யதிராஜ விம்சதி – ச்லோகம் – 15

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 14                                                                                                                       ச்லோகம் 16

ச்லோகம் 15

शुद्धात्मयामुनगुरूत्तमकूरनाथ भट्टाख्यदेशिकवरोक्तसमस्तनैच्यम् ।
अध्यास्त्यसन्ङुचितमेव मयीह लोके तस्माध्यतीन्द्र! करुणैव तु मद्गतिस्ते ॥ (15)

சுத்தாத்மயாமுநகுரூத்தமகூரநாத பட்டாக்யதேசிகவரோக்தஸமஸ்தநைச்யம் |
அத்யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே தஸ்மாத்யதீந்த்ர! கருணைவ து மத்கதிஸ்தே || (15)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, இஹ லோகே – குற்றம் செய்தவர்கள் மலிந்த இந்தப் பூவலகில், அத்ய – கலிபுருஷன் தனியரசு செலுத்தும் இக்காலத்தில், ஷுத்தாத்மயாமுந குரு உத்தம கூரநாத பட்டாக்ய தேஸிகவர – குற்றங்களில் ஒன்றுமில்லாமையால் ஸுத்தமான ஆத்மஸ்வரூபத்தையுடையவர்களான யாமுநாசார்யரென்னும் ஆளவந்தாரென்ன, ஆத்மகுணங்கள் நிறைந்தவர்களில் மிகமிக உயர்ந்தவராகிய கூரத்தாழ்வனென்ன, பூர்வாச்சார்யர்கள் அனைவரைக் காட்டிலும் அதிகமான பெருமையை உடைய ஸ்ரீபராஸரபட்டரென்ன இவர்களால், உக்த ஸமஸ்த நைச்யம் – தங்களுடைய நூல்களில் தம்மிடமுள்ளதாகச் சொல்லப்பட்ட எல்லாவகையான நீசதர்மங்களும் (குற்றங்களும்), மயி ஏவ – அடியேனிடத்திலேயே, அஸங்குசிதம் (அஸ்தி) – குறைவறப் பூர்ணமாக உள்ளன. (மற்றவரிடத்தில் குறைவாகவே உள்ளன) தஸ்மாத் – ஆகையால், தே கருணா து – உலகில் மிகவும் பெரியதாக ப்ரஸித்திபெற்ற தேவரீரது கருணையானது, மத் கதி: ஏவ (பவதி) – அடியேனையே விஷயமாகக் கொண்டதாக ஆகிறது.(மிகப்பெரிய கருணைக்கு விஷயமாகக்கூடியவன் மிகப்பெருத்த பாபம் செய்த அடியேனொருவனேயன்றி, குறைந்த பாபம் செய்த மற்றவர் விஷயமாக இடமில்லையென்றபடி.)

கருத்துரை:- ஆளவந்தார், கூரத்தாழ்வான், ஸ்ரீபராஸரபட்டர் ஆகிய இம்மூவரும் ஸுத்தாத்மாக்கள். ஆத்மாவுக்கு ஸுத்தியாவது – தாம் தாம் தத்தமது நூல்களில் தம்மிடமுள்ளனவாகக் கூறிக்கொண்ட குற்றங்களில் ஒன்றுகூடத் தம்மிடமில்லாமையே ஆகும். பட்டர் – பராஸரபட்டர், கூரத்தாழ்வானுடைய பெரியதிருக்குமாரருக்கு ஸ்ரீரங்கநாதனென்பது இயற்பெயர். அவரை ஸ்ரீரங்கநாதனாகிய பெரியபெருமாள் ‘பராஸரபட்டர்’ என்று பலதடவைகள் அருள்பாடிட்டதனால் அவருக்கு பராஸரபட்டரென்று ப்ரஸித்தி ஏற்பட்டது. அவர் அப்படி அழைப்பதற்குக் காரணம் – விஷ்ணுபுராணத்தில் பராஸரமுனிவர் போல், ‘பரம்பொருள் திருமாலே’ என்று அறுதியிட்டுப் ப்ரசாரம் செய்ததேயாகும்.

‘ஸமஸ்தநைச்யம் மயி ஏவ அஸங்குசிதம் அஸ்தி’ என்று பதவுரையில் காட்டிய அந்வயமேயல்லாமல், ‘ஸமஸ்தநைச்யம் மயி அஸங்குசிதமேவ அஸ்தி’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளலாம். எம்பெருமானார் மாமுனிகளிடம் ‘நமது கருணைக்கு வயிறு மிகப்பெரியது. அதற்குக் குறைவான குற்றங்களால் நிறைவு உண்டாகாது. உம்மிடம் குற்றங்கள் பூர்ணமாக இல்லையே. ஆக நம்கருணைக்கு நீர் எப்படி இலக்காவீர்’ என்று கேட்டதாகக்கொண்டு ‘ஸ்வாமீ யதிராஜரே! உமது கருணையின் வயிறு நிறைவதற்கு வேண்டியவளவு குற்றங்கள் அடியேனிடம் அஸங்குசிதமாகவே – பூர்ணமாகவே உள்ளன. ஆகவே தேவரீருடைய கருணைக்கு அடியேன் விஷயமாகலாம்’ என்ற கருத்து இவ்வந்வயத்தின்படி கொள்ளலாம். ‘தே கருணா து மத்கதிரேவ’ என்று பதவுரையில் காட்டியபடியேயன்றி , ‘தேது கருணைவ மத்கதி:’ என்று உள்ளபடியே அந்வயமும் கொள்ளல்தகும். ஸாஸ்த்ரங்களில் கூறிய ஜ்ஞானம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு அவற்றில் கூறப்பட்ட கர்மயோக ஜ்ஞானயோக பக்தியோகங்கள் கதி (உபாயம்) ஆகலாம். நல்லதகுதிகளேதுமின்றியே குற்றங்களும் மலியப்பெற்ற அடியேனுக்கு தேவரீருடைய கருணையே கதி (உபாயம்) என்று கூறுதல் இவ்வந்வயத்தின் படி கருத்தாகக் கொள்க.

ஆளவந்தார் தமது ஸ்தோத்ரரத்நத்தில் (62), ‘அடியேன் ஸாஸ்த்ரவரம்பை மீறினவன், மிகவும் நீசன், ஓரிடத்தில் நில்லாத சஞ்சலபுத்தியுள்ளவன், பொறாமைக்குப் பிறப்பிடம், செய்ந்நன்றிகொன்றவன், துரஹங்காரமுடையவன், பிறரை வஞ்சிப்பவன், கொலையாளி, மிகவும் பாவி’ என்றெல்லாம் தம்மிடமுள்ளனவாகக் கூறிய குற்றங்களும்.

கூரத்தாழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் (59, 60), ‘எம்பெருமானே! பகவத் பாகவத ஆச்சார்யாபசாரங்களிலிருந்து இன்றும் அடியேன் ஓய்ந்தபாடில்லை. இப்படிப் பாபியான அடியேன் கடக்கமுடியாத பெரிய அஜ்ஞாநக்கடலில் விழுந்து கிடக்கிறேன். வேறு புகலில்லாத அடியேன் உன் திருவடிகளைப் புகலாகப் பற்றுகிறேன். இப்படிப் பற்றினால் நீ கட்டாயமாக ரக்ஷிப்பாயென்கிற நம்பிக்கையும் அடியேனுக்கு இல்லை. அடியேன் ‘உன் திருவடிகளைப் பற்றுகிறேன்’ என்று முற்கூறிய ஸரணாகதிவார்த்தையின் பொருளிலும் அடியேனுக்கு ஸ்ரத்தை இல்லை’ என்றிங்ஙனம் கூறிக்கொண்ட குற்றங்களாகும்.

ஸ்ரீபராஸரபட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தரஸதகத்தில் (89) ‘அடியேனுக்கு, மோக்ஷோபாயமாகச் சொல்லப்பட்ட ஜ்ஞானயோக கர்மயோக பக்தியோகங்களாகிய உபாயமேதுமில்லை. மோக்ஷம் பெறும் ஆசையுமில்லை. வேறுகதியில்லாமை முதலிய தகுதிகளும் இல்லை. பாபங்கள் மட்டும் நிறையப்பெற்றவனாக உள்ளேன். மூர்க்கத்தனத்தினால் ஸப்தாதி விஷயங்களில் சென்று கலங்கிய நெஞ்சோடே ‘நீயே ஸரணமாக வேணும்’ என்று வார்த்தையை மட்டும் சொல்லுகிறேன்’ என்றிங்ஙனம் பலவாறாகக் கூறிய குற்றங்களும் ‘யாமுநகுரூத்தம கூரநாத பட்டாக்ய தேஸிக வரோக்த ஸமஸ்த நைச்யம்’ என்றதனால் கொள்க.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment