ஸ்ரீ வரவரமுநி திநசர்யை – அவதாரிகை

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீ வரவரமுநி திநசர்யை                                                                                முதல் பாசுரம் >>

srisailesa-thanian

ஸ்ரீ வரவரமுநிதாஸரென்னும் மறுபெயரையுடைய தேவராஜகுருவாகிய எறும்பியப்பா ‘குரு என்பவர் ஸாக்ஷாத் நாராயணாவதாரமாகையால் அவருடைய திருநாமத்தை எப்போதும் ஜபிக்கவேண்டும். அவருக்கு வசப்பட்டு வாழவேண்டும். அவரிடத்தில் பக்தியைச் செலுத்தவேண்டும்.அவருடைய அன்புக்கிலக்கானவற்றில் அன்பு காட்டவேண்டும். அவருக்கு ஒரு வருத்தம் நேரிட்டால் மிகவும் வருந்தவேண்டும். அவருடைய திருநாமத்தையும், குணங்களையும் த்யாநம் செய்து மகிழவேண்டும்.தேவதையினிடம் பக்தன் போன்றும், அரசனிடம் வேலையாள்போன்றும், ஆசார்யனிடத்தில் ஶிஷ்யன் விநயத்தோடு கூடியவனாய்ப் பணிவிடை செய்யவேண்டும். நாம் ஆசார்யனுக்கு தாஸர்கள் என்று பெருமைப்படுதலும், ஆசார்யனைப் பின்செல்லுதலும் அவருடைய குணங்களைப் பிறர் சொல்லக்கேட்டலும், தானே சொல்லுதலும், நினைத்தலும் ஶிஷ்யன் செய்யத்தக்க செயல்கள்’ (?) என்றுள்ள உயர்ந்த ஶிஷ்யனைப்பற்றிய ஶாஸ்த்ர வாக்யங்களை அறிந்தவராகையாலும், எல்லையற்ற ஆசார்யபக்தியின் பெருமையாலும், தம்முடைய ஆசார்யராகிய பரமபூஜ்யரான மணவாளமாமுனிகளைப்பற்றி சதகம், காவ்யம், சம்பூ முதலிய க்ரந்தங்களைத் தாம் இயற்றியிருந்தபோதிலும் அவற்றால் த்ருப்தியடையாமல் ‘குருவின் நித்யாநுஷ்டாநங்களையும் வருணிக்கவேண்டும்’ (?) என்ற ஶாஸ்த்ரத்தினால் தூண்டப்பெற்ற அதிகமான பற்றையுடையவராய்க் கொண்டு அம்மணவாளமாமுனிகளையே இலக்காகப் பெற்ற திநசர்யை (நாள்தோறுமுண்டான அநுஷ்டாநத்தைப்பற்றிய நூல்) என்ற க்ரந்தத்தை இயற்றத்தொடங்கி, செய்யப்போகும் க்ரந்தம் இடையூறேதுமின்றி முடிவு பெறுவதற்காக, தமது ஆசார்யபக்தியென்னும் பெரிய தகுதிக்கேற்ப, ஆசார்ய நமஸ்காரரூபமான மங்களத்தைச் செய்தருளுகிறார். ‘அங்கே கவேர’ என்று ஶ்லோகத்தினால்.

இத்திநசர்யை என்ற நூல் ஜ்ஞாநம், அநுஷ்டாநம், வைராக்யம் முதலிய நற்குணங்களனைத்தும் நிறையப்பெற்றுப் பங்க்திபாவநரான (ஒரு கோஷ்டியை முழுவதும் பரிஶுத்தமாக்கும் பெருமையையுடையரான) மணவாளமாமுனிகளைப் பற்றியதாதலால், தானும் பங்க்திபாவநமாய்க்கொண்டு ஶுத்தமான ஸத்த்வகுணத்தில் நிலைபெற்ற பரமவைதிக ஸ்ரீ வைஷ்ணவர்களால் அநுயாக ஸமயத்தில் (கோஷ்டியாக இருந்து பகவத் ப்ரஸாதத்தை ஸ்வீகரிக்கும் ததீயாராதன ஸமயத்தில்) முதன்முதலில் அநுஸந்திக்கப்பட்டு வருகின்றமை ஸம்ப்ரதாயஸித்தமாக உள்ளது. ஒருபெரிய ததீயாராதன கோஷ்டியில் நல்லறிவும் நன்னடத்தையும் இல்லாத ஒருசிலர் இருந்தால் அக்கோஷ்டியின் தூய்மை கெடுவதற்கு ப்ரஸக்தியுள்ளமையால், அத்தூய்மையின்மையைப் போக்கித் தூய்மையை அதிகமாக்கவல்ல பெருமயைப்பெற்றவர் பங்க்திபாவநரான மணவாளமாமுனிகள், அவரைப் பற்றி இந்தத் திநசர்யையும் பங்க்திபாவநமென்பது பெரியோர்களின் துணிபு.

archived in http://divyaprabandham.koyil.org

pramEyam (goal) – http://koyil.org
pramANam (scriptures) – http://srivaishnavagranthams.wordpress.com
pramAthA (preceptors) – http://guruparamparai.wordpress.com
srIvaishNava education/kids portal – http://pillai.koyil.org

0 thoughts on “ஸ்ரீ வரவரமுநி திநசர்யை – அவதாரிகை”

Leave a Comment