை எடுத்துக் கொண்டு சந்நியாசம் பெற்று ஆசார்யனுக்குக் (பராசர பட்டருக்கு) கைங்கர்யம் செய்யும் நோக்குடன் திருவரங்கம் வந்தடைந்தார்.   அவரது சந்நியாச கோலத்தைக் கண்ட பராசர பட்டர் நெகிழ்வுடன் “வாரும் நம் ஜீயரே” என்று வரவேற்று ஆரத்தழுவிக் கொண்டார்.  அன்று முதல் ஸ்ரீமாதவாசார்யருக்கு நஞ்சீயர் என்னும் பெயர் நிலைபெற்றது.  பராசர பட்டரிடம் ஆழ்வாரின் பாசுரங்களை மிகக் குறுகிய காலத்தில் கற்றுத் தேர்ந்து பராசர பட்டர் வியக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்றார்.

பராசர பட்டர் நம்பெருமாள் முன்பு திருமஞ்சன காலங்களில் எம்பெருமானின் வைபவங்களை எடுத்துக் கூறி கட்டியம் சேவிப்பது வழக்கம்.   கட்டியம் சேவிப்பது பெரும்பாலும் ஆழ்வார்களின் பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டே அமையும்.  நஞ்சீயரைப் பாசுரங்கள் எடுத்துக் கொடுக்கச் சொல்லி பட்டர் அதைக் கட்டியம் சேவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  ஒரு முறை அவ்வாறு நஞ்சீயர் கட்டியத்திற்குப் பாசுரம் சேவிக்கும்போது திருவாய்மொழியின் ஏழாம் பத்தில் இரண்டாம் பதிகத்தில் (கங்குலும் பகலும்) ஒன்பதாவது பாசுரத்தில் “என் திருமகள் சேர் மார்வனே என்னும் என்னுடைய ஆவியே என்னும்” என்ற வரிகளைச் சேவிக்கும்போது  இரண்டு வரிகளாகப் பிரிக்காமல் ஒரே வரியாகச் சேவித்தார்.  நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் எம்பெருமானிடம் “என்னுடைய திருமகள் சேரும் திருமார்பை உடையவராதலால் தேவரீர் என்னுடைய ஆவியாக இருக்கிறீர்” என்று கூறுவதுதான் இவ்வரிகளுக்கு உண்மைப் பொருளாகும்.  அதை நஞ்சீயர் சேவித்த விதம் பராசர பட்டரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி அவர் மூர்ச்சையானார்.  பின் நினைவு தெளிந்து நஞ்சீயரை வெகுவாகப் பாராட்டினார்.  அவ்வாறு பட்டருக்கும் நஞ்சீயருக்கும் மிகுந்த நெருக்கம் இருந்ததை அறிகிறோம்.

நஞ்சீயர்,  பராசர பட்டரிடம் ஆழ்வார் பாசுரங்களின் அர்த்தங்களை முன்னிட்டுக் கேள்விகள் கேட்டு அவற்றிற்கான விளக்கங்களை வாங்கி நமது சம்பிரதாய வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்ததை அறியலாம்.  இவர் பங்குனி உத்தரத்தன்று திருநாராயணபுரத்தில் அவதரித்தார்.  இவர் பல வ்யாக்யானங்களை அருளிச் செய்துள்ளார்.   திருவாய்மொழிக்கு முதல் வ்யாக்யானம் எம்பெருமானார் ஆணைப்படி திருக்குருகைப்பிரான் பிள்ளான் ஆறாயிரப்படி அருளிச் செய்தார்.  அதன் பின் பராசர பட்டரின் ஆணையின் படி திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற சிறந்த வ்யாக்யானத்தை நஞ்சீயர் அருளிச் செய்தார்.  மேலும் திருப்பள்ளியெழுச்சி, கண்ணிநுண் சிறுத்தாம்பு போன்ற ப்ரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.

நஞ்சீயரின் வாழி திருநாமம்

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே
சீமாதவனென்னும் செல்வனார் வாழியே
பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே
பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே
ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே
ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே
எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே
எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே

தெண்டிரை சூழ் திருவரங்கம் செழிக்க வந்தோன் வாழியே – தெளிந்த அலைகளையுடைய காவிரியால் சூழப்பட்ட திருவரங்கம் வளர்ச்சி அடையும் வண்ணம் இப்பூவுலகில் அவதரித்த நஞ்சீயர் வாழ்க.

சீமாதவனென்னும் செல்வனார் வாழியே – ஸ்ரீமாதவன் எனும் இயற்பெயரைக் கொண்ட நிறைந்த கைங்கர்யச் செல்வத்தை உடைய நஞ்சீயர் பல்லாண்டு வாழ்க.  இவர் தமது ஆசார்யருக்கு செய்த சிறந்த கைங்கர்யத்தை பறைசாற்றும் வண்ணம் ஒரு சம்பவம் நடந்தது.  ஒரு முறை பராசர பட்டர் பல்லக்கில் வந்து கொண்டிருந்த போது நடந்து வந்து கொண்டிருந்த சந்நியாசியான இவர் அப்பல்லக்குக்குத் தோள் கொடுக்க சென்றாராம்.  உடன் இருந்தவர்கள் “பராசர பட்டர் உமக்கு ஆசார்யரானாலும் க்ருஹஸ்தர் ஆனமையால் சந்நியாசியான நீர் தோள் கொடுப்பது தகாது” என்று உரைத்தனர்.  அதற்கு நஞ்சீயர் “எனது ஆசார்யருக்கு கைங்கர்யம் செய்வதற்கு த்ரிதண்டம் ஒரு தடையாக இருந்தால் அது தேவையில்லை” என்று கூறினாராம்.  அவ்வாறு ஆசார்யருக்குக் கைங்கர்யம் புரியும் செல்வத்தை உடைய நஞ்சீயர் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பண்டை மறைத் தமிழ்ப் பொருளைப் பகர வந்தோன் வாழியே – மிகவும் பழமை வாய்ந்ததான வேதத்திற்கு நிகரான தமிழில் அமைந்த நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களின் பொருளை அருளிச் செய்த நஞ்சீயர் வாழ்க.  பல வ்யாக்யானங்கள், விளக்கங்கள் அனைத்தும் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு இவர் அருளிச் செய்துள்ளார். பராசர பட்டருக்கும் நஞ்சீயருக்கும் இடையே நடந்த ஸம்வாதங்கள் போன்று நஞ்சீயருக்கும் நம்பிள்ளைக்கும் இடையே பல ஸம்வாதங்கள் நடந்துள்ளன.  அவை அனைத்தும் நஞ்சீயர் அருளிச் செய்த விளக்கங்களில் காட்டப்பட்டுள்ளது.  தமிழ் வேதமான திவ்யப்ரபந்தங்களுக்கு வ்யாக்யானங்கள் அருளிச் செய்த நஞ்சீயர் வாழ்க.

பங்குனியில் உத்தரநாள் பாருதித்தான் வாழியே – பங்குனி மாதம் உத்தர நக்ஷத்ரத்தில் இப்பாருலகில் உதித்த நஞ்சீயர் பல்லாண்டு வாழ்க.

ஒண்டொடியாள் கலவிதன்னை யொழித்திட்டான் வாழியே – அழகிய வளைந்த கைகளை உடைய தமது மனைவிமார்களைத் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட நஞ்சீயர் பல்லாண்டு காலம் வாழ்க.

ஒன்பதினாயிரப்பொருளை யோதுமவன் வாழியே – திருவாய்மொழிக்கு பராசர பட்டர் ஆணையின்படி  ஒன்பதினாயிரப்படி வ்யாக்யானம் அருளியவர் நஞ்சீயர்.  முதல் வ்யாக்யானம் எம்பெருமானார் ஆணைப்படி பிள்ளான் அருளிச்செய்தது ஆறாயிரப்படி.   இரண்டாவது வ்யாக்யானம் நஞ்சீயர் அருளிய ஒன்பதினாயிரப்படி.  மூன்றாவது வ்யாக்யானம் நம்பிள்ளை ஆணைப்படி பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த இருபத்து நாலாயிரப்படி.  பின் நம்பிள்ளை சிஷ்யரான வடக்குத் திருவீதிப்பிள்ளை நம்பிள்ளையின் காலக்ஷேபத்தை ஏடுபடுத்தியிருந்தது ஈடு முப்பத்தாறாயிரப்படி.  இறுதியாக வாதிகேசரி மணவாள ஜீயர் அருளிய பன்னீராயிரப்படி.  இவ்வாறு திருவாய்மொழிக்கு ஐந்து வ்யாக்யானங்கள் அமைந்துள்ளன.  நஞ்சீயரின் தனிச்சிறப்பு என்னவென்றால் ஏறக்குறைய நூறு முறை திருவாய்மொழி காலக்ஷேபம் செய்திருக்கிறார் என்று கூறுவர்.  இது எப்படி அறிய வருகின்றதென்றால் ஒருவர் நம்பிள்ளையிடம் உமது ஆசார்யர் “இந்தப் பாசுரத்திற்கு என்ன விளக்கம் கொடுத்துள்ளார்” என்று கேட்க அதற்கு நம்பிள்ளை “எந்தக் காலத்தில் அவர் அருளியதைக் கேட்கிறீர்கள்” என்று கேட்டதாக அறிகிறோம்.  அவ்வாறு திருவாய்மொழியின் அர்த்தங்களை எப்பொழுதும் அநுஸந்தாநம் செய்யும் நஞ்சீயர் பல்லாண்டு வாழ்க.

எண்டிசையும் சீர் பட்டர் இணையடியோன் வாழியே – எட்டு திக்குகளிலும் பெருமையைப் பெற்றவரான தமது ஆசார்யரான பராசர பட்டர் திருவடிகளை போற்றும் நஞ்சீயர் பல்லாண்டு வாழ்க.  பொதுவாக அனைத்து ஆசார்யர்களுக்கும் அவர்களின் சிஷ்யர்கள் தான் திருவடி நிலைகளாக இருப்பர்.  அவ்வாறு பராசர பட்டரின் திருவடிகளாகக் கருதப்படும் நஞ்சீயர் வாழ்க.

எழில்பெருகும் நஞ்சீயர் இனிதூழி வாழியே – அழகு பொருந்திய நஞ்சீயர் இனிதாக இந்தக் காலம் உள்ள அளவும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று நஞ்சீயரின் வாழி திருநாமம் முடிவுறுகிறது.

நம்பிள்ளை வைபவம்

நம்பிள்ளையின் இயற்பெயர் வரதராஜன்.  இவர் திருவரங்கம் அருகில் இருக்கக்கூடிய நம்பூர் என்ற கிராமத்தில் அவதரித்தவர்.  அதனால் நம்பூர் வரதராஜன் என்று வழங்கப்படுகிறார்.  கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  திருமங்கையாழ்வாரும் கார்த்திகை  மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  திருமங்கையாழ்வாரே மீண்டும் நம்பிள்ளையாக வந்து அவதரித்தாரோ என்று சொல்லும்படி ஏற்றம் படைத்தவர்.  எனவே இவர் கலிகன்றி தாசர் என்று அழைக்கப்படுகிறார்.  நஞ்சீயர் கோஷ்டியில் காலக்ஷேபத்தைக் கேட்டு அநுபவித்தவர்.  நஞ்சீயரின் ப்ரதான சிஷ்யராவார்.

நஞ்சீயர் தமது ஒன்பதாயிரப்படி வ்யாக்யானத்தை கையெழுத்து நன்றாக உள்ளவர்களை வைத்து ஏடுபடுத்த வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.  தம்முடைய கோஷ்டியில் நன்றாக எழுதக் கூடியவர்கள் யார் என்று விசாரிக்க அனைவரும் நம்பூர் வரதராஜன் நன்றாக எழுதுவார் என்று நம்பிள்ளையை சுட்டிக் காட்டினர்.  நஞ்சீயரும் ஒன்பதினாயிரப்படி ஓலைச் சுவடிகளை நம்பிள்ளையிடம் கொடுத்து ஏடு படுத்தி வருமாறு பணித்தார்.  நம்பூர் வரதராஜரான நம்பிள்ளையும் அந்த ஓலைச் சுவடிகளை எடுத்துக் கொண்டு தனது ஊரான நம்பூருக்கு காவிரி ஆற்றைக் கடந்து செல்லலானார்.  அப்போது காவிரியில் வெள்ளம் வரவே அவர் ஓலைச் சுவடிகளை மூட்டையாக கட்டித் தலையில் வைத்துக் கொண்டு காவிரியைக் கடக்கலானார்.  ஆயினும் வெள்ளம் ஓலைச்சுவடியை அடித்துக் கொண்டு செல்ல அவர் கலக்கமடைந்தார்.  இருப்பினும் தமது ஊருக்குச் சென்று தமது ஆசார்யரான நஞ்சீயரை மனதில் தியானித்துக் கொண்டு நஞ்சீயரிடம் காலக்ஷேபம் கேட்டதை வைத்துக் கொண்டு எழுதலானார்.  பராசர பட்டர் போன்று தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத்தேர்ந்த ஞானி நம்பிள்ளை.  தாம் எழுதியதை திருவரங்கம் வந்து நஞ்சீயரிடம் சமர்ப்பிக்கிறார்.   நஞ்சீயர் அதைக் கண்டவுடன் வியக்கிறார்.  ஏனென்றால் ஓலைச் சுவடியில் இருந்த அனைத்து வ்யாக்யானங்களும் அழகான வார்த்தைகளைக் கொண்டு எழுதப் பட்டிருந்தது.  நஞ்சீயர் “யானைக்கு கோலம் செய்தது போலே” என்று கூறினார்.  அதாவது யானையே அழகான வடிவுடையது அதற்கு மேலும் அலங்காரம் செய்தால் எப்படி இருக்குமோ தம்முடைய வ்யாக்யானங்களும் மேலும் அழகு படுத்தப்பட்டிருக்கிறது என்னும் பொருள் படும்படி நஞ்சீயர் அவ்வாறு கூறினார்.  அதைப்பற்றி நம்பூர் வரதராஜனிடம் வினவ அவர் நடந்ததைக் கூறினார்.  அதைக் கேட்டு பெருமிதம் கொண்ட நஞ்சீயர் “வாரும் நம்பிள்ளையே” என்று பேரானந்தத்துடன் அவரை அணைத்துக் கொண்டார்.

“நம்பிள்ளை கோஷ்டியோ நம்பெருமாள் புறப்பாடோ” என்று அனைவரும் வியக்கும்படி நம்பெருமாள் புறப்பாட்டிற்கு எவ்வளவு கூட்டம் வருமோ அவ்வளவு கூட்டம் நம்பிள்ளையின் காலக்ஷேபத்திற்கும் வரும் என்று அறிகிறோம்.  நம்பிள்ளையின் காலம் “நல்லடிக் காலம்” என்று வழங்கப்படுகிறது.  எந்த ஒரு இடையூறும் இன்றி பகவத் விஷயங்கள் நன்றாக நடைபெற்ற காலம் நம்பிள்ளை வாழ்ந்த காலம் என்று அறியப்படுகிறது.  ஒரு முறை பெரிய பெருமாள் தன்னுடைய ஆதிசேஷ பர்யங்கத்தை விட்டு நம்பிள்ளை காலக்ஷேபத்தைக் கேட்க எழுந்து வர, விளக்குப் பிடிக்கும் கைங்கர்யபரர் “தேவரீர் எழுந்து வரக்கூடாது.  அர்ச்சாவதாரத்தில் நீர் அப்படியே தான் இருக்க வேண்டும்” என்று கூறி அவரை சயனிக்க வைத்தார் என்று சரித்திரத்தின் மூலம் அறிகிறோம்.

பிற்காலத்தில் லோகாசார்யர் என்ற திருநாமத்தையும் இவர் பெற்றார்.  கந்தாடைத் தோழப்பர் நம்பிள்ளையிடம் அபசாரப்பட்டு பின் மனம் திருந்தி இவரை “என்ன உலகாரியனோ” என்று வியந்து லோகாசார்யர் என்ற பட்டத்தை இவருக்கு அளித்தார். மேலும் நடுவில் திருவீதிப் பிள்ளை என்பவரும் இவரிடம் அபசாரப்பட்டு பின்னர் மனம் வருந்தி இவரிடம் சிஷ்யர் ஆனார் என்று அறிய வருகிறோம்.  அவ்வாறு பல ஆசார்யர்களும் நம்பிள்ளையிடம் அன்பு கொண்டு அடி பணிந்திருந்தனர் என்பதை அறியலாம்.

நம்பிள்ளை வாழி திருநாமம்

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே

தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே – தேன் ததும்பி வழியும் சிவந்த தாமரை மலர்களைப் போன்ற நம்பிள்ளையின் திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ்க.

திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே – நம்பிள்ளை இடையில் அழகாக உடுத்துக் கொண்டிருக்கிற பட்டாடை அழகு வாழ்க.

தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே –  துளசி மாலையும்  தாமரை மாலையும் பூணூலும் நம்பிள்ளை திருமார்பில் அணிந்து கொண்டிருக்கிறார்.  அவை அனைத்தும் பல்லாண்டு வாழ்க.

தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே – தாமரையைப் போன்ற இரண்டு கைகளும், பரந்த தோள்களும் பல்லாண்டு வாழ்க.

பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே – செறிவான பாசுரங்களைக் கொண்ட தமிழ் வேதமான திருவாய்மொழியை தமது பவளத்தை ஒத்த வாயினால் அநுசந்தானம் செய்து கொண்டிருப்பார் நம்பிள்ளை.    வடக்குத் திருவீதிப் பிள்ளை அருளிச் செய்த திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தில் நம்பிள்ளையின்  காலக்ஷேபத்தின் அனைத்து விஷயங்களும் ஐயமற விளக்கப்பட்டிருக்கும்.  மற்ற வ்யாக்யானங்களில் எடுத்துக் காட்டியுள்ள அனைத்து அர்த்தங்களும் இந்த ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தில் பொதிந்திருக்கும்.   அவ்வாறு இந்த திருவாய்மொழியின் வ்யாக்யானத்தை அநுஸந்தானம் செய்து கொண்டிருக்கும் நம்பிள்ளையின் பவளம் போன்ற அதரங்கள் வாழ்க.

பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே – பாடியம் என்பது எம்பெருமானார் அருளிச் செய்த ஸ்ரீ பாஷ்யம்.    அந்த ஸ்ரீபாஷ்யத்தின் பொருள் எடுத்து உரைக்கும் சிறந்த நாவும் வாழ வேண்டும்.  நம்பிள்ளை சமஸ்கிருதத்திலும் தமிழிலும் சிறந்த விற்பன்னர்.  தமது காலக்ஷேபங்களில் சமஸ்கிருத க்ரந்தங்கள், சமஸ்கிருத இலக்கணம், எம்பெருமானாரின் ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், வேதம், இதிகாச புராணங்கள், ஆகமங்கள், பகவத் கீதை, ஸ்ம்ருதி, திருக்குறள், அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.  அவ்வாறு காலக்ஷேபச் சக்ரவர்த்தியான சிறந்த நாவுடைய நம்பிள்ளை வாழ்க.

நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே – திருநாமம் திகழ்கின்ற நெற்றி (நுதல்), பிறை சந்திரனைப் போன்ற முகமும், திருமுடியும் பல்லாண்டு வாழ்க.

நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே – நம்பிள்ளையின் வடிவான அழகு நாள் தோறும் பல்லாண்டு வாழ்க.

ஆசாரியன் * சிச்சன் ஆருயிரைப் பேணுமவன் *
தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை* – ஆசையுடன்
நோக்குமவன் என்னும்* நுண்ணறிவைக் கேட்டு வைத்தும்*
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்

என்று மணவாள மாமுநிகள் உபதேச ரத்நமாலையில் கூறியது போல் ஆசார்யனானவர் சிஷ்யனின் ஆத்மாவைப் பார்க்க வேண்டும்.  சிஷ்யனானவன் ஆசார்யருடைய தேகம் நன்றாக இருக்க வேண்டிய அனைத்து தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும்.  சிஷ்யர்கள்  ஆசார்யனுடைய திருமேனியை மிகவும் நேசிக்க வேண்டும்.  இதே விஷயம் ஸ்ரீவசனபூஷணத்திலும் எடுத்துக் காட்டப் படுகிறது.   ஆசார்யர் என்பவர் சிஷ்யனை உலக விஷயங்களில் இருந்து விடுவித்து எம்பெருமானிடம் சேர்க்கும் உபாயத்தைக் காட்டுபவர். சிஷ்யனானவன் ஆசார்யன் ஆத்ம விஷயங்களில் தலையிடக் கூடாது.  ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்வதுதான் சிஷ்யனுக்கு ப்ரதானக் கடமையாகும்.  மணவாள மாமுனிகளின்  மேற்சொன்ன பாசுரப்படி நம்பிள்ளையின் தேஹ ஆரோக்யத்தை முழுவதுமாக கவனித்துக் கொண்டவர் அவரது சிஷ்யர்களில் ஒருவரான பின்பழகராம் பெருமாள் ஜீயர்.  அவரது சிறப்பும் உபதேச ரத்நமாலையில் மணவாள மாமுனிகள் கீழ்க் கூறப்பட்டுள்ள பாசுரத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.

பின்பழகராம் பெருமாள் சீயர்* பெருந்திவத்தில்
அன்பதுவும் அற்று மிக்க ஆசையினால்* – நம்பிள்ளைக்கான அடிமைகள் செய்* அந்நிலையை நன்னெஞ்சே!*
ஊனமற எப்பொழுதும் ஓர்

பின்பழகராம் பெருமாள் ஜீயர் போன்று நாமும் நமது ஆசார்யனுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டும்.  பின்பழகராம் பெருமாள் ஜீயர் போஷித்த நம்பிள்ளையின் வடிவழகு பல்லாண்டு வாழ வேண்டும் என்று நம்பிள்ளையின் வாழி திருநாமம் முற்றுப்பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வாழிதிருநாமங்கள் – எம்பார் மற்றும் பராசர பட்டர் – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< பெரிய நம்பி மற்றும் எம்பெருமானார்

எம்பார் வைபவம்

எம்பார் என்பவர் எம்பெருமானார் ராமாநுஜருக்கு சிறிய தாயார் குமாரர்.   எம்பெருமானாரின் தாயாரும் எம்பாரின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள்.  எம்பாரின் இயற்பெயர் கோவிந்தப் பெருமாள்.  இவர் அவதார ஸ்தலம் மழலை மங்கலம் என்று சொல்லப்படும் மதுர மங்கலம் ஆகும்.  ஸ்ரீபெரும்பூதூருக்கு அருகில் இருக்கக் கூடிய க்ஷேத்ரம்.  இவருடைய திருநக்ஷத்ரம் தை மாதம் புனர்பூசம் ஆகும்.  இவர் அருளிச் செய்த க்ரந்தங்கள் விஜ்ஞான ஸ்துதி மற்றும் எம்பெருமானார் வடிவழகு பாசுரம் (பற்பமெனத் திகழ் பைங்கழலும் என்று தொடங்கும் பாசுரம்). இவர் எம்பெருமானாருடைய திருவடி நிழலாகவே கருதப் படுகிறார்.  ராமானுஜ பதச்சாயா என்று இவர் தனியனில் கூறப்பட்டுள்ளது.  பகவத் விஷயத்தில் இருக்கும் ஆழமான கருத்துக்களை ரசித்து அநுபவித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கும் தன்மை பெற்றவர்.  உலக விஷயங்களில்  பரம விரக்தர்.  சிறிதளவும் ஈடுபாடு இல்லாதவர்.  இவர் எம்பெருமானாரைக் காப்பாற்றியவர் என்ற பெருமை கொண்டவர்.

சிறிய வயதில் எம்பெருமானார் இளையாழ்வாராகவும் எம்பார் கோவிந்தப் பெருமாளாகவும் யாதவப்ரகாசரிடம் கல்வி பயிலும் காலத்தில் யாதவப்ரகாசரும்  அவரது சிஷ்யர்களும் இளையாழ்வாரின் பெருமை பெருகுவதைக் கண்டு அவர் மீது பொறாமை கொண்டு அவரைக் காசி யாத்திரை கூட்டிக் கொண்டு போய் கங்கையில் மூழ்கடித்துக் கொன்று விடத் திட்டம் தீட்டினர்.   அவ்வாறு யாத்திரை சென்று கொண்டிருக்கும் போது கோவிந்தப் பெருமாள் இளையாழ்வாரிடம் “தேவரீர் இங்கு இருக்க வேண்டாம். இவ்விடத்தை விட்டுச் சென்று விடுங்கள்.  இவர்கள் உம்மைக் கொல்ல நினைக்கின்றனர்” என்று கூறினார்.  இளையாழ்வாரும்  காஞ்சீபுரம் திரும்ப நினைக்கிறார்.  தேவப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும் அவருக்குத் துணையாக இருந்து வழிகாட்டினர்.  கோவிந்தப் பெருமாள் யாதவப்ரகாசர் கோஷ்டியுடன் காசிக்குச் சென்று கங்கையில் நீராடும்போது பகவத் சங்கல்பத்தின் படி அவர் கையில் ஒரு லிங்கம் கிடைத்தது.  அதைப் பார்த்த யாதவப்ரகாசர் “உமக்கு ருத்ரனின் அனுக்ரஹம் உள்ளது.   எனவே நீர் ருத்ர பக்தனாக மாற வேண்டும்” என்று கூற கோவிந்தப் பெருமாளும் மனம் கலங்கிப் போய் காளஹஸ்தியை அடைந்து அங்கு சிறந்த ருத்ர பக்தனாக சில காலம் வாழ்ந்து வந்தார்.  காலம் உருண்டோடியது.

இளையாழ்வார் ராமானுஜராக சந்நியாசம் பெற்று திருவரங்கத்தில் வாழ்ந்த காலத்தில், தமக்கு பகவத் கைங்கர்யத்தில் கோவிந்தப்பெருமாள் உறுதுணையாக இருப்பார் என்று எண்ணி தனது தாய்மாமனான பெரிய திருமலை நம்பியிடம் சிவ பக்தரான கோவிந்தப் பெருமாளை திருத்திப் பணி கொண்டு வருமாறு பணித்தார்.  பெரிய திருமலை நம்பி காளஹஸ்திக்குச் சென்று கோவிந்தப் பெருமாளுக்கு உபதேசங்கள் செய்து அவரை மீண்டும் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் கொண்டு வந்தார்.  பெரிய திருமலை நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து ஆசார்யனாக இருந்து அவரை மீட்டு வந்தார்.  கோவிந்தப் பெருமாளுக்கு பெரிய திருமலை நம்பியிடம் மிகுந்த நன்றியுணர்வு ஏற்பட்டது.    அதனால் அவர் பெரிய திருமலை நம்பிக்குக் கைங்கர்யம் செய்வதை பெரும் பேறாக எண்ணினார்.

அந்த சமயத்தில் ராமானுஜர் திருமலை திருப்பதி வந்து பெரிய திருமலை நம்பிகளிடம் ஒரு வருட காலம் ராமாயண காலக்ஷேபம் கேட்டு வந்தார்.  காலக்ஷேபம் முடிந்து ராமானுஜர் திருவரங்கம் செல்ல ஆயத்தமான போது தன்னுடனிருந்த கோவிந்தப் பெருமாளை பெரிய திருமலை நம்பி ராமானுஜருடன் திருவரங்கம் சென்று பகவத் கைங்கர்யத்தில் ஈடுபடுமாறு பணித்தார்.  கோவிந்தப் பெருமாளுக்கு ஆசார்யரான பெரிய திருமலை நம்பியைப் பிரிய மனமின்றி ஆசார்யர் ஆணையை மீற மனமில்லாமல் ராமானுஜருடன் சென்றார்.  செல்லும் வழியில் ஆசார்யரைப் பிரிந்து அவர் வாடியிருப்பதைக் கண்ட ராமானுஜர் “தேவரீர் இன்னும் சிறிது காலம் திருப்பதியில் பெரிய திருமலை நம்பியுடன் இருந்து வாரும்” என்று திருப்பி அனுப்பினார்.    பெரிய திருமலை நம்பி “உம்மை ராமானுஜருக்குக் கொடுத்து விட்டோம்.  இனி ஏற்க இயலாது” என்று கூற கோவிந்தப் பெருமாள் ஆசார்யரின் திருவுள்ளத்தைப் புரிந்து கொண்டு திருவரங்கம் வந்து ராமானுஜருக்கு மிகுந்த உகப்புடன் கைங்கர்யங்கள் செய்து வந்தார் என்று அறிகிறோம்.

திருவரங்கம் வந்த பின் ராமானுஜர் அவருக்குத் திருக்கல்யாணம் செய்து வைத்தார்.  ஆனால் அவருக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை.   ராமானுஜர் அவரை “நீர் உமது மனைவியுடன் ஏகாந்தத்தில் இரும்” என்று அனுப்பினார்.  அன்று இரவு கோவிந்தப் பெருமாள் மனைவியுடன் தனிமையில் இருந்த போது காணும் இடமெல்லாம் எம்பெருமான் வடிவழகைக் கண்டார்.  அந்தக் காட்சியை மனைவியிடம் கூறினார்.  மறுநாள் காலை ராமானுஜரிடமும் அதைத் தெரிவித்து தமக்கு இல்லற வாழ்க்கையில் பற்று இல்லை என்று கூறினார்.  ராமானுஜரும் அதை ஏற்றுக் கொண்டு அவருக்கு சந்நியாச ஆச்ரமத்தை அருளிச் செய்தார்.   அவருக்கு எம்பார் என்ற திருநாமமும் வழங்கப்பட்டது.  எம்பார் குரு பரம்பரையில் ராமானுஜருக்கு அடுத்த ஆசார்யராக இருந்து சம்பிரதாயம் வளரப் பெரிதும் உதவினார் எனலாம்.

எம்பார் வாழி திருநாமம்

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே

பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன்   வாழியே

மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே

மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே

தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே

திருமலைநம்பிக் கடிமை செய்யுமவன் வாழியே

பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே

பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே

பூவளரும் திருமகளார் பொலிவுற்றோன் வாழியே – தாமரை மலரில் இருக்கக்கூடிய மஹாலக்ஷ்மித் தாயார்.  தாயாரின் அருளால் கைங்கர்யச் செல்வத்தில் சிறந்து விளங்கிய எம்பார் பல்லாண்டு வாழ்க.

பொய்கை முதல் பதின்மர் கலைப் பொருளுரைப்போன்   வாழியே – பொய்கையாழ்வார் முதலான பத்து ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிர திவ்யப்ரபந்தங்களின் உட்கருத்துக்களை எடுத்துரைத்த எம்பார் வாழ்க.  இவ்விடத்தில் ஒரு சுவையான சம்பவம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. திருவரங்கத்தில் அரையர் சேவை நடக்கும்போது எம்பெருமானாருடன் கோஷ்டியார் அனைவரும் அதனை ரசிப்பர்.  அரையர் சேவை என்பது ஆழ்வார்களின் பாசுரங்களை அரையர் அபிநயம் பிடித்துக் காட்டுவார்.  எம்பார் அரையர்கள் காட்டும் அபிநயத்திற்கும் மேலாகச் சிறந்த அபிநயத்தை அவர்களுக்குச் சைகை முறையில் எடுத்துக்காட்ட அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டு அடுத்தமுறை எம்பார் காட்டிய அபிநயத்தையே பிடித்துக் காட்டினர்.  இவ்வாறு அவர்கள் மறுமுறை அபிநயம் மாற்றிச் செய்யும் போது எம்பெருமானார் “இவை எம்பாரின் அபிநயங்களோ” என்று ரசித்துக் கேட்பாராம்.  மேலும் ஆழ்வாரின் பாசுரங்களில் ஏற்படும் சந்தேகங்களை ஐயமறத் தீர்த்து வைப்பாராம்.  உதாரணமாக பெரியாழ்வார் திருமொழி ஐந்தாம் பத்து நான்காம் திருமொழி பலப் பாசுரத்தில் “சாயைப் போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே” வரும் வரிகளுக்கு எம்பார் எம்பெருமானாரின் திருவடிகளை சிரமேற்கொண்டு ஒரு சிறப்பான அர்த்தத்தை இவ்வரிகளுக்கு வெளியிடுகிறார்.  எம்பெருமானை விட்டுப் பிரியாமல் இருக்கக் கூடியவர்கள் நன்றாகப் பாடுவார்கள் என்று கூறினார்.  இவ்வாறு ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு அழகான அர்த்தங்களைக் கூற வல்ல எம்பார் வாழ்க.

மாவளரும் பூதூரான் மலர் பதத்தோன் வாழியே –  மா என்றால் விலங்குகள்.  அக்காலத்தில் ஸ்ரீபெரும்பூதூர் எழில் மிகுந்த சோலைகளால் சூழப் பெற்று மிருகங்கள் இருந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.  அவ்வாறு மிருகங்கள் வாழும் சோலைகள் நிறைந்த ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த ராமானுஜரின் மலர் போன்ற திருவடிகளை கருத்தில் கொண்ட எம்பார் பல்லாண்டு வாழ்க.

மகரத்தில் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே – மகர மாதம் என்பது தை மாதத்தைக் குறிக்கும்.  தை மாதம் புனர்பூசத்தில் இப்பூவுலகில் அவதரித்த எம்பார் வாழ்க.

தேவுமெப்பொருளும் படைக்கத் திருந்தினான் வாழியே  – காளஹஸ்தியில் கோவிந்தப் பெருமாள் சிவ பக்தராக இருந்த காலத்தில் பெரிய திருமலை நம்பி நம்மாழ்வாரின் திருவாய்மொழி இரண்டாம் பத்து, இரண்டாம் பதிகத்தில் உள்ள நான்காவது பாசுரமான

“தேவும் எப்பொருளும் படைக்க

பூவில் நான்முகனைப்  படைத்த

தேவன் எம்பெருமானுக்கல்லால்

பூவும் பூசனையும் தகுமே?”

என்ற பாசுரத்தை எடுத்துக் காட்டி பூக்களும் பூஜைகளும் தன் உந்தித் தாமரையில் பிரம்மனைப் படைத்த ஸ்ரீமந் நாராயணனுக்கல்லால் யாருக்கும் தகுதியில்லை என உபதேசம் செய்த பின் தான் கோவிந்தப் பெருமாள் மனம் திருந்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு வந்தார்.  அவ்வாறு நம்மாழ்வாரின் “தேவும் எப்பொருளும் படைக்க” என்ற பாசுரத்தின் மூலம் மனம் திருந்திய எம்பார் பல்லாண்டு வாழ வேண்டும்.

திருமலைநம்பிக்கடிமை செய்யுமவன் வாழியே – பெரிய திருமலை நம்பிக்கு அயர்வின்றி அனைத்துக் கைங்கர்யங்களையும் செய்தவர் கோவிந்தப் பெருமாள்.  ஒரு சமயம், பெரிய திருமலை நம்பிக்குப் படுக்கையைச் சரி செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்த கோவிந்தப் பெருமாள் அதில் படுத்து உருண்டு பின் திருப்தியுடன் இறங்கி வருவதை எம்பெருமானார் கண்ணுற்றார்.  ஆசார்யன் படுக்கையில் படுத்து சிஷ்யன் எழுந்து வருவதைப் பார்த்த எம்பெருமானார் கோவிந்தப் பெருமாளை அழைத்து “நீர் இவ்வாறு செய்யலாமா?” என்று வினவ கோவிந்தப் பெருமாள் “நான் படுக்கையில் படுத்துப் பார்த்தால் தான் ஒரு துரும்பும் கூட ஆசார்யாருக்கு உறுத்தா வண்ணம் சரி செய்ய முடியும்” என்று கூறினார்.  அவருடைய ஆசார்ய பக்தியைக் கண்ட எம்பெருமானார் வியப்படைந்தார் என்று அறிகிறோம்.  அவ்வாறு பெரிய திருமலை நம்பிக்கு அனைத்து கைங்கர்யங்களையும் சிறப்பாகச் செய்த எம்பார் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பாவையர்கள் கலவியிருள் பகலென்றான் வாழியே –  இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இன்றி சந்நியாசம் பூண்டவர் கோவிந்தப் பெருமாள்.    தன் மனைவியுடன் ஏகாந்தமாக இருக்கும் காலத்தில் எம்பெருமானைப் பிரகாசமாக அனைத்து இடங்களிலும் கண்டு இல்லற வாழ்க்கையைத் துறந்தவர்.  பெண்களுடன் கலப்பதை இருளாக நினைத்து உயர்ந்த நிலையை அடைந்த எம்பார் வாழ்க.

பட்டர்தொழும் எம்பார் பொற்பதமிரண்டும் வாழியே – கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பராசர பட்டருக்கு எம்பார் ஆசார்யன் ஆவார்.  கூரத்தாழ்வானின் இரட்டையாகப் பிறந்த திருக்குமாரர்களுக்குப் புண்ணியாகவசனம் நடக்கும் காலத்தில் எம்பெருமானார் அங்கு சென்று எம்பாரிடம் அக்குழந்தைகளைக் கொண்டு வருமாறு கூற, எம்பாரே அக்குழந்தைகள் காதில் அக்குழந்தைகளுக்கு காப்பாக இருக்கட்டும் என்று த்வய மந்திரத்தை ஓதுகிறார்.  அதை உணர்ந்த எம்பெருமானார் “தேவரீரே இக்குழந்தைகளுக்கு ஆசார்யராக இரும்” என்று கூறுகிறார்.  அதனால் கூரத்தாழ்வானின் திருக்குமாரர்களான வேத வ்யாஸ பட்டரும், பராசர பட்டரும் எம்பாரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டனர்.  அவ்வாறு பராசர பட்டர் தொழும் எம்பாரின் பொன் போன்ற திருவடிகள் இரண்டும் பல்லாண்டு வாழ்க என்று எம்பாரின் வாழி திருநாமம் நிறைவுறுகிறது.

பராசர பட்டர் வைபவம்

பராசர பட்டர் கூரத்தாழ்வானின் இரு குமாரர்களில் ஒருவர்.    பராசர பட்டர் பிறந்தவுடன் எம்பெருமானார் “இக்குமாரரை பெரிய பெருமாள், பெரிய பிராட்டியாருக்கு ஸ்வீகாரம் கொடுத்து விடவும்.  இவர் அவர்களின் புத்திரனாக வளரட்டும்” என்று கூற கூரத்தாழ்வானும் அவ்வாறே செய்ய இவர் பெரிய பெருமாள் பெரிய பிராட்டியின் புத்திரனாகவே வளர்ந்தார்.  ஸ்ரீரங்கநாத புத்திரன் என்று அறியப்பட்டார்.  திருவரங்கத்தில் வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  சிறு வயதிலேயே மிகுந்த ஞானத்துடன் திகழ்ந்தவர்.  இவர் சிறு வயதில் திருவரங்க வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது இவரது திருத்தகப்பனாரான கூரத்தாழ்வான் “பாடசாலை சென்று சந்தை கற்றுக் கொள்ளவில்லையா?” என்று வினவ இவர் “நேற்று நடந்த பாடத்தையே இன்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள்” என்று தெளிவாக பதிலிறுத்தார்.  அதற்குக் கூரத்தாழ்வான் “நாலைந்து முறையாவது பாடங்களைக் கற்றுக் கொண்டால்தானே மனப்பாடம் ஆகும்” என பட்டர் “எனக்கு நேற்று சொல்லிக் கொடுத்ததே மனப்பாடம் ஆகிவிட்டது” என்று பாடங்களை சொல்லிக் காண்பித்தாராம்.  அவ்வாறு ஒரு முறை ஒரு விஷயம் கேட்டால் க்ரஹிக்கும் சக்தியைப் பெற்றிருந்தார்.  சாஸ்திரங்களில் மிகுந்த ஞானம் உடையவராக இருந்தார்.  ஸ்ரீரங்கராஜ ஸ்தவம், அஷ்டஶ்லோகீ, ஸ்ரீகுணரத்ந கோஶம், பகவத் குண தர்ப்பணம் போன்ற க்ரந்தங்களை அருளிச் செய்துள்ளார்.  அஷ்டஶ்லோகீ என்பது திருமந்த்ரம், த்வயம், சரம ஶ்லோகம் போன்றவற்றிற்கு சப்தங்களைச் சொல்லாமல் ஶ்லோக வடிவில் வெளியிட்டுள்ளார்.  அதாவது இந்த உயர்ந்த மந்த்ரத்தின் வார்த்தைகளைக் குறிப்பிடாமல் எட்டு ஶ்லோகங்களில் அழகாக அருளியுள்ளார்.  ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் என்பது பல சாஸ்திரங்களின் அர்த்தங்களைக் கொண்டாதான ஸ்தோத்ர க்ரந்தம்.  ஸ்ரீகுணரத்ந கோஶம் பெரிய பிராட்டியின் வைபவத்தைக் காட்டக் கூடியது.  பகவத் குண தர்ப்பணம் மூலம் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு அற்புதமான வ்யாக்யானம் அருளிச் செய்துள்ளார்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு பல அர்த்தங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.  இவருக்குப் பின் ஓராண் வழியில் வந்த பல ஆசார்யர்களும் இவர் அருளிய மேற்கோள்களைச் சொல்லி “பட்டர் நிர்வாஹம்” என்று காட்டியுள்ளனர்.  ஸ்ரீரங்க நாதரையும், ஸ்ரீரங்க நாயகித் தாயாரையும் தந்தை தாயாகவே பாவித்தவர்.  பிராட்டியே இவரைத் தூளியில் இட்டு வளர்த்தார் என்பதை இவர் தமது க்ரந்தங்களில் காட்டியுள்ளார்.  அத்தகைய ஞானமும் பெருமையும் பெற்றவர் பராசர பட்டர்.  ஸ்ரீரங்கநாதருக்குப் புரோகிதராக இருக்கும் கைங்கர்யத்தைச் செய்தவர்.  அதனால் ஸ்ரீரங்க புரோகிதர் என்றே அறியப்பட்டார்.

பராசர பட்டர் வாழி திருநாமம்

தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே

திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே

அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே

அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே

மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே

வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே

பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே

பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே

பராசர பட்டர் வாழி திருநாமம் விளக்கவுரை

தென்னரங்கர் மைந்தன் எனச் சிறக்கவந்தோன் வாழியே – தெற்குத் திசையில் உள்ள திருவரங்க எம்பெருமான் ஸ்ரீரங்கநாதரின் மைந்தன் (புத்திரன்) எனச் சிறப்புப் பெற்ற பராசர பட்டர் வாழ்க.

திருநெடுந்தாண்டகப் பொருளைச் செப்புமவன் வாழியே – திருநெடுந்தாண்டகம் என்பது திருமங்கையாழ்வார் அருளிச் செய்த கடைசிப் ப்ரபந்தம்.  இந்த அற்புதமான ப்ரபந்தத்தில் சாஸ்திரங்களின் சாராம்சம் முழுவதையும் திருமங்கையாழ்வார் காட்டியுள்ளார்.  பெரியவாச்சான் பிள்ளை அருளிய திருநெடுந்தாண்டக வ்யாக்யானத்தில் முதல் மூன்று பாசுரங்களிலேயே அனைத்து சாஸ்திரங்களின் அர்த்தங்களும் காட்டப்பட்டு விட்டது என்று அருளிச் செய்துள்ளார்.  இந்தப் ப்ரபந்தத்தில் மிக்க தேர்ச்சி பெற்றிருந்தார் பராசர பட்டர்.  திருநாராயணபுரத்தில் இருந்த மாதவாசார்யர் என்பவரை (பிற்காலத்தில் நஞ்சீயர், வேதாந்தி என்று அறியப்பட்டவர்) திருநெடுந்தாண்டகத்தை முன் வைத்து வாதத்தில் வென்றவர் பராசர பட்டர்.  அந்த வாதத்தில் வென்று அத்யயன உற்சவத்திற்கு முதல் நாள் திருவரங்கம் வருகிறார்.  பெரிய பெருமாளிடம் மேலை நாட்டில் வேதாந்தியை வெற்றி பெற்ற விவரத்தைக் கூற எம்பெருமான் உகந்து “நம் முன்னே திருநெடுந்தாண்டகத்தை விண்ணப்பம் செய்யவும்” என்று ஆணையிட அதன்படி பட்டர் நம்பெருமாள் முன்பு திருநெடுந்தாண்டகத்தைச் சேவித்தார் என்று அறிகிறோம்.  இவ்வழக்கம் இன்றளவும் அத்யயன உற்சவத்திற்கு முதல்நாள் திருவரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் அரையர் ஸ்வாமிகளால் சேவிக்கப்படுகிறது.  அவ்வாறு சிறப்புப் பெற்ற திருநெடுந்தாண்டகத்தின் கருத்துக்களை கற்றுத் தேர்ந்த பராசர பட்டர் பல்லாண்டு வாழ்க.

அன்னவயல் பூதூரன் அடி பணிந்தோன் வாழியே – முற்காலத்தில் வயல்களும் வாவிகளும் ஸ்ரீபெரும்பூதூரில் இருந்திருக்கின்றன.  வயல்களால் சூழப்பெற்ற ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த ராமானுஜரின் திருவடிகளை பணிந்த பட்டர் வாழ்க. எம்பெருமானார் வாழ்ந்த காலத்தில் சிறு வயதில் இருந்த பட்டரை நம்பெருமாள் முன்பு நிறுத்தி சில ஶ்லோகங்களைச் சேவிக்கச் செய்தார்.  பட்டர் சிறப்பாக சேவித்தவுடன் உகப்படைந்த எம்பெருமானார் தம்முடைய கோஷ்டியினரிடம் “எனக்கு நிகரானவர் இந்த பராசர பட்டர், நான் வேறு அவர் வேறல்ல” என்று கூறினாராம்.  எனவே தான் எம்பெருமானாரின் சிஷ்யர்களான அனந்தாழ்வான், கிடாம்பியாச்சான் போன்றவர்கள் பராசர பட்டரை விட வயதில் மூத்தவர்களாக இருந்த போதும் எம்பெருமானாருக்குக் கொடுக்கும் சிறப்பான மரியாதையையும், மதிப்பையும் பராசர பட்டருக்கும் அளித்தனர் என்று அறிகிறோம்.  அவ்வாறு தன் மீது அன்பு கொண்ட எம்பெருமானாரின் அடி பணிந்த பராசர பட்டர் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

அனவரதம் எம்பாருக்கு ஆட்செய்வோன் வாழியே –  பராசர பட்டரின் ஆசார்யர் எம்பார் என்று அறிந்தோம்.  எம்பாரிடமும், தனது திருத்தகப்பனாரான கூரத்தாழ்வானிடமும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உடையவர் பராசர பட்டர்.  இருவரையுமே ஆசார்யராக நினைத்திருந்தனர் பராசர பட்டரும், அவரது சகோதரரான வேத வ்யாஸ பட்டரும்.  ஏனென்றால் திருமந்த்ர அர்த்தத்தை இருவருக்கும் எடுத்துரைத்தவர் கூரத்தாழ்வான்.  அவ்வாறு வாழ்நாள் முழுதும் எம்பாரின் அடிபணிந்த பராசர பட்டர் வாழ்க.

மன்னுதிருக்கூரனார் வளமுரைப்போன் வாழியே – தமது தகப்பானாரிடம் மிகுந்த ப்ரதிபத்தி கொண்டிருந்தனர் பராசர பட்டரும் அவரது சகோதரர் வேதவ்யாஸ பட்டரும்.  ஒரு முறை கூரத்தாழ்வான் தமது சிஷ்யர்களுக்கு திருவாய்மொழி ஒன்றாம் பத்து, இரண்டாம் திருவாய்மொழியின் பத்தாவது பாசுரமான “எண் பெருக்கந் நலத்து ஒண் பொருளீறில வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே” என்று திருமந்த்ரத்தின் அர்த்தமாக விளங்கும் பாசுரத்தை வ்யாக்யானம் செய்யும்போது பராசர பட்டரும், வேதவ்யாஸ பட்டரும் அந்தக் கோஷ்டியில் இருக்கக் கண்டு கூரத்தாழ்வான் “நீங்கள் உமது ஆசார்யரான எம்பாரிடம் சென்று இந்தப் பாசுரங்களின் அர்த்தங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றார்.  அத்தகைய நேர்மை படைத்தவர்கள் நமது சம்பிரதாய ஆசார்யர்கள்.  அதைக் கேட்ட  பராசர பட்டரும், வேதவ்யாஸ பட்டரும் அந்தக் கோஷ்டியை விட்டு வெளியேறினர்.  அவர்களும் ஆசார்யர்கள் வார்த்தைக்குக் கீழ்படிந்தவராக இருந்துள்ளனர்.  அவர்கள் வெளியே சென்ற போதும் கூரத்தாழ்வானுக்கு மனக்கிலேசம் ஏற்பட்டது.  அதாவது திருவாய்மொழியின் பாசுரமான “மின்னின் நிலையில மன்னுயிராக்கைகள்” என்னும்படி தமது திருக்குமாரர்கள் எம்பாரிடம் சென்று திருமந்த்ர அர்த்தத்தை அறிந்து கொள்ளுமுன் அவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டு விடுமோ என்று கலக்கம் அடைந்தார்.  உடனே வெளியே சென்ற தமது திருக்குமாரர்களை அழைத்து திருமந்த்ர அர்த்தத்தை அந்த கோஷ்டியிலேயே உபதேசித்தார்.  அதனால் கூரத்தாழ்வானும் பராசர பட்டருக்கு ஒரு ஆசார்யராகக் கருதப்பட்டார். அத்தகைய சிறப்புப் பெற்ற கூரம் என்னும் ஸ்தலத்தில் அவதரித்த கூரத்தாழ்வானின் பெருமைகளை எடுத்துரைக்கும் வல்லமை பெற்ற பராசர பட்டர் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பெறுகிறது.

வைகாசியனுடத்தில் வந்துதித்தோன் வாழியே – வைகாசி மாதம் அனுஷ நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் பராசர பட்டர்.  ப்ரபந்ந ஜந கூடஸ்தரான நம்மாழ்வார் அவதரித்த வைகாசி விசாகத்திற்கு அடுத்த நாள் அடுத்த நக்ஷத்திரமான அனுஷ நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் பராசர பட்டர்.  அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

பன்னுகலை நால்வேதப் பயன்தெரிந்தோன் வாழியே – ப்ரபந்தங்கள் மற்றும் நான்கு வேதங்கள் ஆகியவற்றின் கருத்துக்கள், குறிக்கோள் முதலியவற்றை தெளிவாக அறிந்தவரான பராசர பட்டர் வாழ்க.

பராசரனாம் சீர் பட்டர் பாருலகில் வாழியே – ஆளவந்தாருக்கு கொடுத்த வாக்குறுதியின் படி (அதாவது பராசர முனிவர், வேதவ்யாஸ முனிவரின் பெருமைகளை ஏற்றம் பெறச் செய்ய வேண்டும்)  எம்பெருமானாரால் கூரத்தாழ்வானின் இரு திருக்குமாரர்களுக்கும் பராசர பட்டர், வேதவ்யாஸ பட்டர் என்று பெயரிடப்பட்டது.  அத்தகைய நற்குணங்கள் பொருந்திய பராசர பட்டரின் பெருமை இந்தப் பாருலகில் வாழ வேண்டும் என்று பராசர பட்டரின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வாழிதிருநாமங்கள் – பெரிய நம்பி மற்றும் எம்பெருமானார் – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< மணக்கால் நம்பி மற்றும் ஆளவந்தார்

பெரிய நம்பி வைபவம்

பெரிய நம்பிக்கு மஹா பூர்ணர் மற்றும் பராங்குச தாசர் என்றும் திருநாமம்.  இவர் திருவரங்கத்தில் வசித்து வந்தார்.  இவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த மார்கழி கேட்டை நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.  ஆளவந்தாரின் சிஷ்யர்கள் பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், திருக்கச்சி நம்பி, மாறனேரி நம்பி ஆகியோர் ஆவர். இவர்களுள் பெரிய நம்பி மிகவும் முக்கியமான சிஷ்யர் ஆவார்.  இளையாழ்வாராக இருந்த ராமானுஜரை ஆளவந்தாரின் சிஷ்யராக உருவாக்க வேண்டும் என்ற அவாவுடன் ராமானுஜரை திருவரங்கம் அழைத்து வரும் சமயத்தில் ஆளவந்தார் திருநாடு எய்தி விட, இளையாழ்வார் மீண்டும் காஞ்சீபுரத்திற்கே சென்று விடுகிறார்,  ஆளவந்தார் திருநாடு எய்திய பிறகு திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் வேண்டுதலுக்கிணங்கி இவர் காஞ்சீபுரம் சென்று இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைக்கிறார்.  எனவே பெரிய நம்பி இளையாழ்வாரின் ஆசார்யராகக் கருதப்படுகிறார்.

இளையாழ்வார் காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டு வர பெரிய நம்பியும் திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு வர இருவரும் மதுராந்தகத்தில் சந்திக்கின்றனர்.  இளையாழ்வார் பெரிய நம்பியிடம் தேவப் பெருமாள் அருளிய படி தேவரீரே எமக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்தார்.  பெரிய நம்பியும் இசைந்து மதுராந்தகத்தில் பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து, திருமந்த்ரம், த்வயம், சரம ஶ்லோகம் அனைத்தையும் உபதேசம் செய்கிறார்.  பிற்காலத்தில் திருமந்த்ரம், சரம ஶ்லோகம் போன்றவற்றிற்கு விரிவான விளக்கம் கேட்டுக்கொள்ளும்படி ராமானுஜரை பெரிய நம்பியே திருக்கோஷ்டியூர் நம்பியிடம் அனுப்பி வைக்கிறார்.  ராமானுஜர் மீது மிக்க மதிப்புக் கொண்டவர்.  ஒருமுறை திருவரங்கத்தில் ராமானுஜர் தமது கோஷ்டியுடன் வீதியில் வந்து கொண்டிருக்கும் போது பெரிய நம்பி உடனே தெண்டம் சமர்ப்பிக்கிறார்.  இவர் ஆசார்யன், ராமானுஜர் சிஷ்யன் ஸ்தானத்தில் இருந்த போதும் ராமானுஜரை ஆளவந்தாராகவே பார்த்தனால் பெரிய நம்பி ராமாநுஜரை விழுந்து சேவிக்கிறார்.   அந்த அளவிற்கு ராமாநுஜரின் மேல் பக்தி கொண்டிருந்தார்.  இவரது குமாரத்தி அத்துழாய். இவரும் ராமானுஜரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.  இவர் திருப்பதிக் கோவை என்ற க்ரந்தத்தை அருளிச் செய்துள்ளார்.

பெரிய நம்பி வாழி திருநாமம்

அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே

அம்புவியில் பதின்மர்கலை ஆய்ந்துரைப்போன் வாழியே – அழகானதான இந்தப் பூவுலகில் பத்து ஆழ்வார்களின் ப்ரபந்தங்களை ஆராய்ந்து அதன் உட்கருத்துகளை எடுத்து உரைக்கும் வல்லமை பெற்றவர்.     ஆளவந்தாரிடம் நன்முறையில் ஆழ்வார்களின் ப்ரபந்தங்களைப் பற்றிக் கேட்டறிந்து அவற்றை இவ்வுலகத்தாருக்கு அறிவிக்கும் தன்மை படைத்த பெரிய நம்பி பல்லாண்டு வாழ வேண்டும்.

ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே –  மணக்கால் நம்பி ஆளவந்தாரை திருவரங்கத்திற்கு அழைத்து வந்து பெரிய பெருமாளைக் காட்டிக் கொடுக்க, ராஜ்யத்தைத் துறந்து சந்நியாசம் ஏற்று சிறந்த ஆசார்யனாக இருந்தவர்.  அவருடைய இரு திருவடிகளையும் அடைந்து உஜ்ஜீவனம் அடைந்த பெரிய நம்பி வாழ்க.

உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே – உம்பர் என்பவர்கள் மேலுலகத்தில் உள்ள நித்யஸுரிகள், முக்தர்கள் அனைவரும் தொழக்கூடிய திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதருக்கு (பெரிய பெருமாள்) ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடியவராக பெரிய நம்பி இருந்திருக்கிறார்.   அக்காலத்தில் சில மாந்திரீகர்கள் பெரிய பெருமாளை அகற்ற முயற்சி செய்தனர்.  அப்போது ராமானுஜர் திகைத்து நிற்க, பெரிய நம்பி “நான் திருவரங்கத்தின் சப்த ப்ரஹாரத்தை ப்ரதக்ஷிணம் செய்து பெரிய பெருமாளுக்கு ஒரு ஆபத்தும் வாரா வண்ணம் ரக்ஷை அளிக்கிறேன்.  என்னுடன் அகங்கார, மமகாரங்கள் அற்ற ஒரு  சிறந்த ஸ்ரீவைஷ்ணவரும் வேண்டும்” என்று கூற,  ராமானுஜர் கூரத்தாழ்வாரை அனுப்பி வைத்தார்.    அவ்வாறு பெரிய பெருமாளுக்கு ஆபத்து காலங்களில் ரக்ஷையாக இருந்து அவருக்கு ஆனந்தத்தைக் கொடுத்தவர் பெரிய நம்பி.  அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்.

ஓங்கு தனுக் கேட்டைதனில் உதித்த பிரான் வாழியே – சிறப்புப் பெற்ற மார்கழி மாதத்தில் கேட்டை நக்ஷத்ரத்தில் அவதரித்த பிரான் (உபகாரகன்) பெரியநம்பி.  அவர் நமக்குச் செய்த உபகாரமானது, மேன்மை மிகுந்த ராமானுஜரை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு அளித்தவர்.  மேலும் கிருமிகண்ட சோழன் மூலம் ராமானுஜருக்கு ஆபத்து ஏற்பட்ட காலத்தில் கூரத்தாழ்வானும், பெரிய நம்பியும், அவரது குமாரத்தியுமான அத்துழாயும் சோழ ராஜாவின் அவைக்குச் சென்றனர்.  கூரத்தாழ்வான் ராமானுஜர் போன்று வேடம் பூண்டு வர, பெரிய நம்பி ஆசார்யன் ஸ்தானத்தில் அவருடன் சென்றார்.  கூரத்தாழ்வான் சோழ அரசவையில் ஸ்ரீமந்நாராயணனே பரதெய்வம் என்று பரத்தத்துவ நிர்ணயம் செய்ததனால் சோழ அரசருக்குக் கோபம் ஏற்பட்டு இருவருடைய கண்களையும் பிடுங்க ஆணையிட்டான்.  அவ்வாறு தன் கண்களை இழந்து, திருவரங்கம் திரும்பும் வழியில் வயோதிகம் காரணமாக திருநாடு எய்தி ஆளவந்தார் திருவடிகளை அடைந்தார் என்று அறிகிறோம்.  அவ்வாறு பெருந்தியாகங்கள் செய்த நமக்கு ஜகதாசார்யன் எனும் ராமானுஜரை அளித்த உபகாரகரான பெரிய நம்பி பல்லாண்டு வாழ்க.

வம்பவிழ்தார் வரதருரை வாழி செய்தான் வாழியே – தேன் வழிந்து கொண்டிருக்கக்கூடிய சிறந்த மாலைகளை அணிந்து கொண்டிருக்கும் காஞ்சீபுரம் வரதாராஜப் பெருமாள் ஆறு வார்த்தைகளை திருக்கச்சி நம்பிகளுக்கு அருளினார்.  அவற்றில் கடைசி வார்த்தையானது பூர்ணரை ஆசார்யனாகப் பற்று என்பதாகும். ராமநுஜருக்காக தேவப்பெருமாள் இந்த ஆறு வாரத்தைகளை அருளிச் செய்தார்.    தேவப்பெருமாள் கூற்றுப்படியே எம்பெருமானாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து உபதேசங்கள் செய்து அவரை சிறந்த ஆசார்யராக உருவாக்கிய பெரிய நம்பி வாழ்க.

மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே – மிகச்சிறந்த ஸ்ரீவைஷ்ணவரும், ஆளவந்தாரின் சிஷ்யருமான மாறனேர் நம்பி தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்.  ஆனால் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டு திருவரங்கத்தின் கோயில் மதிள்களில் வாழ்ந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்.    இவர் உயிர் பிரிந்த பின்பு தனது உடலுக்கு உறவினர்கள் அந்திம காரியம் செய்யக்கூடாது ஸ்ரீவைஷ்ணவர்களின் வழக்கப்படி சம்ஸ்காரம் நடக்க வேண்டும் என்று விரும்பினார். “தேவர்க்கு புரோடாசமானவற்றை நாய்க்கு இடுமா போலே” என்று கூறுவர்.  அதாவது தேவர்களுக்கு செய்து வைத்திருக்கும் அவிசு முதலானவற்றை நாய் வந்து உண்டு விட்டால் ஏற்றுக் கொள்ள இயலாது.  அது போன்று இவ்வுடலானது எம்பெருமானுக்குச் சொந்தமானது அதை ஸ்ரீவைஷ்ணவர்கள் சம்பிரதாயப்படி சம்ஸ்காரம் செய்யவேண்டும் என்று விரும்பிய மாறனேர் நம்பி ஆளவந்தாரின் மற்றொரு சிஷ்யரான பெரிய நம்பியிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.  பெரிய நம்பியும் அதற்கு இசைந்து மாறனேர் நம்பி திருநாடு எய்தியபின் பெரிய நம்பியே சரம கைங்கர்யங்களை மாறனேர் நம்பிக்கு செய்தார் என்பதை அறிகிறோம்.

இந்த விஷயம் திருவரங்கத்தில் இருப்பவர்களுக்குத் தெரியவந்து ப்ராஹ்மணரல்லாத மாறனேர் நம்பிக்கு பெரிய நம்பி சம்ஸ்காரம் செய்ததை ஒரு குற்றமாக ராமானுஜர் முன்பு வைத்தனர்.  அதைக் கேட்ட ராமானுஜர் இதில் தவறு ஒன்றுமில்லை என்றாலும் பெரிய நம்பியின் திருவாக்காலேயே இதற்கு பதில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் பெரிய நம்பியை விசாரிக்க பெரிய நம்பியும் “ராமபிரான் ஜடாயுவிற்கு சம்ஸ்காரம் செய்தார் தருமபுத்திரன் விதுரருக்கு சம்ஸ்காரம் செய்தார்.  அதைப்போன்று நானும் உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவரான மாறனேர் நம்பிக்குச் செய்தேன்.    ஆழ்வார்கள் வாக்குகள் கடலோசையாகக் கருத முடியாது.  ஆழ்வார்கள் அடியார்களுக்கு ஆட்படுவதையே தமது பாசுரங்களில் வலியுறுத்தியுள்ளனர்” என்று கூறினார்.  அதைக் கேட்ட எம்பெருமானார் உகப்புடன் பெரிய நம்பியை வணங்கினார்.  அவ்வாறு மாறனேர் நம்பியின் விருப்பத்தை நிறைவேற்றி வாழ்வளித்த பெரிய நம்பி பல்லாண்டு வாழ வேண்டும்.

எம்பெருமானார் முனிவர்க்கு இதமுரைத்தான் வாழியே – இராமானுஜன் என்னும் முனிவர்க்கு சிறந்த உபதேசங்களை ஆசார்யன் ஸ்தானத்தில் இருந்து உரைத்த பெரிய நம்பி பல்லாண்டு வாழ்க,

எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே – அழகு பொருந்திய பெரிய நம்பி திருவடிகள் இவ்வுலகு உள்ள வரையிலும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று பெரிய நம்பி வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

எம்பெருமானார் வைபவம்

ஸ்ரீராமானுஜர் ஆதிசேஷனுடைய அவதாரம்.  ஜகதாசார்யன் என்று அறியப்படுகிறார்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு நடுநாயகமாக இருக்கக் கூடியவர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் ஆல வ்ருக்ஷமாக வளரச் செய்தவர்.  நம்மாழ்வார் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று அறிவோம்.  அவர் வளர்த்த சம்பிரதாயத்தை பெரிய அளவில் வளரச் செய்தவர்.  எம்பெருமானாருக்கு தனிச் சிறப்புகள் உண்டு.  அவர் அவதாரம் செய்வதற்கு முன்பாகவே அவருடைய திருமேனி நம்மாழ்வாரால் காட்டிக் கொடுக்கப்பட்டது.  எழுபத்து நான்கு சிம்ஹாசனாதிபதிகளைக் கொண்டு ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமானது பரவ வேண்டும் என்று பாடுபட்டவர்.    “ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின்” என்று மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் அருளிச் செய்த வண்ணம் எம்பெருமானை அடைய விரும்புபவர்கள் அனைவர்க்கும் இந்த உபதேசங்கள் சென்று சேர வேண்டும் என்று விரும்பினார்.  அனைத்தது ஆத்மாக்களும் எம்பெருமானை அடைவதற்கு உரிமை பெற்றது.  அவைகளுடைய உரிமையை நாம் கொடுக்க வேண்டும் என்று கருணையுடன் “காரேய் கருணை இராமாநுசா” என்றபடி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் வளர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவர்.   அனைத்து திவ்ய தேசங்களையும் சீர் திருத்தி ஆங்காங்கே எம்பெருமானுக்கு அனைத்து கைங்கர்யங்களும் (திருவாதாரனம், தளிகை, பாசுரங்கள் சேவிப்பது, உத்ஸவங்கள் முதலியவை) சிறப்பாக நடக்கும்படிச் செய்தவர்.   இந்த உலகில் உள்ள அனைத்து திவ்யதேசங்களிலும் அனைத்து கைங்கர்யங்களும் குறைவற நடக்கும்படி ஏற்பாடு செய்தவர்.  இன்றளவும் எம்பெருமானர் வளர்த்த சம்பிரதாயம் பாரத தேசம் முழுவதும் பரந்து, விரிந்து, வளர்ந்து இருக்கிறது.

இவர் ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்தவர்.  சித்திரை மாதம் திருவாதிரை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  நவரத்நங்களைப் போன்று ஒன்பது க்ரந்தங்களை அருளிச் செய்தள்ளார்.  அவையாவன ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், வேதார்த்த சங்க்ரஹம், வேதாந்த தீபம், வேதாந்த சாரம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம் (திருவாராதன க்ரமம்) ஆகும்.  இவை அனைத்தும் சம்ஸ்க்ருத க்ரந்தங்களாகும். தமிழில் எம்பெருமானார் எந்த க்ரந்தமும் அருளிச் செய்யவில்லை. வேதாந்தத்தின் கருத்துக்களை ஸ்ரீபாஷ்யத்திலும், வேதார்த்த சங்க்ரஹத்திலும், வேதாந்த தீபம் மற்றும் வேதாந்த சாரத்திலும் எடுத்துரைத்துள்ளார்.  கீதா பாஷ்யத்தில் பகவத்கீதைக்கு சிறப்பான வ்யாக்யானம் அருளியுள்ளார்.  கத்யத்ரயம் மூலமாக சம்பிரதாயத்தின் மிக முக்கியக் கருத்தான சரணாகதியை நிலை நாட்டியுள்ளார்.  நித்ய க்ரந்தம் மூலமாக திருவாராதனம் செய்யும் முறையை எடுத்துக் காட்டியுள்ளார்.  திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் எழுதும் முறையை தொடங்கி வைத்தவர்.  இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்டவர்.

எம்பெருமானார் வாழி திருநாமம்

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே
அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே
பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே
பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே
சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே
தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே
சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே

எம்பெருமானார் வாழி திருநாமம் விளக்கவுரை

அத்திகிரி அருளாளர் அடிபணிந்தோன் வாழியே – இளையாழ்வாராக ஸ்ரீராமானுஜர் இருந்த காலத்திலேயே திருக்கச்சி நம்பிகளின் உபதேசங்களைக் கேட்டுக் கொண்டு தேவப் பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்தார்.    தேவப் பெருமாளின் முன்புதான் ஸ்ரீராமானுஜர் சந்நியாசம் மேற்கொண்டார்.  பேரருளாளப் பெருமாள் தான் எதிராசர் (எதிகளுக்குத் தலைவன்) என்ற பெயரையும் ஸ்ரீராமானுஜருக்குச் சூட்டியவர். அத்திகிரி (ஹஸ்திகிரி எனப்படும் காஞ்சீபுரம்) பேரருளாள எம்பெருமானின் திருவடிகளைப் பணிந்த எம்பெருமானார் வாழ்க.

அருட்கச்சி நம்பியுரை ஆறுபெற்றோன் வாழியே –  ஸ்ரீராமானுஜருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன.  திருக்கச்சி நம்பிகளிடம் தேவப் பெருமாளிடம் விடை பெற்று வருமாறு வேண்டினார்.  திருக்கச்சி நம்பிகள் அவை என்ன சந்தேகங்கள் என்று கேட்காமல் தேவப் பெருமாளிடம் சென்று இளையாழ்வாருக்கு ஆறு சந்தேகங்கள் உள்ளன என்று கூற தேவப்பெருமாளும் அவை என்ன சந்தேகங்கள் என்று கேட்காமல் ஆறு வார்த்தைகளை அருளிச் செய்கிறார்.  “அஹமேவ பரம் தத்துவம்”, நான் தான் உலகில் பரம்பொருள், நமக்கு மேலாகவோ சமமாகவோ வேறு தெய்வம் கிடையாது என்பதை முதல் வார்த்தையாகக் கூறினார்.   இரண்டவதாக பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு என்பதைக் குறிக்கும் வகையில் “பேதமே சம்பிரதாயம் “ என்று கூறினார். மூன்றாவதாக ப்ரபத்தி (சரணாகதி) தான் உபாயம் என்பதை ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் வழியாக அருளிச் செய்தார்.  நான்காவதாக சரணாகதி செய்தவனுக்கு சரீரம் கீழே விழும்போது முக்தி கிடைத்துவிடும் என்று கூறினார். ஐந்தாவதாக சரீரம் கீழே விழும்போது சரணாகதி செய்தவனால் என்னை நினைக்க முடியவில்லை என்றால் அதைப் பற்றி ஒன்றும் குறைவில்லை.  நான் அவனை எப்போதும் நினைப்பதால் அவனைக் கைக் கொள்வேன் என்று ஐந்தாவது வார்த்தையாகக் கூறினார்.  ஆறாவது வார்த்தை எம்பெருமானாருக்கு நேராக ஒரு உபதேசமாக அமைந்தது.  பூர்ணாசார்யர் எனப்படும் பெரிய நம்பியை அடைந்து ஆச்ரயிக்கவும் என்று ஆறாவது வார்த்தையாக தேவப்பெருமாள் இளையாழ்வாருக்குப் பணித்தார்.  இவ்வாறு தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீஇராமானுஜருக்கு ஆறு வார்த்தைகளை அருளிச் செய்தார். திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஆறு வார்த்தைகளைப் பெற்ற இளையாழ்வார் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பெறுகிறது.

பத்தியுடன் பாடியத்தைப் பகர்ந்திட்டான் வாழியே – பாடியம் என்பது ஸ்ரீபாஷ்யம் என்பதன் தமிழாக்கம்.  மிகுந்த பக்தியுடன் ஸ்ரீபாஷ்யத்தை இயற்றினார் ஸ்ரீராமானுஜர்.  இந்த க்ரந்தத்தை எழுதுவதற்காக கூரத்தாழ்வனை அழைத்துக் கொண்டு போதாயன வ்ருத்தி க்ரந்தத்தைப் பெறுவதற்காக காஷ்மீர தேசத்தில் உள்ள ஸ்ரீசாரதா பீடம் சென்றார்.  அந்தக் க்ரந்தத்தைப் பெற்று வரும் வழியில் அங்கு இருந்தவர்களால் க்ரந்தம் பறிக்கப் பெற்றது.   ஆனால் கூரத்தாழ்வான் மனதில் அந்தக் க்ரந்தத்தை க்ரஹித்து வைத்திருந்தமையால். திருவரங்கம் அடைந்தவுடன்  கூரத்தாழ்வானைக் கொண்டு ஸ்ரீபாஷ்யத்தை ராமானுஜர் அருளிச் செய்தார்.    வேதாந்தத்தில் எம்பெருமானை அடைவதற்கு  முக்கியமான உபாயமாகக் கூறப்பட்ட பக்தி யோகமத்தை மையக் கருத்தாகக் கொண்டு ஸ்ரீபாஷ்யத்தை அருளிச் செய்தார்.  பிற்காலத்தில் சரணாகதி கத்யத்தில் எம்பெருமானை அடைவதற்கு எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி அடைவது தான் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறந்த வழி என்று எடுத்துக் காட்டியுள்ளார்.    வேதாந்திகளுக்காக சொல்லும்போது பக்தியோகம் எம்பெருமானை அடையச் சிறந்த வழி என்று கூறியுள்ளார்.  அவ்வாறு மேன்மை பெற்ற எம்பெருமானார் வாழ்க.

பதின்மர்கலை உட்பொருளைப் பரிந்துகற்றான் வாழியே – பத்து ஆழ்வார்களின் ப்ரபந்தங்களை பெரிய நம்பி மற்றும் திருக்கோஷ்டியூர் நம்பியும் பணித்தபடி திருவரங்கத்தில் திருமாலை ஆண்டானிடம் கற்றுத் தேர்ந்தார்.  அவ்வாறு ஆழ்வார் பாசுரங்களின் உட்கருத்துக்களையும் ஈடுபாட்டுடன் கற்றுத் தேர்ந்த எம்பெருமானார் வாழ்க.

சுத்தமகிழ் மாறனடி தொழுதுய்ந்தோன் வாழியே – மகிழ் மாறன் என்றால் நம்மாழ்வார்.  எம்பெருமானே உபாயம் மற்றும் உபேயம் என்று வேறு ஒன்றிலும் கருத்தைச் செலுத்தாமல் மனது சுத்தத்துடன் இருந்த நம்மாழ்வாரின் திருவடிகளைத் தொழுது உஜ்ஜீவனம் அடைந்த எம்பெருமானார் வாழ்க.  “பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த பாமன்னு மாறன் அடிபணிந்து உய்ந்தவன்” என்ற இராமாநுச நூற்றந்தாதி பாசுரத்தின் படி மாறன் அடி பணிந்து உய்ந்த எம்பெருமானார் வாழ்க.  அதனால்தான் இன்றளவும் ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் திருவடி நிலைகள் ஸ்ரீராமானுஜம் என்று அழைக்கப்படுகிறது.  ஏனென்றால் ராமானுஜர் ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாருக்கு மங்களாசாசனம் செய்வதற்குச் சென்ற போது நம்மாழ்வார் “வாரும் ராமானுஜரே, இனி எம் திருவடிகள் ஸ்ரீராமானுஜம் என்றே அழைக்கப் பெறும்” என்று உகப்புடன் அருளினார்.  ஏனைய இடங்களில் நம்மாழ்வார் திருவடிகளுக்கு மதுரகவிகள் என்று தான் கூறுவர்.

தொல் பெரிய நம்பி சரண் தோன்றினான் வாழியே – மிகப் பழைமையான பெரிய நம்பியின் திருவடிகளில் ஆதரத்துடன் இருக்கக் கூடிய ராமானுஜர் பல்லாண்டு வாழ்க.

சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே – சித்திரை மாதம் திருவாதிரை (ஆதிரை என்ற நக்ஷத்திரம் ராமானுஜர் அவதரித்தமையால் திருவாதிரை என்றே அறியப்படுகிறது) நாளுக்கு ஏற்றம் தரும் வண்ணம் அந்நாளில் அவதரித்த எம்பெருமானார் வாழ்க.

சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே  – சிறப்புப் பெற்ற ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்த ராமானுஜரின் திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று பகவத் ஸ்ரீராமாநுஜரின் வாழி திருநாமம் முடிவடைகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வாழிதிருநாமங்கள் – மணக்கால் நம்பி மற்றும் ஆளவந்தார் – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார்

மணக்கால் நம்பி வைபவம்

மணக்கால் நம்பியின் இயற்பெயர் தாசரதி.  ஸ்ரீராமமிச்ரர் என்பது இவர் சிறப்புப் பெயர். திருவரங்கத்திற்கு அருகில் உள்ள மணக்கால் என்ற கிராமத்தில் அவதரித்தமையால் மணக்கால் நம்பி என்று ப்ரசித்தமாக அறியப்படுகிறார். நம்பி என்றால் குண பூர்த்தியை உடையவர் என்று அர்த்தம். திருக்குறுங்குடி எம்பெருமான் நம்பி என்று அழைக்கப்படுகிறார்.  மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரை குருகூர் நம்பி என்றே அழைத்தார்.  செல்வநம்பி என்பவர் பெரியாழ்வார் காலத்தில் பாண்டிய ராஜ்ய சபையில் மந்திரியாக இருந்தவர். இவ்வாறு எம்பெருமான், ஆழ்வார்கள். ஆசார்யர்களும் நம்பி என்று அழைக்கப்பட்டனர் என்பதை அறியலாம். அந்த வரிசையில் மணக்கால் நம்பி என்று ஸ்ரீராமமிச்ரர் அழைக்கப்பட்டார்.  இவரது தனிச்சிறப்பு என்னவென்றால், நாதமுனிகளின் திருப்பேரனாரான யாமுனாசார்யர் என்ற ஆளவந்தாரை திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபடச் செய்தவர். யாமுனாசார்யர் சிறு வயதிலே ஞானியாக இருந்தவர்.  ராஜ போகத்தில் மூழ்கியிருந்த நாதமுனிகளின் திருப்பேரனாரை சம்பிரதாயத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று மணக்கால் நம்பி தமது பெருங்கருணையால் அவருக்கு ஸ்ரீபகவத் கீதையின் சாராம்சத்தை எடுத்துரைத்து அவரை திருத்திப் பணி கொண்டவர். உய்யக்கொண்டாரிடம் மிகுந்த ஆசார்ய பக்தி கொண்டவர்.

மணக்கால் நம்பி வாழி திருநாமம் 

தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே
மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே

மணக்கால் நம்பி வாழி திருநாமம் விளக்கவுரை

தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே – இந்த வையகத்தை உய்விக்கச் செய்தவர் என்ற சிறப்புடைய உய்யக் கொண்டாரின் திருவடிகளை சிரம் மேல் தாங்கும் மணக்கால் நம்பி பல்லாண்டு வாழ வேண்டும்.

இதில் ஒரு சரித்திரம் காட்டப்படுகிறது.  உய்யக்கொண்டாரின் சிஷ்யரான மணக்கால் நம்பி அவருக்கு பல கைங்கர்யங்களைச் செய்து வந்தார்.  அவற்றில் உய்யக் கொண்டாரின் குமாரத்திகளை நதிநிலைக்கு அழைத்துச் சென்று அவர்கள் நீராடும் வரை காத்திருந்து அவர்களை ஒரு தமையனைப் போல் திரும்ப அழைத்துச் செய்யும் கைங்கர்யமும் ஒன்று.   அவ்வாறு ஒரு நாள் நதிக்குச் சென்று திரும்பும்போது ஓரிடத்தில் மழையினால் சேறாக இருக்க அதை எப்படித் தாண்டுவது என்று அந்தப் பெண் பிள்ளைகள் யாேசிக்க உடனே மணக்கால்நம்பி தான் கீழே படுத்துக் கொண்டு அந்தப் பெண் பிள்ளைகளை தன் முதுகின் மேல் நடந்து அந்தச் சேற்றுப் பகுதியைத் தாண்டச் செய்தார்.  இந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற உய்யக்கொண்டார் மணக்கால் நம்பியைக் கடிந்து கொள்ள அதற்கு மணக்கால் நம்பி இது என் ஆசார்யருக்காக உகப்புடன் செய்த கைங்கர்யம் என்று கூற உய்யக் கொண்டார் மகிழ்வுடன் தனது திருவடிகளை மணக்கால் நம்பியின் திருமுடியின் மேல் வைத்தார் என்று அறிகிறாேம்.   பொதுவாக சிஷ்யர்களின் அபிமானத்தைப் பாரத்து மகிழ்ந்தால் ஆசார்யர்கள் தாமாகவே தமது திருவடிகளை சிஷ்யர்களின் திருமுடியில் வைப்பார்கள் என்று சரித்திரத்தின் மூலம் அறிய வருகிறது.  அவ்வாறு உய்யக் கொண்டார் திருவடிகளை மணக்கால் நம்பியின் சிரத்தில் வைக்க “உமக்கு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் எப்போதும் அடியேனுக்கு வேண்டும்” என்று மணக்கால் நம்பிகள் பிரார்த்தித்தார்.   அத்தகைய சிறப்புப் பெற்ற மணக்கால் நம்பி பல்லாண்டு காலம் வாழ்க.

தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே – தென் திசையில் இருக்கக்கூடிய ஸ்ரீரங்கத்தில் வீற்றிருக்கும் எம்பெருமானின் சிறந்த அருளைப் பெற்றிருக்கக் கூடிய மணக்கால் நம்பி வாழ்க.  எவ்வாறு இவர் பெரிய பெருமாளின் அருளைப் பெற்றிருக்க முடியும் என்றால் குருபரம்பரையின் முதல் ஆசார்யரான பெரிய பெருமாளுடைய அருள் இருந்தமையாலேயே அக்குருபரம்பரையில் மணக்கால் நம்பியும் ஒரு ஆசார்யராகக் கருதப்படுகிறார்.     அவர் வாழ்க.

தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே – தாசரதி என்பது தசரத மகாராஜாவின் குமாரன் என்னும் பொருள் படும்படி ஸ்ரீராமபிரான் தாசரதி என அழைக்கப்பட்டார்.  தாசரதி என்னும் பெயர் மணக்கால் நம்பிக்கு பெற்றோர்களால் சூட்டப்பட்டது.  அவ்வாறு தாசரதி என்ற திருநாமத்திற்கு ஏற்றத்தைக் கொடுத்த மணக்கால் நம்பி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே –  நாதமுனிகளின் உகப்பு (ஆசை) என்னவென்றால் தமது திருப்பேரனாரான ஆளவந்தாரை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும்.  தமிழ் ப்ரபந்தங்களை இந்த உலகத்தில் பரவச்செய்த நாதமுனிகளின் ஆசைப்படி ஆளவந்தாரை ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் கொண்டு வந்து நாதமுனிகளின் விருப்பத்தை நிலை நாட்டிய மணக்கால்நம்பி வாழ்க.

நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே – மிகுந்த பரிவுடன் தமக்கு அடுத்த ஆசார்யனாக (ஆர்யன் என்று இவ்வரியில் காட்டப்படுகிறது) ஆளவந்தாரை நியமித்த மணக்கால் நம்பி பல்லாண்டு காலம் வாழ்க.  ஆளவந்தாரிடம் தானே வலியச் சென்று உபதேசம் செய்து அவரை சம்பிரதாயத்தில் கொண்டு வந்தவர் மணக்கால் நம்பி.  பெரிய பெருமாளிடம் ஆளவந்தாரை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி பெரிய பெருமாளின் க்ருபை ஆளவந்தாருக்குக் கிடைக்குமாறு செய்தவர் மணக்கால் நம்பி.  ஆளவந்தாரிடம் “நம்மிடம் உமது பாட்டனார் கொடுத்த பெரிய புதையல் இருக்கிறது” என்று கூற ஆளவந்தாரும் “அது என்ன நிதி” என்று வினவ ஆளவந்தாரை பெரிய பெருமாளிடம் அழைத்துச் சென்று இவர்தான் நமது பெரிய நிதி என்று பெரிய பெருமாளை ஆளவந்தாருக்குக் காட்டிக் கொடுத்தார்.  அவ்வாறு ஆளவந்தாரை ஆசார்யராக நியமித்து நமது சம்பிரதாயம் வளரும்படிச் செய்த மணக்கால் நம்பி பல்லாண்டு வாழ வேண்டும் என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே – இந்தப் பரந்த உலகில் பத்து ஆழ்வார்கள் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் பரவும்படி செய்தவர் மணக்கால் நம்பிகள்.  நாதமுனிகளிடம் இருந்து ப்ரபந்தங்களைக் கற்றுக் கொண்ட உய்யக் கொண்டாரிடம் இருந்து மணக்கால் நம்பி கற்று தாம் கற்றதை ஆளவந்தாருக்கு உபதேசித்து குரு பரம்பரை வளர்ச்சியுறச் செய்தவர் மணக்கால் நம்பி.  அவர் வாழ்க.

மாசிமகம் தனில் விளங்க வந்துதித்தான் வாழியே –  மாசி மாதம் மகம் நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் மணக்கால் நம்பி.  அவ்வாறு மாசி மகம் நக்ஷத்ரத்திற்கு தாம் அவதரித்தமையால் ஏற்றத்தைக் கொடுத்த மணக்கால் நம்பி வாழ்க.

மால்மணக்கால் நம்பி பதம் வையகத்தில் வாழியே .  மால் என்றால் அன்பு.  எம்பெருமானிடம், உய்யக் கொண்டாரிடம், ஆளவந்தாரிடம் இவ்வாறு அனைவரிடமும் அன்பு கொண்ட மணக்கால் நம்பியின் திருவடிகள் இந்த உலகம் உள்ள அளவும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று மணக்கால் நம்பியின் வாழி திருநாமம் முடிவுறுகிறது.

ஆளவந்தார் வைபவம்

ஆளவந்தார் இயற்பெயர் யாமுனன், பிற்காலத்தில் யாமுனாசார்யர் என்று ப்ரசித்தமாக அறியப்பட்டவர்.  இவர் சிறு வயதில் ஒரு பண்டிதரிடத்தில் பாடம் பயின்று கொண்டிருந்தபோது, அவ்வூர் அரசன் எல்லாப் பண்டிதர்களும் வரி கட்ட வேண்டும் என்று நிர்ப்பந்திக்க நம் ஆசார்யர் வரி கட்டுவதா என்று யாமுனன் தானே ராஜ்ய சபைக்குச் சென்று ராஜபண்டிதரிடம் வாதிட்டு அவரை வென்றார்.   அந்த சமயத்தில் அவ்வூர் அரசனுக்கும் அரசிக்கும் ஒரு பந்தயம் வைத்துக் காெள்கிறார்கள்.  அரசி ஐந்து வயதாகும் யாமுனன் தான் இவ்வாதத்தில் வெல்வான் எனவும் அப்படி யாமுனன் தோற்று விட்டால் தான் அரசருக்கு காலம் முழுவதும் அடிமையாக இருப்பதாகக் கூறினாள்.  அரசரும் ராஜபண்டிதர் தான் வெற்றியடைவார் அவர் தோற்று விட்டால் தான் யாமுனனுக்கு பாதி ராஜ்யத்தைக் கொடுத்து விடுவதாக பந்தயத்தில் ஒப்புக் கொண்டார். அதன்படி யாமுனன் வெல்லவே அரசி “எம்மை ஆளவந்தீராே” என்று தன் அன்பை யாமுனனிடம் வெளிப்படுத்தினாள்.  அன்று முதல் யாமுனன் “ஆளவந்தார்” என்று அழைக்கப்பட்டார்.

அரசன் ஒப்புக் கொண்டபடி அளித்த பாதி ராஜ்யத்தை பரிபாலனம் செய்து கொண்டிருந்த காலத்தில்தான் மணக்கால் நம்பி இவரை அணுகி தூதுவளைக் கீரையை ஆளவந்தாருக்கு கொடுக்க ஆளவந்தாருக்கும் அக்கீரை பிடித்துப் போனது.  அதன் பிறகு சிறிது காலம் அக்கீரையைக் கொடுக்காமல் இருக்க ஆளவந்தார் தன் மடப்பள்ளி நிர்வாகியை அணுகி “ஏன் தூதுவளைக் கீரை இப்போதெல்லாம் கொடுப்பதில்லை” என்று வினவ அதற்கு அவர்கள் “தூதுவளைக் கீரை கொடுக்கும் பெரியவர் இப்போது வருவதில்லை” என்று பதிலளித்தனர்.  மணக்கால் நம்பியைத் தேடி ஆளவந்தார் முன் நிறுத்த மணக்கால் நம்பி தூதுவளையை விடச் சிறந்த விஷயங்கள் உமது பாட்டனார் விட்டுச் சென்றிருக்கிறார்.  யாம் உமக்கு அவற்றை உபதேசிக்க வேண்டும் என்று சொல்ல ஆளவந்தாரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.  மணக்கால் நம்பி கீதையை உபதேசித்தார்.   கீதோபதேச முடிவில் கீதையை உபதேசித்த எம்பெருமான் தான் உமது பாட்டானார் கொடுத்துப் போன செல்வம் என்று கூறி ஆளவந்தாரை திருவரங்கப் பெரிய பெருமாள் முன் நிறுத்தி, பெரிய பெருமாள் கருணைப் பார்வையை ஆளவந்தார் மீது கடாக்ஷிக்க, அன்று முதல் ஆளவந்தார் ராஜயத்தைத் துறந்து, திருவரங்கத்தில் சந்நியாசம் பூண்டு பல சிஷ்யர்களுடன் வாழ்ந்து வந்தார் என்பதை சரித்திரத்தின் மூலம் அறியலாம்.

ஆளவந்தார் நாதமுனிகள் அவதரித்த காட்டுமன்னார் கோயில் என்கிற வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார்.  நாதமுனிகள் பல காலம் வடநாட்டில் கைங்கர்யம் செய்த படியால் அவரது ஆசைப்படி யமுனைத்துறைவனான கண்ணன் திருநாமமான யாமுனன் என்ற பெயர் இவருக்கு பெற்றோரால் இடப்பட்டது.  இவருடைய திருநக்ஷத்ரம் ஆடி மாதம் உத்திராட நக்ஷத்திரம்.  இவர் பல க்ரந்தங்களை அருளியுள்ளார்.  கீதைக்கு சுருக்கமான அர்த்தத்தை ஸ்லோக வடிவில் “கீதார்த்த ஸங்க்ரஹம்” என்று அருளியுள்ளார்.  மேலும் ஸித்தி த்ரயம், ஆகம ப்ராமாண்யம். சதுஶ்லோகி, ஶ்தோத்ர ரத்நம் என்ற க்ரந்தங்களையும் அருளியுள்ளார்.

ஆளவந்தார் வாழி திருநாமம்

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே
கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

ஆளவந்தார் வாழி திருநாமம் விளக்கவுரை

மச்சணியும் மதிளரங்கம் வாழ்வித்தான் வாழியே – பெரிய மேல்நிலைகளைக் கொண்ட மதிள்களால் சூழப்பட்ட திருவரங்கம் சிறப்புப் பெறும்படி செய்த ஆளவந்தார் வாழ்க.    இவரது ப்ரதாந சிஷ்யர்களான பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலை ஆண்டான், திருவரங்கப் பெருமாள் அரையர் ஆகிய ஐவரும் திருவரங்கத்தில் இவரிடம் உபதேசம் பெற்றனர்.  பின் பெரிய திருமலை நம்பி திருமலை சென்று கைங்கர்யம் செய்யவும், திருக்கோஷ்டியூர் நம்பி திருக்கோஷ்டியூர் சென்று கைங்கர்யம் செய்யவும் தொடங்கினர்.  ஆளவந்தாரின் மற்றொரு சிஷ்யரான திருக்கச்சி நம்பிகளும் ஆளவந்தாரின் ஆணைப்படி காஞ்சிபுரம் தேவப் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார்.  இவ்வாறு பல சிஷ்யர்களைக் கொண்டு திருவரங்கப் பெருமையை வளரச் செய்த ஆளவந்தார் பல்லாண்டு வாழ்க.

மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே – மறை என்றால் வேதம்.   நான்கு வேதங்களையும் அவற்றின் சாரத்தையும் மணக்கால் நம்பியிடம் மிகுந்த பணிவுடன் கற்றார்.  வேதத்தின் சாரமான கீதோபதேசத்தையும் மணக்கால் நம்பியிடம் இருந்து ஆனந்தத்துடன் கற்ற ஆளவந்தார் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பச்சையிட்ட ராமர்பதம் பகருமவன் வாழியே – பச்சையிடுவது என்றால் ஒருவருக்கு நன்மை செய்து அவரை நம் பக்கல் ஈர்ப்பது ஆகும்.  மணக்கால் நம்பி தானே வலியப் போய் இவருக்கு தூதுவளைக் கீரையைக் கொடுத்து இவரைத் திருத்திப்பணி கொண்டார்.  அவ்வாறு பச்சையிட்ட ராமமிச்ரர் எனப்பட்ட மணக்கால் நம்பியின் திருவடிச் சிறப்பைக் கொண்டாடும் ஆளவந்தார் பல்லாண்டு வாழ்க.

பாடியத்தோன் ஈடேறப் பார்வைசெய்தோன் வாழியே – பாடியத்தோன் என்றால் ஸ்ரீபாஷ்யத்தை அருளிச்செய்த எம்பெருமானார் (ராமாநுஜர்).  அவர் இந்த ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆசார்யனாக வருவதற்காக தன்னுடைய கருணைப் பார்வையை கடாக்ஷித்தவர் ஆளவந்தார்.  ராமானுஜர் இளையாழ்வாராக காஞ்சீபுரத்தில் யாதவப்ரகாசரிடம் கல்வி பயின்று வரும் காலத்தில்  திருவரங்கத்தில் இருந்த ஆளவந்தாருக்கு உயர்ந்த ஞானி அவதரித்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.    ஏற்கனவே நாதமுனிகள் அளித்த பவிஷ்யதாசார்யர் விக்ரஹம் வழி வழியாக ஆளவந்தாரிடம் வந்து சேர, அந்த விக்ரஹத்தின் அமைப்பில் உள்ளபடி இளையாழ்வாரின் பொலிவு இருக்கக் கண்டு காஞ்சிபுரம் வந்து தேவப்பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்தபின் இளையாழ்வாரை காஞ்சிபுரத்தில் வந்து சந்திக்கிறார்.

தேவப்பெருமாள் சந்நிதிக்கு அருகில் உள்ள கரியமாணிக்கம் சந்நிதியில் யாதவப்ரகாசரும் அவருடைய சிஷ்யர்களும் இருக்கக் கண்டு அவர்களில் இளையாழ்வாரைக் கண்டு வெகு தொலைவில் இருந்தே தமது கருணைப்பார்வையை இளையாழ்வார் மீது செலுத்தினார் ஆளவந்தார்.  அவ்வாறு ராமாநுஜர் நமது சம்பிரதாயத்திற்கு சிறந்த ஆசார்யனாக வரும் வகை செய்தவர் ஆளவந்தார்.  ராமானுஜரும் ஆளவந்தாரை முன்னிட்டு ஒரு தனியனைச் சமர்ப்பித்துள்ளார்.  யத் பதாம்போருஹத்யாந வித்வஸ்தாஶேஷ கல்மஷ:| வஸ்து தாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம் || என்ற தனியனில் அவஸ்துவாக இருந்த என்னை ஒரு வஸ்துவாக மாற்றினார் ஆளவந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.  அத்தகைய சிறப்புப் பெற்ற ஆளவந்தார் பல்லாண்டு வாழ்க.

கச்சி நகர் மாயனிரு கழல் பணிந்தோன் வாழியே – கச்சிநகர் என்றால் காஞ்சிபுரம்.  ஆளவந்தார் ராமாநுஜர் மீது தான் கடாக்ஷித்தது மட்டுமன்றி காஞ்சிபுரம் தேவப்பெருமாளிம் சென்று ராமாநுஜரை குரு பரம்பரைக்கு ஒரு ஆசார்யனாக அருளும்படி வேண்டினார்.  அவ்வாறு காஞ்சிபுரம் தேவப் பெருமாளின் இரு திருவடிகளைத் தொழுது ராமாநுஜரை ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில் ஆசார்யனாகச் சேர்த்தவர் ஆளவந்தார்.  அவர் வாழ்க.

கடக உத்தராடத்துக் காலுதித்தான் வாழியே –  கடக மாதமான ஆடி மாதத்தில் உத்தராட நக்ஷத்ரத்தில் வந்து இப்பூவுலகில் அவதரித்த ஆளவந்தார் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே –  தன்னுடைய அச்சம் நீங்கி மனதில் மகிழ்ச்சி அடைந்த ஆளவந்தார் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பெறுகிறது.   ஆளவந்தாருக்கு ராமானுஜரை தன்னுடைய சிஷ்யராக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவா.  ஆனால் எம்பெருமானுடைய திருவுள்ளமோ வேறு நோக்கில் இருந்தது.  இளையாழ்வாரை பெரிய நம்பி காஞ்சிபுரத்தில் இருந்து திருவரங்கத்திற்கு அழைத்து வருகிறார்.  திருவரங்கத்தின் எல்லைக்கு வரும்போதே அங்கு கூட்டமாக இருந்தவர்கள் சோகத்துடன் இருந்ததைக் கண்டு வினவ ஆளவந்தார் திருநாட்டிற்கு எழுந்தருளி விட்டார் என்று கூறினர்.  இளையாழ்வாருக்கு ஆளவந்தாரை ஆசார்யராக அடையும் பாக்கியம் கிடைக்கப் பெறாமல் போயிற்றே என்று மிகப் பெரிய வருத்தம்.   இளையாழ்வார் ஆளவந்தாரின் திருமேனியை சேவித்தார்.  அப்போது அவர் திருக்கரங்களில் மூன்று விரல்கள் மடங்கி இருந்ததைக் கண்டார்.   அங்கிருந்தவர்களிடம் இது பற்றிக் கேட்க அவர்கள் ஆளவந்தாருக்கு இருந்த மூன்று ஆசைகள் பற்றிக் கூறினர்.

அவையாவன,                              1. ஸ்ரீபாஷ்யத்திற்கு உரை எழுத வேண்டும். 2. திவாய்மொழியின் அர்த்தங்களை உலகமறியச் செய்ய வேண்டும் 3.  வேத வ்யாசர், பராசரர் போன்ற ரிஷிகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதாகும்.   அந்த ஆசைகள் நிறைவேறப் பெறாமையால் விரல்கள் மடங்கி இருக்கின்றன என்று கூறினர்.  உடனே இளையாழ்வார் எம்பெருமானின் திருவுள்ளமும், ஆசார்யன் திருவுள்ளமும் இருக்குமானால் நாம் ஆளவந்தாரின் ஆசைகளை நிறைவேற்றுவோம் என்று சபதம் எடுக்க மடங்கி இருந்த விரல்கள் நீண்டன என்று அறிகிறோம்.  அதன் மூலம் ஆளவந்தாரின் மனதில் இருந்த அச்சம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தார்.  அப்படிப்பட்ட ஆளவந்தார் வாழ்க. சபதம் எடுத்தபடியே ராமானுஜரும் ஸ்ரீபாஷ்யத்திற்கு உரை அவரே எழுதினார்.  திருக்குருகைப் பிள்ளானைக் கொண்டு திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் இடும்படி அருளினார்.  கூரத்தாழ்வாரின் திருக்குமாரர்களுக்கு வேத வ்யாஸர், பராசரர் என்று ரிஷிகளின் பெயர்களை வைத்து அவர்களும் பெரிய வித்வான்களாக வளரும்படி கடாக்ஷித்தார்.

ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே – ஆளவந்தாரின் திருவடிகள் இரண்டும் எப்பொழுதும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று ஆளவந்தாரின் வாழி திருநாமம் முடிவடைகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வாழிதிருநாமங்கள் – நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார் – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார்

ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம்

நாதமுனிகளின் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதமுனி.  பிற்காலத்தில் இப்பெயரே நாதமுனிகள் என்று வழங்கப்பட்டது. இவரது அவதார ஸ்தலம் காட்டு மன்னார் கோயிலில் என்கிற வீரநாராயணபுரம் ஆகும். இவரது திருநக்ஷத்ரம் ஆனி மாதம் அனுஷம் ஆகும்.  நியாய தத்துவம், யோக ரகஸ்யம், புருஷ நிர்ணயம் போன்ற க்ரந்தங்களை இவர் அருளிச் செய்துள்ளார்.  ஆனால் இவரது க்ரந்தங்கள் கிடைக்கப் பெறுவதில்லை.  யோக சாஸ்திரத்திலும் இசையிலும் மிகப் பெரிய வல்லுநராக இருந்துள்ளார் என்பதை அறிகிறோம்.  குழுவாக அமர்ந்து பல பேர் தாளம் போடும்போது யாரிடம் இருந்து எத்தனை முறை தாளம் வந்தது என்பதை துல்லியமாகக் காட்டியவர் இவர்.

நாம் ஏற்கனவே அறிந்தபடி நாலாயிர திவ்யப்ரபந்தங்களும் இவர் மூலமாகத் தான் நமக்குக் கிடைக்கப் பெற்றது.  இவர் வசித்த காட்டுமன்னார் கோயிலில் மேல் நாட்டிலிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் திருக்குடந்தை ஆராவமுதன் பெருமான் பற்றிய பாசுரங்களை ஸேவிக்கிறார்கள்.  அவற்றை செவியுற்ற நாதமுனிகள், அவர்களிடமிருந்து அந்தப் பாசுரங்களைப் பெற்று அந்தப் பதிகத்தின் இறுதிப் பாசுரத்தில் “குருகூர்ச் சடகோபன்” என்ற வார்த்தையையும் “ஆயிரத்துள் இப்பத்தும்” என்ற சொல்லையும் கொண்டு நம்மாழ்வாரைத் தேடி ஆழ்வார் திருநகரி வந்தடைந்தார்.  அங்கு இருந்தவர்களிடம் இந்தப் பாசுரங்களைப் பற்றி விசாரிக்க, அங்கு இருந்த மதுரகவி ஆழ்வாரின் வம்சத்தவர்கள் “நாங்கள் மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்கள் தான் அறிவோம்” என்றனர். மேலும் அவர்கள் “எவர் ஒருவர் நம்மாழ்வார் வாஸம் செய்த திருப்புளியாழ்வாரின் அடியில் தியானத்தில் அமர்ந்து இந்தக் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை பன்னீராயிரம் முறை ஸேவிக்கிறார்களோ அவருக்கு நம்மாழ்வார் ப்ரத்யக்ஷமாக ஸேவை சாதிப்பார் என்பதை அறிவோம்” என்றனர்.    நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் வல்லவராதலால் திருப்புளியாழ்வார் மரத்தினடியில் அமர்ந்து பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை அநுஷ்டிக்க நம்மாழ்வார் அவர் முன் தோன்றி “என்ன வேண்டும்” என்று வினவ, அதற்கு நாதமுனிகள் “தேவரீர் இயற்றிய ஆயிரம் பாசுரங்களைத் தந்தருள வேண்டும்” என்றார்.  நம்மாழ்வார் தாம் இயற்றிய அனைத்து ப்ரபந்தங்கள் (முறையே திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி) மட்டுமன்றி ஏனைய ஆழ்வார்கள் அருளிச் செய்த ப்ரபந்தங்களையும் சேர்த்து நாலாயிர திவ்ய ப்ரபந்தமாக ஆசார்யனாக இருந்து  நாதமுனிகளுக்குக் கொடுத்து அருளினார்.  மேலும் இந்த நாலாயிர ப்ரபந்தங்களுக்குமான விளக்கவுரையையும் நாதமுனிகளிடம் அளித்தார்.  இவ்வாறு நாதமுனிகள் நம்மாழ்வாருக்கு சிஷ்யனானார் என்பதை அறிகிறோம்.

இவர் கலியுகம் தோன்றி ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கப் பின் அவதரித்தவர்.  எவ்வாறு துவாபர யுகம் வரை ஒரே வேதமாக இருந்ததை வேத வ்யாஸர் நான்கு பிரிவுகளாகப் பிரித்தாரோ அதைப் போன்று நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற ப்ரபந்தங்களை நான்கு ஆயிரமாகப் பிரித்து நமக்கு அளித்தவர் நாதமுனிகள்.  கலியுகத்தில் ஞானமும், சக்தியும் குறைந்த மக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வண்ணம் தமிழ் வேதமான நாலாயிரம் பாசுரங்களைக் கொண்ட ப்ரபந்தங்களை நான்கு பகுதிகளாகப் பிரித்தார்.  மேலும் இவர் இசையில் வல்லவராதலால் இயற்பாவைத் தவிர மற்ற ப்ரபந்தங்களை தம்முடைய மருமக்களான கீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் ஆகியோருக்கு இசையுடன் கற்றுக் கொடுத்து இந்தப் ப்ரபந்தங்கள் பரவும்படி செய்தவர்.   இன்றைக்கும், திருவரங்கம், திருநாராயணபுரம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற திவ்ய தேசங்களில் அத்யயன உத்ஸவத்தின்போது  நடக்கும் அரையர் சேவையை முதன் முறையாகத்  துவக்கி வைத்தவர் நாதமுனிகள்.    திருவரங்கத்திலும் இவர் பல கைங்கர்யங்களைச் செய்திருக்கிறார். திருமங்கையாழ்வார் காலத்தில் நடத்தப்பட்ட அத்யயன உற்சவத்தை மீண்டும் திருவரங்கத்தில் நடக்கும்படி செய்தவர்.

நாதமுனிகள் வாழி திருநாமம்

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே
ஆளவந்தார்க்கு உபதேசமருளிவைத்தான் வாழியே
பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே
பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே
கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே

நாதமுனிகள் வாழி திருநாமம் விளக்கவுரை

ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே –  ஆனி மாதம் அனுஷ நக்ஷத்ரத்தில் அவதரித்தவர் நாதமுனிகள்.  அவர் பல்லாண்டு வாழ்க.

ஆளவந்தார்க்கு உபதேசமருளிவைத்தான் வாழியே – நாதமுனிகளின் திருப்பேரனார் தான் யாமுனாசார்யர் என்று சொல்லக்கூடிய ஆளவந்தார்.    ஆளவந்தார் பிற்காலத்தில் பெரிய ஆசார்யராக உருவாகி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை நன்றாக வளர்ப்பார் என்று முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தார் நாதமுனிகள்.  உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள் மூலமாக ஆளவந்தாருக்கு உபதேசம் செய்து சிறந்த ஆசார்யராக உருவாகும்படி பணித்தார்.

பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே – பானு என்றால் சூரியன்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பானு என்ற சொல் எம்பெருமானைக் குறிக்கும்.  சேதநர்களுக்கு ஞானத்தைக் கொடுத்து சம்சாரம் என்னும் இருளை அகற்றுவதால் எம்பெருமான் சூரியனாகக் கருதப்படுகிறார்.    நம்மாழ்வாரும் வகுள பூஷண பாஸ்கரன் என்று கொண்டாடப்படுகிறார்.  வகுள மாலையை அணிந்து இப்பூவுலகத்தினருக்கு அஞ்ஞானம் என்ற இருளை நீக்கி ஞானத்தை அளித்தவர் நம்மாழ்வார். அந்த நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் திருப்புளி ஆழ்வார் கீழே அமர்ந்திருந்தார்.  வட திசையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்த மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் ஒளியால் ஈர்க்கப்பட்டு தென்திசை நோக்கி பயணித்து ஆழ்வார் திருநகரியை வந்து நம்மாழ்வாரைத் தவிர வேறு ஒன்று எண்ணாதவராய் அவருக்குக் கைங்கர்யம் செய்து வந்தார்.  அவ்வாறு தெற்கில் சூரியனான நம்மாழ்வாரைக் கண்டு வந்த மதுரகவி ஆழ்வாரின் ப்ரபந்தமான கண்ணிநுண் சிறுத்தாம்பை 12000 முறை  ஸேவித்தவர் நாதமுனிகள் என்னும் பொருள் இவ்வரியில் காட்டப்படுகிறது.  மேலும் நாதமுனிகள் திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பின் நின்று போயிருந்த அத்யயன உற்சவத்தையும், நம்மாழ்வார் பரமபதம் செல்லும் உற்சவத்தையும் மிகச் சிறப்பாக திவ்ய தேசங்களில் நடக்கும்படி செய்தவர்.  மதுரகவி ஆழ்வாருக்கு ஈடான சிறப்புப் பெற்றவர் நாதமுனிகள். அத்தகைய சிறப்பு மிகுந்த நாதமுனிகள் பல்லாண்டு காலம் வாழ்க.

பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே –  பராங்குசன் என்றால் நம்மாழ்வார்.   நம்மாழ்வாரின் ப்ரபந்தங்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி ஆகியவற்றை மிகவும் ஆசையுடன் கற்றுத் தேர்ந்த நாதமுனிகள் வாழ்க.

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே –  திவ்ய ப்ரபந்த பாசுரங்களை தாளம் கொண்டு இசை வடிவில் அமைத்து அவற்றை பிறர் அறியச் செய்தவர் நாதமுனிகள்.  அவர் பல்லாண்டு வாழ்க.

கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே – ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமானது பெரிய வ்ருக்ஷம் போல வளர வேண்டும் என்று தனது உபதேசங்களினால் அனைவருக்கும் அருளிச்செய்தார்.  நம்மாழ்வாருக்குப் பின் முடங்கி இருந்த ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குப் புத்துயிர் அளித்து மிகுந்த கருணையுடன் தனக்குக் கிடைத்த அநுபவமானது இவ்வுலகத்தாருக்கும் கிடைக்கும்படி வழி செய்தார்.

நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே – நானிலம் என்றால் நான்கு நிலங்களைக் (குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல்) கொண்ட இப்பூவுலகம்.  இப்பூவுலகத்தில் குருபரம்பரையை நிலைநாட்டியவர் நாதமுனிகள்.   அவர் பல்லாண்டு வாழ்க.

நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே – நல்ல குணங்களைக் கொண்ட நாதமுனிகளின்  திருவடிகள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று நாதமுனிகளின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

உய்யக் கொண்டார் வைபவம்

உய்யக்கொண்டாரின் இயற்பெயர் புண்டரீகாக்ஷர்.  நாதமுனிகளிடம் சிஷ்யராக இருந்து நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களைக் கற்றவர்.  இவரது அவதார ஸ்தலம் திருவெள்ளறை.  இவர் சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்ரத்தில் அவதரித்தவர்.  நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் சிறந்தவர் என்பதை அறிந்தோம்.  நாதமுனிகளின் முக்கியமான சிஷ்யர்கள் உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன் ஆகியோர்.   நாதமுனிகள் யோகசாஸ்திரத்தை மேற்கூறிய சிஷ்யர்களுக்கு பயிற்றுவிக்க விரும்பியபோது, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ?” என்று கூறினார்.    இறந்து போனவர்கள் வீட்டில் திருமணம் போன்ற மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசுவார்களா என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.  இந்த சம்சாரத்தில் இருப்பவர்கள் அல்லலுறும்போது நான் மட்டும் யோக சாஸ்திரத்தைக் கற்று எம்பெருமானை அனுபவிக்கலாகுமா? என்று உய்யக்கொண்டார் வினவினார்.  நான் நாலாயிர பாசுரங்களைக் கற்றுத் தேர்ந்து அவற்றை இவ்வுலகத்தவர்க்கு அறிவித்து அவர்கள் உய்யும் வழி செய்வேன் என்று சூளுரைத்தார். மற்றவர்கள் உஜ்ஜீவனத்திற்காகத் தன்னை அர்ப்பணித்தவர் என்ற பொருள்படும்படி உய்யக் கொண்டார் என்ற திருநாமம் ஏற்பட்டது.

உய்யக் கொண்டார் வாழி திருநாமம்

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே
மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே
சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே
சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே
நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே
நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே
மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே
வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே

உய்யக் கொண்டார் வாழி திருநாமம் விளக்கவுரை

வாலவெய்யோன்தனை வென்ற வடிவழகன் வாழியே – இவ்விடத்தில் பால வெய்யோன், இளம் சூரியன் என்று பொருள்படும்படி கூறப்பட்டுள்ளது.  இளம் சூரியனின் பிரகாசத்தையும் வெல்லும் வண்ணம் சிறந்த வடிவழகு கொண்ட உய்யக் கொண்டார் வாழ்க.

மால் மணக்கால் நம்பிதொழும் மலர்ப்பதத்தோன் வாழியே – மால் என்றால் அன்பு என்று பொருள்.  உய்யக் கொண்டாரின் சிஷ்யர் மணக்கால் நம்பி.  உய்யக் கொண்டாரிடத்தில் அன்பு கொண்ட மணக்கால் நம்பி தொழும் மலர் போன்ற திருவடிகளை உடைய உய்யக் கொண்டார் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரிகளில் காட்டப்பட்டுள்ளது.  சிஷ்யரின் பெயரைச் சொல்லி ஆசார்யனைக் கொண்டாடும் இவ்வரி உய்யக் கொண்டாரின் வாழி திருநாமத்தின் சிறப்பம்சமாகும்.

சீலமிகு நாதமுனி சீருரைப்போன் வாழியே – மிகச் சிறந்த குணங்களை உடைய நாதமுனி அவர்களின் பெருமையை உலகோர் அறிய எடுத்துரைத்த உய்யக் கொண்டார் வாழ்க.

சித்திரையில் கார்த்திகை நாள் சிறக்கவந்தோன் வாழியே – சித்திரை மாதம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்தமையால் அந்தக் கார்த்திகை நக்ஷத்திரமே சிறப்புப் பெற்றது என்று இவ்வரியில் காட்டப்பட்டுள்ளது.  அவ்வாறு சித்திரையில் கார்த்திகை நக்ஷத்திரத்தில் அவதரித்த உய்யக் கொண்டார் வாழ்க.

நாலிரண்டும் ஐயைந்தும் நமக்குரைத்தான் வாழியே – இவ்வரியும் அடுத்த வரியும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டது.  நாலிரண்டு என்பது எட்டு எழுத்துகளைக் கொண்ட (அஷ்டாக்ஷரம்) நாராயண மந்திரம்.  ஐயைந்து என்பது இருபத்தைந்து எழுத்துகளைக் கொண்ட த்வய மஹா மந்திரத்தைக் குறிக்கும்.  திருமந்திரத்தையும், த்வய மஹா மந்திரத்தையும் நமக்கு எடுத்து உரைத்தவர் உய்யக் கொண்டார்.  அவர் பல்லாண்டு வாழ்க.

நாலெட்டின் உட்பொருளை நடத்தினான் வாழியே – நாலெட்டு என்பது முப்பத்திரண்டு எழுத்துகளைக் கொண்ட சரம ஶ்லோகத்தைக் குறிப்பதாகும்.  எம்பெருமான் கீதோபதேசத்தில் உரைத்த “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஶுச:||” சரம ஶ்லோகம் முப்பத்திரண்டு எழுத்துகளைக் கொண்டது.  ஸ்ரீவைஷ்ணவர்கள் சம்பிரதாயத்தில், திருமந்திரம், த்வய மஹா மந்திரம் மற்றும் சரமஸ்லோகம் முக்கியமான உபதேசங்களாகக் கருதப்படுகிறது.  இவை பஞ்சசம்ஸ்காரத்தின் போது ஆசார்யரால் உபதேசிக்கப்படும் மந்திரங்கள் ஆகும்.  இம்மந்திரங்களின் உட்கருத்துகளை உணர்ந்து அதன்படி இவ்வுலகத்தை உய்வித்த உய்யக் கொண்டார் வாழ்க.

மால் அரங்க மணவாளர் வளமுரைப்போன் வழியே – திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீமந் நாரயணன், அழகிய மணவாளர் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர்.  பெரிய பெருமாள் எனப்படும் அந்த எம்பெருமானின் பெருமையை அறிவித்த உய்யக்கொண்டார் பல்லாண்டு வாழ்க.

வையம் உய்யக்கொண்டவர் தாள் வையகத்தில் வாழியே – இந்த உலகமே உஜ்ஜீவிக்கும் வகையில் வழி நடத்திய உய்யக்கொண்டாரின் திருவடிகள் இந்த பூவுலகத்தில் பல்லாண்டு வாழ வேண்டும் என்று உய்யக் கொண்டாரின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வாழிதிருநாமங்கள் – ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார் – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார்

ஸேனை முதலியார் வைபவம்

ஸேனை முதலியார் என்பவர் விஷ்வக்ஸேனர் என்று கொண்டாடப்படும் நித்யஸுரி ஆவார்.   நித்யஸுரிகள் என்பவர்கள் பரமபதத்தில் இருந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள்.  அவர்களுக்கு சம்ஸார பந்தங்கள் என்பது அறவே கிடையாது.  அந்த நித்யஸுரிகளுக்குத் தலைவராகக் கருதப்படுபவர் விஷ்வக்ஸேனர்.  எம்பெருமானுக்கு சேனாதிபதியாக இருந்து நிர்வாகம் செய்பவர்.  எம்பெருமான் பரமபதத்தில் பிராட்டிமார்களுடனும், நித்யஸுரிகளுடனும், முக்தர்களுடனும் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டு இருப்பான்.  விஷ்வக்ஸேனர் ஒரு மூத்த மந்திரி போல் இருந்து அனைத்து நிர்வாகங்களையும் சிறப்பாக நடத்துவார் என்பதை அறிகிறோம். “த்வதீய புக்தோஜ்ஜித ஶேஷபோஜிநா” என்று ஸ்தோத்ர ரத்நத்தில் இவருடைய வைபவத்தை ஆளவந்தார் அருளியுள்ளார்.  எம்பெருமான் அமுது செய்த சேஷப் பிரசாதத்தை முதலில் உண்ணக் கூடியவர் இந்த விஷ்வக்ஸேனர் என்றும் அறியலாம்.  எம்பெருமானுடைய சேஷத்தை உண்ணக் கூடியவர் என்னும் பொருள் படும்படி “சேஷாஸநர்” என்றும் அழைக்கப் படுகிறார்.  இவருடைய திருநக்ஷத்ரம் ஐப்பசி பூராடம்.  நித்யஸுரிகளுக்குப் பிறப்பு இல்லாதபோது திருநக்ஷத்ரம் எப்படி இருக்கும் என்ற ஐயம் எழலாம்.  எவ்வாறு எம்பெருமான் அவதாரம் எடுத்து இந்தப் பூவுலகில் எழுந்தருளினாரோ அதே போன்று எம்பெருமானின் அர்ச்சாவதார காலத்தில் விஷ்வக்ஸேனரும் உடன் எழுந்தருளியிருப்பார்.  ப்ரம்மோத்ஸவ காலங்களில் திவ்யதேசங்களில் கொடியேற்றம் முன்பே நகர சோதனை என்ற பெயரில் எம்பெருமான் வீதி உலா செல்லும் திருவீதிகளை சோதனை செய்து வருவார்.  இவ்வாறு ஸேனை முதலியார் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.  பெரிய பிராட்டிக்குப் பிறகு, மூன்றாவது ஆசார்யராக இவர் இருக்கிறார்.

ஸேனை முதலியாரின் வாழி திருநாமம்

ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

ஸேனை முதலியாரின் வாழி திருநாமம் விளக்கவுரை

ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே – சிறப்புடைய ஐப்பசி மாதத்தில் பூராட நக்ஷத்ரத்தில் உதித்த செல்வன் (எம்பெருமானுக்கு விடாது கைங்கர்யம் செய்யும் செல்வத்தை உடையவர்) வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே – ஒண்டொடியாள் என்றால் வளைந்த அழகிய கைகளை உடையவள்.  சூத்ரவதி என்பது விஷ்வக்ஸேனரின் தர்மபத்தினி.  வளைந்த அழகிய கைகளையுடைய சூத்ரவதி திருமார்பில் உறைந்திருக்கக் கூடிய விஷ்வக்ஸேனர் வாழ்க.  ஒண்டொடியாள் என்ற சொல்லை நம்மாழ்வாரும் தனது பாசுரங்களில் எடுத்து ஆண்டிருக்கிறார்.  பிராட்டியை வர்ணிக்கும்போது ஆழ்வார் அழகிய வளைந்த கைகளை உடையவள் என்று கூறுகிறார்.  எவ்வாறு பிராட்டியானவள் எம்பெருமானை “அகலகில்லேன் இறையுமென்று” என்று இமைப்பொழுதும் எம்பெருமானின் திருமார்பை விட்டுப் பிரியாது இருக்கிறாளோ அவ்வாறே சூத்ரவதியும் விஷ்வக்ஸேனரை விட்டுப் பிரியாது இருக்கிறாள்.  விஷ்வக்ஸேனரும் எம்பெருமானின் அம்சமாகவே கருதப்படுகிறார்.   பல திவ்யதேசங்களில்  ப்ரம்மோத்சவம் துவங்குவதற்கு முன்பாக மண்ணில் விதைகளை விதைத்து “திருமுளைச்சாற்று” என்ற வைபவம் நடக்கும். இந்த வைபவத்தை விஷ்வக்ஸேனர்தான் மேற்பார்வையிடுவதாக ஐதீகம்.  நகர சோதனை செல்வதற்கு முன்பாக விஷ்வக்ஸேனரை ஒரு பல்லக்கில் எம்பெருமானுக்கு முதுகு காட்டியபடி எழுந்தருளச்செய்து இந்த திருமுளைச்சாற்று வைபவத்தை நடத்துவர்.  மற்றைய ஆழ்வார்களோ ஆசார்யர்களோ எழுந்தருளச் செய்யும்போது எம்பெருமானைப் பார்த்தபடிதான் எழுந்தருளச் செய்வார்கள்.  இவர் எம்பெருமானின் பிரதிநிதியாக இருப்பதால் எம்பெருமானைப் போலவே எழுந்தருளியிருப்பார்.  அத்தகைய சிறப்பு வாய்ந்தவர்.  தன் பத்தினியான வளைந்த அழகிய கைகளையுடைய சூத்ரவதி உறையும் திருமார்பை உடைய விஷ்வக்ஸேனர் பல்லாண்டு வாழ்க.

ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே – இந்தப் பூவுலகில் சடகோபன் எனப்படும் நம்மாழ்வாருக்கு நல்ல உபதேசங்களை அருளியவர் விஷ்வக்ஸேனர்.  எம்பெருமான் நம்மாழ்வாருக்கு மயர்வற மதிநலம் அருளிய போதும், விஷ்வக்ஸேநர் மூலமாக நம்மாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து நல்ல உபதேசங்களைச் செய்து நம்மாழ்வாருக்கும் குரு பரம்பரையில் தனக்கு அடுத்தபடியான ஆசார்யர் ஸ்தானத்தை அருளியவர் இந்த ஸேனை முதலியார்.  அவ்வாறு நம்மாழ்வாருக்கு உபதேசங்களை செய்வித்த ஸேனை முதலியார் பல்லாண்டு வாழ்க.

எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே –  எம்பெருமான் சார்பில் எம்பெருமான் செங்கோலையும், கையில் ஒரு பிரம்பையும் வைத்துக்கொண்டு எம்பெருமானின் அரசை வழி நடத்தும் விஷ்வக்ஸேநர் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே – முப்பத்து மூவர் என்பது ஒவ்வொரு அண்டத்திற்கும் ப்ரம்மா (1), இந்த்ரன் (1), த்வாத ஆதித்யர்கள் (12), ஏகாத ருத்ரர்கள் (11), அஷ்ட வசுக்கள் (8) என்று முப்பத்து மூன்று தேவர்கள் உண்டு.  இந்த முப்பத்து மூன்று தேவர்களும் விஷ்வக்ஸேநரின் சொற்படி நடப்பவர்கள்.  அவ்வாறு இந்த முப்பத்து மூவரும் பணிந்து நடக்கும் சிறப்புடைய விஷ்வக்ஸேநர் வாழ்க.

பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே – தாமரை மலரில் தோன்றிய ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவடிகளை வணங்குபவர் விஷ்வக்ஸேநர்.  குரு பரம்பரையில் பெரிய பிராட்டியாரின் சிஷ்யராக இருக்கக் கூடியவர் விஷ்வக்ஸேநர்.  அவர் வாழ்க.

தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே  – திருவரங்கத்தில் பெரிய பெருமாளின் முதல் ப்ராகாரத்திலேயே விஷ்வக்ஸேநரின் சந்நிதி அமைந்துள்ளது. சிறந்த புகழை உடைய திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதரை எப்பொழுதும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கக் கூடிய விஷ்வக்ஸேநர் பல்லாண்டு வாழ்க என்று இந்த வரியில் காட்டப்படுகிறது.

சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே – படைத்தளபதி, சேனாதிபதி என்று சொல்லக் கூடிய விஷ்வக்ஸேநருடைய சிவந்த தாமரை போன்ற திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ்க என்று விஷ்வக்ஸேநரின் வாழி திருநாமம் முடிவடைகிறது.

நம்மாழ்வார் வைபவம்

சடகோபன், மாறன், மகிழ்மாறன், வழுதிவளநாடன் என்று வேறு பெயர்களை உடையவர்.  வைஷ்ணவ குலபதி என்று கொண்டாடப்படுபவர்.  ப்ரபந்நர்களுக்குத் தலைவராக இருப்பதால் ப்ரபந்ந ஜந கூடஸ்தர் என்று அழைக்கப்பட்டவர்.  ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரிலே எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப்பெற்று அவதரித்தவர்.  நம்மாழ்வாருடைய திருநக்ஷத்ரம் வைகாசி விசாகம்.  இன்றளவும் வைகாசி விசாகம் ஆழ்வார் திருநகரியிலே மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த திவ்யதேசத்தில் எம்பெருமானுக்கு உள்ள அனைத்து பெருமைகளும் ஆழ்வாருக்கும் உண்டு.  எம்பெருமானுக்கு இரண்டு ப்ரம்மோத்ஸவம்.  ஆழ்வாருக்கும் இரண்டு அவதார உத்ஸவங்கள்.  ஒரு உத்ஸவம் வைகாசி விசாகத்தில் கொண்டாடப்படும். மற்றொன்று மாசி விசாகத்தில் விக்ரஹ ப்ரதிஷ்டை உத்ஸவம் கொண்டாடப்படும்.  ஆழ்வார் திருநகரி பெருமாளுக்கு கொடிமரம் உள்ளது போல் ஆழ்வாருக்கும் ஹம்ச கொடியுடன் கூடிய கொடிமரம் உள்ளது.  நான்கு வேதங்களின் சாரங்களையும் நான்கு ப்ரபந்தங்களில் (திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி) நம்மாழ்வார் அருளிச் செய்தமையால் “வேதம் தமிழ் செய்த மாறன்” என்று அறியப்படுகிறார்.

நம்மாழ்வார் வாழி திருநாமம்

திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே
திருவான திருமுகத்துச் செவ்வியென்றும் வாழியே
இருக்குமொழி என் நெஞ்சில் தேக்கினான் வாழியே
எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே
கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே
காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே
வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே
மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே

நம்மாழ்வார் வாழி திருநாமம் விளக்கவுரை

திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே – நம்மாழ்வார் திருக்குருகூரில் வீற்றிருக்கும் எம்பெருமானுக்கு நிகரான வைபத்தைப் பெற்றதனால் பெருமாள் என்று இவ்வரியில் காட்டப்படுகிறது. திருக்குருகூரில் அவதரித்த நம்மாழ்வாரின் திருவடிகள் பல்லாண்டு வாழ்க.

திருவான திருமுகத்துச் செவ்வியென்றும் வாழியே – நம்மாழ்வாரின் பொன்னைப் போன்ற திருமுகத்தில் விளங்கும் பொலிவானது  (செவ்வி) எந்தக் காலத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது இவ்வரியில் காட்டப்படுகிறது.

இருக்குமொழி என் நெஞ்சில் தேக்கினான் வாழியே – வேதத்தில் முதன்மையான வேதமான ரிக் வேதம் தமிழில் “இருக்கு” என்று சொல்லப்பட்டுள்ளது.   அநாதியான வேதத்தில் எண்ணற்ற சாகைகள் உள்ளன.  அதில் கூறப்பட்ட சாரங்களை நமக்கு தமது ப்ரபந்தங்களில் எளிமையாக நமது நெஞ்சில் பதியும் வண்ணம் அருளிச் செய்தவர் நம்மாழ்வார்.  அவர் பல்லாண்டு வாழ வேண்டும்.

எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே – என்னுடைய தந்தையான (அப்பிள்ளையின் வாய் மொழியில்) எதிராசர் (எதிகளுக்கு தலைவரான எம்பெருமானார்) என்று அழைக்கப்படும் ராமாநுஜருக்கு இறைவனான நம்மாழ்வார் பல்லாண்டு வாழ்க. “பூமன்னு மாது பொருந்திய மார்பன், புகழ் மலிந்த பாமன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன்” என்று திருவரங்கத்தமுதனார் இராமாநுச நூற்றந்தாதியில் பாடிய வண்ணம் நம்மாழ்வாரின் திருவடியை அடைந்து உஜ்ஜீவனம் அடைந்தவர் எம்பெருமானார்.  நம்மாழ்வாரே ராமாநுஜரிடம் மிகுந்த உகப்புடன் இருந்தவர்.  அத்தகைய சிறப்பு பெற்ற நம்மாழ்வார் வாழ்க.

கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே –   நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் ஒவ்வொரு பதிகத்தின் பலப் பாசுரங்களிலும், ஆழ்வாரின் பாசுரங்களைச் சேவித்தவர்கள் மீண்டும் இப்புவியில் பிறக்க மாட்டார்கள் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.  அவ்வாறு நம்மாழ்வாரின் பாசுரங்களைச் சேவிப்பதன் மூலம் கர்ப்பவாசம் செய்யாமல் (மீண்டும் பிறவாமல்) பரமபதம் சென்று எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்யும் வண்ணம் நம்மைக் காத்து ரக்ஷிக்கும் தன்மை பெற்ற நம்மாழ்வார் வாழ்க என்று இவ்வரியில் காட்டப்பட்டுள்ளது.

காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே – காசினி என்றால் உலகம்.  இப்பூவுலகில் நமக்கு ஆசார்யனை காட்டிக் கொடுத்தவர் நம்மாழ்வார்.  நாதமுனிகளை ஒரு ஆசார்யனாக உருவாக்கி நமக்கு அளித்தவர் நம்மாழ்வார். நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் வல்லவராதலால் திருப்புளியாழ்வார் மரத்தினடியில் அமர்ந்து பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை அநுஷ்டிக்க நம்மாழ்வார் அவர் முன் தோன்றி “என்ன வேண்டும்” என்று வினவ, அதற்கு நாதமுனிகள் “தேவரீர் இயற்றிய ஆயிரம் பாசுரங்களைத் தந்தருள வேண்டும்” என்றார்.  நம்மாழ்வார் தாம் இயற்றிய அனைத்து ப்ரபந்தங்கள் (முறையே திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி) மட்டுமன்றி ஏனைய ஆழ்வார்கள் அருளிச் செய்த ப்ரபந்தங்களையும் சேர்த்து நாலாயிர திவ்ய ப்ரபந்தமாக கொடுத்து அதற்கான விளக்கங்களையும் நாதமுனிகளுக்குக் கொடுத்து அருளினார்.  அதன்மூலம் குரு பரம்பரையில் நம்மாழ்வாருக்கு அடுத்த ஆசார்யராக நாதமுனிகளைக் காட்டினார் என்றும் ஒரு அர்த்தம் கொள்ளலாம்.

மேலும் ராமாநுஜரைக் காட்டியதாகவும் கொள்ளலாம். மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி நீரைக் காய்ச்சும்பொழுது முதலில் கிடைத்த திருமேனி பவிஷ்யதாசார்யர் (ஸ்ரீராமாநுஜர்) விக்ரஹம் கை கூப்பிய வண்ணம் கிடைத்தது.  மதுரகவி ஆழ்வார் ஆச்சர்யத்துடன் நம்மாழ்வாரிடம் நான் தேவரீரது விக்ரஹம் வேண்டினேன் ஆனால் கிடைத்திருப்பதோ கை கூப்பியபடி வேறு ஒரு விக்ரஹம் என வினவ, நம்மாழ்வார் இவர் என்னுடைய திருவடி ஸ்தானம் ஆனவர்.  பிற்காலத்தில், ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆசார்யர் தோன்றி வைணவ சம்பிரதாயத்தை சிறந்த முறையில் வளர்ப்பார் என்று உரைக்கிறார்.  மதுரகவி ஆழ்வார் தேவரீருடைய விக்ரஹம் வேண்டும் என வினவ, நம்மாழ்வார் மீண்டும் தாமிரபரணி நீரைக் காய்ச்சினால் கிடைக்கும் என்று அருள, அதன்படி கிடைக்கப் பெற்ற விக்ரஹம் தான் நாம் இப்போது ஆழ்வார் திருநகரியில் தரிசிக்கும் ஆழ்வார் திருமேனி ஆகும்.  இது நம்மாழ்வார் காட்டிக் கொடுத்த ராமாநுஜரின் முதல் திருமேனி ஆகும்.

மேலும் நாதமுனிகளுக்கு ப்ரபந்தங்களை அருளும்போது “பொலிக பொலிக” பதிகம் வரும்போது, ஒரு சந்நியாசியின் வடிவில் நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் கனவில் காட்சி தருகிறார்.  நாதமுனிகள் அந்த திருமேனியை உகப்புடன் தரிசித்து அத்திருமேனியை நம்மாழ்வாரிடம் வேண்ட, இத்திருமேனி உடைய ஆசார்யர் பிற்காலத்தில் அவதரிப்பார் என்று நம்மாழ்வார் அறிவித்தார்.  மேலும் ஒரு சிற்பியைக் கொண்டு அத்திருமேனியை வடிவமைத்து நாதமுனிகளிடத்தில் கொடுத்தார் நம்மாழ்வார்.  இந்த இரண்டாவது பவிஷ்யதாசார்யர் திருமேனி நாதமுனி காலம் தொட்டு, உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி என்று இறுதியில் திருக்கோட்டியூர் நம்பியை அடைந்து திருக்கோட்டியூரில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் நாம் சேவிக்கும்படி உள்ளது.  அத்தகைய சிறப்புடைய ஆசார்யர்களான நாதமுனிகளையும்  ராமாநுஜரையும் இப்புவிக்கு காட்டிக் கொடுத்த நம்மாழ்வார் வாழ்க.

வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே – என்னுடைய வருத்தங்கள் அனைத்தும் நீக்கி என்னை வாழ்ச்சி அடையச் செய்த நம்மாழ்வார் வாழ்க.  நம்மாழ்வார் தமது பாசுரங்கள் மூலமாக எம்பெருமானை, ஆசார்யனைக் காட்டிக் கொடுத்துள்ளார்.  அவர் பாசுரங்களைச் சேவிப்பதன் மூலம் எம்பெருமான் மற்றும் ஆசார்யன் அனுக்ரஹம் பெற்று மேன்மை அடையலாம் என்று அறிகிறோம்.  நம்மை வாழ்ச்சி அடையச் செய்த நம்மாழ்வார் பல்லாண்டு வாழ்க.

மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே – மதுரகவி ஆழ்வாருக்கு ஆசார்யனாக இருந்தவர் நம்மாழ்வார்.  “தேவு மற்றறியேன்” என்று மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைத் தவிர வேறு ஒன்றும் எண்ணாதவர்.  அவ்வாறு மதுரகவி ஆழ்வாருக்கு அனைத்துமாக இருந்த நம்மாழ்வார் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நம்மாழ்வாரின் வாழி திருநாமம் முற்றுப்பெறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வாழிதிருநாமங்கள் – பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார் – எளிய விளக்கவுரை

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம்

அப்பிள்ளை அருளிய வாழி திருநாமங்கள் வரிசையில் ஓராண்வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களின் விளக்கவுரையைக் காணலாம்.

பெரிய பெருமாள் வைபவம் 

பெரிய பெருமாள் நமது குரு பரம்பரையின் முதல் ஆசார்யராகக் கருதப்படுகிறார்.  “லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்” எனும் வகையில் குரு பரம்பரையானது மஹாலக்ஷ்மித் தாயாரின் நாதனான ஸ்ரீமந் நாராயணனில் இருந்து துவங்குகிறது.  ஸ்ரீமந் நாராயணன் என்பது “பெரிய பெருமாள்” என்று கூறப்படும் திருவரங்கத்தில் உறையும் ஸ்ரீரங்கநாதர் தான் என்பதை அறியலாம்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் அர்ச்சாவதாரத்திற்குத் தனிச்சிறப்பு உண்டு.  ஏனென்றால் எம்பெருமானின் ஸெளலப்யம் எனப்படும் எளிமை குணம் வெளிப்படுவது அரச்சாவதாரத்தில்தான்.  ஆழ்வார்களின் பாசுரங்களில் அநுபவிக்கப் பெற்ற ஸ்தலங்கள் திவ்யதேசங்கள் என்பதை நாம் அறிவோம்.  அப்படிப்பட்ட 108 திவ்யதேசங்களில் முதன்மையான திவ்யதேசமாகக் கருதப்படுவது “பூலோக வைகுண்டம்” என்று அழைக்கப்படும் திருவரங்கம் ஆகும்.  பொதுவாக எம்பெருமானுக்கு “உபயவிபூதி நாதன்” என்ற பெருமை உண்டு.  நித்ய விபூதி மற்றும் லீலா விபூதிக்குத் தலைவராகக் கருதப்படுபவர் எம்பெருமான். திருவரங்கத்திற்கு ஏற்பட்ட தனிப்பெருமை என்னவெனில், இந்த ஸ்தலம் “திருதீயா விபூதி” என்று அழைக்கப்படுகிறது.  திருதீயா விபூதி என்பது பரமபதத்திலும் சேராமல் ஸம்ஸாரத்திலும் சேராமல் தனித்திருப்பதாகும்.  லீலா விபூதியில் இருந்தபோதும் பரமபத அளவிற்கு பெருமையுடையதாய் திருவரங்கம் உள்ளது.  எனவே எம்பெருமானுக்கான மூன்றாவது விபூதி என்று திருவரங்கம் அறியப்படுகிறது.

அவ்வாறு சிறப்புடைய திருவரங்கத்திற்கு அனைத்து ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.  “பதின்மர் பாடும் பெருமாள்” என்று ஸ்ரீரங்கநாதர் அழைக்கப்படுகிறார்.  அதேபோன்று குருபரம்பரையில் வந்த ஆசார்யர்கள் ஆளவந்தார் தொடக்கமாக மணவாள மாமுநிகள் இறுதியாக அனைத்து ஆசார்யர்களும் திருவரங்கத்திலேயே வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  இவர்களில் நாதமுனிகள், உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால்நம்பி திருவரங்கத்தில் வசித்ததாகத் தெரியவில்லை.  மேலும் திருவாய்மொழிப்பிள்ளை எனப்படும் ஆசார்யர் நம்மாழ்வாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு, நம்மாழ்வாரின் இருப்பிடமான ஆழ்வார் திருநகரியை புனர் நிர்மாணம் செய்து ஆழ்வார் திருநகரியிலேயே வாழ்ந்து வந்தார்.  எனவே திருவாய்மொழிப்பிள்ளை, நாதமுனிகள், உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால்நம்பி  தவிர ஏனைய ஆசார்யர்கள் திருவரங்கத்தில் வாழ்வதையே தமது வாழ்நாள் கொள்கையாகக் கடைப்பிடித்தனர் என்று அறிகிறோம்.    ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் அல்லாமல் ஏனைய சம்பிரதாயத்து ஆசார்யர்களும் திருவரங்கத்து நம்பெருமாளிடம் ஈடுபாடு கொண்டு திருவரங்கத்திலேயே வாழ்ந்தனர் என்பதை நாம் அறியலாம்.  அத்தகைய சிறப்புடைய திருவரங்கத்தில் உறையும் நம்பெருமாள் (ஸ்ரீரங்கநாதர்) ஓராண்வழி ஆசார்யரில் முதன்மையான ஆசார்யனாகக் கொண்டாடப் படுகிறார்.

எம்பெருமானின் திருநக்ஷத்திரம் ரோகிணி என்று கூறப்படுகிறது்.  பெரிய பெருமாள் கண்ணனாக அறியப்படுவதால் ரோகிணி நக்ஷத்திரம் என்று கொள்ளப்படுகிறது.  நம்பெருமாளின் திருநக்ஷத்திரம் ரேவதி என்றும் கூறுவார்கள். துவாபர யுகத்தில் கண்ணனாக அவதாரம் செய்து வாய்மலர்ந்தருளிய பகவத் கீதையும், மணவாள மாமுநிகளைக் கெளரவிக்கும் வகையில் அருளிய ஸ்ரீசைலேச தயாபாத்ரம் என்ற தனியனும் எம்பெருமான் அருளிச் செய்த க்ரந்தங்கள் (ஸ்ரீஸுக்திகள்) என்று அறியலாம்.    ஸ்ரீரங்கநாதர் என்று ப்ரசித்தமாக அறியப்படுபவர்.  பரம பதத்தில் இருந்து தனது விமானத்துடன் இறங்கி வந்து சத்ய லோகத்தில் பிரம்மாவால் ஆராதனை செய்யப்பட்ட பெருமாள்.  அதன் பின் இக்ஷ்வாகு குலத்தில் (சூர்ய குலம்) வந்த அரசன் பிரம்மாவைப் பிரார்த்தித்து இந்தப் பெருமானை ப்ரணவாகார விமானத்துடன் பூலோகத்தில் அயோத்திக்குக் கொண்டு வந்தான்.  ரகு குல வம்ஸத்தில் வந்த அனைத்து அரசர்களும் இந்தப் பெருமாளைப் பூஜித்து வந்தனர்.  இராமாவதாரத்தில் ஸ்ரீராமர் இந்தப் பெருமாளுக்கு ஆராதனை செய்திருக்கிறார்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெருமாள் என்பது ஸ்ரீஇராமரைக் குறிக்கும்.  அவ்வாறு பெருமாளால் ஆராதனை செய்யப்பட்ட பெருமாள் என்பதைக் குறிக்கும் வகையில் இந்த எம்பெருமான் “பெரிய பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார்.  ஸ்ரீஇராமர் தனது பட்டாபிஷேகத்தின்போது விபீஷணனுக்கு பெரிய பெருமாளை ப்ரணவாகார விமானத்துடன் பரிசாக அளித்து ஆராதனை செய்து வருமாறு கூறினார்.  விபீஷணன் பெருமாளை எடுத்துக் கொண்டு அயோத்தியில் இருந்து தென்திசையில் உள்ள இலங்கை நோக்கிப் பயணிக்கும் காலத்தில், இரு புறமும் காவிரியால் சூழப்பட்டு ஒரு தீவு போன்று காட்சியளித்த திருவரங்கத்தில் தனது அநுஷ்டானங்களை முடிப்பதற்காக பெரிய பெருமாளை கீழே இறக்கி வைத்துவிட்டு அநுஷ்டாங்களைச் செய்யலானார்.  அப்பொழுது பெரிய பெருமாள் சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கத்தின் வனப்பைப் பார்த்து மகிழ்ந்தான்.    உடனே விபீஷணனிடம் பெரிய பெருமாள் “நீவீர் உம்முடைய நாடான இலங்கைக்குச் செல்லும்.  எனக்குத் திருவரங்கம் பிடித்திருப்பதால் நான் இங்கேயே வசித்தபடி உம்மைக் கடாக்ஷிக்கும் வகையில் எமது பார்வை தென் திசை நோக்கி இருக்கும்” என்று தெரிவித்தார்.   “வண்டினமுரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை அண்டர் கோன் அமரும் சோலை” என்று திருமாலையில் கூறியபடி அனைத்து உலகங்களுக்கும் தலைவனான எம்பெருமான் இங்கு வந்து எழுந்தருளினான் என்பதை அறிகிறோம்.

அத்தகைய சிறப்புடைய பெரிய பெருமாளின் வாழி திருநாமத்தில் எம்பெருமானின் பரம், வ்யூகம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி எனப்படும் ஐந்து நிலைகளும் காட்டப்பட்டுள்ளன.  பரமபதத்தில் பரவாசுதேவனாக உள்ள நிலை பரம் எனப்படும்.    வ்யூகம் நிலை எனப்படுவது திருப்பாற்கடலில் (க்ஷீராப்தி) பள்ளி கொண்ட நிலையாகும்.  அதாவது பரம பதத்தில் இருந்து எம்பெருமான் இறங்கி திருப்பாற்கடல் வந்து அங்கிருந்து அவதாரங்கள் எடுக்கிறான்.  அவ்வாறு அவதாரம் எடுக்கும் நிலை  விபவம் எனப்படுகிறது.  அதாவது க்ருஷ்ணாவதாரம், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம் முதலான பல அவதாரங்களை இப்பூவுலகில் எம்பெருமான் எடுக்கிறான்.  அதன் பின் வாழ்ச்சி தொடர வேண்டும் என்பதற்காக அர்ச்சாவதாரம் எடுக்கிறான்.  பல கோயில்களிலும், மடங்களிலும் சிலை வடிவத்தில் எம்பெருமான் எழுந்தருளியிருப்பது அர்ச்சாவதாரம் எனப்படும்.  அதற்கு மேலும் அனைத்து வஸ்துக்களிலும் மறைந்து அந்தர்யாமியாக இருந்து அவைகளை தாங்கி நிற்கிறான்.  இந்த ஐந்து நிலைகளும் இந்த வாழி திருநாமத்தில் காட்டப்பட்டுள்ளது.

பெரிய பெருமாள் வாழி திருநாமம்

திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே
செய்யவிடைத்தாய்மகளார் சேவிப்போன் வாழியே
இருவிசும்பில்வீற்றிருக்கு மிமையவர்கோன் வாழியே
இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே
அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே
பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

பெரிய பெருமாள் வாழி திருநாமம் விளக்கவுரை

திருமகளும் மண்மகளும் சிறக்கவந்தோன் வாழியே – முதலில் எம்பெருமானின் ஶ்ரிய பதித்துவத்தைக் கொண்டே வாழி திருநாமம் துவங்குகிறது.  திருமகள் எனப்படும் பெரிய பிராட்டியார் மற்றும் மண்மகள் எனப்படும் பூமிப்பிராட்டியார் சிறக்கும்படி இருப்பவன் இந்த எம்பெருமான்.  எம்பெருமானாலே பிராட்டிமார்களுக்குப் பெருமை, பிராட்டிமார்களாலே எம்பெருமானுக்குப் பெருமை என்பது இந்த வரியில் காட்டப்படுகிறது.  எம்பெருமானுக்கு பல பத்தினிமார்கள் இருந்தபோதும், ஸ்ரீதேவி, பூமி தேவி மற்றும் நீளா தேவி ஆகிய மூவரும் மிகப் பிரதானமானவர்களாகக் கருதப் படுகிறார்கள்.  இந்த முதல்வரியில் ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவியின் சிறப்பு காட்டப்பட்டுள்ளது.

செய்ய விடைத்தாய் மகளார் சேவிப்போன் வாழியே – (செய்ய இடைத்து ஆய் மகளார்) செய்ய என்றால் சிறந்த என்பது பொருளாகும்.  இடைக்குலத்தில் பிறந்த நப்பின்னை பிராட்டி எம்பெருமானைத் தொழுது கொண்டிருக்கிறாள். க்ருஷ்ணவதாரத்தில் நீளா தேவியின் அவதாரம் நப்பின்னை பிராட்டி என்றும், ஸ்ரீதேவியின் அவதாரம் ருக்மிணி என்றும்  பூமிப்பிராட்டியின் அவதாரம் சத்யபாமா என்றும் காட்டப்படுகிறது.  அவ்வாறு நப்பின்னை பிராட்டி வணங்கும் எம்பெருமான் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் சொல்லப்பட்டுள்ளது.

இருவிசும்பில் வீற்றிருக்கும் இமையவர்கோன் வாழியே – இரு என்பதற்கு இரண்டு என்பது மட்டும் பொருளல்ல இவ்விடத்தில் பரந்த என்று பொருள் காட்டப்படுகிறது.  விசும்பு என்பது ஆகாசம்.  பரந்த ஆகாசமான பரமபதத்தில் வீற்றிருக்கக் கூடிய, நித்யஸுரிகளுக்குத் (கண்களை இமைக்காத தன்மையினால் இமையவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்) தலைவனான ஸ்ரீமந் நாராயணன் பல்லாண்டு வாழ்க.  இவ்விடம் பரமபதத்தில் இருக்கக் கூடிய “பரம்” நிலை காட்டப்பட்டுள்ளது.

இடர்கடியப் பாற்கடலை யெய்தினான் வாழியே – நம்முடைய துன்பமெல்லாம் தீர்வதற்காகப் பாற்கடலில் வந்து துயின்றான் எம்பெருமான்.  விபவ அவதாரங்கள் எடுப்பதற்கு முன்பாக பரமபதத்தில் இருந்து பாற்கடலுக்கு வந்து அங்கு தங்கி இருந்து “உறங்குவான் போல் யோகு செய்த பெருமான்” என்ற ஆழ்வாரின் கூற்றிற்கு ஏற்ப சேதநர்களுக்கு, அதாவது ஆத்மாக்களுக்கு எவ்வாறு நன்மை செய்வது என்பதைச் சிந்தித்துக் கொண்டு இருக்கக் கூடிய நிலை.  இது “வ்யூஹ நிலை” என்று அறியப்படுகிறது.  ஆத்மாக்களின் துன்பம் தீரும் வகையில் பாற்கடலில் துயின்றவன் என்று ஒரு அர்த்தம் காட்டப்படுகிறது.  மற்றொன்று எம்பெருமான் தன் துயர் தீர அதாவது சேதநர்கள் படும் துன்பம் கண்டு தானே துன்பப்பட்டான்.  அந்த துன்பம் தீர்வதற்காகப் பாற்கடலில் துயின்றான் என்றும் கொள்ளலாம.  அப்படிப்பட்ட எம்பெருமான் வாழ்க.

அரியதயரதன் மகனாயவதரித்தான் வாழியே – மிகச் சிறந்தவனான, பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் சிறந்த குணங்களை உடைய தசரதனுடைய மகனாக, ஸ்ரீராமபிரானாக அவதரித்த எம்பெருமான் வாழ்க.   இவ்விடம் எம்பெருமானின் விபவ  நிலை காட்டப்பட்டுள்ளது.  இராமாவதாரத்தை விபவத்திற்கு உதாரணமாகக் காட்டினால் அனைத்து அவதாரங்களையும் காட்டியதற்குச் சமமாகும்.  ஸ்ரீராமபிரானாக அவதரித்த காலத்தில் எம்பெருமான் தசரதன் மகனாக, தசராதாத்மஜனாக, சக்ரவரத்தித் திருமகனாக இருப்பதையே விரும்பினான் என்று அறிகிறோம்.

அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே – எம்பெருமான் அனைத்து வஸ்துக்களிலும் அந்தர்யாமியாக இருந்து வழி நடத்துகிறான். அனைத்து ஆத்மாக்களிலும், சேதந, அசேதந பொருட்களிலும் நிறைந்திருக்கிறான் என்பதை இவ்வரியில் காட்டியதன் மூலம் எம்பெருமானின் “அந்தர்யாமி” என்ற நான்காவது நிலை உணர்த்தப்படுகிறது.  அப்படிப்பட்ட எம்பெருமான் வாழ்க.

பெருகிவரும் பொன்னிநடுப் பின்துயின்றான் வாழியே – வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும் பொன்னி என்று அழைக்கப்படும் காவிரி நதியின் நடுவில் வந்து திருவரங்கத்தில் சயனித்துக் கொண்டிருக்கிறான்.  அப்படிப்பட்ட எம்பெருமான் பல்லாண்டு வாழ்க என்று இவ்வரியில் காட்டப்படுகிறது.

பெரியபெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே – பெரிய பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர், எங்களுக்கு உபகாரனாக (நன்மை செய்பவனாக) இருக்கக்கூடிய எம்பெருமான் வாழ்க என்று பெரிய பெருமாளின் வாழி திருநாமம் முற்றுப் பெறுகிறது.  அர்ச்சாவதாரத்தில் முதன்மையான திவ்ய தேசமான திருவரங்கத்தில் வீற்றிருக்கும் பெரிய பெருமாளின் வாழி திருநாமம் மூலம் ஸ்ரீரங்கநாதரே குருபரம்பரையின் முதல் ஆசார்யர் என்பதை அறிகிறோம்.

அடுத்து பெரிய பிராட்டியின் வாழிதிருநாமத்தின் அர்த்தத்தைப் பார்க்கலாம்.  பெரிய பெருமாளை அனுபவிக்கும்போது பெரிய பிராட்டியையும் சேர்த்துத்தான் அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் பெருமாளும் பிராட்டியும் இணைபிரியாதவர்கள்.

பெரியபிராட்டி வைபவம்

பெரிய பிராட்டி என்றால் ஸ்ரீரங்கநாயகித் தாயார்.  ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சம்.  எம்பெருமானுக்கு அடுத்ததாக ஓராண் வழி ஆசார்யர்கள் வரிசையில் இருப்பவர் பெரிய பிராட்டியார்.  எம்பெருமான் தான் ஆசார்யனாக இருந்து த்வய மந்திரத்தை பெரிய பிராட்டிக்கு உபதேசம் செய்கிறான்.  ஆசார்யர் என்பவர் நம்மை வழி நடத்துபவர்; எம்பெருமானிடம் கொண்டு சேர்ப்பவர்.  பெரிய பெருமாள் ஸ்வதந்த்ரன்.  தன் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கக் கூடியவன்.  ஆனால் பெரிய பிராட்டியோ பரதந்த்ரை, எம்பெருமானை அண்டியிருப்பவள்.  அவள் எம்பெருமானுக்கு பத்தினியாக அடிபணிந்தவள்.  ஆனால் மற்றையவர்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள். அத்தகைய சிறப்புப் பெற்றவள் பெரிய பிராட்டி. பெரிய பிராட்டி எம்பெருமானின் பத்தினிமார்களில் முதன்மையானவர்.  பட்டமகிஷி என்று சொல்லும் சிறப்புப் பெற்றவள். எம்பெருமானை அடைவதற்கு புருஷகார பூதையாகவும் நம்முடைய பூர்வாசார்யர்களால் கொண்டாடப்படுபவள்.    புருஷகார பூதை என்பவள் நம்முடைய குற்றங்களை மறைத்து எம்பெருமானை அடைவதற்கு வழி காட்டுபவள்.  மேலும் அப்படி சரணாகதி செய்தவர்களை எம்பெருமானை ஏற்றுக் கொள்ளும்படி செய்பவள் என்று அறியலாம்.  ஆத்மாக்களுக்கு எம்பெருமானை அடைய வழி காட்டுபவளாகவும், ஈஶ்வரனை ஆத்மாக்களை ரக்ஷிக்கும்படியும் செய்பவள்.

பெரிய பிராட்டி வாழி திருநாமம்

பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே
மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே
எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

பெரிய பிராட்டி வாழி திருநாமம் விளக்கவுரை

பங்கயப் பூவிற்பிறந்த பாவை நல்லாள் வாழியே – பங்கயம் என்றால்  தாமரை.  பிராட்டியின் பிறப்பிடம் தாமரை புஷ்பம் என்று கூறுவர்.  இவளுக்கு மலர்மகள் என்றும் திருநாமம்.   பாவை என்றால் நல்லவள்.  நல்லவர்கள் என்பது எம்பெருமானிடம் ஈடுபாடு கொண்டவர்கள்; இதர விஷயங்களில் வைராக்யம் உடையவர்கள் என்று பொருள்படும்.  பிராட்டியை முன்னிட்டுத்தான் நாம் எம்பெருமானிடம் எவ்வாறு பக்தி கொள்ள முடியும் என்பதை அறிகிறோம்.  அதனால் பிராட்டி இவ்விடத்தில் நல்லாள் என்று காட்டப்பட்டுள்ளாள். அவ்வாறு தாமரை மலரில் பிறந்த சிறந்த திருமேனியை உடைய நல்லவளான பிராட்டி வாழ்க.

பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே – பங்குனி மாதம் உத்தர நக்ஷத்திரத்தில் அவதரித்தவள் பெரிய பிராட்டி.  பங்குனி உத்தர நாளன்று வருடாவருடம் திருவரங்கத்தில் தாயார் சன்னதி அருகில் உள்ள கத்யத்ரய மண்டபத்தில், கத்யத்ரயம் ஸேவிக்கப்பட்டு, பெரிய பெருமாளும், பெரிய பிராட்டியும் “சேர்த்தி உற்சவம்” கண்டருளுவர்.   இந்த உற்சவம் திருவரங்கத்தில் வருடத்தில் ஒரு நாள் தான் நடக்கும்.  எம்பெருமானார் ஒரு பங்குனி உத்தர நாளன்று சேர்த்தி உற்சவத்தில் கத்யத்ரயம் (சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம்) ஸேவித்து அனைவருக்கும் நற்கதி வேண்டி பிரார்த்தித்தார்.   இந்த பங்குனி உற்சவம் சிறந்த முறையில் திருவரங்கத்தில் பத்து நாட்கள் உற்சவமாகக் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.  அவ்வாறு பங்குனி உத்தர நாளன்று இப்பூவுலகில் அவதரித்த பிராட்டி வாழ்க.

மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே – பெரிய பிராட்டி எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்து சிறந்த பத்தினியாக மங்கையர்களுக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறாள்.  மங்கையர்களுக்குத்  தலைவியாக சிறந்த செல்வத்தை உடையவளான பிராட்டி வாழ்க என்பது இந்த வரியில் காட்டப்படுகிறது.

மாலரங்கர் மணிமார்பை மன்னுமவள் வாழியே –  மால் என்றால் திருமால்.  திருமாலின் மாணிக்கம் பொருந்திய மார்பில் உறைபவள்.  “அகலகில்லேன் இறையுமென்று” என்று பிராட்டியின் வார்த்தைகளாக நம்மாழ்வார்  திருவாய்மொழியில் அருளிச் செய்துள்ளார்.  எம்பெருமானின் திருமார்பை விட்டு அகலாதவளாக எம்பெருமானின் திருமார்பில் பொருந்தியிருப்பவளான பிராட்டி பல்லாண்டு வாழ்க.

எங்களெழில் சேனைமன்னர்க்கு இதமுரைத்தாள் வாழியே –  சேனை மன்னர் என்றால் சேனை முதலியார் என்று அழைக்கப்படும் விஷ்வக்சேனர்.  விஷ்வக்சேனர் பிராட்டிக்கு அடுத்த ஆசார்யராக ஓராண் வழி ஆசார்யர் பரம்பரையில் இருப்பவர்.  அப்படி என்றால் பிராட்டிதான் விஷ்வக்சேனருக்கு ஆசார்யனாக இருந்து இதமான நல்ல உபதேசங்களை உரைத்தவள்.  அத்தகைய பெரிய பிராட்டி வாழ்க.

இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே – முந்தைய வரியில் விஷ்வக்சேநருக்கு பிராட்டி உபதேசம் செய்தாள் என்று சொல்லப்பட்டது.  என்ன உபதேசம் செய்தாள் என்று நோக்கும்போது, இருபத்தைந்து எழுத்துக்களைக் கொண்ட த்வய மஹா மந்திரத்தை திருமாலான எம்பெருமானிடம் சிஷ்யனாக இருந்து பிராட்டி கற்றுக் கொண்டு விஷ்வக்சேனருக்கு த்வய மஹா மந்திரத்தின் உட்பொருளை உபதேசித்தாள் என்று ஒரு பொருள் காட்டப்படுகிறது.    இருபத்து நான்கு அசேதந தத்துவங்கள், கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், பஞ்ச பூதங்கள், பஞ்ச தன்மாத்திரைகள், மனது, மஹான், அஹங்காரம்,  மூலப்ரக்ருதி ஆகும்.  இருபத்து ஐந்தாவது தத்துவம் ஜீவாத்மா என்ற தத்துவம்.  இந்த இருபத்து ஐந்து தத்துவங்களையும், இருபத்து ஆறாவது தத்துவமான மால் எனப்படும் எம்பெருமானின் பெருமையையும் சேனை முதலியாருக்கு உபதேசம் செய்தவள் என்றும் பொருள் கொள்ளலாம்.  அத்தகைய சிறந்த ஆசார்யையான பிராட்டி வாழ்க.

செங்கமலச் செய்யரங்கம் செழிக்கவந்தாள் வாழியே –  சிவந்த தாமரை மலர்கள் மலர்ந்திருக்கக் கூடியதான சிறந்த திருவரங்கம் செழிப்படைவதற்காக வந்த பிராட்டி வாழ்க.

சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே – ஸ்ரீரங்க நாயகியான பெரிய பிராட்டியார் திருவடிகள் பல்லாண்டு காலம் வாழ்க என்று பெரிய பிராட்டியின் வாழி திருநாமம் முடிவுறுகிறது.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை – ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம்

Published by:

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

<< தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்

நமது சம்பிரதாயத்தில் பல ஆசார்யர்கள் இருந்துள்ளனர்.  ஆனால் பொதுவாக நமது ஓராண் வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களை ஸேவிப்பதை வழக்கத்தில் கொண்டிருக்கிறோம்.  ஓராண் வழி ஆசார்யர்கள் என்றால் பரம்பரையாக ஒரு ஆசார்யன் அவருக்கு அடுத்து இன்னொருவர், அதன்பின் மற்றொருவர் என்று தொடர்ந்து அந்த ஆசார்ய தலைமை பீடத்தில் இருந்தவர்கள் என்று அறியலாம்.   இந்த ஒராண் வழி ஆசார்ய பரம்பரையில் முதலில் இருப்பது பெரிய பெருமாள் ஸ்ரீமந் நாராயணன்.  எம்பெருமான் தானும் ஆச்சார்யத்துவத்தில் ஆசைப்பட்டான் என்பதை நமது பூர்வர்கள் வியாக்கியானங்களில் காண்பித்துள்ளனர்.  ரகசிய கிரந்தங்களிலும்  காண்பித்துள்ளனர்.  இந்த ஆசார்ய பீடம் என்பது உயர்ந்த பீடமாக இருப்பதனாலும் எம்பெருமானை விட தகுதியான ஒருவர் ஆசார்யராக இருக்க முடியாது என்பதனாலும் தானே முதல் ஆசார்யராக எம்பெருமான். நம்முடைய குரு பரம்பரையில் எழுந்தருளியிருக்கிறான் அது மட்டுமன்று.   குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஆசார்யனாக இருந்து கீதோபதேசம் செய்தான். பத்ரிகாச்ரமத்தில் திருமந்திரத்தை நாராயண ரிஷியாக இருந்து நர ரிஷிக்கு  உபதேசித்தான்.   இப்படிப் பல சமயங்களில் எம்பெருமான் தானே ஆசார்யனாக இருந்திருக்கிறான்.

மேலும் நமது  சம்பிரதாயத்தில் ஆசார்யனையே அண்டியிருக்க வேண்டும், அவரது கருணையினாலேயே நாம் மோக்ஷத்திற்குப் போகிறோம் என்று நாம் உறுதியாக நம்புவதாலும் நமது பெரியவர்கள் காட்டியுள்ளபடி ஆசார்யன் என்பவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.  பொதுவாக நாம் ஸந்நிதிகளில் ஸேவிக்கப் போகும் போது,  பெருமாளுக்கு மங்களாசாஸனம் செய்வதைப்போன்று இரண்டு மடங்கு ஆசார்யனுக்கு செய்யவேண்டும்.  அதை இரட்டை சம்பாவனை என்று கூறுவார்கள். ஆசார்யர் எழுந்தருளினார் என்றால்  அவருக்கு விசேஷமாக கைங்கர்யம் / மங்களாசாசனம் செய்ய வேண்டும் என்பதை இன்றளவும் நமது சம்பிரதாயத்தில் வழக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம்.   நாம் ஒரு பத்திரிகை சமர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினாலும் ஆசார்யனுக்கு இரண்டு பத்திரிகைகள் சமர்ப்பிக்க வேண்டும்.  ஆசார்யன் என்றாலே இரட்டை கெளரவம் கொடுக்க வேண்டும் என்று அறிகிறோம்.  அவ்வாறு ஆசார்யன் என்பவர் சிறந்த வழிகாட்டியாக நம்மை எம்பெருமானிடத்தில் கொண்டு சேர்ப்பவராக இருக்கிறார்.

இந்த ஓராண் வழி ஆசார்யர்களில் முதன்மையானவர் 1. பெரிய பெருமாள் (நம்பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கநாதர்).

  1. பெரிய பிராட்டி – இரண்டாவது ஆசார்யராகக் கருதப்படுபவர் பெரிய பிராட்டி (ஸ்ரீரங்கநாயகித் தாயார்).  பிராட்டி எம்பெருமானுக்கு மிகவும் பிடித்தமானவள், எம்பெருமானின் பட்டமகிஷி.  எம்பெருமான் பெரிய பிராட்டிக்கு த்வய மந்திரத்தை உபதேசம் செய்கிறான்.  பிராட்டியையே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு அடுத்த ஆசார்யராக எம்பெருமான் அறிவிக்கிறான்.
  1. ஸேனை முதலியார் – பெரிய பிராட்டியாருக்கு அடுத்ததாக ஸேனை முதலியார் என்று அழைக்கப்படும் ஸ்ரீவிஷ்வக்ஸேனர்.  இவர் பரமபதத்தில் வசித்துக் கொண்டு லீலா விபூதியில் நடக்கும் அனைத்துச் செயல்களையும் அதாவது படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை மேற்பார்வையிடும் சேனாபதியாக இருக்கிறார்.  ஸ்ரீவிஷ்வக்ஸேனர் மூன்றாவது ஆசார்யராவார்
  1. நம்மாழ்வார் – நான்காவது ஆசார்யராக நம்மாழ்வார் கருதப்படுகிறார்.  எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர் நம்மாழ்வார்.  இப்பூவுலகில் ஆசார்யர்கள் பரம்பரை வளர வேண்டும் என்பதற்காக ஸேனை முதலியாரைக் கொண்டு நம்மாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்வித்து நம்மாழ்வாரை ஆசார்யனாக எம்பெருமான் காட்டுகிறான்.  நம்மாழ்வார் ஆழ்வார்கள் வரிசையில் முதன்மையானவர் என்பதை நாம் அறிவோம்.  “ப்ரபந்ந ஜந கூடஸ்தர்”, “வைஷ்ணவ குலபதி” என்று அறியப்படுபவர்.

5, நாதமுனிகள் – ஐந்தாவது ஆசார்யராக நாதமுனிகள் அறியப்படுகிறார்.  நம்மாழ்வார் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.  நாதமுனிகளோ 1200 ஆண்டுகளுக்கு முன் இப்பூவுலகில் இருந்தவர்.  நாதமுனிகளுக்கும், நம்மாழ்வாருக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது எனில், நாதமுனிகள் நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பற்றி கேள்விப்படுகிறார். திருக்குடந்தை ஆராவமுதன் பெருமான் பற்றிய பாசுரங்களை மேல் நாட்டிலிருந்து சில ஸ்ரீவைஷ்ணவர்கள் நாதமுனிகள் வசிக்கக் கூடிய காட்டுமன்னார்கோயிலில் ஸேவிக்கிறார்கள்.  அவற்றை செவியுற்ற நாதமுனிகள், அவர்களிடமிருந்து அந்தப் பாசுரங்களைப் பெற்று அந்தப் பதிகத்தின் இறுதிப் பாசுரத்தில் “குருகூர்ச் சடகோபன்” என்ற வார்த்தையையும் “ஆயிரத்துள் ஓர் இப்பத்தும்” என்ற சொல்லையும் கொண்டு நம்மாழ்வாரைத் தேடி ஆழ்வார் திருநகரி வந்தடைந்தார்.  அங்கு இருந்தவர்களிடம் இந்தப் பாசுரங்களைப் பற்றி விசாரிக்க, அங்கு இருந்த மதுரகவி ஆழ்வாரின் வம்சத்தவர்கள் “நாங்கள் மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்கள் தான் அறிவோம்” என்றனர். மேலும் அவர்கள் எவர் ஒருவர் நம்மாழ்வார் வாசஸ்தலம் செய்த திருப்புளியாழ்வாரின் அடியில் தியானத்தில் அமர்ந்து இந்தக் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை பன்னீராயிரம் முறை ஸேவிக்கிறார்களோ அவருக்கு நம்மாழ்வார் ப்ரத்யக்ஷமாக ஸேவை சாதிப்பார் என்பதை அறிவோம் என்றனர்.    நாதமுனிகள் யோக சாஸ்திரத்தில் வல்லவராதலால் திருப்புளியாழ்வார் மரத்தினடியில் அமர்ந்து பன்னீராயிரம் முறை கண்ணிநுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை அநுஷ்டிக்க நம்மாழ்வார் அவர் முன் தோன்றி “என்ன வேண்டும்” என்று வினவ, அதற்கு நாதமுனிகள் “நீவிர் இயற்றிய ஆயிரம் பாசுரங்களைத் தந்தருள வேண்டும்” என்றார்.  நம்மாழ்வார் தாம் இயற்றிய அனைத்து ப்ரபந்தங்கள் (முறையே திருவாய்மொழி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி) மட்டுமன்றி ஏனைய ஆழ்வார்கள் அருளிச் செய்த ப்ரபந்தங்களையும் சேர்த்து நாலாயிர திவ்ய ப்ரபந்தமாக ஆசார்யனாக இருந்து  நாதமுனிகளுக்குக் கொடுத்து அருளினார்.  மேலும் இந்த நாலாயிர ப்ரபந்தங்களுக்குமான விளக்கவுரையையும் நாதமுனிகளிடம் அளித்தார்.

நாதமுனிகளுக்குப் பின் வந்த ஆசார்யர்களைக் கீழ்க்கண்ட வரிசையில் காணலாம்.

  1. புண்டரீகாக்ஷர் எனப்படும் உய்யக்கொண்டார்,
  1. ஸ்ரீராம மிச்ரர் என்று சொல்லப்படுகிற மணக்கால் நம்பி.
  1. யாமுனாசார்யர் எனப்படும் ஆளவந்தார் (நாதமுனிகளின் திருப்பேரனார்)
  1. மஹாபூர்ணர் என்று அழைக்கப்படும் பெரிய நம்பி.  இவர் திருவரங்கத்தில் வாழ்ந்து வந்த மஹாசார்யர்.  ஆளவந்தாரின் சிஷ்யர்களில் முதன்மையாகக் கருதப்பட்டவர்.  மேலும் இவர் இளையாழ்வார் எனப்பட்ட ஸ்ரீராமானுஜருக்கு ஆசார்யராக இருந்து பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தவர்.  இளையாழ்வாருக்கு ஆளவந்தாரிடம் சிஷ்யராக வேண்டும் என்று விருப்பம்.  காஞ்சீபுரம் தேவப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக இளையாழ்வாரிடம் நீவிர் பெரிய நம்பியிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட அதன்படி பெரிய நம்பியும் ஸ்ரீராமாநுஜருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தார்.
  1. எம்பெருமானார் எனப்படும் ஸ்ரீராமானுஜர்.  ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்தார்.
  1. கோவிந்தப்பெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட எம்பார். இவரும் நம் சம்பிரதாயம் வளர பெரிதும் உதவியவர்.  எம்பெருமானாரைப் பிரிந்திருக்க முடியாமல் அவரைத் தொடர்ந்து பரமபதம் அடைந்தவர்.
  1. பராசர பட்டர். இவர் கூரத்தாழ்வாரின் திருக்குமாரர்.  எம்பாரின் சிஷ்யர்.

13, வேதாந்தி என்று அறியப்படும் நஞ்சீயர்.  மாதாவாசார்யார் என்று அழைக்கப்பட்ட இவர் பராசர பட்டரால் திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் கொண்டு வரப்பட்டவர்.  மேலும் பராசர பட்டரால் நம் சீயர் என்னும் பொருள் படும்படி “நஞ்சீயர்” என்று அழைக்கப்பட்டவர்.

  1. நம்பிள்ளை. “வாத்ஸ்ய வரதாசார்யர்” என்று அழைக்கப்பட்ட இவர் நஞ்சீயரின் கருணைக்குப் பாத்திரமானபடியால் நம்பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.  இவர் சாஸ்திரங்களில் மிகச்சிறந்த ஞானம் கொண்டவர்.  தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் மிகுந்த புலமை உடையவர்.  திருவாய்மொழிக்கு மிக விளக்கமான உரையை அருளிச் செய்தவர்.  அவை ஈடு வ்யாக்யானம் என்று இன்றளவும் கொண்டாடப் படுகிறது.  இவர் “லோகாசார்யர்” என்றும் அழைக்கப்படுகிறார்.
  1. “ஸ்ரீக்ருஷ்ண பாதர்” என்று சொல்லப்படும் வடக்கு திருவீதிப் பிள்ளை.  இவர் நம்பிள்ளையின் பிரதான சிஷ்யராகக் கருதப்பட்டவர்.  இவர் நம்பிள்ளையின் காலக்ஷேபத்தைச் செவியுற்று ஏடுபடுத்தி நமக்கு வ்யாக்யானங்களாக அருளிச் செய்த வள்ளல்.  இவருடைய திருக்குமாரர்கள் பிள்ளை லோகாசார்யர் மற்றும் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்.
  1. பிள்ளை லோகாசார்யர்.  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குத் தூணாக விளங்கியவர்.   பல ரஹஸ்ய க்ரந்தங்களை அருளிச் செய்தவர்.    நம்பெருமாளையும் அந்நியர்கள் படையெடுப்பின் போது பாதுகாத்து வைத்து நமக்காகக் கொடுத்தவர்.
  1. ஸ்ரீசைலேசர் என்று அழைக்கப்பட்ட திருவாய்மொழிப்பிள்ளை,  திருமலையாழ்வார் என்றும் கொண்டாடப் படுபவர்.  இவர்  பிள்ளை லோகாசார்யரின் முதன்மையான சிஷ்யர்.   மதுரைக்கு அருகில் உள்ள குந்தீ நகரம் என்ற ஊரிலே அவதரித்தவர்.  இவர் பாண்டிய அரசருக்கு மந்திரியாக சில காலம் இருந்தவர். இவரை கூரகுலோத்தம தாஸர் எனப்படும் பிள்ளை லோகாசார்யரின் சிஷ்யர் திருத்தி நம்முடைய சம்பிரதாயத்தில் கொண்டு வந்து பிள்ளை லோகாசார்யரின் விருப்பப்படி ஆசார்ய பீடத்தில் அமர்த்தினார்.   ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்து வந்த திருவாய்மொழிப்பிள்ளை காடாக மண்டிக் கிடந்த ஆழ்வார் திருநகரியை சீரமைத்து, ஆதிநாதப் பெருமான் மற்றும் நம்மாழ்வாருக்கு சந்நிதிகளை ஏற்படுத்தி புனர் நிர்மாணம் செய்தவர்.   கலாப காலத்தில் ஊருக்கு வெளியே இருந்த நம்மாழ்வாரை ஊருக்குள் எழுந்தருளச் செய்து அவருக்கு அனைத்துக் கைங்கர்யங்களும் சிறப்பாக நடக்கும்படிச் செய்தவர்.  திருப்புளி ஆழ்வாருக்குக் கீழ் எம்பெருமானார் விக்ரஹம் இருப்பதைக் கனவில் கண்டு அந்த எம்பெருமானார் விக்ரஹத்தை ஆழ்வார் திருநகரியில் மேற்குப் பகுதியில் சதுர்வேதி மங்கலம் என்ற இடத்தை ஏற்படுத்தி எம்பெருமானாருக்காக  பவிஷ்யதாசார்யர் சந்நிதியை ஏற்படுத்தி அனைத்துக் கைங்கர்யங்களும் சிறப்பாக நடக்கும்படி செய்தவர்.  திருவாய்மொழியில் மிகுந்த ஈடுபாடு கொண்டமையால் இவருக்குத் திருவாய்மொழிப் பிள்ளை என்ற பெயர் ஏற்பட்டது.  சடகோபதாசர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு.  நம்மாழ்வாரைப் போற்றிப் பாதுகாத்தவர்.
  1. பெரிய ஜீயர் எனப்படும் மணவாள மாமுனிகள்.  இவர் ஆழ்வார் திருநகரியில் அவதரித்து திருவாய்மொழிப் பிள்ளைக்கு சிஷ்யராகி பவிஷ்யதாசார்யர் சந்நிதியில் மிகுந்த ப்ரீதியுடன் கைங்கர்யம் செய்து வந்தவர்.  யதீந்த்ரரான  எம்பெருமானாருக்கு  ப்ரியத்துடன் கைங்கர்யம் செய்தமையால் யதீந்த்ர ப்ரவணர் என்று அழைக்கப்படுகிறார்.  திருவாய்மொழிப் பிள்ளை திருநாட்டிற்கு எழுந்தருளிய பிறகு மணவாள மாமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளி கலாப காலங்களில் சிதிலமடைந்திருந்த திருவரங்கத்தை சீர் செய்து, கைங்கர்யம் மற்றும் கௌரவங்களை இழந்திருந்தவர்களின் பெருமையை மீட்டுக் கொடுத்து கைங்கர்யங்கள் சிறப்புற நடக்கும்படி செய்தவர்.  திருவாய்மொழியின் ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யானத்தில் மிகுந்த ஞானமும் ஈடுபாடும் உடையவர்.  அதனால் ஈட்டுப் பெருக்கர் என்றும் அழைக்கப்பட்டார்.  இவர் எம்பெருமானுக்கே ஆசார்யனாகக் கருதப்பட்டவர்.  திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாள் ஆணைப்படி திருவரங்கத்தில் இருந்து பல கைங்கர்யங்களைச் செய்தவர்.  பிற்காலத்தில் நம்பெருமாள் மணவாள மாமுனிகளை திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தை காலக்ஷேபமாக சாதிக்கச் சொல்லி எம்பெருமான் தனது பரிவாரங்களுடன் ஒரு வருட காலம் தனது உற்சவங்களை நிறுத்தி மிக விரிவாக மணவாள மாமுனிகளின் திருவாய்மொழியின் காலக்ஷேபத்தை அனுபவித்தான்.  காலக்ஷேபத்தின் முடிவில் சிறுபிள்ளை வடிவில் வந்து மணவாள மாமுனிகளை ஆசார்யனாக ஏற்றுக் கொண்டு அவருக்கு “ஸ்ரீசைலேச தயாபாத்ரம்” என்ற தனியனைச் சமர்ப்பித்து தன்னுடைய ஆதிசேஷ பர்யங்கத்தை மணவாள மாமுனிகளுக்கு சம்பாவனையாக சமர்ப்பித்து அவரை மிகவும் கொண்டாடினான்.  இவர் ரம்யஜாமாத்ரு முனி என்றும் அறியப்படுகிறார்.

இவ்வாறாக பெரிய பெருமாள் தொடக்கமாக ஓராண் வழி ஆசார்யர் பரம்பரை தொடங்கி மணவாள மாமுனிகளிடம் முடிந்து மீண்டும் மணவாள மாமுனிகளை ஆசார்யராகக் கொண்டு பெரிய பெருமாள் மூலமாக ஆசார்ய பரம்பரை விரிவடைந்ததை அறிகிறோம்.  ஓராண் வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களின் விளக்கவுரையை பின்வரும் பகுதிகளில் நாம் அநுபவிக்கலாம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் – http://divyaprabandham.koyil.org/

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org