ஞான ஸாரம் 23- ஊழி வினைக்குறும்ப

ஞான ஸாரம்

முந்தைய பாசுரம்

                                                                 23-ஆம் பாட்டு:

முன்னுரை:

முன் செய்த வினைகளை எண்ணி, “அவ்வினை நம்மைப் பற்றிக் கொண்டு துன்புறுத்துமே” என்று வருந்துகிற மனதுக்கு ஆறுதல் கூறுகிற பாடல் இது. இறைவன் திருவடிகளில் சரணாகதியடைந்த பின்பு முன் வினைகளின் பயனான துன்ப நுகர்ச்சி இல்லை என்னும் உண்மையை அனைவரும் அறிய இதில் உணர்த்தப்படுகிறது.

reclinevishnu

“ஊழி வினைக்குறும்ப ரோட்டருவ ரென்றஞ்சி
ஏழை மனமே! யினித்தளரேல் – ஆழிவண்ணன்
தன்னடிக் கீழ் வீழ்ந்து சரண் என்று இரந்து ஒருக்கால்
சொன்னதற்பின் உண்டோ துயர்”

பதவுரை:

ஊழிவினை பழையதாக செய்யப்பட்ட வினைகளாகிற
குறும்பர் கயவர்கள்
ஓட்டருவர் ஓடிவந்து துன்புறுத்துவர் என்று
அஞ்சி பயந்து
ஏழை மனமே அறிவிலாத நெஞ்சமே
இனித்தளரேல் இனிமேல் வருந்த வேண்டாம் ஏனெனில்?
ஆழிவண்ணன்தன் கடல்போன்ற நிறமுடைய இறைவனது
அடிக்கீழ் திருவடிகளில்
வீழ்ந்து விழுந்து (சேவித்து)
சரண் என்று நீயே தஞ்சமாக வேணும் என்று
இரந்து வேண்டிக்கொண்டு
ஒருக்கால் ஒரு தடவை
சொன்னதற்பின் அடைக்கல வார்த்தை சொன்ன பின்பு
துயர் உண்டோ வினைப்பயனால் வரும் துன்பம் உண்டாகுமோ உண்டாகாது என்பதாம்.

விளக்கவுரை:

ஊழி வினைக்குறும்பர் – பல பிறப்புகளிலும் சேர்க்கப்பட்ட வினைகளாகிற கயவர். ஊழ் என்பது பழமையை. ஊழ்வினை என்பது பழைய வினை என்றவாறு. இதனால் முன் செய்த வினை கூறப்படுகிறது. வினைகளைக் குறும்பர் என்று சொல்வது அவற்றின் கொடுமைத் தன்மைப் பற்றி “அழுக்காறு என ஒரு பாவி” என்று சொல்வது போலக் கூறப்பட்டது. “கயமை என்னும் பண்புச் சொல்’. பொருள் கொடுமை பற்றிக் கயவர் என்று உயர்திணையில் கூறப்பட்டது. கயவர்கள் தங்கள் மறத்தால் (வலிமையால்) நாட்டைத் தன் வயமாக்கித் தாம் நினைத்தபடி நடத்துவது போல வினைகளும் ஆன்மாவைத் தம் வழியே இழுத்துத் தான் விரும்பிய படி நடத்துவதால் குறும்பர் என்று கூறப்பட்டது. ‘கங்குல் குறும்பர்’ என்ற இடத்தில் இரவைக் குறும்பராகவும், ஐம்புலன்களை ‘ஐவர்’ என்றும் கூறும் வழக்குப் பற்றி இங்கு வினையைக் குறும்பர் என்று கூறப்பட்டது.

ஓட்டருவர் என்று அஞ்சி – ஓடி வருவார் என்று பயப்பட்டு குறும்பராகையாலே ஓடிவருவார் என்று சொல்லப்பட்டது. கீழ்க் கூறிய வினைகள் விரைவாக வந்து துன்புறுத்ததலுக்கு பயப்பட்டு.

ஏழை மனமே – அறிவிலியான நெஞ்சே! அதாவது அடைக்கலம் புகுந்தவரை ‘அஞ்சேல்’ என்ற கைவிளித்துக் காக்கும் இயல்புடைய இறைவன் பெருமையும் (வீடு பேற்றுக்குச் சொல்லப்பட்ட பல நெறிகளிலும்) அடைக்கல நெறியின் சிறப்பும், அடைக்கலம் அடைந்தவன் பெறும் பயனும் அறிவதற்குத் தக்க ஞானமில்லாத நெஞ்சே! என்று நெஞ்சின் அறியாமையைக் கூறியவாறு. இத்தகைய நெஞ்சுக்கு மேல் தொடரால் ஆறுதல் கூறப்படுகிறது.

இனித்தளரேல் – சரணாகதி செய்வதற்கு முன்பு தளர்ச்சி அடைந்தாலும் அது செய்த பிறகு தளரவேண்டாம். சரணாகதியின் பெருமை அத்தகையது என்பது இதனால் உள்ளத்தை நோக்கி கவலைப்படாதே’ என்று ஆறுதல் கூறுகிறார் ஆசிரியர். இது கண்ணன் தேர்த்தட்டில் இருந்து கொண்டு அர்ஜுனனைப் பார்த்து ‘கவலைப்படாதே. அஞ்சற்க’ என்று சொன்னது போன்றது. இனி என்று சொன்னதின் கருத்து மேல் வெளிப்படையாகக் கூறப்படுகிறது.

ஆழி வண்ணன் – கடல் போன்ற ஆழமான இயல்புடையவன் அல்லது கடல் போன்று துயர் தீர்க்கும் நீல நிற உருவை உடையவன் என்று பொருள்.

தன்னடிக்கீழ் வீழ்ந்து – அவன் திருவடிகளின் கீழ் விழுந்து “ஆழி வண்ணன் நின்னடியினை அடைந்தேன்” என்று திருமங்கை ஆழ்வார் கூறியது  போல விழுந்து

சரண் என்று இரந்து – நீயே எனக்குப் புகலாயிருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ஒருக்கால் சொன்னதற்பின் இவ்வாறு ஒரு தரம் வேண்டிக் கொண்ட பிறகு. அதாவது இறைவன் அடிகீழ் வீழ்ந்து வேண்டுதலுக்குப் பிரபத்தி அல்லது சரணாகதி என்று பெயர். இது ஒரு தடவையே செய்ய வேண்டியது. ஒரு தடவைக்கு மேல் செய்யத் தேவையில்லை. அதனால் ஒருக்கால் சொன்னதற்பின் என்று கூறப்பட்டது.

உண்டோ – இவ்வாறு சரணாகதி செய்த பிறகு முன்வினைகள் காரணமாக வருகின்ற – துன்பங்கள் உண்டாகுமோ? உண்டாகாது. இறைவன் திருவடிகளில் அடைக்கலம் புகுந்த போதே முன் வினைகளும் வரு வினைகளும் எல்லாம் அழிந்து விடும் என்று சாஸ்திரம் கூறுகின்ற வார்த்தைகளை நினைத்து ‘துயர் உண்டோ’ (போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்) என்று சொல்லப்படுகிறது. ஆகவே இறைவன் திருவடிகளில் முறைப்படி அடைக்கலம் புகுந்தவனுக்கு அனைத்து வினைகளும் அழிந்து விடுகின்றன என்பதும். அவற்றால் வரும் துன்பங்களும் வரமாட்டா என்பதும் இதனால் சொல்லப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *