யதிராஜ விம்சதி – ச்லோகம் 1

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

அவதாரிகை                                                                                                                        ச்லோகம் 2

ச்லோகம் 1

श्री माधवान्ग्री जलजद्वय नित्य सेवा प्रेमा विलाशय परान्गुश पादभक्तम् ।
कामादि दोष हरमात्म पदस्रुतानाम् रामानुजम् यतिपतिम् प्रणमामि मूर्ध्ना ॥

ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரமாவிலாஸய பராங்குஸ பாதபக்தம்|
காமாதிதோஷஹரம் ஆத்மபதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா|| 1

பதவுரை:- ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜத்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின்மணாளனுடைய தாமரைமலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க, நித்யஸேவாப்ரேம  ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய, பராங்குஸ பாதபக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும், ஆத்மபத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய, காம ஆதி தோஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும், யதிபதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான, ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை, மூர்த்நா – தலையால், ப்ரணமாமி – வணங்குகிறேன்.

கருத்துரை:- ஸ்ரீ என்பது மாதவனுக்கு விசேஷணமாகும். ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள். ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேஹகுணங்களென்ன, பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களென்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில் திடமான விரதம் பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரியபிராட்டியாரை ஒத்தவன் அவளுடைய மணவாளனாகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள். இங்ஙனன்றிக்கே, ஸ்ரீயினுடைய – மாதவன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும் எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான் திருவடிகளென்றதாய்க் கொண்டு, “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஸ்ரிதோSஹம்” (பிராட்டியோடு நித்யஸம்பந்தம் பெற்ற ஹரியின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸுந்தர.ஸ்த.1) என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்றாகக் கொள்க. கண்ணபிரானுக்குத் தொண்டு செய்யவேணுமென்று மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முகங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தலில் மூளும்படி மதிகலங்கப்பெற்றதைத் திருவுள்ளத்திற்கொண்டு ‘மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச்செய்தார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் பக்திகொண்டவர் எம்பெருமானார். ‘மாறனடி பணிந்துய்ந்தவன் – இராமாநுசன்’ என்றாரிறே அமுதனாரும். அவரை அடியொற்றியிறே ‘பராங்குஸபாதபக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும். பரருக்கு – வேதத்தைப் ப்ரமாணமாக அங்கீகரியாத ஜைநபௌத்தாதிகளென்ன, வேதத்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்வைதவாதிகளென்ன இவர்களாகிய – புறமதத்தவராகிய யானைகளுக்கு. அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க. ‘ஒன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது அதன் வ்யாக்யானங்களை ஸேவித்து அறியத்தக்கது.

(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப்பெற்றார். அபிநவ தஸாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்தராகிய நம்மாழ்வாரிடம் லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமபக்தி இருப்பது மிகவும் பொருத்தமென்கிறார் வ்யாக்யாதா திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி. மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே, தம்மையடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொறாமை முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார். தம்மனத்தை அடக்கிய பெருமை படைத்தவர்க்கன்றோ பிறர் மனத்தின்கண் உண்டாகும் குற்றங்களைக் களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும். மாதவன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட தாமரைமலர்களோடு ஒப்புமைக் கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக- மாதவன் திருவடிகளில் பராங்குஸருக்கு ஏற்பட்ட பக்தி குணங்களுள்ளமையினாலென்பதும், பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறாமையினால் அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட பக்தி, குணங்களுள்ளமையினாலல்லாமல் ‘ஆசார்யன் திருவடிகளில் ஸிஷ்யனுக்கு ஸிஷ்யஸ்வரூபமடியாகவே பக்தியுண்டாகவேணும்’ என்ற நியதிப்படி இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்கதாகும். குணத்தினாலுண்டான பகவத்பக்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டாகிய ஆசார்யபக்தி சிறந்ததென்னும் ஸாஸ்த்ரார்த்தம் இதனால் ஸிக்ஷிக்கப்பட்டதாகிறது.

எம்பெருமானாராகிய ஆசார்யரிடத்தில் பக்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானாரிடத்தில் பக்தி உண்டானதற்கு, அவர்தாமும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் பக்தியுடையவராய் ஸந்யாஸி  ஸ்ரேஷ்டராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குஸபாதபக்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாமுனிகள் எம்பெருமானாரை – பராங்குஸபாதபக்தரென்றும் யதிராஜரென்றும் சிறப்பித்தருளினார். “யதீநாம் பதி: யதிபதி:” என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந்தன்மையினால் ஸேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும், காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரக்ஷிக்கிறார்) இதி பதி:” என்று வ்யுத்பத்தியின் மூலம் ரக்ஷகர் என்றும் பொருள் தேறுகிறது. ஸந்யாஸிகட்கு ஸேஷியும் ரக்ஷகரும் எம்பெருமானாரென்னவே, ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தித்ததாகிறது. திருமந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களுக்கும் – ஆசார்யருடைய ஸேஷித்வமும், ரக்ஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றோ முடிந்த பொருளாவது. இத்தகைய பெருமை பெற்ற யதிராஜரை – யதிராஜவிம்ஸதியாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு வணங்கினாராயிற்று மாமுனிகள் இந்த ஸ்லோகத்தினால். (1)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment