பூர்வ திநசர்யை – 15 – த்யாத்வா

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை

<<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>

15-ஆம் பாசுரம்

ध्यात्वा रहस्यत्रितयं तत्वयाथात्म्यदर्पणम्
प्रव्यूहादिकान् पत्युः प्रकारान् प्रणिधाय

த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வயாதாத்ம்யதர்ப்பணம் |
பரவ்யூஹாதிகாந் பத்யு: ப்ரகாராந் ப்ரணிதாய || (15)

பதவுரை:- தத்த்வயாதாத்ம்யதர்ப்பணம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய, ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களையும், த்யாத்வா – அர்த்தத்துடன் த்யாநம் செய்து, பரவ்யூஹ ஆதிகாந் – பரம், வ்யூஹம் முதலியனவான, பத்யு: – ஸர்வ ஜகத்பதியான ஸ்ரீமந் நாராயணனுடைய, ப்ரகாராந் – ஐந்து நிலைகளை, ப்ரணிதாய ச – த்யாநம் பண்ணி…

கருத்துரை:- ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்கள் மூன்று. அவையாவன – ஸ்ரீமந் நாராயணன் ஒருவனுக்கே அடிமையாயிருக்கை, அப்பெருமானையே மோக்ஷோபாயமாகவுடைமை, அவனையே போக்யமாக (அநுபவிக்கத் தக்க பொருளாக)வுடைமை என்கிற இவையாகும்.

திருமந்த்ரத்தில் உள்ள ஒம் நம: நாராயணாய என்னும் மூன்று பதங்களும் முறையே முற்கூறிய மூன்று வடிவங்களையும் ஸ்பஷ்டமாகக் காட்டுவதனாலும், இதிலுள்ள நம: பதத்தினால் கூறப்பட்ட ஸித்தோபாயமான எம்பெருமானை மோக்ஷோபாயமாக அறுதியிடுதலை – த்வயமந்த்ரத்தின் முற்பகுதியாகிய ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ ஸரணம் ப்ரபத்யே’ என்ற மூன்று பதங்களும் ஸ்பஷ்டமாகத் தெரிவிப்பதனாலும், கண்ணன் அர்ஜுனனுக்கு அருளிச்செய்த கீதாசரம ஸ்லோகத்தின் பூர்வார்த்தமான ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ’ என்பது கண்ணபிரான் ஸ்ரீமந்நாராயணனாகிய தன்னையே மோக்ஷோபாயமாக அறுதியிடும்படி விதித்துள்ளதை ஸ்பஷ்டமாக உணர்த்துவதனாலும் இம்மூன்று ரஹஸ்யங்களும் ஆத்மஸ்வரூபத்தைக் காட்டும் கண்ணாடிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விரிவு ரஹஸ்யங்களில் காணத்தக்கது. எம்பெருமானுடைய ஐந்து நிலைகளாவன (1) பரமபதத்தில் நித்யஸூரிகளும் முக்தி பெற்றவர்களும் அனுபவித்து நிற்கும் பரத்வநிலை; (2) ப்ரஹ்மாதிகளின் கூக்குரல் கேட்டு ஆவன செய்வதற்காகத் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் வ்யூஹநிலை; (3) அஸுரராக்ஷஸர்களை கொன்று ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்காக, இவ்வுலகில் ராமக்ருஷ்ணாதி ரூபமாக அவதரிக்கும் விபவநிலை; (4) சித்து, அசித்து எல்லாப்பொருள்களின் உள்ளும், புறமும் ஸ்வரூபத்தினால் வ்யாபித்து நிற்பதும், ஜ்ஞாநிகளுடைய ஹ்ருதய கமலங்களில் அவர்களுடைய த்யானத்திற்கு இலக்காவதற்காக திவ்யமான திருமேனியோடு நிற்பதுமாகிய அந்தர்யாமி நிலை; (5) இந்நிலை நான்கினைப்போல துர்லபமாகாமல், அறிவும் ஆற்றலும் குறைந்த நாமிருக்கும் இடத்தில், நாமிருக்கும் காலத்தில், நம்முடைய ஊனக்கண்களுக்கும் இலக்காகும்படி கோவில்களிலும், வீடுகளிலும், நாமுகந்த சிலை செம்பு முதலியவற்றாலான பிம்பவடிவாகிய திருமேனியோடு கூடியிருக்கும் அர்ச்சை நிலை என்பனவேயாகும். இவையேயன்றி ஆசார்யனாகிய ஆறாவது நிலையும் ஒன்று உண்டு. பீதகவாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து (பெரியாழ்.திரு.5-2-8) என்று பீதாம்பரம் தரித்த எம்பெருமானே ப்ரஹ்மத்தை உபதேஸிக்கும் ஆசார்யனாக அவதரிப்பதனை ஆழ்வார் அருளிச்செய்வதனால் என்க. இதனால் குருபரம்பரை முன்னாக, எம்பெருமானுடைய இவ்வாறு நிலைகளையும் மாமுனிகள் பின்மாலையில் அநுஸந்திக்கிறாரென்பது இதனால் கூறப்பட்டதாயிற்று. (15)

archived in http://divyaprabandham.koyil.org
pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://acharyas.koyil.org
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

Leave a Comment