பூர்வ திநசர்யை – 5 – ஆம்லாந

 

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

 5-ஆம் பாசுரம்

आम्लान कोमलाकारम् आताम्र विमलाम्बरम् |
आपीन विपुलोरस्कम् आजानुभुज भूषणम् ||

ஆம்லாந கோமலாகாரம் ஆதாம்ர விமலம்பரம் |
ஆபீந விபுலோரஸ்கம் ஆஜாநு புஜபூஷணம் ||

பதவுரை:- ஆம்லாந கோமல ஆகாரம் – வாடாக்குறிஞ்சி மலர் போல ம்ருதுவான திருமேனியையுடையவரும், ஆதாம்ர விமல அம்பரம் – மிகச் சிவந்து ஸுத்தமான (காஷாய) வஸ்த்ரமணிந்தவரும், ஆபீந விபுல உரஸ்கம் – உயர்ந்த (முன்னுக்குவந்த) விஸாலமான திருமார்பையுடையவரும், ஆஜாநு புஜபூஷணம் – முழ்ந்தாள் வரையில் நீண்டு, திருமேனிக்கு ஆபரணம் போன்ற திருக்கைகளை யுடையவருமாகிய…

கருத்துரை:- திருவடியழகை அநுபவித்துவிட்டு, இனித் திருமேனியின் மென்மையையும், ஸந்யாஸாஸ்ரமத்திற்குத் தக்க, திருப்பரிவட்டத்தின் இனிமையையும், மற்றுமுள்ள அவயவங்களின் அழகையும் அநுபவிக்கிறார் இதனால். (அம்லாந:) – வாடாக்குறிஞ்சிமலர். அது காட்டுவாகை மலர் முதலியவற்றைவிட மெத்தென்றிருக்குமாம். அம்லாந கோமலாகாரம் என்றதனால் – முன் ஸ்லோகத்தில் கூறியபடி திருவடிகள் மட்டும் ம்ருதுவானவையல்ல. திருமேனியே மெத்தென்றிருக்கும் என்று காட்டியபடி. திருவநந்தாழ்வானேயன்றோ மாமுநிகள். சிலர் அம்லான பதத்திற்கு, காட்டுவாகைமலர் என்று பொருள் கூறினர். வஸ்த்ரத்திற்குச் சிவப்பு நிறம் துறவறத்திற்கேற்பக் காவிக்கல்லினால் ஏற்றப்பட்டது. திருப்பாற்கடல்போல் வெள்ளைவெளேரென்ற திருமேனிக்கு, சிவப்பு நிறக்காஷாயத்தினால் உண்டான பளிச்சென்று எடுத்துக்காட்டுகின்ற (பரபாக) ஸோபை, திருபாற்கடலுக்கு அதன்கண் உள்ள பவழங்களால் உண்டான ஸோபை போன்றுள்ளமை குறிப்பாகக் காட்டப்பட்டது. (ஆபீநவிபுலோரஸ்கம்) திருமார்பு உயர்ந்தும் விஸாலமாகவும் இருத்தல் உத்தமபுருஷலக்ஷணமாகும். (ஆஜாநுபுஜபூஷணம்) இங்கு திருக்கைகள் முழந்தாளளவும் நீண்டுள்ளமை கூறியது உண்மையுரையாகும். அதனால் ஸிஷ்யர்களைக் கைகளால் பிடித்துக்கொண்டு நடந்தருளும்போது முழந்தாளளவும் நீண்டதாகத் தென்படாவிட்டாலும் குறையில்லை என்க. அல்லது ஸிஷ்யர்களைப் பிடித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஸ்ரமமாக இருக்குமே என்று நினைத்து இடையிடையில் கைகளைத் தொங்கவிடவும் கூடுமாகையால், அச்சமயத்தில் கைகள் முழந்தாளளவும் நீண்டிருத்தல் தென்படுதலால் அது தன்னை இதனால் கூறினாரென்றலும் பொருந்தும். (5)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment