இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 101 – 108

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமானுச நூற்றந்தாதி

<< பாசுரங்கள் 91 – 100

நூற்றொன்றாம் பாசுரம். எம்பெருமானாருடைய புனிதத்தன்மையைக் காட்டிலும் அவருடைய இனிமை மிகவும் உயர்ந்தது என்கிறார்.

மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கித்
துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி
உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி
நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்று நைந்தே

அறிவுகேட்டை விளைக்கும், புண்ய/பாப ரூபத்தால் இருவகைப்பட்டுள்ள கர்மம் என்கிற கயிற்றலே கட்டுண்டு, அறிவு கலங்கி, மனக் குழப்பத்தை விளைக்கும் பிறவியில் வந்து பிறந்த என்னை, அந்த கர்மங்களின் பலமான துக்கங்களைப் போக்கி, உஜ்ஜீவிக்கும்படி ஏற்றுக்கொண்டு, என் விஷயத்தில் அன்பு காட்டிய எம்பெருமானாரே என்று தேவரீருடைய பாவனத்வத்தைப் பேசிய இவ்வார்த்தை, தேவரீரை நினைத்து, மனம் நைந்து எல்லாக்காலத்திலும் தேவரீரிடத்தில் ஆசைகொண்டு இருப்பவர்களுக்கு இழுக்கு என்று சொல்வார்கள் நல்லவர்கள். அதாவது, இனிமையை அனுபவித்தவர்களுக்கு பாவனத்வத்தை நினைப்பதில் நெஞ்சு செல்லாது.

நூற்றிரண்டாம் பாசுரம். இவ்வளவு பெரிய உலகத்தில் தேவரீருடைய வள்ளல் தன்மை என் மீது வளர்வதற்கு என்ன காரணம் என்று எம்பெருமானாரை கேட்கிறார்.

நையும் மனம் உன் குணங்களை உன்னி என் நா இருந்து எம்
ஐயன் இராமாநுசன் என்று அழைக்கும் அருவினையேன்
கையும் தொழும் கண் கருதிடும் காண கடல் புடை சூழ்
வையம் இதனில் உன் வண்மை என்பால் என் வளர்ந்ததுவே

மனஸ்ஸானது தேவரீருடைய குணங்களை நினைத்து நைந்து கிடக்கிறது. என்னுடைய நாக்கு நிலையாக நின்று என்பக்கல் தேவரீருடைய இயற்கையான உறவையும், தேவரீருடைய திருநாமத்தையும் சொல்லிக் கூப்பிடுகிறது. அநாதி காலம் உலக விஷயங்களிலே ஈடுபட்டிருந்த மஹாபாபியான என்னுடைய கையும் எப்பொழுதும் தேவரீர் விஷயமாக அஞ்சலி செய்கிறது. கண்ணானது எல்லாக் காலத்திலும் தேவரீரைக் காண்கையில் ஆசைப்படுகிறது. கடலாலே சுற்றும் சூழப்பட்டிருந்துள்ள இந்த பூமியிலே, தேவரீருடைய வள்ளல் தன்மை என்மீது வளர்ந்தது எக்காரணத்தாலே?

நூற்றுமூன்றாம் பாசுரம். எம்பெருமானார் என்னுடைய கர்மத்தைக் கழித்து அழகிய ஞானத்தை விரிவாகக் கொடுத்தருளியதால் என்னுடைய கரணங்கள் எல்லாம் அவர் விஷயத்தில் ஈடுபட்டன என்கிறார்.

வளர்ந்த வெம் கோப மடங்கல் ஒன்றாய் அன்று வாள் அவுணன்
கிளர்ந்த பொன் ஆகம் கிழித்தவன் கீர்த்திப் பயிர் எழுந்து
விளைந்திடும் சிந்தை இராமாநுசன் என்தன் மெய்வினை நோய்
களைந்து நல் ஞானம் அளித்தனன் கையில் கனி அன்னவே

மிகவும் வளர்ந்த, மிகவும் க்ரூரமான சீற்றத்தையுடைய தனித்துவம் வாய்ந்த நரஸிம்ஹமாய் தன் பிள்ளையான ப்ரஹ்லாதாழ்வானைத் துன்புறுத்தினபோது கையில் வாள் என்னும் ஆயுதத்தை ஏந்திக் கொண்டு எதிர்த்த ஹிரண்யாஸுரனின் நன்கு வளர்ந்த, பொன் நிறமான சரீரத்தை எளிதாகக் கிழித்தவனுடைய திவ்ய கீர்த்தியாகிற பயிர் ஓங்கி எழுந்து பலத்துடன் சேரும்படியான திருவுள்ளத்தையுடையராயிருக்கிறவர் எம்பெருமானார். அவர் என்னைச் சரீரத்தில் கட்டிவைக்கும் கர்மத்தின் பலமான துக்கங்களைப் போக்கி. கையிலங்கு நெல்லிக்கனி போலே இருக்கும்படி உயர்ந்ததான ஞானத்தைத் தந்தருளினார்.

நூற்றுநான்காம் பாசுரம். எம்பெருமானை நேராகப் பார்க்கப் பெற்றால் என்ன செய்வீர் என்று எம்பெருமானார் கேட்பதாகக் கொண்டு, பகவத் விஷயத்தை நன்றாகக் காட்டிக் கொடுத்தாலும் தேவரீர் திருமேனியில் ப்ரகாசிக்கும் குணங்களைத் தவிர வேறொன்றை வேண்டேன் என்கிறார்.

கையில் கனி அன்ன கண்ணனைக் காட்டித் தரிலும் உன் தன்
மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலன் யான் நிரயத்
தொய்யில் கிடக்கிலும் சோதி விண் சேரிலும் இவ்வருள் நீ
செய்யில் தரிப்பன் இராமாநுச என் செழுங் கொண்டலே

உயர்ந்ததான மேகம் போலே பரம உதாரராய் அந்த வள்ளல் தன்மையை எங்களுக்குக் காட்டிய எம்பெருமானாரே! அடியார்களுக்கு எளியவனான கண்ணனை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டிக் கொடுத்தாலும் தேவரீருடைய திவ்ய திருமேனியில் ப்ரகாசிக்கிற அழகு முதலிய குணங்களைத்தவிர வேறொன்றை நான் வேண்டேன். ஸம்ஸாரம் என்னும் சேற்றில் அழுந்திக் கிடந்தாலும் கிடக்கலாம், எல்லையில்லாத ஒளிபடைத்த பரமபதத்தை அடைந்தாலும் அடையலாம். இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை அடைவதற்கான அருளை தேவரீர் செய்தால் நான் அங்கே தரித்து நிற்பேன்.

நூற்றைந்தாம் பாசுரம். எல்லாரும் ஸம்ஸாரம் விடவேண்டியது என்றும் பரமபதம் அடையவேண்டியது என்றும் சொல்லி அந்தப் பரமபதத்தைச் சென்றடையவேண்டும் என்று ஆசைப்பட, நீர் இரண்டையும் ஒன்றாகக் கருதுகிறீரே, உமக்கு விருப்பமான இருப்பிடம் எது என்று கேட்க, அதற்குப் பதில் உரைக்கிறார்.

செழுந்திரைப் பாற்கடல் கண் துயில் மாயன் திருவடிக் கீழ்
விழுந்திருப்பார் நெஞ்சில் மேவு நல் ஞானி நல் வேதியர்கள்
தொழும் திருப் பாதன் இராமாநுசனைத் தொழும் பெரியோர்
எழுந்து இரைத்து ஆடும் இடம் அடியேனுக்கு இருப்பிடமே

அழகிய அலைகளையுடைய திருப்பாற்கடலிலே சயனித்திருப்பவனாய் உறங்குவான் போல் யோகு செய்க்கிற மாயனான ஸர்வேச்வரனின் குணத்தில் ஈடுபட்டு அவன் திருவடிக்கீழே விழுந்திருப்பவர்கள் நெஞ்சிலே, பொருந்தி இருப்பதான உயர்ந்த ஞானத்தையுடையவரான பரம வைதிகரானவர்கள் தொழும் திருவடிகளையுடையவரானவர் எம்பெருமானார். அந்த எம்பெருமானாரை எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டிருக்கும் வைபவத்தையுடைய பெரியோர்கள் அந்த அனுபவத்தால் கிளர்ந்து கடலின் பெருத்த ஓசையைப்போலே ஆரவாரத்துடன் நடனமாடும் இடம், அவர்களின் அடியவனான எனக்கு இருப்பிடம்.

நூற்றாறாம் பாசுரம். இப்படி இவருக்குத் தம்மிடத்தில் உள்ள பேரன்பைக் கண்டு எம்பெருமானார் இவர் திருவுள்ளத்தை மிகவும் விரும்பியருள, அதைக் கண்டு ஆனந்தத்துடன் அருளிச்செய்கிறார்.

இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் மாலிருஞ்சோலை என்னும்
பொருப்பிடம் மாயனுக்கு என்பர் நல்லோர் அவை தம்மொடும் வந்து
இருப்பிடம் மாயன் இராமாநுசன் மனத்து இன்று அவன் வந்து
இருப்பிடம் என் தன் இதயத்துள்ளே தனக்கு இன்புறவே

ஸ்வரூப ரூப குண விபூதிகளால் ஆச்சர்யபூதனான ஸர்வேச்வரனுக்கு இருப்பிடங்கள் ஸ்ரீவைகுண்டமும், திருவேங்கடம் என்னும் திருமலையும், திருமாலிருஞ்சோலை என்று ப்ரஸித்தமான திருமலையாகிற ஸ்தலமும் என்று சொல்வார்கள் பகவானை உள்ளபடி அறிந்திருக்கும் பெரியோர்கள். இப்படிப்பட்ட ஸர்வேச்வரன் அந்த ஸ்தலங்களுடன் வந்து எழுந்தருளியிருக்கிற ஸ்தலம் எம்பெருமானாரின் திருவுள்ளம். இப்போது அவர்தாம் வந்து மிகவும் உயர்ந்த இன்பமாகக் கருதி எழுந்தருளியிருப்பது என்னுடைய நெஞ்சிலே.

நூற்றேழாம் பாசுரம். இப்படித் தம்மிடத்தில் அன்புகாட்டும் எம்பெருமானாருடைய திருமுகத்தைப் பார்த்து, தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டியது ஒன்று உண்டு என்று தம்முடைய விருப்பத்தை வெளியிடுகிறார்.

இன்பு உற்ற சீலத்து இராமாநுச என்றும் எவ்விடத்தும்
என்புற்ற நோய் உடல்தோறும் பிறந்து இறந்து எண் அரிய
துன்புற்று வீயினும் சொல்லுவது ஒன்று உண்டு உன் தொண்டர்கட்கே
அன்புற்று இருக்கும்படி என்னை ஆக்கி அங்கு ஆட்படுத்தே

மிகவும் ஆனந்தத்துடன் எழுந்தருளியிருக்கிற, ஸௌசீல்யம் என்னும் குணத்தையுடைய எம்பெருமானாரே! தேவரீருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டியது ஒரு கார்யம் உண்டு. எலும்பு வரை சென்று துன்புறுத்தக்கூடிய வ்யாதிகளுக்கு இருப்பிடமான உடல்கள்தோறும் பிறப்பது மரிப்பதாய், கணக்கிலடங்காத துக்கங்களை அனுபவித்து முடிந்தாலும், எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும், தேவரீருக்கு என்றே இருப்பவர்களுக்கே ஆழமான அன்பை உடையேனாகும்படிச் செய்து, அவர்கள் திருவடிகளிலே அடிமையாகும்படி அருள்செய்ய வேண்டும். இதுவே அடியேனுக்குக் குறிக்கோள்.

நூற்றெட்டாம் பாசுரம். முதலில் “இராமானுசன் சரணாரவிந்தம் நாம் மன்னி வாழ” என்று எப்பொழுதும் இந்தப் பலன் கிடைக்கையும், இந்த எம்பெருமானார் விஷயத்தில் பூர்ண பக்தி தமக்கு விருப்பம் ஆகையாலே பிராட்டியை முன்னிட்டுக் கொண்டு தொடங்கினாப்போலே, முடிவிலும் எப்பொழுதும் நமக்குக் கைங்கர்யஸ்ரீயைக் கொடுக்கக்கூடியவளான பெரிய பிராட்டியாரை ஆச்ரயிப்போம் என்கிறார்.

அம் கயல் பாய் வயல் தென் அரங்கன் அணி ஆகம் மன்னும்
பங்கய மா மலர்ப் பாவையைப் போற்றுதும் பத்தி எல்லாம்
தங்கியது என்னத் தழைத்து நெஞ்சே நம் தலைமிசையே
பொங்கிய கீர்த்தி இராமாநுசன் அடிப் பூ மன்னவே  

நெஞ்சே! பக்தி தத்வமானது ஒன்றுவிடாமல் நம்மிடத்திலே குடிகொண்டது என்னும்படி மிக அதிகமாக, மிகப் பெரிதான கீர்த்தியையுடையவரான எம்பெருமானாருடைய திருவடிகளாகிற செவ்விப்பூ நம்முடைய தலைமேலே பொருந்தி இருக்கும்படி, அழகிய கயல்கள் துள்ளிவிளையாடும் வயல்களையுடைய, அழகிய கோயிலையே (திருவரங்கம்) தமக்கு அடையாளமாகக் கொண்ட பெரிய பெருமாளுடைய அழகிய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுமவளாய்ச் சிறந்ததான தாமரைப்பூவைப் பிறப்பிடமாக உடையவளாய் இயற்கையான ஸ்த்ரீத்வத்தையுடைய ஸ்ரீரங்கநாச்சியாரை ஆச்ரயிப்போம்.

அடியேன் ஸாரதி ராமானுஜ தாஸன்

வலைத்தளம் –  http://divyaprabandham.koyil.org

ப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://srivaishnavagranthams.wordpress.com
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – http://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org

Leave a Comment