பூர்வ திநசர்யை – 21 – ஸாக்ஷாத்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>>

21-ஆம் பாசுரம்

साक्षात्फलैकलक्ष्यत्वप्रतिपत्तिपवित्रितम्
मन्त्ररत्नं प्रयच्छन्तं वन्दे वरवरं मुनिम् 21

ஸாக்ஷாத் பலைகலக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் |
மந்த்ரரத்நம் ப்ரயச்சந்தம் வந்தே வரவரம் முநிம் || 21

பதவுரை:- ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி பவித்ரிதம் – முக்கிய நோக்கமுடைமையைத் தாம் நினைப்பதனாலே பரிஸுத்தியை உடையதாகும்படியாக, மந்த்ரரத்நம் – மந்த்ரரத்நமாகிய த்வயமந்த்ரத்தை, ப்ரயச்சந்தம் – உபதேஸித்துக்கொண்டிருக்கிற, வரவரம்முநிம் – அழகியமணவாளரென்னும் முனிவரை, வந்தே – வணங்குகிறேன்.

கருத்துரை:- மணவாளமாமுனிகள் – தாம் ஸிஷ்யர்களுக்குச் செய்யும் த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாக நினைப்பது உபதேஸம் பெற்ற ஸிஷ்யர்கள் திருந்தி பகவந் மங்களாஸாஸநம் செய்வதொன்றையே. அப்படி அவர் நினைத்தால்தான் அவர் செய்யும் உபதேஸம் தூய்மையுடையதாகும். ஆகையால் அங்ஙனமே அவர் நினைத்துத் தமக்கு த்வயமந்த்ரத்தை ஸுத்தோபதேஸமாகும்படி உபதேஸித்தாரென்று இதனால் தெரிவித்தாராயிற்று.

முற்கூறியபடி நினையாமல், (1) பணம், பணிவிடைகள் முதலிய உலகில் காணும் பலனையோ, (2) ஸிஷ்யன் மோக்ஷம் பெறுதலையோ, (3) தான் ஒரு ஸிஷ்யனைத் திருத்தி அதனால் பகவானுக்குச் செய்யும் கைங்கர்யத்தையோ, (4) தன்னுடைய தனிமை தீரும்படி தன்னோடு ஸிஷ்யன் கூடியிருக்கையாகிற ஸஹவாஸத்தையோ பலனாக நினைத்து த்வயத்தை உபதேஸித்தால், அவ்வுபதேஸத்திற்கு தூய்மை குறையுமென்று ஸூசிப்பித்தபடி இது. இங்கு – ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள்களில் தேஹயாத்ரைக்கு பணமோ பணிவிடையோ தேவைப்படாதா? ஸிஷ்யன் மோக்ஷம் பெறவேண்டாமா? இங்கிருக்கும் நாள்களில் ஆசார்யன் பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய வேண்டாமா? நல்ல ஸிஷ்யனோடு ஸஹவாஸம் ஆசார்யனுக்கு வாய்க்கவேண்டாமா? இவையெல்லாம் நல்லவையேயன்றித் தீயனவல்லவே? இவற்றைப் பயனாகக்கருதி ஆசார்யன் செய்யும் த்வயோபதேஸம் தூய்மை குன்றப்பெறுவது எப்படி? என்று ஒரு கேள்வி எழுவது இயற்கையே. அதற்கு – ஆசார்யன் விஷயத்தில் ஸிஷ்யனுக்கு உள்ள ஷேஷத்வம்(அடிமையாந்தன்மை) ஏதோ இயன்ற வரையில் சிறிது தநம் ஸமர்ப்பித்துப் பணிவிடை செய்தாலன்றி நிலைபெறாதென்று நினைக்கும் ஸிஷ்யனது நினைவால் முதற்பயன் ஸித்திக்கும். யாராவது ஒருவன் மோக்ஷம் பெற்று நம்மிடம் வருவானா என்று நினைத்து அதற்கு உறுப்பாக ஒரு ஸிஷ்யனை ஓராசார்யனோடு சேர்த்து த்வயோபதேஸம் பெற்றவனாக ஆக்கிய எம்பெருமானுடைய நினைவாலே ஸிஷ்யனுக்கு மோக்ஷம் ஸித்திக்கும். ‘இவன் (நம்ஸிஷ்யன்) நல்ல உபதேஸங்களைச் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு ஆளாம்படி ஒரு ஸிஷ்யனைத் திருத்துவது பகவான் திருவுள்ளத்திற்கு மிகவும் உகப்பாகையாலே இது பகவத் கைங்கர்யமன்றோ?’ என்று நினைத்திருக்கும் தன்னுடைய ஆசார்யன் நினைவாலே, ஆசார்யனுக்கு பகவத் கைங்கர்யம் ஸித்திக்கும். வெகுகாலமாக ‘யான், எனது’ என்னும் அஹங்கார மமகாரங்களாலே ஸத்தையை இழந்து கிடந்த நம்மை ஹிதோபதேஸம் செய்து பகவந்மங்களாஸாஸநத்திற்கு உரியவனாக்கிய மஹோபகாரகனை நாம் ஒரு நாளும் விட்டுப் பிரியக்கூடாதென்று நினைத்திருக்கும் ஸிஷ்யனது க்ருதஜ்ஞதையாலே (செய்ந்நன்றி மறவாமையாலே) ஸிஷ்யனோடு ஆசார்யனுக்கு ஸஹவாஸம் ஸித்திக்கும். ஆகையால் ஆசார்யன் தான் ஸிஷ்யனுக்கு செய்யும் த்வயோபதேஸத்தை தன்னடையே ஸித்திக்கும் இந்நான்கினையும் பயனாக நினையாமல், பகவந்மங்களாஸாஸநமொன்றையே பயனாக நினைத்து, ஸுத்தமாகச் செய்யவேண்டுமென்று திருவுள்ளம்பற்றி மாமுனிகள் அங்ஙனமே தமக்கு த்வயமந்த்ரோபதேஸம் செய்தருளியதை இதனால் அறிவித்தாராயிற்று. இம்மந்த்ரோபதேஸத்தையும் மாமுனிகள் எம்பெருமானாருடைய திருவடிகளையே த்யாநித்துக்கொண்டு செய்தாரென்று கொள்ளவேணும்; நம்முடைய ஆசார்ய கோஷ்டியில் எம்பெருமானார் மிகச் சிறந்தவராகையால் என்க. குருபரம்பரையை அநுஸந்தித்தே த்வயத்தை அநுஸந்திக்கவேண்டிய நிர்ப்பந்தமுள்ளபடியினால் ‘யதீந்த்ர ஸரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா’ (16) என்று முன்பு கூறப்பட்ட எம்பெருமானாரைப்பற்றிய அநுஸந்தாநம் தொடர்ந்து வருவதனால் அது அவர்க்கு முன்னும் பின்னுமுள்ள ஸகலாசார்யபரம்பரைக்கும் உபலக்ஷணமாய் நின்று, அதை நினைப்பூட்டுகிறதென்பது கருத்து. ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுஷ்டிக்கத்தக்க அபிகமநம், உபாதாநம், இஜ்யை, ஸ்வாத்யாயம், யோகம் ஆகிய ஐந்து அம்ஸங்களில், எம்பெருமானுக்கு ஸமர்ப்பிக்கவேண்டிய த்ரவ்யங்களைச் சேகரித்தலாகிய உபாதாநமென்பது, இங்கு மாமுனிகள் த்வயோபதேஸத்தின் வாயிலாக இந்நூலாசிரியராகிய அப்பாவை ஸிஷ்யராக ஏற்று, எம்பெருமானுக்குத் தொண்டனாக ஸமர்ப்பிக்க வேண்டிய சேதநத்ரவ்யமாகச் சேகரித்தல் ஸ்பஷ்டமாகக் கூறப்பட்டதனால் அநுஷ்டிக்கப்பட்டதாயிற்று. இது முன்பே ‘ஆத்மலாபாத் பரம்கிஞ்சித்’ என்ற பதினோராவது ஸ்லோகத்தில் ஸூசிக்கப்பட்டதென்பது நினைவில் கொள்ளத்தக்கது. (21)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *