Monthly Archives: October 2015

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 10

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 9                                                                                                                       ச்லோகம் 11

ச்லோகம் 10

हा हन्त हन्त मनसा क्रियया च वाचा योहं चरामि सततं त्रिविधापचारान् ।
सोहं तवाप्रियकरः प्रियक्रुद्वदेव कालं नयामि यतिराज! ततोस्मि मूर्खः ॥ (10)

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோSஹம் சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் |
ஸோSஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருத்வதேவ
காலம் நயாமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க: || (10)

பதவுரை:- யதிராஜ – வாரீர் யதிராஜரே, ய: அஹம் – எத்தகைய அடியேன், மநஸா வாசா க்ரியயா ச – மனமொழி மெய்களால், த்ரிவித அபசாராந் – பகவதபசார பாகவதாபசார அஸஹ்யாபசாரங்களாகிற மூவகைப்பட்ட பாபங்களையும், ஸததம் சராமி – இடைவிடாமல் எப்போதும் செய்து வருகிறேனோ, ஸ:அஹம் – அத்தகைய அடியேன், தவ – அடியேனிடம் பரமதயாளுவாய்ப்பேரன்பு பூண்ட தேவரீருக்கு, அப்ரியகர: ஸந் – இஷ்டமல்லாதவற்றையே செய்பவனாய்க்கொண்டு, ப்ரியக்ருத்வத் ஏவ – இஷ்டமானவற்றையே செய்பவன் போலே, காலம் நயாமி – காலத்தைக் கழித்து வருகிறேன். ஹா ஹந்த ஹந்த – ஐயோ ஐயோ ஐயோ தத: அஹம் மூர்க்க: அஸ்மி – அதனால் அடியேன் மூர்க்கனாகிறேன், தத்வாரய – அந்த மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- மனத்தின் தீய செயல்களையும் (தீய சிந்தனையையும்) அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருளவேணும் என்கிறார். ‘நித்யம் யதீந்த்ர’ (4) என்னும் ஸ்லோகத்தில் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டபடியால், வ்ருத்த்யா பஸு: (7), துக்காவஹோSஹம் (8), நித்யந்த்வஹம் (9), ஹா ஹந்த ஹந்த (10) என்கிற இந்த நான்கு ஸ்லோகங்களிலும் மனமொழி மெய்களைக் குறிப்பிட்டிருந்த போதிலும், ஏழு எட்டாம் ஸ்லோகங்களில் வ்ருத்த்யா என்றும் துஷ்டசேஷ்ட: என்றும் முதலில் குறிப்பிட்டதையொட்டி மெய்யின் செயலையும், ஒன்பதாம் ஸ்லோகத்தில் ‘குரும் பரிபவாமி’ என்று முதலில் குறிப்பிட்டதனால் வாக்கின் செயலையும், பத்தாம் ஸ்லோகமான இதில் ‘மநஸா’ – என்று முதலில் கூறியதனால் மனத்தின் செயலையும் ப்ரதாநமாக நினைக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்கிறார் உரையாசிரியரான அண்ணாவப்பங்கார்ஸ்வாமி. பகவதபசாரமாவது – ஸ்ரீமந்நாராயணனை ப்ரஹ்மருத்ராதிகளோடு ஸமாநமாக நினைக்கையும், ராமாத்யவதாரங்களை வெறும் மநுஷ்யராக நினைக்கையும், அர்ச்சாவதாரங்களைக் கல்லாகவும் செம்பாகவும் நினைக்கையும் பிறவும் ஆம். பாகவதாபசாரமாவது – தனது தநலாபத்திற்காகவும், சந்தனம் புஷ்பம் பெண்கள் ஆகியவற்றிற்காகவும் ஸ்ரீவைஷ்ணவர்க்குப்பண்ணும் விரோதம் ஆகும். அஸஹ்யாபசாரமாவது – ஒரு காரணமுமின்றியேயிருக்க, பகவான் என்றாலும், பாகவதர்களென்றாலும், பொறாமலிருக்கையும், ஆசார்யாபசாரமும் தொடக்கமானவையாகும். இதன் விரிவு ஸ்ரீவசநபூஷணத்தில் காணத்தக்கது. மூன்றபசாரங்களைத் தாம் செய்வது தமக்கு வருத்தம் தருவதென்பதை ஹா, ஹந்த, ஹந்த என்று மூன்றிடைச் சொற்களால் குறித்தருளினர் என்க. ஆறாவது ஸ்லோகத்திலுள்ள ‘தத்வாரய’ என்பதனை இப்பத்தாம் ஸ்லோகம் வரையில் கூட்டிப்பொருள் உரைக்கப்பட்டது. தொண்டரடிப் பொடிகள் திருமாலை முப்பத்திரண்டாம் பாசுரத்தில் ‘மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே’ என்று மூன்று தடவைகள் தம்மைப் பற்றிக் குறிப்பிட்ட மூர்க்க ஸப்தத்தை, இதில் மாமுனிகள் எட்டு ஒன்பது பத்தாம் ஸ்லோகங்களில் தம்மைப்பற்றிக் குறிப்பிட்டருளினார் என்பர் இதன் உரையாசிரியர்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 9

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 8                                                                                                                         ச்லோகம் 10

ச்லோகம் 9

नित्यम् त्वहं परिभवामि गुरुं च मन्त्रं तद्देवतामपि न किन्चिदहो बिभेमि ।
इत्थं शठोSप्यशठवद्भवदीयसङ्घे ह्रुष्टश्चरामि यतिराज! ततोSस्मि मूर्खः ॥ (9)

நித்யம் த்வஹம் பரிபவாமி குரும் ச மந்த்ரம்
தத் தேவதாமபி ந கிஞ்சிதஹோ பிபேமி|
இத்தம் ஸடோSப்யஸடவத் பவதீயஸங்கே
ஹ்ருஷ்டஸ்சராமி யதிராஜ! ததோSஸ்மி மூர்க்க:|| (9)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே, அஹம் – அடியேன், குரும் – அறியாதவற்றை அறிவித்து அகவிருளைப்போக்கும் ஆசார்யனையும், மந்த்ரம் – (அவ்வாச்சார்யனாலே உபதேஸிக்கப்பட்ட) திருமந்த்ரமாகிய அஷ்டாக்ஷர மந்த்ரத்தையும், தத் தேவதாம் அபி – அம்மந்திரத்துக்கு உள்ளீடான ஸ்ரீமந்நாராயணனையும், நித்யம் து – எப்போதுமே, பரிபவாமி – அவமதிக்கிறேன். கிஞ்சித் அபி – சிறிதும், பிபேமி – இம்மூன்றை அவமதிப்பதனால் நமக்கு வருங்காலத்தில் என்ன கேடுவிளையுமோ என்று அஞ்சுகிறேனில்லை. அஹோ – இது என்ன ஆஸ்சர்யம். இத்தம் – இவ்விதமாக, ஸட:அபி – யாரும் அறியாமல் தீமை செய்யுமவனாயிருந்து வைத்தும், அல்லது ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கையில்லாதவனாயிருந்து வைத்தும், அஸடவத் – உள்ளும் புறமும் ஒக்க நன்மையே செய்யுமவன் போலவும், அல்லது முன்கூறிய மூன்றிலும் மதிப்பு வைக்கவேண்டுமென்று கூறும் ஸாஸ்த்ரத்தில் நம்பிக்கைமிக்க ஆஸ்திகன் போலவும், பவதீயஸங்கே – தேவரீர் திருவடிகளில் பக்தி பூண்ட அடியார்களின்-பரமாஸ்திகர்களின் கோஷ்டியில், ஹ்ருஷ்ட:ஸந் – நாம் செய்யும் தீமைகள் இவர்களுக்குத் தெரியாமலிருக்கிறதே என்று மகிழ்ச்சியடைந்தவனாய்க் கொண்டு, சராமி – ஸஞ்சரிக்கிறேன். தத: – அதனால் அஹம் மூர்க்க:அஸ்மி – அடியேன் மூர்க்கனாகிறேன். தத்வாரய – கீழ்க் கூறிய இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- கீழ் நான்காம் ஸ்லோகத்தில் ‘அடியேனுடைய வாக்கு தேவரீருடைய குணங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும்’ என்று அருளிச் செய்தவர் அதற்கு நேர்மாறாக குருமந்த்ரதேவதைகளை வாயார வைது பரிபவித்தலாகிற கெட்டகாரியங்களில் வாக்கு ஊன்றியிருப்பதையறிந்து, இத்தகைய பரிபவிக்கும் தீய செயலையும் அதற்குக் காரணமான மூர்க்கத்தனத்தையும் போக்கியருள வேணுமென்று ப்ரார்த்திக்கிறார்.

குருவை அவமதிப்பதாவது – அவர் உபதேஸித்தபடி விடவேண்டியவற்றை விடாமலிருத்தல், பற்ற வேண்டியவற்றைப் பற்றாமலிருத்தல். தனக்கொரு ப்ரஸித்திக்காகவோ கௌரவத்திற்காகவோ தநலாபத்திற்காகவோ, மந்திரம் கேட்கத் தகுதியற்றவர்கட்கு மந்திரத்தை உபதேஸித்தல் ஆகிய இவையே ஆம். மந்த்ரத்தை அவமதிப்பதாவது – மந்த்ரத்திலுள்ள உண்மைப்பொருளை மறைத்தலும் விபரீதப் பொருளுரைத்தலும் ஆம். மந்த்ரத்தால் கூறப்பட்ட தேவதையை அவமதிப்பதாவது – ஸ்ரீமந்நாராயணனால் ஸ்ருஷ்டிகாலத்தில் தரப்பட்ட மனமொழி மெய்களை அவன் விஷயத்தில் உபயோகப்படுத்தாமல், பிற நீச விஷயத்தில் உபயோகப் படுத்துதல் ஆகும். இவற்றின் விரிவு ஸ்ரீவசநபூஷணாதிகளில்  காண்க. அஹோ – ஆஸ்சர்யம். உலகத்தில் எங்கும் அடியேன் போன்ற பாவியும், பாவத்திற்கு அஞ்சாமலிருப்பவனும் தென்படாமையால் அடியேனுக்கே இது ஆஸ்சர்யத்தைத் தருகின்றதென்கிறார் ‘அஹோ’ என்பதனால்.

 

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 8

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 7                                                                                                                          ச்லோகம் 9

ச்லோகம் 8 

दुःखावहोहमनिशं तव दुष्टचेष्टः शब्दादिभोगनिरतः शरणागताख्यः ।
त्वत्पादभक्त इव शिष्टजनैघमध्ये मिथ्या चरामि यतिराज! ततोSस्मि मूर्खः ॥ (8)

து:காவஹோSஹமநிஷம் தவ துஷ்டசேஷ்ட:
ஸப்தாதி போக நிரதஸ்ஸரணாகதாக்ய:|
த்வத்பாதபக்த இவ ஸிஷ்டஜநௌக மத்யே
மித்யா சராமி யதிராஜ ததோSஸ்மி மூர்க்க:|| (8)

பதவுரை:- ஹே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸரணாகத ஆக்ய: – ஸரணாகதன் (ப்ரபந்நன்) என்னும் பெயரை மாத்திரம் சுமப்பவனாய், ஸப்தாதி போகநிரத: – ஸப்தாதி நீசவிஷயங்களை அநுபவிப்பதில் மிகவூன்றியவனாய், துஷ்டசேஷ்ட: – கூடாதென்று ஸாஸ்த்ரம் விலக்கியகெட்ட காரியங்களைச் செய்யுமவனாய் (அதனால்) தவ – தேவரீருக்கு, து: ஆவஹ: – துக்கத்தை உண்டுபண்ணுமவனாய் இருக்கிற, அஹம் – அடியேன், த்வத் பாத பக்த: இவ – தேவரீர் திருவடிகளில் பக்திபூண்ட ப்ரபந்நன்போல், சிஷ்டஜந ஓக மத்யே – ‘புருஷார்த்தம் தேவரீர் கைங்கர்யமே, அதற்கு உபாயம் தேவரீருடைய இன்னருளே’ என்று தெளிந்திருக்கும் ஸிஷ்ட ஜநங்களாகிய கூரத்தாழ்வான் முதலியோர்களின் கோஷ்டிகளின் நடுவில், மித்யா சராமி – பொய்யனாகவே திரிகின்றேன், தத: – அக்காரணத்தினால், மூர்க்க அஸ்மி – (அடியேன்) மூடனாக அறிவற்றவனாக ஆகிறேன், தத் வாரய – அப்படிப்பட்ட அறியாமையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- அடியேனுக்கு ஏற்பட்டுள்ள தகாத காரியங்களில் ஊற்றமானது தேவரீருக்கு துக்கத்தையுண்டாக்குமாகையால் அவ்வூற்றத்தை நஸிப்பித்தருளவேணுமென்று வேண்டுகிறாரிதனால். யதிராஜர் – மனத்தையடக்கிய எம்பார் முதலிய யதிகளையும் தம்முடைய மனவடக்கத்தாலே மகிழச் செய்யுமரசர் எம்பெருமானார் என்றபடி. ஸரணாகதாக்ய: – ஸரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமக்கிறேனேயொழிய, ஸரணாகதிக்கு வேண்டிய வேறு உபாயமில்லாமை வேறுகதியில்லாமை ஆகிய தகுதிகளில் ஏதுமுடையேனல்லேன் என்றபடி. ஸரணாகதனுக்குத் தானாக ஏற்படக்கூடிய நன்மையே செய்யவேண்டுமென்று நினைத்தல், தீமையை அடியோடு அகற்றல், எம்பெருமானார் நிஸ்சயம் நம்மைக் காப்பாற்றியே தீருவர் என்று நம்புதல், தம்மைக் காக்கும் பொறுப்பை எம்பெருமானாரிடம் ஒப்படைத்தல், வேறு உபாயமோ வேறு காப்பவரோ தமக்கு இல்லையே என்று வருந்துதல் ஆகிய ஸ்வபாவங்களில் ஏதுமுடையேனல்லேன் என்றபடியும் ஆம். து:காவஹ: – அடியேன் இங்ஙனம் ஸரணாகதனென்று பெயர் சுமந்து, ஸப்தாதிபோக நிரதனாய் துஷ்டசேஷ்டனாயிருப்பது – ‘ஐயோ நம்முடையவன் ஒருவன் இப்படி இருக்கிறானே’ என்று தேவரீருக்கு துக்கத்தை உண்டாக்குமென்றபடி. அல்லது, இவன் ஸரணாகதனென்று பெயர்படைத்திருப்பதினால் இவனைக்காக்கவேணுமோ, துஷ்டசேஷ்டனாக இருப்பதனால் இவனைக் கைவிடவேணுமோ, என்ற ஸந்தேஹமாகிய தர்மசங்கடமாகிய துக்கத்தையுண்டாக்குமென்றும் சொல்லலாம். மூர்க்கனாகிறான் நன்மை தீமைகளின் பகுத்தறிவின்றியே தான்பிடித்தது விடாமலிருக்குமவன். இத்தகைய மூர்க்கத்தனத்தைப் போக்கவேணுமென்று இதனால் ப்ரார்த்தித்தாராயிற்று.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 7

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம்  6                                                                                                                         ச்லோகம் 8

ச்லோகம்  7

व्रुत्या पशुर्नरवपुस्त्वहमीद्रुशोSपि श्रुत्यादिसिद्धनिखिलात्मगुणाश्रयोSयम् ।
इत्यादरेण क्रुतिनोSपि मिथः प्रवक्तुम् अध्यापि वन्चनपरोSत्र यतीन्द्र! वर्ते ॥ (7)

வ்ருத்த்யா பஷுர் நரவபுஸ்த்வஹமீத்ருஷோSபி
ஸ்ருத்யாதிஸித்த நிகிலாத்மகுணாஸ்ரயோSயம் |
இத்யாதரேண க்ருதிநோSபி மித:ப்ரவக்தும்
அத்யாபி வஞ்சநபரோSத்ர யதீந்த்ர! வர்த்தே || (7)

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, வஞ்சநபர: – பிறரை ஏமாற்றுவதிலேயே பற்றுடையவனான, அஹம் – அடியேன், நரவபு: – மனிதவுடல் கொண்ட, பஷு:து – விலங்காகவே (விலங்கென்றே) வ்ருத்த்யா – அடியேனுடைய செய்கையினாலே, (ஜ்ஞாயே – அறியப்படுகிறேன்.) (உண்பதும், உறங்குவதும், கலவி செய்வதும், பகைவனைக்கண்டு அஞ்சுவதுமாகிய இவற்றாலே அறிவிக்கப்பட்ட மனித விலங்கின் தன்மையை உடையேன் என்றபடி.) ஈத்ருஸ: அபி – இப்படிப்பட்டவனாக இருந்த போதிலும், ஸ்ருதி ஆதி ஸித்த நிகில ஆத்மகுண ஆஸ்ரய: – ‘வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்பட்ட எல்லா ஆத்மகுணங்களுக்கும் இருப்பிடமானவன், அயம் – இந்த மணவாளமாமுனிவன்’ இதி – என்றிவ்வாறாக, க்ருதிந: அபி – பாமரரன்றிக்கே பண்டிதராய் ஆராய்ச்சி வல்லுநருங்கூட, ஆதரேண – மனமார்ந்த அன்போடு, மித: – தங்களில் ஒருவர்க்கொருவர், ப்ரவக்தும் – (அவசியமாகச் சொல்லவேண்டிய நல்வார்த்தையைப் போலே) சொல்லுவதற்குத் தக்கபடியாக, அத்ர அபி – (வேறொருரிடத்திலல்லாமல்) இந்த ஸ்ரீரங்கத்திலும், அத்ய – இப்போது, வர்த்தே – இருக்கிறேன். தத்வாரய – அந்த (பிறரை வஞ்சிக்கும் எனது) தன்மையைப் போக்கியருளவேணும்.

கருத்துரை:- அஹிம்ஸை மெய்பேசுதல் கொடுமையில்லாமை தூய்மை பொறியடக்கம் கொடைத்தன்மை மனவடக்கம் பொறுமை அறிவு முதலியவையே வேதம் முதலியவற்றால் அறிவிக்கப்படுகின்ற ஆத்மகுணங்கள் (உயிரின் நற்பண்புகள்) ஆகும். ‘இவன் ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன்’ என்றால் மற்றும் சிலரும் ஆத்மகுணங்களுக்கு இருப்பிடமாக உள்ளார்கள் என்ற கருத்துத்தோன்றக் கூடுமென்று நினைத்து அப்படிச்சொல்லாமல், ‘ஆத்மகுணங்களுக்கெல்லாம் இருப்பிடமானவன் இவன்’ என்று சொன்னதனால், ‘அத்தகையவன் இம்மணவாளமாமுனி ஒருவனே’ என்று ஆராய்ச்சியாளரும் தம்மைப்பற்றி மகிழ்ந்து பேசுமளவிற்குத் தமக்குள்ள ஏமாற்றும் வல்லமையைக் குறிப்பிட்டருளினாரென்க. அத்யாபி என்றவிடத்திலுள்ள அபி ஸப்தத்தை, ஸவாஸம் செய்யாமல், வஞ்சந்மென்பதே அடியோடு தெரியாத நாதயாமுநாதி பூர்வாச்சார்யர்கள் வாஸம் செய்தருளின மிகப்புண்ணியமான ஸ்ரீரங்கத்தில் வஸிப்பதும் செய்கிறேனே, இதைவிட வஞ்சனை வேறுண்டோ என்பது அதன் கருத்தாகும்.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 6

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம்   5                                                                                                                         ச்லோகம் 7

ச்லோகம் 6

अल्पापि मे न भवदीयपदाब्जभक्तिः शब्दादिभोगरुचिरन्वहमेधते हा।
मत्पापमेव हि निदानममुष्य नान्यत् तद्वारयार्य यतिराज दयैकसिन्धो ॥ (6)

அல்பாபி மே ந பவதீய பதாப்ஜபக்தி: ஸப்தாதி போகருசிரந்வஹமேத தேஹா |
மத்பாபமேவ ஹி நிதாநமமுஷ்ய நாந்யத் தத்வாரயார்ய யதிராஜ தயைகஸிந்தோ || (6)

பதவுரை:- தயா ஏக ஸிந்தோ – தயை என்னும் நீர் வற்றாத ஒப்பற்ற கடலே, ஆர்ய – ஆசார்யரே, யதிராஜ – எதிகட்கு இறைவரான எம்பெருமானாரே, மே – அடியேனுக்கு, பவதீய பதாப்ஜ பக்தி: – தேவரீருடைய திருவடித்தாமரைகளில் ஆசையானது, அல்பா அபி – சிறிது கூட, (அஸ்தி) – இல்லை, ஸப்த ஆதி போக ருசி: – ஸப்தம் ஆகியவற்றை (தாழ்ந்த பொருள்களிலுள்ள சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்றிவற்றை) அநுபவிப்பதில் ஆசையானது, அந்வஹம் – ஒவ்வொரு நாள்களிலும், ஏததே – வளர்ந்து வருகிறது, ஹா – கஷ்டம், அமுஷ்ய – தகுந்த விஷயத்தில் ஆசை சிறிதுமில்லாமையும் தகாத விஷயத்தில் ஆசை பெருகி வருவதுமாகிய இதற்கு, நிதாநம் – மூலகாரணம், மத்பாபமேவ (பவதி) அடியேனுடைய அநாதியான பாபமே ஆகும். அந்யத் ந – வேறொன்றுமன்று, தத் – அந்த பாபத்தை, வாரய – போக்கியருளவேணும்.

கருத்துரை:- ‘நித்யம் யதீந்த்ர’ என்ற நான்காவது ஸ்லோகத்தில், அடியேனுடைய மனம் தேவரீர் திருமேனியை நினைப்பதில் ஊற்றமுடையதாக இருக்கட்டும். வேறொன்றை எண்ணுவதில் பராமுகமாக இருக்கட்டும்’ என்று அருளியதனால், இப்பொழுது தமது மனம் அப்படியில்லாமல் நேர்முரணாக இருப்பதனைக் குறிப்பாக உணர்த்தினாரல்லவா ? இத்தகைய முரண்பாட்டை, அதன்காரணமான பாபத்தோடு கூடப்போக்கியருளவேணுமென்கிறார் இந்த ஸ்லோகத்தினால். தயையாவது – தனது பயனொன்றையும் எதிர்பாராமல் பிறர்துன்பம் கண்டால், தானும் ‘ஐயோ இப்படி துன்பப்படுகிறானே’ என்று துன்பப்படுகை. அத்தகைய தயையாகிய நீர் வற்றாத கடல்போன்றவர் எம்பெருமானார். ‘ஒப்பற்ற’ என்பதனால், எம்பெருமானாகிய கடலில் தயையாகிய நீர் வற்றினாலும் வற்றும், எம்பெருமானாராகிய கடலில் தயை வற்றாது என்பது கருதப்பட்டது. ஆர்ய ஸப்தம் (1) ஆசார்யஸப்தத்தோடு ஒரே பொருளையுடையதாய்க் கொண்டு அறியாத தத்வஹிதபுருஷார்த்தங்களை அறிவிப்பதன் வாயிலாக மோக்ஷத்திற்குக் காரணமாகிறார் எம்பெருமானாரென்று அறிவிக்கிறது. (2) ஆராத் யாதி இதி ஆர்ய: என்ற வ்யுத்பத்தியின் மூலமாக, வேதத்தில் கூறிய நல்ல வழியின் அருகிலும், கெட்டவழியின் தொலைவிலேயும் செல்லுமவர் என்று பொருள்பட்டு, எம்பெருமானார் பரமவைதிகர் என்பதைக் காட்டுகிறது. ஆராத் = அண்மையும் சேய்மையும். (3) அர்யதே – ப்ராப்யதே – அடையப்படுகிறார் என்று பொருள்பட்டு, எல்லாராலும் வீடுபேற்றிற்காக அடையப்படுமவர் எம்பெருமானார் என்ற கருத்தை புலப்படுத்துகிறது. வருத்தம் வியப்பு என்னும் இரண்டையும் குறிக்கின்ற ஹா என்ற இடைச்சொல் – முறையே – தக்க பொருளில் ஆசையின்மையும், தகாத பொருளில் ஆசையுடைமையும் தமக்கு வருத்தத்தைத் தருகிறது என்றும், குறைந்த ஸுகத்தைத் தரும் ஸப்தாதி விஷயங்களையே விரும்பி, மிகவும் அதிகமான ஸுகத்தை உண்டுபண்ணும் எம்பெருமானார் திருவடிகளை விரும்பாமலிருப்பது தமக்கு வியப்பைத் தருகிறது என்றும் இரண்டு கருத்துகளைத் தெரிவிக்கும். ‘மத்பாபமேவ – நான் செய்த பாபமே, நிதாநம் – மூலகாரணம்’ என்பதனால் – பக்திமான்களைப் பகைப்பதனால் அப்பக்திமான்கள் பக்தராவதற்கு முன்பு செய்த பாபங்களை எம்பெருமான் அவர்களைப் பகைப்பவர்கள் மேலே ஏறிடுவதுமுண்டு. அப்படி அடியேன் மேலேறிட்ட பாபமன்று, அடியேனே செய்த பாபம் மூலகாரணம் என்று தெரிகின்றது. ‘அந்யத் ந’ – வேறொன்றுமன்று என்பதனால் – ஸர்வேஸ்வரன் தனது ஸ்வதந்த்ரத்தன்மையினாலோ, அடியேனையிட்டு விளையாட எண்ணியதனாலோ அடியேன் தகாத பொருளில் ஆசையும் தக்க பொருளில் ஆசையில்லாமையும் உடையவனாயிருக்கிறேனல்லேன்; பின்னையோவென்னில் அடியேன் செய்த பாபத்தினாலேயே இப்படி இருக்கிறேன் – என்பது குறிப்பிடப்படுகிறது.

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 5

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 4                                                                                                                           ச்லோகம் 6

ச்லோகம் 5

अष्टाक्षराख्यमनुराजपदत्रयार्थनिष्ठां ममात्र वितराध्य यतीन्द्रनाथ ।
शिष्टाग्रगण्यजनसेव्यभवतपदाब्जे ह्रुष्टास्तु नित्यमनुभूय ममास्य बुद्धिः ॥ (5)

அஷ்டாக்ஷராக்ய மநுராஜ பதத்ரயார்த்த நிஷ்டாம் மமாத்ர விதராத்ய யதீந்த்ரநாத |
ஸிஷ்டாக்ரகண்யஜநஸேவ்யபவத்பதாப்ஜே ஹ்ருஷ்டாSஸ்து நித்யமநுபூய மமாஸ்ய புத்தி: || (5)

பதவுரை:- நாத – அடியோங்களுக்கு ஸ்வாமியாகிய, யதீந்த்ர – யதிராஜரே, அத்ர – இருள்தருமாஞாலமாகிற இந்த ஸம்ஸார மண்டலத்தில், அத்ய – கலிபுருஷன் அரசு செலுத்துகிற இக்காலத்தில், மம – மிகவும் தாழ்ந்த அடியேனுக்கு, அஷ்டாக்ஷர ஆக்ய மநுராஜ – அஷ்டாக்ஷரமென்று ப்ரஸித்திபெற்ற சிறந்த மந்த்ரத்திலுள்ள, பதத்ரய அர்த்த நிஷ்டாம் – ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களினுடைய பொருள்களாகிய அநந்யார்ஹஸேஷத்வம், அநந்யஸரணத்வம், அநந்யபோக்யத்வம் (எம்பெருமானொருவனுக்கே அடிமையாகை, எம்பெருமானையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, எம்பெருமானையே போக்யமாக – அநுபவிக்கத்தக்க பொருளாகக் கொள்ளுகை.) என்கிற இம்மூன்றினுடையவும் முடிவெல்லையை, விதர – தந்தருளவேணும். ஸிஷ்ட அக்ரகண்ய ஜந ஸேவ்ய பவத் பதாப்ஜே – பரதத்வம் மோக்ஷோபாயம் புருஷார்த்தம் (பயன்) ஆகியவிவற்றில் திரிபுணர்ச்சியில்லாத ஸிஷ்டர்களுக்குள்ளே, தேவரீரே பரதத்வம் தேவரீரே மோக்ஷோபாயம் தேவரீரே புருஷார்த்தம் என்று நினைப்பதனாலே முதலில் எண்ணத்தக்க முற்கூறிய கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலான ஸஜ்ஜநங்களாலே அடிமைசெய்யத்தக்க தேவரீருடைய தாமரைமலர் போன்ற திருவடிகளை, நித்யம் அநுபூய – எப்போதும் அநுபவித்து,  அஸ்ய மம புத்தி: – மிகத்தாழ்ந்த அடியேனுடைய புத்தியானது, ஹ்ருஷ்டா – அவ்வநுபவத்தின் பயனாகிய கைங்கர்யம் கிடைத்ததனாலுண்டான ஸந்தோஷத்தை உடையதாக, அஸ்து – ஆயிடுக.

கருத்துரை:- இந்த ஸ்லோகம் முதலாக மேலுள்ள ஸ்லோகங்கள் அனைத்தும், ‘நித்யம் யதீந்த்ர’ என்ற முன் ஸ்லோகத்தின் விவரணமாகவே அமைந்துள்ளன. ‘ஸ்ரீமந்யதீந்த்ர’ என்ற பத்தொன்பதாம் ஸ்லோகம் இந்த ஸ்தோத்ரத்தின்  பொருளாகிய யதீந்த்ர கைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் யதீந்த்ர தாஸகைங்கர்ய ப்ரார்த்தனைக்கும் உபஸம்ஹாரமாக அமைந்துள்ளது. ‘விஜ்ஞாபநம் யதிதம்’ என்ற இருபதாம் ஸ்லோகமோவென்னில் முதல் முடிவு நடுப்பகுதிகளாலே கூறப்பட்ட பொருளைக் காரணம் கூறித்திடப்படுத்துவதாக அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களின் பொருள்களுக்கு முடிவான எல்லையாவது – ஆசார்யனுக்கே அடிமையாகை, ஆசார்யனையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை ஆசார்யனையே போக்யமாக (அநுபவிக்கத்தக்கபொருளாகக்) கொள்ளுகை  ஆகிய இவை மூன்றுமே ஆகும். நடுவெல்லையோவெனில் – பாகவதர்களுக்கே அடிமையாகை பாகவதர்களையே மோக்ஷோபாயமாகக் கொள்ளுகை, பாகவதர்களையே போக்யமாகக் (அநுபவிக்கத்தக்க பொருளாகக்) கொள்ளுகையாகிய இவையே. முதல் பர்வம் எம்பெருமான், மத்யமபர்வம் – பாகவதர்கள், சரமபர்வம் – ஆசார்யன். ஸ்ரீமதஷ்டாக்ஷர மஹாமந்த்ரத்திலுள்ள ஒம் நம: நாராயணாய என்ற மூன்று பதங்களும் நேரான பதப்பொருள்களுக்கேற்றபடி, முதலில் ஷேஷித்வ ஸரண்யத்வ போக்யத்வங்களை பகவான் விஷயத்தில் தெரிவித்து, பின்பு பகவானுடைய திருவடி ஸ்தாநத்திலே நிற்கும் பாகவதர்கள் விஷயத்திலே தெரிவித்து, அதற்குப்பிறகு அந்த பாகவதர்களால் கொண்டு சேர்க்கப்படுகிற பாகவதோத்தமரான ஆசார்யன் விஷயத்திலே தெரியப்படுத்தி நின்றுவிடுகின்றன. ஆசார்யனாகிற விஷயமே சரமமாகையால் ப்ரதம்பர்வம் பகவான், மத்யமபர்வம் – பாகவதர், சரமபர்வம் – ஆசார்யன். ஆக இந்த ஸ்லோகத்தில் முற்பகுதியினால் மாமுனிகள் எம்பெருமானாரை ஸம்போதித்து, யதிராஜரான எங்கள் குலநாதரே! திருவஷ்டாக்ஷரத்தின் மூன்று பதப்பொருள்களின் முடிவெல்லையை (உத்தாரகாசார்யராகிய தேவரீருக்கே அடிமையாயிருக்கை, தேவரீரையே மோக்ஷத்திற்கு உபாயமாகக் கொள்ளுகை, தேவரீரையே போக்யமாகக் கொள்ளுகை என்கிற இம்மூன்றினையும்) அடியேன் திடமாகப் பற்றியிருக்கும்படி க்ருபை செய்தருளவேணும் என்று ப்ரார்த்தித்தாராயிற்று. மந்த்ரராஜமென்பது முப்பத்திரண்டெழுத்துக்களைக் கொண்ட நரஸிம்ஹாநுஷ்டுப் மந்த்ரத்திற்கும் பெயராகையால் அதை நீக்க வேண்டி ‘அஷ்டாக்ஷராக்ய’ என்று மந்த்ரராஜத்திற்கு அடைமொழி கொடுத்தருளினார். திருமந்த்ரம் எட்டெழுத்து உடையதாகவன்றோ ப்ரஸித்தமாயிருப்பது. இதில் பிற்பகுதியினால், ஆசார்ய நிஷ்டர்களாகிய கூரத்தாழ்வான் முதலியாண்டான் போல்வாரான ஸிஷ்ட ஜநங்கள் அநுபவித்துத் தொண்டு செய்து மகிழ்ச்சியடைவதற்குக் காரணமான தேவரீருடைய திருவடித்தாமரைகளில், ஆசார்ய நிஷ்டனாகிய அடியேனும் இழிந்து அநுபவித்துக் கைங்கர்யம் செய்து மகிழும்படி தேவரீர் அருள்புரியவேண்டுமென்று ப்ரார்த்தித்தாராயிற்று. (5)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 4

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம்  3                                                                                                                         ச்லோகம் 5

ச்லோகம் 4

नित्यं यतीन्द्र तव दिव्यवपुस्स्म्रुतौ मे सक्तम् मनो भवतु वाग्गुणकीर्तनेSसौ
क्रुत्यञ्च दास्यकरणं तु करद्वयस्य व्रुत्त्यन्तरेSस्तु विमुखं करणत्रयञ्च ॥ (4)

நித்யம் யதீந்த்ரதவ திவ்யவபு:ஸ்ம்ருதௌமே ஸக்தம் மநோபவது வாக்குணகீர்த்தநேSஸௌ |
க்ருத்யஞ்ச தாஸ்யகரணம் து கரத்வயஸ்ய வ்ருத்யந்தரேSஸ்து விமுகம் கரணத்ரயஞ்ச ||

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதீந்த்ரரே, மே – அடியேனுடைய, மந: – மனமானது, தவ – தேவரீருடைய, திவ்யவபு: ஸ்ம்ருதௌ – மிகவும் அழகிய திருமேனியை நினைப்பதில், நித்யம் – எப்போதும், ஸக்தம் – பற்றுடையதாக, பவது – இருந்திடுக. அஸௌ மே வாக் – தேவரீரைத் துதியாமல் வெகுதூரத்தில் இருக்கிற அடியேனுடைய வாக்கானது, தவ – தேவரீருடைய, குணகீர்த்தநே – நீர்மை எளிமை கருணை அழகு மென்மை முதலிய கல்யாணகுணங்களை ஆசையோடு துதிப்பதில், ஸக்தா பவது – பற்றுடையதாக இருந்திடுக. மே – அடியேனுடைய, கரத்வயஸ்ய – இரண்டு கைகளுக்கும், தவ – தேவரீருக்கு, தாஸ்ய கரணம் து – அடிமை செய்வதொன்றே, க்ருத்யம் – கடமையாக, அஸ்து – இருந்திடுக. மே – அடியேனுடைய, கரணத்ரயம் – (தேவரீரையே நினைப்பதிலும் துதிப்பதிலும் அடிமைசெய்வதிலும் பற்றுடையதாக இருக்கவேணுமென்று ப்ரார்த்திக்கப்பட்ட) மனம் வாக்கு காயம் என்கிற மூன்று கருவிகளும், வ்ருத்தி அந்தரே – வேறொருவரை நினைப்பதும் துதிப்பதும் அடிமை செய்வதுமாகிய வேறு காரியங்களில், விமுகம் ச அஸ்து – பராமுகங்களாகவும் இருந்திடுக.

கருத்துரை:- கீழ் ஸ்லோகத்தில் யதிராஜ ஸிஷ்யர்களான கூரத்தாழ்வான் முதலியவர்களுக்குத் தாம் அடிமையாயிருத்தலை ப்ரார்த்தித்தவர், அதனால் திடப்படுத்தப்படுகிற யதிராஜருக்குத் தாம் அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். ‘க்ருத்யம் ச’ என்றவிடத்திலுள்ள உம்மைப் பொருள் படுகின்ற சகரம், மற்றும் நல்ல விஷயங்களில் ஈடுபடவேண்டிய கண் காது முதலியவற்றையும் குறிப்பிட்டு, அவையும் யதிராஜர் திறத்திலே பற்றுடையதாக இருக்க வேண்டுமென்ற ப்ரார்த்தனையைக் காட்டுகிறது. இதில் முதல் மூன்றடிகளால் தம்முடைய மனமொழிமெய்கள் யதிராஜரிடமே ஊன்றியிருக்கவேண்டுமென்பதையும், நான்காம் அடியால் மற்றவரிடம் பற்றற்றிருக்க வேண்டுமென்பதையும் யதிராஜர் தம்மிடமே ப்ரார்த்தித்தாராயிற்று. பவது அஸ்து என்ற க்ரியாபதங்களிரண்டும் ப்ரார்த்தனையைக் காட்டும் லோட்ப்ரத்யயாந்தங்கள். க்ருத்யம் – அவஸ்யமாகச் செய்தே தீரவேண்டிய கடமை என்றபடி. முதலடியில் உள்ள தவ, மே என்பனவற்றை மற்ற மூன்றடிகளோடும் கூட்டுக. (4)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 3

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம்  2                                                                                                                           ச்லோகம் 4

ச்லோகம் 3

वाचा यतीन्ड्र मनसा वपुषा च युष्मत्पादारविन्दयुगलं भजतां गुरूणाम् ।
कूराधिनाथकुरुकेशमुखाध्यपुंसां पादानुचिन्तनपरस्सततं भवेयम् ॥ 3

வாசா யதீந்த்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்பாதாரவிந்தயுகளம் பஜதாம் குரூணாம் |
கூராதிநாதகுருகேஸமுகாத்யபும்ஸாம் பாதாநுசிந்தநபரஸ்ஸததம் பவேயம் || 3

பதவுரை:- ஹே யதீந்த்ர – வாரீர் யதிராஜரே, மநஸா – மனத்தினாலும், வாசா – நாவினாலும், வபுஷா – தேஹத்தினாலும், யுஷ்மத் – தேவரீருடைய, பாதாரவிந்தயுகளம் – தாமரைமலர் போன்ற திருவடிகளின் இரட்டையை, பஜதாம் – ஸேவித்துக் கொண்டிருக்கிற, குரூணாம் – ஆசார்யர்களாகிய, கூராதிநாதகுருகேஸமுக ஆத்யபும்ஸாம் – கூரத்தாழ்வான், திருக்குருகைப்பிரான்பிள்ளான் முதலிய பூர்வாச்சார்யர்களுடைய், ஸததம் பாத அநுசிந்தந பர: – எப்போதும் திருவடிகளைச் சிந்திப்பதில் ஊன்றியவனாக, பவேயம் – (அடியேன்) ஆகக்கடவேன்.

கருத்துரை:- மேல் ஸ்லோகத்தில் யதிராஜருக்கடிமையாயிருத்தலை ப்ரார்த்திக்கிறவராய்க்கொண்டு, அது தன்னைத் திடப்படுத்துகிற – யதிராஜ ஸிஷ்யர்களுக்கு அடிமையாயிருத்தலை இந்த ஸ்லோகத்தினால் ப்ரார்த்திக்கிறார். கூராதிநாதர்-கூரத்தாழ்வான். குருகேசர் எம்பெருமானாரால் ஜ்ஞாந புத்திரராக ஸ்வீகாரம் செய்து கொள்ளப்பெற்ற திருக்குருகைப்பிரான் பிள்ளான். முக(முதலான) என்பதனால் எம்பார், முதலியாண்டான் தொடக்கமான மற்றுமுண்டான ஸிஷ்யர்களைக் கொள்க. குரூணாம்-க்ருணந்தி இதி குரவ: என்ற வ்யுத்பத்தியினால் உபதேஸம் செய்யுமவர்களை இந்த குருஸப்தம் குறிக்கும். மேலும் ‘கு’ என்பது அறியாமையாகிற அகவிருளையும், ‘ரு’ என்பது அதைப்போக்குமவரையும் குறிப்பிட்டு-குருஸப்தம் அறியாமையைத் தமது உபதேஸத்தால் போக்குமவரைக் குறிப்பிடும். இது கூரத்தாழ்வான் முதலியோர்க்கு அடைமொழியாகும். பும்ஸாம் என்பதில் பும்ஸ்ஸப்தம் – புநந்தி இதி புமாம்ஸ: என்ற வ்யுத்பத்தியினால் பரிஸுத்தமானவர்களைத் தெரிவிக்குமதாய், பகவானுக்கும் அவனடியார்களுக்கும் சிறப்பாக எம்பெருமானார்க்கும் அடிமையாக இருப்பதனால் பரிஸுத்தர்களான கூரத்தாழ்வான் முதலியோர்க்கு விஸேஷணமாகும். அநுசிந்தநமானது-கூரத்தாழ்வான் முதலிய ராமாநுஜ ஸிஷ்யர்களைத் தமக்கு ஸேஷிகளாக – தலைவர்களாக த்யாநித்தலாகும். பவேயம் – இது ப்ரார்த்தனை என்னும் பொருளில் வந்த லோட் ப்ரத்யயாந்தமாகையால் கூரத்தாழ்வான் முதலிய பூர்வம் புருஷர்களுடைய திருவடிகளை அடியேன் சிந்திப்பவனாக ஆகவேண்டுமென்று, யதீந்த்ரரான தேவரீரை ப்ரார்த்திக்கிறேன் என்ற கருத்து இதற்குத் தேறும். (3)

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் – 2

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

 ச்லோகம் 1                                                                                                                           ச்லோகம் 3

ச்லோகம் 2

स्रीरङ्गराजचरणाम्बुजराजहंसं स्रीमत्पराङ्कुशपदाम्बुजब्रुन्गराजम् ।
स्रीभट्टनाथपरकालमुकाब्जमित्रं स्रीवत्सचिह्नशरणं यतिराजमीडे ॥ 2

ஸ்ரீரங்கராஜசரணாம்புஜராஜஹம்ஸம் ஸ்ரீமத்பராங்குஸபதாம்புஜப்ருங்கராஜம் |
ஸ்ரீபட்டநாதபரகாலமுகாப்ஜமித்ரம் ஸ்ரீவத்ஸசிஹ்நஸரணம் யதிராஜமீடே || 2

பதவுரை:- ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜஹம்ஸம் – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரைமலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜஹம்ஸம் போன்றவரும், ஸ்ரீமத்பராங்குஸ பதாம்புஜ ப்ருங்கராஜம் – ஸ்ரீமத்பராங்குஸராகிய நம்மாழ்வாருடைய திருவடிகளென்னும் தாமரைமலர்களில் (தேனைப்பருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும், ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் – ஸ்ரீபட்டநாதராகிய பெரியாழ்வாரென்ன, பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுகங்களாகிய தாமரைமலர்களை மலரச்செய்கிற ஸூர்யன் போன்றவரும், ஸ்ரீவத்ஸசிஹ்ந ஸரணம் – ஸ்ரீவத்ஸசிஹ்நராகிய கூரத்தாழ்வானைத் திருவடிகளாக உடையவருமாகிய, யதிராஜம் – யதிராஜராகிய எம்பெருமானாரை, ஈடே – துதிக்கிறேன்.

கருத்துரை:- துர்லபோ மாநுஷோ தேஹோ தேஹிநாம் க்ஷணபங்குர:| தத்ராபி துர்லபம் மந்யே வைகுண்ட ப்ரிய தர்ஸநம்|| (ஸ்ரீபாகவதம் 11-2-29) [உயிர்களுக்கு, கணநேரத்தில் அழியக்கூடிய மனிதவுடல் கிடைப்பது அரிது, அது கிடைத்தபோதிலும் வைகுண்டநாதனுடைய அன்புக்கு இலக்கான பாகவதர்களைக் காண்பது மிகவும் அரிது] என்கிறபடியே பாகவதர்களுடைய ஸேவையே அரியதானால் அவர்களுக்குக் கைங்கர்யம் செய்வது அரிதென்பதைத் தனியே சொல்லவும் வேண்டியதில்லையாகையால், பாகவத கைங்கர்யமாகிய யதிராஜவிம்ஸதியின் விண்ணப்பத்திற்குத் தடைகள் மிகமிக உண்டாகக் கூடுமென்று நினைத்து, அத்தடைகள் நீங்குவதற்காக மறுபடியும் தன்னுடைய ஆசார்யநிஷ்டையாகிய தகுதிக்கேற்றபடி யதிராஜ-ஸ்தோத்ரரூபமான மற்றொரு மங்கள ஸ்தோத்ரத்தை இயற்றுகிறார் – ஸ்ரீரங்கராஜ என்று தொடங்கி. இங்குள்ள ஸ்ரீஸப்தம் ஸ்ரீவைகுண்டமும் இவ்வுலகுமாகிய இருவகைச் செல்வங்களைக் காட்டுமதாய் அவற்றையுடையவன் ரங்கராஜன் என்பதை அறிவிக்கிறது. அல்லது செம்மை மென்மை நறுமணமாகிய நற்பண்புகளைக் காட்டுமதாய் அவற்றை இயற்கையாகப்பெற்ற ஸ்ரீரங்கராஜனுடைய திருவடித்தாமரைகளைத் தெரிவிக்கிறது. இதன்படி ஸ்ரீயை உடையன ரங்கராஜ சரணாம்புஜங்கள் என்ற கருத்துத்தோன்றும். பராங்குஸரிடமுள்ள ஸ்ரீமத்த்வமாவது – எம்பெருமானை அநுபவிப்பதும், அவனுக்குத் தொண்டு செய்வதும் அவற்றிற்கு உறுப்பான பரபக்தி பரஜ்ஞாந பரமபக்திகளுமாகிய – ஜீவாத்மஸ்வரூபத்திற்குத் தக்க செல்வங்கள் நிறைந்துள்ளமையே ஆகும். காணவேணுமென்று ஆசைப்படுகை பரபக்தி, கண்டபிறகு கூடவேணுமென்னுமாசை பரஜ்ஞாநம், கூடிய பிறகு பிரிய நேருமோ என்று அச்சப்படுகை பரமபக்தி என்பர் பெரியோர். இவை மூன்றும் உணவுக்குப் பசி போலே பகவதநுபவகைங்கர்யங்களுக்கு முன்பு இருக்கவேண்டுமாம். பசி இல்லையேல் உணவுருசிக்காததுபோலே, இம்மூன்றும் இல்லையாகில் பகவான் திறத்தில் நாம் செய்யும் அநுபவ-கைங்கர்யங்கள் ருசியாதன ஆகுமாம். ஆகவே ஆழ்வாருக்கு இம்மூன்றும் இவற்றின் பின்னே நிகழும் பகவதநுபவ-கைங்கர்யங்களும் நிறைந்துள்ளமை இந்த ஸ்ரீமத் ஸப்தத்தினால் அறிவிக்கபடுகின்றன என்றபடி. ஸ்ரீபட்டநாத பரகால – பட்டநாதரிடத்திலும், பரகாலரிடத்திலும் பொருந்துமதாய், முறையே பரம்பொருள் திருமாலே என்று அறுதியிட்டு அவனுக்குப் பல்லாண்டு பாடுகையாகிற செல்வத்தையும், புறச்சமயிகளை அடக்குதல், திருவரங்கம் பெரியகோயிலில் மதிள்கட்டுதல், எம்பெருமானைப் பூர்ணமாக அநுபவிக்கவோ, பிரியவோ பொறாத மென்மைத்தன்மையாகிய செல்வங்களையும் குறிக்கிறது. இத்தகைய மென்மைத்தன்மையை ‘நும்மடியாரெல்லாரோடும் ஒக்க எண்ணியிருத்தீர் அடியேனை’ (பெரிய திரு. 4-9-6) என்று தாமே விண்ணப்பம் செய்தாரிறே திருமங்கையாழ்வார் இந்தளூரிலெந்தை பெருமானிடம். ‘ஸ்ரீவத்ஸசிஹ்ந’ என்றதில், வத்ஸசிஹ்ந என்பது வத்ஸே – மார்பில், சிஹ்நத்தை – மறுவையுடைய எம்பெருமானை முற்படக்காட்டி, அவனுடைய பெயரைக் கொண்ட கூரத்தாழ்வானைப் பின்பு குறிப்பிட்டு, அவ்வாழ்வானுக்குப் பெரியபிராட்டியோடு உள்ள ஒற்றுமையை ஸ்ரீஸப்தம் தெரிவிக்கிறது. ஸ்ரீயே ஆகிய வத்ஸசிஹ்நரென்றவாறாம். தனக்குப் பகைவராகிய ஏகாக்ஷி முதலிய அரக்கியரைக் காப்பாற்றிய ஸீதாப்பிராட்டியோடு தமக்குக் கண்போகக் காரணமாகிய நாலூரானுக்கும் முத்திநல்கிய கூரத்தாழ்வான் எல்லையற்ற கருணையுடைமையில் ஒற்றுமையுடையவரிறே. முன் ஸ்லோகத்தில் ‘ப்ரணமாமி மூர்த்நா’ என்று தலையால் வணங்குதலாகிய காயிகமான மங்களம் செய்யப்பட்டது. இஸ்லோகத்தில் ‘ஈடே’ என்று துதி செய்தலாகிய வாகிகமங்களம் செய்யப்படுகிறது. வாக் – காயங்களின் முயற்சி, மனத்தின்கண் நினைவில்லாமல் நிகழாதாகையால் – மனத்தில் யதிராஜரை உயர்ந்தவராக நினைத்தலாகிய மாநஸிகமங்களமும் செய்யப்பட்டதாகவே கொள்ளத்தக்கது. இங்ஙனம் இரண்டு ஸ்லோகங்களால் மங்களம் செய்து மேலே நூலைத்தொடங்குகிறார் மாமுனிகள் என்க. (2)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

யதிராஜ விம்சதி – ச்லோகம் 1

Published by:

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

திராஜ விம்சதி        

அவதாரிகை                                                                                                                        ச்லோகம் 2

ச்லோகம் 1

श्री माधवान्ग्री जलजद्वय नित्य सेवा प्रेमा विलाशय परान्गुश पादभक्तम् ।
कामादि दोष हरमात्म पदस्रुतानाम् रामानुजम् यतिपतिम् प्रणमामि मूर्ध्ना ॥

ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரமாவிலாஸய பராங்குஸ பாதபக்தம்|
காமாதிதோஷஹரம் ஆத்மபதாஸ்ரிதாநாம் ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா|| 1

பதவுரை:- ஸ்ரீமாதவ அங்க்ரி ஜலஜத்வய – எல்லாவற்றாலுமுண்டான பெருமையை உடையவளான ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்றவனாகிய திருவின்மணாளனுடைய தாமரைமலர் போன்ற திருவடியிணையில் செய்யத்தக்க, நித்யஸேவாப்ரேம  ஆவில ஆஸய – நித்ய கைங்கர்யத்தில் அதிக ப்ரீதியாலே கலங்கிய அறிவையுடைய, பராங்குஸ பாதபக்தம் – பராங்குஸரென்னும் நம்மாழ்வாருடைய திருவடிகளில் பரமபக்தி பூண்டவரும், ஆத்மபத ஆஸ்ரிதாநாம் – தம்முடைய திருவடிகளை அடைந்தவர்களுடைய, காம ஆதி தோஷஹரம் – காமம் முதலிய குற்றங்களைப் போக்கடிப்பவரும், யதிபதிம் – பொறிகளை யடக்கிய துறவிகளுக்குத் தலைவருமான, ராமாநுஜம் – ராமாநுஜரென்னும் எம்பெருமானாரை, மூர்த்நா – தலையால், ப்ரணமாமி – வணங்குகிறேன்.

கருத்துரை:- ஸ்ரீ என்பது மாதவனுக்கு விசேஷணமாகும். ஸ்ரீ போன்ற மாதவனென்பது இதன் பொருள். ஸ்ரீ: என்றது பெரியபிராட்டியாரை. அழகு நறுமணம் மென்மை முதலிய தேஹகுணங்களென்ன, பேரன்பு, நீர்மை, எளிமை முதலான ஆத்மகுணங்களென்ன, அவற்றிலும் சிறந்த அடியாரைக் காப்பதில் திடமான விரதம் பூணுதலென்ன இவை தொடக்கமான பெருமைகளாலே பெரியபிராட்டியாரை ஒத்தவன் அவளுடைய மணவாளனாகிய எம்பெருமானென்பது இதன் திரண்ட பொருள். இங்ஙனன்றிக்கே, ஸ்ரீயினுடைய – மாதவன் திருவடிகள் என்று அந்வயித்து, பிராட்டி நித்யவாஸம் செய்யும் எம்பெருமான் திருவடிகளென்றலும் உண்டு. அப்போது, பிராட்டி எழுந்தருளியிருக்கிற பெருமான் திருவடிகளென்றதாய்க் கொண்டு, “ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஸ்ரிதோSஹம்” (பிராட்டியோடு நித்யஸம்பந்தம் பெற்ற ஹரியின் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றினேன் அடியேன்) (ஸுந்தர.ஸ்த.1) என்று கூரத்தாழ்வான் அருளிச்செய்த படியே மேலக்கோட்டையில் போலே பிராட்டியோடு கூடிய பெருமாள் திருவடிகளைச் சொல்லிற்றாகக் கொள்க. கண்ணபிரானுக்குத் தொண்டு செய்யவேணுமென்று மிகவும் ஆசைப்பட்ட நம்மாழ்வார், அவன் வந்து முகங்காட்டும் வரையில் பொறுத்திருக்க வேண்டிய தம்முடைய பாரதந்தர்யத்துக்கு முரண்பட்டதாகிய மடலூர்தலில் மூளும்படி மதிகலங்கப்பெற்றதைத் திருவுள்ளத்திற்கொண்டு ‘மாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா ப்ரேமாவிலாஸய பராங்குஸ’ என்றருளிச்செய்தார். அத்தகைய நம்மாழ்வாரின் திருவடிகளில் பக்திகொண்டவர் எம்பெருமானார். ‘மாறனடி பணிந்துய்ந்தவன் – இராமாநுசன்’ என்றாரிறே அமுதனாரும். அவரை அடியொற்றியிறே ‘பராங்குஸபாதபக்தம் ராமாநுஜம்’ என்று இவரருளிச்செய்ததும். பரருக்கு – வேதத்தைப் ப்ரமாணமாக அங்கீகரியாத ஜைநபௌத்தாதிகளென்ன, வேதத்துக்கு அவப்பொருள் சொல்லும் அத்வைதவாதிகளென்ன இவர்களாகிய – புறமதத்தவராகிய யானைகளுக்கு. அவர்களை அடக்கவல்ல அங்குஸம் போன்றிருத்தலால் நம்மாழ்வார் பராங்குஸர் எனப்பட்டாரென்க. ‘ஒன்றும் தேவும்’ (திருவாய் 4-10) பதிகத்தில் ஆழ்வார் முற்கூறப்பட்டவர்களை அடக்கியது அதன் வ்யாக்யானங்களை ஸேவித்து அறியத்தக்கது.

(ராமாநுஜர்) ராமபிரானுடைய தம்பியான லக்ஷ்மணனுடைய அவதாரமாகையாலே, எம்பெருமானார் ராமாநுஜரென்ற பெயரைப்பெற்றார். அபிநவ தஸாவதாரங்களாகச் சொல்லப்படுகிற ஆழ்வார் பதின்மரில், இராமாவதாரமாக ப்ரஸித்தராகிய நம்மாழ்வாரிடம் லக்ஷ்மணனுடைய அவதாரமாகிய இராமாநுசருக்குப் பரமபக்தி இருப்பது மிகவும் பொருத்தமென்கிறார் வ்யாக்யாதா திருமழிசை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி. மேலும் அவர் – எம்பெருமானார் தாம் மனம் முதலிய பொறிகளையடக்கிய ஸந்யாஸிகளுக்குத் தலைவராகையாலே, தம்மையடைந்தவர்களுடைய மனத்தில் உண்டாகும் காமம், கோபம், உலோபம், திரிபுணர்ச்சி, செருக்கு, பொறாமை முதலிய குற்றங்களைப் போக்குமாற்றல் படைத்தவர் என்கிறார். தம்மனத்தை அடக்கிய பெருமை படைத்தவர்க்கன்றோ பிறர் மனத்தின்கண் உண்டாகும் குற்றங்களைக் களையுமாற்றல் உண்டாவது என்பது கருத்தாகும். மாதவன் திருவடிகளுக்குப் புதுமணம் புதுமலர்ச்சி மென்மை முதலிய குணங்களைக் கொண்ட தாமரைமலர்களோடு ஒப்புமைக் கூறப்பட்டதால் அக்குணங்கள் திருவடிகளில் உள்ளமை தோன்றுவதன் வாயிலாக- மாதவன் திருவடிகளில் பராங்குஸருக்கு ஏற்பட்ட பக்தி குணங்களுள்ளமையினாலென்பதும், பராங்குஸரின் திருவடிகளுக்குத் தாமரைகளோடு ஒப்புமை கூறாமையினால் அத்திருவடிகளில் இராமாநுசருக்கு ஏற்பட்ட பக்தி, குணங்களுள்ளமையினாலல்லாமல் ‘ஆசார்யன் திருவடிகளில் ஸிஷ்யனுக்கு ஸிஷ்யஸ்வரூபமடியாகவே பக்தியுண்டாகவேணும்’ என்ற நியதிப்படி இயற்கையாகவே அமைந்ததென்பதும் இங்குக் கருதத்தக்கதாகும். குணத்தினாலுண்டான பகவத்பக்தியைக் காட்டிலும் இயற்கையாகவே உண்டாகிய ஆசார்யபக்தி சிறந்ததென்னும் ஸாஸ்த்ரார்த்தம் இதனால் ஸிக்ஷிக்கப்பட்டதாகிறது.

எம்பெருமானாராகிய ஆசார்யரிடத்தில் பக்தராய் ஸந்யாஸியான தமக்கு அவ்வெம்பெருமானாரிடத்தில் பக்தி உண்டானதற்கு, அவர்தாமும் பராங்குஸராகிய ஆசார்யரிடத்தில் பக்தியுடையவராய் ஸந்யாஸி  ஸ்ரேஷ்டராயிருக்கையே காரணமென்பது தோன்றும்படி ‘பராங்குஸபாதபக்தம் யதிபதிம் ராமாநுஜம்’ என்று மாமுனிகள் எம்பெருமானாரை – பராங்குஸபாதபக்தரென்றும் யதிராஜரென்றும் சிறப்பித்தருளினார். “யதீநாம் பதி: யதிபதி:” என்பதற்கு, இடுகுறிப்பெயராகுந்தன்மையினால் ஸேஷி (அடிமையை ஏற்றுக்கொள்ளும் தலைவர்) என்றும், காரணப் பெயராகுந் தன்மையினால் “பாதி (ரக்ஷிக்கிறார்) இதி பதி:” என்று வ்யுத்பத்தியின் மூலம் ரக்ஷகர் என்றும் பொருள் தேறுகிறது. ஸந்யாஸிகட்கு ஸேஷியும் ரக்ஷகரும் எம்பெருமானாரென்னவே, ப்ராப்யரும் (கைங்கர்யத்தையேற்று மகிழுமவரும்) அவரே என்பது ஸித்தித்ததாகிறது. திருமந்த்ரத்திலுள்ள மூன்று பதங்களுக்கும் – ஆசார்யருடைய ஸேஷித்வமும், ரக்ஷகத்வமும், ப்ராப்யத்வமுமன்றோ முடிந்த பொருளாவது. இத்தகைய பெருமை பெற்ற யதிராஜரை – யதிராஜவிம்ஸதியாகிய துதிநூல் இனிதே முடிவடைவதன் பொருட்டு வணங்கினாராயிற்று மாமுனிகள் இந்த ஸ்லோகத்தினால். (1)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org