ஞான ஸாரம் 39 – அலகை முலை சுவைத்தார்க்கு

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

முன்னுரை:

மேல் கூறிவந்த குருவின் சிறப்பை அறிந்து குருவினிடத்திலேயே ஒன்றி நிற்பார் பெருமையை அறிபவர் மிக்க அறிவாளியாக இருப்பார்கள் அன்றோ! குரு பக்தி உடையவரின் பெருமையை அறிய மாட்டாத உலோகர்கள் “பகவானைக் காட்டிலும் குருவையே லட்சியமாகக் கொண்டு அவர்பின் திரிகிறார்களே என்று பழி தூற்றுவார்களேயானாலும் அதற்குத் தக்க விடை யிறுக்கிரது இப்பாடல்.மேல் சொன்ன உலோகர்கள் கூறும் கேள்விக் குறியில் மற்றொரு கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. அதாவது பகவானிடத்தில் அவனுடைய உருவம், குணம், செயல் அவதாரங்கள் ,கதைகள்  முதலியவற்றில் ஈடுபாடு கொண்டுள்ள பகவத் பக்தர்கள் குருவின் மேன்மை அறியாமல் குரு பக்தர்களை நோக்கி ” கடவுள் பின் செல்லாமல் மனிதனான குருவின் பின் செல்கிறீர்களே ” என்று குரு பக்தர்களை நோக்கி இகழ்ந்து பேசுவதற்கும் வாய்ப்பிருந்தால் இப்பாடல் மூலம் சாமான்யரான உலோகர்க்கும் சிறப்புடயரான பகவத் பெருமை நிலை நாட்டப்படுகிறது. அதனால் குரு பக்தர்களைப் பழித்தால் அப்பழிப்பும் அவர்களுக்குத் துதியாகும் என்று கூறப்படுகிறது. இது வஞ்சப் புகழ்ச்சியணி என்ற இலக்கணத்தின் பாற்படும்.

இதற்கு ஓர் உதாரணம் காணலாம்.”உடையவர் காலத்தில் ஒரு நாள் திருவரங்கத்தில் பெருமாள் திருப்புன்னை அருகில் எழுந்தருளி நிற்க, உடையவரும் மற்றும் பக்த ஜனகளும் பெருமாள் புறப்பாடு காண பெரும் திரளாய்க் கூடியிருக்கும் சமயத்தில், சிலர் பெருமாள் திருமுன்பு உடையவர் திருவடிகளைத் தண்டனிட்டு அவரை ஆதரித்து நிற்கிற வேளையில், சோழ மன்னன் அவைப்புலவரான “உடையார் சுப்ரமணிய பட்டர்” என்பவர் இக்காட்சியை அருகில் வந்து இவ்வாறு வினவினார். “ஜீயரே, நாம் உம்மிடம் கேட்டுத் தெரிய வேண்டிய ஒன்று உண்டு” என்று சொல்ல உடையவரும்”அது என்னது” என்று கேட்க அப்பொழுது பெருமாள் புறப்பாட்டில் எழுந்தருளியிருக்கும்போது உம்மைச் சிலர் வணங்கிச் செல்கிறார்களே! அவர்களும் உம்மை வணங்குவதில் மிகவும் விருப்புடையவராக இருக்கிறார்கள். நீரும் அவர்கள் வணங்குவதைக் குறித்து பெருமாள் திருமுன்பு என்னை வணங்க வேண்டாம் என்று கூறுவதில்லை. இப்படிப் பேசாமல் இருந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டார். இவ்வாறு கேட்டதற்கு உடையவரும் கீழ் வருமாறு பதில் கூறினார். “இந்த கேள்வி அவசியம் கேட்கப் பட வேடியது தான். ஆனாலும் நீர் கேட்பது அதிசயமாயிருக்கிறது.” என்று பதில் கூறினார். அதற்கு சுப்ரமணிய பட்டர் எனக்கு அப்படி என்ன சிறப்பு? என்று கேட்க அதற்கு பதிலாக நீர் ராஜ சேவை பண்ணித் திரிகிறீர் அல்லவா? ராஜாவிடம் ஒருவன் ஒரு காரியத்தைப் பெற்றுப் போகவந்தால் ராஜாவினுடைய பாதுகைகளை எடுத்துத் தலையிலே வைத்துக் கொண்டு கௌரவிப்பான். அப்பொழுது அதனைப் பார்த்த அரசன் “தன் பாதுகைகளைத் தலையில் வைத்துக் கொண்டாடும் அவனை அரசன் தன்னிடம் அன்பு காட்டுவதற்காகவன்றோ அவ்வாறு செய்கிறான் என்று மகிழ்ந்து அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பன். விருப்பத்தைப் பாதுகையா செய்விக்கிறது? அரசன் அல்லவா செய்கிறான். தனது பாதுகையைத் தலையில் தாங்கும் ஒருவனை அரசன் அன்பு செய்து அவனவன் விருப்பத்தை நிறைவேற்றுவதை நீர் பார்த்ததில்லையா? அது போல இங்கும் பெருமாள் அரசன் போலேயும் , அடியேன் அவருடைய பாதுகையைப் போலேயும் இருப்பதால் பகவானுடைய அருள் வேண்டி அவனுடைய பாதுகையான என்னை வணகிப் போகிறார்கள். என்னிடம் அன்புடயவரைப் பெருமாள் அன்பு செய்கிறார். ஆகவேதான் பெருமாள் திருமுன்பு என்னை வணங்கிப் போகிறார்கள் என்று உடையவர் பதிலுரைத்தார். சுப்ரமணிய பட்டரும் இவ்வரும் பெரும் பெருமை உடையவர் வாய் மூலம் அறிந்து மிகவும் களிப்புற்றார். “இச்செய்தியைத் திருவிருத்த உரையில் காணலாம்)

ஆகவே பகவத் பக்தியுடையவர் ஆசார்ய பக்தி உடையவரைப் பார்த்து குறைவாக நினைப்பார் என்பதும் அவ்வாறு நினைப்போர்க்கு ஆசார்ய பக்தி உடையாரின் பெருமை தெரிய வேண்டுமென்றும் அவர்களது பெருமை தெரியாமல் ஒருகால் அவர்களைத் தூற்றினாலும் அது அவர்களது பெருமையையே காட்டும் என்னும் நுண் கருத்து இப்பாடலில் கூறப்படுகிறது.

putna1

   “அலகை முலை சுவைத்தார்க்கு அன்பரடிக்கன்பர்
    திலத மெனத் திரிவர் தம்மை – உலகர் பழி
    தூற்றில் துதியாகும் தூற்றாது அவர் இவரைப்
    போற்றில் அது புன்மையேயாம்”

பதவுரை:

அலகை முலை                        – பூதனையாகிற பேயின் முலைப்பாலை
சுவைத்தாற்கு                      – பருகின கண்ணனுக்கு
அன்பரடிக்கு                         – பக்தர்களான அடியவர்களின் திருவடிகளில்
திலதமென                           – நெற்றித் திலகம் போன்று சிறப்புடையவர் என்று
கூறும்படி
திரிவார் தம்மை                  – நடமாடுகிற பெரியோர்களை
உலகர்                                      – உலகியலில் வாழ்பவர்கள்
பழி தூற்றில்                          – இறைவன் பின் செல்லாமல் மனிதன் பின்
செல்கிறார்களே என்று பழித்துப் பேசினால்
துதியாகும்                             – அது இவர்களது அடியார் பக்தியை
வெளிப்படுத்துவதால் போற்றுவதேயாகும்.
அவர்                                         – அந்த உலகர்கள்
தூற்றாது                                – அவ்வாறு பழிக்காமல்
இவரை                                    – அடியார் பக்தரான இவரை
போற்றில்                               – நல்லவர் என்று புகழ்ந்தால்
அது                                           – அப்புகழ்ச்சி
புன்மையேயாம்                   – பழிப்பதேயாகும்

விளக்கவுரை:

அலகைமுலை சுவைத்தாற்கு: அலகை என்று பேய்க்கு பெயர்.. திருவள்ளுவரும் “வையத்துள் அலகையா வைக்கப்படும்” பேயை அலகை என்று கூறினார். இங்கு அலகை என்றது பூதனையாகிற அரக்கியை, திருவாய்ப்பாடியில் கண்ணன் ஒளித்து வளரும்போது கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்ற அரக்கி யசோதை உருவத்தில் அங்கு வந்து குழந்தையாகிற கண்ணனை மடியில் எடுத்து வைத்து முலைப்பாலுடன் சேர்த்து வைத்த விஷத்தையும் கொடுத்தாள். கண்ணன் அவ்விடப் பாலையும் அவளது உயிரையும் ஒரே சமயத்தில் சுவைத்து உறிஞ்சி உண்டான். இவ்வரலாறு அலகை முலை சுவைத்தாற்கு என்று குறிக்கப்படுகிறது. இதைத் திருமங்கையாழ்வார்

     “பெற்ற தாய் போல் வந்த பேய்சசி பெருமுளையூடு
            உயிரை வற்ற வங்கி உண்டவாயன்” என்றும்

“கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை மண்சோற முலையுண்ட மாமதலொய்” என்றும் கூறினார்.

நம்மாழ்வாரும் “விடப்பால் அமுதா (க) அமுது செய்திட்ட மாயன்” என்று கூறினார். இவ்வாறு கண்ணபிரானின் சரிதையில் மனம் பறிகொடுத்த அன்பர்கள் என்றவாறாம்.

அன்பரடிக்கன்பர்: இவ்வாறான கண்ணபிரான் கதையில் மனம் பறியுண்ட பக்தர்களின் திருவடிகளில் அன்பு பூண்டவர் என்று பொருள். பூதனைக் கண்ணனைக் கொல்ல வந்தாள். கண்ணன் அவளை முடித்தான். இச்சரிதத்தை நினைக்கும் பக்தர்கள் “தன்னைக் கொல்ல வந்த பூதனையைத் தான் கொன்று உலகத்துக்கு எல்லாம் ஆணிவேரான தன்னை நமக்குக் காத்துக் கொடுத்தானே.! அப்பேயைக் கொல்லாமல் போனால் கண்ணன் நமக்கு கிடைப்பானா? என்று அவனது குணங்களுக்கு அடிமையாகி அவனிடம் ஈடுபட்டு காதலே மிகுந்த தொண்டர்களாகிறார்கள். அவர்களது திருவடிகளில் காதல் செய்பவர்களுக்கு “அன்பரடிக்கன்பர்” என்று சிறப்பு.

திலதமெனத் திரிவார் தம்மை: இப்படி அடியார்க்கு அடியாராய்   அடியார்பால் அன்புடையாராய் உலகத்துக்கே இவர்கள் ஒரு திலகம் என்று பேரரறிஞர்கள் கொண்டாடும்படி நடமாடித் திரிகின்ற பெரியோர்களை என்று பொருள். அல்லது “அடியார்க்கு அடியாராய் இருப்பார்க்கு இவர்கள் திலகமாய் விளங்குபவர்கள் என்று அறிவுடையார் கொண்டாடும்படி நடமாடி திரியும் பெரொயோர்கள் என்றும் சொல்லலாம். (திலதம்-பெண்கள்நெற்றிகரமானது மங்களகரமானது)

இதனால் அடியார்க்கு அடியாராய் இருப்பாரின் சிறப்புக் கூறப்பட்டது. இச்சிறப்பினை நம்மாழ்வார் “பயிலும் சுடரொளி”, “நெடுமாற்கடிமை” என்ற இரண்டு திருவாய்மொழிகளிலும் திருமங்கையாழ்வார் “கன்சோரவெங்குருதி”நண்ணாத வாள வுணரிடைப்புக்கு ” என்ற இரண்டு திருமொழிகளிலும், குலசேகராழ்வர் “தேட்டறும் திறன்” என்னும் திருமொழியிலும்,தொண்டரடிப்பொடியாழ்வார் :மேம்பொருளுக்கு மேலிற்பாட்டுக்களிலும் மற்றும் இதிகாச புராணங்களிலும் கூறிச் சிறப்பித்தத்தைக் காணலாம். ஸ்ரீவசனபூஷணம் சூத்திரம் 226ல் இவ்வாறு கூறப்பட்டுளதைக் காணலாம்.

உலகர் பழிதூற்றில் துதியாகும்: இப்படிப் பெருமைப் பட நிற்கும் அடியாரை சாதி, ஆசிரமம்,முதலிய வேறுபாடுகள் ஒன்றும் பாராமல் “பாகவதர் (பகவத் பக்தர்) என்கின்ற ஒன்றை  மட்டுமே பார்த்து  அதையே பற்றுக் கோடாகக் கொண்டு பகவானைக் காட்டிலும் இவர்களே அடையத் தகுந்தவர்கள்  என்று நினைத்து அவர்கள்  பின்னால்  திரிகிரார்கள் என்று சாமான்யரான  உலகர்கள் பழி கூறினால் அப்பழி  அவ்வடியார்க்கு அடியாராகும் குணங்களை வெளிப்படுத்துவதால் பாராட்டப் படுவதாகுமேயொழிய பழியாகாது.

தூற்றாது அவர் இவரைப் போற்றில் அது புன்மையேயாம்: உலகோர்கல் (சாமான்யர்கள்) இவ்வாறு அடியார்க்கு அடியாரை மேற்சொன்ன பழிகளைக் கூறாமல் தங்களுக்காகச் செய்ய வெடிய சாஸ்திர ஒழுக்கங்கள் எவையும் தாங்கள் செய்ய வேண்டாத போதிலும் சாமான்யரான உலகத்தார் கெட்டுப் போவார்களே என்னும் இரக்கத்தால் அவர்களுக்காகச் செய்யும் சில ஒழுக்கங்கள் உண்டலவா? அவ்வொழுக்கங்களை மனப்பூர்வமாகச் செய்யாமல் மேல்வாரியாகச் செய்கையில் அவற்றைக் கண்டு,:”சாஸ்திரப்படி தங்களைகடமைகளைச் செய்யும் நல்லொழுக்கம் உடையவர்களாக இருக்கிறார்களே ” என்று புகழ்ம்து பேசினால் அது அவ்வடியார்க்கு அடியாராய் இருக்கும் இவர்கள் தகுதிக்குப் பொருந்தாததால் மேல்வாரியாக அவைகள் செய்யும் ஒழுக்கம் குற்றமுடையதேயாகும். அதாவது நிந்தைக்கே இடமாகும். என்றவாறு பகவானுடைய அடியார்க்கு அன்பு பூண்ட அடியார்.

 அடியார்க்கு அடியார்:  “உலகத்துக்கே திலத” மென்று அல்லது “அடியார்க்குத் திலத” மென்று சான்றோர்களால் புகழும்படி நடமாடித் திரியும் பெரியோர்களை என்றவாறு சாமான்ய உலகர்கள் “பகவானைப் புறக்கணித்து அவரடியாரிடம் ஈடுபட்டுத் திரிகிறார்களே” என்று பழி சொன்னால் அப்பழி துதியிலே சேர்ந்ததாகும்.  அவ்வாறு துதிக்காமல் இவ்வுலகர்கள் அவர்கள் மேல் வாரியாகச் செய்யும் நல்லொழுக்கங்களைப் பார்த்து புகழ்வரேல் அப்புகழ்ச்சி அவர்கள் நிலைமைக்குப் பழிப்பாகவேயாகும். இதனால் அடியார்க்கு அடியாராம் சிறப்புக் கூறப்பட்டது.

 விரிவுரை:

“இராமாயணத்தில் நல அறம் நிறுத்தத் தோன்றிய இராமன், இலக்குவன், பரதன், சத்ருக்கனன் என்னும் இந்நால்வருள் சத்ருக்கனனது ஒழுக்கமே அனைவரிலும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.  அதற்குக் காரணம் இராமபக்தனான பரதனுக்குத் தொண்டு செய்து பரதன் அடியனை (இராமனுக்கு அன்பர் பரதன். பாரதரடிக்கு அன்பன் சத்ருக்கனன்) அடியார்க்கு அடியாராய் இருக்கும் சிறப்புக் கூறப்பட்டதாம்.”

” தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டனம் சடகோபன் ” அடியார் அடியார் அடியார் எங்கோக்கள்” என்ற நம்மாழ்வார் அவாவுற்ற அடியார்க்கு அடியாராம் நிலையும் இங்கு ஒப்பு நோக்குக. மற்றும் ” அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்: என்று திருப்பாணரும், அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய்” என்று தொண்டரடிபொடிகளும் “அடியார்கள் எம் தம்மை விற்கவும் பெறுவார்களே” என்று பெரியாழ்வாரும் “தொண்டர் தொண்டர்கலாவர்” என்று குலசேகரரும் அடியார்க்கு அடியாராம் தன்மையை ஆசைப்பட்டுப் பேசியிருப்பதையும் உற்று நோக்குக. இந்நூல் ஆசிரியரான ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் இராமனுஜருக்கு அடியாராய் வாழ்ந்து “அன்பரடிக்கன்பர்: என்றும் “திலதமெனத் திரிவார்”  என்றும் இங்கு கூறிய சிறப்புக்கு எடுத்துக்காட்டாக இவ்வாசிரியர் திகழ்ந்தார் என்பதையும் உணரலாம். இதைப் பற்றியே மதுரகவியாழ்வாரையும் இவரையும் இணைத்து தெருளாரும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே” என்று இவர் போற்றப்பட்டார்.

அடியார்க்கு அடியாராய் வாழ்பவரின் சிறப்புக்கு மேலும் பல உதாரணங்கள் காணலாம். திருவரங்கத்து அமுதனார் இராமானுஜரடியார்க்கு அடியாராய் வாழ்ந்து இராமனுஜ நூற்றந்தாதி பாடினார். பட்டருக்கு நஞ்சீயர் அடியாராய் வாழ்ந்தார் என்பது பட்டர் வைபவத்தில் காணலாம்.

மணவாளமாமுனிகளும் இவ்வாறே அடியார்க்கு அடியாராய் யதிராஜவிம்சதை பாடினார். எறும்பியப்பா என்னும் ஆசாரியர் மணவாள மாமுனிகளுக்கு அடியாராய்” பூர்வ தினசரி: முதலிய ஸ்தோத்திரங்களைப் பண்ணினார். அதி ஒன்று “செருக்கில்லாதவர்களும் ஆசார்ய நிஷ்டைகளில் இருப்பவரும் சாஸ்திர சாரார்த்தங்களை அறிந்தவரும் பணத்தாசை பெண்ணாசை முதலிய ஆசை அற்றவர்களும் பெருமையுற்றவர்களும் அனைத்து உயிர்களிடத்திலும் அன்புடயவர்களும், கோபம், உலோபம் முதலிய குற்றங்களைக் கடிந்தவர்களுமான மணவாளமாமுனிகளின் அடியார்களோடு அடியேனுக்கு என்றும் உறவு உண்டாகட்டும் என்று கூறிய வார்த்தைகளையும் காணலாம். ஆக “ஆழ்வார்களும் ஆசார்யர்களும் அடியார்க்கு அடியாராக இருப்பதையே விருபினார்கள். இதுவே அறிய வேண்டிய சாரங்களின் சாரமாகும்.” அதனால் இக்கருத்து நூல் இறுதியில் கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *